போவது நீதியில்லை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 3,194 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொழிற்சாலையைக் கவனிக்க ஒரு சுற்று நடந்துவிட்டு அலுவலகத்துக்குள் வந்ததும் வழக்கம் போலவே ஒரு சலிப்புணர்வு தலைகாட்டியது; செய்கின்ற வேலையிலேயே லயிப்பு அற்றுப் போவது போல… என்ன இது? பெருமூச்சொன்றுடன் கதிரையிலமர்ந்து மேசையில் வைக்கப் பட்டிருக்கும் குழந்தைகளின் படத்தில் கண்களைப் பதித்தேன். சலிப்பை அகற்றும் ஒரு முயற்சி, இது. பிள்ளைகளின் மழலைகளும், விளையாட்டுகளும் நினைவில் வந்து மனதை குளிர்வித்தன. கடந்த விடுமுறை முடிந்து திரும்பப் பயணமாகி வந்தபோது எனது மகள் விசும்பியதும் கூடவே நினைவில் வந்தது…… “அப்பா! – போக வேணாம் அப்பா” மனதில் ஏறி வருத்தும் வேதனைச் சுமை. கடிதங்களில் அடிக்கடி மனைவி எழுதுவாள்; “எப்பதான் வெளிநாட்டு வேலைக்கு முழுக்குப் போட்டிட்டு வந்து எங்களோடை ஒன்றாய் இருக்கப் போறியள்?”

சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. என்ன செய்வது? வாழ்க்கைக்கு நிச்சயமாகப் பணமும் தேவைப் படுகின்றது! பணத்தைத் தேடி அரபுத் தேசம் வந்தால் வாழ்க்கையின் அர்த்தங்கள் மறைக்கப்படுவது போன்ற வெறுமை!

“சேர்!”

மேசைக்கு முன் வந்து என் கவனத்தைத் திருப்பிய வனைப் பார்த்தேன். – ஏதோ பிரச்சனையோடு என்னைக் காண வந்திருக்கிறான். இந்த நேரத்தில் அவன் வந்தது நல்லதாகப் போயிற்று என நினைத்தேன். எனது கவலை களை மறந்து அவனது பிரச்சினைகளில் மூழ்கலாம்! சற்று நேரம் ஊர்ப்பாசையில் கதைப்பது இதமாகவும் இருக்கும். “என்ன சுந்தரம் ?”

அவன் பதில் சொல்லவில்லை. முகம் இருண்டு போயிருந்தது. பொதுவாக அவன் சற்று இருண்ட முகக்காரன்தான். அல்லது…… சொந்த நாட்டை விட்டு வேலை நிமித்தம் இங்குவந்து …. இயந்திரங்களோடு இயந்திரமாய் எல்லோருடைய முகங்களும் இப்படி மாறிப் போகின்றனவோ? தொழிற்சாலை வேலைகளைக் கவனிக்க நடக்கும் பொழுது அவதானித்திருக்கிறேன். அந்த முகங்களில் மலர்ச்சி இல்லை !

அவர்கள் புன்சிரிப்பது வலிந்து செயற்படுவது போலிருக்கிறது. அவர்கள் வாடிய முகங்களுக்குள் பல கவலைகளும் ஏக்கங்களும் புதைந்து போயிருக்கின்றன.

பணத்தைத் தேட வந்தவர்கள் … இயந்திரங்களோடு இரண்டறக்கலந்து; தொழில் செய்து …… களைத்து, நேரத்துக்குச் சாப்பிட்டு, தனிக்கட்டிலில் படுத்து …. ஒரு செயற்கைத்தனமாக வாழ்ந்தாலும் அவர்கள் முழுமையான மெசின்களாக இல்லாமலிருப்பது தான் பெரிய குறை! இந்த மெசின்களுக் கெல்லாம் ஒவ்வொரு இதயங்கள் இருக்கின்றன. இவர்களால் ஒரு ஸ்விச்சை அழுத்தி கவலைகளை மறக்க முடியாது. தன்னை மறந்து சிரிக்க முடியாது. இன்னொரு ஸ்விச்சை அழுத்தி நிம்மதியாய் தூங்க முடியாது. வீடு வாசல்களையும், பிள்ளை குட்டிகளையும் விட்டு “பிழைப்பு ” ஒன்றையே நோக்கமாகக் கருதி தூர தேசம் வந்து பிழைக்கிறவர்களின் மனநிலை எப்படியிருக்குமென்பது எனக்குத் தெரியும்.

ஒருவேளை எனது முகங்கூட அப்படித்தான் தோன்றக் கூடும். இந்நினைவு வந்ததும் அதை அவனுக்குக் காட்டிக் கொள்ள விரும்பாமல் சட்டென முகத்தை மாற்றினேன்.

(ஸ்விச்சை அழுத்தி) – பளிச்சென ஒரு சிரிப்பை காட்டிய வாறு… ” என்ன சுந்தரம் ?” என்றேன்.

அது சிரிப்பு மாதிரி தெரிந்ததோ என்னவோ…. அவன் எவ்வித முகப்பிரதிபலிப்பும் இல்லாமல் விறுகட்டை மாதிரி நின்றான். இதனால் எனது முகம் இருண்டு கொண்டு போனது. ஒருவாறு சமாளித்து மீண்டும் …. (சோகம் ததும்பக் கேட்டேன்; “என்ன சுந்தரம்…? ஏதாவது பிரச்சனையோ?”

பதில் சொல்ல முயன்ற பொழுது அவனது கண்கள் பனித்தன; நிறுத்திக் கொண்டான். நான் பேசவில்லை. அவன் நிதானமடைவதற்கு அவகாசம் கொடுத்தேன். ஏதும் துக்க செய்தியோடு வந்திருப்பானோ என்னவோ? அல்லது… கூட வேலை செய்கிறவர்கள் அறை நண்பர்கள் போன்ற யாருடனாவது தகராறு ஏற்பட்டிருக்கலாம். இருப்பது பிறநாடென்றாலும் வேலை செய்பவர்கள் அநேகமானோர் எங்களுடைய சனங்களாதலால் புடுங்குப்பாட்டுக்கு குறையிருப்பதில்லை .

ஆனால்… சுந்தரம் சோலிசுரட்டுக்குப் போகாதவன் – தானுண்டு தன்பாடுண்டு என்றிருப்பான். சுமார் ஏழெட்டு வருடங்களாக என்னுடன் வேலை செய்கிறான். சின்னச் சின்ன விசயங்களையெல்லாம் ஒரு பிரச்சனையாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வருபவனுமில்லை …..

என்ன விசயமெண்டு சொன்னாத்தானே எனக்கு விளங்கும்… சொல்லு!” என ஆதரவாக அவனை வற்புறுத்தினேன்.

“சேர்!… நான் ஊருக்குப் போக வேணும்!” – இது நான் எதிர்பார்க்காத பதில். “என்ன ஊருக்கோ?” என ஆச்சரியப்பட்டேன்.

அவன் தலை அசைந்து ஆமோதித்தது. நான் மௌனமானேன். அவன் ஊருக்குப் போவதில் அவ்வளவு அக்கறை இல்லாதவன். இப்படி திடுதிப்பென்று வந்து போக வேண்டுமென்று சொல்வது, குழப்பமாயிருந்தது. ஊரிலிருந்து ஏதாவது துக்க செய்திகள் தொலைபேசி அல்லது தந்தி மூலமாக வருவதானாலும், எனக்கு ஊடாகத்தான் அவனுக்கு கிடைத்திருக்கும். அப்படி ஏதும் வரவுமில்லை. இங்கு வேலை செய்பவர்கள் வருடத்துக்கு ஒரு முறை சொந்த நாட்டுக்கு விடுமுறையில் போய் வரலாம். அப்படி போக விரும்பாதவர்கள் விமான பயண ரிக்கற்றுக்குரிய பெறுமதி, மற்றும் விடுமுறைக்குரிய கொடுப்பனவு ஆகியவற்றை பணமாகப் பெற்றுக் கொள்ளும் ஒழுங்கு முறையுண்டு. வீட்டில் அக்கா தங்கைமாரின் மணப் பிரச்சனைகள் போன்ற பணப் பிரச்சினைகளை ஒப்பேற்றுவதற்காகச் சிலர் விடுமுறை யைத் தியாகம் செய்வார்கள். இன்னும் சிலர் ‘வெளியில் இருக்கையிக்கை எப்படியாவது கூடியளவு உழைச்சுக் கொண்டு ஊரோடை போய்ச் சேர்ந்திடவேணும்’ என விடுமுறையைத் தவிர்த்து பணத்தை எடுப்பார்கள். அவர்களில் சுந்தரலிங்கத்தை குறிப்பிடலாம்.

தனிக்கட்டை. வயது நாற்பதைக் கடந்துவிட்டாலும் இன்னும் கல்யாணமாகாதவன் மனைவி, பிள்ளை குட்டிகள் என நெருக்கமான குடும்ப ஈடுபாடுகளில் தங்கி இல்லாததும் அவன் விடுமுறையை ஆவலோடு எதிர் பார்த்து ஊருக்கும் போகாமலிருப்பதற்கு ஒரு காரணமா யிருக்கலாம் என எண்ணியிருக்கின்றேன். இப்பொழுது அவனிடத்தில் ஏற்பட்ட மன மாற்றத்துக்கு என்ன காரணமாயிருக்கும்?

ஒருவேளை கல்யாணம் செய்யப்போகிறானோ? ஆன படியாத்தான் அவனுக்கு பேச்சு தடைப்பட்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்திருக்கிறது! இந்தளவு வயதுக்குப் பிறகு கலியாணம் செய்யப் போகிறவனுக்கு ஆனந்தக் கண்ணீர் வராதா என்ன?

கால நேரத்தோடு கல்யாணம் செய்யாமல் இருப்பதும்… அதனால் மற்றவர்களின் கேலிக்குரியவனாய் இருப்பதும் அவனைப் பாதிக்கிறதோ என்னவோ…. என்னைப் பாதித்து அவன்பால் ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அவனது தனிமை வாழ்வு ஒரு குறைபாடாக அல்லது, ஏதோ ஓர் காரணத்துக்காக அவன் ஒரு விரக்தி வாழ்வு வாழ்வது போன்று தோன்றுவதால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவனுக்கு இதுபற்றி “அட்வைஸ்” செய்ய முயன்றிருக்கிறேன்.

அப்பொதெல்லாம் எனது நியாயங்களுக்கு பிடிகொடா மல் அவன் நழுவுவது இப்பொழுது என் மனக்கண் முன் வந்தது…

“சுந்தரம் நெடுக இப்படியே இருந்து என்ன செய்யப் போறாய்?…. நேர காலத்தோட கலியாணம் முடிச்சு, பெஞ் சாதி பிள்ளையோட குடும்பமும் குடித்தனமுமாய் இருக்கிற வனைத்தான் சமூகமும் மதிக்கும். அதிலை தான் வாழ்க்கை யின் அர்த்தமும் நிறைவும் இருக்கு”

‘… இப்ப அவசரப்பட்டு முடிச்சு….. என்னத்தை காணப் போறம் சோ… கலியாணம் முடிச்சுப் போட்டு இஞ்சை வெளிநாட்டுக்கு வந்தவையெல்லாம் சந்தோசமாய் இருக்கினமோ?… அதுகள் எங்கையோ … இவையள் எங்கையோ?…” என ஒரு போடு போட்டு என்னையே தடுமாற்றுவான்.

“இல்லை … சுந்தரம் அது உனக்கு விளங்காது! ஒண்டாக இருக்கிறது மட்டும் தான் குடும்ப வாழ்க்கை இல்லை … கலியாணம் முடிச்சு பிள்ளை குட்டியை பெத்தாத்தான் அது உனக்கு விளங்கும்.” எவ்வளவு சுடக்கூடியதாகச் சொன்னாலும் அவனுக்கு சுடுபடாது

“சேர்!… என்ரை தாய் தேப்பனும்… சகோதரங்களும் தான் எனக்கு முக்கியம். அதுக்களுக்காகத்தான் நான் உழைக்கிறேன்! முன்பின் தெரியாத ஒருத்தியைக் கலியாணம் முடிச்சுக் கொண்டு வந்து… அவளுக்கு உழைச்சுப்போட வேணுமெண்டு எனக்கென்ன விதியோ?”

“சுந்தரம்!… உன்ர அப்பரையும் அம்மாவையும் வேறை வேறையா நினைக்க வருமோ? நீ நினைக்கிற மாதிரி முந்தி உன்ரை அப்பரும் நினைச்சிருந்தால் நீ இந்த உலகத்திலேயே வந்து பிறந்திருக்கமாட்டாய்! வாழ்க்கையிலே குடும்பம் கலியாணம் எல்லாம் ஒரு விதிதான்! தவிர்க்கக் கூடாத விதி!”

“ஒவ்வொருத்தனின்ரை வாழ்க்கையும் நேர் சீராய் அமைகிறதுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணை முக்கியம்!” – அவனது பாணியில் அவனுக்கு புரிகிறவிதமாக சொல்லிப் பார்ப்பதுண்டு.

“கலியாணம் முடிச்சு …. ஒவ்வொருத்தியைக் கொண்டு வந்த பிறகு எத்தனை குடும்பங்கள் பிரிஞ்சு போயிருக் கெண்டு தெரியும் தானே சேர்!”

“நீ ஏன்… பிழையான பக்கங்களை மட்டும் பார்க்கிறாய்? … உன்ரை அம்மாவைப் போல… தங்கைச்சியைப் போலை… எத்தனையோ நல்ல பொம்பிளையள் உலகத்திலே இருக்கினம் தானே?”

தாய் சகோதரங்களில் அவனுக்குள்ள அபிமானத்தை சாதகமாகப் பாவித்து அவனை திருப்ப முயல்வேன். ஆனால், தனது பக்க ஞாயம் பலிக்காது என்ற கட்டத்தில் ஒரேயடியாக வெட்டி விடுவான்;

“நான் தான் கலியாணம் முடிக்கிறதில்லையேண்டிருக் கிறேன்! பிறகேன். சேர், வில்லங்கப்படுத்திறியள்?”

– அவனது பிடிவாதத்தை நினைத்து இப்போது சிரித்துக் கொண்டேன். வில்லங்கப்படுத்தியது வீண்போகவில்லை. நான் அடிமேல் அடி…. அடித்ததிலும் பலன் இருக்கத்தான் செய்திருக்கிறது! இந்தக் “கட்டைப்” பிரமச்சாரி (உயரமும் அப்படித்தான்) வழிக்கு வருவதற்கு எனது புத்திமதி உதவியிருக்கிறது என்பது ஒருவித பெருமையைத் தந்தது. கடைசியாக இந்த சுந்தரலிங்கம் கலியாணம் முடிக்கப் போகிறான். நல்ல விசயந்தான்…. வாழ்த்துக்கள்!… ஒரு சொந்த அண்ணனைப் போல என்னுள் ஓர் உணர்ச்சி பரவசம் தோன்றி…. கண்கள் கலங்கியது. ஆவல் மேலிட, “என்ன சுந்தரம் ?… கலியாணம் முடிக்கப் போறியோ?” எனக் கேட்டேன்.

இஞ்சி தின்றவனைப் போல அவனது முகம் கோணலாகி நெளிந்து …. “சீ! எனக்கென்ன விசரே?” என்று கேட்டான்.

என் தலையில் ஆழமான ஒரு போடு போட்ட மாதிரி இருந்தது. அதைப் பொருட்படுத்தாது;

“ஊருக்கு போறதுக்கு இப்ப என்ன அவசரம்?” என எனது ஆனந்தக் கண்ணீரை துடைத்தவாறு கேட்டேன். “அண்ணைக்குச் சுகமில்லை !”

– வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கக்கூடும். இப்படித்தான் கடிதங்கள் கிடைத்ததும்….. பிள்ளைக்குச் சுகமில்லை. மனைவியுடன் பக்கத்து வீட்டுக்காரர் சண்டை , கடன் தந்தவனின் தொல்லை…. என ஏதாவது பிரச்சனை களை வாசித்துவிட்டு… ஓடி வருவார்கள்; கடிதங்கள் ஊரிலிருந்து கிடைக்க ஒரு மாதமாவது செல்கிறது. அதற்கிடையில் அந்தப் பிரச்சனைகள் அங்கே தீர்ந்திருக் கக்கூடும். பந்த பாசங்களை பிரிந்து கண்காணாமல் இருப்பதால் பிரச்சனைகளை அறிந்தவுடன் உணர்ச்சி குமுறலுடன் வருபவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்ப வேண்டியதும் ஒரு கடமை. அடுத்த ஓரிரு நாட்களுக் குள்ளேயே அவர்களுக்கு இன்னொரு கடிதம் கிடைக்கக் கூடும்… “பிள்ளைக்கு இப்ப நல்ல சுகம்….” எனச் சிரித்துக் கொண்டு வருவார்கள்.

“என்ன காயிதம் வந்ததோ?” என சுந்தரலிங்கத்திடம் மிக ஆதரவாகக் கேட்டேன்.

“ஓம் சேர்! தங்கைச்சி எழுதினவள்…. அண்ணைக்கு மூளைக் காய்ச்சலாம்!”

இதைச் சொன்ன பொழுது மீண்டும் அவன் கண்களில் நீர் ததும்பியது.

நான் மௌனம் அனுஷ்டித்தேன். மூளைக் காய்ச்சல் பொல்லாத வியாதி என்பது தெரியும். ஆளையே முடிக்கக் கூடியது.

சுந்தரலிங்கத்துக்கு எவ்வாறு ஆறுதல் கூறலாம் என யோசித்தேன். சகோதரங்கள் மேல் அவன் கொண்டிருக்கும் பாச உணர்வை நன்கு அறிந்தவனாகையால்…. இச்செய்தி யால் அவன் எப்படிப் பாதிக்கப்பட்டிருப்பான் என்பதை உணர முடிந்தது; குடும்ப நிலவரங்கள் பற்றி அவ்வப்போது நான் விசாரித்தறிவதுமுண்டு. அவனாகவும் சொல்வான்.

வயதான பெற்றோர், ஆசிரியத் தொழில் பார்க்கும் – மணமாகி இரு குழந்தைகளுக்குத் தந்தையான – அண்ணன் பல்கலைக்கழக பட்டதாரியாகி…. பின்பு ஆசிரியத் தொழில் புரியும் தங்கை , ஒரு தம்பி…. இதுதான் அவன் குடும்பம். பொருளாதார ரீதியாக மிகவும் கீழ்மட்டத்திலிருந்த குடும்பம், சுந்தரலிங்கம் வெளிநாடு வந்து உழைக்கத் தொடங்கிய பின்னர்தான் தலையெடுக்க ஆரம்பித்தது.

குடியிருந்த சிறிய வீடு திருத்தப்பட்டு வசதியான பெரிய வீடாக மாறுவதற்கும், பல்கலைக்கழகத்தில் தங்கை படிப்பதற்குரிய செலவுகளுக்கும்… இன்னும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு சுந்தரலிங்கத்தின் வருமானம்தான் உதவியிருக்கிறது. அண்ணனின் தலைக்கு மேலிருந்த கடன் சுமைகளை இறக்குவதற்கும், அவன் பெரிதும் உதவியிருக் கிறான்.

“அண்ணை பாவம்! நான் தானே உதவி செய்யணும்!” எனக் கரிசனையோடு அவன் சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன். வெளிநாட்டுக்கு வந்த நாளிலிருந்து சுந்தரலிங்கத்தின் சம்பளப் பணம்கூட அண்ணனின் பெயருக்கே போகிறது.

“அவர் படிச்சவர்… என்ன செய்ய வேணுமெண்டு தெரியும்!” தான் எதிர்பார்ப்பது போல அண்ணன் நல்ல மாதிரி பணத்தை முதலீடு செய்கிறார் என்று சொல்லுவான். ஊரில் விலைபோன சில காணித்துண்டுகளை வேண்டி யிருக்கிறார். ஒரு மினிபஸ் வேண்டி ஓடவிட்டிருக்கிறார்.

“அப்ப…. கொண்ணருக்கு இனி… வாத்தி உத்தியோகம் தேவையில்லை?” என விளையாட்டாக கேட்டிருக்கிறேன்.

“இல்லை … அந்தாள் நல்ல மனிசன்…. எல்லா கணக்கு வழக்கும் எனக்கு எழுதும்” என அண்ணனுக்காக பரிந்து கதைப்பான்.

புதிய மோட்டார் சைக்கிளுடன் அண்ணனும், மனைவி பிள்ளைகளும், தோற்றமளிக்கும் ஒரு போட் டோவை அண்மையில் தான் எனக்குக் காட்டியிருக்கிறான்.

இந்த இளம் மனைவி …. ஒரு பாவமும் அறியாத புன்சிரிப்புடன் கணவரின் கையைப் பற்றிக்கொண்டு நின்றகோலம் நினைவுக்கு வந்தன.

“பிள்ளையளுக்கு எத்தனை வயசு?” “மூத்த பெடியனுக்கு ஏழு இரண்டாவது பொம்பிளைப் பிள்ளை …. ஐஞ்சு வயது”

படத்தில் பார்த்த பொழுது நல்ல வாட்டசாட்டமாகத் தோன்றிய மனிசனுக்கு மூளைக்காய்ச்சல் என்று சொல்ல…. நம்ப முடியவில்லை .

“சாய்…. அப்படியிராது…. நீ கவலைப்படாதை!” என்றேன். அவன் பட்டுக்கொண்டு நின்றான்.

“டொக்டர்மார் உறுதியாய் சொல்லிப் போட்டினமோ? ஒருவேளை மூளைக் காய்ச்சலாக இருக்குமென்று சந்தேகப் பட்டிருப்பினம்….

பரிசோதிச்சுச் சரியாய் முடிவெடுக்க முதல் … வீட்டிலை பொம்பிளையளைத் தெரியாதே… பயத்திலை எழுதியிருக் குங்கள்!”

சுந்தரம் பேசாமல் நின்றான்! எனது ஆறுதல் வார்த்தைகள் அவனைச் சமாதானப்படுத்தவில்லை என்று தெரிந்தது.

“எத்தனையாந் திகதி போட்ட கடிதம்… போட்டு இப்ப மூன்று நாலு கிழமையிருக்கும் தானே? இம்மட்டைக்கு கொண்ணருக்கு சுகமாயிருக்கும்! ஒன்றுக்கும் யோசியாதை!”

“இல்லை சேர்! நான் ஒருக்கால் போய் பாத்திட்டு வந்தால் ஆறுதலாயிருக்கும்!”

எனது சொல்லை அவன் கேட்காமல் நின்றது சற்று எரிச்சலை ஊட்டியது.

நிர்வாகப் பதவியில் சொந்த நாட்டவன் இருக்கிறான் என்ற தைரியத்தில் சிலவேளைகளில் சிலர் அதிகமான சலுகைகளை எதிர்பார்த்து வருவதுண்டு. அதனால் என்னைச் சங்கடத்துள் ஆழ்த்துவதுமுண்டு. தொழிற்சாலை யில் முக்கியமான நிர்மாண திருத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. திட்டப்படி இன்னும் ஆறு கிழமைக்குள் இந்த வேலைகளை பூர்த்தியாக்க வேண்டும். சுந்தரலிங்கம் ஒரு முதல் தரமான மெக்கானிக். திறமையான தொழில்நுட்ப வல்லுனன். இந்த நேரத்தில் அவனைப் போக விட்டால் ஒருகை முறிந்த மாதிரித்தான்.

“சுந்தரம் அவசரப்படாதை ! உனக்கு லீவுக்கு இன்னும் நாலு மாசம் தானே கிடக்கு !…. அப்ப போகலாம் – இஞ்சை முக்கியமான வேலையளும் கிடக்கு ! கடவுள் இருக்கிறார்…கொண்ணையை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்!” – எவ்விதமாகச் சொன்னாலும் அவன் அசையாமல் நின்ற விதத்தை பார்த்தால் ஒரு முடிவு தெரியாமல் போகமாட்டான் போலிருந்தது.

“சரி, சரி… போ! யோசிச்சுப் பாத்து நாளைக்குச் சொல்லுறன்”

அவனை அகற்றுவதற்காகத்தான் நம்பிக்கையளிப்பது போல இப்படியொரு அரைகுறையான பதிலைச் சொன்னன். ஆனால் உண்மையில். ஊருக்கு போக அவனை அனுமதிப்பதில்லை என்றே மனதுள் தீர்மானித் திருந்தேன். கடிதத்தில் செய்தியை அறிந்தவுடன் இப்படிக் கலங்கி வந்திருக்கிறான். ஒரு சில நாட்களில் சரியாகி விடுவான் என்று கருதினேன். ஆனால்……

அடுத்த நாட் காலை முதல் வேலையாக எனது அலுவலக வாசலில் சுந்தரலிங்கம் வந்து நின்றான். கண்டதும் எனக்கு சற்று கோபம் மூண்டது.

“இண்டைக்கு …… முடிவு சொல்லுறனண்டு சொன்னியள்…”- தயக்கத்துடன் எனது பார்வைக்கு பதிலளித்தான்.

“உன்ரை அலுவலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க இஞ்சை எனக்கு வேற வேலையில்லையெண்டு நினைச் சியோ ?…. போ!… போய் கிடக்கிற வேலையைப் பார்!” – ஒரு பாய்ச்சல். அவன் எதிர்பாராத பாய்ச்சல்தான். இந்த உத்தி பலித்தது. என்னைப் பார்த்தபடியே பேச்சு மூச்சின்றி பின்பக்கமாக நகர்ந்து அறையை விட்டு நழுவினான். ஒரு அதிர்ச்சி மருந்து மாதிரி அவனது கலக்கத்தை இது தீர்க்கக்கூடும். ஊருக்குப் போகும் யோசனையையும் அவன் கைவிடக்கூடும். அவனது அண்ணன் சுகமாயிருப்பான் என்றே உண்மை சொல்லியது. அவனுக்கு அடுத்த கடிதம் வரும்வரை ஒருவாறு தாக்காட்டி னால் எல்லாம் சரியாகிவிடும்.

அன்று வேலைகளை கவனிப்பதற்காக தொழிற் சாலையை சுற்றி வரும்பொழுது சுந்தரத்தைக் காணக்கூடிய பகுதிகளைத் தவிர்த்துக் கொண்டேன்.

காலையில் பாய்ந்த பாய்ச்சலில் ஊரையே மறந் திருப்பான் என எண்ணிக் கொண்டிருக்க மீண்டும் மாலை அறைவாசலில் வந்து நின்றான். என்ன சாட்டுச் சொல்லி அவனை கடத்திவிடலாம்… என்று புரியாமல் குழம்பினேன்.

“சுந்தரம்!… பக்டரியிலை முக்கியமான வேலையள் நடந்து கொண்டிருக்கிறது. உனக்குத் தெரியும்… இந்த நேரத்திலை போகவேணுமெண்டு… வந்து… நண்டு கொண்டு நிக்கிறாய்… இது நல்லதுக்கில்லை …. சில வேளையிலை ஒரே யடியாய் அனுப்பிவிடுவார்கள். பிறகு வேலையுமில்லை. ஒண்டுமில்லை. போய் வீட்டிலை இருக்க வேண்டியது தான்!”

அடுத்த உத்தியாக இந்த பயமுறுத்தலைக் கையாண் டேன்.

“சேர் நீங்கள் மனம் வைச்சால் என்னவும் செய்யலாம்!” பயமுறுத்தலுக்கும் அவன் பணிந்தது போலத் தெரிய வில்லை. எப்படியாவது ஊருக்கு போவதென்றே தீர்மானித்துவிட்டான் போலிருந்தது.

“நான் என்ன செய்யிறது?… என்ரை நிலமையும் உனக்கு விளங்க வேணும்…. என்னை நம்பி இந்த இடத்தில வைச்சவங்களுக்கு நான் விசுவாசமாய் இருக்க வேணும்…. இந்த வேலையை திட்டமிட்டபடி முடிச்சுக் கொடுக்க வேண்டியது… எங்கடை கடமை… இந்த நேரம் நீ எவ்வளவு முக்கியமான ஆள் எண்டு உனக்குத் தெரியும். உன்னை விட்டிட்டு நான் என்ன செய்யிறது?”

இப்படிச் சொல்லிவிட்டு ஆவலுடன் அவனது முகத்தைப் பார்த்தேன். ஒருவேளை எனக்காகப் பரிந்தாவது மனம் மாறக்கூடும். ஆனால் அவன் மாறாக சோகத்துடன் நின்றான்.

“இந்த நேரத்தில் போய்… நீ லீவு கேக்கிறாய் எண்டு சொன்னால்… ஒரேயடியாய் அனுப்பு எண்டுதான் சொல்லுவாங்கள்…. அதுக்கு நீ ரெடியோ?”

அவன் மௌனம் சாதித்தான். இந்த வழியில் ஆளைச் சமாளிக்கலாம் போலிருந்தது. பிறகு மெதுவாகச் சொன்னான்.

“வேறை ஒரு வழியுமில்லையெண்டால் என்ன செய்யிறது சேர்… எப்படியாவது நான் போக வேணும்!”

ஆக அவன் வேலையைக் கைவிட்டுப் போவதற்கும் ரெடி! அவன் உணர்ச்சிவசப்படுவதைக் கண்கள் காட்டியது.

“சரி!….. என்னால முடிஞ்சளவு ஹெட் ஓபிசிலை கதைச்சுப் பார்க்கிறேன்…… கவலைப்படாமல் போ!” என ஒருவாறு கூறி அவனை அனுப்பி வைத்தேன்.

அதுகூட அவனைச் சமாதானப்படுத்துவதற்காக சொன்ன வார்த்தைகள் தான்! ஆனால் அவனை ஊருக்கு அனுப்புவதற்கு எவ்வித ஒழுங்கும் செய்வது பற்றி நான் சிந்திக்கவேயில்லை என்பதுதான் உண்மை!

அடுத்த நாள் காலை, அலுவலக வாசலில் வந்து நிற்பானோ எனப் பயந்து கொண்டே வர… அவனைக் காண வில்லை ! சற்று நிம்மதியாயிருந்தது. அவனது பகுதி இஞ்சினியரை அழைத்து சுந்தரத்தை கொஞ்சம் கவனித்து கொள்ளுமாறும், அட்வைஸ் பண்ணுமாறும் விடயத்தைக் கூறினேன். ஆனால், கடந்த சில நாட்களாக அவன் வேண்டாவெறுப்பாக வேலை செய்வதாக அவரிடமிருந்து பதில் வந்தது. அவனுடைய ஆற்றலும் குறைந்து விட்டது!

மாலை, வேலை முடிந்ததும் சுந்தரம் தேடி வந்தான்.

அவனைக் கண்டதும் என் தலை சுற்றியது. கையினால் நெற்றியைப் பிடித்துத் தாங்கிக்கொண்டு மேஜையில் முகத்தைக் குனிந்தேன்.

“சேர்… கரைச்சல் தாறனெண்டு நினையாதேயுங்கோ…. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் !” அழாக் குறையாக அவனது குரல் அனுங்கியதும் நிமிர்ந்து பார்த்தேன். “இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுறாய்?” “கெட் ஓபிசிலை… கதைக்கிறனெண்டு சொன்னியள்!”

“சுந்தரம்…. கொண்ண னுக்கு ஒண்டுமில்லை …. ஏதாவது மோசமெண்டால் இம்மட்டைக்கு தந்தி வந்திருக்கும்! எத்தினை தரம் சொல்லிப் போட்டேன்… கவலைப்படாமல் போ !”

“இல்லை சேர்!… அவருக்கு முந்தியும் ரெண்டு முறை இந்த வருத்தம் வந்தது….”

“முந்தி வந்து மாறின வருத்தம் தானே… இந்த முறையும் மாறி விடும்…. கவலைப்படாதே”

“இந்த முறை கடுமையாம்! ஒரு மாசத்துக்கு மேல் ஆசுப் பத்திரியில வைச்சிருக்கினம் டொக்டர்மாருக்கும் நம்பிக்கை யில்லைப் போலை…? எண்டு வீட்டிலை கவலைப்பட்டு எழுதியிருக்கினம்!”

“வீட்டிலை இருக்கறவைக்கு என்ன எழுதிறண்டு தெரியாது! சும்மா தேவையில்லாத விசயங்களை எழுதி ….. வெளியில் தனிய இருக்கிறாக்களின்ர மனசை குழப்பிறதோ?….” எனச் சினந்து விழுந்தேன்.

சுந்தரலிங்கம் அழுவாரைப் போல நின்றான். அவனது மனநிலையை உணராது கடுமையாக ஏசிவிட்டேனோ என்ற கவலை ஏற்பட்டது. பக்டரி வேலைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்…. அவனது பாசத்துடிப்பிற்கு தலைவணங்கி….” போகாவிட்டால் என்ன” என்ற அனுதாபமும் பிறந்தது.

“சரி நாளைக்கு ஏஜெண்டோட கதைச்சு ரிக்கற்றுக்கு ஒழுங்கு செய்யிறான்… எப்பிடியெண்டாலும் ரெண்டு மூன்று நாள் செல்லும்… யோசியாமல் போய் வேலையைச் செய்!”

ஆனால் சொன்னது போலச் செய்யவில்லை! சுந்தரத்தின் வீட்டிலிருந்து அடுத்த கடிதம் வரும்வரை தாமதிக்க வேண்டுமென, பின்னர் மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். கடிதத்தில் நான் எதிர்பார்க்கும் சுகசெய்தி வந்தால் எல்லாம் சுலபமாக முடியும். எனது பக்டரி வேலைகள் பாதிக்கப்படாது! சுந்தரலிங்கம் பழைய மனுசனாக மாறுவான். அந்த போட்டோவில் பார்த்த…. இளம் மனைவியினதும், குழந்தைகளினதும் வாழ்க்கையில் இடி விழாது! ஆனால், அந்த எண்ணங்களிலெல்லாம் மண் போட்டு விட்டு அந்த ஜீவன் போய்ச் சேர்ந்து விடுமோ…. என்ற பயமும் உள்ளூர அழுத்தியது!

அடுத்த சில நாட்கள்… சுந்தரலிங்கம் வந்த பொழுது… பிளேனில் சீற் கிடைக்கவில்லை. எனக் கதை விட்டுக் கொண்டிருந்தேன். அன்றாடம் வரும் கடிதங்களை உரியவரிடம் சேர்ப்பிக்க முதல் ஒவ்வொன்றாகத் தேடிப் பார்ப்பேன். ஒரு கிழமையளவில் கடந்து வெள்ளிக்கிழமை யும் வந்தது – சுந்தரலிங்கத்துக்கு ஒரு கடிதமும் வரவில்லை . அநேகமாக, சனிக்கிழமை ரிக்கற் கிடைக்கக்கூடும். விரை வில் போகக்கூடியதாக இருக்கும் என சுந்தர லிங்கத்துக்கு ஒரு பொய்யைச் சொல்லியிருந்தேன். சனிக்கிழமை அவன் வரும்பொழுது சொல்வதற்கு என்னிடம் எவ்வித பதிலும் இல்லை.

மிகவும் சோர்வுடன் … தாமதித்தே சனிக்கிழமை அலுவலகத்திற்குப் போனேன் – இதனால் காலையிலேயே வாசலில் நிற்கும் சுந்தரலிங்கத்தின் தரிசனத்தை தவிர்க்க லாம். ஆனால் நான் போகும் பொழுது அவன் வாசலி லேயே பழி கிடப்பது தெரிந்தது.

‘என்ன பதிலைச் சொல்ல?’

“நிண்டு கொள்!…. ஏஜெண்டோட கதைச்சுப்போட்டு சொல்லுறன்!” அவனை வெளியே நிறுத்திட்டு உள்ளே போய் கதவைச் சாத்தினேன்.

தபால், அன்றைய டிலிவரி வரும்வரை தாமதித்தேன் – வழக்கத்துக்கு மாறாக நேரத்துடனே கடிதங்கள் வந்தன!

கடிதங்களை எடுத்துப் புரட்டினேன். நான் சற்றும் எதிர்பாராத விதமாக, நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கடிதம் வந்துவிட்டது!

“சுந்தரலிங்கம்!” – கடிதத்தைப்பார்த்து, என்னையறியா மலேயே பரவசப்பட்டுக் கொண்டு நின்றேன். சத்தம் கேட்டு சுந்தரலிங்கம் ஓடிவந்தான்.

“உனக்கு கடிதம் வந்தருக்கு….” – கடிதத்தை அவனிடம் கொடுத்தேன். “வாசிச்சுப்போட்டு வந்து விசயத்தை சொல்லு!”

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை! அவனது வருகையை எதிர்பார்த்தபடி அலுவலகத்துக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்கினேன். கடவுளே நல்ல செய்தி கிடைக்கவேண்டும் –

“சேர்?” திரும்பிய பொழுது! சுந்தரலிங்கம் என் முன்னே நின்றான்.

“என்ன சுந்தரம் அண்ணைக்குச்….. சுகம் தானே?”

ஆவலுடன் கேட்டேன்.

அவன் கடிதத்தை என்னிடம் நீட்டினான். அவனது கை நடுங்குவது போலிருந்தது. “இல்லை சேர்… நான் போக வேணும்!” அதற்கு மேற்கொண்டு எதையும் விசாரிக்க எனக்கு விருப்பமில்லை. அவனாகவே சொன்னான்.

“டொக்கடர்மாரும் …. நம்பிக்கையில்லையெண்டு சொல்லிப் போட்டினமாம்!”

“எனக்கு உடனே அந்த போட்டோ நினைவில் வர. அதில் அவனது முகத்தை நினைவில் கொண்டு வர முயற்சித்தேன். அதைவிட, அந்தப் பெண்ணின் முகமும் பிள்ளைகளின் முகங்களும் வந்து நிழலாடின. இவர்களை யெல்லாம் தவிக்கவிட்டுப் போகப்போகிறேன். என்பது தெரியவந்து அந்த ஜென்மம் கூட இப்பொழுது கவலைப் பட்டுக் கொண்டு கிடக்கலாம்! சுந்தரலிங்கத்தை அனுதாபத் துடன் பார்த்தேன். இவன் போனால் தம்பி வெளிநாட்டி லிருந்து வந்திருக்கிறான் தான் இறப்பதற்கு முதல் எல்லோரையும் பார்த்துவிட்டுப் போகலாம். என்று அந்த ஜீவன் சந்தோசப்படுமா… அல்லது…. தனது சாவு நிச்சயிக் கப்பட்டு எல்லோரும் கண்ணில் வைக்க வந்து குழுமுகின்ற சூழ்நிலையை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்குமா?

“சுந்தரம் …. டொக்டர்மாரும் கைவிட்டிட்டினம் எண்டால்… இப்ப நீ போய் என்ன செய்யப் போறாய்? அப்பிடி ஏதாவது நடந்தால் அறிவிப்பினம்தானே… பிறகு போகலாம்!”

அவனது முதுகை அணைத்தவாறு ஆதரவாகக் கூறினேன். அடைப்பட்டிருந்த தொண்டையை செருமுவது போல மிகவும் முயற்சித்து அவன் கதை வெளிப்பட்டது.

“கட்டின வீடு… வேண்டின காணியள்… மினிபஸ்…. அனுப்பின காசு எல்லாம் அண்ணையின்ர பேரிலைதான் இருக்கு! தற்செயலாய் அண்ணைக்கு ஏதும் நடந்திட்டால் எல்லாம் அண்ணை பெஞ்சாதிக்குத்தான் போய்ச் சேருமாம்!… உடனை வந்தால் …. என்ர பேருக்கு மாத்தியிட லாம். எண்டு …… தங்கச்சி பிறகும் எழுதியிருக்கிறாள். அதுதான் போக வேணும்.”

– வீரகேசரி 1989 – தெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: பிப்ரவரி 1997, மல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம்

விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *