பொய் வழக்குகள்

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,111 
 

“சில ஜோடனை வழக்குகள் கூட நிஜத்தில் தோற்று, நிழலில் ஜெயிக்கிறது.”

“உன் பெயரென்ன?”

“…………”

“டேய், வாயில என்ன கொழக்கட்டையா வெச்சிருக்க..ஒம் பேரு என்னடா?

“து….ரை..”

“தொரை….வாயைத் தெறக்கமாட்டீங்களோ…அப்பா பேரு, அட்ரஸ் என்ன?”

“………”

“எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ஒன்ன….”

“ஏய்…செவன் நாட் சிக்ஸ்… இங்க வாய்யா….”

“அய்யா..வந்துட்டம்யா..”

“ஏய்யா, நாளைக்கு கோர்ட்டுக்கு எத்தனை கேஸ் தேத்திவச்சிருக்க?

“அய்யா கேசு ரெடிபண்ணீர்றங்கய்யா…”

“எப்பக் கேட்டாலும் இப்படியே சொல்லுய்யா…இப்ப நான் ரிப்போர்ட் எழுதணும். இல்லைன்னு எழுத முடியுமா? எழுதுனா, என்னய்யா ஸ்டேசன்ல வேலை செய்யிறியா? செறைக்கிறியாம்பாரு மேலதிகாரி….?”

“அய்யா..ஒரு கேசுன்னு எழுதிக்குங்க அய்யா..அஞ்சு நிமிசத்துல கேசு டீட்டெய்ல்ஸ் கொண்டாறேங்கய்யா?”

“ம்ம்ம்ம்…எல்லாம் வெறட்டுனாத்தான் வேலையாகுது…” எஸ்.ஐ.கோபால் என்ற கோவாலு சற்றே நிம்மதியாய் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்து கொள்கிறார். செவன் நாட் சிக்ஸ் என்ற ஏட்டு ஏகாம்பரம் எஸ்.ஐ.கோபால் கொடுத்த வேலையை நிறைவேற்ற துரையை நெருங்கினார்.

“எலே, என்ன கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற. எனக்கும் கேசு வேணும். பிக்பாக்கெட் கேசுல இப்ப உள்ள போகப்போற. ஓம் தலையெழுத்து..நான் என்ன செய்ய?” என்று சொல்லிக்கொண்டே மளமளவென்று கோர்ட்டுக்கான கச்சாத்து தயார் பண்ணும் வேலைகளில் எறங்கிவிட்டார்.

அக்யூஸ்ட் நேம்….துரை…·பாதர் நேம்…நாட் நோன்…அட்ரஸ்…நாட் நோன்….ரீசன்..பிக்பாக்கெட்…ஏகாம்பரம் மளமளவென்று படிவங்களை பூர்த்தி செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

தலைகவிழ்ந்தபடி துரை அந்தக் காவல் நிலையத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அவன் மனம் மட்டும் அங்கில்லை; “பாவம், அம்மா இந்நேரம் அழுதுகிட்டு இருக்கும். அப்பா….!?

“டேய் இந்தப் பொட்டலத்துல இருக்குறத சாப்புட்டு அந்த டீயைக் குடி. காலையில இருந்து கொலைபட்டினியா கெடக்கே. செத்துக்கித்துப் போயிடாத…..” என்ற அதட்டல் கேட்டு கைகள் நடுங்க ஏட்டு நீட்டிய பொட்டலத்தை வாங்கிக்கொண்டான்.

“இந்த வயசுல உனக்கு எதுக்கு இந்தத் தொழில்….பிச்சை கூட எடுக்கலாம். இந்தத் திருட்டுத்தனம் மட்டும் கூடவே கூடாது….கத்தைப் பேப்பர்களில் மளமளவென்று எழுதி கோர்ட் கிளார்க்கிடம் நீட்டினார் மாஜிஸ்ட்ரேட். அவர் அந்தக் கேஸ்கட்டை பவ்யமாக வாங்கிப் பிரித்து ஆறுமாசம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, மதுரை என்று உரக்கப் படித்தார். துரையின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் வழிய…ஏட்டு ஏகாம்பரம் விசாரணைக்கூண்டிலிருந்து துரையை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

கோர்ட்டிலிருந்தோ, பஸ் ஏறி மதுரை வந்ததோ, சீர்திருத்தப்பள்ளி வந்ததோ எதிலும் கவனமில்லாமல் வெறித்த பார்வையோடு இருந்த துரை, சீர்திருத்தப்பள்ளி வந்த மூன்றாவது நாள்தான் வாயைத் திறந்தான். அதுவும் அவன் இருந்த அறையில் மற்றவர்கள் வெளியே சென்ற பிறகு படுத்திருந்த பாபுவிடம். இந்த மூன்று நாளில் பாபுவைத் தவிர மற்ற சிறுவர்கள் துரையைச் செய்த கலாட்டாவால் மனம் நொந்து போயிருந்தான்.

“என்ன, பிளேடு கேசா?”

“என்னம்மா, நாலு பர்ஸ் பாக்கவுடாம இங்க இட்டாந்துட்டாங்களேன்னு கவலையாகீதா?”

“தியேட்டரா, பஸ்ஸா? எதுல தொழில் பண்ற?”

“லாட்ஜுக்கு ஆளுங்களை புக் பண்ற கேசா?”

“தொழிலுக்குப் புதுசா? கவலைய வுடு, வெளிய போனதும் நம்ப குரூப்ல சேந்துரு. நம்பாளு ஒனக்கு எல்லாத்தையும் அத்துபுடியா கத்துகுடுத்துருவான்…”

இப்படி ஆளாளுக்கு துரையை துவம்சம் செய்து கொண்டிருக்க பாபு மட்டும் பாயில் ஒன்றும் பேசாமல் புரண்டுகொண்டே இருந்தான். ஒருவழியாக மற்றவர்கள் எல்லாம் வெளியே போனதும் துரை, பாபுவிடம் பேசினான்.

“என்ன? ஒடம்புக்கு ஜுரமா?”

“ம்…”

“எத்தனை நாளா?”

“அஞ்சு நாளா…”

“ஆஸ்பத்திரிக்கு கூட்டீட்டு போகமாட்டாங்களா?”

“இன்னைக்கு காச்சல் கொறையலேன்னா கூட்டிப்போறதா வாடன் சொன்னாரு.”

“இங்க வந்து எத்தனை நாளாச்சு?

“நாலுமாசம் ஆச்சு”

“எதுனால இங்க வந்த?

“மாங்காய் சுண்டல் வித்துகிட்டு இருந்தேன்; ஒரு ஆள் தெனம் கடன் வாங்குவார்; வாரக் கடைசியில மொத்தமா குடுத்துருவார். முப்பது ரூவாயிக்கு மேல கடன் குடுத்தேன். திடீருன்னுட்டு அந்தாள் வர்றதில்ல. ஒருநா, ஒரு பொம்பள கூட வர்றதப் பாத்தேன். காசைக் கேட்டேன்; கன்னத்துல அறைஞ்சு யாருகிட்ட குடுத்தியோ அவங்கிட்ட கேளுன்னார். நாளைக்கு கூட குடுங்க, இல்லன்னு மட்டும் சொல்லீடாதீங்க. அந்தக் காசுல எந்தங்கச்சிக்கு பாவாடைத் துணி வங்கணும்ன்னு சொல்லி அழுதேன்.

அந்த வழியா வந்த போலீசுக்கிட்ட பொய்சொல்லி காசு கேக்குறேன்னு புடிச்சுக்குடுத்துட்டார். போலீசு நான் சொல்றதைக் கேக்கவே இல்லை. போலீசு என்னை ரெண்டுநாள் ஸ்டேசன்ல வச்சிருந்துட்டு பிக்பாக்கெட் அடிச்சிட்டேன்னு கேஸ் போட்டு இங்க கொண்டாந்து தள்ளீட்டுப் போயிட்டாங்க…..ஆமா, நீ எதுனால இங்க வந்த? மூச்சுவிடாமல் சொல்லிய பாபு இப்ப துரையின் கதையை தெரிந்துகொள்ளும் ஆவலில் பார்க்கிறான்.

“நீ, இங்க இருக்கிறது உங்க வீட்டுக்கு தெரியுமா?”

“தெரியாது. நான் மதுரையில சுண்டல் விப்பேன்; அய்யர் சுண்டல், முறுக்கு டின்னுல போட்டுக் குடுப்பார். ரூவாய்க்கு பத்துபைசா கமிசன். ஒருநாளைக்கு அம்பதுக்கும் விக்கும்; அஞ்சுக்கும் விக்கும். சாப்பாடு அய்யர் வீட்டுல போட்டுருவாங்க. திண்னையில தெருவுல படுத்துக்குவேன். கெடைக்கிற கமிசனை மாசம் சேத்து வச்சு நூறு, நூத்தம்பது ஊருக்கு அம்மாவுக்கு அனுப்பீருவேன். வீட்டுல அம்மாவும் தங்கச்சியும்தான். பாவம் இந்த நாலு மாசம் எம் பணமும் அவங்களுக்கு இல்ல; என்னையத் தேடி வந்தாங்களா? எதுவும் தெரியாது. அய்யர் என்னைப் பத்தி என்ன நெனைச்சாரோ? சரக்கோட போயிட்டானேன்னு பொலம்பீருப்பார். என்னைய இனிமே எப்படி நம்புவார்? தங்கச்சிய எப்டியாச்சும் படிக்க வச்சிரும்மா, எந்த வேலைக்கும் அனுப்பாதே. நான், மாசாமாசம் பணம் அனுப்புறேன்னு பொங்கலுக்கு ஊருக்குப் போயிருந்தப்போ சொல்லீட்டு வந்தேன். இன்னும் ரெண்டுமாசம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இங்க கெடக்கணும்.” பாபுவின் கண்கள் ஈரமாகியிருந்தது.

