(2016ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15
அத்தியாயம்-6
கடற்கரை நீளத்திற்கு ஆண் பெண் குழந்தை குட்டிகளென்று கூட்டங் கூட்டமாகச் சனங்கள் கூடிநின்றனர்.
மாலை வந்து கொண்டிருந்தது.
சூறாவளிக்குப் பின்பு மேகக் கருக்கள் கலைந்துபோய்விட்டமையால் வான முகடெங்கும் பஞ்சு மேகங்கள் படிந்து அசைந்து கொண்டிருந்தன. வழக்கத்தைவிட வேளையோடு அடிவானம் சோதிச் செக்கர் கண்டு விட்டது.
அப்போதுதான் ஊருக்குள் வந்த புதினப் பத்திரிகை இரண்டொன்றை ஒவ்வொருவர் படித்துக்கொண்டிருக்க அவர்களைச் சுற்றிக்கொண்டு ஜனங்கள் ஏங்கிப்போய்க் கேட்டுக்கொண்டிருந்தனர். இடையிடையே அந்தக் கூட்டத்தினர் கடலின் அந்தத்தை நோக்கிக் கண்களை வீசி உலாவ விடுகின்றனர். காணாமல் போனதாகக் கருதப்பட்ட நாற்பத்தெட்டுப் பேர்களையும் தேடிச் சென்ற சந்தியாக்கிழவனின் கூட்டத்தை நோக்கி அவர்கள் காத்திருக்கின்றனர்.
சாதாரண காலமென்றால் இதுவரை இரண்டு தடவைகள் இரணை தீவுக் கரைக்குச் சென்று வந்து விடலாம்.
‘வடகரைப் பகுதி எங்கும் மரண ஒப்பாரி, தென் இலங்கைக் கரைப் பகுதியிலும் பெரும் சூறாவளி. நாடெங்கும் ஆயிரத்திற்கும் அதிகமானோர், இறந்து போயிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இவர்களைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பொலிஸ் பகுதியினரும் கடற்படையினரும் கூட்டு முயற்சி.’
ஒரு கூட்டத்திலிருந்து இப்படி ஒரு குரல் வெளி வந்தது. இளவட்டப் பயல் ஒருவன் பத்திரிகைத் தலைப்புச் செய்திகளை இப்படிப் பலமாகப் படிக்கிறான்.
முனகலும், நெட்டி முறிப்பும், நெஞ்சோச்சலுமாக ஓசைகள் எழுகின்றன.
‘ஒரே குடும்பத்திலிருந்து ஆறுபேர் காணாமல் போயினர். தந்தையும், இரண்டு மைந்தர்களும், மூன்று மருமக்களுமாகக் கடலுக்குப் புறப் பட்டுச் சென்றவர்கள் இன்றும் வந்து சேரவில்லை. இவர்கள் இறந் திருக்கக் கூடுமென்று நம்பப்படுகின்றது.’
இப்போது வெறோர் கூட்டத்திலிருந்து ஒருவன் இப்படிப்படிக்கிறான். ‘ஐயோ அந்தோனியாரே!’ என்று ஒரு தாய் அங்கலாய்த்தாள்.
‘விவாகமாகி முதல் முதல் கடலுக்குச் சென்ற மணமகன் கடலுக்குப் பலி. மயிலிட்டியைச் சேர்ந்த தேவசகாயம் என்ற வாலிபன் கலியாண மாகிய எட்டாவது நாள் முதல் முதலாகக் கட்டுமரத்தில் தூண்டில் போடச் சென்றிருந்தான். அவனின் இளம் மனைவி கடற்கரையிலே நின்று அவனை வழியனுப்பி வைத்தாள். அவன் அதிக தூரம் போக வில்லை. காற்று வீசத் தொடங்கிய சிறிது வேளைக்குள் அவன் கட்டு மரத்தைவிட்டுத் தூக்கி வீசப்பட்டிருக்க வேண்டும். காற்றோட்டத்தில் கரை சேர வந்த இயந்திரப் படகுக்காரர்கள் கடலில் இருந்து அவனைக் தூக்கியெடுத்தனர். ஆனால் அவனின் உடலில் உயிர் இருக்கவில்லை.
இந்தப் பந்தியை வேறொருவன் படித்துக்கொண்டிருந்தான். அப்போது கூட்டத்தோடு நின்ற நேசம்மா பெருங்குரல் எடுத்துக் கத்தி விட்டாள். காலையில் சந்தியாக் கிழவனால் திடப்படுத்தப்பட்டிருந்த அவளுக்கு இப்போது தன் கணவனை இழந்துவிட்டது போன்ற முடிவுதான் வந்தது.
இவளும் சமீபத்தில்தான் கல்யாணம் செய்திருந்தாள்;இன்றோடு சரியாகப் பத்து நாட்கள்!
முந்தாநாள்தான் இவன் கணவன் முதல்முதலாக வலைப்பாட் டிற்குப் போயிருந்தான். போகும்போது கடற்பக்கப் படலை ஓரமாக நின்று அவனுக்குக் கையசைத்து வழி அனுப்பிவிட்டு அவனின் தோணியின்பாய் கீற்றுக் கோடாகிக் கண்களுக்கு மறையும்வரை பார்த்து, வேறு யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக அசடுபோல மீண்டும் மீண்டும் கையசைத்து வழியனுப்பிவிட்டு ஒருவித இன்ப வேதனையுடன் உள்ளே வந்தவள் கண்ணாடிக்கு முன்னால் நின்று முகத்தைப் பார்த்தாள். முகம் சிவப்பாகத் தெரிந்த ஓரிடத்தைச் சுட்டு விரலால் உரசிப் பார்த்த போது சுரீரென்ற ஓர் உணர்வு உடலெங்கும் ஓடிப் பரவி அவளைப் பேசாதவள் ஆக்கிவிட்டது. மௌனத்தில் குழைத்தெடுத்த அந்த இன்பத் திளைப்பிலிருந்து சரியாக விடுபடுவதற்கு முந்தியே இந்தப் பாழும் சூறாவளி வந்துவிட்டது…
இப்போது அந்த இளம் மணப்பெண்ணின் கதையும், தன் கதையும் ஒன்றாகிவிட்டதென்ற முடிவான முடிவுக்கெ அவள் வந்துவிட்டாள். ஒரு கிழவி அவளை ஆசுவாசப்படுத்தித் தோற்றுப் போனாள். சந்தியாக்கிழவனின் மகள் வரோணிக்கா அவளை அள்ளி அணைத்து; படலையைத் தள்ளிக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.
மீண்டும் மீண்டும் பத்திரிகைகளிலிருந்த செய்திகள்யாவும் படிக்கப் பட்டன. எல்லோரும் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே வெதும்பிக் கொண்டிருந்தனர்.
செய்திகள் யாவும் ஒரே ஓலமாகவே இருந்தன. ஒரு தடவை ஒரு செய்தி படிக்கப்பட்டபோது கூட்டமே விம்மி பிரலாபித்துவிட்டது. அந்த வேளை திடுதிப்பென்று கூட்டத்தில் புகுந்த ஒரு இளைஞன் அந்தப் பத்திரிகையைப் பிடுங்கிக் கிழித்தெறிந்தான்.
எல்லாரும் அவனை முறைத்தனர்.
அவன் ஊமை அலஸ்.
அவன் முகம் மிகவும் கண்டிச் சிவத்துப் போயிருந்தது.
அவன் காட்டுமிராண்டி மனிதன் போல இருந்தான்.
அவன் சடை சுருண்டு விரிந்து கோரமாக இருந்தது. அவன் மிகவும் ஊத்தையனாக இருந்தான்.
விகார உணர்ச்சியோடு அவன் கூட்டத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். இந்தப் பத்திரிகை படித்தவனை அவன் முறைத்து முறைத்துப் பார்த்தான். இவனை அவன் ஒரு கொலைக் குற்றவாளியாகக் கண்டு விட்டது போன்ற உணர்வோடு பார்த்தான்.
வியாகுலமாக – துர்அதிர்ஷ்டம் பிடித்த வேளை, இப்படிப்பட்ட வியாகுலமாகச் செய்திகளைப் படித்துக் காட்டக் கூடாது என்று அவன் மனதார நினைத்துக் கொண்டுவிட்டான். அதனால்தான் அவன் இப்படி நடந்திருக்க வேண்டும். அவன் மனதில் எழுந்தது சரியோ பிழையோ அவன் இதைச் செய்துவிட்டான்.
இப்போது கூட்டம் துண்டுத் துண்டாக இல்லாமல் ஒன்று திரண்டு ஊமையனைச் சுற்றிக் கொண்டது.
ஊமை அலஸ் தன் பாஷையில் பயங்கரமாகக் கத்தினான். கோபாவேசத்தால் அவன் கண்கள் சிவந்திருந்தன. ஊமையன் இப்படிக் குரல் வைத்து யாருமே முன்பு கேட்டதில்லை; இப்படிப்பட்ட அவனின் கோலத்தை யாரும் முன்பு கண்டதில்லை.
ஊமை அலஸ் குரல் அடைத்துப் போகும்வரை கத்தினான்.
அங்குமிங்குமாக வீசப்பட்டிருந்த புதினப் பத்திரிகைத் துண்டுகளை எடுத்து சுக்குநூறாகக் கிழித்து வீசினான். ‘ஊமைக்கு விசர் வந்திட்டுது, பொலிசுக்கு அறிவியுங்கோ’ என்று ஒரு குரல் வெளியேயிருந்து கேட்டது.
குரல் வந்த திக்கில் எல்லோரும் நோக்கினர்.
அங்கே தேவசகாயம் சம்மாட்டியாரின் கடைசிமகன் லேயான் நின்றான்.
அவன் மிகவும் குசாலாக நின்றான்.
இப்போதுதான் எண்ணெய் தடவி, நட்டுக்கு நடுவாக வகிடு விட்டுத் தலை சீவி, முகத்திற்குப் பௌடர் தடவிப் பளபளப்பவனாக வந்திருக்கிறான்.
‘ஊமைக்கு விசர்’ என்று அவன் மறுபடியும் கூட்டத்தைப் பார்த்துக் கூறினான்.
அவனின் பேச்சு ஊமை அலசுக்குக் கேட்டதோ இல்லையோ, அவன் தன் குரலை மீண்டும் மீண்டும் வேகப்படுத்தினான், விம்மினான், அழுதான், கைகளை இறுகப் பொத்திக் கொண்டு தலையில் பல தடவை குத்தினான், முடிவில் கரங்களால் இரு கன்னங்களையும் மூடிக் கொண்டு அப்படியே தரையில் இருந்துவிட்டான்.
சணத்தில் உலகமே செத்துவிட்டது போன்று நிசப்தமாகிவிட்டது. அந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஊமையின் விம்மல் ஓசை புதியதோர் தொனியுடன் அலைபோல எழுந்து கொண்டிருந்தது.
அவனை ஆசுவாசப்படுத்த யாரும் இல்லை. சற்று வேளைக்குப் பின், அதிலிருந்து எழுந்து,கூட்டத்தைவிட்டு வெளியேறி, கடற்கரை அருகோடு படிந்துகிடந்த நுரைக்கட்டிகளைக் கால்களால் உரசிக் கொண்டே ஊமையன் சென்றான்; அவன் உடம்பெல்லாம் மணல் ஒட்டிக் கிடந்தது.
கூட்டத்தில் நின்ற ஒருவன் கடலின் அந்தத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு தோணி ஒன்று வந்து கொண்டிருப்பதாகக் கூறினான். எல்லோரும் கோரிமுனை விளிம்பைநோக்கிக் கண்களை வீசினர்.
தோணியின் கீற்றுக்கோடு கண்களுக்குத் தெரிந்தது.
தோணியின் கீற்றுக்கோடு தெளிவாகிப் பெரிதாகிக் கரையை நோக்கி விரைவது தெரிந்தது.
மேற்கே இருந்து ஊமை அலசின் குரல் எழுந்தது.
தன்னந்தனியனாகத் தோணி ஒன்றைத் தாங்கிக் கொண்டு எதிரே வரும் தோணியை நோக்கி அவன் போய்க்கொண்டிருந்தான். வேகமாகப் போய்கொண்டிருந்தான்.
‘அலஸ்; எட அலஸ்!’ என்று கரையிலிருந்து ஒருவன் குரல் வைத்தான். அவன் ஊமை அலசின் எசமானன் – சந்தியாக் கிழவனின் மருமகன் வறோணிக்காவின் கணவன் சொர்ணத்தின் தந்தையுமான முத்துராசன்.
சற்று வேளைக்குப்பின் இரண்டு தோணிகளும் கரைக்கு வந்து விட்டன.
கூட்டத்தினர் விழுந்தடித்துக்கொண்டு ஓடினர்.
ஒரு தோணிக்குள் மனிதக் கட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு இளைஞன் குறை உயிரில் முணகிக்கொண்டிருந்தான்.
கரை எங்கும் கூக்குரல்!
முத்துராசன் ஓடிச் சென்று, முணகிக்கொண்டிருந்தவனைத் தூக்கி வந்தான்!
ஊமை அலஸ் மறு தோணிக்குள் நின்று அழுதுகொண்டிருந்தான்.
அத்தியாயம்-7
சந்தியாக்கிழவன் சொன்னானே அதன்படி எல்லாம் நடந்துவிட்டன. இரணைத்தீவுக் கரையில் இந்த நாற்பத்தி எட்டுப் பேர்களும் பத்திரமாக இருப்பார்கள் என்று அவன் அடித்துக் கூறினான். அதன்படி நாற்பத்தி எட்டுப் பேர்களும் இரணைதீவுக் கரையில் சேர்ந்து சூறாவளி யின் பிடியிலிருந்து விலகித் தப்பித்துக் கொண்டார்கள்.
கொண்டல் கிளம்பியபோது இரணைதீவுக் கரைக்கு ஒரு மைல் தூரந்தான் இருந்தது. அந்த ஒரு மைலைத் தாண்டுவதற்கிடையில் கச்சான் கொண்டலாக மாறும் காற்று முரண்பாட்டின் சுழிகள் நல்ல ஒத்தாசையைக் கொடுத்துவிட்டன.
உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லைதான். ஆனாலும் அவர்களின் தோணிகள் வலைகள் ஆகியவற்றைக் கொண்டல் கொண்டுபோய் விட்டது.
மரக்கோல்களை ஆழமாக ஊன்றித்தான் அவர்கள் தோணிகளைக் கட்டிவைத்திருந்தனர். ஆனாலும் அந்தக் கம்புகளையும் கட்டுகளையும் காற்று விட்டு வைக்கவில்லை.
இரண்டு இரவுகளையும், ஒரு பகலையும் அந்தக் காற்றுப் பிரளயத்துள் கிடந்தே அவர்கள் கழித்தார்கள். இதனால் அவர்கள் விறைத்துப் போனார்கள். மறுநாளும் காற்றும் பிரளயமும் தொடர்ந்திருக்கு மானால் குளிரில் விரைத்து அவர்கள் செத்தே போயிருப்பார்கள்.
சிறு கவலைகளைப் பெருங்கவலைகள் விழுங்கிக்கொண்டு ஆட்சி புரிகின்றன. அதேபோல சிறு இழப்புகளின் தாக்கங்களைப் பேரிழப்புக் களின் கற்பனா நினைவுகள் விழுங்கிவிடுகின்றன.
நாற்பத்தெட்டுப் பேர்களையும் அழைத்துக்கொண்டு சந்தியாக்கிழவன் தலைநிமிர்ந்து வந்து சேர்ந்துவிட்டான்.
ஊர் இப்போது குதூகலமாக இருந்தது.
அந்தோனியார் கோவிலுக்கு முன்னால் மக்கள் கூட்டங்கூட்ட மாகக் குழுமிவிட்டனர்.
அந்த இளம் மனைவி நேசம்மாள் வெட்கமின்றித் தன் கணவனைக் கையைப் பிடித்து இழுத்துவந்து, கோவில் அடுத்தார் முன் நிறுத்தி, அவன் உயரமளவில் ஒரு மெழுகுத் திரியைப் பற்றவைத்து, அவன் கையில் கொடுத்துவிட்டுத் தியானத்தில் ஆழ்ந்து விட்டாள். அந்த இரண்டு இரவுகளும் மரணபயத்தை அனுபவித்தபோது நேர்ந்துவிட்ட கடனின் ஒரு பகுதியை அவள் இப்போது விசுவாச உணர்ச்சியோடு நிறைவேற்றுகிறாள்.
சின்னஞ்சிற நிகழ்ச்சியையெல்லாம், கோவிலின் கிழக்குப்புறக் கொட்டில் கடைக்கு அருகாமையில் இருந்து எழுந்த புகைமூடம் விழுங்கி நின்றது.
ஊரவர்களுக்கெல்லாம் விருந்தென்ற அன்னதானம் நடத்த அவியல் நடத்துகிறார்கள்.
அந்தோனியாப்பிள்ளை, மதலேனாள், கத்தறின் கிழவி… இப்படி யொரு நீண்ட வரிசை தேங்காய்த் திருவல் நடத்துகிறது.
வேறோர் கூட்டம் காய்ப் பிஞ்சுகளை வெட்டிக் குவிக்கிறது. ஒதுக்குப் புறமான ஒரு பகுதியில் அவித்துக் குவித்துப் பரவி வைக்கப் பட்டிருக்கும் சோறு சிரித்துக்கொண்டிருக்கிறது. மூன்றோ நான்கு கிடாரங்களில் சோறு இன்னமும் அவிந்து கொண்டிருக்கிறது? பச்சை மட்டைகளைக் கிடாரத்துக்குள் விட்டுக் கிடாவிக்கொண்டிருப்பவர்கள் புகை மூடத்துக்குள் மூச்சுப் பிடித்துத் தங்கள் பெலங்களையெல்லாம் ஒருமுகப்படுத்தி வேலை செய்பவர்கள் ஒருவரல்ல; இருவரல்ல பலராக இருந்தனர்.
சங்கிலித்தாம் பேதுரு பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறார். இப்படியொரு ஆரவாரத்தை மகிழ்ச்சியை இந்தத் தேவாலயம் முன்பு கண்டிருக்கவே முடியாது.
சுவாமியார் மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு விருந்துக் கான ஏற்பாடுகளைப் பார்வையிடுகிறார். ஒன்றையொன்று வெற்றி காணும் போது வெற்றிக்கான ஒவ்வொருத்தருமே மார்புத் தட்டிக் கொள்கின்றனர். சகல வெற்றிகளையும் சேர்த்து மொத்தமாக வெற்றி கண்ட பெருமையோ என்னவோ குருவானவர் இறுமாப்புடன் சுற்றிச் சுழல்கிறார்.
கோவிலின் இரட்டைக் கோபுரமும் அதன் முன்னால் பரவிக் கிடக்கும் ஜனக்கூட்டமும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. மாலைப் பொழுதில் ஜோதிச் செக்கரில் பட்டுத் துணிபோன்ற மூடத்துள் அந்தக் காட்சி அற்புதமாகவே இருக்கிறது.
நாற்பத்தெட்டு ஜீவன்களையும் மீட்டுவிட்டதற்கான பெருமையை அந்தோனியார் மேல் குவித்துவைத்து அந்த மனிதர்கள் அந்தோனியார் கோவிலுக்கு முன்னாலேயே அவியல் போடுகின்றனர்.
இப்படி அவியல் போடும் பழக்கம் சில காலமாக இருக்கவில்லை. இந்த வழக்கம் பதினைந்து வருடங்களுக்கு முன்னதாகவே விருந்து வைபவமொன்றில் நடந்த அசம்பாவிதத்தினால் நின்றுபோயிருந்தது. சூறாவளியில் இருந்து மீட்கப்பட்ட இந்த நாற்பத்தெட்டு மனிதர்களின் பேரினால் இந்த வழக்கம் மீண்டும் தொடர்கிறது.
இப்படிச் சந்தியாக் கிழவனிலிருந்து முளைத்துவிட்ட ஒரு சம்பவம். இப்படியொரு பெரிய காரியத்தையே பதினைந்து ஆண்டுகள் நிறுத்தி வைத்துவிட்டது.
கோவில் முகத்திலே விருந்துக்காகச் சகல ஆரவாரங்களும் நடந்து கொண்டிருந்தபோது அந்தச் சந்தியாக் கிழவன் மட்டும் சூறாவளி யினால் புரட்டி வைக்கபட்டிருந்த பூவரச மரத்தின் கீழ் தன் நலங்கல் போர்வையை விரித்து நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டிருக்கிறான்.
ஊரில் நாற்பத்தெட்டுப்பேர்கள் மீண்டும் வந்ததற்காக விழா எடுக்கப் படுகிறது. இவர்களை மீட்டுவந்ததலைச்சனான சந்தியாக் கிழவன், நாதியற்ற ஒரு மரக்கட்டைப் போல கிடக்கிறானே! நிர்மானிசயமான ஒரு வெளிப் பிரதேசத்தில் மணலில் புதைந்து கிடக்கும் மரக்கிடக் கிறானா? அவனுக்கு இந்த விருந்து வைபவத்தில் விருப்பந்தான் இல்லையா? அவன் லோகாயுதவாதியா – நிரச்சுரவாதியா? ஆண்டவன் கட்டளையினால் எதுவுமே நடப்பதில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டானோ?
பதினைந்து ஆண்டுகளுக்குமுன் ஒரு நாள், கோவிலுக்கு முன்னால் நடந்த அந்த விருந்தில் அடிபுடி சண்டையில் அல்லோல கல்லோலப் பட்டதை அவன் நினைத்துக்கொண்டு விட்டான்…
இன்று மருமகனாகிவிட்ட முத்துராசாவின் மூத்த மனைவி விக்ரோறியா பாரிசவாதமாகப் படுக்கையோடு ஒட்டிப்போய்க் கிடந்தாள்.
சொர்ணத்தைப் பெற்ற ஆறுமாத காலத்துக்குள் அவளுக்குக் காயாசு வாதம் கண்டிருந்தது. அதற்குப் பிறகு அவளுக்கு அது பாரிசவாதத்தை உண்டாக்கிவிட்டது. அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. ஒரு பக்கம் பூராவுமே நோய் தின்றுவிட்டது. வாய்கூடக் கோணி அவளால் பேசவே முடியவில்லை. ஒரு நாளா இரண்டு நாளா இரண்டு ஆண்டுகள் அவள் அப்படியே கிடந்தாள்.
சந்தியாக் கிழவனின்வீட்டின் கிழக்கெல்லையில்தான் அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த பெண் கிடந்தாள். மகள் வரோணிக்கா உதவி ஒத்தாசைக்கென்று அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த விக்ரோறியாவிடம் போகவேண்டியிருந்தது.
விக்ரோறியா வறோணிக்காவைப் பார்த்துப் பார்த்து ஏங்குவாள். வறோணிக்காவின் கைகளை ஆசையோடு தழுவி தனது தாடையில் உரசிக்கொள்வாள். அவளின் நாடியைத் தடவித் தடவி அவள் காதோடு ஏதோ பேச முயற்சிப்பாள். வார்த்தைகள்தான் தெளிவாக விழுவது இல்லையே!
வறோணிக்காவுக்கு விக்ரோறியா நெருங்கிய இரத்த உறவு முறை யானவளல்ல. ஆனாலும் அவள் விக்ரோறியாவுடன் ஒன்றிப் போய் விட்டாள். சதா அவளோடு சேர்ந்து கொண்டு அவளை ஆசுவாசப் படுத்துவாள். அவள் அவயங்களை உரசி, உரசி அவளை இயங்கவைக்க முடியுமா என்று பார்ப்பாள். பரியாரி ஞானமுத்தர் கொடுத்த பூச்சு மருந்தை செயலிழந்த அவள் அவயவங்களில் தடவுவாள். வேளா வேளைக்கு மருந்து தருவாள். மொத்தத்தில் அவளுக்கு மேல் அந்த வீட்டின் பொறுப்புகள் ஏறி நின்றதென்றே கூறலாம்.
சின்னப் பெண் சொர்ணத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு வறோணிக்கா கண்ணீர் விடும்போதெல்லாம் விக்ரோறியாவும் ஆனந்தக் கண்ணீர் விடுவாள். விக்ரோறியா எதை நினைத்துக்கொண்டு கண்ணீர் விடுகிறாளோ…?
முத்துராசன் கடலுக்குச் சென்றுவிட்டு வந்தபோதெல்லாம் அந்தக் கடல் வாசனையை அனுபவிக்க அவனின் ஈரக் கரங்களை எடுத்து முகத்தில் புதைந்துக்கொண்டு விக்ரோறியா அழுது தீர்க்கும்போது வறோணிக்காவால் அந்தக் காட்சியைப் பார்க்க முடிவதில்லை.
முத்துராசனின் வாழ்க்கையில் இப்படிக் குறுக்கிட்டு இந்த மூன்று வருடங்களுக்கிடையில் தன்னை முடமாக்கிக்கொண்டு அவனை இப்படி வருத்துகிறேன் என்றுதான் விக்ரோறியா அழுது தீர்க்கிறாளா? மனைவி விக்ரோறியா இப்படி ஆகிவிட்டாள் என்பதனால் முத்து ராசன் சீ… என்று கொள்ளவில்லை. உடலின் உள்ள ஆசைகள் எதையும் அடக்கிக் கொள்ளலாம். ஆனால் தன் மனதோடு எப்போதுமே குளியோடி நிற்கிறதே ஒரு ஆசை, அதை அடக்கிக்கொள்வதில் அவன் படும்பாட்டையெல்லாம் விக்ரோறியாவால் உணர முடிந்தது. இந்தக் குறுகிய மூன்றாண்டு காலத்துள் அவன் வியவஸ்தைகளுக்கு உள்ளாகும் போது ஏற்படும் வெளிப்பாடுகளையெல்லாம் அவள் சரியாக எடை போட்டு வைத்துக் கொண்டிருக்கிறாளே! இப்படி ஏற்பட்ட சந்தர்ப்பங் களில் அவள் வறோணிக்காவைப் பார்ப்பாளே ஒரு பார்வை! அதைப் புரிந்து கொள்ள வரோணிக்காவிற்கு அனுபவமேது? இரவானபோது முத்துராசன் வீட்டில் தங்கிவிடும் காலத்தில் சொர்ணத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவாள் வறோணிக்கா.
சந்தியாக் கிழவனுக்கு மகளின் இந்த வாழ்க்கை முறை புரியவே இல்லை. முதலில் வெறும் அயலின் ஒற்றுமைக்காகத்தான் வறோணிக்கா போய் வருகிறாள் என்று அவன் அனுமானித்தான். அவன் பின் அந்தப் போக்கு வரவில் சற்றுச் சந்தேகம் காணவே அவன் வறோணிக்காவைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப்போனான்.
வறோணிக்கா, தந்தை சந்தியாக்கிழவன் சொல்வதை நேராக எதிர்க்கவில்லை. ஆனாலும் அந்தக் குடும்பத்தின் நிலையை எடுத்துச் சொல்லி அப்போதைக்கப்போது தந்தையின் மனதில் பச்சாதாபத்தை ஏற்படுத்தி விட்டு லாவகமாக நடந்துகொள்வாள். என்னதான் வறோணிக்காவால் எப்போதைக்கப்போது ஆசுவாசப்படுத்தப்பட்டாலும் தனக்கும் தன் மகள் வரோணிக்காவுக்கும் உள்ள உறவில் சற்று இடைவெளி காண்பதாகவே அவன் உள் மனது கண்டது.
தாயில்லாப் பிள்ளையாக அவளை வளர்த்து அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னை அவள் கைவிட்டு விட்டுத் தூரப் போவதான ஒரு உணர்வு உந்தவே, தான் இந்த இடைவெளியில் சந்தியாக்கிழவன் மரியாச்சியின் கண்வீச்சுக்குப் பணிந்துபோய் மறுமணம் செய்து கொண்டான். மரியாச்சி மனைவி என்ற அந்தஸ்தைப் பெற்று வீட்டுக்கு வந்துவிட்டாள். வரோணிக்காவையும் அவள் தன் ஆட்சிக்கு உட்பட்டவளாகவேதான் நினைத்தாள். முத்துராசன் வீட்டுக்குப் போகவேண்டாமென்று அவள் கட்டுப்படுத்த முயன்றாள். முடிவில் எதுவும் பலியாமல் போகவே, சந்தியாக்கிழவனோடு பேசி தனது அண்ணன் மகனை அவளுக்குக் கைப்பிடித்து வைக்க பேச்சு வார்த்தைகள் நடத்தினாள்.
வந்தது வரக்கு முன்னம் தான் பலதும் பத்தும் கண்டுவிட்ட, பாட்டி யாகத்தான் மரியாச்சி நினைத்துக்கொண்டுவிட்டான்.
ஏறக்குறைய தனது வயதை ஒத்த மரியாச்சி. தந்தையைக் கட்டிக் கொண்டு தன்னையே குடும்பத்திற்கு இராசாத்தி ஆக்கிக்கொண்டதை நினைத்து வறோணிக்கா மனச்சரிவு அடைந்தான். சிற்றன்னையின் இராணிப் போக்கு அவளுக்கு எந்தவித மதிப்பையும் உயர்த்தவில்லை. பதிலுக்கு அது தாழ்ந்துதான் வந்தது.
மரியாச்சி தனது அண்ணன் மகனின் கையில் அவளைப் பிடித்துக் கொடுத்துவிட்டு அதற்கு அப்புறமாக அவள் அகம்பாவத்தை அடக்கப் போவதாகக் கனவு கண்டான். ஆனால் அது வெறும் கனவாகவே முடிந்துவிட்டது.
தெரிந்தோ தெரியாமலோ வறோணிக்காவின் வாய்க் கொழுப்பை அடக்கவேண்டுமென்று அவள் பேசிய பேச்சுக்கள் வறோணிக்கா மேல்ஒரு அழுக்காடையையே போர்த்திவிட்டது.
முத்துராசனுக்கும் வரோணிக்காவுக்கும் ஏதோ தொடுப்பு இருப் பதான வதந்தி ஊரெங்கும் பரவியது.
சந்தியாக்கிழவனின் நெஞ்சு தீந்து போயிற்று. தனது மனைவி யினால்தான் இந்தப் பேச்சுப் பரவி வந்ததென்பதை அவனால் உணர முடியவில்லை. முதலில் இது வெறும் காற்று வாக்கில் அழிந்து விடு மென்று அவன் நினைத்திருந்தான். ஆனால் நாளடைவில் இது எடுத்த பேருருவத்தைக் கண்டுஅவன் நடுங்கிப் போனான்.தன்மான உணர்ச்சி முற்று முழுதாக அவனை ஆட்கொண்டுவிட்டது.
ஊரில் பேசப்பட்டவை வறோணிக்காவின் காதுக்கு வராமலில்லை. தனது பரிசுத்தத்தனத்தை அவள் எப்படித்தான் ஊர்சிதப்படுத்தப் போகிறாள்?
‘இந்தக் குமரிக்கு இராப்பகல் அவாகா வீட்டிலை என்ன வேலை…?” என்ற இந்தக்கேள்விக்குப் பூரணத்துவமான ஒருவிடை கூற வேண்டுமே! இதற்குச் சுடச்சுடப் பதில் கூறத்தான் வறோணிக்கா நினைத்தாள். ஆனால் சுடச்சுடக் கூடியதான பதில் பிறப்பதற்கு வழி வேண்டுமே! தன் மனத்திற்குள் தெய்வத்தன்மை பொருந்திய உணர்ச்சி தான் நிறைந்து கிடக்கிறது – அநாகரிகமும் ஆபாசமும் அதற்குள் இல்லவே இல்லை என்று யாருக்குச் சொல்வது? யாரை நம்ப வைப்பது?
இதுவரை முத்துராசன் வாய்திறந்து வறோணிக்காவுடன் தவறான வார்த்தைகள் எதுவுமே பேசியதில்லை. பேசமுடியவில்லையெனினும் ஒருவிதமாகவேனும் அவளைப் பார்த்ததில்லை. பதிலுக்கு ‘தங்கச்சி’ என்று அவன் நெஞ்சு பொங்க அழைப்பான். அந்த ஒரு வார்த்தையின் இன்பத்தில் மட்டும்தான் வறோணிக்காவின் மெய் சிலித்துப் போகிறது! இன்றுவரை ஒரு தடவையேனும் ‘அண்ணன்’ என்று அவள் அவனை அழைத்ததில்லை. அதற்கான காரணத்தையும் மனதாலும் எண்ண அவள் முற்படவில்லை.
சொர்ணத்தை அவள்’சொர்ணம்’ என்று ஒரு நாள் தானும் பேர் சொல்லிக்கொண்டதில்லை. மகள் என்று வாத்சல்லியத்துடன் அழைக் கிறாளே ஏன்? இதற்கெல்லாம் காரணங்களை வலிந்து தேடிக்கொள்ள அவளுக்கு அவசியம் ஏற்படவில்லை.
மரியாச்சியின் அண்ணன் மகனுக்குப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப் பட்டபோது இரண்டொரு சம்பவங்கள் நடந்து போய்விட்டன. வறோணிக்கா கோவிலின் பூஜை முடிந்து வரும்போது ஒரு தடவை அவன் அவளைப் பார்த்துச் சிரித்தான். தோள்பட்டையை மடக்கி முறித்துவிட்டு அவள் வந்துவிட்டாள்.
இது ஒரு நாள்-
நத்தார் தினத்தின்போது அவன் வறோணிக்காவின் வீட்டுக்குப் போயிருந்தான். வறோணிக்காவைக் கொண்டு அவனுக்கு ஏதாவது உணவு பரிமாற மரியாச்சி முயற்சித்தாள். ஆனால் அந்த முயற்சிக்கு அகப்படாத வகையில் வறோணிக்கா தப்பித்துக்கொண்டு அவன் கண்ணுக்கு முன்னாலேயே சொர்ணத்தைத் தூக்கிவந்து நெஞ்சோடு அணைத்து ஆரத்தழுவி, ‘மகள்; என் மகள்; நீ என் மகள்’ என்று உறவு முறையும் கொண்டாடிக் காட்டிவிட்டாள். இதற்குப் பிறகு வறோணிக்காவைக் கட்டவேண்டுமென்ற ஆசை அவனுக்கு வரவே இல்லை.
ஊரில் முத்துராசனையும் வரோணிக்காவையும் பற்றிக் கை கால், மூக்கு நாக்கு ஒட்டப்பட்ட கதைகள் சொல்லப்பட்டபோது, அவன் அவைகளோடு சேர்ந்து கொண்டானே தவிர அதற்காக ஆத்திரப்பட வில்லை. அவள் தனக்கு மனைவியாக வரவிருந்தவள் என்பதையே அவன் மறந்துவிட்டான்.
ஒருநாள் எதிர்பாராத சம்பவமொன்று நடந்துவிட்டது.
முத்துராசனின் களங்கண்டி வலை கடலில் இருந்து மீட்டுவிடப் பட்டிருந்தது. அவனும் அவன் கூட்டாளியுமாக இந்தப் பூவரசமரத்தின் கீழ் இருந்துதான் வலையைப் பழுது பார்த்து, மறுநாள் கண்டல் பட்டை அவியலுக்காகத் தயார் செய்து கொண்டிருந்தனர். மாலை கருகி இருளும் வரையிலே வலைகளைப் பொத்திக் கொடுத்துவிட்டு அவனின் கூட்டாளி போய்விட்டான். எப்படியும் மறுநாள் வலையவிழ்த்துக் காயவிட்டு அடையாளம் குத்திவைக்கப் பட்டிருக்கும் கோரிமுனைக் கரை வலைப் பாட்டில் வலையைப் புதைத்துவிட வேண்டுமென்பதற் காகத்தான் இத்தனை சிரமத்துடன் அவர்கள் வேலை செய்யவேண்டி யிருந்தது.
இந்தப்பாட்டில் கடந்தமுறைப் புதையலில் உழைப்புப் பரவா யில்லை. இம்முறை அந்தப்பாட்டில் நிச்சயமாகக் கருங்கண்ணிப் பாரை பட்டே தீரும். ஏனெனில் வைகாசி விசாகம் முடிந்து தலைச் சோளகப் பெருங் காற்றுக் கிளம்புவதற்கான அறிகுறிகள் நிறைய இருந்தன. தலைச் சோளகத்தை நோக்கித்தான். கடந்த வலைப்புதையலையும் அவர்கள் செய்திருந்தனர். இடையே வாடை கச்சானாசு பிரண்டு போனதால் சோளகம் கிளம்ப முடியாமல் போய்விட்டது.
மேற்கே பஞ்சு மேகங்கள் குவிந்து, மின்னல் கொடி காட்டி, சோளகம் தான் பிறப்பதற்கான கருக்களைச் சேர்த்துவிட்டது.
நிச்சயமாக நாளை அல்லது மறுநாள் காற்றுப் பிறந்து விடக்கூடும். தலைச் சோளகத்தில் அள்ளிக் கொடுக்கக்கூடிய மீன்பாடுதான் அந்தக் கோரிமுனைக் கரைப்பாடாகும். அந்தப் பாட்டின் மேற் சரிவோடு சிற்றாறொன்று ஓடுகிறது. அதன் கிளையொன்று பக்கத்தே உள்ள பண்டிப்பள்ளத்தை நாடி வந்து வழிந்தோடுகிறது. தலைக்காற்று வீசும் போது ஆற்றில் தலையெடுக்கும் கருங்கண்ணிப் பாரைகள், பண்டிப் பள்ளத்தில் வரும்வழியில் இந்தக் கோரிமுனைக் கரைப் பாட்டுக்கு வந்துதானாக வேண்டும். இந்தக் காற்றுவந்து மடியும் வரையில் விட்டுவைக்க முடியாமல் வலைகள் செழும்பேறி விட்டதனால்தான் முத்துராசன் வலைகளைப் பிடுங்கிவந்திருக்கிறான்.
கடல் செழும்பால் வலைகள் தடித்துப் போய்விட்டன.
வேலிவலைகள் ஓட்டைகள் கண்டுவிட்டதனால் அதன் கிண்கிணி நாதம் மரத்துப்போய்விட்டது.
பெரு நண்டுக் கடிகளினால் பட்டி வலைகள் கிழிந்து போய்விட்டன. இவைகள் யாவையும் சீர் செய்வதென்றால் சிரமமான காரியம்தான். ஆனாலும் மூச்சைப் பிடித்துக்கொண்டு முத்துராசன் வலையைப் பழுது பார்க்கிறான்.
அடையாளக் கம்புகள் குத்தப்பட்ட வரையில் அந்த வலைப் பாட்டை யாரும் பிடித்துவிடமாட்டார்கள். ஆனாலும் தலைக்காற்றுப் பிரசவிக்கும் போது வலை கடலில் நின்றிருக்க வேண்டுமே.
இரவு வந்துவிட்டது.
பகலெல்லாம் ஒரே இடத்தில் இருந்து நாரியும் வலித்துப்போய் விட்டதனால் கூட்டாளி விட்டுவிட்டுப்போனதும் முத்துராசன் அப்படியே அசந்து தூங்கிக்போய் விட்டான்.
நன்றாக இருட்டிவிட்டது.
வறோணிக்கா வேலியைக் கடந்துகொண்டு முத்துராசன் வீட்டுக்குப் போனாள்.
வீட்டுக்கு விளக்கேற்றயாருமே இல்லை. வீடு இருண்டு போய்க் கிடந்தது. விக்ரோறியாவின் மாமி என்ற பெயரில் வீட்டிலிருந்த முத்துராசனின் சிறிய தாய்க் கிழவியையும் காணவில்லை. அவள் வெளியே போய்விட்டாள். அந்தக் கிழவியை எல்லோரும் மாமியாச்சி என்றுதான் அழைப்பார்கள்.
‘மாமியாச்சி, எணை மாமியாச்சி’ என்று கொண்டே வரோணிக்கா உள்ளே போனாள். இருளைக் கிழித்துக்கொண்டு விக்ரோறியாவின் முனகல் சத்தம் உள்ளே இருந்து கேட்டது.
நெருப்புப் பெட்டியை எடுப்பதற்காக அவள் விக்ரோறியாவின் தலைமாட்டைத் தடவினாள். இருளுக்குள் விக்ரோறியா இவளின் கையைப் பிடித்துக்கொண்டு தனது குழறல் பாஷையில் ஏதேதோ சொன்னாள். வறோணிக்காவுக்கு எதுவும் புரியவில்லை. தட்டுத் தடவி நெருப்புப் பெட்டியை எடுத்து ஒரு குச்சியைக் கிழித்து மண்சுவர் மாடத்திலிருந்து விளக்கைப் பற்றவைத்தாள் வரோணிக்கா.
குழந்தை சொர்ணம் நிலத்தில் கிடந்தபடியே தூங்கிப் போய்விட்டாள். அவளின் சிவந்த உடம்பும், சுருண்ட மயிரும் நிலத்தில் ஈரக்கசிவு காணும்வரை புரண்டு கிடந்துது. அவளை அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டு விக்ரோறியாவைப் பார்த்தாள். விக்ரோறியாவின் முகம் உப்பிப்போயிருந்தது. நீண்ட நேரமாக அவள் அழுது கொண்டிருக்க வேண்டும். நாக்குழற அவள் மீண்டும் ஏதேதோ சொன்னாள். புரிய வில்லை.
வறோணிக்கா அவளின் முகத்தைத் தன் ஈரக் கசிவான கரத்தால் தடவிவிட்டாள். விக்ரோறியா வறோணிக்காவின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அவளின் எடுக்கிலே உலகத்தை மறந்து தூங்கிக்கொண் டிருக்கும் சொர்ணத்தின் முகத்தோடு சேர்த்து வருடவைத்தாள். இந்த உணர்வை வறோணிக்காவால் புரிந்துகொள்ள முடியவில்லை. விக்ரோறியா மறுபடியும் சொர்ணத்தின் நெற்றியைத் தடவி ஒத்திகை காட்டிவிட்டு வறோணிக்காவின் கையை மறுபடியும் பிடித்து அப்படியே செய்ய வைத்துவிட்டாள். முடுக்கிவிடப்பட்ட இயந்திரம் போன்று வறோணிக்கா அப்படியே அர்த்தமற்றுச் செய்து கொண்டிருந்தாள்.
மின்னும் வெளிச்சத்தில் மறுபடியும் விக்ரோறியா கண்ணீர் விடுவது நன்றாகத் தெரிந்தது. இப்போது இது ஆனந்தக் கண்ணீராக இருக்க வேண்டும்! ஏன்தான் அவன் இப்படிச் செய்தாளோ?
சற்று வேளைக்குச் சொர்ணத்தை ஒரு பாய்த்தடுக்கின் மேல் வளர்த்திவிட்டு மருந்துச் சிரட்டையை எடுத்து அடுக்களைக்குள் சென்று குடிநீர் வார்த்துத் திரும்பிவந்து மருந்துக் குளிகையை உருட்டத் தொடங்கிய போது கைப்பாஷையில் ‘அவர் இன்னும் வரவில்லையா?’ என வரோணிக்கா கேட்டாள்.
எலும்புக் கரத்தை மேலே உயர்த்திப் பக்கவாட்டில் சரிந்து, வர வில்லை என சைகை காட்டிவிட்டு கையை மேலே அப்படியே உயர்த்தி தலையை நிமிர்த்தி முகடுவரை நோக்கி செண்டை விரித்து ஏதோ பாவனைச் செய்தாள் விக்ரோறியா.
அதன் அர்த்தத்தை வறோணிக்கா வெகு இலகுவில் புரிந்துகொண்டு விட்டாள்.
‘பாவம்; அவள் பாவி!’ என்றுதான் அவள் தனது பாஷையில் கூறியிருக்க வேண்டும்.
இதைத்தான் வரோணிக்காவும் அனுமானித்தாள்.
உரைத்த மருந்தை அவள் வாய்க்குள் மெதுவாக ஊற்றிவிட்டு வறோணிக்கா எதற்காகவோ வெளியே போனாள். அவள் எங்கே போகிறாள் என்று விக்ரோறியாவால் அனுமானிக்க முடியவில்லை.
பகலெல்லாம் முத்துராசன் வலை பொத்திக்கொண்டிருந்தது வறோணிக்காவுக்குத் தெரியும். நாளை மறுநாள் வலை புதைத்து விடவேண்டுமென முத்துராசன் கூட்டாளிகளுடன் பேசியதைக் காலை அவள் கேட்டிருந்தாள்.
மணி ஒன்பதிற்கு மேலாகிவிட்டதென்பதை அவள் அனுமானித்துக் கொண்டு படலையைத் திறந்து வெளியே போனாள்.
நேரம் கெட்டநேரம்!
தன்னந்தனியாக ஒரு குமரி இப்படிப் போகக் கூடாதுதான். ஆனாலும் அவள் போய்விட்டாள். அந்த மரத்தடிக்கு அவள் போய்விட்டாள்.
ஊர் சற்று அடங்கிப்போய் இருந்தது. அங்குமிங்குமாக இரண்டொரு பேச்சுக் குரல்கள் கேட்டன. அவைகள் சற்றுத் தொலைவில்தான் கேட்டன.
இருட்டோடு இருட்டாகத் தெரிந்த வலைக் குவியலின்மேல் முத்துராசன் உலகத்தை மறந்து படுத்திருந்தான்.
இலேசாகவந்து காற்றின் நளினமான சரசம் அவனை ஆழ்ந்து தூங்க வைத்துவிட்டது.
கடல் நீளத்திற்கு வெளுத்துப்போயிருந்தது.
கிழக்கு நோக்கி சந்திரோதயத்தின் அடிச்சுவடு தெரிவதைப் போன்ற வெளுப்பு.
பௌர்ணமி வந்து நான்கு நாட்கள். நிலவு வர இன்னும் நேரம் இருந்தது. ஆனாலும் கடல் வெளிப்பாகத் தெரிந்தது.
கடற்கரையோடு நெடுகிலும் பறந்து செல்லும் வாக்காப் பறவைகள் இரண்டோ மூன்றோ தொடர்ந்தாற்போல கத்திச் சென்றன.
வறோணிக்கா வலைக் குவியலுக்குப் பக்கத்தே நின்று கொண் டிருந்தாள்.
முத்துராசனை அவள் இதுவரை எந்த முறையுமே வைத்து அழைத்த தில்லை. இப்போதும் அவனை அழைத்து எழுப்ப முடியாது.
அவன் உடலைத் தீண்டித்தான் அவள் அவனை எழுப்ப வேண்டும். ஒரு கணவேளைதான் அவள் நிலைகுத்தி நின்றாள். பின்பு ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.
தலையைக் குனிந்து அவள் அவன் தோள்மூட்டைச் சுரண்டினாள். அவள் மார்புச் சட்டைக்குள் விடப்பட்டிருந்த சங்கிலியின் சிலுவைப் பதக்கம் படக்கென வெளியே பாய்ந்து அவன் நெஞ்சில் மோதியது.
வறோணிக்காவின் உடம்பு சில்லிட்டது.
அந்தச் சிலுவைப் பதக்கம் ஏன் அப்படிச் செய்தது என்று ஆராய நேரமில்லை.
சற்று முறுகிச் சுருண்டுகொண்டு புரண்டு படுத்தான் முத்துராசன். வீட்டில் கிடப்பதைப் போன்ற உணர்வாலோ என்னவோ.
வறோணிக்கா இப்போது அவன் தோள்மூட்டைப் பிடித்துப் பலமாக உலுப்பினாள்.
குளிர்மையான ஒரு கரம் முத்துராசனை இறுகத் தொட்டுவிட்டது. இப்படியொரு உணர்வை அனுபவித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன.
அவன் துடித்துக்கொண்டு எழுந்தான்.
உடனே அந்த உருவம் மென் இருட்டினுள் நன்றாகத் தெரிந்தது.
குனிந்து நின்ற அந்த உருவத்தைப் பார்த்து அவன் ஏங்கிப் போனான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை.
“தங்கச்சி நீயா…?” – என்று அவன் பேச முயன்ற போது, வறோணிக்கா அவன் வாயைப் பொத்திவிட்டாள்.
இந்த நிகழ்ச்சி நடந்த கணக்கில் மளாரென்று ஒரு கம்பு வறோணிக்கா வின் முதுகில்பட்டு முத்துராசனின் நெஞ்சில் விழுந்தது.
இதை அவனோ அவளோ எதிர்பார்க்கவில்லை.
‘எடேய் பேக்கிலி நாயே நீ ஒரு மனிசனாடா?’ – என்ற குரல் ஓங்காரமாக எழுந்தது.
அது சந்தியாக் கிழவனின் குரல்.
மறுபடியும் முத்துராசன் நெற்றியில் ஒரு அடி விழுந்தது.
அந்த அடி விழுந்தபோது, ‘எணேய் அப்பு!’ – என்று வறோணிக்கா கத்திவிட்டாள். வரோணிக்காவின் மண்டையிலும் முதுகிலுமாகப் பல அடிகள் விழுந்தன.
சணவேளைக்குள் நடந்த இந்த ஆரவாரத்தைப் பலர் கிரகித்துக் கொண்டு ஓடிவந்தனர்.
முத்துராசன் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டான்.
வறோணிக்கா ஓடிப்போகத்தான் எண்ணினாள். ஆனாலும் அவளால் அப்படி ஓடிப்போக முடியவில்லை.
சற்று வேளைக்குள் வெளிச்சங்களும் ஜனங்களுமாக இந்த மரத்தடி குழுமிக் கிடந்தது.
***
மறுநாட்காலை குருவானவருக்கு முன்னால் முத்துராசனும் வறோணிக் காவும் நிறுத்தப்பட்டனர்.
வறோணிக்கா மௌனமாகக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். அவள் எல்லாம் சொல்லியாகிவிட்டது. முத்துராசனை எழுப்புவதற் காகச் சென்று அவனை எழுப்பிய கதையைத்தான் அவளால் சொல்ல முடியும். அதை யாரும் நம்பவேண்டுமே! பெற்றதந்தையே பின்னால் சென்று இருவரையும் கையுங் களவுமாகப் பிடித்துவிட்டான் என்பதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டிக் கிடக்கிறது! முன்பே இவ்விருவருக்கு மிடையே இருந்த தொடர்பு பற்றி ஊரவர்களும் பேசிக்கொண்டதால் யாவும் ஒப்பனையாகிவிட்டன.
முத்துராசன் தனக்காகவோ, அல்லது வறோணிக்காவுக்காகவோ எந்தச் சமாதானத்தையும் சொல்ல முடியாதவனாகக் குருவானவருக்கு முன்னால் முழுந்தாள்படியிட்டு மௌனமாகிவிட்டான்.
‘அந்தச் அகால வேளையில் வறோணிக்கா வந்து தன்னைத் தீண்டி எழுப்பியதும், தனது வாயை அவள் பொத்திக்கொண்டதும் எதற்காக?” என்று மனதோடு எழுந்த கேள்விக்குப் பதில் எதுவும் காணமுடியாமலே அவன் தவித்தான்.
அந்த சந்திப்பு வறோணிக்காவின் விகாரமான நினைவுகளினால் தான் ஏற்பட்டிருக்கவேண்டுமென்று தான் அவன் எண்ணிவிட்டானா? தான் அறிந்தோ அறியாமலோ இப்படி ஒரு விகார நினைவுக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டதாக அவனுக்கு நினைப்பில்லை.
மனைவி என்பவளின் சுகத்தை இழந்துவிட்ட இந்த இரண்டாண்டு களில் தன் மனத்தைப் பல வழிகளில் அலையவிடாமல் தடுத்துக் கொண்டது என்னவோ உண்மைதான். ஆனாலும் இரண்டொரு தடவைகள் கடிவாளத்தை முறித்துக்கொண்ட மனக் குதிரை நினை வுலகில் அலையவில்லை என்று அடித்துக் கூறிவிட முடியாமல் இருந்தது அவனுக்கு. இருந்தும் அந்த நினைவுலகில் வறோணிக்காவை அவன் காணவே இல்லை. வறோணிக்காவின் மனதில் ஏற்பட்டுப்போன ஒரு உணர்வை இந்தவரை வளர்ந்துவிட்டதற்குத் தானும் பொறுப்புடையன் ஆகவேண்டும் என்றுதான் அவன் நினைத்துக் கொண்டுவிட்டானா?
முத்துராசனின் மௌனத்திலிருந்து, அவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டதாகவே சகலரும் அனுமானித்தனர். அந்த அனுமானம் முடிவாகவும் எடுக்கப்பட்டுவிட்டது.
ஞாயிற்றுக்கிழமை பூசைப்பலி வேளை இவ்விருவரும் பகிரங்க மாகத் தண்டிக்கப்படவேண்டும்! இதிலிருந்து அவர்கள் தப்பிவிடவே முடியாது. துர்ப்பாக்கியமான அந்தச் சம்பவத்தைச் சந்தியாக்கிழவன் மட்டுந்தானா பார்த்தான்! வெளிச்சங்களோடு எத்தனை பேர் வந்து பார்த்தனர்!
கோவில் சங்கிலிஸ்தாம் தனது செல்வாக்கைப் பிரயோகித்து வறோணிக்காவைக் காப்பாற்ற முன்வந்தான். ‘அவன் விலைப்படுற சரக்கு’ என்று பலரும் சங்கிலிஸ்தாமுக்கு ஒத்தாசையும் செய்ய முற்பட்டனர். ஆனால் சந்தியாக்கிழவனோ அந்தவிதமான இரகசிய மீட்பு வேலைக்கு அடியோடு மறுத்துவிட்டான். குருவானவருக்கு இதற்கான சம்பிரதாய கிருத்தியம் செய்து வறோணிக்காவுடன் முத்துராசனையும் காப்பாற்றிவிடவும் என்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் அவன் பிடிவாதமாக அப்படிச் செய்ய மறுத்துவிட்டான். சந்தியாக் கிழவனின் பிடிவாதத்தைச் சிதைத்துவிட யாருக்குமே முடியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை!
அந்தோனியார் கோவிலில் பூசைப்பலி நடந்துகொண்டிருந்தபோது எல்லோரும் ஒன்றை எதிர்பார்த்தனர்.
‘அர்ச்சசிஸ்ட அந்தோனியார் கோவிலின் உத்தம கத்தோலிக்கனாகிய பேதிறு முத்தையா என்ற இவன் திருச்சபையின் கட்டளைகளில் ஒன்றாகிய ஆறாம் கற்பனைக்கு விரோதமாக நடந்தமையால் இந்த அவதாரம்…”
சங்கிலிஸ்தாமின் இந்தக் குரல் நடுக் கோவிலிலிருந்து கேட்டது. ஓசை வந்த திக்கை எல்லோரும் நோக்கினர்.
முத்தையன் முழந்தாள் படியிட்டு உட்கார்ந்திருந்தான்.
அவன் தலையில் அணிஞ்சில் முள் தடிகளால் வளைத்துக் கட்டப் பட்ட முள் முடி பச்சைப் பசேலென்று கொலுவிருந்தது.
அவன் கரங்கள் இரண்டையும் நீட்டவைத்து ஒவ்வொரு கைகளுக்கு மாக ஆறு ஆறு அடிகளை சீவிச் செதுக்கப்பட்ட ஒரு பலகைத் துண்டினால் அடித்து வைத்தார். சங்கிலிஸ்தாம்!
இது முடிந்தபின் எல்லோர் கண்களும் பெண்கள் வட்டாரத்தை நோக்கித் திரும்பின. ‘யார் இந்த விபச்சாரி?’ என்ற கேள்வியைத்தான் எல்லோர் மனங்களும் கேட்டிருக்கவேண்டும்? ஆனால் அப்படியான ஒரு கேள்வி எழவில்லை, ஏனெனில் அது நிச்சயமாக வறோணிக்கா தான் என்பதை அந்த மனங்களே எடுத்துவிட்டன. இருந்தும் உத்தியோக பூர்வமாக அதை அறிந்துவிட வேண்டுமே!
அர்ச்சிஸ்ட அந்தோனியார் கோவிலின் உத்தம கத்தோலிக்கியாகிய சந்தியா வறோணிக்காவாகிய இவள் திருச்சபையின் கட்டளைகளில் ஒன்றாகிய ஆறாம் கற்பனைக்கு விரோதமாக நடந்தமையால் இந்த அவதாரம்!’
சங்கிலிஸ்தாமின் இந்தக் குரல் இப்போது பெண்கள் பகுதிக்குள் இருந்து கேட்கிறது.
வறோணிக்காவின் தலையிலும் முள்முடி கொலுவிருந்தது. அவள் கரங்களிலும் ஆறு ஆறு அடிகள்!
அவள் தலை முட்டாக்கால் மூடப்பட்டிருந்தது.
திருப்பூசை முடியும்வரை அவனும் அவளும் அந்தக் கோலத்திலேயே இருக்கவேண்டும்!
கோவிலின் மேற்குப்புறத்தின் எல்லையோடு சந்தியாக்கிழவன் தலைகுனியாமல் நிமிர்ந்தபடி இருந்தான்.
அவன் இதற்காகக் கிலேசம் அடையவில்லை.
வறோணிக்காவின் ‘உடலும் ஆத்மாவும் புனிதமடைகிறது’ என்ற நம்பிக்கை ஒன்று போதுமே அவனுக்கு!
அன்றைய பிரசங்கத்தில் குருவானவர் மரியமதலேனாளின் கதை யைக் கூறினார்.
‘கப்பர் நகூம்’ என்ற பிரதேசத்தைத் தன் அழகினால் சுவீகரித்துக் கொண்டு, இஸ்ரவேலர்களின் புத்திரர்களைக் கெடுத்து, சதா உடல் பசியைத் தீர்த்துவந்த மதலேனாள் யேசுவைச் சந்தித்த கதையையும், கண்ணீரால் யேசுவின் பாதத்தைக் கழுவி, பரிமளத் தைலத்தால் யேசுவின் பாதத்தைத் துடைத்து மன்னிப்புப் பெற்றுக்கொண்ட கதையைச் சாங்கோபாங்கமாகச் சொல்லிவைத்தார். பிரசங்கத்தை முடித்துக் கொண்டு அவர் தனது மூக்குக் கண்ணாடியை நீக்கி கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டபோது சந்தியாக் கிழவனும் தனது தோள்துண்டை எடுத்துக் கண்களைத் துடைத்துக்கொண்டான். கோவில் எங்குமிருந்து எழுந்த பெருமூச்சுக்கள் ஒருவித வியாகுல நெஞ்சோச்சல்களைப் பிரகடனப்படுத்தின.
இதன்பின் – திருப்பூசை முடிந்தபோது முத்துராசனின் மனைவி விக்ரோறியா இறந்ததற்கான துக்கிமணியை ஊரே கேட்டது.
எத்தனை பாரங்களைச் சுமந்துகொண்டு விக்ரோறியா செத்துப் போனாளோ?
முத்துராசனுக்கு தன் மனைவி விக்ரோறியாவைப் பற்றி நன்றாகத் தெரியும். அவளுக்கு மனமறியத் தான் எந்தத் துரோகமுமே செய்ய வில்லையென்ற தெளிவு அவனுக்கு இருந்தது. தன்னைப் பற்றிய அப்பழுக்கற்ற நினைவோடுதான் அவள் ஆத்மா பிரிந்து போயிருக்கு மென்று அவன் திடமாக நம்பினான். வரோணிக்காவை அவன் சபித்தான். ‘இவள் தன் மனைவியானவளுக்கு முடிவுகட்டத்தான் வந்து சேர்ந்தாள்’ என்று சபித்தான். ஆனாலும் வறோணிக்காமேல் இனந்தெரியாத அனுதாபமொன்றும் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டிருப்பதை இடை யிடையே அவனால் உணர முடிந்தது.
வறோணிக்காவுக்கு விக்ரோறியாவைப்பற்றிநன்கு தெரியும். அவள் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்துவிட்ட இந்த இரண்டாண்டு காலத்துள் தான் எந்தவிதத்திலும் அவளுக்குத் தீங்கு செய்யவில்லை என்பதை நிச்சயமாகப் புரிந்துகொண்டுதான் அவள் ஆத்மா பிரிந்து சென்றிருக்குமென்று வறோணிக்கா திடமாக நம்பினாள். அவளிட மிருந்து முத்துராசனைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் தனக்கு எந்த விதத்திலும் தலைதூக்கி இருந்ததில்லை என்பதை அவள் நன்கு உணர்ந்து கொண்டே போயிருப்பாள் என்று அவள் அடிமனது கூறிக் கொண்டே இருந்தது. ‘ஒருவேளை தனக்குப்பின் தன் செல்வ மகள் சொர்ணத்தைப் பாதுகாக்கக் கூடியவள் இவள்தான்; இவளேதான் தன் கணவனுக்கு இரண்டாந்தாரமாக வேண்டும்’ என்று விக்ரோறியா நினைத்துக்கொண்டே செத்துப்போயிருக்க வேண்டும் என்று சமாதான மாகக் கூட இவளால் எண்ண முடியவில்லை.
சொர்ணம் அநாதையாகி விட்டாளோ என்பதை ஒப்புக்கொள்ள அவள் மனது மறுத்தது. ‘சொர்ணம் என்றுமே தனது மகள்தான்’ என்ற இந்த அசட்டுத்தனமான நினைவு இன்னும் ஏன்தான் அவள் மனத்தை நிறைத்து நிற்கிறதோ!
விக்ரோறியா செத்துப்போனபின் வறோணிக்காவின் மனது எப்படி யெல்லாமோ எண்ணத் தலைப்பட்டுவிட்டது. மனதின் எண்ணங் களை யெல்லாம் ஒருமைப்படுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் ஒன்று வறோணிக்காவைக் காத்திருந்தது. வரோணிக்கா தேடி வரும்வரை காத்திருக்காமல் அதுஒரு நாள் திடுதிப்பென்று வந்தேவிட்டது.
***
இதுவரை சாதாரண மீன்பிடிக்காரனாக இருந்த தேவசகாயத்திற்கு இருந்தாற்போல ஓர் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது.
தேவசகாயம் அந்தோனியார் சந்நிதியிலே ஒரு விருந்து அன்னதானம் வைத்தான்.
அவனுக்கு அக்கரையிலே ‘பொன் ஆம்பல்’ என்ற தங்க விளைவுக் கட்டி கிடைத்துவிட்டதாகப் பலர் பேசினர்.
தலைச் சோளகம் கிளம்பியபோது ‘பஞ்சந் தாங்கி’ என்ற அவனின் வலைப்பாட்டில் அவனின் வலை புதைக்கப்பட்டிருந்ததாகவும், பட்டி நிறைந்து வழிய ஓரா மீன் பட்டதாகவும், எப்படியோ அந்த நான்கைந்து நாட்களிலும் பத்தாயிரம் ரூபா மிச்சம் கிடைத்ததாகவும் சிலர் பேசினர். தூத்துக்குடியிலிருந்து சரக்கேற்றி வந்த வத்தை ஒன்று கடலின் தொலை தூரத்தில் கவிழ்ந்துவிட்டதாகவும், அதிலிருந்து மிதந்து வந்த சாமான் சட்டிகளைப் பலர் கண்டதாகவும், நேற்றைக்கு முதல் நாள் குருசு வெள்ளி முளைத்தபோது வலைபாட்டிற்குப் போன தேவசகாயத்தின் கையில், பொக்கிஷப்பெட்டி ஒன்று அடைந்து வந்து அகப்பட்டதாகவும் வேறு சிலர் பேசினர்.
கடைசியான இந்தப் பேச்சை ஊர்ச்சிதம் செய்வதைப் போன்று ‘நேத்தைக்கு தேவசகாயத்தான்ரை தோணிகரையை வரவில்லை. ஏனாம்?’ என்ற கேள்வியைத்தான் எல்லோரும் கேட்டனர்.
அரியாலைக் கரையிலோ, கரையூர்த்துறையிலோ, காக்கை தீவு முகத்திலோ, நாவான்துறைச் சந்தையிலோ தேவசகாயத்தின் மீன் விற்பனை ஆனதான தகவல் இல்லை. அப்படியானால்…? அப்படி யானால்… எல்லோருமே தூத்துக்குடி வத்தையின் பொக்கிஷப் பெட்டியைப் பற்றியே பேசினர்.
பஞ்சந் தாங்கி வலைப்பாட்டைத் தாண்டியவர்கள் தேவசகாயத்தின் தோணியை அங்குக் கண்டதாகக் கூறவில்லை. அப்படியானால்… அப்படியானால்…?
அடைந்துவந்த பொக்கிஷப் பெட்டியை அப்படியே பஞ்சத் தாங்கிக்குப் பக்கமாக உள்ள பேய்த் தீவுக்குக் கடத்திச்சென்று அதை எங்கோ புதைத்து வைத்துவிட்டுத் தேவசகாயமும் அவன் கூட்டாளியும் வந்துவிட்டார்களாம். தேவசகாயத்தின் கூலிக் கூட்டாளி இரகசியமாக யாருக்கோ சொன்னதாகத்தான் பலர் குசுகுசுத்தனர்.
எது எப்படி நடந்ததோ! தேவசகாயம் அந்தோணியார் சந்நிதியில் ஊருக்கெல்லாம் அவித்துப் போடுகிறான்!
இன்று போல அன்று மகிழ்ச்சி ஆரவாரம் இல்லையாயினும் அதுவும் ரு விருந்து வைபவம் தான்!
அவியல் முடிந்து, சபை இருத்தி விருந்து தொடங்கிய போது, கிழவன் சந்தியாதான் தலைப் பந்தியில் இருந்தான்.
அவனுக்குப் பத்தாவது இடத்தில் முத்துராசன் இருந்தான். மனைவியை இழந்துவிட்டகவலையை மறந்து, நடுக்கோவிலில் அவதாரம் வைக்கப்பட்ட துர்ப்பாக்கிய நிந்தனையை மனதிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு, ஊருடன் ஒத்துப்போவதற்காக அவன் இத்தனை விரைவில் பந்திக்கு வந்துவிட்டான்.
குருவானவர் முதலாவது அகப்பைச் சோற்றைச் சந்தியாக் கிழவனின் ஏனத்தில் வைக்க முற்பட்டபோது, முத்துராசனுக்குப் பக்கத்தே இருந்தவன் ஒரு ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பினான். வரோணிக்கா வைக் கட்டுவதற்காகப் படாதபாடுபட்ட யுவானி என்பவன் தான் அவன்! தேவசகாயத்தின் தம்பியானவன்!
முத்துராசனை அவன், ‘மசுவாதுக்காரன்’ என்றான். அவன் பந்தியி லிருப்பது பாவமென்றான்.
முத்துராசனை அப்புறப்படுத்திவிட்டுத்தான் விருந்து நடக்கவேண்டும் என்றான்.
யுவானியின் குரலைப் பலர் பிரதிபலித்தனர்.
‘அவதாரம் வைச்சாப் பிறவு, முத்துராசன் பரிசுத்தவானாகி யிட்டான். பேந்தென்ன கதை?’ என்று கூட்டத்திலிருந்த ஒருவன் குரல்கொடுத்தான்.
‘மசுவாதுக்காரன் இன்னம் குருவானவரெட்டைப் பாவசங்கீத்தம் பெறல்லை; அவன் இன்னம் பரிசுத்தவானாகல்லை’ என்று யுவானி தன் தர்க்கத்தைத் திசைதிருப்பினான்!
பின்பு யாருமே பேசவில்லை.
குருவானவர் அகப்பையைக் கையில் பிடித்தபடி நிலை குத்தி நின்றார்.
வறோணிக்கா கிடைக்காததற்காக, அவளைக் கெடுத்தவன் என்று கருதப்பட்டவனை அவன் சரியான சமயத்தில் பழிதீர்த்துக் கொள்ளத் தீர்மானித்துவிட்டான்.
‘முத்துராசனைப் பந்தியிலிருந்து எழுப்பவேணும். குருவானவர்!” யுவானி பலமாகக் கத்தினான்.
குருவானவருக்கு எதுவுமே பேச முடியவில்லை.
அவர் முத்துராசனுக்காக வியாகுலப்பட்டார். ஆனாலும் என்ன செய்வது! மனிதர்களை வென்றெடுக்க அவர் ஆக்கிவைத்த சட்ட திட்டம் அவர் நெஞ்சுக்குமேல் ஊழிக்கூத்தாடி அவர் இருதயத்தையே கசக்கிப் பிழிகிறது! அவர் பேச வாயெடுக்குமுன் பலர்பேசினர். ஒரே வேளையில் பேசினர். பேச்சின் ஓசை பந்தி நீளம்வரை நீண்டுபோக எல்லோர் தலைகளும் வழிவிலத்திக்கொண்டு முத்துராசனை நோக்கி நீண்டன.
தலைப் பந்தியிலிருந்த சந்தியாவின் கண்கள் அங்குமிங்குமாக உருண்டன. கணத்தில் நடக்கப்போகும் அசம்பாவிதங்களை அவன் மனக்கண் கண்டிருக்க வேண்டும்!
முத்துராசன் பந்தியைவிட்டு எழுந்து தலையைத் தாழ்த்திக்கொண்டு நடந்தான்.
விருந்தை ஏற்பதற்காக அவன் முன்னால் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் அடிப்படியே கிடந்தது. யுவானி அதை எடுத்துக் காறி உமிழ்ந்து விட்டுத் தூரத்தே விட்டெறிந்தான்.
சந்தியாக்கிழவனுக்கு முன்னால் இப்போது மான உணர்ச்சிகள் கூத்தாடின.
‘ஊமையனுக்காவும், திக்கற்ற சகலருடைய நியாயங்களுக்காவும் உன் வாயைத் திற’ என்ற கர்த்தரின் குரல் அவன் காதுகளில் இரை வெடுப்பது போன்றிருந்தன.
தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தை எடுத்து பந்தியை நோக்கி வீசினான் சந்தியாக் கிழவன். அது தட்டுத் தடுமாறி யுவானியின் துடையில் மோதி விழுந்தது.
சற்று வேளைக்குள் ஏகக் கலவரம்!
விருந்து வைபவம் தறிகெட்டுப் போயிற்று!
குருவானவர் அறைவீட்டை நோக்கி விரைந்தார்.
சந்தியாவை ஒருவன் அடித்தான்.
சந்தியாக்கிழவனை அடித்தவனை வேறொருவன் உதைத்தான். கூட்டங்கூட்டமாக அடிபாடுகள் நடந்தன.
பெட்டிகள், கோப்பைகள் பறந்தன.
சோறு கறிகள் சிதைந்தன.
கிடாரங்கள் புரண்டு மோதின.
குழந்தை குட்டிகள், பெண்கள் ஆகியோரின் குரல்கள் குமைந் தெழுந்தன.
சில நிமிட வேளைக்குள் நான்கைந்து பேர்கள் நினைவிழந்து கிடந்தனர்.
இப்படி ஒரு கலவரம் ஊருக்குள் என்றுமே நடந்ததில்லை.
பந்தியிலிருந்து எழுந்த முத்துராசனுக்கு அங்கு நடந்தவைகள் எதுவுமே தெரியவில்லை. அவன் வீட்டுக்கு வந்த போது இருட்டிவிட்டது.
வீடு வெறிச்சென்று கிடந்தது.
மாமி ஆச்சியையும், குழந்தை சொர்ணத்தையும் காணவில்லை. ‘சொர்ணம்!’ என்று அவன் பலமாகக் கத்தினான்.
‘மாமி ஆச்சி மகளைத் தந்திட்டுக் கடைக்குப் போட்டாக’ என்று கூறிக்கொண்டே வேலிக் கண்டாயத்தால் வறோணிக்கா வந்தாள்.
அவளின் தோளில் சொர்ணம் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை அப்படியே வாரிப் பிடுங்கி எடுக்கில் வைத்துக்கொண்ட முத்துராசன், வறோணிக்காவின் கன்னத்திலும், முதுகிலுமாகக் குத்தினான்.
வறோணிக்கா திகைத்துப்போய்விட்டான்.
அவள் அழுதாள்.
அவள் குரல் வெளியே கேட்கவில்லை.
சொர்ணத்தை வலைப்பொதிக்குமேல் வளர்த்திவிட்டு முத்துராசன் பக்கத்தே விழுந்து விம்மினான்.
வறோணிக்கா அப்படியே திண்ணையில் இருந்து சீறிச் சிணுங்கிக் கொண்டிருந்தாள்.
சற்றுவேளைக்குப் பின் மாமி ஆச்சி வந்தாள்.
விறாந்தையில் முத்துராசனின் விம்மலும், குந்து விளிம்பில் வறோணிக்காவின் சீறில் சிணுங்கலும் கேட்டன.
மாமி ஆச்சிக்கு எதுவுமே புரியவில்லை.
அவள் விளக்கைப் பற்றவைத்தாள்.
தலையைக் குனிந்தபடி வரோணிக்கா சீறிச்சிணுங்கிக் கொண்டிருந்தாள்.
வலைப்பொதிக்கு மேல் சொர்ணம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
முத்துராசன் விம்மிக்கொண்டு சுருண்டு கிடந்தான்.
மாமி ஆச்சி ஏதோ அனுமானிக்க முயன்றாள். நீண்ட நேரம் அவள் எதுவும் பேசவில்லை.
விம்மல், சீறல் சிணுங்கல் ஓய்ந்து போயின.
பின்பு மாமி ஆச்சி பேசினாள்.
‘பிள்ளை வறோணிக்கா, இருட்டிப் போட்டுது வீட்டையா போறாய்’ என்று மட்டும்தான் பேசினாள்.
‘நான் போகன்; இனிப் போகன்; போகமாட்டன்’ என்று வறோணிக்கா ஆங்காரமாகப் பதில் சொல்லி விட்டாளே!
சற்று வேளைக்குப் பின் வேலிக் கண்டாயத்தில் வெளிச்சம் தெரிந்தது. சந்தியாக்கிழவன் சிமிலி விளக்கைப் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தான்.
‘வறோணிக்கா’ என்ற சந்தியாக்கிழவனின் அழைப்புக்குப் பதில் கொடுக்காமலே வரோணிக்கா மெளனமாகத் தந்தையானவனைப் பரிதாபமாக நோக்கினாள். அப்போது அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
சற்றுவேளை உயர்த்திப்பிடித்த சிமிலி விளக்குடன் சந்தியாக் கிழவன் முற்றத்தில் நின்றான். பின்பு எதை நினைத்துக் கொண்டானோ கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பி விட்டான்.
இதற்குப்பின் ஒருநாள் சந்தியாக்கிழவனின் இரண்டாந்தாரமும் மரித்துப்போனாள்… அதன்பின்… அதன் பின்…
இவைகள் எல்லாம் நடந்து முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன.
அன்று நடந்த கோவில் விருந்திற்குப் பின்பு குருவானவரின் கட்டளைப்படி நின்றுவிட்ட வைபவம் மீண்டும் இன்று தொடர்கிறது. சூறாவளியிலிருந்து மீண்டுவந்த நாற்பத்தெட்டுப் பேர்களின் பேரால் தொடர்கிறது.
சந்தியாக்கிழவனின் கண்களுக்கு முன்னால் முடிந்து போன இந்தச் சம்பவங்களின் தோற்றங்கள் தொடர்ச்சியாக வரவில்லையாயினும், தான் சம்பந்தப்பட்டவைகள் வரத்தவறவில்லை.
நீட்டி நிமிர்ந்து கிடந்த சந்தியாக்கிழவன் கடல் பக்கமாகப் புரண்டு சூறாவளியினால் வருவிக்கப்பட்ட சின்னங்களை நினைவு படுத்த முயன்று கொண்டிருந்தான்.
கடலின் கரைப் பரப்பை வளைத்து உயர அடுக்கி வைக்கப் பட்டிருந்த முருகக் கற்கள் ஒழுங்கற்றுச் சிதறிப் போய்க் கிடந்தது கண்களுக்கு நன்றகத் தெரிந்தது.
தொலைவில் கோரிமுனை வெளிச்சவீட்டு ஒளி மின்னிக் காட்டியது. மண்டைத்தீவுக் கரையிலிருந்து காகங்கள் கூட்டங் கூட்டமாகப் பந்தயம் வைத்துப் பறந்து வந்தன.
கடலின் பெருமூச்சு இலேசாகக் கேட்டது.
கோவிலின் மணி ஓசை கணீரென எழுந்தது. அதன் முடிவில் அது மூன்று தடவைகள் தனித் தனியே கேட்டது. விருந்து வைபவத்திற்காக அறிவித்தல்! கடைசி அறிவித்தல்!
அத்தியாயம்-8
பதினைந்து வருடங்களுக்குப்பின் வைக்கப்பட்ட இந்த விருந்து வைபவம் மிகவும் குதூகலமாக முடிந்துவிட்டது. தனிப்பட்டமுறையில் யாருக்குமே வெறுப்பு இருக்கவில்லை. நாற்பத்தெட்டுப் பேர்களின் உயிர்களை மீட்டெடுத்தற்காக ஒரு நிகிழ்ச்சி நடந்தபோது யாருக்குத்தான் வெறுப்பிருக்கப்போகிறது! ஆனால் சந்தியாக்கிழவனின் குடும்பத்தி லுள்ள யாருமே விருந்தில் கலந்து கொள்ளவில்லை. இதை மற்றவர்கள் பெரிது படுத்தவும் இல்லை.
பல வருடங்களுக்குப்பின் இப்படியொரு பெரிய விருந்து நடப் பதனால், யார் முதல்பந்தி யார் கடைப்பந்தி என்ற பிரச்சினையே இருக்காமையினால், சந்தியாக் கிழவனின் நினைப்புக்கூட யாருக்கும் வரவில்லை. கூட்டத்தில் எங்கோ ஒரு இடத்தில் கிழவன் இருக்கவே இருப்பானென்று யார் நினைத்தார்கள்? இடையே ஓடிவிட்ட ஆண்டு களோ பல. இதற்கிடையில் உள்ளூர் தனிப்பட்ட சபை, சநஙமு வைபவங்களுக்குக்கூட பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட போது, பொதுக்காரியங்களில் இதற்கான ஒரு இலக்கண வரம்பை ஏன்தான் வைத்துக்கொண்டு இருக்கவேண்டுமென்று யாருக்கும் பெரிய மனது வந்துவிடவில்லை. காலந்தான் யாரையும் கேட்காமல் எல்லாவற்றையும் இனம் பார்க்காமல் வாரி அடித்துக்கொண்டு போய் விடுகிறதே!
சந்தியாக்கிழவன், மகள் வறோணிக்காவுடனோ மருமகன் முத்துராசனிடமோ, பேத்தி சொர்ணத்திடமோ கோவிலில் விருந்து பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தன்னந்தனியாக அவன் சாய்ந்துபோன மரத்துடன் சாய்ந்து கிடந்தான்.
முத்துராசனோ, தனது மனைவி, மகள் என்ற முறைகளில் தன் ஆணைக்குட்பட்டவர்கள் என்ற நினைப்புடன் அல்லது ஒன்றுமில்லாத வெறும் நினைப்புடன், இந்த விருந்து பற்றி வறோணிக்காவுடனோ, சொர்ணத்துடனோ ஒரு வார்த்தைதானும் பேசவில்லை. தனது பெரும்பகுதி நேரத்தையே தின்று கழிக்கும் கள்ளுக்கடையிலேயே நாளெல்லாம் கழித்துவிட்டான்.
‘ஏன் முத்துராசா விருந்துக்குப் போகேல்லையோ?’ என்று கேட்டவர் களிடம் அவன் நன்மை-தீமை எதுவுமே செல்லவில்லை. ‘போவம்’ என்று மட்டும் அடக்கமாகச் சொல்லிக்கொண்டு முடிவு வரை சமாளித்துக் கொண்டான்.
வறோணிக்கா வீட்டோடு கிடந்தாள். விருந்து வைபவம் பற்றி அவள் மனது முடிவான தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். போவோமா விடுவோமா என்றுகூட அவள் மனது கேட்கவில்லை.
ஊரில் குமரிகள், கிழவிகள் எல்லாம் வித்தியாசமின்றி காலையி லிருந்து விருந்திற்காகச் சமைத்துக்கொண்டிருந்த போது அவள் மட்டும் அடக்கமாக வீட்டிலேயே கிடக்கிறாள்.
‘என்னடி வறோணிக்கா, விருந்தடிக்கு வரவாபோறாய்?’ என்று அழைக்க வந்தவர்களிடம், ‘வாறன் போங்கோ’ என்று மொட்டை யாகவே சொல்லி, நாள் பூராவும் கழித்துவிட்டாள்.
சொர்ணம் அறைக்குள் அடைபட்டுக் கிடக்கவில்லை. எப்போதும் போல அவள் சுறுசுறுப்பாகவே இருந்தாள். கோவிலில் ஏதாவது விசேஷம் நடக்க இருந்தால் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அது பற்றிப் பேசிப்பேசி விசேஷத்திற்கென அவளைத் தாங்களாகவே அனுப்பி வைக்கும் தாயும் தந்தையும் இந்த நிகழ்ச்சிப்பற்றி எந்தவித அபிப்பிராயமே சொல்லாது இப்படி இருந்ததை இலேசாக நினைத்துப் பார்த்தாள் கோவிலடிப்பக்கம் ஒருமுறை போய்விட்டு வரத்தான் அவள் மனம் விரும்பியது சின்னஞ்சிறிசுகள் கோவிலடியில் வைக்கும் ஆரவாரம் அவள் காதுகளைக் குடையும்போது அவளால் சும்மா இருக்கவே முடியவில்லை. அவளுக்குச் சிநேகிதி என்று ஊரில் இருப்பது ஒரே ஒருத்தியான சிசிலியாதான்.
‘ஏனடி நீ வரேல்லையாடி?’ என்று கேட்ட சிசிலியாவுக்கு, ‘நான் பிறவாலை வாறன் நீ போடி’ என்று மட்டும் பதில் கூறினாளே தவிர, அதற்குமேல் இதுபற்றி அவள் எதுவுமே பேசவில்லை. எப்படியும் அம்மாவிடம் கேட்டுக்கொண்டு கோவிலடிக்குப் போய்வரத்தான் அவள் துடித்தாள். ஆனால், அம்மாவின் முகத்தைப் பார்த்துப் பார்த்துத் தனது எழுச்சியை நழுவவிட்டுக் கொண்டேவந்து கடைசியில் அம்மாளை அவள் கேட்டேவிட்டாள்.
‘கொப்பர் வந்தாப்போலைக் கேட்டுக்கொண்டு போ’ என்று வறோணிக்கா சொன்ன பதில் அவளை ஏங்க வைத்துவிட்டது.
இதுநாள்வரை சொர்ணத்தற்கில்லாத விருப்பு வெறுப்பு எதுவும் வறோணிக்காவுக்கு வந்ததில்லை. சொர்ணம் சிரித்தபொழுதெல்லாம் வறோணிக்காவுக்கும் சிரிக்க வரும். சொர்ணம் மனம் குன்றும் பொழுதெல்லாம் வறோணிக்காவின் மனமும் குன்றும்.
சொர்ணத்திற்குத் தூக்கம் வந்தால்தான் வரோணிக்காவுக்கும் தூக்கம் வரும். அத்தனை தூரத்திற்குத் தனது மாமிசத்தின் பங்காகவே அவளை வைத்துக்கொண்டாள். இந்தப் பதினைந்து ஆண்டுக் காலமும் செத்துப் போய்விட்ட அவள் தாயாரை அவள் எதற்காகவேனும் நினைத்துவிடக் கூடாதென்றும், தன்னைச் சிற்றன்னை என்றும் சொல்லிவிடக் கூடாதென்றும் தனக்குள் ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு வறோணிக்கா நடந்துகொண்டாள். ஊரில் இப்படிச் சிற்றன்னைகள் இருந்திருக்கவே முடியாது. அன்று கோவில் விருந்தில் ஏற்பட்ட கலவரத்தின்பின் முத்துராசனின் வீடு சென்று, சொர்ணத்தை அள்ளி எடுத்து அணைத்து அவள் மனதின் எடுத்துக்கொண்டாளே ஒரு சபதம்!
இரவு, முத்துராசன் தாக்கப்பட்ட தினம், விறாந்தையில் குவிக்கப் பட்டுக் கிடந்த வலைப் பொதிக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாளே, அந்த அழுகை இவைகளால் ஏற்பட்டுப் போன பந்தத்தை ஒரு ஒப்பாசாரமென்றோ சம்பிரதாயபூர்வமான தென்றோ அவள் மனது கருதியிருக்கவில்லை.
இந்தப் பதினைந்து வருடத்திலும் முத்துராசனுக்கும் அவளுக்கும், அவள் உதிரத்திலிருந்து ஓர் உயிர்க்கரு பிறக்கவில்லை. அதை அவள் விரும்பியதாகவும் இல்லை. சொர்ணம் என்ற ஒருத்தி போதாதா அவளுக்கு! தொட்டு, உணர்ந்து அனுபவிக்கக்கூடிய சகல சுபபோகங் களையும் விட சொர்ணத்தையே கண்களாகக் கருதிவந்த அவள், இன்று சொர்ணத்தின் மனது கோணும்படியாக, முத்துராசனைக் கேட்டு விட்டுத்தான் விருந்து வைபவத்திற்குப் போகவேண்டும் என்கிறாளே! இதுவரை தந்தையான முத்துராசனைக் கேட்டுவிட்டுத்தான் சொர்ணம் எதையும் செய்ததில்லையே!
‘கொப்பரைக் கேட்டுக்கொண்டு போ!’ என்று வறோணிக்கா சொன்னதும் அதன் சுமையைத் தாங்கமுடியாது தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் ஓடி, பாயில் குப்புற விழுந்து விம்மிக் கொண்டிருந்தாள் சொர்ணம்.
விருந்திற்கான ஆயத்த மணி மூன்றாவது தடவையும் கேட்டது. இந்தக் கடைசி வேளையிலேனும் ஒரு தடவை போய்விட்டு வந்தாலென்ன என்று சொர்ணம் ஏங்கினாள்.
‘புள்ளை வறோணிக்கா, தேத்தண்ணி தரவா போறாய்’என்று கேட்டுக்கொண்டே சந்தியாக்கிழவன் வந்தான்.
‘ஏனணை அப்பு, நீ விருந்துக்குப் போறயா?’ என்று வறோணிக்கா இப்பவாவது கேட்டிருக்கலாம். அவள் கேட்கவில்லை. தந்தைக்குப் பதில் கொடுக்காமலேயே அவள் அடுக்களைக்குள் சென்றாள்!
சந்தியாக்கிழவன் தலைக்கு முண்டுக் கொடுத்துக் கொண்டு திண்ணைக் குந்தோடு சாய்ந்துபோய்ச் சிறிது நேரம் இருந்தான்.
வறோணிக்கா தேநீர்க் கோப்பையை அவன்முன் வைத்து நகர்த்தி விட்டாள்.
மெதுவாக அதை எடுத்து ஒரு தடவை உறிஞ்சிவிட்டு ‘ஏன்டி புள்ளை இப்படிச் சீனி போட்டனி?’ என்று கேட்டு முகத்தைச் சுண்ட வைத்துக்கொண்டே குடித்தான் கிழவன்.
தேநீர் சூடாகவே இருந்தது.
இருட்டிக் கொண்டிருந்தது.
அப்போது ஊமை அலஸ் வெளிப்படலையைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான்.
அவன் கையில் ஒரு அலுமினியச் சட்டி இருந்தது!
அவன் நேராக கோவிலில் இருந்து வருகிறான்.
அந்தச் சட்டி நிறைய விருந்துச் சோறு இருந்தது.
சந்தியாக்கிழவனுக்கு முன்னால் வந்து நின்ற அலஸ் எதையெதையோ பேசினான். தனது பேச்சைச் சரியாகப் புரிய வைத்துவிட வேண்டு மென்பதற்காக அவன் சைகைகளும் செய்தான்! முதலாவது அவன் பேச்சுக் கேள்விக்குறியாகத்தானிருந்தது.
ஏன் விருந்துக்குப் போகவில்லையப்பா?’ என்றுதான் கேட்டான்! கிழவன் ஒன்றும் பேசவில்லை. மேலும் மேலும் அலஸ் ஏதேதோ கேட்டான். ஒன்றுமே புரியவில்லை. சட்டிக்குள் கையை வைத்து ஒருபிடி சோற்றையெடுத்துத் திரணையாக்கிக் கிழவனின் கையில் வைக்கப்போனான் ஊமை.
கிழவன் அவன் கையைத் தடுத்து, அதை வாங்க மறுத்துவிட்டான். ஊமை அலஸ் ஏமாற்றத்துடன் அடுக்களைப்பக்கம் தலையை நீட்டினான். அப்போது வறோணிக்கா வெளியே வந்தாள். கையிலிருந்த சோற்றுத் திரணையை வறோணிக்காவிடம் கொடுக்க அவன் முயன்றான். அவளும் அதை மறுக்கவே ஏமாற்றத்தினால் அவன் முகம் சுண்டிப்போய் விட்டது.
தனது பாஷையில் அவன் திட்டித் தீர்த்தானா? அல்லது வானத்தையும் பூமியையும் பார்த்து, இது கடவுளின் விருந்து என்றுதான் அவன் கூற முற்பட்டானா?
சொர்ணம் வாயிற்படிக்குள் வந்தாள்.
ஊமை அவன் முகத்தையே பரிதாபமாகப் பார்த்தபடி நின்றான். அவன் முகம் கெஞ்சுவதுபோலிருந்தது. தனது ஆசையை அவளாவது பூர்த்திசெய்ய மாட்டாளோ என்று ஏங்குவது போலவும் இருந்தது.
அவளை நிதானித்துப் பார்த்தபடியே தனது இடக்கரத்தை எடுத்து நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு விட்டு, மறுகரத்திலிருந்த சோற்றுத்திரணையை மேலும் மேலும் உருண்டையாக்கிக் கொண் டிருந்தான். சொர்ணம் திகைத்துப்போய் நின்றாள். தாயானவளும், பேரனானவனும் வாங்க மறுத்ததை அவள் உணர்ந்துகொண்டாள். இந்த உருண்டையை அவள் வாங்குவதா, விடுவதா?
சணவேளைதான் அவள் யோசித்தாள்.
அவளின் கரங்கள் ஊமை அலஸை நோக்கி நீண்டன.
அத்தியாயம்-9
இரண்டே இரண்டு நாட்கள் வந்துபோன சூறாவளியின் தாக்கம் தீர்ந்துபோக மாதங்கள் பல சென்றுவிட்டன. கடல்தாயின் பெரு வயிற்றின் மேல் படுக்க வைத்திருந்த வலைகள் யாவையும் சூறாவளி விழுங்கி விட்டது. இந்தத் தாக்கத்திற்கு உட்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் உதவி சிறிதளவு தான் கிடைத்தது. இந்தச் சிறு உதவியை வைத்துக் கொண்டு ஒரு களங்கண்டிக்கான அடுக்குகளைச் சேகரித்து விட முடியாதென்பது சந்தியாக்கிழவனுக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவனால் செய்யக்கூடியதாக எதுவுமில்லை. அரசாங்கத்துடன் வாதாடு வதற்கான ஏதுக்களும் இருக்கவில்லை. ஏனெனில் சூறாவளிக்கு முன்பு வந்து விட்டுப்போன தேர்தலில் சந்தியாக்கிழவனின் தலைமையில் தான் ஊரே திரண்டு ஒருவனுக்கு வாக்களித்திருந்தது. வாக்குப் பலத்தால் தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியு மென்ற அவர்கள் விசுவாசமாக நம்பினர். அவர்கள் நம்பிக்கை வீண் போயிற்று.
ஊரில் பணக்காரனென்று பேரெடுத்த தேவசகாயம் சம்மாட்டி யிடம் கடன்வாங்கிச் சென்றவர்களிடமெல்லாம் நிபந்தனைகள் வைத்து, கையொப்பங்கள் வாங்கி ஈடுகளைப்பெற்றுகொண்டுதான் தேவசகாயம் சம்மாட்டியார் உதவிகளைச் செய்தார்.
இதனால் சந்தியாக்கிழவன் மிகவும் சினமடைந்திருந்தான். சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திச் சம்மாட்டி தேவசகாயம் ஏழை எளியவர்களின் இரத்தத்தை உறிஞ்சுவதைக்கண்டு, சந்தியாக்கிழவன் சினமடைந்தான். ஆயினும் இதைத் தடுத்து நிறுத்த அவனால் முடியவில்லை. ஏன் மருமகன் முத்துராசனைக் கூடத் தடுத்துவிட முடியவில்லையே!
நோட்டு எழுதிக் கொடுத்துவிட்டு முத்துராசன் ஆயிரத்து ஐந்நூறு ரூபா பெற்றுக்கொண்டபோது சந்தியாக் கிழவன் வீட்டில் ஒரு கலவரத்தையே கிளப்பிவிட்டான். முத்துராசனின் புதிய வலைகடலில் இறக்கப்பட்டபோது சந்தியாக்கிழவன் போகவே இல்லை. மகளும் பேத்தியும் எத்தனையோ விதத்தில் சொல்லிப் பார்த்தனர். அவன் பிடிவாதமாக மறுத்தேவிட்டான். குடும்பத்தில் ஒரு காரியமேனும் சந்தியாக்கிழவனுக்கு மாறாக – அவன் ஆசீர்வதிக்காமல் எப்போதுமே நடந்ததில்லை.
ஓலைப்பிட்டிக்குப் பக்கமாயுள்ள சம்புப் பாட்டின் களத்தோடு மருவிய ஓடைப் பதிவில் வலையைப் புதைத்துவிட்டு ஊமை அலசும் முத்துராசனும் வந்து சேர்ந்த போதும் சந்தியாக்கிழவன் வீட்டில் இல்லை. வறோணிக்கா முட்டைக் கோப்பி கொண்டுவந்து முத்துராசனுக்கும் அலசுக்கும் கொடுத்தாள்.
‘கொப்பர் என்னவாம் வறோணிக்கா? இந்த வயதிலேயும் கிழவன் ரோசமெல்லே பாராட்டுது’ என்று முத்துராசன் வரோணிக்காவைப் பார்த்துக் கேட்டான்.
‘அது நெடுக இப்படித்தானேயணை. அதின்ரை கோவமும் கொஞ்சம் ஆறட்டன்’ என்று வறோணிக்கா சமாளித்துக்கொண்டாள்.
திண்ணை மூலையில் குவிக்கப்பட்டிருந்த பழைய வலைக்குவியலில் சாய்ந்துகிடந்த அலஸ், வரோணிக்காவிடம் தனது பாஷையில் ஏதோ கேட்டான்? அது, சந்தியாக்கிழவன் எங்கே? என்ற கேள்வியாகத்தான் இருந்தது. ‘எங்கே எண்டு தெரியேல்லை’ என்று அபிநயத்தால் பதில் சொன்னாள் வரோணிக்கா.
‘இந்தக் கிழவன் நெடுக இப்பிடித்தான்’ என்ற பாவனையில் கிழவனின் பிடிவாதத்தை நிரூபிக்க முன்பு ஒரு தடவை மண்டைத்தீவு வலைப்பாட்டில் வலைபாய்ந்த போது கிழவனுக்கும் தனக்கும் நடந்த வலைப்புதையல் வழிமுறைத் தகராறை நிலத்திலே கீறி, விரல்களை மடக்கி நீட்டி பல்வேறுபட்ட அபிநயங்களுடன் அலஸ் விளக்கிக் கொண்டிருந்தான். இந்த விரிவுரையை வறோணிக்காவுடன் சொர்ணமும் சேர்ந்து இரசித்துக்கொண்டிருந்தாள்.
இதெல்லாம் முத்துராசனுக்கு அலுப்பைக் கொடுத்தது. மடிப் பெட்டிக்குள் இருந்த வெற்றிலையைக் கொடுப்புக்குள் அடைத்து, சுண்ணாம்பை விரலில் எடுத்து, பல்லில் உரசிக்கொண்டு அவன் வெளியே கிளம்பினான். அவன் எங்கே போகிறான்? ஏன் போகிறான்? என்று வரோணிக்கா கேட்கவேண்டியதில்லை. அவன் நேராகவே கொய்யாத் தோட்டம் கள்ளுக் கொட்டிலுக்கும் போவான். தொடர்ந்தாப் போல மூன்று போத்தல் தென்னங்கள்ளை வயிறு முட்டும் வரை குடிப்பான். நேராகவே கடற்கரைப் பக்கத்திலுள்ள சந்தைக் கட்டிடத்திற்கு முன்னாலுள்ள மர நிழலுக்கு வருவான். தோளில் துண்டை உதறிப்போட்டு, கண்களை மூடிக்கொண்டு காற்றின் சரசத்தில் மூழ்கிக் கிடப்பான். இரண்டு மணிக்கெல்லாம் கண்களைத் திறப்பான். வறோணிக்காவிடம் ஓடோடி வருவான். வறோணிக்கா உணவு கொடுப்பாள். அப்புறம் விறாந்தையில் படுப்பான். சரியாகப் பட்டிக்காவலுக்குப் போகும் நேரத்தில் அலஸ் வந்து அவளை அருட்டிவிடுவான். இதுதான் அவனின் நாளாந்த நடை முறையாகும். முத்துராசன் போய்விட்ட பின்பு அலஸ் சற்றுவேளை வறோணிக் காவுடனும், சொர்ணத்துடனும் தனது பாஷையில் உரையாடிவிட்டுப் புறப்பட்டபோது மணி பதினொன்றுக்கு மேலாகிவிட்டது.
மத்தியானம் அவனைச் சாப்பிட வரும்படி வரோணிக்கா கேட்டாள். வறோணிக்காவின் கேள்விக்கு அவன், ‘பாவம் பேத்திக் காத்துக் கிடக்கும்’ என்று பாவனையில் காட்டிவிட்டு, வறோணிக்காவின் பதிலுக்கு மட்டுமல்ல, சொர்ணத்தின் பதிலுக்காவும் காத்திருந்தான்.
‘கட்டாயம் சாப்பிடவரவேண்டும்’ என்று சொர்ணம் நயனபாஷை யில் வேண்டினாள். அதைத் தடுத்து மீறிப்போக அலசால் முடியவில்லை. ஆனாலும் அவன் எதுவும் பதில் கொடுக்காமல் எழுந்துபோய்விட்டான். சொர்ணத்திற்கு இது சிறு ஏமாற்றமாகத்தான் இருந்திருக்க வேண்டும்! முகத்தை ஒரு விதமாகக் கோணி வைத்துக்கொண்டு அவள் அடுக்களைப் பக்கம் போய்விட்டாள்.
இன்று அவளுக்கு மனது ஒருவிதமாக இருந்தது.
அலஸ் தன்னை வேண்டுமென்று அவமதித்துவிட்டுப் போய்விட்ட தாகவே அவள் நினைத்துக்கொண்டாள்.
முத்துராசனுடன் அலஸ் வந்து சேர்ந்து பல வருடங்களாகிவிட்டன. இத்தனை வருடங்களில் வந்திருக்க முடியாத ஒருவகை உணர்வு அவள் மனதைக் குடைந்துகொண்டிருந்தது. வழமையில் அவனுடைய பரிதாபகரமான நிலைக்காக எழுந்து கொண்டிருந்த பச்சாத்தாப ணர்வுக்குமப்பால் ஏதோ ஒன்று தலைதூக்கி நிற்பதான நிலையின் வெளிப்பாடு அவளை ஆட்கொண்டிருந்தது.
‘மகள் உனக்கேதும் சுகமில்லையா?’ என்று வறோணிக்கா கேட்ட போது சமாளித்துக்கொண்டு, ‘ஒண்டுமில்லையம்மா’ என்று சொர்ணம் பதில் சொன்னாள்.
பக்கத்துக் கடைக்குச் சமையல் சாமான் வாங்குவதற்காக வறோணிக்கா சென்றாள். போகும்போது, ‘மகள், கொப்பர் வரப் போறார். கஞ்சியை வடிச்சுவிட்டு, சரக்கை அரைக்கவா போறாய்?” என்று கட்டளை போட்டு விட்டுச் சென்றாள். இது ஒரு புதுமாதிரியான கட்டளை. ஊருக்குள் மரபு வழிவந்த கட்டளை!
‘அதை எடு’ என்று கட்டளை இடுவதற்குப் பதில் ‘அதை எடுக்கவா போறாய்?” என்று கூறுவார்கள். ஒன்றைச் செய்யும்படி கட்டளை போடும் போது, ‘செய்ய வா போறாய்?” என்றுதான் சொல்வார்கள். வழிவழி வந்த இந்தக் கட்டளையைப் போட்டுவிட்டு வறோணிக்கா வெளியே போனதும் சொர்ணம் கஞ்சியை வடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டாள்!
வறோணிக்கா கடைப்படியை அடைந்திருக்க மாட்டாள். அதற்கு இடையில் சொர்ணத்தில் அவலக்குரல் பீறிட்டுவந்தது.
வறோணிக்கா விழுந்தடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடினாள். சொர்ணம் கால்களைச் சீமையால் மூடிப் பிடித்தபடி துடிதுடித்துக் கொண்டிருந்தாள்.
‘மகள்’ என்று குரல் வைத்துக்கொண்டே ஓடிவந்த வரோணிக்கா சணவேளைக்குள் துடிதுடித்துப் போய் விட்டாள்.
சொர்ணம் வரோணிக்காவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறினாள்.
அத்தியாயம்-10
கோவிலின் நடுப் பகல் மணி அடித்து ஓய்ந்தபோது அலஸ் வந்தான். அப்போது வீட்டுக்குள் நான்கைந்து பெண்கள் கூடி இருந்தனர். இதைக் கண்டதும் அவன் திடுக்குற்றுப் போய்விட்டான்.
சொர்ணம் முனகிக் கொண்டிருந்தாள். அந்த முனகல் இவனுக்குக் கேட்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று நடந்து விட்டதாக உணர்ந்து கொண்டான். சற்றுக்கூச்சத்துடன் அவன் சொர்ணத்துக்குச் சமீபமாக வந்தான்.
சொர்ணத்தின் இடது காலில் மை ஊற்றப்பட்டியிருந்தது.
‘நல்லவேளை; சுடுகஞ்சி நிலத்திலை ஊத்திண்டு கொஞ்சந்தான் கால்லை தெறிச்சிருக்கு’ என்று ஒருத்தி ஆறுதல் பட்டுக்கொண்டாள்.
அலசுக்கு எல்லாமே விளங்கிவிட்டது. மூலையோடு கிடந்த பழம் வலைப் பொதிக்குமேல் இருந்து அவன் சொர்ணத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் நீர் முட்டி நின்றது.
சற்று வேளைக்குப்பின் முத்துராசன் வந்தான். அவனுக்கு வந்த ஆத்திரத்தில் அவன் வறோணிக்காமேல் பாய்ந்திருப்பான். அதற்கிடையில் சொர்ணம் எழுந்திருந்து, தனக்கு அப்படிப் பெரிதாக ஒன்றும் நடந்து விட வில்லை என்பதைக் காட்டிக்கொண்டாள்.
முத்துராசனுக்கு மட்டுமல்ல. அலசுக்கும் இது நிம்மதியையும் ஆறுதலையும் தந்தது.
முத்துராசன் சொர்ணத்தின் காலை மெதுவாகத் தடவிப் பார்த்தான். சிறிய அளவில் இரண்டொரு கொப்புளங்கள் மட்டும் தெரிந்தன. ‘சும்மா ஏண்டாப்பிலை வேலையளைச் செய்யிறது’ என்று அவளை இலேசாகக் கடிந்துகொண்டான்.
சற்று வேளைக்குப் பின் குசலம் விசாரிக்க வந்தவர்கள் ஒவ்வொரு வராகப் போய்விட்டனர்.
முத்துராசனுக்கு வரோணிக்கா உணவு பரிமாறமுற்பட்டபோது, அலசைப்பற்றிய நினைவு அவளுக்கு வந்தது. வெளியே இருந்த அலசை அழைக்கவந்தபோது, அலஸ் சொர்ணத்தின் காலுக்குக் கோழி இறகால் மை தடவிக்கொண்டிருந்தான்.
வறோணிக்கா அடுக்களையிலிருந்து வெளியே வந்த ஓசைகேட்டு, சொர்ணம் தன் காலை இழுத்துச் சீலையால் மூடிக்கொண்டதை வறோணிக்காவின் கண்கள் கண்டன. ஆனாலும் அவள் எந்தவித நிலைக் குலைவுமின்றி அலசைச் சாப்பிடுவதற்காக அழைத்துச் சென்றாள்.
‘மகள், அது ஒண்டும் செய்யாது மகள்! நீயுங்கையோடை சோத்தைத் தின்னவா போறாய் மகள்’ என்று வறோணிக்கா சொர்ணத்தையும் அடுக்களைக்குள்ளே இருந்து அழைத்தாள். அந்த அழைப்புக்கு எந்த வித பதிலும் சொல்லாமல் சொர்ணமும் அடுக்களைக்குள் சென்றாள்.
‘என்ன மகள் செய்யுது?’ என்று முத்துராசன் கேட்டான்.
‘ஒண்டுஞ் செய்யவில்லை அப்பு’ என்று பதில் சொல்லிவிட்டு, சொர்ணம் வரோணிக்காவின் பக்கமாக அமரப்போனபோது, தான் வைத்துக்கொண்டிருந்த திருகு வலைப்பிடியை எடுத்துச் சொர்ணத்திடம் கொடுத்தான் அலஸ்.
வெளியே அலசினுடைய பாட்டியின் குரல்கேட்டது.
‘எடி பிள்ளை, என்ரை ஊமை உங்கை வந்தவளே பிள்ளை? அவன் இன்னுஞ் சாப்பிடவரேல்லே!’ என்று கேட்டுக்கொண்டே கிழவி வந்தாள்.
‘ஓமெணை பேத்தி, இஞ்சைதானெணை பொடியன் இருக்கு. இன்டைக்கு எங்களெட்டைச் சாப்பிடுகு தெணை’ என்று வறோணிக்கா பதில் சொல்லவே கிழவி திண்ணையில் இருந்து மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கினாள்.
அலஸ் சற்றுப் பயந்த நிலையில் அடுக்களை மட்டை வரிச்சுக்கூடாக வெளியே பாத்துவிட்டு, சொர்ணத்தின் முகத்தையும் ஒரு தடவை பார்த்துக்கொண்டான். அதைக் கவனித்துவிட்ட வறோணிக்கா, ‘அதுவும் பாவக்கிழவி! பேரன் சாப்பிடாட்டி அதுக்கும் துடிக்காதே! அதுதான் தேடி வந்திட்டுது! நீ ஆறுதலாய்த் தின் தம்பி’ என்று கூறிக்கொண்டே மேலும் ஒரு அகப்பைச் சோற்றை அலசுக்கு வைத்தாள்! அலஸ் அதைக் கையால் தடுத்துப் பார்த்தான். அதற்கிடையில் சோற்றை வைத்து விட்டு, கருவாட்டுப் பொரியல் ஒன்றையும் அதற்குமேல் வைத்து விட்டாள் வறோணிக்கா. இதைப் பார்த்துவிட்டு சொர்ணம் ‘கிளிக்’ கென்று சிரித்தாள். அந்தச் சிரிப்போடு அவள் கன்னங்களும் சிவந்து வந்தன.
வெளியே செருமல் சத்தம் கேட்டது.
இந்தச் செருமல் சொர்ணத்தை எச்சரிப்பதுபோல் இருந்தது. ‘அப்பு வாறார். கெதியாத் திண்டிட்டு, அவரைச் சாப்பிடக் கேள் மகள். நாங்க கேட்டா அது திங்காது’ என்று வறோணிக்கா சொன்னாள். ‘ஆரிதிலை இருக்கிறது? எடி நீயே!’ என்று கேட்டபடி வந்த சந்தியாக்கிழவன், கிழவிக்குப் பக்கமாக உட்கார்ந்து கையிலிருந்த மால் தடியை அப்பால் வைத்தான்.
‘ஓமோ மெடாப்பா, என்ரை ஊமை சாப்பிட வரேல்லை. அதுதான் பார்க்க வந்தன்’ என்று கிழவி பதில் சொன்னாள்.
‘எடி பிள்ளை, இஞ்சை இவள் பாவி பேரனைத் தேடி வந்திருக்கிறாள். ஊமை இஞ்சாலை வந்தவனே யெடி?” என்று சந்தியாக்கிழவன் அடுக்களைப் பக்கம் தலையைச் சாய்த்துக்கொண்டே கேட்டான்.
‘பொடியன் இஞ்சை சாப்பிட்டுக் கொண்டெல்லேணை இருக்கு’ என்று தகப்பனுக்குப் பதில் கூறிவிட்டு, அப்புவின்ரை சோத்தையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டுபோய்த் திண்ணையில் வைக்கும்படி வறோணிக்கா சைகைமூலம் சொர்ணத்திற்குக் கூறினாள்.
சொர்ணம் ஒரு கோப்பைச் சோற்றையும் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துவந்து பேரனுக்கு முன்னால் வைத்தாள். அப்போதுதான் சொர்ணம் நொண்டிக் கொண்டு வருவதைக் கண்டுவிட்ட சந்தியாக்கிழவன் ‘உதென்ன மகள் கால்லை’ என்று அங்கலாய்த்தான்.
‘அது ஒண்டுமில்லை அப்பா. சுடுகஞ்சி கொஞ்சம் தெறிச்சுப் போட்டுது’ என்று சொர்ணம் சாதாரணமாகவே பதில் சொன்னாள்.
‘உன்ரை ஏண்டாப்புக்கு இப்படித்தான் வருமெண்டுநான் நினைச்சனான்’ என்று சந்தியாக்கிழவன் மிகவும் மிருதுவாகப் பேத்தியைக் கண்டித்துக்கொண்டான்.
– தொடரும்…
– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.