போக்கிடம் இல்லாத பொழுது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 1,033 
 
 

(1990 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உயர் அதிகாரிகள் பயிற்சி மையம்” என்று இந்தியில் முதலாவதாகவும், ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும் எழுதப்பட்ட அந்த போர்டை, ராமையா கடுப்பாகப் பார்த்தபடியே, அந்த வளாகத்திற்குள் போனார். அங்குமிங்குமாக உள்ள அம்புக்குறிகளை உற்று உற்றுப் பார்த்தும், எதிர்ப்பட்டவர்களை கேட்டுக் கேட்டும், அவர் எப்படியோ அந்த வகுப்பறைக்குள் போய்விட்டார். அவருக்கு முன்னாலயே டை கட்டிய ஒரு மனிதர் நான்கைந்து பேர் சூழ நின்றார்.அவரிடம் எல்லோருமே உரிமையாகவும்,மரியாதையாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். மரியாதைக்குரிய ராமையாவும், அந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தார்.

“மன்னிக்கணும். என் பெயர் ஆர்.ராமையா. சென்னையில் டெப்டி டைரக்டர், சீனியர் ஆபீஸர்ஸ் இன் சர்வீஸ் டிரெயினிங்குக்காக வந்திருக்கேன். நீங்க..”

“ஒ. ஐ. ஸீ. என் பெயர் டபிள்யூ. கன்னா. ஜான்ஸில பெர்சனல் ஆபீஸரா இருக்கேன்.”

“உங்களுக்கு இங்க எல்லோரும் தெரியும் போலத் தெரியுது.”

“எஸ். மிஸ்டர். ராமையா. மூணு வருஷத்துக்கு முன்னால, இதே பயற்சி மையத்தில் அசிஸ்டெண்ட் புரொபஸரா இருந்தேன். இதே மாதிரி இன் சர்வீஸ் பயிற்சிகளுக்கு கோர்ஸ் டைரக்டராகவும் இருந்தேன். அப்புறம் யூ.பி.சி. எழுதி, ஐ.ஏ. ஆண்டு ஏ.எஸ். சர்வீஸ்ல சேர்ந்தேன். நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம பாடம் எடுத்த எனக்கே பாடம் கற்பிக்கிறது மாதிரி அனுப்பிட்டாங்க.”

“பயிற்சி கொடுத்தவருக்கே பயிற்சியா..? நல்லா இருக்கே!”

“இதுக்குப் பேர்தான் கவர்ன்மென்ட் என்கிறது.”

டபிள்யூ. கன்னாவும், ஆர். ராமையாவும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த அறைக்குள் நிறைய பேர் வந்து விட்டார்கள்.

அசல் எட்டாவது வகுப்பு அறை மாதிரிதான். கரும்பலகை, பிரம்பு, மேப், சாக்பீஸ், முப்பது வயக முன்கோபி. ஆனாலும், ஒரு சின்ன வித்தியாசம். மாணவர்கள் பகுதியில், பெஞ்சுகளுக்குப் பதிலாக ரப்பர் மெத்தை நாற்காலிகள். தூங்குவதற்கு வசதியான சன்மைக்கா மேஜைகள்.

இந்த அறைக்குள் ஏற்கெனவே பத்துப் பதினைந்து பேர் இருந்தார்கள். உள்ளே நுழைந்த ராமையாவை, டபிள்யூ. கன்னா கையைப் பிடித்து இழுத்து, ஓர் இடத்தைக் காட்டி,”உட்காரலாம்” என்றார். உட்காரப் போன ராமையாவோ, கடைசி வரிசையில் ஒதுக்குப்புறமாய் இருந்த ஒருவரைப் பார்த்துவிட்டார். அடஅட. கே.என். சீனிவாசனா? அப்பாடா..?

ராமையா, கே.என்.எஸ். பக்கத்தில் உட்கார்ந்தார். துரங்கிக் கொண்டிருந்தவரை உசுப்பினார். இருவரும், ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஏதோ பேசினார்கள்.

இதற்கிடையே முன்கோபி போல் தோன்றிய எதிர்வரிசை ஒற்றை மனிதர், கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்தார். பிறகு, இவர்களுக்கு எழுந்து நின்று பேச வேண்டிய அவசியம் இல்லை என்பதுபோல், மேஜைக்கு அப்பால் உள்ள ஆசிரியர் நாற்காலி யில் உட்கார்ந்தார். அறிமுகத்தை பீடிகையாக்கினார்.

“என் பெயர் சுரேஷ்சிங். இந்த பயிற்சி நிலையத்தில் அசிஸ்டெண்ட் புரொபவர். உங்களுக்கு கோர்ஸ் டைரக்டர். தயவுசெய்து உங்களை அறிமுகம் செய்து கொள்ளலாமா?”

அறிமுகங்கள் அரங்கேறின.

வலது பக்க முன்வரிசையில், அருணாச்சல் பிரதேச நசாரிக், இடது பக்க முன்வரிசையில் நாகாலாந்து வசோல், இரண்டாவது வரிசையில் மராட்டிய மாநில மிஸஸ் ஜோஷி, ஆந்திர கிருஷ்ணாராவ், கன்னட பாட்டில், கேரள குஞ்சுதன் நாயர், மேற்கு வங்காள குப்தா, ‘டில்லியின் செல்வர் எஸ்.பி.வர்மா, மத்திய பிறதேச பார்ஜன், பீஹார் சத்பதி – இப்படி பல்வேறு மாநில அதிகாரிகள்.

இப்போது போதகர் சுரேஷ்சிங் – அதுதான் கோர்ஸ் டைரக்டர், முகத்தை உம்மாக்கி, வாயைக் கோணலாக்கியபடியே புத்திமதி சொன்னார்.

“நீங்க எல்லாம் சீனியர் அதிகாரிகள். வயதிலும் சீனியர்கள். உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் பயிற்சி நிஜமாவே சீரியஸ்ான பயிற்சி. இதை யாரும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாய் நினைக்கக்கூடாது. அதனால்தான் சொல்றேன் வீ ஆர் டெட் சீரியஸ்.”

சுரேஷ்சிங், மேஜையை அடித்தபடியே, தம் பேச்கக்குத் ‘அடிக்குறிப்பு செய்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“இந்த டில்லியில், எங்க தங்கப் போறோமோன்’னு கவலைப்பட வேண்டாம். இங்கேயே ஹாஸ்டல் இருக்குது. ஆளுக்கு ஒரு ரூம். தின வாடகை ஐந்து ரூபாய்தான். எஸ். லேடி. அண்ட் ஜென்டில்மென். ஐந்தே ஐந்துதான். டோண்ட் ஒர்ரி. இப்போ நிர்வாக இயல் என்ன என்பது பற்றி விளக்கப் போகிறேன். நிர்வாகம் என்பது இம்பெர்ஸனல். அப்ஜெக்டிவ். அதே சமயம், பெர்சனல். சப்ஜெக்டிவ்.”

கரேஷ்சிங், பேசிக்கொண்டே போனபோது, மிஸஸ் ஜோஷி சந்தேகம் கேட்டு, டம்பப் பையைத் துாக்கியபடியே எழுந்தாள். சுரேஷ்சிங், ரொம்பவும் சந்தோஷப்பட்டார். “இந்த மேடம் நல்லா கவனிக்கிறாங்க. சந்தேகம்தானே, அறிவின் திறவுகோல். எஸ். ப்ளீஸ் மேடம்.”

“ரூம் வாடகை ரூபாய் அஞ்சுன்னு சொன்னிங்க, பர்னிஷ்ட் ரூம்தானே…? கட்டில் இருக்குதா…? பேன் இருக்குதா…? டாய்லெட்.”

“எல்லாம் இருக்கு. கவலையே வேண்டாம். நிர்வாக இயல் என்பது.”

சுரேஷ்சிங், நிர்வாக இயலை மேற்கொண்டும் ஜவ்வுமிட்டாய் ஆக்கியபோது, பாட்டிலும், நாயரும் ஒருசேர எழுந்தார்கள்.

“எங்களுக்கு ஹாஸ்டல் வேண்டாம். கரோல்பாக்கில சொந்தக்காரங்க இருக்காங்க… ஹாஸ்டல்ல தங்க மாட்டோம். தங்கவே மாட்டோம்.”

சுரேஷ்சிங், கோபப்படப் போனார். இதற்குள் இரண்டு இள வட்டங்கள் வந்தன. எடுத்த எடுப்பிலேயே பேசின.

“சார். ஐ ஆம் மிஸ். முன்னி ஆப் ராஜஸ்தான்.”

“சார் ஐ ஆம் சஞ்சய் தாமஸ். புரம் ஆந்திரா.”

அந்த இருவரும், அறிமுகம் இல்லாதவர்கள் என்பதைக் காட்டும் வகையில், ஆளுக்கு ஒரு வரிசையில் உட்கார்ந்தார்கள்.

மீண்டும் சுரேஷ்சிங்… மீண்டும் நிர்வாக இயல்… “கேன்.என்.எஸ் மீண்டும் ராமையாவின் காதை உரசினார்.

“பாரு. ராமு. இந்தச் சின்னஞ்சிறுசுகள் நம்ம வெவல் பதவிக்கு வந்திருக்கிறதைப் பார்க்க வெட்கமா இருக்குது.”

இந்தச் சமயத்தில், பயிற்சி அதிகாரிகள் மிஸஸ்.ஜோஷியை விட்டுவிட்டு, மிஸ். முன்னியை மொய்த்தார்கள். முட்டிக் கால்களோடு நின்றுவிட்ட அவளது கவுனை ஒப்புக்கும், கால்களை உண்மைக்குமாய்ப் பார்த்துவிட்டு, ஒவ்வொரு கிழமும் லேசாய் விசிவடித்தது. சுரேஷ்சிங்கோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல், நிர்வாக இயலை வாயால் பிடித்திழுத்தபோது.

வலது பக்கம் கடைசி வரிசையில் இருந்த வர்மா எழுந்தார். டில்லிக்காரர். அதோட சண்டைக்காரர். இவரோடு சண்டை போட தயாராக இல்லாத அதிகாரிகள், இந்த வர்மாவை நான்காவது தடவையாக பயிற்சிக்கு அனுப்பியிருக்கிறார்கள். சுரேஷ்சிங்கைப் பேச வேண்டாம் என்று கையாட்டிவிட்டு, வர்மா இப்படிப் பேசினார்.

“நிர்வாகம் என்பது என்ன என்பது முக்கியமில்லை. எப்படி என்பதே முக்கியம். அந்த எப்படி என்பதிலும், இப்படியா அப்படியா என்பது முக்கியம். அதுகூட முக்கியமில்லை. இப்படி என்பது எப்படி, அப்படி என்பது எப்படி என்று அலசி ஆராய்ந்து சிந்தித்துச் சீர்தூக்கி.”

சுரேஷ்சிங், வாயடைத்துப் போனார். முன்னாள் அசிஸ்டெண்ட் புரொபசர் டபிள்யூ. கன்னா குறட்டை போட்டே தூங்கினார். மற்றவர்களோ, எவன் பேசினாலும் இப்படித்தான் பேகவான். இவனே பேசட்டும் என்பது மாதிரி கம்மா இருந்தார்கள். இந்த மெளனத்தை அங்கீகாரமாக எடுத்துக் கொண்ட எஸ்.ஆர். வர்மா, உத்வேகம் பெற்றார். வகுப்பறைக்கு முன்னால் வந்து சுரேஷ்சிங் முன்பக்கம் தனது முதுகைச் சார்த்தியபடியே நிர்வாக இயல் பற்றி, கெளண்டர் லெக்சர் கொடுத்தபோது –

“டீ பிரேக். டி பிரேக்.”

தேநீர் குடித்தபோது, மிஸ். முன்னியும், அவள் வயதுக்காரனான சஞ்சய் குமாரும், ஒருவருடன் ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். முதலில் தயங்கித் தயங்கிப் பேசி, பிறகு, தயங்காமல்பேசிக்கொண்டார்கள்.கே.என்.எஸ், கமென்ட் அடித்தார்.

“வேணுமுன்னா பாருடா. ராமு. ரெண்டு பேரும் லவ் பண்ணப் போறாங்க பாரு. குட்டி நல்லாத்தாண்டா இருக்காள். சர்க்கார் செலவுல காதல் பண்ணப் போறாங்கப் பாரு…”

“நீ ஒருத்தன். ஆக வேண்டியதைப் பார்க்காமல்.”

வகுப்பு, மீண்டும் துவங்கியது.

எங்கேயோ காணாமல் போன சுரேஷ்சிங், திடீரென்று ஓர் ஆறடி மனிதருடன் உள்ளே வந்தார். அந்த மனிதரின் படர்ந்த முகத்தையும், பெரியபெரிய பற்களையும் பார்க்கும்போது, ஆசாமிக்கு மீசை இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், பாதகமில்லை. ஜாட் இனத்துக்கு உரிய கம்பீரம், துடுக்குத்தனமான பேச்சு.

“லுக்… நீங்க சீனியர் அதிகாரிகள். பல்வேறு மாநிலங்களிலிருந்து, ரயிலில் முதலாவது வகுப்பு அல்லது ஏ.சி. சிலிப்பர்ல வந்திருக்கீங்க. தினமும் 125 ரூபாய் அலவன்ஸ் வாங்கப் போறிங்க. வசதியான ஐந்து ரூபாய் அறையில் தங்கப் போரீங்க. இப்படி சகல வசதியோடும், சம்பளத்தோடும் அரசாங்கம் உங்களை எதுக்காக இங்கே அனுப்பி வைக்குது. சொல்லுங்க..? எதற்காக. ஏன்… எதற்காக.”

திடீரென்று, டில்லிபுத்திரன் வர்மா எழுந்தார். ஏன் என்பதற்கு இருப்பிடத்தில் இருந்து பத்து நிமிடமும், பிறகு வகுப்பறையின் முகப்புக்கு வந்து எதற்கு என்பதற்கு பத்து நிமிடமும் பேசினார். அதற்குள் அந்த ஜாட் மனிதர்கதாரித்து, தனது தலைமையில் மூன்று தடவை ஏற்கனவே பயிற்சி எடுத்த வர்மாவின் தோளில் கையைப் போட்டு, அவர் மார்பைப் தட்டிக் கொடுப்பதுபோல், ரத்தக்கசிவு வரும்படி கிள்ளியபடியே பேசினார்.

“நான் இந்த பயிற்சி நிலையத்தின் டைரக்டர். பேராசிரியர் திவான்லால். வர்மாஜி! எனக்கும் பேச சான்ஸ் கொடுங்க! லுக் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன். உங்களுக்காக கெஸ்ட் லெக்சர் ஏற்பாடு செய்திருக்கோம். ஒவ்வொரு லெக்சருக்கும் 300 ரூபாய். அவங்க போக்குவரத்துக்கு 100 ரூபாய். இப்படித் தினமும் நாலு லெக்சர். இது எதுக்காக… யாருக்காக… டோண்ட் டாக் வர்மா. ஐ வில் டாக். மூத்த அதிகாரியான ஒவ்வொருவருக்கும் இந்தப் பயிற்சிக் காலம் வரைக்கும் சராசரி 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறோம். எதுக்காக…? யாருக்காக…? நானே சொல்கிறேன். இங்கே பயிற்சி பெற்ற பிறகு, நீங்கள் உங்கள் டியார்ட்மெண்டுக்குப் போய், அங்கே உள்ள உங்கள் சகாக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம். பத்தாம் பசிலியாய் வந்து நவீனத்துவமாய் திரும்ப போகும் உங்களிடம், உங்கள் சகாக்கள் நிறைய எதிர்பார்ப்பார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பை நீங்கள் ஈடேற்ற வேண்டும். ஒரு மெழுகுவர்த்தி பல மெழுகுவர்த்திகளை எளிய விடுகிறதல்லவா. அப்படி. எப்படி..”

‘டில்லியின் செல்வன் வர்மா விளக்கம் சொல்லப் போனபோது, நமது ராமையா எழுந்தார். கம்பீரமாக, வேட்டியை விடாப் பிடியாகக் கட்டியிருக்கும் மனிதர். ஆத்திரத்தின் முதிர்ச்சி முகத்தில் தெரிந்தது. இதற்குள், அந்த கண்டுபிடிப்பை’ அடக்கமுடியாமல் அவரோடு எழுந்த கே.என்.எஸ், ராமையாவிடம் ரகசியம் போல் பகிரங்கமாகவே பேசினார்.

“பாருடா ராமு. அப்போ தனித்தனியா உட்கார்ந்திருந்த முன்னியும் சஞ்சயும் இப்ப ஒண்ணாய் உட்கார்ந்து டயலாக் பேசறதைப் பாருடா.”

ராமையா, சீனிவாசனை தோளை அழுத்தி உட்கார வைத்தார். இடுப்புக்குக் கீழே நழுவப்போன வேட்டியைக் கட்டாமலே பிடித்துக்கொண்டு, அந்த ஜாட்டைரக்டரைப் பார்த்து தமிழ் இனத்திற்கே உரிய புறநானூற்று பார்வையோடு கேட்டார்.

“சார். இந்த ஆறு வாரப் பயிற்சி எப்ப முடியும்.?”

“ஒய் டவுட். அடுத்த மாதம் 31-ஆம் தேதியோட முடியும்.”

“ஆறு வாரமுன்னா. நாற்பத்திரண்டு நாள். அதனால, அடுத்த மாதம் 28-தேதியே முடிச்சுடுங்க சார்.”

“நோ.நோ. 31-ஆம் தேதின்னா 31-ம் தேதிதான்.”

“நோ.நோ. 28-ஆம் தேதியேதான். 28-ஆம் தேதிதான்.”

“முப்பத்தி ஒண்ணு. ரைட்.”

“ராங். இருபத்தெட்டு.”

அந்த அரச பயிற்சி நிலையத்தின் இயக்குநரான திவான்லால், பொறுமை இழந்தார். கத்தப் போனார். ராமையாவும் திருப்பி கத்துவதற்கு தயாராக இருப்பதுபோல் உதடுகளை குவித்தப்போது, திவான்லால் ஜென்டில்மேனாகி கேட்டார்.

“லுக் ஜென்டில்மேன்! மேற்கொண்டு ஒரு மூணு நாள் இருக்கக் கூடாதா? இங்கேதான் பொறுப்புணர்ச்சி வேணும் என்கிறது. அடிப்படையில் ஒவ்வொரு அரசு அலுவலருக்கும் பொறுப்புணர்வு வேண்டும். உங்ககிட்ட அது இல்ல.”

“பொறுப்புணர்வு இருக்கிறதால தான் சொல்றேன். இருபத்தெட்டு இருபத்தெட்டே.”

இயக்குநர் திவான்லால், உதடுகளை உப்பவைத்தார். பயிற்சி மாணவ அதிகாரிகளும், வீம்புக்குப் பேசுவதுபோல் தோன்றிய ராமையாவை, அதிசயமாய்ப் பார்த்தார்கள். முன்னியும், சஞ்சயும் மட்டும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், லேசாய் ஒருவரை ஒருவர் உரசியபடியே எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். கோபத்தால் கண் சிவந்து, குமுறலால் பற்கள் வெளிப்பட்டு, படபடப்பாய் நின்ற திவான்லாலைப் பார்த்து, ராமையா பேசப் போனபோது, திவான்லால் மீண்டும் கெஞ்சினார்.

“ஆறு வாரம் என்பது நீங்கள் சொல்வது மாதிரி டெக்னிக்கால சரியா இருக்கலாம். ஆனால், மேலும் மூன்று நாட்கள் நீங்கள் பயிற்சி பெற்றால், உங்கள் சகாக்களுக்கு, மேலும் சிறப்பாக, இங்கே கற்றதை கற்பிக்க முடியும். எத்தனையோ அதிகாரிகள் இருந்தும், உங்கள் அலுவலகம், உங்களைதான் நல்லவர், வல்லவர் என்று அனுப்பி இருக்க வேண்டும். இந்தச் சூழலில் மூன்று நாட்களை பற்றி நீங்க கவலப்படக் கூடாது.”

ராமைய்யா, பற்றற்ற குரலில் பதிலளித்தார்.

“கவலப்பட்டுத்தான் ஆகணும் ஸார். நான் அடுத்த மாதம் 31-ம் தேதி ரிடையராகிறேன் சார் 28-ம் தேதி டில்லியிலிருந்து புறப்பட்டால்தான், 30-ம் தேதி சென்னைக்குப் போய், அதுக்கு மறுநாள் பொறுப்பை ஒப்படைக்க முடியும். ரிடையராகிற எனக்கு எதுக்குய்யா டிரெயினிங்குன்னு எழுதிப் போட்டேன். எதிர்த்தா பேசறே?ன்னு ஒரு மெமோ கொடுத்தாங்க. அதனால்தான் சார் வந்தேன். ஒரு வேளை உங்க சொல்ல கேட்டு 31-ஆம் தேதி வரைக்கும் இங்கே இருந்தா எனக்கு பென்சம்கூட தரமாட்டாங்க, அதனால 28-ம் தேதியே கோர்ஸ் முடியுது. ரைட்..?”

– கல்கி, 30-12-1990 – தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *