நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தை வாசிக்கும் பழக்கம் ‘வெண்முரசு’ நாவல் தொடர் அதில் வெளிவரத் தொடங்கிய நாள் முதல் எனக்கு ஏற்பட்டது. அந்தப் பழக்கம் ‘வெண்முரசு’ நிறைவடைந்த பின்னரும் நேற்று வரை தொடர்ந்தமையின் விளைவுதான் இன்று அதிகாலை எனது இந்தத் திடீர் நெடும் பயணம்.
நான் இனி ஜெயமோகனின் இணையதளத்தை வாசிக்க மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை அதில் தொடர்ந்து அருண்மொழிநங்கையோ அல்லது அஜிதனோ எழுதினாலும்கூட நான் வாசிக்கமாட்டேன். இப்போதுவரை அந்த இணையதளத்தை நான் வாசித்து வந்தது ஜெயமோகனின் எழுத்துக்காக மட்டுமே. அந்த எழுத்துகளால் பித்தேறி நான் என்னைத் தொகுத்து, சீர்பட வளர்த்துக் கொள்வதற்காகவே. அந்தப் பொன்னெழுத்துகள் இனி அதில் வெளியிடப்படாது என்றாகும்போது நான் ஏன் அந்த இணையதளத்தைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும்?
என்னைப் போலவே எத்தனையோ பேர் நள்ளிரவில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் வெளியிட்ட அந்தக் கட்டுரையை நள்ளிரவிலேயே படித்திருப்பார்கள் – பதறியிருப்பார்கள். ஜெயமோகனைப் பார்ப்பதற்காகத் தங்கள் வீட்டில் இருந்து இரவோடு இரவாகப் புறப்பட்டிருப்பார்கள். பெண்கள் விடியற்காலையில் புறப்படக் கூடும். ஜெயமோகனின் அணுக்கர்கள் தத்தம் வீட்டிலேயே செயலிழந்து கையற்று சோர்ந்திருப்பார்கள்.
‘இந்தமுறை ஜெயமோகன் தன்னுடைய இந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டார்’ என்றுதான் நினைக்கிறேன். என்னுடைய இந்த நினைப்பு-கணிப்பு தவறானால் நான் மிகவும் மகிழ்வேன். ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவுதான். வெண்முரசினை எழுதி முடித்த கையோடு இத்தகைய முடிவைத்தான் அவர் எடுத்தார். அதிர்ஷ்டம் தமிழ் இலக்கியத்திற்கு அடித்தது. அதனால் அவர் தன் முடிவை மாற்றிக்கொண்டார். இருபது வருடங்கள் கடந்துவிட்டன.
இந்த இருபது வருடங்களில் ஜெயமோகன் ஏறத்தாழ பாதி ‘வெண்முரசு’ அளவுக்குப் புதிதாக எழுதிக் குவித்துவிட்டார். ‘தமிழ்விக்கி’ 10லட்சம் பதிவுகளை எட்டியுள்ளது. அறியப்படவேண்டிய இலக்கிய ஆளுமைகள் ஏறத்தாழ அனைவருமே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக மேடையேற்றப்பட்டு விட்டார்கள் – பலரும் விருதுகளைப் பெற்றுவிட்டனர். மற்றொருபுறம் தூரன் விருது விழா சார்பாக எண்ணற்ற ஆய்வாளர்கள் கொண்டாடப்பட்டு விட்டார்கள். புதுவை, கோவை ‘வெண்முரசு’ கூடுகைகள் வழியாக இரண்டாம் முறையும் ‘வெண்முரசு’ முழுதாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் விட்டது. ஜெயமோகனின் ஆக்கங்களை நாட்டுடைமையாக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. எல்லாம் இந்த இருபது வருடங்களில்தான் என்று நினைக்கும் போது மலைப்பாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் தமிழ் இலக்கியத்திற்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று நம்ப முடியாது. அது மட்டும் அல்ல, ஜெயமோகன் இன்று வேறு ஓர் எல்லையில் இருக்கிறார். அங்குச் சென்று அவரைத் திரும்ப அழைத்து வர முடியாது. பிறர் யாரும் அணுக முடியாத எல்லை அது. அருண்மொழிநங்கையாலும்கூட. அந்த எல்லையில் நிற்பவர் எடுக்கும் மிகச் சிறப்பானதொரு முடிவு இதுவாகத்தான் இருக்கும். ஒரு பெருங்காவியத்தின் இறுதிச்சொல் போன்றதொரு முடிவு அது. அமுதும் விஷமும் ஒன்றையொன்று தொட்டுத் தீண்டித் தழுவும் தருணம் அது.
ஜெயமோகனின் இந்த அறிவிப்புக் கட்டுரையைப் படித்த ஒருமணி நேரத்தில் நான் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டேன். மாட்டுத்தாவணியில் நாகர்கோவிலுக்குப் பேருந்து ஏறியதும் தூங்கிவிட்டேன். அது தூக்கமா, மயக்கமா எனத் தெரியவில்லை. பெரும் துக்கத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் பின்விளைவான ஆழ்நிலை உறக்கமாகவும் இருக்கலாம் அல்லது உளச்சோர்வால் ஏற்பட்ட அசதியில் பிறந்த நெடிய மயக்கமாகவும் இருக்கலாம். எது எப்படியோ நாகர்கோவிலுக்குள் பேருந்து நுழைந்தபோது நன்றாகப் பொழுது விடிந்திருந்தது. மிதமான வெய்யில். பகல் ஏழு மணியிருக்கும். அங்கிருந்து ஆட்டோவில் ஏறினேன். ஜெயமோகனின் வீடுவரை ஆட்டோவில் செல்ல நான் விரும்பவில்லை. பார்வதிபுரச் சாலையில் நடக்கவே நான் விரும்பினேன். அவர் நாளும் நடக்கும் சாலையல்லவா அது! அதனால் பார்வதிபுரத்திலேயே இறங்கிக்கொண்டேன்.
ஜெயமோகனின் வீட்டுக்குச் செல்லும் தார்ச்சாலையில் நடக்கும் போது மனம் நெகிழத் தொடங்கியது. அவர் இறுதியாக வெளியிட்டிருந்த கட்டுரையின் தலைப்பை நினைவுகூர முயன்றேன். அது என் நினைவுக்கு வரவில்லை. இப்படித்தான் எனக்கு முக்கியமானவை எவையும் நினைவில் இருப்பதில்லை. அலைபேசி வழியாக அவரின் இணையத்தைத் திறந்து, அந்தக் கட்டுரையின் தலைப்பை நினைவுகூரலாம்தான். ஆனால் நான் என் நினைவுத்திறனைச் சோதித்துப் பார்க்கவே விரும்பினேன்.
அது ஒருசொல் தலைப்புதான். அந்த ஒற்றைச் சொல்லே மொத்த கட்டுரையின் செய்தியை எளிமையாக எடுத்துரைத்திருந்தது. ‘அந்தச் சொல் என்ன சொல்? சொல், சொல்?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். என் மூளை, “தெரியவில்லை. மறந்துவிட்டது. மன்னித்துவிடு” எனக் கூறிக் கதறத் தொடங்கியது. ஒரு சொல் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் விளக்கிய அந்த ஒற்றைச் சொல்லின் முதல் எழுத்துகூட நினைவிருக்கிறது. ‘வ’.
‘வ’ வில் தொடங்கும் அந்தச் சொல் என்ன சொல்? சொல், சொல்? வண்டி, வட்டம், வடகம், வறுவல் … என என் உதடுகள் உச்சரிக்கத் தொடங்கின. மனசுக்குள் நிகழும் கண்ணாம்மூச்சு விளையாட்டு இது. இதில் வழக்கமாகத் தோற்பது நான்தான். நான் தோற்றமர்ந்து அதனைப் பற்றிச் சிந்திப்பதையே அடியோடு மறந்தபின்னர், அது ‘டக்’கென எங்கிருந்தோ வந்து மூளைக்குள் குதித்திறங்கி, என் நினைவுகளில் நின்றாடும். வேறென்ன செய்ய? நானும் சேர்ந்து அதனோடு ஆடவேண்டியதுதான்.
நான் தார்ச்சாலையில் நடந்து கொண்டே இருந்தேன். மாபெரும் கருநிறப் பாம்பு போல அது வளைந்து, நெளிந்து கிடந்தது. இன்னும் இரண்டு திருப்பங்களில் ஜெயமோகனின் வீடு வந்து விடும். உடனே அங்குச் சென்றுவிட எனக்கு விருப்பமில்லை. அவர் வீட்டினை நெருங்க நெருங்க எனக்குத் தயக்கம் கூடிக்கொண்டே இருந்தது.
அருகே ஒரு வீட்டின் வாசலில் மகிழம் பூக்கள் கொட்டிக் கிடந்தன. மகிழ மரம் அந்த வீட்டுச் சுற்றுச் சுவருக்குப் பின்னாலிருந்து சாய்ந்த குடையெனத் தார்ச்சாலையை எட்டிப்பார்த்தபடி இருந்தது. நான் நின்றேன். குனிந்து ஒரு மலரை மட்டும் எடுத்தேன். அதைக் கையில் ஏந்திக்கொண்டு மெல்ல மெல்ல நடந்தேன். முதல் திருப்பத்தைக் கடந்ததும் அதனைச் சட்டைப் பைக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டேன்.
நான் கல்லூரியில் படிக்கும் போதிருந்தே ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை ஜெயமோகனைச் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் நான் அவரை இங்குவந்துதான் சந்திப்பேன். பின்னர் நெடிய இடைவெளி. காலச்சூழல். இறுதியாக நான் பத்தாண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து ஜெயமோகனைச் சந்தித்தேன். அப்போது நான் ராமபாணத்தை எழுத தொடங்கி இருந்தேன். அஜித்தின் திருமணம் நடந்த சமயம் அது. அதன் பின்னர் இன்றுதான் மீண்டும் நான் ஜெயமோகனைச் சந்திக்கப் போகிறேன்.
‘யாரெல்லாம் அவரைப் பார்க்க இன்று இங்கு வந்திருக்கிறார்களோ?’ என்ற குறுகுறுப்போடு அவரின் வீட்டினை நெருங்கினேன். வீடு கம்பீரமாக அவரைப்போலவே இருந்தது. ஆனால், நான் முன்பு பார்த்ததுபோல இல்லை அது. அமைப்பும் நிறமும் மாற்றப்பட்டு முற்றிலும் வீடேமாறியிருந்தது. வாசலில் கோலமில்லை. அப்போதுதான் என் மனம் கவனித்தது – அவர் வீட்டு வாசலில் யாருமே இல்லை என்பதனை. அவர் வீடு வெறுமையாக இருந்தது. அந்த வெறுமையே எனக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது.
‘இங்கு யாரும் இல்லையே! இங்கு யாருமே இல்லையே!’ என்ற உணர்வு மட்டுமே என் மனம் முழுக்க நிறையத் தொடங்கியது. தமிழ் இலக்கியச் செயல்பாட்டாளர்கள் மீது எனக்கு வெறுப்புக் கூடியது. ‘ஏன் யாருமே இங்கு வரவில்லை? உள்ளூர் இலக்கியக்கார்கள்கூட ஏன் இன்னமும் இங்கு வரவில்லை?’ எனக்குள் ஆத்திரம் பொங்கியது. என் முகம் கடுக்கத் தொடங்கியது. ‘யாரும் வராவிட்டால்தான் என்ன? அதனால் என்ன, நான் இங்கு வந்துவிட்டேனே!’ என நினைத்து என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
ஜெயமோகனின் வீட்டுவாசலுக்கு வந்துநின்று அழைப்புமணியை அழுத்தினேன். ஒரு பெண்மணி கதவைத் திறந்தார். அவருக்குத் தான்யாவின் முகஜாடை. அஜிதனின் திருமணத்தில் பார்த்தது. வெளியே வந்து, வீட்டுச் சுற்றுச்சுவரின் இரும்பு கேட்டினைத் திறந்தார். என்னை அவர் ‘யார்?’ என்று அவர் கேட்கவில்லை. ‘தெரியாதவர்களுக்கு யாரும் இவ்வளவு சாவகாசமாக கேட்டினைத் திறந்துவிடமாட்டார்களே!’ என்று நினைத்தேன்.
‘தன் மாமனார் எடுத்துள்ள இந்த முடிவினை இவர் முன்பே அறிந்திருப்பார். நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புக் கட்டுரையையும் அவர் படித்திருப்பார். அதனால், இன்று தன் மாமனாரின் வாசகர்கள் அவரைச் சந்திப்பதற்றாக வந்துகொண்டே இருப்பார்கள் என்பதனை அவர் எதிர்பார்த்திருக்கலாம். அதனால்கூட அவர் என்னைப் பற்றி விசாரிக்காமல் இரும்பு கேட்டின் கதவையும் திறந்திருக்கலாம்’ என்று நினைத்தேன்.
இவையெல்லாம் உண்மைதான். ஆனால், என் கணிப்பில் ஒன்றுமட்டும் பிசகிவிட்டது. அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது. உண்மையில் எனக்குத்தான் அவரை அடையாளம் தெரியவில்லை. அவர் தான்யாதான். பத்தாண்டுகளில் இயல்பாகவே உடலில் ஏற்படும் மாற்றங்கள்தான் அவரை எனக்கு உடனடியாக அடையாளம் காட்டத் தடையாக இருந்தன.
நான் தயங்கியபடியே மெதுவான குரலில், “நான் சரவணன். மதுரை” என்றேன்.
“தெரியும். ராமபாணம்தானே?” என்று கேட்டார் தான்யா.
‘இதுபோதும்’ என்றாகிவிட்டது எனக்கு. ‘வேறென்ன என்னைப் பற்றிச் சொல்ல இருக்கிறது?’ என்று நினைத்துக்கொண்டு, புன்சிரிப்புடன் நுழைந்தேன். செருப்புகளைக் கழற்றுவதற்காகக் கால்களை அனிச்சையாக உதறினேன். அப்போதுதான் நான் செருப்புகளை அணியவில்லை என்பதையே உணர்ந்தேன். நான் தன்னிலை இழந்த நிலையில்தான் என் வீட்டைவிட்டுப் புறப்பட்டிருந்தேன்போல. வீட்டுக்குள் சென்றேன். அவர் கதவுகளை அடைத்தார். பின்புறக் கதவு திறந்திருந்தது. சூரியன் ஹாலின் தரையில் பாய்ந்து விழுந்து படர்ந்து பரவிக் கொண்டிருந்தது.
தான்யா ஹாலில் இருந்த குஷன் ஷோபாவை நோக்கித் தன் கையைக்காட்டியபடியே, ‘உட்காருங்க’ என்றார். அமர்ந்தேன். அது என்னைத் தன்னுள் புதைக்க முயன்றது. பறக்க எழுந்து முடியாமல் தளர்ந்து அமர்ந்துவிடும் பறவையைப்போல நான் சற்று எம்பிய நிலையிலேயே அமர்ந்திருந்தேன்.
‘நான் எதற்காக இங்கு வந்திருக்கிறேன்’ என்பதை அவர் ஊகித்துவிட்டமையால் அவர் என்னிடம், “மாமா மொட்டை மாடியில இருக்காங்க. நீங்க இங்கயே கொஞ்ச நேரம் இருங்க. காபி தாரேன். சாப்பிட்ட பின்னாடி அவரைப் பார்க்கலாம். அத்தை பூஜையில் இருக்குறாங்க. அப்புறம் வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்.
நான் ‘சரி’ என்பதுபோலத் தலையை அசைத்துவிட்டு, “பிள்ளைகளக் காணோம்?” என்று கேட்டேன்.
“தூங்குறாங்க. எக்ஸாம் முடிஞ்சுடுச்சுல்ல. அதான்” என்று கூறிவிட்டு காப்பியைத் தயாரிக்கச் சென்றார்.
சமையல் அறையிலிருந்து ‘கஜல்’ இசை காற்றில் கலந்து இழைந்து இழைந்து வந்து ஹாலுக்குள் சுழன்றது. நான் ஹாலின் சுவர்களைப் பார்த்தேன்.
அஜிதனும் தான்யாவும் அவர்களின் இரு குழந்தைகளும் இணைந்து நிற்கும் புகைப்படம் இருந்தது. அதற்கு அருகில் ஒற்றைக் குழந்தையோடு சைதன்யாவும் அவரின் கணவரும் அமர்ந்திருக்கும் புகைப்படம். அந்த இரண்டு புகைப்படங்களுக்கும் நடுவே ஜெயமோகனும் அருண்மொழிநங்கையும் மாறா இளமையோடு அமர்ந்திருக்கும் புகைப்படம். இவற்றுக்கு எதிர்ச்சுவரில் குறும்புச் சிரிப்புடன் நித்ய சைதன்ய யதியின் மங்கிய வண்ணப் புகைப்படம் இருந்தது.
புத்தக அலமாரியில் கண்களையோட்டினேன். ‘வெண்முரசு’ நாவல் தொடர் நூல்கள் வரிசையாக இருந்தன. 26ஆவது நாவலை மட்டும் காணவில்லை. எல்லாம் பழையவையாக இருந்தன. இந்த ‘வெண்முரசு’ தொகுப்பு விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதற்பதிப்பாக இருக்கலாம். எதிர்த்திசையில் திரைப்படம் சார்ந்த விருதுகளின் அணிவகுப்பு. எல்லாம் அஜிதன் வாங்கியவை. அவற்றோடு சேர்த்து, அஜிதன் தன்னுடைய முதல் நாவலான ‘மைதிரி’யைத் தாமே திரைப்படமாக இயக்கியமைக்காக அரசு வழங்கிய வெள்ளிக் கேடயமும் வைக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கு அருகில் நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஜெயமோகனை எடுத்த புதுமுயற்சிப் புகைப்படம் பாதி மறைத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
ஒருமுறை ஜெயமோகன் மதுரை இலக்கியக் கூட்டத்தில் பேசுவதற்காக வந்திருந்தபோது, அவரைப் பழைய விடுதியறையில் நான் எடுத்த புகைப்படம். அவர் யாரிடமோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார். நான் புகைப்படம் எடுத்தேன். அவரை மட்டும் கட்செய்து, பிரிண்ட்போட்டு, மிரர் இமேஜ் வைத்து, இரட்டை ஜெயமோகனாக மாற்றி, அவர் அவருடனேயே தீவிரமாக உரையாடுவதுபோலத் தோற்றமளிக்கும் வகையில் அந்தப் புகைப்படத்தை கலர் பிரிண்ட் போட்டு, லேமினேட் செய்து அவருக்கு வழங்கினேன். அந்தப் புகைப்படம் ஜெயமோகனுக்குப் பிடித்திருந்தது. அவரின் படைப்புகள் அனைத்துமே அவர் அவருடனேயே தீவிரமாக உரையாடுபவைதாமே!
‘ஒரு படைப்பாளரைப் புகைப்படம் எடுக்கும்போது அவரின் படைப்புக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கும் வகையில் எடுக்க வேண்டும்’ என்று என்னுடைய புகைப்படக்கல்வியின் ஆசான் ஆர்.ஆர். சீனிவாசன் கூறினார். அவர் எழுத்தாளர் நகுலனை அப்படித்தான் புகைப்படம் எடுத்தார். நனவும் கனவும் கலந்த நகுலனின் படைப்புலகை வெளிப்படுத்தும் வகையில் நகுலனின் உருவத்தை பிளர் ஷாட்டில் எடுத்து, அதைப் புகைப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அதுபோன்றதோர் உத்தியைத்தான் நான் ஜெயமோகனைப் புகைப்படம் எடுக்கும்போது பயன்படுத்தினேன். இப்போது அந்தப் புகைப்படம் வண்ணம் மங்கி, பொலிவிழந்துவிட்டது. ஆனாலும் அந்தப் புகைப்படத்துக்குள் இருக்கும் இரண்டு ஜெயமோகன்களின் உரையாடல்களும் தம் தீவிரத்தை இழக்கவேயில்லை.
காபியோடு வந்தார் தான்யா. அப்போதுதான் நினைத்தேன், ‘இவர்களுக்காக நான் எதையுமே வாங்கிவரவில்லையே!’ என்று. நான் எதையுமே வீட்டிலிருந்து எடுத்தும் வரவில்லை. கையில் அலைபேசி, கொஞ்சம் பணம். அவ்வளவுதான். பேருந்து ஏறிவிட்டேன். இப்போது என் சட்டைப்பையில் ஒரேயொரு மகிழம் பூ. அவ்வளவுதான் என்னிடம் இருக்கிறது. ஆனால், என் மனம் முழுக்க ஜெயமோகனின் படைப்புகளே நிறைந்திருக்கின்றன – நித்யமாக இருக்கின்றன. அவற்றோடுதான் நான் எப்போதும் எங்கும் சென்றுவருகிறேன். தோன்றாத்துணையாக அவை என்னை நல்வழிப்படுத்துகின்றன.
என்னிடம் காப்பியைக் கொடுத்துவிட்டு, “அத்தை பூஜையில் இருக்காங்க. நீங்க காபி சாப்டப்புறம் மாமாவப் பார்க்கப் போங்க” என்றார். மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்துகொண்டார்.
நான் காப்பியைப் பருகிவிட்டு, அதைக் கீழே வைத்தேன். வீட்டின் பின்புறம் வழியாகச் சென்று, படிக்கட்டுகளில் ஏறி முதல் மாடிக்குச் சென்றேன். அங்குதான் ஜெயமோகனின் எழுத்தறை இருக்கிறது. உள்ளே நுழைய விருப்பமில்லை. இனி, அங்குச் சென்று என்னதான் செய்ய? அங்கிருந்து அவர் எழுதியவை அனைத்தும் அவரின் இணையதளத்தில் இருக்கும்போது இந்த வெற்றறையைப் பார்த்து என்ன செய்ய? இனி, ஜெயமோகன் அங்கமர்ந்து ஓர் எழுத்தையும் எழுதப் போவதுமில்லை. என்னைப் பொருத்தவரை அந்த அறை இனி, எழுத்தறை அல்ல; வெற்றறைதான்.
அங்கிருந்து மொட்டை மாடிக்குச்செல்லும் படிக்கட்டின் முதல்படிக்கு அருகில் பிரம்பு நாற்காலி இருந்தது. அது வழக்கமாக ஜெயமோகன் பயன்படுத்துவதுதான். அதில் அமர்ந்த நிலையில் பல புகைப்படங்கள் அவரின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதன் விளிம்பைத் தொட்டுப் பார்த்தேன். நான் அவரின் வலது தோளைத் தொடுவதுபோன்றே உணர்ந்தேன்.
மொட்டை மாடிக்குச் செல்வதற்காகப் படிகளில் ஏறினேன். நான் ஒவ்வொரு படியாக ஏற ஏற அது எனக்கு ஜெயமோகன் சார்ந்த முக்கிய நிகழ்வுகளைப் பின்னோக்கிய வரிசையில் நினைவூட்டியது.
கடந்த மாதம் புதுதில்லியில் நடைபெற்ற ‘வெண்முரசு’ நாவல் வரிசையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டுவிழா – ‘வெண்முரசு’ நாவல் தொகுப்பை முழுமையாக விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டமை – ‘விஷ்ணுபுரம்’ நாவலின் வெள்ளிவிழாப் பதிப்பு – ‘பொன்னியின் செல்வன் – 1&2’ திரைப்படங்களின் மாபெரும் வெற்றி – தூரன் விருது விழா தொடக்கம் – தமிழ் விக்கியின் தொடக்கம் – ‘கொரோனா’ ஊரடங்கு நேரத்தில் நாளும் ஒரு சிறுகதை என எழுதித் தள்ளிய புனைவுக்களியாட்டுக் கதைவரிசை – ‘வெண்முரசு’ நாவல் வரிசை நிறைவையொட்டிய குருபூர்ணிமா சந்திப்பு – ‘பத்மஸ்ரீ’ விருதினை ஏற்க மறுத்தமை – எழுத்தாளர் அசோகமித்திரன் தலைமையில் நடத்தப்பட்ட ‘வெண்முரசு’ நாவல் வரிசை நூல்களின் பிரம்மாண்ட வெளியீட்டுவிழா – ‘வெண்முரசு’ நாவல் வரிசையின் முதல் அத்யாயம் முதன்முதலாக இணையத்தில் பதிவேற்றப்பட்டமை – முதல் கட்டண உரையின் பெருவெற்றி – ‘கஸ்தூரிமான்’ திரைப்படம் – ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் எழுப்பிய சர்ச்சை – ‘சொல்புதிது’ காலாண்டிதல் வெளியீடு – ‘விஷ்ணுபுரம்’ நாவல் பற்றிய ஜெயமோகனின் ‘இந்தியாடுடே’ பேட்டி – காலச்சுவடு வெளியிட்ட ‘பத்மவியூகம்’ குறுநாவல் … என இப்படியாகக் காலத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பதற்காகவே என் நினைவுகளைப் பின்னோக்கி இழுத்து, என்னை அவரை நோக்கித் தள்ளின இந்தப் படிக்கட்டுகள்.
மொட்டைமாடியில் வெய்யில் கொட்டிக்கிடந்தது. தரையில் பெரிய வெள்ளைத் துணி விரிக்கப்பட்டிருந்தது. ஜெயமோகன் அதன் மையத்தில் பத்மாசனமிட்டு வடக்குத் திசையைப் பார்த்தபடி அமர்ந்து, தியானத்தில் உறைந்திருந்தார். உடலில் துளி அசைவும் இல்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. விழிகள் இயல்பாக மூடியிருந்தன. அவற்றில் அசைவே இல்லை. உடலில் இடுப்பில் மட்டும் வெள்ளைத் துண்டினைச் சுற்றியிருந்தார். மிகவும் மெலிந்திருந்த அவரின் உடலில் வெண்முடிகள் நீண்டு வளர்ந்து அடர்ந்திருந்தன. ஆயிரம் இதழ் தாமரையொன்று தனது அத்தனை இதழ்களையும் மையத்தை நோக்கி இழுத்துக் குவித்துச் சுருட்டித் தன்னுள் தானே புதைந்துபோவதுபோல அவர் இருந்தார்.
நான் அவருக்கு முன்பாகச் சென்று வணங்கியபடியே நின்றேன். துளித்துளியாகக் காலம் கரைந்துகொண்டிருந்தது. மகிழம் பூ என் நினைவுக்கு வந்தது. அதனை எடுத்து அவருக்கு முன்பாக அந்த வெள்ளைத் துணியின் மீது வைத்தேன். அதற்குமேல் அங்கு நின்று அவரைப் பார்க்க எனக்கு மனத்துணிவு இல்லை. மீண்டும் அவரை வணங்கினேன். திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன்.
படிவழியாகக் கீழிறங்கி வந்தபோது, அந்தப் பிரம்பு நாற்காலியில் அருண்மொழிநங்கை அமர்ந்து புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார். நான் படிகளில் இறங்கிக்கொண்டே, ‘இவரிடம் என்ன பேச?’ எனச் சிந்தித்தேன். இதற்கு முன்பாக நான் அவரை அஜிதனின் திருமணத்தில்தான் பார்த்திருந்தேன்.
அன்று அவர் அத்தனை பொறுப்புகளையும் தன் தோள்களில் ஏற்றிக்கொண்டு நடப்பதும் ஆணையிடுவதும் நாற்காலியில் அமர்வதுமாக இருந்தார் – இருப்புக்கொள்ளாத பறவைபோல. அன்று அவரிடம் பேசும் வாய்ப்பு எனக்கு இருமுறை கிடைத்தும் நான் அவரிடம் பேசவில்லை. பேசியிருந்தாலும் அது வெறும் சொற்களாகத்தான் அவரின் காதுகளில் விழுந்திருக்கும். அவரின் கருத்தில் ஏறியிருக்காது. அன்று அவர் தன் மகனின் மணவிழாவினை மட்டுமே தன் உடல்-பொருள்-ஆவியென நினைத்து, அதற்காகவே தன்னை முற்றளித்திருந்தார்.
அன்றைய நாள் முழுக்க ஜெயமோகன் ‘ஈரோடு’ கிருஷ்ணனின் நகைச்சுவையில் நனைந்து வெடிச்சிரிப்புடன் திளைத்தும் அருண்மொழிநங்கையின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து கரைந்து மதிகூர்ந்து கடமையாற்றியும் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தார். அவர் ஒருகணம் விட்டேத்தியாகவும் மறுகணம் பொறுப்புள்ள பெருந்தந்தையாகவும் இருநிலையெதிர்வில் மாறி மாறி மின்னிக்கொண்டிருந்தார். இத்தகைய சூழலிலும் அவர் என்னிடம் நான் எழுதும் ‘ராமபாணம்’ பற்றி உசாவினார்.
எனக்கும் அருண்மொழிநங்கைக்கும் இடையில் ‘இரண்டு படிகள்’ என இடைவெளி இருக்கும்போது அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நானும் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவரிடம் ஏதும் பேச எனக்குத் தோன்றவில்லை. அவரைக் கடந்து, தரைத்தளத்திற்குச் செல்லும் படிகளில் கால்வைத்ததும் நிதானமாகத் திரும்பி அவரைப் பார்த்தேன். அவர் கைகளில் இருந்த புத்தகத்தின் அட்டைப்படம் தெரிந்தது. அது ‘வெண்முரசு’ நாவல் வரிசையின் இறுதி நாவலான ‘முதலாவிண்’ புத்தகம். ‘மிகச் சரியான புத்தகத்தைத்தான் அவர் இப்போது மீள்வாசிப்புச் செய்கிறார்’ என்று எனக்குத் தோன்றியது.
படிகளில் இறங்கி, வீட்டின் பின்புறம் வழியாக ஹாலுக்குள் வந்தபோது, தலைவாசல் கதவினைத் திறந்து யாரையோ வரவேற்றுக்கொண்டிருந்தார் தான்யா. நான் ஷோபாவில் அமராமல், ‘வந்திருப்பது யார்?’ என்று பார்க்க கதவுவரை சென்றேன். ஒரு சமணத் துறவி உள்நுழைந்தார். அவரைப் பார்த்ததும் சட்டென எனக்கு அந்தக் கட்டுரையின் தலைப்பு நினைவில் வந்தறைந்தது. ‘வடக்கிருத்தல்’.
துறவிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, தான்யாவிடம் தலையசைத்து விடைபெற்றுக்கொண்டு, தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.
ஜெயமோகன் தன் வாழ்நாளில் பெரும்பாதி நாட்களில் மாபெரும் சிந்தனைகளை, படைப்புகளைச் சொற்களாக்கிச் சுமந்துகொண்டு நடந்த இந்தச் சாலையில், அவரின் பெயரை மட்டுமே என் உள்ளத்தில் எழுதிக்கொண்டு, வெறுங்கைகளை வீசியபடியே நடந்தேன்.
நல்ல வெய்யில். கால்கள் சுடத்தொடங்கின. மகிழமரத்தடியில் விழுந்திருந்த பூக்களை மிதித்தபடி சற்று நேரம் நின்றேன். எனக்கு எதிரே நடந்தும் ஆட்டோக்களிலும் வாடகை கார்களிலும் சொந்த வாகனங்களிலும் விஷ்ணுபுர இலக்கிய வட்டம் சார்ந்த நண்பர்கள் ஆண்களும் பெண்களுமாகப் பலரும் வந்துகொண்டிருந்தனர்.
‘முந்தியோ பிந்தியோ, காலஇடைவெளியைக் கடந்தோ, கடக்க முடியாமலோ எப்படியானாலும் சரி, ஆனால் இறுதியில் எல்லோருமே இங்கு வந்துவிடுவார்கள்’ என்றுதான் எனக்குத் தோன்றியது. ஜெயமோகனின் பொன்னெழுத்துகளுக்கும் எனக்குமான முடிவுறாத உரையாடலில் என்னைச் சரியாகவும் முற்றிலுமாகவும் இணைத்துக் கொள்வதற்காகவே நான் நிற்காமல், யாரிடமும் ஏதும் பேசாமல் நடந்துகொண்டே இருந்தேன் – பார்வதிபுரத்தையும் கடந்து.