பொழுது போக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 258 
 
 

உடல்நிலை சரியில்லாமல் ஒரு வாரமாய் மருத்துவமனையில் வந்து படுத்து கொண்டிருக்கும் அண்ணாசாமி வலியால் துடித்து அரற்றிக்கொண்டு இருந்த ஒருவரை பக்கத்து கட்டிலுக்கு கொண்டு வந்து படுக்க வைப்பதை பார்த்தார். வயது நாற்பது இருக்கலாம் என்று நினைத்தார். ஸ்ட்ரெச்சரில் இருந்து படுக்கைக்கு மற்றும்போது அந்த ஆள் வலியால் கத்துவது இவரை சங்கடப்படுத்தியது.ஒரு நிமிடம் அவருக்காக வருத்தப்பட்டார்.

அந்த மருத்துவமனைக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாகி விட்டது. அண்ணாசாமியின் தம்பி மகன் மட்டும் அவ்வப் பொழுது வந்து போகிறான். இவர் படுத்திருந்த இடம் ஜன்னல் ஓரமாய் இருந்ததால் அடிக்கடி வெளியே எட்டிப்பார்த்து பொழுதை ஓட்டுவார்.

அன்று அப்படித்தான் கட்டிலில் உட்கார்ந்தவாறே பத்து நிமிடங்களாய் வெளியே எட்டிப் பார்த்து யோசித்து கொண்டிருந்தவரை செவிலியரின் உங்க கையை கொஞ்சம் காட்டறீங்களா? என்ற குரல் இந்த உலகத்துக்கு இழுத்து வந்தது. சிரித்துக்கொண்டே கையை கொடுத்தார். அவர்கள் தினமும் செய்யும் பரிசோதனைகளை செய்து போகும் வரை அமைதியாக இருந்தார்.

அவர்கள் அங்கிருந்து சென்றவுடன் மீண்டும் ஜன்னலை நோக்கி தன் பார்வையை திருப்பி இரசிக்க ஆரம்பித்தார். சார்..சார் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க பக்கத்து படுக்கை கார்ர் அப்படி என்னதான் சார் வெளியே பார்த்துகிட்டிருக்கறீங்க? சொன்னீங்கன்னா எனக்கும் ஆறுதலா இருக்கும். அண்ணாசாமி அவரை பார்த்தார். இரு கால்களிலும் பெரிய மாவுக்கட்டாய் போட்டு தொங்க விடப்பட்டிருந்தது.

இங்க வண்டிகள் எல்லாம் போயிட்டும் வந்துட்டும் இருக்குது, இந்த இட்த்துல் குரங்கு ஒண்ணு சார் ரோட்டோரமா இருக்கற மரத்துல இருந்து கீழே இறங்கி போற வர்றவங்க பையை எல்லாம் பிடுங்கிட்டு போயிட்டிருக்கு, பாவம் அந்த ரோட்டுல நடந்து போறவங்களை திடீருன்னு போயி அவங்க வச்சிருக்கறதை பிடுங்கறதும். அவங்க மிரண்டு, அதை விரட்டிகிட்டு ஓடறதும், பார்க்க வேடிக்கையா இருக்கு

பக்கத்து படுக்கைகாரர் அப்படியா சார், சிரிப்பு, இந்த குரங்குக இருக்கே அதுக பண்னற அட்டகாசம் மேலும் சிரிப்பு, அண்ணாசாமி மீண்டும் சத்தமாய் சிரித்து இங்க பாருங்க வேடிக்கையை..! ஒருத்தர் அந்த குரங்கை விரட்டிகிட்டு ஓடறாரு, அது அங்க இங்கேயும் ஓடி ஒளியறதும்..பக்கத்து படுக்கைகாரருக்கும் சிரிப்பு, அப்படியா சார்.

அதற்குள் அவருக்கு அடுத்த படுக்கைகாரர் என்னங்க நீங்க இரண்டு பேரு மட்டும் சிரிச்சுகிட்டிருக்கறீங்க? இவர் குரங்கு செய்யும் அட்டகாசங்களை அவருக்கு சொல்ல அவரும் சிரிக்கிறார்.

அண்ணாசாமி இப்பொழுது மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கிறார். பக்கத்து படுக்கைகாரர் ஆவலாய் அண்ணாசாமியின் முகத்தை பார்க்க இப்ப அந்த குரங்கு மாட்டிகிச்சு, கம்பி வலைக்குள்ள பிடிச்சு கொண்டு போயிட்டாங்க. பாவமாத்தான் இருக்கு. அது மாட்டிகிட்டு நிக்கறதை பார்த்தா? அடுத்தடுத்த படுக்கைகாரர்களும் அந்த குரங்குக்காக வருத்தப்பட்டனர். அதற்குள் செவிலியர்கள் உள்ளே வர அமைதியாகினர்.

மதியம் மேல் அண்ணாசாமி பத்து நிமிடம் கண்ணசந்தார். பக்கத்து படுக்கைகாரர் சார்..சார்.. குரல் கொடுக்க விழித்து அவரை பார்த்தார். சார்..இப்ப வெளியில என்ன சார் நடக்குது? அவரின் குரலில் தெரிந்து கொள்ளவேண்டிய ஆர்வம் தெரிந்தது.

ம்..கண்ணை கசக்கிக்கொண்டு வெளியே எட்டிப்பார்த்த அண்ணாசாமி திடீரென குலுங்கி குலங்கி சிரிக்க ஆரம்பித்தார். என்ன சார் நீங்களே சிரிக்கறீங்க, எங்களுக்கும் சொல்லிட்டு சிரிங்க சார்.

அதுவா..இப்ப இரண்டு குரங்குக வந்துருக்கு.. அது சரியா மரத்துக்கு கீழே இருக்கற விளம்பர போர்டுல உட்கார்ந்துட்டு இருக்குது. பாவம் அதை தாண்டி போறவங்க பயந்து பயந்து போறாங்க. அட..டா என்றவுடன் என்ன சார்..என்ன சார்.. அந்த குரங்கு அங்க போயிட்டிருக்கற கார்மேல தொத்திகிடுச்சு.

ஐயையோ..குரங்குக்கு ஒண்ணுமாகலையே? பக்கத்து படுக்கைகாரர் கேட்க, இல்லை காரை அங்கனயே நிறுத்திட்டாங்க, இப்ப அது இறங்க மாட்டேன்னுட்டூ அதுலயே உட்கார்ந்துகிட்டு இருக்குது பாவம் எல்லாம் அதை பார்த்து கெஞ்சறாங்க.,

இந்த குரங்குகளே இப்படித்தான் சார், சரியான் வாலுங்க, அடுத்த படுக்கைகாரர் சொல்லிவிட்டு அவராக சிரித்தார். என்ன சார் நீங்களே சிரிக்கறீங்க?

இல்லே ஒருக்கா நானும் இந்த குரங்குகிட்ட மாட்டிகிட்டு தப்பிச்சு வர்றதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுச்சு, அப்ப எனக்கு அவ்வளவு கோபம் இருந்துச்சு, இப்ப நினைச்சு பார்த்தா..சிரிப்பா வருது..

அண்ணாசாமி ஆழ்ந்த சிந்தனையுடன் நாம ஏதோ ஒரு சூழ்நிலையில மாட்டிகிட்டோமுன்னா அப்ப நாம ரொம்ப பதட்டமாகவோ, இல்லை கோபமாகவோ ஆயிடறோம். அப்புறம் ஆற அமர நினைச்சு பார்த்தோமுன்னா அட இதுக்கா அவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணிகிட்டோமுன்னு நம்மளை நினைச்சு நாமளே திட்டிக்குவோம்..

மீண்டும் மருத்துவர்களுடன் செவிலியர்களும் வர அந்த இடம் அமைதியானது.

அன்று நடு இரவில் அண்ணாசாமிக்கு மிகவும் முடியாமல் போய் விட்ட்து. அந்நேரத்தில் மருத்துவரும் செவிலியரும் வந்து பார்த்து உடனே ஐ.சி யூ வுக்கு மாற்றி விட சொல்லி விட்டார்கள்.

காலையில் அண்ணாசாமி படுத்திருந்த படுக்கையை ஏக்கத்துடன் பார்த்தனர் பக்கத்து படுக்கைகாரர்கள். இந்நேரம் அவர் அங்கிருந்தால் வெளியில் என்ன நடக்கிறது என்பதை சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்திருப்பார். அதை பற்றி பேசிக்கொண்டிருக்கலாம். இப்பொழுது அவர் எப்படியிருக்கிறாரோ?

பத்து மணி அளவில் வந்த செவிலியரிடம் அண்ணாசாமி எப்படியிருக்கிறார்? கேட்ட்தற்கு செவிலியர் வருத்தத்துடன் பிரயோசனமில்லை, விடியற்காலை இரண்டு மணிக்கு இறந்துட்டாரு. சொன்னவுடன் அதிர்ந்து போனார்கள் பக்கத்து படுக்கைகாரர்கள்.

பத்து நாட்கள் ஓடியிருந்தது. அண்ணாசாமி பக்கத்து படுக்கைகாரரின் கால் சரியாகி விட்டதால் போக சொல்லிவிட்டார்கள். அவர் மருத்துவமனையை விட்டு போகுமுன் அண்ணாசாமி படுத்திருந்த படுக்கையை தொட்டு அவரை நினைத்து பார்த்து விட்டு அடுத்திருந்த ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தார். அங்கு ஒன்றுமே இல்லை. வெறும் பொட்டல் வெளியாய் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *