கிராமத்திலிருந்து அண்ணன் மணியைப் பார்க்க வந்திருந்த சத்யா. அவருடைய மளிகைக் கடைக்கு விஜயம் செய்தான்.
அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செய்தித் தாள்களை ஒவ்வொன்றாக உருவி, கூம்பு வடிவத்தில் லாவகமாக மடித்து.
அவைகளில் பலவகையான மளிகைச் சாமான்களைப் போட்டு, சணல் நூலால் கட்டி வாடிக்கையாளர்களுக்கு மணி கொடுத்துக் கொண்டிருந்ததை அவன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கடையில் சற்று கூட்டம் குறைந்தவுடன், தன் சந்தேகத்தை அண்ணனிடம் வெளிப்படுத்தினான்.
“சென்னையின் முக்கியப் பகுதியில் மளிகைக் கடை வச்சு நடத்திக்கிட்டு இருக்கிற நீங்க.பழைய முறைகளையே கடைப்பிடிச்சு. கஷ்டப்படறீங்க. சாமான்களை, பாலீதீன் பைகளில் போட்டுக் கொடுத்தா, பொட்டலம் கட்டற வேலை குறையுமில்ல’ என்றான்.
அப்போது, “நேற்று நீங்க மிளகாய் கட்டிக் கொடுத்த பேப்பரில் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன் அண்ணாச்சி. இறந்துபோன் ஒரு இந்து இளைஞனின் குடும்பம், அவரோட கண்களை ஒரு இஸ்லாமிய இளைஞனுக்கு தானமா கொடுத்த அந்தச் செய்தியைவிட, மனித நேயத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கு வேறு உதாரணமே தேவையில்லை. அதை உற்றார் உறவினர்களுக்கு படித்துக் காட்டியதும் கேட்டவங்க கண்கள் கலங்கிடுச்சு’ என்று, வந்த வாடிக்கையாளர் தன் அனுபவத்தை விவரித்துவிட்டு, சர்க்கரை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
“பாலிதீன் பையினால் சுற்றுப்புறச்சூழலுக்குக் கெடுதல் தான் நேர்கிறது. அது மட்டுமல்ல, செய்தித் தாள்கள் படிப்பவர்கள்
குறைந்துவரும் இந்தக் காலத்தில், ஒரு சிலராவது, மனித நேயம் சம்பந்தப்பட்ட நல்ல செய்திகளைப் படித்தால், அது அவர்களுடைய மனதை பதப்படுத்தும்’ விளக்கமித்த அண்ணன் மணி, சத்யாவுக்கு ஒரு ஆச்சரியப் பெட்டகமாகத் தெரிந்தார்.
– ஜூன் 2014