(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இன்றைக்குப் பார்த்த விஷயம் ரொம்ப ருசிகரமானது. தெருக் குப்பைத் தொட்டிக்கருகில் ஒரு வாழைக்கட்டை கிடந்தது. அதைப் பையன்களும், பெண்களும் எடுத்து, உரித்து அதிலிருந்த இளங்குறுத்தை ஆளுக்குக் கொஞ்ச மாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு, மூன்று நிமிஷத்திற்கப்பால் தெருவழியே சென்ற பால்காரக்குட்டி ஒருத்தி எனக்குக் கொஞ்சம் என்று கேட்டாள். குழந்தைகள் கொடுக்க மறுத்து விட்டன.
ஒருகணம் அவள் முகம் சுண்டிப் போயிற்று. ஆனால் மறுகணம் பால் பாத்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு, கடவுள் கொடுத்த கையை நம்பத் தொடங்கி விட்டாள்.
உலகத்தில் சொத்துக்கள் முதலில் யாரிடம் சிக்கிக் கொண்டனவோ அவர்களுக்கே அது சாஸ்வதமாகி விடுகிறது.
பிறர்கள் தங்களுக்கும் கொஞ்சம் தேவை என்று சொல்லும்பொழுது முதல் கட்சியினர் தங்கள் கையிருப்பை நிலை நிறுத்தவும், இறுக்கவும் எவ்வளவு தத்துவங்கள், கதைகள், கயிறுகள் திரிக்கிறார்கள்!
ஆனால் இவைகள் செல்லும்படியாவதில்லை. எனவே, கடவுள் கொடுத்த கையை நம்பி ஆரம்பிப்பது இயற்கைதானே!
உண்மையில் யாரும் கடவுளை நம்புவதில்லை. நம்பினால் பொது உடமையைத் தவிர வேறு எதற்கும் இடத்தைக் காணோம்.
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.