“ம்ம்ம்… எங்கதைதான் சோகக் கதைன்னு நெனைச்சேன். என்னைவிட நீ சோகமா இருக்கே. கவலைப்படாதே. நாலுமாசத்தை ஓட்டீட்ட. இன்னும் ரெண்டுமாசம்தான… அதுவும் ஓடீரும். இனிமே அங்க இங்க போகாம ஒங்க அம்மாவும் தங்கச்சியும் இருக்க எடத்துக்கே போய் இதே சுண்டல் முறுக்கை ஒங்க அம்மாவைச் செஞ்சு தரச் சொல்லி வித்துக் கெடைக்கிற காசை ஒங்க அம்மாட்ட கொடுத்துட்டு நிம்மதியா இரு…” பெரியமனுசன் போல துரை பாபுவுக்கு புத்திமதி சொன்னான்.

“அம்மா இருக்குற கிராமத்துல சுண்டல் முறுக்கு செஞ்சு நாங்களே சாப்புட்டுக்கிட்டாத்தான். அங்க வழி இல்லாததுனாலதான மதுரைக்கு வந்தேன்.”

“பக்கத்துல இருக்கிற டவுனுல எதாவது செய்யமுடியுமா?”

“செய்யலாம். எல்லாத்துக்கும் வெள்ளையப்பன் வேணுமே?”

“எவ்வளவு இருந்தா செய்யலாம்ன்னு நெனைக்கிற?”

“ஒரு சுமாரான சைக்கிள், ஒரு அம்பது டீ புடிக்கிற மாதிரி ஒரு எவர்சில்வர் பாத்திரம், ஒரு வாளி, அரை டஜன் டம்ளர்…. சீனி, டீ தூள், பால்….இதுக்கு மட்டும் காசு கெடைச்சா, எங்க கிராமத்துல இருந்து டவுனுக்கு காலையில ஒரு டிரிப், மாலையில ஒரு டிரிப்….” சொல்லும்போதே பாபுவின் கண்களில் ஒளிமயமான எதிர்காலம் மின்னலிட்டது.

“இவ்வளவுக்கும் ஒரு ஆயிரம் ரூபாயாவது இருந்தால்தான் இந்தத் தொழிலைச் செய்ய முடியும், இல்லையா? இதுல சைக்கிள்தான் கொஞ்சம் செலவு…..ஆமா…இப்படிச் செய்யலாமே. வாடகைக்கு கொஞ்ச நாள் சைக்கிள் எடுத்து ஓட்டிச் சமாளிச்சா தொழில் நல்லபடியா அமைஞ்சா ஒரு சைக்கிளை வாங்கிக்கலாமே?”

“அப்படியும் செய்யலாம். என்ன, சம்பாதிக்கிற காசை சைக்கிள் கடையில குடுக்க வேண்டி வருமே. அதான்..” சொல்லிக்கொண்டிருக்கும்போதே யாரோ வரும் காலடி ஓசை கேட்க பேச்சு தற்காலிகமாய் தடைபட்டது. வாடன்தான் வந்தார்.

“என்ன பாபு காய்ச்சல் எப்படி இருக்கு?”

“இப்ப பரவாயில்லங்கண்ணா. இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாப் போதும்.”

“அட, கொஞ்சம் முன்னாடி காய்ச்சல் அனலா கொதிச்சுது. சொரத்தே இல்லாம இருந்த. இப்ப மொகம் பாக்கவே தெளிவா இருக்க மாதிரி இருக்கே!?” வாடன், பாபுவின் நெற்றியைத் தொட்டுப்பார்த்து விட்டு, காய்ச்சலும் இல்ல. சரி, சாயாந்திரமா எதுக்கும் பாத்துக்குவோம். என்ன, துரை நாளையில இருந்து மத்த பசங்களோட கிளாசுக்குப் போகணும்…” என்று சொல்லிக்கொண்டே வாடன் போனார்.

“ம்..என்ன சொன்ன, சைக்கிளுக்கு வாடகை குடுத்தாலும், உங்க அம்மா, தங்கையோட இருக்கிற தெம்புல பது டீ சேத்து வித்தா வாடகைக் காசு; ஒவ்வொருநாளும் ஒரு தொகைய சைக்கிள் வாங்க சேத்துவா, காசு சேந்ததும் சைக்கிளை வாங்கிடு”

“நல்ல ஐடியாதான். ஆனா மத்ததுக்கு பணம்?”

“நா, ஒரு ஐநூறு ரூபா தர்றேன்.”

“இங்க எப்டி ஒனக்கு பணம்?”

“நீ, ரெண்டு மாசம் கழிச்சு ஊருக்குப் போறப்ப நான் தர்றேன்”

“இவ்வளவு நல்லவனா இருக்குற நீ, ஒன்னைப் பத்தி சொல்லவே இல்லையே?”

“என்னைப்பத்திச் சொல்றதுக்கு என்ன இருக்கு?”

“அப்ப, நீயும் திருடுற தொழில்தானா?”

“நான், அந்தமாதிரிப் பட்டவன் இல்லை.”

“அப்ப, எனக்கு நீ தர்றதாச் சொன்ன பணம் யாரோட பணம்?”

“ஒருவகையில அது திருடுன பணம்தான். ஒரு நல்ல காரியத்துக்கு ஒனக்கு பயன்படட்டும்ன்னுதான் குடுக்கிறேன்னு சொன்னேன்.”

“எனக்கு திருட்டுப் பணமா? வேண்டவே வேண்டாம்ப்பா!”

“பாபு, நீ நினைக்கிற மாதிரி அது திருடுன பணம் இல்ல. எங்கப்பா ஒரு குடிகாரர். குடிச்சுட்டு எங்க அம்மாவையும் என்னையும் திட்டாத அடிக்காத நாளே இல்லை. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். கொஞ்ச காலம் பல்லைக்கடிச்சுகிட்டு படிச்சு முடிச்சுருவோம்ன்னு நெனைச்சேன். விதி, அன்னைக்கு விளையாடிருச்சு. அப்பா, வேலையில இருந்து வரும்போதே குடிக்க வாங்கி வந்துருவாரு. அன்னைக்கு வந்ததும், அம்மா மளிகை சாமான் வாங்க அப்பாட்ட பணம் கேட்டாங்க. அம்மாவுக்கு அடிதான் கிடைச்சது. என்னைக் கூப்பிட்டு ஒரு அய்நூறு ரூபா நோட்டைக் குடுத்து பிராந்தி வாங்கீட்டு வாடா என்று அனுப்பினார். பணத்தை வாங்கிப் போன நான் இருட்டா இருந்த இடத்துல போய் உக்காந்து அழுதுகிட்டு இருந்தேன். அந்தப்பக்கமா வந்த போலீஸ்காரர் என்னை பாத்துட்டு ஸ்டேசனுக்கு கூட்டீட்டுப் போனார்; வீட்டைப்பத்திச் சொன்னா அப்பாட்ட இன்னும் அடி விழும். அதுக்குப் பயந்து ஸ்டேசன்ல வீட்டைப்பத்தி எதுவும் சொல்லல. போலீஸ் என்னை அனாதைன்னு நெனைச்சு பிக்பாக்கெட் கேஸ் போட்டு இங்க கொண்டாந்துட்டாங்க. போலீஸ் கண்ணுல படாம இருக்குறதுக்காக பணத்தை சட்டை தையல் மடிப்பில வச்சிருந்தேன். அந்தப் பணத்தைத்தான் ஒனக்கு குடுப்பதாச் சொன்னேன்.”

“துரை, உன்னை மாதிரி எனக்கு ஒரு நண்பன் இங்கே கிடைத்ததற்காக சந்தோசப்படுறேன். நான் வெளியே போய் டீ தொழிலை செய்து, நீ வெளியே வரும்போது ரெண்டு சைக்கிளோடு இருப்பேன். நீயும் உங்க அம்மாவை அழைச்சுகிட்டு எங்க கூடவே வந்துரு. என்ன, சரியா, ஆனந்தத்தோடு பாபு எழுந்து துரையை அணைத்துக் கொள்கிறான். இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

சில ஜோடனை வழக்குகள் கூட நிஜத்தில் தோற்று, நிழலில் ஜெயிக்கிறது.

– ஆல்பர்ட் [albertgi@gmail.com] – டிசம்பர் 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *