கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 122 
 
 

(1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கூட்டம் முடிந்து. நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்த போது இருட்டத் தொடங்கியிருந்தது. இந்த நேரத்தில் பட்டணத்தைப் பார்த்து எவ்வளவு காலம்! 

மோட்டபைக் என்றால் மிஞ்சிமிஞ்சிப் பத்து நிமிஷம் – வீட்டுக்குப் போய்விடலாம். அதைக் கூட வெளியே எடுத்து எவ்வளவு நாட்கள்! எதற்கென்று யோசிப்பது – இந்த சைக்கிள் தடியில் நாரிமுறிய உழக்கினாலும் அரை மணித்தியாலத்திற்கு மேலாகத்தான் ஆகும் அதுவும் இந்தத் தெருக்கிடங்குகளில் விழாமல் போகமுடிந்தால் வீட்டில் பயப்படப் போகிறார்கள். 

டைனமோவை அழுத்தி விட்டு ஏறினான். தான் பழங் காலத்து மனிதனாகிவிட்டது போல ஒரு கூச்சம் இப்போதும் எட்டிப் பார்க்கிறது. பெல். பிரேக், விளக்கு இதெல்லாவற்றுடனுந்தானா சைக்கிள் ஓட வேண்டும்? முடக்கில் திரும்புகையில், முந்திப் போகையில் மணியை அடித்தால், பேயனைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். 

மில் சந்தியில் இடப்புறந்திரும்பினால் சுகமாகப் போகலாம். ஆனால் அது ஒரு வழிப்பாதை என்றிருந்தது. இன்னொருவனுக்குப் பயந்துதான் சரியாய் நடப்பேன் என்பது எனக்கு அவமானம் – நேரே போனான். ஒரு வழிப்பாதை, அது இது எல்லாம் யாருக்காக என்பதை எல்லோரும் மறந்து போனார்கள். 

முந்தியென்றால் இந்த நேரத்தில் இந்தத் தெரு எப்படியிருக்கும்- காணிவல் மாதிரி. இப்போது கடைக்காரர்கள் மூடலாமா விடலாமா என்று யோசித்துக் கொண்டுடிருக்கிறார்கள். இது கூடப் பரவாயில்லை. பகலோடு அடங்கிய பட்டணத்துடன் பார்க்கும்போது. ஸெக்கன்ட்ஷோ பார்த்து விட்டுத் தெருவளந்த விடலைக்காலம். அப்புவோடு கடை கடையாய்ப் போய் வந்த சின்ன வயது. இலக்கியக் கூட்டம் என்று அது முடிந்ததும் அதன் பிறகு அதைப் பேசிக் கலைகிற மிகக் கிட்டிய இறந்த காலம் எல்லாம் நினைவில் வந்தன. 

கண்களைக் குருடாக்கும் வெளிச்சமும் பயங்கர அலறலும் அதிலும் பயங்கர வேகமுமாய் ஒரு மினி பஸ் எதிரே வந்து திரும்புகிறது. யாருக்காக – எதற்காக இந்த ஓட்டம்? தெரு – பாதை வழி என்பதே சமூக ஒழுங்கின் ஒரு அடிப்படை உதாரணம் என்று முன்னர் அடிக்கடி படும். இப்போது அது இன்னமும் வலுவாய்ப்படுகிறது. ஒழுங்கு தெருநாகரிகம் இதையெல்லாம் இப்போது யார் கவனிக்கிறார்கள்? எல்லாம் இயல்பான வழித் தடங்கள்தாமா? பாதை சரியாய்த்தானிருக்கிறதா? 

சடாரென்று சைக்கிள் குதித்தெழும்பியது. கைப்பிடி வழுகப் பார்த்தது. பிருஷ்டம் நொந்தது. கிடங்கு எங்கே கிடந்தது? 

இந்த இடத்தில் தெருவிளக்குகள் கூட இல்லை. ஓவென்ற இருள். அதைப் பிளந்து உழக்கி..கொஞ்சம் கெதியாகப் போகலாம். 

முன்னால் இரண்டு சைக்கிள்கள், விலக்க வேணும். மணி அடித்தான். பாதித் தெருவுக்கு மேல் மறித்துக் கொண்டு போகிறார்கள் காதில் விழுந்திருக்குமா? கதை ருசி. கிட்டப் போய் இன்னொரு தரம். எதிரிலிருந்தும் ஏதோ வந்தது. இவர்களில் முட்டிவிடாமலிருக்க பிரேக் வேறு பிடிக்க வேண்டியிருந்தது. மூன்றாந் தரமும் அடித்துவிட்டு, ஆத்திரந் தாங்காமல் கேட்டான். 

“அண்ணை, பெல் அடிச்சாலும் விலத்திறீங்களில்லையே..”

இரண்டு விநாடி மௌனம். இரண்டு பேரும் திரும்பிப் பார்த்த மாதிரி இருந்தது. பிறகு ஒருவன் கேட்டான். 

“பெல் அடிச்சா விலத்த வேணுமெண்டிருக்கா?”

– அமிர்தகங்கை தை 1986

– இன்னொரு வெண்ணிரவுத் தொகுதி-1988

– எழுதப்பட்ட அத்தியாயங்கள், முதற் பதிப்பு: மே 2001, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய், சுதுமலை என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் மொறட்டுவ உயர்தொழில் நுட்பவியல் கழகத்தில் பயின்ற குடிசார் பொறியியலாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளர். ஆங்கில…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *