(2016ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20
அத்தியாயம்-11
மைமலான போது அலஸ் மறுபடியும் முத்துராசன் வீட்டுக்கு வந்தான். அந்தவேளை சொர்ணம் மட்டும் வீட்டில் தனித்திருந்தாள்.
‘கால் எப்பிடி சுகமாயிட்டுதா?’ என்ற பாவனையில் அவன் சொர்ணத்தை வினவினான்.
‘இன்னும் வலித்துக் கொண்டுதானிருக்கு’ என்று சொர்ணம் அலசின் பாஷையிலேயே பதில் கூறினாள்.
அவளின் பதில் அலசுக்குத் திருப்தியானதாக இல்லை. வலக்காலை நீட்டியபடி விறாந்தையிலிருந்து இலாம்புச் சிமிலியைத் துடைத்துக் கொண்டிருந்த சொர்ணத்தின் காலைத் தொட்டு, கஞ்சிபட்டுக் கொப்பளமாகி இருந்து பகுதிகளை மிருதுவாகத் தடவிப் பார்த்தான். சொர்ணம் எந்த உணர்ச்சிக்கும் ஆட்படாமல் வலிக்கும் இடங்களைக் குறிப்புக் காட்டினாள்.
அவள் குறிப்பிட்ட இடங்களை அவன் ஊதிவிட்டான்.
இது அவளுக்குச் சற்று இதமாக இருந்திருக்கவேண்டும் மீண்டும் ஊதிவிடும்படி அவள் வேண்டினாள்.
‘ஆர் மகள் வந்திருக்கிறது. ஊமையோ?’ என்று கேட்டுக்கொண்டே வறோணிக்கா வந்தாள்.
‘ஓமெணை, அதுதான் வந்திருக்கு’ என்று பதில் கூறிவிட்டு, அலஸை மீண்டும் ஊதிவிடும்படி சொர்ணம் கேட்டாள். இப்போது இப்படிக் கேட்க அவள் வெட்கப்படவில்லை.
‘கொப்பர் வந்திடப் போறார். கட்டுச்சோறு கட்டினியே மகள்!’ என்று வறோணிக்கா பட்டிக் காவலுக்குப்போகும் முத்துராசனுக்கு கட்டுச்சோறு கட்டும் வழக்கத்தை நினைவுப்படுத்தினாள். ‘நீ கட்டுச் சோறு கட்டி வந்தனியே?’ என்று அவள் அலசைப் பார்த்துக் கையால் வினவினாள்.
அலஸ் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டு எழுந்துநின்று அன்று சாயந்தரம் வீட்டில் நடந்த ஒரு அல்லோ கல்லோலத்தை சாங்கோ பாங்கமாக விளங்கப்படுத்தினான்.
நல்ல சினைப்பிடித்த நண்டுக் கறியையும் சோத்தையும் சமைத்து வைத்துவிட்டுப் பேத்திக் கிழவி வெளியே சென்று விட. அடுத்தவீட்டு நாய் வந்து சகலத்தையும் தின்றுவிட்டதுடன் பானை சட்டிகளையும் உருட்டி உடைத்துவிட்டுச் சென்றுவிட்ட கதையைச் சொல்லி விளங்க வைத்தான்.
சொர்ணத்தில் முகத்தில் சிரிப்பு, பச்சாதாபம் ஆகிய உணர்ச்சிகள் நெளிந்தோடிச் சென்றன. அகலத் திறந்த கண்களை இமைகள் வெட்டி டவில்லை. அவள் விழிகள் அப்படியே ஊமை அலசை விழுங்கி நின்றன. அலசின் கதையின் முடிவில் அவள் கண்களை மூடிக்கொண்ட போது வெட்டுண்ட கண்ணீர்த் துளிகள் நெஞ்சின் இரு புறங்களிலும் பாய்ந்தன.
வறோணிக்கா அடுக்களைக்குள் போய்விட்டாள்.
அலஸ் அப்படியே நின்றான், வெகு நேரமாகியும் அவன் அப்படியே நின்றான்.
சொர்ணத்தின் முகம் தரையை நோக்கிக் கவிழ்ந்திருந்தது. வெகு நேரம் இருந்தது.
அவள் கரம் பக்கத்து ஓலைத் தட்டியின் பின்னல் ஓரத்தைத் தட்டித் தட்டி நாதம் எழுப்பிக் கொண்டிருந்தது.
‘ஏன் அழுகிறாய்?’ என்ற கேள்வியை அலஸ் தன் பாஷையில் கேட்டான்.
சொர்ணத்தால் இதற்குப் பதில் கூற முடியவில்லை.
முகத்தை மறுபக்கமாகத் திருப்பி அவள் துவண்டு போய் இருந்தாள். ‘ஏன் அழுகிறாய்? என்ன உடம்புக்கு?’ என்று மேலும் ஒரு கேள்வி யைக் கேட்டான்.
சொர்ணம் சற்று நகர்ந்து மறுபக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள். ‘ஏன் அழுகிறாய்? என்ன உடம்புக்கு? கால் வலியாக இருக்கா?’ என்று அலஸ் மேலும் ஒரு கேள்வியை அடுக்கினான்.
இதற்குமேல் சொர்ணத்தால் அங்கிருக்க முடியவில்லை. படக்கென எழுந்து, தட்டிப் படலையைத் திறந்துகொண்டு அவள் வீட்டுக்குள் போய்விட்டாள்.
அலஸ் பதறிப்போய்விட்டான். ‘நான் கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டேனோ?’ என்ற ஐயப்பாடும், ‘பாவம், அவளுக்கு வலியாக இருக்கிறதோ’ என்ற பச்சாதாப உணர்ச்சியும் மனதுக்குள்ளே போராடிக் கொண்டிருந்தன.
‘அலஸ், நீயும் வந்திட்டியா?’ என்று கேட்டுக்கொண்டே முத்துராசன் வந்தான்.
சொர்ணத்தால் விட்டுச் செல்லப்பட்ட சிமினியை எடுத்து லாம்புக் கம்பிக்குள் செருகியவாறே ‘ஓமோம்’ என்று அவனுக்குப் பதிலும் சொன்னான் அலஸ்.
வறோணிக்கா முத்துராசனுக்கும் அலசுக்குமாக இருதூக்குச் சட்டி களில் சாதம் எடுத்துவந்தாள்.
சற்று வேளைக்குப்பின் முற்றத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கடிப்பு வலையைத் தடியோடு சுற்றி, அதன் முன்னுக்கும் பின்னுக்குமாக ‘பறி’ என்ற கூடைகளை மாட்டிக்கொண்டு முத்துராசன் புறப்பட்டு விட்டான்.
தந்தையின் சாப்பாட்டுச் சட்டியை எப்போதும் சொர்ணம்தான் பறிக்குள் வைப்பது வழக்கம். சொர்ணத்தின் அறிவறிந்த காலம் முதல் இந்த வழக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அதன்படி முத்துராசன் சொர்ணத்தை எதிர்பார்த்தான். சொர்ணம் இன்னும் வந்த பாடில்லை.
‘மகள்’ என்று முத்துராசன் அழைத்தான். பதில் கிடைக்கவில்லை. முத்துராசன் வறோணிக்காவின் முகத்தைப் பார்த்தான். அவனுடைய பார்வையைப் புரிந்து கொண்ட வரோணிக்கா, ‘அதுக்குக் கால் வலிக்குதாக்கும், அதுபோய்ப் படுத்திட்டுது’ என்று கூறிக் கொண்டே தூக்குச் சட்டிகளை எடுத்துப் பறிக்குள் வைத்தாள்.
முத்துராசன் எதை நினைத்துக்கொண்டானோ, கடிப்பு வலையை யும் பறிகளையும் தோளில் வைத்துக்கொண்டு வெளியே நடந்து கொண்டிருந்தான்.
சவள் பலகையையும், மரக்கோல்களையும் எடுத்துத் தோளில் சாத்திக்கொண்டே அலஸ் அவனுக்குப் பின்னால் நடந்தான்.
அத்தியாயம்-12
மாலை வெள்ளியின் மசியமயமான ஒளி மங்கிப் போவதற்கிடையில், அலசும் முத்துராசனும் உணவருந்திவிட்டனர்.
கடிப்பு வலையைத் தலைக்குப் போட்டுக்கொண்டு முத்துராசன் உறங்கிப்போய்விட்டான். உணவருந்தியதும் அவனுக்கு உடனேயே தூக்கம் வந்துவிடும்.
ஆறா மீன் வெள்ளி மதியத்திற்கு வரும்வரை அலஸ் பட்டிக் காவலுக்கு இருக்கவேண்டும்! கடலில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் வலையைத் திருடர்கள் எடுத்துச் செல்லாமல் கண்விழித்துக் காத்திருக்க வேண்டும்!
பல தடவைகளில் திருடர்கள் பட்டிவலையைக் களவாடிச் சென்றிருக் கிறார்கள். சில தடவைகளில் வேலி வலையையும் சேர்த்து அள்ளிச் சென்றிருக்கிறார்கள்.
அவர்கள் வரும்போது கடலில் எந்தச் சலனமுமே கேட்பதில்லை. சிறு தோணியுடன் மிகவும் இலாவகமாக அவர்கள் ஊர்ந்து வருவார்கள். காவல் தோணியில் நங்கூரக் கயிற்றைத் துண்டித்துவிட்டார்களானால் காவல் தோணி சலனமின்றி, அசைந்தசைந்து நீரோட்டத்தோடு சேர்ந்து கொண்டு வெகுதூரம் போய்விடும். அதற்குப்பின், எந்தவிதப் பதட்ட மின்றி, வலைகளைப் பிடுங்கிக்கொண்டு அவர்கள் போய்விடுவார்கள். காவல் தோணிக்காரர்கள் ஒன்றோ பாதியிலோ கண்விழிக்கும் போது வலைகள் எதுவுமின்றி கடல் சூனியமாகக் கிடக்கும். அப்போதுதான் தோணி வலைப்பாட்டைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டதை அவர் களால் அறியமுடியும். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வலைப்பாட்டை நோக்கி அவர்கள் ஓடுவார்கள். அங்கேயும் சூனிய மான கடலைத்தான் அவர்கள் காண்பார்கள்.
அலஸ் மிகவும் எச்சரிக்கையாகக் கடலின் முடிவுவரை பார்வையை வைத்துக் கொண்டிருந்தான்.
வான நடு முகட்டிகள் வடபுறமாகப் பேரொளி காட்டி, கப்பல் போன்று நீண்டு நெடுத்து அணிவகுத்து நின்ற கப்பல் வெள்ளித் தொடரின் மென் ஒளியில் கடலின் மார்பு மின்னிக்கொண்டிருந்தது.
அலசின் நெஞ்சுக்குள்ளே ஆயிரம் எண்ணங்கள் முறைவிட்டு, முளைவிட்டு மடிந்துகொண்டிருந்தன.
சொர்ணத்தை அவன் நினைத்துப் பார்க்கிறான்.
சொர்ணத்தின் கண்களின் கடையிலே வழிந்து மார்புச் சட்டைமேல் குதித்த அந்தக் கண்ணீர்த் துளிகள் இப்போது அவன் கண்களோடு நிற்கின்றன.
‘சொர்ணம் ஏன் அழுதாள்?’ என்ற இந்தக் கேள்விக்குப் பதில் காண அவள் நினவு நெஞ்சைத் துளாவித் துளாவி வருகிறது.
நெடுமுரல் மீனொன்று தோணிக்குச் சமீபமாகப் பாய்ந்து பாய்ந்து கடலின் நெஞ்சை ஊடுருவிச் செல்கிறது.
இரண்டு கடற்புள்ளுகள், அந்த முரல் மீனுக்குப் பின்னால் மிதந்து தாழ்ந்து வேடிக்கை காட்டிக்கொண்டு இருளுக்குள் இருளாக வெகுதூரம் வரை சென்று மறைகின்றன.
அலசுக்கு வாய்ப் புளிப்பாக இருந்தது.
மடிப்பெட்டியைத் திறந்து புகையிலைத் துண்டொன்றைக் கிள்ளி, அதைக் கீலமாக்கி. ஒரு சுருட்டைஆக்கி, குச்சொன்றைக் கிழித்து அதைப் பற்றவைத்துக்கொண்டான். காற்று மயங்கிப் போய்க் கிடந்ததால் அது ஒரே முறையில் பற்றிக்கொண்டது.
நான்கு புகைகளை உந்திவரை இழுத்துவிட்டபோது ஒருவித நிம்மிதியாக இருந்தது. மேலெழுந்த புகையைப் பார்த்துவிட நிமிர்ந்த அவன் கண்கள் வானத்தைப் பார்த்தன. வானம் நிர்மலமாக இருந்தது. மறுபடியும் பார்வையை மடக்கி வடபுறமாக அகல வீசினான். ஊரின் வெளிச்சங்கள் மின்மினியாகத் தெரிந்தன. அந்த மின் மினிகளின் நடுவிலே நீல நிறத்து மின்மினிகள் இரண்டு தன்னந் தனியாக உயர்ந்து நின்றன. அது கோவிலின் மொட்டைக் கோபுரங்கள் இரண்டினதும் மின்மினிகளாகும். கோவிலின் மொட்டைக் கோபுரங்களின் இடக் கோடியின் சிறு வீதியால் நாலு சுவடுகள் வைத்துவிட்டால் மூன்றாவது வரும் குடிசைக்குள் சொர்ணம் இருக்கிறாள்.
கால்வலியோடு சொர்ணம் சுருண்டு படுத்திருக்கும் காட்சி அலசின் கண்களுக்குத்தெரிகிறது.
சொர்ணம் தொடர்ந்து முனகுகிறாள்- வேதனையால் துடிக்கிறாள். வறோணிக்கா அவளை ஆசுவாசப்படுத்துகிறாள். ஆனாலும் சொர்ணம் முனகிக்கொண்டே கஞ்சிபட்டுக் கொப்பளித்திருந்த இடங் களை ஊதிவிடும்படி கேட்கிறாள்.
பாவாடையைச் சற்று நுகைத்துக்கொண்டே சொர்ணம் இருக்க, வறோணிக்காவல்ல வரோணிக்காவுக்காகத்தானே ஊதுவது போன்ற…
சற்று வேளை அந்த இதமான ஊதலுக்குக் காலைச் சரித்துக் கொண்டிருந்த சொர்ணம் எதையோ நினைத்து, பாவாடையை இழுத்து கால்கள் முழுவதையும் மூடிக்கொண்டே அலசை வெருட்சியுடன் பார்க்கிறாள். அவள் கண்களில் முட்டிநின்ற நீர் இமைகளால் வெட்டுண்டு மார்புச் சட்டை மேல்விழுந்து நனைத்துவிட…
வேலி வலையோடு உரசி உரசி நகர்ந்துவந்து பட்டிவலைக்குள் புகுந்துவிட்ட பாரை மீனொன்று துள்ளிக் குதித்து, சிறகடித்து மரணத் துடிப்புத் துடிக்கிறது.
நினைவுத்தொடர் அறுந்துபோக, அலஸ், கண்களைக் கூர்மை யாக்கிக் கொண்டு பட்டிக்குள் புதைய வைக்கிறான்.
பாரை மீனின் மரணத் துடிப்புச் சிறிது சிறிதாக அடங்கிப்போக, அது தண்ணீரில் நில மட்டத்திற்குத் தாழ்ந்து போகிறது. ‘அந்தப் பாரை மீன் ஐம்பது ரூபாவுக்காகவது பெறும்’ என்று அலஸ் எடைபோட்டுக் கொள்கிறான்.
புத்தம் புதியதான வலைக்குள் முதல் முதலாக இப்படி ஒரு மீன் பட்டுவிட்டது. அலசுக்கு மிகவும் உற்சாகத்தைத் தந்தது. அது பாரை மீன்தானென்று அவன் இனங்கண்டு கொண்டான். அதுவும் அது கருங் கண்ணிப் பாரை தான் என்று அவனுடைய மனங் கூறியது. கருங் கண்ணிப் பாரை மீனின் சிறகடிப்பு அவனுக்குத் தெரியும். இந்தப் பதினைந்து வருடகாலக் கடல் அனுபவத்தில் இந்தக் கருங் கண்ணிப்பாரை மீனின் சிறகடிப்பை அவன் நன்கு, புரிந்துவைத்துக் கொண்டிருக்கிறான்.
கடல் வடுஓடி, மீண்டு, பின்கடல் நுகைப்பெடுக்கும் போது இது பாடுகளை நோக்கி வருகிறது; எதையும் நின்று நிதானித்துச் செய்கிறது. தனக்கான வேட்டைகளைப் பிடிக்கும்போது மின்னல் போல வந்து இரை எடுத்துவிட்டு மின்னல் போலவே மறைந்துவிடுகிறது. எதிரிகள் வசம் சிக்கிவிட்டாலோ அதிலிருந்து மீண்டுகொள்ள உக்கிரத்துடன், கடைசி மூச்சுவரை போராடுகிறது. இது தன்னந்தனியாக வருவதில்லை. பெருங்கூட்டத்துடனேயே வருகிறது. நிச்சயமாக அந்தக் கூட்டத்திற்கு ஒன்றே ஒன்றுதான் தலைமைதாங்கி வரும். இதன் வழிப்படியே கூட்டமும் வழி நடந்துகொள்ளும்.
இவைகளையெல்லாம் அறிந்துவைத்துக் கொண்டிருக்கும் அலஸ், தோணியின் ஆசனப் பலகையில் கையை ஊன்றி, தலையைப் பதிய வைத்து, கடலின் அடிவயிற்றைப் பார்க்கிறான். பட்டிக்குள்ளான நீர் கலங்கிச் சிவந்திருந்தது.
ஒரு தடவை சந்தியாக்கிழவனுடன் அவன் வந்திருந்த போதும் இப்படித்தான் பட்டிவலை சிவந்து கலங்கிக் கிடந்தது.
இதே காலம்.
கிழவன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அலசுக்கு அப்போது வயது பதினைந்திற்குமேல் இருக்கவில்லை. பட்டிவலை கலங்கிக் கலங்கிச் சிவப்பாகிய போது. அவன் பயந்து போய்ச் சந்தியாக்கிழவனை அருட்டி விட்டான். சந்தியாக்கிழவன் கண்விழித்துப் பார்த்தான்.
‘எட பொடி, கருங்கண்ணியடா பட்டிருக்கு; கூட்டமா வந்திருக்கு. கடிப்பு வலையை எடு’ என்று அவன் அலசைத் துரிதப்படுத்தினான்.
‘மச்சம் மீளப்போகுது இறங்கடா இறங்கு’ என்று கூறிவிட்டுக் கிழவன் பட்டிவலைக்குள் குதித்துவிட்டான். பட்டிக்குள் கடிப்பு வலையைப் போட்டு வளைத்து நிமித்தியபோது ‘அப்பாடா எத்தனை கருங்கண்ணிப் பாரைகள்!’
வெற்றி முழக்கத்துடன் அவன் ஊமைக் குரலில் கத்திக்கொண்டே குதித்த குதிப்பு இப்போதும் அவன் மனதுடன் படிந்து நிற்கிறது.
இப்போது பட்டி வலைக்குள் கருங்கண்ணிப் பாரைகள் நிறைந்து நிற்பதாக அவன் மனதால் கண்டான். தோணியின் வலப்புற வங்கினால் ஓடிச்சென்று அவன் முத்துராசனை அருட்டினான். என்னவோ, ஏதோ வென்று முத்துராசன் பதறிக்கொண்டு எழுந்தான். அலசின் பாசையைப் புரிந்துகொண்டு பட்டிக்குள் கண்களைப் பாயவிட்டான். பட்டிச் செந்நிறமாகிக் கலங்கிக் கிடந்தது.
பாரைமீன் ஒன்று முன்பக்கத்தில் துள்ளிக் குதித்துச் சிறகடித்தது. மீன் கடலுக்குள் மீண்டும் போவதாக அவன் நினைத்தான். கடிப்பு வலையைப் பட்டிக்குள் தள்ளிவிட்டு முத்துராசன் உள்ளே குதிப்பதன் முன் அலஸ் குறிப்பறிந்து முன் கூட்டியே குதித்துவிட்டான்.
அலஸ் வடகரைக்கும் முத்துராசன் தென்கரைக்குமாக நின்று கடிப்பு வலையைத் தாளப் பதித்து, கால்களால் நிலத்தோடு மருவிமருவி, கால் பெருவிரல்களில் கடிப்பு வலையின் பெருங்கயிற்றை உறுதியாகச் சுற்றிக் கொண்டே மீன்கள் அப்பால் மீண்டுவிடாமல் நிதானமாக நிலத்தோடு உரசிக்கொண்டே இருவரும் தங்கள் தொழில் நுணுக்கத் தைக் காட்டினர்.
கடிப்பு வலை நிமிர்ந்து வரும்போது, அலஸ் தோணிக்குள் தாவி கடிப்பு வலையைத் தோணிக்குள் சாம்பி இழுத்தான். அவனால் தனித்து அதைச் செய்யவே முடியவில்லை. கடிப்பு மடியைச் சுருக்கி அலசின் கையில் கொடுத்துவிட்டு முத்துராசனும் தோணிக்குள் ஏறி விட்டான். இருவருமாகச் சாம்பினர்.
‘எடே தம்பி! கருங்கண்ணி பட்டிருக்கடா’ என்று முத்துராசன் உற்சாகமாகக் கத்தினான். வெகுசிரமத்திற்கப்பால் கடிப்பு வலை தோணிக்குள் இழுக்கப்பட்டுவிட்டது.
அத்தனையும் கருங்கண்ணிப் பாரைகள்.
கடைசி வேளையிலும் அவைகள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ளப் போராடின.
மடிக்குள் நிரம்பிநின்ற மீன்களைத் தோணிக்குள் கொட்டிவிட்டு வாயில் புறப்பட்டிக்குள் கடிப்புவலையைப் போட வேண்டுமென அலஸ் தன் பாசையில் கூறினான். இதை முத்துராசனும் ஒத்துக் கொண்டு தலைவாயில் பட்டிக்குள் கடிப்பு வலையைப் போட்டுவிட்டு உள்ளே குதித்தான்.
மறுபடியும் ஒரு போராட்டம். பெருங்கதவால் மீண்டுவிட முயலும் மீன்களை வளைத்து நடுப்பட்டிக்குள் சேர்க்க வேண்டும்! தலைவாயில் பட்டிக்குள்ளிருந்து மீன்கள் மீண்டுவிடும் சந்தர்ப்பம் நிறைய இருந்தது. அலஸ் பெருவாயிலை மறைத்துக்கொண்டு மிக நுணுக்கமாகக் கடிப்பை வளைத்தான். இப்போதும் அவனுக்குத்தான் வெற்றிகிட்டியது.
மடிநிறைந்து வழிந்த மீன்கள், தோணிக்குள் கொட்டப்பட்ட போது அவைகள் பரந்து தோணி வங்குகளை அடித்தன.
முத்துராசன் களைத்துப்போய் விட்டான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. அலசுக்கு அப்படி எதுவும் ஏற்படவில்லை. வயிரம் பாய்ந்த அவன் தசை நார்கள் துன்னிப் புடைத்து இருட்டுக்குள் மின்னுவதைப்போல் இருந்தன. அவன் மீண்டும் ஒரு தடவை சிறகுப் பட்டிக்குள் கடிப்பு வலையைப் போட்டு வளைக்க வேண்டுமெனக் கேட்டான். முத்துராசனுக்கு அது சரியாகப்பட்டாலும், அவனால் உடனடியாக எதற்குமே முடியவில்லை. அலசைப் பார்த்துக் கையமர்த்தி விட்டு அவன் தோணியின் அணியத்தில் நீட்டி நிமிர்ந்து படுத்து இளைப்பாறிக்கொண்டான்.
ஆறாமீன் வெள்ளி படுவானை நோக்கிச் சரிந்துகொண்டிருந்தது. முத்துராசனுக்கு மீண்டும் தூக்கம் வந்துவிட்டது. அவன் அப்படியே அயர்ந்து போனான். அலசுக்குத் தூக்கமே வரவில்லை. அவன் விழிப்பிலிருந்தான்.
முத்துராசன் கண்விழித்தபோது விடிவெள்ளி முளைத்துவிட்டது. அலசை சற்றுத் தூங்கும்படி அவன் வற்புறுத்த அலஸ் அணியத்திற்கு வந்து சரிந்துவிட்டான்.
நாடிக்கு முண்டுக்கொடுத்துக்கொண்டு முத்துராசன் அலசையே நோக்கியபடி இருந்தான். அலசின் விசுவாச உணர்ச்சி முத்துராசனின் மனதை அடைத்துக்கொண்டு அவன் மனதிற்குள் ஒரு பச்சாத்தாப உணர்வைக் கிளறிக்கொண்டிருந்தது.
சின்ன வயதிலிருந்து இன்றுவரை தனது குடும்பத்துடன் பின்னிக் கொண்டு இந்த ஊமை, மாடாக உழைத்து வருவதை மனதுக்குள் எண்ணி எண்ணிப் பொருமினான். அந்தப் பேத்திக் கிழவி ஒன்றைத் தவிர அவனுக்கு யார் இருக்கிறார்கள்? ‘கிழவியும் போய்விட்டால் அதன் பின்பு அவனை ஆதரிக்க இயலாத ஒரு வெறுமை நிலை வந்து விடப் போகிறதே’ என்று அவன் ஏங்கினான். ‘அவனுக்கும் வயதாகி விட்டது. யாராவது ஒருத்தியைப் பிடித்து அவனுக்கு மெய்விவாகம் செய்து வைத்துவிட்டால்…’ என்று அவன் எண்ணியபோது, ‘இந்த ஊமையைக்கட்ட எவள் சம்மதிக்கப் போகிறாள்’ என்ற கேள்வி ஒன்று பெரிதாக முளைத்து நின்றது.
நான்கு மாதங்களுக்கு முன் இஸ்திரிபாட் ஜோசையின் மகள் மேரியை அலசுக்குக் கட்டிவைப்பதற்காக முத்துராசன் ஜோசையிடம் கேட்டான்.தம்பிப்பிள்ளையின் கள்ளுக்கொட்டிலில் இந்தப்பேச்சுத் தொடங்கியது. அப்போது ஜோசை சொன்னானே ஒரு சொல்! அது இன்னும் முத்துராசனின் நெஞ்சைப் பிளந்துகொண்டே இருக்கிறது.
ஜோசையின் மகள் மேரிக்குப் பெயரிட்டு தொட்ட தகப்பனாகிவிட்ட உரிமையை வைத்துக்கொண்டு அவன் ஜோசையைக் கேட்டான்…
‘கும்பா, உவன் அலசுக்கு மேரியம்மாவைச் செய்து வைப்பமோ…?’
‘ஏன் கும்பா பேசமாட்டியாம், அவன் நல்ல உழைப்பாளி; குடிவெறி இல்லாதவன். குடும்பத்தைப் பாக்கக் கூடியவன். கட்டிவைச்சா என்ன கும்பா?”
‘ஆர் கும்பா ஊமைக்கோ…? தாய் தேப்பன் தெரியாதவனுக்கோ…? ஆனாசிக் கிழவியின்ரை வளர்ப்பிணிக்கோ? அவன் சிங்களவனுக்கோ? என்ன சாதியோ? எங்கடை சபை சந்தியலை இல்லாதவனுக்கோ?’
‘அதிலை என்ன கும்பா இருக்கு?’
‘அப்பிடியெண்டால் கும்பா உன்ரை மோளைக்கட்டிவையன், அதுகும் நல்லதெல்லே… உன்னோடைதானை அவன் தொழில் பாக்கிறான். சின்னவயசிலை இருந்தெல்லே அடிச்சுத்தாறான். இதற்கு மேல் முத்துராசனால் ஜோசையுடன் பேச முடியவில்லை. கள்ளும் பிளாவில் இருந்த மிகுதியை அவசரமாக உறிஞ்சி இழுத்து விட்டு ஜோசையுடனோ கள்ளுக்கொட்டில் தம்பிப்பிள்ளையுடனோ எதுவுமே பேசிக்கொள்ளாமல் அவன் வந்துவிட்டான். அவன் கள்ளுக் கொட்டில் படலையைத் தாண்டி வரும்போது.
‘கேட்டியே தம்பிப்பிள்ளை முத்துராசனின்ரை எளிய புத்தியை! அவன் ஊமை, அவனைக் கொண்டு அடி அடியெண்டு அடிச்சு உழைச்சுப்போட்டு அவனை என்னட்டை கட்டியடிக்கப் பாக்கிறதை! மடுக்கோயிலிலை ஆரோ சிங்களத்தீன்ரை வம்பிலை பிறந்ததை வாங்கிக் கொண்டு வந்து கிழவி வளத்தெடுக்க, இப்ப அதை மற்ரவையிட்டைக் கட்டி அடிக்கப் பார்க்கிறான் முத்துராசன் ஏன் தன்ரை மோளுக்குக் கட்டினா என்ன? என்ன தம்பிப்பிள்ளை நான் கேக்கிறதிலை பிழை இருந்தா நீ சொல்லு?’ என்ற வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. சற்று வேளை நிலைத்து நின்று இதைச் செவி மடுத்துவிட்டு முத்துராசன் வந்துவிட்டான்.
‘மடுக்கோயிலிலை ஆரோ சிங்களத்தீன்ரை வம்பிலை பிறந்ததை…’ அன்று ஜோசை கூறிய வார்த்தைகள் இன்றும் முத்துராசன் நெஞ்சுக்குள் இரைவெடுக்கின்றன அசந்துபோய்க் கிடக்கும் அலசை இமை கொட்டாது பார்த்துக்கொண்டே அவன் இருந்தான்.
கிழக்கே வெள்ளாப்புக் கண்டது.
மண்டை தீவுக் கரையை நோக்கிக் காகக் கூட்டங்கள் கரைந்து பறந்து சென்றன. கடல் ஓய்ந்து களைத்துப் பெருமூச்செறிந்தது. அது இப்போது வடுவுக்குத் திரும்பி விட்டது. கடற் பறவைகள் கூச்சலிட்டுப் பறந்து பறந்து பட்டி வலையைச் சுற்றிச் சுற்றிக் கரைந்து சென்றன.
ஜோடியாகப் பறந்துவந்த கடல் நாரைகள் இரண்டு பட்டி வலைக் கம்பங்களில் குந்தி கணத்தில் அரவங்கண்டு தொலைவுக்கு ஓடிச் சென்றன.
கடலின் மேற்பரப்பில் துள்ளிக் குதித்த மணலை மீன்களின் பளிச் சென்ற ஒளி தெளிவாகத் தெரிந்தது.
பட்டி வலைக் கலக்களுக்குள் கொய்மீன்கள் பளிச்சிட்டுக்கொண்டே மின்னிப் பாய்ந்தன.
மடிப்பெட்டியை எடுத்து அதனுள் இருந்த கோடாப் போட்ட சுருட்டொன்றை வாயில் வைத்துப் பற்றவைத்துக்கொண்டே முத்துராசன் எழுந்தான். அலஸ் சவள் பலகையில் அயர்ந்துபோய்க் கிடந்தான்.
தோணி வங்குக்குள் கருங்கண்ணிப் பாரைகள் செத்துப்போய்க் கிடந்தன. அவைகளின் கதகதப்பான வாசனை முத்துராசனின் மூக்கைத் துளைத்தது.
அத்தியாயம்-13
முத்துராசனின் வலைப்பாட்டில் பாரைமீன் கூட்டம் பட்டிருக்காம்’ என்ற செய்தி ஊருக்குள் மின்னல் வேகத்தில் பரவி விட்டது.
வறோணிக்கா மீன்துறையில் முத்துராசனின் தோணியின் வரவுக் காகக் காத்திருந்தாள். தோணி கரைக்கு வந்து சேரச் சற்றுத் தாமதமாகி விட்டது. தோணி வந்தது தான் தாமதம். ஜனக் கூட்டம் தோணியை வளைத்துக்கொண்டுவிட்டது. கால்பங்குத் தோணி நிறைந்த அளவுக்கு பாரை மீன்கள்!
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இவ்விரண்டு மீன்களாக வாலில் பிடித்துத் தூக்கிக்கொண்டு கரைக்கு மீன்களைச் சேர்த்துக்கொண்டே இருந்தான் அலஸ். வரோணிக்காவின் பாதங்களுக்கு மீன்களால் அபிஷேகம் செய்து வைப்பதைப் போன்ற நிலையில் பாரை மீன்கள் போடப்பட்டிருந்தன.
‘ஆர் நாப்பது உருவா; ஆர் நாப்பது உருவா; ஆர் நாப்பது உருவா நாப்பத்தொண்டு நாப்பது.’
‘ஆர் நாப்பத்தைஞ்சு உருவா; ஆர் நாப்பத்தைஞ்சு உருவ; ஆர் நாப்பத்தைஞ்சு உருவா நாப்பத்தாறு… நாப்பத்தைஞ்சு.’
கூறல் உயர்ந்துகொண்டே போயிற்று. வரோணிக்காவின் குரல் மிகவும் றாங்கியாகவே இருந்தது.
‘நாப்பத்தியாறு!
‘நாப்பத்தியேழு!’
‘நாப்பத்தியெட்டு!
‘நாப்பத்தியெட்டரை!’
‘நாப்பத்தியொன்பது!’
‘அம்பது!’ இப்படிக் கேள்விகள் உயர்ந்து சென்று முடிவில் தலைக்கு ஐம்பதாகத் தீர்ப்பாகியது.
ஒரு மீன் அம்பது ரூபா.
யாவாரிகள் தலைக்கு இரண்டு மூன்றாகக் கொள்வனவு செய்தனர்! மொத்தத்தில் இருபது மீன்கள் தேறின.
அநாயாசமாக ஒரு மீனை எடுத்துப் பறிக்குள் போட்டுக்கொண்டே வறோணிக்கா பணத்தை வசூலிக்கத் தொடங்கினாள்.
‘கோப்பாய்க் கதிரி நூறு!”
‘இருபாலைப் பொன்னன் நூத்தைம்பது!’
‘புத்தூர் செல்லப்பன் நூத்தைம்பது!’
‘மோட்டச் சைக்கிள் செல்லையன் நாநூத்தைம்பது!’
இப்படியே வறோணிக்கா குரல் வைத்துக்கொண்டே பணத்தை வசூலித்துக்கொண்டிருந்தாள்.
கடிப்பு வலையைச் சுமந்து சென்று முற்றத்தில் போட்டுவிட்டு முத்துராசன், தம்பிப்பிள்ளையின் கள்ளுக்கொட்டிலை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தான்.
நலங்கல் போர்வையால் போர்த்தபடி வறோணிக்கா வியாபாரம் செய்யும் தொலுக்கையும், ஊமை அலசின் துரிதத்தையும் பார்த்து நெஞ்சம் பூரித்துப்போய் நின்றான் சந்தியாக்கிழவன்.
வியாபாரச் சலசலப்பு ஓய்ந்ததும், சவுள் பலகை, மரக்கோல் ஆகியவைகளைச் சுமந்துகொண்டு முத்துராசன் வளவுக்குச் சென்ற அலஸ், அவைகளை முற்றத்தில் போட்டுவிட்டது தான் தாமதம் அவன் கண்கள் எங்கோ எதையோ தேடித்துளாவின.
அடுக்களைக்குள் இருந்து சொர்ணம் வந்தாள். அவள் உடம்புப் போர்வையால் போர்த்திருந்தது. தலைமயிர் ஒழுங்கற்றுக் கலைந்துபோயிருந்தது.
சற்று வேளைக்கு முன்புதான் அவள் படுக்கையைவிட்டு எழுந்திருக்க வேண்டும்!
அவள் முகம் கண்டிப்போயிருந்தது.
காலை நொண்டிக்கொண்டே அவள் முற்றத்துக்கு வந்தாள். அலஸ் அவளுக்குப் பக்கமாகச் சென்று, அவள் பாதம்வரை குனிந்து, கஞ்சிப்பட்ட வடுக்களைப் பார்க்க முனைந்தான்.
லேசாகப் போர்வையை உயர்த்தி காலை முன் நீட்டி அவன் பார்ப்பதற்கு அவள் ஒத்தாசை செய்தாள்.
அந்தத் கொப்பளம் கண்டிருந்த இடங்கள் வற்றி தோல் சுருங்கி இருந்தன. மை பூசி இருந்ததால் அவை கறுத்துப் போயிருந்தன.
அலஸ் அவளின் முகத்தைச் சற்றுவேளை கூர்ந்து பார்த்தான். அதிலிருந்து வேதனைச் சுவடுகளை அவள் கண்டிருக்க வேண்டும். எதையோ எண்ணிக்கொண்டு அவன் அவளின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். அது சற்றுச் சூடாக இருந்தது.
சொர்ணம் அப்படியே நின்றாள். சண வேளைதான்!
அலஸ் தன் கரத்தை மீட்டுக்கொண்டான். எதுவும் பேசாமல் அவன் வெளியேறி வீட்டை நோக்கிச் சென்று விட்டான்.
சொர்ணம் முற்றத்திலேயே நின்றாள்.
காலை வெய்யிலின் இளஞ் சூடு அவளுக்கு இதமாகவே இருந்திருக்க வேண்டும்!
இரவெல்லாம் கடலுக்குள் இருந்து குளிரோடிவிட்ட அலசின் கரம்பட்ட நெற்றி இன்னும் குளிர்ந்துகொண்டுதான் இருப்பதை அவள் உணர்ந்தாள்.
சற்று வேளை அங்கேயே நின்றுவிட்டு சொர்ணம் கிணற்றடிக்குப் போனாள். மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வு புகுந்துகொண்டு அவளை அலைக்கழித்திருக்கவேண்டும்! துலாக்கொடியைப் பிடித்துக்கொண் டு ஒரு தோரணமுமில்லாது அவள் சிலையாக நின்றாள்.
அடுத்த வளவுக்குள் இருந்து சிசிலியாவின் குரல் வந்தது.
‘என்னடி சொர்ணம் அப்படியே மலைச்சுப்போய் நிக்கிறாய்! என்னடி கெட்ட கனா எதுவும் கண்டிட்டியோ? கண்களெல்லாம் வீங்கிப்போய்க் கிடக்கு. இரா முழுதும் நித்தரை இல்லைப்போலை யாக்கும்.’
சிசிலியாவின் இந்தப் பேச்சுச் சொர்ணத்தைக் கிள்ளிவிட்டது.
‘ஓமடி! உனக்கெண்டா நெடுக நல்ல கனாத்தான் வரும். எனக் கெங்கை நல்ல கனா வரப்போகுது? ஏதெண்டாலும் செத்தவீட்டுக் கனவல்லே வரும்’ – என்று கிண்டலாகப் பேசிவிட்டுத் துலாக்கொடியை நகர்த்தி மெதுவாகச் சோரவைத்து, சிசிலியாவை நோக்கி வேலிப்பக்கம் போனாள்.
‘என்னடி கொப்பருக்கு நல்லாப் பாரை பட்டுதாமடி. ஒரு மீன் அம்பது ரூவாக்குப் போச்சுதாம்! புதுக்கப் புதுக்கப் பாடுபுடிச்சு நல்லாப்பட்டிருக்கு! செத்தவீட்டு கனா வருமெண்டு பஞ்சப்பாட்டாடி! எடி சொர்ணம்! ஊமை நல்ல கைராசிக்காரனடி! ஊமை தானாம் நேற்றுப் பாடுபுடிச்சுக் கம்பை ஊண்டினதாம்! பாவம் ஊமை எண்டாலும் நல்ல வஞ்சகமில்லாத பிறவி!’
சிசிலி பேசி முடித்து ஊமைக்காகப் பச்சாதாபப் பட்டுக்கொண்டாள். சொர்ணம் எதுவும் பேசாமல் நின்றாள். சிசிலியாவே மீண்டும் பேசினாள்.
‘கால் தொப்பளம் வத்திப்போச்சாடி? ஏனடி போர்வையைக் கழட்டாம இருக்கிறாய்? ஏதோ வில்லங்கம்போலை கிடக்கு. அந்தோனியாரானை உன்ரை முகத்திலை தெரியுது! எடி அம்மா நீ சும்மா கவலைப்படாதைக் கொப்பர் உனக்கு நல்ல மாப்பிள்ளையாகக் கட்டி வைப்பார். ஏன் கொப்பர் மாப்பிளை பாக்கவேணும்! பணக்கார வீட்டு உத்தியோக மாப்பிள்ளை எல்லே உன்னைக் கட்டபோகுதாம்! அவயிட்டைக் கடன் வாங்கித்தானாம் கொப்பர் பட்டிவலைப் போட்டவர். உனக்கு நல்ல காலம் தானடி சொர்ணம்!’
சிசிலியாவின் இந்தப் பேச்சுச் சொர்ணத்தை ஒரு தடவை திடுக்குற வைத்தது. சணவேளை உடம்பெல்லாம் – சதையெல்லாம் – இரத்த மெல்லாம் செயலிழந்து தேங்கி நின்று மறுபடியும் செயல்படத் தொடங்கியது.
‘என்னடி மோட்டுக் கதை கதைக்கிறாய் நீ ? அவையட்டை கடன் வாங்கினா?’ என்று சிசிலியாவின் பதிலொன்றை நோக்கி ஒரு அரை குறைக் கேள்வியை அவள் வீசினாள்.
‘வேண்டினா ஒண்டுமில்லைத்தானடி! எண்டாலும் ஊரெல்லாம் கொய்யோ எண்டுபோச்சு! நீ உனக்குத் தெரியாதெண்டு சாலம் வைக் கிறாய் என்ன? எனக்குச் சொன்னா என்னடி பங்கே போட்டிடுவன்!’
சிசிலியா மீண்டும் குத்தலாகவே பேசினாள். இதற்குமேல் சொர்ணத்தால் பொறுக்கமுடியவில்லை.
ஓமடி ஓம்.உன்ரை கொப்பரும்தான் சம்மாட்டி யாரிட்டை கடன் வேண்டியவை. போடி, போடி!’ என்று குத்தலாகவும் செல்லமாகவும் அவளைக் கண்டித்துவிட்டு அவளை விட்டுப் பிரிந்துவந்துவிட்டாள்.
‘இஞ்சை வாடி! ஏனடி மிச்சக் கதையையும் கேக்காமல் போறாய்? போகாதையடி இஞ்சை வாடி! நான் சொல்லிறன் இஞ்சை வாடி’ என்று சிசிலியா கெஞ்சும் பாவனையுடன் அவளை அழைத்தாள். ஆனாலும் சொர்ணம் அவளிடம் திரும்பிப் போகவில்லை. அவளுக்கு எந்தவித பதிலும் கூறாமலேயே வந்துவிட்டாள்.
அத்தியாயம்-14
தொடர்ந்தாற்போல் நான்கு நாட்கள் முத்துராசன் வலைப்பாட்டில் பாரை மீன்தான் பட்டுவந்தது. இந்த நான்கு நாட்களிலும் மூவாயிரம் ரூபாவிற்கு மீன் விற்பனையாகிவிட்டது. ஐந்தாவது நாளாயிற்று. அன்று முத்துராசனுக்கு ஒரு மண்ணும் கிடைக்கவில்லை.
ஒரு நாள் கீளியும், கிளாத்தியுமாகப் பட்டிருந்தது. வேறொரு நாள் ஒட்டியும், திரளியுமாகப்பட்டிருந்தது. இன்னொரு நாள் திருக்கையும், கெழிறுமாகப்பட்டிருந்தது. முடிவில் வெறும் சூக்காய் நண்டுகளுடனும், கூனிறாலுடனும் பிடிபாடு ஓய்ந்துப் போய்விட்டது.
வலையில் செழும்பேறிவிட்டால் அதைப் பிடுங்கி வந்து கண்டால் பட்டைச் சாயத்தில் ஊறவைத்து, அவித்து, சாயமேற்றி, பழுதுபார்த்து மறுபடியும் உலரவிட்டுத்தான் புதிதாகப் பட்டிப் புதைக்க வேண்டும். இந்தச் சம்பிரதாயத்திற்கு உட்பட்டு முத்துராசனும் அலசும் சென்று வலையை மீட்டு வந்து விட்டார்கள்.
முற்றத்தில் நின்ற ஒதியமர நிழலின் கீழிருந்து முத்துராசனும், அலசும், சந்தியாக்கிழவனும் வலையைச் சரிசெய்து கொண்டிருந்தனர். பட்டிவலை, வேலிவலை, சிறகுவலை என்ற விதங்களினாலான வலைக் கண்களைச் சீர்செய்ய ஒருநாள் கழிந்துவிட்டது அப்போதைக்கப் போது மூவருக்கும் வரோணிக்கா தேனீரும் உணவும் பரிமாறினாள். சந்தியாக் கிழவனுக்கோ நாரி வலிப்பு, நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அத்துடன் கண்களும் ஒரே புகைச்சல்!
முத்துராசனோ அடிக்கடி தம்பிப்பிள்ளையின் கள்ளுக் கொட்டிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். இதனால் அலஸ்தான் முழு வேலை யையும் செய்து முடிக்க வேண்டியதாயிற்று.
பொழுது கருகிக்கொண்டு வந்தபோது அலஸ் அவசர அவசரமாக வேலி வலையைச் சரி செய்துக் கொண்டிருந்தான்.
தனக்காகத் தேனீர் கொண்டுவந்த சொர்ணத்தை நிமிர்ந்தும் பார்க்காது அவன் வேலையில் ஈடுபட்டிருந்தான்.
சொர்ணம் செருமினாள்.
இது அவனுக்குக் கேட்கும் என்பது அவளின் அப்போதைய நினைப்பு. அவன்தான் ஊமையாயிற்றே! செகிடனாயிற்றே!
சொர்ணம் அவனுக்கருகாமையில் முட்டுக்காலிட்டு இருந்து கொண்டே, ‘தேத்தண்ணீ!’ என்று சற்றுப் பலமாகக் கூறினாள். அந்த அசுகை கேட்டு அலஸ் திரும்பியபோது சொர்ணம் தேனீர்க் கோப்பையை நீட்டியபடி நின்றாள்.
அலஸ் மிகப் பக்குவமாக அதை வாங்கி மடமடவென்று குடிக்க முயன்றான். ஆனால் தேனீர் சூடாக இருந்தது ஆதலால் மெதுமெது வாக அவன் அதை உறிஞ்சி, உறிஞ்சிக் குடித்தான். சொர்ணம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சற்று வேளைக்குப்பின், பக்கத்தே இருந்த குறைச் சுருட்டை வாயில் வைத்தபடி, நெருப்புப்பெட்டி வைத்திருந்த இடத்தை மறந்துபோய் அலஸ் அங்குமிங்குமாகத் தடவினான். வலைக்குக் கீழும் மேலுமாகத் தடவினான். நெருப்புப் பெட்டியை முத்துராசன்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்!
சொர்ணம் அவன் வாயிலிருந்த குறைச் சுருட்டைப் பிடுங்கி தூர வீசினாள்.
‘என்னயிது குறைச்சுருட்டு புளுத்த மணம்’ என்று வாய்விட்டுக் கூறிக்கொண்டே முற்றத்தைத் தாண்டி உள்ளே போனவள், ஒரு போயிலைக் கீலத்துடனும். நெருப்புப் பெட்டியுடனும் திரும்பி வந்தாள். அவளிடமிருந்து புகையிலைக் கீலத்தை வாங்கிய அலஸ் அதைச் சுருட்டாக்கிய போது சொர்ணம் ஒரு குச்சியை மூட்டிக் கொடுத்தாள்.
உப்புக் கசிவும் வேர்வையும் சேர்ந்த அலசின் உடம்பின் முதுகுப் புறத்திலும், தோள்களிலும் கடல் சாதாழைத் துண்டுகள் ஒட்டிக் கிடந்தன. சொர்ணம் பக்கத்தே இருந்த துவாயைக்கொண்டு அதைத் துடைக்க முயன்ற போது, அலஸ் அதைப்பெற்று தனது உடம்பைத் தானே துடைத்துக் கொண்டான்.
முன்னும் பின்னுமாகக் கைமாறி உடம்பைத் துடைத்த போது அவனின் நெஞ்சுப்புறத் தசைநார்கள் அழகாகப் பொருமிப் புடைத்தன. வெளிப்படலையைத் திறந்து கொண்டு வறோணிக்கா வந்தாள். ‘மகள்! ஊமைக்குத் தேத்தண்ணி கலக்கிக் குடுக்கவா போறாய்?’ என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.
‘இப்பதானணை குடுத்தனான் அம்மா’ என்று சொர்ணம் பதில் கூறிக் கொண்டே வெறும் கோப்பையை எடுத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.
கோவிலில் திருந்தாதி மணி ஒலித்தது.
‘மகள் திருந்தாதி அடிக்குது மகள். லாம்பைக் கொளுத்திப்போட்டுக் கோயிலுக்குப் போவன் மகள் நாளைக்குக் கடன் திருநாளெல்லே மகள்!’ – வரோணிக்கா பாவசங்கீதத்துக்குப் போகவேண்டியதன் அவசியத்தைச் சொர்ணத்திற்கு நினைவுபடுத்தினாள்.
‘சிசிலியா சொன்னதணை அங்கை ஊரிப்பட்ட சனமாகக் கிடக்குக் கொஞ்சம் பொறுத்துப் போவமெண்டு .
அடுக்களைக்குள்ளிருந்து சொர்ணம்பதில் சொல்லி முடித்தாள். வீட்டு விறாந்தையில் விளக்கு ஏற்றப்பட்டது.
‘சொர்ணம் போவோமா வெளிக்கிட்டிட்டியே?”
சிசிலியாவின் குரல் கிணற்றடி வேலிக்குள்ளிருந்து கேட்டது. ‘மகள் அங்கை சிசிலியாப் பெட்டைக் கூப்பிடுது. கோயிலுக்குப் போகவா போறாய். உலையை நான் பாக்கிறன் நீ போட்டுவா மகள்’ என்று வரோணிக்கா கட்டளையிட்டாள்.
சற்று வேளைக்குப்பின் சொர்ணம் உடுத்திக்கொண்டு கோவிலுக்குப் புறப்பட்டாள்.
அலஸ், வேலி வலையைப் பொத்தி சரி பார்த்துவிட்டு அதைப் பாடு சாத்திக்கொண்டிருந்தான்.
அத்தியாயம்-15
கடன் திருநாள் பூசைக்குச் சென்று முதல் பூசை முடிந்ததும், அவசர அவசரமாக வரோணிக்கா வீட்டுக்கு வந்து புட்டவித்து – ஒரு குழல் புட்டை சுழகில் தள்ளிக் கொண்டிருந்தபோது சொர்ணத்தின் சிணுங்கல் ஓசை அவளுக்குக் கேட்டது.
மட்டை வரிச்சலுக்கு ஊடாக அவள் பார்வையை வெளியே வீசினாள். சொர்ணமும் சிசிலியாவும் கோவிலிலிருந்து வந்துகொண்டு இருந்தனர். சொர்ணம் கண்களைக் கசக்கிக்கொண்டே. வந்தாள்.
திடுக்குற்றபடி அடுக்களையைவிட்டு வெளியே வந்த வரோணிக்கா, ‘மகள், என்ன மகள்? என்று அங்கலாய்த்தாள்.
சிசிலியா சொர்ணத்தையும் தள்ளிக்கொண்டு அடுக்களைக்குள் வந்ததும், வரோணிக்காவும் திகைத்துப்போய் உள்ளே வந்துவிட்டாள். சிசிலியா அடுக்களைப் படலையை இழுத்துச் சாத்திக்கொண்டே, மாமி மாமி, மெல்லமாக் கதையணை; ஆரும் வந்தாலும்’ என்று அவளை ஆறுதல் படுத்தமுயன்றாள். இந்த முயற்சி வறோணிக்காவை மேலும் அவசரப்படவே வைத்தது. ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டதாக அவள் ஏங்கினாள்.
‘எணேய் மாமி, சம்மாட்டியாற்றை மோன் குச்சொழுங்கை மூட்டிலை நிண்டு சொர்ணத்தைப் பகுடிபண்ணிப் போட்டாரணை, அதுதானணை வேறை ஒண்டு மில்லையணை’ என்று சிசிலியா லேசாகச் சொன்னாள்.
வறோணிக்காவின் உடம்பெல்லாம் ஓர் உணர்ச்சி வெறி நாய் போல ஓடிப் பரவியது, சணவேளை!
அவள் மரமாக நின்றாள்.
சொர்ணம் விம்மிக் கொண்டேயிருந்தாள்.
வெளிப்படலைத் திறக்கப்படும் ஓசை கேட்டது.
வறோணிக்கா திடுக்கிட்டுக்கொண்டே அந்தப் பக்கமாகப் பார்த்தாள். அங்கே முத்துராசன் வருவது மட்டை வரிச்சினூடாகத் தெரிந்தது.
‘மகள் கொப்பர் வாறார். அழாதை மகள்!’ என்ற அவளின் காதுக்குள் கூறிக்கொண்டே சொர்ணத்தின் கண்ணீரை முந்தானை யால் துடைத்துவிட்டாள் வறோணிக்கா.
சொர்ணம் பொங்கிவரும் அழுகையை மென்று விழுங்கிவிட்டாள். மத்தியான உணவை முத்துராசன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வறோணிக்கா முத்துராசனிடம் பேச்சைக் கொடுத்தாள்.
‘சம்மாட்டியாற்றைக் காசைக் கொண்டுபோய்க் குடுத்துப்போட்டு எழுதிக் குடுத்த நோட்டை வாங்கிவர வாணை போறியள்.
‘அதுக்கிப்ப என்ன அவசரம்? சேந்திருக்கிற காசிலை சொர்ணத்துக்கு ஏதேன் நகை நட்டுச் செய்தா என்ன எண்டு யோசிக்கிறன்.’
‘ஊரவையிட்டை வேண்டின கடனை முன்னுக்குக் குடுக்க வல்லோணை வேணும்?’
‘சம்மாட்டியாருக்கு இப்ப என்ன அவசரம்? அவருக்கென்ன வட்டிதானை. பொறுத்துக் குடுப்பம்.
‘சம்மாட்டியாரிட்டை கடன் பட்டதிலை அப்புவும் மூஞ்சையை நீட்டிக்கொண்டு திரியுது. அவேயின்ரை காசை இண்டைக்குக் கொண்டுபோய்க் குடுத்திட்டு வாணை.’
இதற்குமேல் முத்துராசனும் வறோணிக்காவும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மாலை ஐந்து மணியளவில் ரூபா ஆயிரத்து ஐந்நூறை யும் சில்லறையாக சில நோட்டுக்களையும் முத்துராசனிடம் கொடுக்கும் போது வரோணிக்கா இப்படிக் கூறினாள்:
‘முதல் காசையும் குடுத்துப்போட்டு வட்டிக்காசிலை ஒரு சதமும் புடிக்காமை எவ்வளவு எண்டு கேட்டுக் குடுத்துப்போட்டு வாணை.
முத்துராசன் மடிக்குள் பணத்தைக் கட்டிக்கொண்டு சம்மாட்டியார் தேவசகாயம் பிள்ளையின் வீட்டை நோக்கிச் சென்றபோது அவர் வீட்டில் இல்லை.
‘அவா மகனைப் பயணம் அனுப்புறதுக்கு றெயில் ஸ்டேசனுக்கு போட்டாக’ என்று சம்மாட்டியாரின் மனைவி பதில் சொன்னாள். அத்துடன், ‘உப்பிடி இருங்கோவன் வந்திடவாக, உங்களோடை ஏதோ பேச வேணுமெண்டும் கதைச்சாக’ என்று இன்முகம் காட்டி வரவேற்றாள்.
‘நான் போட்டுப் பிறகு வாறன். அவர் வந்தோண்ணை வந்ததெண்டு சொல்லுங்கோ. ராவைக்கு வாறன்’ என்ற சொல்லிக்கொண்டே முத்துராசன் திரும்பிவிட்டான். திரும்பியவன் நேராகத் தம்பிப்பிள்ளை யின் கள்ளுக் கொட்டிலுக்கு வந்து சேர்ந்தான். அவனை அவனின் கும்பா ஜோசைதான் வரவேற்றான்.
‘எப்பிடிக் கும்பா என்ன வேளையோடை? நீ வலையைப் புடிங்கிப் போட்டியாம்! எப்ப கும்பா வலை புதைக்கப் போறியள்?’
‘நாளைக்குப் புதைக்கலாம் எண்டு இருக்கிறன் கும்பா! சிறுத்தீவுப் பாட்டிலை கொய் பாயுதாம். அங்கதான் புதைக்க இருக்கிறன்’ என்று ஜோசையின் கேள்விக்குப் பதில் கூறிக்கொண்டே முத்துராசன் உட்கார்ந்தான்.
மோம் கும்பா உன்ரை வலையிலை பவுன் கட்டியும் இனிமேல் படாமல் விடாது- பகிடிப் பகிடிபோலச் சம்மாட்டியார் வீட்டிலைச் சம்பந்தமும் கலக்கப் போறீரெல்லோ’ என்று ஜோசை குத்தலாகப் பேசினான்.
‘கும்பா பேய்க்கதை கதையாதையும் காணும்! பகுடி எனக்குப் பிடிக்காது கண்டீரோ…’ என்று கோபமாக முத்துராசன் பேசினான்.
கள்ளுக்கொட்டில் தம்பிப்பிள்ளைக்கு எதுவும் புரியவில்லை. அவன் அவசர அவசரமாக முத்துராசனுக்குக் கள்ளுக் கொடுப்பதற்கான ஒழுங்குகளைக் கவனித்தான்.
‘கும்பா உள்ளதைச் சொன்னால் ஏன் காணும் உடம்பெல்லாம் நோகுது! இனியென்ன சம்மாட்டியாற்றைப் பொடியனும் பெட்டை யைத் தொட்டுப் போட்டான். இனியென்ன விடுவானே?” ஜோசை யின் மிகுதிப் பேச்சையும் கேட்பதற்கு முத்துராசன் அங்கு இல்லை. ஆவேசம் பிடித்தவனைப்போல் வெளியேறி சில நிமிட நேரங்களுக்குள் வீட்டுக்கு வந்துவிட்டான். வீடு அல்லோலகல்லோலப்பட்ட சிமிலி விளக்கு நொறுங்கியது.
வறோணிக்காவும் சொர்ணமும் நையப் புடைக்கப்பட்டனர். அவர்கள் பேசியது எதுவுமே அவனுக்குக் கேட்கவில்லை.
சொர்ணம் அழுது கொண்டிருந்தாள்.
வறோணிக்காவிற்கு அழுகை வரவில்லை.
சந்தியாக்கிழவன், கால்களுக்குள் முகத்தைப் புதைத்து நலங்கிய போர்வையால் தன்னை மூடிக்கொண்டிருந்தான்.
முத்துராசன் விறாந்தையில் கிடந்த வலைக்குவியலுக்குள் கிடந்து கண்களை மூடவும், கண்களைத் திறக்கவும் முடியாமல் உளற்றிக் கொண்டிருந்தான்.
இடையே அலஸ் வந்தான்.
அவனால் எதையுமே புரிந்துகொள்ள முடியவில்லை
அவனை வரவேற்று அழைக்க யாருமில்லை!
சற்றுவேளை விறாந்தையில் இருந்தவன்; பின்பு எழுந்து போய் விட்டான்.
அவன் போய் சற்று வேளைக்குள் பேத்திக் கிழவி பேணி விளக்கை யும் காவிக்கொண்டு வந்தாள். அவளிடம் பேசுவதற்கும் யாரும் இல்லை. வெகுநேரம் விறாந்தையில் இருந்து பெருமூச்செறிந்துவிட்டு அவளும் போய்விட்டாள்.
– தொடரும்…
– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.