ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,949 
 
 

சென்னை வித்தியாசமான ஊரென்பது வந்து இறங்கிய முதல்நாளே புரிந்துவிட்டது. இறக்கையின்றி பறந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை. நிஜமான புன்னகையை எந்த முகத்திலும் காணமுடியவில்லை. சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்து கிராமத்து நண்பர்களிடம் விடைபெற்று சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன். அரும்பாக்கத்திலுள்ள நண்பனின் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது ஆட்டோ. ஆட்டோவின் உட்புற கண்ணாடியில் பிள்ளையார் படமொன்று ஒட்டியிருந்தது. முகத்தை திருப்பிக்கொண்டேன். பிள்ளையார்மீது கோபமில்லை. தன் மீது நம்பிக்கையில்லாதவனின் வழிபாடுதான் கடவுள் என்கிற எண்ணம் எப்போதும் எனக்குண்டு.

நண்பன் வசிக்கும் முதல் மாடி வழக்கம்போலவே பேச்சிலர் அறைக்கான எல்லா
தகுதிகளோடுமிருந்தது. ஒருமுறை கிராமத்து வீட்டின் ஞாபகம் வந்து சென்றது.
வலது கால் எடுத்துவைத்து உள்நுழைந்தேன். போர்வைக்குள்ளிருந்து தலை
தூக்கியவன் “வா மாப்ளே” என்று வரவேற்றுவிட்டு போர்வைக்குள் மீண்டும்
சுருண்டு கொண்டான்.முதல் நாள் என்பதால் அலுவலகத்திற்கு செல்ல புது
உடையணிந்து மாடியிலிருந்து கீழ் இறங்கினேன். கீழ்வீட்டை கடக்க
முற்படும்போது திடீரென்று உடல் முழுவதும் சிலிர்க்க வைத்தது பின்னாலிருந்து
உடலை ஈரமாக்கிய தண்ணீர். திடுக்கிட்டு திரும்பினேன் வலதுகையில் வாளியும் இடது
கையை இடுப்பிலும் வைத்தபடி என்னை பார்த்து சிரித்தாள் சிறுமி ஒருத்தி.

கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஓடிச்சென்று அவளை பிடிப்பதற்குள் வீட்டிற்குள் ஓடி ஓளிந்துகொண்டாள். மீண்டும் மாடி ஏறி உடை மாற்றி கீழே வந்தேன். வீட்டு வாசலில் நின்றுகொண்டு சிரித்தபடி கேட்டாள் “திரும்பவும் தண்ணீ ஊத்தட்டுமா?”
“அடிபிச்சுடுவேன்” என்றவாறு கையை ஓங்கினேன்.

“வவ்வ வவ்வே” பழிப்புக்காட்டிவிட்டு வீட்டிற்குள் ஓடி மறைந்தாள். ஆரம்பமே அசத்தல்தான் என்று நினைத்துக்கொண்டு அலுவலகம் சென்றேன்.

முதல் நாள் அலுவலகம் முடிந்து வீடு வந்தவுடன் மொட்டைமாடி சென்று காலை
கொடியில் காயப்போட்ட துணிகளை எடுக்கும்போது அந்தச்சிறுமியின் முகம்
ஞாபகம் வந்தது. ஓங்கி தலையில் கொட்டியிருக்கவேண்டும்.

மறுநாள் மாடியிலிருந்து கீழ் இறங்கும்போது என்னை அறியாமல் பயம்
தொற்றிக்கொண்டது. இன்றும் அந்த வானரம் தண்ணீர் ஊற்றிவிடுமோ? பூனைபோல்
அடிமேல் அடியெடுத்து இறங்கி கேட்டை திறக்க நெருங்கினேன்.

“ஹைய்யா இன்னிக்கும் மாட்டிகிட்டியா” பின்னாலிருந்து சத்தம் கேட்டு சுதாரிப்பதற்குள் உடலை நனைத்துவிட்டது தண்ணீர். ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. வேகமாக சென்று பிடிப்பதற்குள் வீட்டிற்குள் சென்று கதவை மூடிவிட்டாள். விடாமல் தொடர்ந்து காலிங் பெல்லை அழுத்தினேன். ஜன்னல் வழியே பழிப்பு காட்டிச் சிரித்தாள்.

தினமும் இவளிடமிருந்து தப்பித்து வெளியே செல்வதற்கு பேசாமல் குளிக்காமல்
இருந்துவிடலாம். கொஞ்சம் கொஞ்சமாக அவள் மீதிருந்த கோபம் குறைந்து அவளின்
குறும்பை ரசிக்க ஆரம்பித்தது மனம்.

“உன் பேர் என்ன குட்டி?” தண்ணீர் வாளியுடன் நின்றவளிடம் நானாக சென்று
பேசியவுடன் ஆச்சரியம் தாளாமல் என்னை பார்த்தாள்.

“குட்டியா? நான் நல்ல உயரம்,உன் பேர் என்ன?” என்னிடம் கேட்டாள் வாளியை
கீழே வைத்தபடி.

“என் பெயர் அருண்”

“அருண் ஐஸ்க்ரீம் ஓனர் நீதானா?” இதை எதிர்பார்க்கவிலை நான். வாலில்லா குரங்குகுட்டி ப்ராக் போட்டு நிற்பது மாதிரி இருந்தது.

“என் பெயர் ப்ரியா”

“நைஸ் நேம்,என்ன படிக்கிற?

“போர்த் ஸ்டாண்டர்ட் ஏ செக் ஷன்”

“செக் ஷனோட சேர்த்துதான் சொல்லுவியா?”

“ஆமா ஏ செக் ஷன்லதான் நல்லா படிக்கிற ஸ்டூடன்ஸ் இருக்காங்க”

“சரி டெய்லி தண்ணீ ஊத்துறியே ஏன்?”

“ச்சும்மா”

“இனிமே நாம ப்ரெண்ட்ஸ். என் மேல நீ தண்ணி ஊத்தக்கூடாது சரியா?” கையை நீட்டினேன்.

கையை பிடித்துக்கொண்டு சொன்னாள் “சரி நாம பிரண்ட்ஸ் இனி தண்ணீர்
ஊத்தமாட்டேன் அருண்னா”. மனதிற்குள் சந்தேகம் பிறந்தது தண்ணீருக்கு பதில்
சாணித்தண்ணீ ஊத்திவிடுவாளோ என்று. வெளிக்காட்டிக்கொள்ளாமல் பை
சொல்லிவிட்டு அலுவலகம் சென்றேன்.

நகர வாழ்க்கை தினம் தினம் ஏதாவதொன்றை கற்றுத்தருகிறது. வெவ்வேறு மனிதர்களை, மனித முகமூடிகளில் திரியும் மிருகங்களை,மின்சார ரயிலை போன்ற
வேகத்தை, நடுரோட்டில் அடிபட்டு துடிக்கும் நாயை பார்த்தும் பாராமல் செல்கின்ற மனங்களை. சென்னைக்கு வந்து இருவாரம் ஓடிப்போனது. மாலை வேளைகளில் மேல்மாடியிலிருக்கும் என் அறைக்கு வந்துவிடுவாள் ப்ரியா.

வீட்டைச் சுற்றிலும் பூத்திருக்கும் செவ்வந்தி,செம்பருத்தி, நந்தியா வட்டை இன்னும் பலவித பூக்களை பறித்துக்கொண்டுவந்து அறையின் நடுவிலிருக்கும் பூ ஜாடியில் அழகாய் வைப்பாள். மடிக்காமல் சுருண்டு கிடக்கும் போர்வைகளை மடித்தும், பாயை சுருட்டியும் ஓரமாய் எடுத்து வைப்பாள். எனக்கு ஆச்சரியமாக இருக்கும், இந்தச் சிறிய வயதில் எப்படி வந்தது இந்த பொறுப்புணர்ச்சி?

“உனக்கு யாரு குட்டி இதெல்லாம் சொல்லி தந்தா?”

“ஐய இதுகூட தெரியாதா எங்க டாடிக்கே நான் தான் சொல்லித்தந்தேன்” என்பாள்.

அவள் செய்ய வேண்டிய ஹோம்வொர்க் அனைத்தையும் என்னுடன் அமர்ந்து செய்வாள்.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் என் கால்களிடையே சாய்ந்துகொண்டு தரையில் உட்கார்ந்து டி.வி பார்ப்பது அவளுக்கு அதிகம் பிடிக்கும்.

ஹே அருண் அண்ணா எனக்காக போகோ சானல் மாத்த வேண்டாம். போனா போகட்டும் நான் சன் மியூசிக் பாக்கறேன் என்பாள் பெருந்தன்மையாக.

அவள் மிக அழகாகப் படம் வரைவாள். ஒரு குரங்கை வரைந்து அதன் அடியில் அருண் அண்ணா என்று எழுதி என்னிடம் ஒரு முறை வாங்கிக் கட்டிக் கொண்டாள். மற்றொரு தடவை ஸ்கூல் போட்டியில் பரிசு வாங்கியதற்கு நான் அவளை சிட்டி செண்டர் அழைத்துச் சென்று அவள் விரும்பியவற்றையெல்லாம் வாங்கித் தந்தேன்.

தினமும் அவர்கள் வீட்டிலிருந்து காலை உணவும் இரவு டிபனும் வந்துவிடும்.
எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவளின் அம்மா உணவு கொடுத்தனுப்புவதை
நிறுத்தவில்லை. “என் பொண்ணுக்கு ஹோம்வொர்க்கெல்லாம் சொல்லித்தர்ற. நீயும்
தினமும் ஹோட்டல்ல சாப்பிடுறது நல்லதில்லப்பா,உனக்கும் சேர்த்து சமைக்கிறதுல எந்த கஷ்டமும் கிடையாது இனி வேண்டாம்னு சொன்னா ப்ரியாக்குட்டிகிட்ட சொல்லிகொடுத்திடுவேன்” என்னையும் குழந்தையாக பாவித்தார் ப்ரியாவின் அம்மா.

அலுவலக எரிச்சல்களிலிருந்தும் நகரத்தின் நரக வாழ்க்கையிலிருந்தும் என்னை
காப்பாற்றியது ப்ரியாவுடன் நானிருக்கும் தருணங்கள் மட்டும்தான். சில நாட்கள் என் அறையிலேயே படுத்துறங்கி விடுவாள். தூக்கிச்சென்று அவள் வீட்டில் விட்டுத்திரும்புவேன். மறுநாள் பெரிய மனுஷி போல பேசுவாள் “அருண்னா நேத்து ரொம்ப டயர்டா இருந்துச்சா அதான் டி.வி பார்க்கும்போதே தூங்கிட்டேன்”.

குழந்தையின் உலகில் சிறகடித்து பறந்துகொண்டிருந்தோம் நானும் ப்ரியாவும். வார இறுதியில் சினிமாவுக்கும்,கடற்கரைக்கும் தவறாமல் ப்ரியாவை கூட்டிச்செல்வது பொழுதுபோக்கானது.

புதிதாக எனக்கே எனக்காக ஒரு வண்டி வாங்க ஆசைப்பட்டு ஒரு பல்ஸார் வாங்கினேன். முதல் முதல் என் செல்ல ப்ரியாக்குட்டியைத்தான் ஏற்றினேன். நாங்கள் இருவரும் முதலில் போனது மெரினா.அதன் பின் முனியாண்டி விலாஸ் ஹோட்டல். அன்றிரவு வீட்டுக்கு வரும் போதே தூங்கி வழிந்தாள்.

நான்கு மாதங்கள் கழிந்த சுவடே இல்லாமல் மறைந்துபோனது. ஒரு சனிக்கிழமை
காலை மாடிக்கு வந்தவள் “அண்ணா இன்னிக்கு ஸ்பென்சர் போலாமா? எனக்கு டிரெஸ்
எடுக்கணும்”.

இருவரும் ஸ்பென்சர் பிளாசாவில் கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு அவளுக்கு பச்சைக்கலரில் ப்ராக் ஒன்று எடுத்தோம். உடை வாங்கிய மகிழ்ச்சியில் துள்ளி
குதித்துக்கொண்டு வந்தாள்.

ஆளுக்கொரு பார்ப்கான் வாங்கிக்கொண்டு அருகிலிருந்த படிக்கட்டில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதுதான் ப்ரியாவுக்கு இருமல் வந்தது. இரு முறை பலமாக இருமியவள் திடீரென்று ரத்தம் கலந்து வாந்தியெடுத்தாள். பதறி அடித்து அவளை அள்ளிக்கொண்டு ஆட்ட பிடித்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். போகும் வழியிலேயே அவர்களது வீட்டிற்கு போன் செய்து விசயத்தை சொன்னேன்.

மருத்துவமனையின் வாசம் பதற்றத்தை அதிகப்படுத்தியது.

இருநாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பெடுத்துவிட்டு ப்ரியாவுடன் மருத்துவமனையில் இருந்தேன்.

முதல் நாள் மாலை என்னை அருகில் அழைத்தாள் “அருண்னா உனக்கு நெக்ஸ்ட் வீக்
பெர்த்டே இல்ல..நான் நிறைய சார்ட் வாங்கி படம் வரஞ்சு வச்சிருக்கேன். என்
ரூம்ல பெட்டுக்கு அடியில இருக்கு மறக்காம எடுத்துக்குவியா”

“சரிம்மா நீ தூங்கு” என்று சொல்லிவிட்டு அவளது பிஞ்சுக்கரங்களை பற்றிக்கொண்டேன். சூடாக இருந்தது அவள் உடல். அன்று மாலை அவளது வீட்டிற்கு சென்று எனக்காக அவள் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பார்த்தேன். சின்னஞ்சிறு பறவையொன்று மரத்தில் உட்கார்ந்திருப்பது போல மிக அழகாய் வரைந்திருந்தாள்.

மறுநாள் அவளது அம்மா என்னை தனியாக அழைத்துச்சென்று அந்த விசயத்தை சொன்னார்.

”அருண் ப்ரியாவோட அம்மா அப்பா உயிரோட இல்லப்பா. அவ குழந்தையா
இருக்கும்போதே இறந்துட்டாங்க. நாங்க அவளை தத்தெடுத்து வளர்க்கிறோம்.”
பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களின் விழியோரம் கண்ணீர் துளிர்த்து
நின்றது. நான் எதுவும் பேசாமல் மெளனமாய் நின்றிருந்தேன். சிறிது இடைவெளி
விட்டு தொடர்ந்தார் “ப்ரியாவுக்கு கேன்சர். உன்கிட்ட சொன்னா
கஷ்டப்படுவேன்னுதான் சொல்லல. இன்னும் கொஞ்ச நாள்ல அவ நம்ம எல்லோரையும்
விட்டுட்டு..” அதற்கு மேல் பேசமுடியாமல் கேவி கேவி அழுதார்கள். தலையில்
இடி இறங்கியது போலிருந்தது எனக்கு. என் ப்ரியாக்குட்டிக்கு கேன்சரா?
சினிமாவில் மட்டுமே நடக்கின்ற விசயங்கள் என்று நான் நினைத்திருந்தவையெல்லாம் என் வாழ்விலும் நடக்க வேண்டுமா? அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாய் வெளியே வந்தேன். என்னுடல் லேசான நடுக்கத்திலிருந்தது.

மருத்துவமனைக்கு எதிரே பிள்ளையார்கோவில் ஒன்றிருந்தது. இரண்டு மூன்று பேர் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள். உள்ளே சென்று மண்டபத்தில் அமர்ந்தேன். இருபதடி தூரத்தில் பிள்ளையார் சிலையாகி இருந்தார். ஏனோ கடவுளை திட்டவேண்டும் போலிருந்தது. அழுகையும் கோபமும் கலந்து வெடித்துச்சிதற ஆரம்பிக்கும் தருவாயில் செல்போன் அடித்தது. ப்ரியாக்குட்டி என்னை பார்க்கவேண்டும் என்கிறாளாம். எழுந்து வேகமாய் ஓடினேன்.

மருத்துவமனையின் வரவேற்பரையில் அமர்ந்திருந்தவர்கள் வினோதமாய் பார்த்தார்கள். அவளிருந்த அறைக்கதவை வேகமாய் திறந்துகொண்டு உள்ளே வந்தேன். ப்ரியாவை சுற்றி அவளது அம்மா,அப்பா,பாட்டி,பக்கத்துவீட்டு உமா அக்கா, பள்ளி ஆசிரியை பிருந்தா எல்லோரும் நின்றிருந்தார்கள். என்னைப் பார்த்து சிரிக்கமுயன்று கொண்டிருந்தாள் ப்ரியா.

அருகில் சென்று கரம் பற்றினேன். ஏதோ சொல்ல வாயெடுத்தவள் முடியாமல் குழறி
“அருங்னா” என்றபோது அவளது உடல் குளிர்ந்திருப்பதை உணர்ந்தேன். சட்டென்று உடல் அதிர்ந்து மூச்சுவாங்க ஆரம்பித்தது. எல்லோரும் டாக்டரை அழைத்துவர
ஓடினார்கள். ப்ரியாகுட்டியின் கண்கள் என்னை ஒரு முறை தீர்க்கமாய் பார்த்தன. டாக்டர் அனைவரையும் வெளியே போக சொன்னார். வெளியில் வந்து அங்கிருந்த மர பெஞ்சில் அமர்ந்தேன். ப்ரியா முதன் முதலாய் என் மீது தண்ணீர் ஊற்றிவிட்டு வீட்டிற்குள் சென்று பழிப்பு காட்டி சிரித்தது ஞாபகம் வந்தபோது சன்னல் வழியே பெயர்தெரியாத பறவையொன்று சிறகடித்து பறக்கும் சப்தம் கேட்டது.

– Sunday, February 15, 2009

Print Friendly, PDF & Email

1 thought on “ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *