ஒரு வெகுஜன இதழ் நடத்தும் சிறுகதை இலக்கியப் போட்டியில் கலந்து கொள்ள கதைக்கான கரு தேடிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் இரவு நிசப்தமான வேளையில், ‘ஐயோ மகனே!’-என்று ஒரு பெண்ணின் குரல் தீனஸ்வரமாக கேட்டது. சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த அச் சம்பவம் என்னை நிரடியது. பின்பு அதையே கதையாக திரிப்பதுயென முடிவு செய்தேன்.
பெரிய கவுண்டர் வீட்டு காலி மனையில்தான் அந்தக் குடிசை இருக்கிறது. கவுண்டரின் வீட்டை கட்டி முடிக்க வந்தவர்கள்தான் பவானியும்,ஈசுவரியும். பின் அங்கேயே தங்கிவிட்டார்கள். பவானிக்கு ஓய்வின்றி வேலை நடக்கிறது.கொத்தனார் வேலையானாலும் வருமானத்திற்கு குறைவில்லை.தனது ஒரே மகன் நந்தாவை கவனிக்க ஆள் இல்லாததால் ஈசுவரி வேலைக்கு செல்வதில்லை. பகலெல்லாம் வறுத்துவிடும் வெயிலில் வேலை பார்க்கும் பவானிக்கு இரவில் சிறிது தீர்த்தம் போட்டால்தான் நன்றாக தூக்கம் வரும். இதற்காக தனித்து குடித்தவன் பின் கூட்டாளிகளுடன் சேர்ந்து குடிக்கலானான். இதனால் அவன் வரும்படி பாதிக்கும்மேல் பாழாய் போனது. இதனால் குடும்பத்தில் குழப்பமும்,சலசலப்பும், சில நேரங்களில் குடுமிச் சண்டையும் நடந்தது.அதற்குப் பின் சற்று அதிகமாகவே குடிக்கலானான்.
தெருவில் குழந்தைகளுடன் குமரச்சம் போட்டுக் கொண்டிருந்த நந்தா,அப்பாவின் ஞாபகம் வந்ததும் வீட்டிற்கு வந்தான். கண்ணாடி டம்பளரில் பிராந்தியை நிரப்பிக் கொண்டிருந்தான் பவானி. அருகில் கண்மார்கு ஊறுகாய் இருந்தது. நந்தா, ஈசுவரியின் கையை பிடித்து இழுத்து தனக்கும் ரஸ்னா வேண்டும் என்று அழுதான். ‘அப்பாவுக்கு மட்டும் ரஸ்னா.எனக்கு இல்லையா?’-என்று கேட்டான்.ஈசுவரி கோபத்தில் அவனை அடித்தாள்.பகலெல்லாம் கொளுத்தும் வெயில்.இரவிலும் குமைகிறது. குழந்தைக்கு தாகம் நாக்கை வறட்டுகிறது.நந்தா, ரஸ்னா கேட்டு அழுவதும் ஈசுவரி எரிச்சலில் போட்டு அடிப்பதும் நித்தம் நடக்கும் செயலாகிப் போனது. பின்பு, தானும் வேலைக்கு செல்வது என்று முடிவெடுத்து நந்தாவை கவுண்டரின் வயதான அம்மாவிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு ஊர்கோடியில் இருக்கும் சாமிக் கண்ணுவின் வீடு தளம் போடும் பணியில் பவானியுடன் சித்தாளாக சென்றாள். அன்றுதான் அந்த சோகம் நடந்தது. நந்தாவுக்கு பகலில் ரஸ்னா வாங்கிக் கொடுக்க ஆளில்லை. ஆனாலும், அவனாகவே மணிநாடார் கடைக்கு ஓடினான்.’காசு கொடுக்கலையா கொம்மா’-வென சொல்லி நந்தாவின் தலையில் ஒரு செல்லக் கொட்டு வைத்து அனுப்பிவிட்டார் நாடார். இங்கும் அங்குமாக ஓடிப் பார்த்த போது அவனுக்கு பளிச்சென ஞாபகம் வந்தது. கழிவறைக்கு ஓடிச் சென்று பாட்டில் நிறைய இருந்த ஆசிட்டை பார்த்த போது அவனுக்கு ரஸ்னாதான் நினைவுக்கு வந்தது. அதுவும் அப்பா வாங்கிக் குடிக்கும் பியரைப் போல் இருப்பதால் பாட்டிலின் மூடியை திறந்து வாயில் ஊற்றிவிட்டான். கொஞ்சம் வயிற்றுக்குள்ளும் சென்றது.கொஞ்சம் முகத்தில் சிந்தியது.பாட்டிலை கீழே போட்டதால் கால் பொசுங்கிப் போனது.அழக்கூட முடியாமல் நந்தா கழிவறையை விட்டு வெளியே வந்து விழுந்து கிடந்தான். நீண்ட நேரத்திற்குப்பின் கவுண்டரின் அம்மா பார்த்து அலறினாள்.பவானியும்,ஈசுவரியும் ஓடி வந்து நெஞ்சில் அடித்துக் கொண்டார்கள். பின்பு, அரசு மருத்துவமனையில் கோமாவில் இருந்த நந்தா இறந்தே போனான்.அதற்குப் பின்பு அடிக்கடி ஈசுவரியின் அழுகுரல் தீனமாக கேட்டுக் கொண்டே இருக்கும்.பவானியும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போனான்.
வெள்ளைத் தாளில் கதையை எழுதி முடித்து,ஒட்டு,பூச்சு,நாகாசு வேலைகளெல்லாம் முடித்துக் கொண்டு தபால் உறையில் போட்டு முகவரியை எழுதினேன்.
ஒரு வழியாக கதை சிருஷ்டிப்பு முடிந்து நிமிர்ந்த போது என் எழுத்தாள நண்பன் மதுரை மணாளன் அங்கு வந்து சேர்ந்தான். தன்னிடம் மூன்று நூறு ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும் ஒயின் ஷாப்புக்கு சென்று நன்றாக குடிக்கலாம் எனவும் வேண்டினான். நான் எனது சட்டையை போட்டுக் கொண்டு மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டேன்.என் மகன் ஜீவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
நகர் புறத்திலிருந்து சற்று வெளியே மனிதச் சந்தடி குறைவான இடத்தில்தான் மதுபானக் கடை உள்ளது. மதிகெட்டான் சாலை என்று பொருத்தமாகத்தான் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.நானும் இலக்கிய நண்பனும் சிறிது சிறிதாக போதையேற்றிக் கொண்டு இலக்கிய உரையாடலில் இறங்கினோம். ந.பிச்சமூர்த்தி முதல் தேவிபாரதி வரை எங்கள் விவாதம் இருந்தது. மாலைச் சூரியன் தன் மஞ்சள்- சிகப்பு நிற தீற்றல்களை கீழ் வானத்தில் வரைந்திருந்தான்.இருள் கவிழ்ந்துவிட்டிருந்தது. நண்பனுக்கு முழு நேர இலக்கியப் பணி. வீட்டில் வறுமைதான் வாழ்கிறது.மனைவியின் சொற்ப வருமானமும்,வணிக இதழ்கள் அனுப்பும் சன்மானமும்தான் அவன் மானத்தைக் காக்கிறது.
இங்கு வருபவர்கள் திரும்பிச் செல்லும் போது திகைப்பூண்டை மிதித்துவிட்டவர்கள் போல் நிதானமின்றி செல்கிறார்கள்.
ஒரு வழியாக வீட்டிற்கு புறப்பட்ட போது பாதை இரண்டாக தெரிந்தது. இருந்த சில்லறையில் கை நிறைய பக்கோடா வாங்கிக் கொண்டேன்.வீடடையும் முன் பக்கோடா தீர்ந்து போய்விட்டிருந்தது.சுய நினைவுகளில் வாங்கிச் செல்லும் போதெல்லாம் ஒரு பிட்டு கூட வாயில் கரையாது மகன் ஜீவனுக்கு தருவேன்.புத்தி பிறழ்ந்திருக்கிறது. மனைவியின் கோபாவேசப் பார்வையை தவிர்த்துவிட்டு படுக்கைக்கு சென்றேன். அம்மா முற்றத்தில் அமர்ந்து முனங்கிக் கொண்டிருந்தாள்.எப்படி தூங்கிப் போனேன்.தூங்கவில்லை தூக்க மயக்கம். ஆனால், ஒரு கொடுங் கனவு வந்தது.
அந்த பிரதான சாலையில் ஒரு ஈக்காக்கை கூட இல்லை. நியான் விளக்கு தன் ஒளியை பரவலாக பாய்ச்சிக் கொண்டிருந்தது. என்னை நோக்கி கோமதி பாட்டி தலை தெறிக்க ஓடி வருகிறாள். அவள் முகம் அலங்கோலமாக இருந்தது. ஏதோ விபரீதம் நடந்துவிட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
‘டேய!, உன் மகன் ஜீவன் ஆசிட்ட குடிச்சிட்டான்டா. சங்கீதா மருத்துவ மனைக்கு உங்க அம்மாவும் பொண்டாட்டியும் தூக்கிக்கிட்டு போயிருக்காங்க. தல விழுந்திருச்சுடா பிள்ளைக்கு!’-என்றாள்.
பதட்டமும்,ஆவேசமும் கூட தலை தெறிக்க ஓடுகிறேன். அந்த பிரதான சாலையில் ஓடி,ஓடி பின்பு நின்றேன். சங்கீதா மருத்துவ மனை நம்மூரில் இல்லவே இல்லையே.ஏமாற்றம். சட்டென்று விழித்துப் பார்த்த போது உடம்பு வியர்த்திருந்தது.மணி இரவு இரண்டு என்றது.அய்யோ,கொடுங் கனவா?எழுந்து பார்த்தேன். என் மகன் தாறுமாறாக படுத்துக் கிடந்தான்.
விடிந்தது.விடுமுறை நாள் என்பதால் நிதானமாக யோசித்து இந்த எங்கள் பூர்வீக அரண்மனை வீட்டில் எங்கெல்லாம் மீதியுள்ள மதுபாட்டில்களை ஒழித்து வைத்திருக்கிறேன் என்று தேடித் தேடி சேகரித்த போது ஒரு கோணி நிறைய பாட்டில்கள் கிடைத்தன.முதல் முறையாக இதற்காக மனது வெட்கப்பட்டது. புதிய சேர்மானமாக நானே தயாரித்து ஒரு குளிர்பான புட்டியில் கலந்து வைத்திருந்த ‘காக்டெய்ல்’எனப்படும் உருப்படி மட்டும் கிடைக்கவில்லை. நீண்ட தேடலுக்குப் பின் ஒரு மனதாக கோணிப்பையை சுமந்து கொண்டு குப்பையில் வீசிவிட்டு வந்தேன். ஆம்,வரும் வழியில்தான் அந்த காட்சியை கண்டேன். அது நான் எழுதிய கதையின் திருப்புமுனை அல்லது உச்சக் காட்சி.
பெரிய கவுண்டர் வீடு இப்போது காலிமனை அல்ல.நவீன மோஸ்தரில் கட்டி முடிக்கப்பட்ட பங்களா. ஆனால், கவுண்டரின் நல்ல மனது ஓலைக் குடிசை கலைக்கப்படாமல் இருக்கிறது. அந்த சாலையில் தனது வீட்டுச் சாமான்கள் ரோட்டில் கிடக்க அருகில் ஈசுவரி நிதானமின்றி இருந்தாள். பவானியோ தோல்பாவை பொம்மை போல் தலை கவிழ்ந்து ஆடிக் கொண்டிருக்கிறான். ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று என்ன நடந்தது என்று விசாரித்து தெரிந்து கொண்டேன். ஈசுவரிக்கு சற்று ஓவராகிவிட்டது.தன்வீடு எது என்று தெரியாமல் கவுண்டர் வீட்டுக்குள் புகுந்து ‘சலம்பல்’- செய்திருக்கிறாள்.அது கணவனிடமிருந்து வந்த தொற்று. பாவம் என்று பார்த்துவந்த கவுண்டச்சிதான் குடிசையில் இருந்த சாமான் சட்டுக்களை தூக்கி வெளியே போட்டு விட்டாள்.
கட்டத் தொட்டியிலிருந்து வந்த இரண்டு வேலையாட்கள் குடிசையை பிரித்துக் கொண்டிருந்தனர்.
– 2023 ஜூலை ‘தமிழ் நெஞ்சம்’ மின்னிதழில் பிரசுரமானது.