போதும் உங்க உபகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 90 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சென்னை நகரில், வீட்டு வசதி வாரியத்தின் மார்க்கெட் பகுதியான ‘ப’ வடிவில் அமைந்த அந்தக் கட்டிடத்தின் தாழ்வாரங்களில் பலர் படுத்துக் கிடந்தனர். இரவு மணி பன்னிரண்டு இருக்கும். ‘பல்லவ’யுகம் முடிந்து. வஸ்தாதுகள் யுகம்’ துவங்கிய சமயம். திடீர்க் கோடை மழை விட்டு விட்டு விளாசிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கடையின் முன்னாலும், பத்துப் பன்னிரண்டு உடல்கள், குளிராலும், மழைத் தூவானத்தாலும் வேட்டியை உறிந்து மூடிக்கொண்டும், புடவைகளை இழுத்துத் தலைகளைப் போர்த்திக் கொண்டும் கிடந்தன. இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது போல் தோன்றினாலும், நிலைமை அப்படி அல்ல: இன்னின்னார் இந்திந்த இடத்தில்தான் ப்டுக்க வேண்டும் என்று ஒரு மரபு நிலைநாட்டப் பட்டிருந்தது. வரையப்படாத அந்த எல்லைக்கோட்டை மீறினால், நிலைமை வன்முறையாகும். அப்படிப் பல அடிதடிகளும் ஏற்பட்டிருக்கின்றன. வெளி ஆசாமி ஒருவன் அங்கே புக முடியாது. அப்படிப் புகுந்தால், வெளித் தேனீயை, ஒரு கூட்டின் தேனி.க்கள் மொத்தமாகத் தாக்குவது போல, புகும் ஆசாமியை பூந்து விளையாடி விடுவார்கள்.

இத்தகைய சாம்ராஜ்யத்தின் விசாலமான கடையின் முன்னால், நான்கு ஆசாமிகள் அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். நால்வரில் ஒருவ்ன், எவரும் எளிதாக அடையாளம் காணக்கூடிய, கிருதா மீசை வாத்தியார்’. இருவர், சராசரியைவிட அதிக வலுவுள்ளவர்கள். ஒருவன் நோஞ்சான் பையன். அவர்கள் உட்கார்ந்திருந்த தோரணையையும், அவர்கள் ராஜ்யத்தின் விசாலத்தையும் பார்த்தாலே, ஆசாமிகள் ‘கில் லாடிகள்’ என்பதைப் புரிந்து கொள்ளலாம். படுக்கிறவர்களிடையே ‘மாமூல்’ வாங்குபவர்கள் போல் தோன்றியது.

மழை விட்டிருக்கிறதா என்பதை அறிவதற்காக, கையை வெளியே நீட்டிய நோஞ்சான், “ஏதோ ரெண்டு சாவுக் கிராக்கிங்க தெரியுது. ஒண்ணு கைல ஒரு பாய் கீது. இங்க, இடம் பிடிக்க வர்றாப்போல தோணுது” என்றான். “கஸ்மாலங்க, இடம் பிடிக்கத்தான் வர்துங்க.” என்றான் டெப்டி-வாத்தியார். “வர்ட்டும், வர்ட்டும், சாத்திப் பூடலாம்” என்றான் அஸிஸ்டெண்ட் வாத்தியார்.

ஆனால் வாத்தியார் ஒன்றும் சொல்லவில்லை. கையில் இருந்த மலிவான சிகரெட் துண்டை, நோஞ்சானிடம் நீட்டிவிட்டு, கருமையான மையிருட்டில் வந்து கொண்டிருந்த அந்த உருவங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஐய…இந்தண்ட வா, அந்தண்ட.சேறு கீது,” என்று ஒர் உருவம் சொல்லிக் கொண்டே, இரண்டு கைகளையும் பூமியில் ஊன்றித் தவழ்ந்து வந்தது.

வந்தலர்களில் ஒருத்தி கிழவி. அவள் முதுகு, இடுப்பில் இருந்து, பூமிக்கு இணையான நேர்க்கோடு போல இருந்ததால், அவளை கூன்’ என்று சொல்லவும் முடியாது. சொல்லாமலும் இருக்க முடியாது. வயது, அறுபதைத் தாண்டியிருக்கும். சரியான கண் தெரியாதவள் போல் தோன்றியது. இன்னொருத்திக்குப் பதினெட்டுதான் இருக்கும். உருண்டையான படர்ந்த முகம். நாமம் போட்டிருப்பது போல், ஒரு முடி நெற்றியிலிருந்து மூக்குத்தண்டு வரை நளினமாகப் படர்ந்திருந்தது. முழங்காலுக்கு மேலே இருந்த அந்த வனப்பிற்குத் திருஷ்டி பரிகாரமாக இரண்டு கால்களும், வெள்ளரிப் பிஞ்சு மாதிரி கூம்பி, செயலிழந்து கிடந்தன. இரண்டு முட்டுக்களிலும், தவழ்வதற்காக, தோல் மாதிரி ஏதோ ஒன்று கட்டப்பட்டிருந்தது.

வந்தவர்கள் இருவரும், அவர்கள் அழைப்பிற்கு ஏங்கி நிற்பது போல, தாழ்வாரத்தின் அடியில், மண்ணில் நின்றார்கள். தாழ்வார ஆசாமிகள் வாத்தியார்’ பேசுவார் என்று நினைத்து, அவன் முகத்தைப் பார்த்தார்கள். அவர் பேசாததால், ஒருவன் தன்னை டெம்பரரி வாத்தியாராக, தானாகவே அங்கீகாரம் செய்து கொண்டு “என்னாலே…ஒண்டுறதுக்கு வேற இடம் கிடைக்கல்ல?” என்றான் அதட்டலாக.

அவனைக் கண்களால் அடக்கிக் கொண்டே, இப்போது வாத்தியார் பேசினான்.

“ஏய் கிழவி..இங்க, எங்களுக்கே இடமில்ல. தம்மாத்துண்டு இடத்துல தரிகினதத்தோம் பூடுறோம் நீங்க வேறயா? இத சத்திரமுன்னு நினைச்சிக்கினியா? யூடு குய்க்கா பூடு “

“அப்படி சொல்லப்படாது நயினா. நாங்க திக்கத்தவங்க நீ தெய்வம் போல. அண்டிட்டேர்ம்…புண்ய முன்டு.”

“அந்தக் கதையே வாணாம். பொம்மனாட்டிங்களா இருக்கேன்னு பார்க்கிறேன். இல்லேன்னா, இந்நேரம். முதுகு பிஞ்சிருக்கும் மழைவிட்டதும் பூடணும்…நான் சொல்றது புரியதா?”

“நீ சொல்றது புரியது நயினா. ஆனா எங்க பூறதுன்னு தான் புளியல?”

“எங்கே காட்டியும் போ. ஆனால், இந்தண்டை ஜகா பூடலா முன்னு மட்டும் நெனக்காதே.”

“இந்தக் காலில்லாத நொண்டிப் பொண்ணுக்கும் ஒரு இடம் குடுப்பா ஒன்கு புண்யம் உண்டு!”

வாத்தியார், கிழவிக்குப் பதில் சொல்லாமல், அந்தப் பெண்ணையே உன்னிப்பாகக் கவனித்தான். உடனே டெப்டி, அஸிஸ்டெண்ட் வாத்தியார்களும், அந்த மூவருக்கும் சேவை செய்வதற்காகவே பிறவியெடுத்த நோஞ்சான் பையனும், அந்தப் பெண்னைப் பார்த்தார்கள். அவள், இன்னும் மழையில் நனைந்து கொண்டிருந்தாள். முகம், வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது ஆயா இடம் பிடித்து விடுவாள் என்ற தன்னம்பிக்கையா அல்லது இடம் பார்த்துப் பெயராத கால்கள் எந்த இடத்தில் கிடந்தாலும் சரிதான் என்கிற விரக்தியா, எது அவள் முகத்தில் பிரதிபலித்தது என்பதைச் சொல்ல முடியாது. கிழவி, கெட்டிக்காரி. ‘வாத்தியார்’ மெளனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொண்டு, படியேறி, கையில் இருந்த ஒலைப்பாயை ஒரு ஒரமாகப் போட்டுவிட்டு, “காத்தாயி…வா மே..” என்று குரல் கொடுத்தாள்.

பிறரிடம் அடிபட்டதைத் தவிர, வேறு எதையுமே அறியாத, நோஞ்சான், கிழவியிடம் சண்டைக்குப் போனான்.

நீ படா கில்லாடிதான் கிழவி. வாத்தியார் சொல்லிக்கினே இருக்கார், நீ வந்துக்கினே இருக்கே படா தில்லுக்காரிதான்.”

வாத்தியார், நோஞ்சானின் பிடரியில் ஒன்று கொடுத்தான். பிறகு, கிழவியைப் பார்த்து “எங்கிருந்து மே வர்ற?” என்றான்.

“அத ஏன் கேக்குற நயினா? நான் பூமில பொறந்திருக்கக் கூடாது. பொட்டுன்னாவது பூடணும். இவளோட ஆத்தா… எனக்குன்னு பொறந்து தொலச்தில் பிடிச்ச சனி, இன்னும் வுடல. எவனையோ இஸ்துகின்னு போயி, அப்புறமா என்கிட்ட ‘வாயும், வயிறுமா வந்தா. நானும், பொறுத்துக்கினேன். ஆனால், கால் விளங்காத இவளை, கண் விளங்காத என்கிட்ட பூட்டுட்டுப் பூட்டா…”

“செத்துப் பூட்டாளா..”

“எவனோ ஒரு கஸ்மாலத்த கணக்குப் பண்ணிக்கினு ரயில்ல போயிட்டத பார்த்தாங்களாம் போனவா, போனவாதான். பதினைஞ்சு வருஷமாச்சு. சிவப்பா… குண்டா. அயகா இருப்பா… இப்போ, என்ன ஆனாளோ, எவன் கிட்ட மாட்டிக்கினு முழிக்கிறாளோ…மாரியாத்தாவுக்குத்தான் வெயிச்சம்…”

“அப்போ…நீ தான் இத வளத்துக்குனு வர்றியா?”

“அதை ஏன் கேக்குற? கூலிக்குப் போயி மாரடிச்சே என்னால முடியல. கட்சில, இவளோட காலக் காட்டி பிச்ச எடுத்தேன். இவளுக்கு விபரம் வந்ததும், பொழப்புல மண்ணைப் பூட்டுட்டா. கயிதக்கி கால காட்டுறது பிடிக்கல காட்டியும். ஒரு நாள் என்கிட்ட ‘ஆயா.ஆயா… என் கால காட்டினா, ஒன்கு அர ருவாதான் கிடக்கிது. அதனால ஒரு விஷங்குடுத்து என்னக் கொன்னுடு: அப்போ என் பிணத்தக் காட்டினா பத்து ருவாயாவது தேறும். நீயும் ஒரு தொழில் செய்யலாம். என் காலுதான் உடம்பு மாதிரி ஆகப் போறதில்லை. உடம்பாவது காலுபோல ஆவட்டும். உனக்கும் பாரமில்ல’ன்னு சொன்னா. நான் ஒவுன்னு அயுதேன். இதப் பாத்துக்கினு நின்ன புண்ணியவான் ஒருவரு, எனிக்கு, ஆலந்துர்ல அவரோட பங்களாவுக்குள்ள் ஒரு குடிச பூட்டு தந்தாரு. இந்தப் பொண்ண அங்க வச்சிக்கினு, அவங்க வீட்டுலேய பாத்துக்கினு இருந்தேன்.”

“என்ன ஆச்சு?”

“இவ கெட்ட கேட்டுக்கு, திடீர்னு பெரியவளா ஆயிட்டா. எசமானுக்கு அறியாத வயசுல ஒரு பிள்ளை கீறான். அவன் முறைச்சா இவ என்ன பண்ணுவாள்? காலா இருக்கு, ஒடி ஒளியறதுக்கு? ஒரு நாள் எசமானி, ‘என் பிள்ளையை உன் பேத்தி முறச்சிருப்பா போலிருக்கு. அதனாலதான் அவனும் மொறக்கிறான். வயகப் பையன் கெட்டுப்பூடுவான். ஜல்தியா இடத்தக் காலி பண்ணிட்டு மறு ஜோலி பாரு’ ன்னு சொல்லிட்டா மகராசி.”

“அப்படியும் பொறுத்துக்கினுதான் இருந்தேன். ஆனால் இந்தக் கஸ்மாலம் இன்னா கேட்டா தெரியுமா? என் ஆத்தாதான் கெட்டுப் போனாள். இவளும் போகட்டுமேன்னு நீ அசால்ட்டா இருக்கியா’ன்னா. பொறுக்கலை. உடனே கூட்டிக்கிட்டு வந்துட்டேன். பெத்த பிள்ளைக்கிட்ட சொல்றது மாதிரி சொல்லிட்டேன் நயினா.”

“நானும் மன்ஷன் தான் ஆயா, உன் பேஜார கேட்டது, ஏதோ டிராஜிடி கஸ்மால சினிமாவப் பார்த்தது போல கீது. அதனால, இன்னிக்கு நைட்ல மட்டும் தங்கிக்கோ. ஆனால் நாளக்கி காலங் காத்தால சொல்லாம கொள்ளாம பூடனும், ஏன்னா இங்க செளரியப்படாது. டேய் பசங்களா, ஏதாவது கலாட்டா பண்ணுனிங்கன்னா, அப்புறமா, உங்க ஆத்தாளுங்களுக்கு புள்ளிங்களா இருக்க மாட்டிங்க. ஆமா, சொல்லிட்டேன்.”

‘வாத்தியார்’ போய்விட்டான். மத்தியில் கிழிந்து போயிருந்த ஒலைப் பாயை, கிழவி, மடிப்பு’க் கலையாமல் விரிப்பதற்கு முயற்சி செய்தாள். ‘உள்ளே வா காத்தாயி” என்று பேத்திக்கு ஒரு குரலையும், “ஏன் நய்னா அந்த பிள்ள பூட்டுது? இந்தண்ட தங்கறதில்ல?” என்று மூவருக்கும் ஒரு குரலையும் கொடுத்தாள்.

“எங்க வாத்தியார கேக்குறியா? அவருக்கென்ன, எத்தனையோ பணக்காரங்க என் கடை முன்னாடி படுத்துக்கோன்னு சொல்லி பணம் குடுக்கிறாங்க வாத்தியார் வைத்தின்னா’ சிரிக்கிற குயந்தயும் அயும். இந்த ஏரியாவுல, அவரோட போட்டி போட ஆளு இல்ல.”

காத்தாயி, சிரமத்துடன், கைகளைப் படியில் ஊன்றிக் கொண்டு, அழகான குழந்தை மாதிரி தவழ்ந்து வந்தாள் கிழவியின் பக்கமாகப் படுத்துக் கொண்டாள்.

காத்தாயிக்குத் தூக்கம் வருகிற சமயம்- மூவரில் ஒருவனான டெப்டி-வாத்தியார், ஒரு துண்டை மடித்துக் கொண்டு வந்து, ‘இதுல தல வச்சுக்கம்மே.” என்று சொல்லி, காத்தாயியின் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, மடித்த துண்டை வைத்தான், கருணையினால், அவன் அப்படிச் செய்வது போலத் தெரிந்தது. காத்தாயியும் ஒன்றும் பேசவில்லை.

இது, இன்னொருவனுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். “இந்தாம்மே. இத போர்த்திக்கோ” என்று சொல்லிக் கொண்டே, ஒரு கிழிந்து போன போர்வையை எடுத்து அவள் மேல் போர்த்தினான். காத்தாயி, போர்வையின் ஒரு பகுதியை ஆயாவுக்கு மூடுவதற்குப் போராடிக் கொண்டிருந்த போது, தலையணை கொடுத்த ஆசாமி, நெருங்கி வந்து நல்லா மூடும்மே என்று குரல் கொடுத்துக் கொண்டே, அந்தப் போர்வையை, அவள் மேல் சமமாக இழுத்துப் போடுவது போல் பாசாங்கு செய்தான். அவன் கைகளில் ஒன்று அவள் உடம்பிற்கும் போர்வைக்கும் இடையே உரசியது.

காத்தாயி, துள்ளிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். “கர்மம், அந்த பணக்கார புள்ளதான் கவல இல்லாம திங்ற ஜோர்ல கஸ்மாலமா நடந்துகின்னான்னு நெனச்சா. இங்க கூடவா? ஆயா, எழுந்துடு. இந்த இடத்துல ஒரு செகண்ட் கூட இருக்கப்படாது.”

தூங்கிக் கொண்டிருந்த கிழவி எழுந்தாள். நிலைமையை ஊகித்தவள் போல், “ஏன்டாப்பா, அனாதையா. பட்டமரம் மாதுரி நிக்றோம். வாலாட்றதுக்கு நாங்கதானா வாச்சோம்? வாத்தியாரு பிள்ளையாண்டான் இரக்கமுள்ளவனாத் தோணுது இருந்தும் எதுக்காவ இங்க தங்க செளகரியப் படாதுன்னு சொன்னான்னு நான் குழம்புதுைக்கு அர்த்தம் இப்போதான் புரியது.நீங்க சோதாப் பசங்கங்கறது…”

“ஏம்மே இப்ப இன்னா தான் நடந்து போச்சி, லபோ லபோன்னு கத்துறே?” .

காத்தாயியால் காத்திருக்க முடியவில்லை

“வா ஆயா, ஜல்தியா பூடுவோம். நடு ரோட்ல படுப்போம்: லாரி மோதியாவது சாவோம். கிளம்பு ஆயா. நீ வர்றியா. நான் பூட்டுமா?”

கிழவி, ஒலைப்பாயைச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். காத்தாயி, தவழ்வதற்காக உள்ளங் கைகளை ஊன்றப் போனாள். அவள் போவதைப் பொறுக்க முடியாத நோஞ்சான், அவள் கையைப் பிடித்து. இன்னொருவன், “இந்த இருட்ல எங்க கண்ணு புறப்படுற” என்றான்.

ஆயா, கூப்பாடு போட்டுக் கூட்டத்தை எழுப்பவேண்டும் என்று நினைத்தாள். ஆனால், தொண்டைக்கு மேல் வார்த்தை வரவில்லை. இந்தச் சமயத்தில் தூரத்தில் சீட்டிச் சத்தம் கேட்டது. வாத்தியார்’ வருவதைப் புரிந்து கொண்ட சிஷயர்கள் சப்த நாடியும் ஒடுங்கியவர்களாய் ஆளுக்கொரு மூலையில் பதுங்கினார்கள்.

‘வாத்தியார்’ வந்தார்: பேட்டரி அடித்துப் பார்த்தார். பிறகு “இன்னா ஆயா, நீ பாயச் சுருட்டிக்கினு நிக்ற? பாப்பா அழுவது? சாமி சத்யமா நடந்தத. நடந்தபடியே சொல்லிடு. இந்த சோமாறிங்க கலாட்டிா பண்ணுாைங்களா? சொல்லு ஆயா!”

‘இப்படித்தான் ‘ஆயா சொல்லப் போகிறாள் என்பதை எதிர்பார்த்தவன் போல், வாத்தியார் இடுப்பில் இருந்த பெல்டைக் கழட்டிக் கொண்டே, சிஷ்யர்களைப் பார்த்தான். அழுது கொண்டிருந்த காத்தாயி, ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் கிழவி முந்திக் கொண்டாள்.

“இந்தப் புள்ளைங்க, ஒண்னும் பண்ணல நய்னா! சும்மா இல்லாத பொல்லாத சொல்லப்படாது. வாயி அயிவிடும். பங்களா குடிசையில் தூங்குன காத்தாயி, இந்தக் கல்லு மண்ணு இடத்துல தூங்க முடியாம அழுவுறா. அதோ, அவளுக்கு ஒரு புள்ள தலைக்கு ஒசரமாத் துணிகொடுத்தான். ஒரு புள்ள போத்திக்கத் தன் துப்பட்டியைக் குடுத்திருக்கு. இது எல்லோருக்கும் பாரமா இருக்கோமேன்னு நெனச்சி அயுவது. இந்தப் புள்ளைங்க அவள தேத்திக்கினு இருக்காங்க…அவ்வளவு தான். நீ வந்துட்டே!”

வாத்தியார், தன் சிஷ்யர்களை ஒரு மாதிரி பார்த்தான். பிறகு, “இன்னிக்கு எப்படியோ சமாளி ஆயா. இன்னும் ரெண்டு நாள்ல, எந்தப் பணக்காரன் அண்டயாவது போயி ஒன்கு. பங்களாவுக்குள்ளே குடிசை போட்டுத் தரச் சொல்றேன். வீட்டு வேலையும் பார்த்துக்கலாம். நான் சொன்னா எவனும் தட்ட மாட்டான். நெஞ்சில் இருக்ற மஞ்சாச் சோற எடுத்துடுவேன்னு தெரியும். பாலஸ் ஸ்டோர்காரன், அவன் கடயண்ட படுக்கச் சொல்லி, கட்டில் போட்டிருக்கான். வேணும்னா, நானும் இங்க குந்தட்டுமா?”என்றான்.

“வேணாம் நயினா. இந்தப் புள்ளைங்க, காத்தாயிய கூடப் பொறந்த பொறப்பு மாதிரி கவனிக்குதுங்க. நீ போய் தூங்கு நய்னா.”

வாத்தியார், சிஷ்யர்களைப் பார்த்துக் கொண்டே போனார். சிஷ்யர்களின் முகங்கள், கிழவியிடமும், காத்தாயியிடமும் மன்னிப்பைக் கோரும் பாவனையைக் காட்டின. கிழவி மட்டும், “வாத்தியாரண்ட சொன்னாத் தெரியும் சேதி, செருப்பு பிஞ்சாக் கூட தாங்கிக்கலாம்: பொழப்பே பிஞ்சியிருக்கும். இந்த ஏரியாவுக் குள்ள தல காட்டியிருக்க முடியாது” என்றாள்.

டெப்டி-வாத்தியார், “டேய் நோஞ்சான், ஆத்தாவுக்கும், தங்கச்சிக்கும் டியும், பன்னும் வாங்கிக்கினு வாடா,” என்று சொல்லி, நிஜார்ட் பைக்குள் கையை விட்டு காசை எடுத்துக் கொடுத்தான். ‘தங்கச்சி’ என்ற வார்த்தையில், சகோதர பாசம் தானாக, தேனாக ஒலித்தது. காத்தாயி கண்களைத் துடைத்துக் கொண்டாள். நோஞ்சான், ஒரு ஈயப் போணியுடன் வெளியேறினான்.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *