கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 13, 2023
பார்வையிட்டோர்: 1,266 
 

கதவை தட்டியதும் திறந்த காமாட்சி, முகத்தை அப்படி ஒன்றும் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளவில்லை. ஏன் இப்படி செய்கிறாய்? என்று கேட்கும் மனப்பான்மை யாகத்தான் அவள் முகம் தோற்றமளித்தது. கதவை தட்டிய ரகுராமனுக்கு தன் மனைவின் போக்கு சற்று ஆத்திரத்தை உண்டு பண்ணினாலும், எந்த பெண்ணுக்கும் இப்படித்தான் தோன்றும் என்றெண்ணி சமாதானமடைந்தான்.

காமாட்சியின் பின்னாலேயே போன ரகுராமன் அவள் நேரடியாக சமையலறைக்குள் நுழைந்ததை பார்த்ததும், முன்னர் நடந்ததை மறந்தான். கணவன் பசியோடு வந்திருப்பான் என்பதை புரிந்து வைத்திருக்கிறாள், இந்த எண்ணம் சற்று அவன் பசியை ஆறப்போட்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு மேல் வீட்டின் எதிர்புறம் மறைவில் காத்திருந்திருக்கிறான். போலீஸ் யாராவது அவன் வீட்டுக்கு வருவார்களா? என்று. ஊர் அரவம் அடங்கி குழந்தைகளும் படுக்க செல்வது தெரிந்த பின்னாலேயே வந்து கதவை தட்டினான். அவனுக்கு இந்த மறைவு வாழ்க்கை அடிக்கடி நடப்பதுதான்.

பசியால் வேக வேகமாக சாப்பிடும் கணவனை பார்த்துக்கொண்டிருந்தவள், பேசாம போலீஸ் கூப்பிட்ட உடனே போயிருக்க வேண்டியது தானே என்றாள். வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் என்ன சொல்றே? என்பது போல் பார்த்தான். ஏட்டையா சொல்லிட்டு போனாரு, அவன் ஏன் இப்படி பண்ணறான். போராட்டக்காரங்க எல்லாரையும் நாங்க பஸ்ல ஏத்தறப்ப இவன் மட்டும் நழுவி ஓடிட்டான், அப்படீன்னாரு. இது வேற அவன் பேர்ல இன்னும் ஒரு கேசு புக்காயிடும். அப்படீன்னாரு.

அவள் சொல்வதை மெளனமாய் கேட்டுக்கொண்டிருந்தவன், போராட்டத்தோட முடிவு தெரியாம என்னைய மாதிரி தலைமை பொறுப்புல இருக்கறவங்க ஸ்டேசன்ல போய் உட்கார்ந்துகிட்டா அடுத்து வழி நடத்தறதுக்கு யார் இருக்கா?

நீங்க மட்டும்தான் இந்த போராட்டத்தை நடத்தறமாதிரி ஏன் நினைச்சுக்கறீங்க.

உங்க கூட இருந்தவங்க எல்லாரும் உங்களை மாதிரிதானே, அவங்களுக்கும் குழந்தை குட்டி இருக்குல்ல, சரி நீங்க எதுக்கு போராடறீங்க? ஊதிய உயர்வு, புரோமோசன் வேணும் இப்படித்தானே, அதுதான் நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு வர சொல்லுதே.

மெளனமாய் சாப்பிட்டு தட்டை எடுத்து கொண்டு போய் சிங்கில் போட்டு விட்டு இப்ப என்ன செய்யலாமுன்னு நினைக்கிறே?

பேசாம விடிய காலையிலே ஸ்டேசன் போயிடுங்க, ஏட்டையா இருப்பாரு, அவர்கிட்ட போயிட்டா மத்ததை எல்லாம் பாத்துக்குவாரு..

விடியற்காலையில் ஏட்டையா அவனை முகத்தை சுழித்தவாறுதான் வரவேற்றார்.

“ஏலே” நீ யாருக்காக போராடறே? அவங்க எல்லாம் உனக்கு விசுவாசமா இருப்பாங்கன்னு நம்புறயா?

அவன் எதுவும் பதில் பேச விரும்பவில்லை. இந்த மாதிரி நிறைய பேர் அறிவுரை சொல்லி விட்டார்கள். அவனால்தான் அமைதியாக இருக்க முடிவதில்லை.

முன்னர் கைதாகி இரவு அந்த ஸ்டேசனில் தங்க வைக்கப்படிருந்தவர்கள் அவனை வெறித்து பார்த்தனர், நீ மட்டும் இந்த கொசு கடியில இருந்து தப்பிச்சு வீட்டுல படுத்து எந்திரிச்சு வர்றே? குற்றம் சாட்டுவது போல் சொன்னார்கள். இவன் இல்லை, நான் உங்களை எல்லாம் ஜாமின் எடுக்கறதுக்கு வக்கீலை ஏற்பாடு பண்ணனும், அடுத்து என்ன பண்ணனும்? அப்படீங்கறதை சங்க அலுவலகத்துல விசாரிக்கணும் இந்த எண்ணத்துலதான் தப்பிச்சேன்.

அவர்கள் அவன் சொல்வதை நம்புவது போல் தெரியவில்லை.பேசாமல் வெளியில் இருந்திருக்கலாம் என்று நினைத்தான்.

சங்கம் ஏற்பாடு செய்திருந்த வக்கீல் மூலம் ஜாமீன் வாங்கி வெளி வர மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.அதன் பின் சங்க அலுவலகம் சென்று ஆலோசனை செய்தனர். கம்பெனி ஊதிய உயர்வையும்,பதவி உயர்வையும் தர ஒத்துக்கொண்டதால் வேலைக்கு திரும்ப சொன்னது சங்கம். சரி என்று ஒத்துக்கொண்டு விட்டு வீடு போய் சேர இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

மதிய இடைவேளையில் ரகுராமனுடன் பணி புரிந்து வருபவனும் பக்கத்து வீட்டில் வசித்து கொண்டிருந்தவனுமான பாலு, நிர்வாகம் அடுத்த மாசம் நாம் கேட்ட ஊதிய உயர்வு, புரோமோசன், இரண்டையும் கொடுக்கறதா சொல்லிடுச்சாம். அவன் குரலில் மகிழ்ச்சி தென் பட்டது. போன மாதம் நிர்வாகம் இவனுக்கு வரவேண்டிய புரோமோசனையும், ஊதிய உயர்வையும் நிறுத்தி வைத்து விட்டதாக கண்ணீருடன் ரகுராமனிடம் சொல்லியிருந்தான். இவனிடமிருந்துதான் இந்த போராட்டத்தை சங்கத்திடம் சொல்லி ஆரம்பித்தான் ரகுராமன்.

ஒரு மாதம் ஓடியிருந்தது, காமாட்சி இவனிடம் பக்கத்து வீட்டு பாலு வீட்டை காலி பண்ணிட்டு போறாராம். ஏன் இந்த வீடு நல்லாத்தானே இருக்கு, குழந்தைங்க பள்ளிக்கூடத்துக்கு போக வர வசதியாகத்தானே இருக்கு, சொன்ன ரகுராமனை ஒரு நமட்டு சிரிப்புடன் காமாட்சி பார்த்தாள்.

உணவு இடைவேளை ! நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ரகுராமனை என்னப்பா உன் பக்கத்து வீட்டு பாலு வீட்டை காலி பண்ணிட்டு கொஞ்சம் தள்ளி குடி போயிட்டானாமா?

ஆமா, வீட்டுல சொன்னாங்க, ஏன் அவசர அவசரமா காலி பண்ணினான்னு தெரியலை.

அவன் பிரண்ட்ஸ்கிட்ட சொல்லிகிட்டிருந்தானாம், நாம இப்ப ரகுராமனை விட பெரிய பதவிக்கு வந்திட்டோம், அவன் பக்கத்துல குடியிருந்தா, நல்லாயிருக்காது.

காமாட்சியின் நமட்டு சிரிப்புக்கு அர்த்தம் புரிந்தது.

நாளைக்கு நம்ம கேசுக்கு கோர்ட்டுக்கு வருதுப்பா.கம்பெனி பர்மிசன் கொடுக்குமா? நண்பர்கள் இவனிடம் கேட்டனர்.

நிர்வாகத்திடம் அதை பற்றி பேச அதிகாரியிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க சென்று கொண்டிருந்தான் ரகுராமன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *