இந்த நாகரிக உலகில், சின்ன சின்ன பொய்கள் மட்டும் பேசி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த என்னிடம் நண்பன் ஒருவன் தினமும் சொல்லும் பொய்களால் கோப்பபட்டு ஒரு நாள் உன்னால் பொய் பேசாமல் இருக்கமுடியுமா? என்று சவால் விட்டு விட்டான்.உடனே அவனிடம் நாளையே இருந்து காட்டுகிறேன் பார் என்று சவால் விட்டதால், நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமா?..முதலில் தண்ணீர் பஞ்சம் என்னை சோதித்தது.
ஏங்க தண்ணி வர்ற லாரி வந்துருச்சான்னு பார்த்துட்டு வாங்க? வரலையின்னா எப்ப வருமுன்னு கேட்டுட்டு வாங்க.
விழித்துக்கொண்டே கனவு கண்டு கொண்டிருந்த நான் பசங்களை அனுப்பு, எனக்கு உடம்பு டயர்டா இருக்கு என்று சொல்ல வாய் திறந்தவன் இன்று பொய் சொல்ல கூடாது என்பது ஞாபகம் வர கடவுளே என்று நொந்து கொண்டு எழுந்து வெளியே வந்தேன்.. என்னுடைய நேரம் லாரி பாம்..பாம்..என்று அந்த தெருவுக்குள் வந்து நின்றது.
அவ்வளவுதான் என் மனைவி என் கையில் ஐந்தாறு குடங்களை கொடுத்து ஓடுங்க, ஓடுங்க முதல்ல குடத்தை வச்சு தண்ணிய பிடியுங்க, பின்னாடியே வரேன்.
கையிலும் இடுப்பிலும் ஐந்தாறு குடங்களை எடுத்துக்கொண்டு லாரியை நோக்கி விரைந்தேன்.
அதற்குள் லாரியை சுற்றி பெண்கள் கூட்டம் சூழ்ந்து கொள்ள என்ன செய்வது என்று விழித்தேன்..
நல்ல வேலை பின்னாலேயே வந்த மனைவி என் தோளை ஒரு இடி இடித்துவிட்டு, உங்களையெல்லாம், பல்லை நற நறத்தது ஒரு கிரைண்டரே சத்தமிடுவது போல் இருந்தது.
வரிசையாக மூன்று குடங்கள் தண்ணீர் பிடித்து நான்காவது குடம் வைக்கப்போகும்போது ஏம்மா ஒரு ஆளுக்கு மூணு குடம் தண்ணிதாம்மா ஒத்து ஒத்து அடுத்த ஆளுக்கு கொடு “வள்” என்று விழுந்தான் லாரியின் பைப்பில் தண்ணீர் விடும் ஆள்.
இரண்டு குடம்தாப்பா பிடிச்சேன், இப்பத்தான் மூணாவது குடம் பிடிக்கபோறேன் என்று அநாயசமாய் ஒரு பொய்யை சொல்லி இன்னொரு குடத்தையும் வைக்கபோனாள் மனைவி.
தண்ணீர் பிடிக்கும் ஆள் அந்த குடத்தை எடுத்து வெளியே வைக்க முயற்சிக்க, மனைவி கூவி அழைத்தாள்
ஏங்க வந்து சொல்லுங்க, இன்னும் மூணாவது குடம் தண்ணி பிடிக்கவேயில்ல, அதுக்குள்ள விடமாட்டேங்கறாங்க,
மூன்று குடம் தண்ணீரை வீட்டுக்குள் வைத்து விட்டு வெளியே வந்த நான்
சட்டென்று உள்ளே மனைவிக்கு ஆதரவாய் வந்தேன்.
அவள் மூணாவது குடம் தண்ணீர் கேளுங்க என்று வற்புறுத்த “இறுதலை கொள்ளி எறும்பு என்பார்களே அப்படி ஆனேன். இது மூணாவது குடம் அப்படீன்னு எப்படி பொய் சொல்றது?
பேசாமல் மெளனமாய் இருந்து விட்டால். குட் ஐடியா என்னையே பாராட்டிக்கொண்டு மனைவி அருகில் நின்று கொண்டேன்.
எப்படியோ நான்காவது குடம் தண்ணீரையும் பிடித்துவிட்டே வெளியே வந்தோம்.
என் மனசாட்சி மட்டும், பேசினால் மட்டும்தான் பொய்யா, செயலில் செய்தாலும் பொய்தானே என்று புலம்பிக்கொண்டிருந்தது. குடி தண்ணீருக்காக அதுவும் ஒரு குடம் தண்ணீருக்காக தன்னுடைய தீர்மானம் தோற்று போக தெரிந்ததே.
சாம்பார் நல்லாயிருக்கா? இட்லி மீது ஊற்றிக்கொண்டே மனைவியிடம் “சூப்பர்” என்று சொல்ல வாய் வந்தது. அடடா இன்று பொய் பேசக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறோமே, என்ன செய்வது? சட்டென ஒரு துண்டு இட்லியை வாயில் போட்டு அடைத்துக்கொண்டு தலையை மட்டும் ஆட்டினேன். அப்பொழுதும் இந்த பாழும் மனசாட்சி கேட்டது, வாய் மட்டும்தான் பொய் சொல்வதில்லை, மற்றபடி எல்லாமே பொய்தான். சட்டென மனசாட்சி சொல்வதை உதறினேன்.
சில்லறையா கொடுங்க பஸ் கண்டக்டரிடம் பத்து ரூபாயை நீட்டும்போது கேட்டார். சட்டை பையில் கொஞ்சம் சில்லறை இருந்தது. ஆனால் கண்டக்டரிடம் கொடுத்து விட்டால் நமக்கு என்ன செய்வது? இல்லை என்று சொன்னால் பொய்தானே.திரு திரு வென முழித்தேன்.என் முழியை பார்த்து அற்ப புழுவை பார்ப்பது போல கண்டக்டர் மீதி சில்லறை கொடுத்தார். அப்பாடி என வாங்கிக்கொண்டேன்.இப்பொழுதும் மனசாட்சி குத்தி காட்ட ஆரம்பித்தது. அட கம்முனு இரு அதட்டி அடக்கினேன்.
அலுவலகத்தில் உட்கார்ந்து அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது, மானேஜர் கூப்பிடுகிறார் என்று அழைப்பு, பயந்து பயந்து உள்ளே நுழைந்தேன், ஏய்யா அந்த மன்னார்கம்பெனி பைல் என்னாச்சு, சார் எல்லாம் ரெடி பண்ணிட்டேன் சார் என்று வாய் வரை வந்து விட்டது. இன்று பொய் பேச கூடாது மனது சொல்ல சரிங்க சார் என்றேன். என்ன சரிங்க?
இல்லே இப்பவே ரெடி பண்ரேன்னு சொன்னேன் சார். போய்யா போய் அந்த வேலைய பாரு. விட்டால் போதும். ஓடி வந்தேன்.
அந்த பைலை முதலில் தேடவேண்டும், மனதுக்குள்சொல்லிக்கொண்டேன்.
பனிரெண்டு மணி ஆகியிருக்கும், திடீரென்று நண்பன் பாலு எதிரில் வந்து நின்றான். ஏண்டா நூறு ரூபாய் நாளைக்கு தரேன்னு கடன் வாங்கி மூணு மாசம் ஆச்சு, இதுவரைக்கும் தரலை.
இப்ப எனக்கு அவசரமா வேணும்.
கேட்ட அவனை மேலும் கீழும் பார்த்து என்ன சொல்லலாம் என யோசிக்கும்போது “அடடா இன்று பொய் சொல்லக்கூடாது என்றிருக்கிறோமே, ஞாபகம் வந்து தொலைக்க சட்டை பையில் இருந்து நூறு ரூபாயை மனதுக்குள் இரத்த கண்ணீர் வடித்துக்கொண்டே கொடுத்தேன்.
நண்பன் நம்பவே இல்லை,சட்டென்று பணம் எடுத்து கொடுப்பேனென்று ! படக்கென்று பறித்துக்கொண்டு நடையை கட்டினான்.
சே “பொய் பேசக்கூடாது” என்ற தீர்மானத்தினால் எனக்கு நூறு ரூபாய் நட்டம்.
என்னிடம் கடன் கொடுத்துவிட்டு அவ்வளவு சீக்கிரம் திருப்பி வாங்கிய நிகழ்ச்சி இந்த பத்து வருடங்களில் நடந்தது இல்லை. எல்லாம் இந்த பொய் பேச கூடாது என்ற தீர்மானத்தினால் வந்த வினை இப்படியாக தினமும் சின்ன சின்ன பொய்களை வீசிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த என்னால் ஒரு நாள் பொய் சொல்லாமல் இருப்போமே என்ற விபரீத எண்ணத்தினால் அன்று முழுவதும் எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. படுக்கைக்கு போகுமுன் பயந்து பயந்து பையன் மதிப்பெண் பட்டியலை நீட்டி கையெழுத்து கேட்டான். வழக்கம்போல கதை சொல்ல ஆரம்பித்தேன் “நானெல்லாம் அந்த காலத்தில”
அதற்குள் என் மனம் இன்று பொய் சொல்லக்கூடாது என்று ஞாபகப்படுத்த சத்தமில்லாமல் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டேன். பையன் அதிர்ச்சியாகி விட்டான். அப்பா எப்பொழுதும் தன்னை பற்றி நாலு வார்த்தை பெருமை பீற்றிக்கொண்டு கையெழுத்து போடும் ஆள். இன்று எப்படி? மேலும் கீழும் என்னை பார்த்துக்கொண்டே சென்றான்.
எப்போது விடியும் என்று ஆகி விட்டது. மறு நாள் நிம்மதியாக என்னுடைய வீட்டில் ஆரம்பித்து வெளியுலகம் வரைக்கும் நாள் முழுக்க சின்ன சின்ன பொய்களை சரளமாக பேசிக்கொண்டிருந்தேன்.
போங்க சார் ! வாழ்க்கைக்கு சின்ன சின்ன பொய்கள் தேவைதானே சார், அப்பத்தானே வாழ்க்கை சுவாரசியமாக போகும்.