பைத்திய ருசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 12,152 
 

பைத்தியங்களைக் கழுவிக் கழுவி பைத்தியமான நதி. அடிப்பருத்து அகல இலைகளைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் அப்பெரிய மரத்தின் நீள வேர்கள் குடித்துக்கொண்டிருந்த நதி எப்போதும்போல் நகர்ந்து கொண்டிருந்தது. புனல் பெருக்கோடும் ஆர்ப்பாட்ட வேகமும் இல்லை, நீரின்றி நிலம் காட்டி மணல் நரம்பை வெயிலில் விரிக்கும் நிசப்தமும் இல்லை. நீர் நீராகவே கொள்ளும் நித்திய நதி. நீரின் நிறமும் குணமும் மாற்ற முயற்சித்துத் தோற்ற வெயில் பற்றி அறிந்தவர்கள் அவர்கள். உதிர்ந்த சருகுகளின் மீது மாலை வெயில் புரண்டு புரண்டு மிதந்து கொண்டிருந்த பொழுதினையும் அறிந்திருந்தார்கள். அந்நதியில் பனி இறங்கும் அதிகாலையில் அலற அலற குளித்திருக்கிறார்கள். நதியும் அப்பொழுதில் மெல்லிய குளிர் அலறலுடன் சுழிக்கும். இப்போது பனி இல்லை. வெயில் இல்லை. சங்கிலியில் கட்டப்பட்டிருந்தவர்கள், கம்பிகளுக்குப் பின்னே உலகம் அமைத்தவர்கள், சீருடை வாழ்க்கையில் சிக்கி சிதைந்த மனங்களின் ஓலங்கள் அந்த வளாகமெங்கும் அலைந்துகொண்டிருந்தன. அந்த அறையில் ஒளிந்திருந்த இருளில் கால் விரித்து படுத்திருந்த ஒருவன் மனதில் சத்தம்.

”ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…” நதியில் அமர நினைத்து இறங்கிய நாரை ஒன்று நீர் தொட்டு கால் சுருக்கி இறக்கை சிலிர்க்க வானேகியது. ‘டிய்யூக்’

*
இந்த உலகில் பைத்தியமாவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. உங்களுக்குப் பசிக்கவேண்டும். பசியென்றால் சாப்பிட்டவுடன் தீர்ந்துவிடும் பசி அல்ல. ஜென்மத்தில் தீராத பசி. நீங்கள் உங்கள் தலையில் மடேர் மடேரென அடித்துக்கொள்ளவேண்டும். அய்யோ அம்மா பசிக்குதே என்ற அலறல்கள் எல்லாம் உள்ளுக்குள்ளே உறைந்து மடிந்திருக்கவேண்டும். ஒரு வார்த்தை வெளியில் வரக்கூடாது. வாய் பிளந்து நீங்கள் பசித்திணறலில் எச்சில் ஒழுகக் கிடக்கவேண்டும். கண்களை முழுவதுமாகத் திறக்க முடியாமல், மூடினால் மூளையெங்கும் பசி தன் ராட்சத ஆக்டோபஸ் கால்களால் மிதித்துக்கொண்டு பறக்கவேண்டும். சட்டென்று தெருவில் இறங்கும் பசியுடன் நீங்களும் ஒட வேண்டும். கால்களில் காற்றால் ஆன சங்கிலி கட்டியிருத்தல் நலம். மெலிதாய் அல்லது வேகமாய் மூச்சுத் திணறும். சட்டை பட்டன்களை அறுத்து எறிய தயங்கக்கூடாது. இதில் சிலருக்கு தயக்கம் வரும். உடலெங்கும் புண்களுடன் தன் கடைசி நிழலில் உயிர் சுருக்கும் ஒரு நாய் உங்களைப் பார்த்துக் குரைக்கும். அதனைக் கடக்க வேண்டும். நிழல் விலக்கி வெயில் அமர்ந்து இந்த உலகின் இறுதியை ஒரு பார்வை பார்ப்பீர்கள். உத்தமம்.

சட்டை பட்டன்களைப் பிய்த்துவிட்டு கோவிந்தராஜ் இந்த உலகில் இறங்கியபோது குப்பைத் தொட்டியின் அடி ஆழத்தில் கிடக்கும் எச்சில் இலையாய் இந்த வாழ்வு அவனை வரவேற்றது.

*
இமை திறந்து உறங்கப் பழகவேண்டும். எல்லா நாட்களும் உங்கள் தூக்கத்தின் நிறம் கறுப்பாக இருக்காது. திடீரென்று ஒருநாள் உங்களின் உறக்கம் காணாமல் போயிருக்கும். நீங்கள் தேடிக் கண்டடையும்போதோ உங்களிடம் இருக்கும் 3 ரூபாய்க்கு தமிழ் பேப்பர் தரமாட்டார்கள். நன்றாக விரித்துப் படுத்துறங்க இங்கிலீஷ் பேப்பர் நிறைய தருவார்கள். பஸ் நிலையம் முழுவதும் இங்கிலீஷ் பேப்பர்கள் விரிந்திருக்கும். தலைக்குக் கீழ் வலதுகையை முட்டுக்கொடுத்து ஒருக்களித்துப் படுக்கும் முன் கவனியுங்கள். ஏன் இப்படி என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். காட்டுப்பாதையில் நீண்டிருக்கும் ஒற்றை இருப்புப்பாதையில் அகாலமான பொழுதில் ஒரு சரக்கு ரயில் கடந்து போனபின் பரவும் வெறுமை நீங்களாய் இருப்பீர்கள். கொசு கடிக்கும். அதீதமான வெளிச்சம் உங்கள் கண்களில் கால்களில் விழுந்திருக்கும். உடம்பும் மனசும் தளர்ந்து வெளி விரிந்த கனவில் நீங்கள் நுழையும்போது உங்கள் புட்டத்தில் சுள்ளென்று ஓர் அடிவிழும். முரட்டு லத்திக்கம்பின் தீண்டல். மின்சாரப் பாய்ச்சலில் விருட்டென்று உயிர் உங்கள் உச்சிக்குச் செல்லும். பிறகு உறங்கமுடியாது. எப்போதும் உங்கள் உறக்கத்தில் ஒரு லத்தி மிதந்துகொண்டேயிருக்கும். வழி தவறி மோதும் கனவுகளில் மூளை தடதடக்கும். கனவு மனம்.

தன் நினைவெங்கும் பகல்களைப் பதித்துக்கொண்ட கணத்தில்தான் சுப்பிரமணி சுடுகாட்டின் மதியங்களில் தன்னை ஒப்புவிக்கத் தொடங்கினான்.

*

நடு ராத்திரியில் போன் செய்து’ நான் என்ன தப்பு பண்ணினேன்…ஏன் இப்பிடி துரோகம் செஞ்சே’ என்று கதற வேண்டும். துடிக்க வேண்டும். ‘ ஒன்னை நம்புனதுக்கு எனக்கு கெடச்ச பரிசு இதுதானா’ இல்லையென்றால் இப்படி ஒரு கடிதம் நீங்கள் எழுத நேரிடுவது இன்னும் சிறப்பானது.

உனக்கு

முதலும் கடைசியுமாய் நான் எழுதுவது. எனக்கு நீண்ட நாட்களாக ஓர் ஆசை உண்டு. ‘எல்லோர்க்கும் அன்புடன்’ என்று தலைப்பிட்டு வண்ணதாசன் எல்லோர்க்கும் எழுதிய கடிதங்கள் போலவே எல்லோர்க்கும் எழுத ஆசை. அதுபோல உனக்கும். ஆனால், அது இப்படி எல்லோரும் தூங்கியபிறகு பாத்ரூம் லைட்டைப் போட்டுக்கொண்டு அழுதுகொண்டே எழுத நேரிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை. நிறைய அடித்தல் திருத்தல்கள், சொன்னதையே திருப்பிச் சொல்வது போன்ற அபத்தங்கள் இதில் இடம் பெறலாம். அதையும் மீறி பதட்டத்துடன் கூடிய உண்மை உண்டு. இப்போதெல்லாம் மெயில்தான். கையால் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டன. கையெழுத்தே மாறிவிட்டது. தலையெழுத்து கொஞ்சம்கூட மாறவில்லை. இந்தச் சிறிய பாத்ரூமில் வாய்விட்டு என்னால் அழ முடியவில்லை. சத்தம் வெளியே கேட்குமோ என்ற பயம். கண்களைத் துடைத்துக்கொண்டு அவ்வப்போது என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு எழுதும் இந்தக் கடிதத்தின் வலி உன் மனதைக் கொஞ்சமேனும் அசைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

தொடர்ந்து எழுதுவேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. எழுதாவிட்டால் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று பயமாய் இருக்கிறது. விடியும்வரை அழுதுகொண்டிருந்தால் இந்த நெஞ்சுக் குமைச்சல் தீர்ந்துவிடும் என்றால் எத்தனை நன்றாயிருக்கும். உனக்கே தெரியும். நீ இல்லாதபோதுதான் உன்னிடம் அதிகம் பேசியிருக்கிறேன் நான். இப்போதும் ஏதேதோ பேசுவதெல்லாம் நீ இல்லாதபோது. நீ நேசிப்பவர்கள் பட்டியலில் மட்டுமில்லை. உலகில் நீ வெறுக்கும் நபர்களின் பட்டியலில் முதல் நபராகவும் நான் இருக்கிறேன் இல்லையா… இன்னும் கொஞ்சம் அழவேண்டும். தற்கொலைகளை எல்லாம் தாண்டி வந்தாயிற்று. இந்த உலகில் தனியாய் வந்தேன். தனியாய் போவேன். தனிமை கொள்ளாதவன் எதற்கும் தகுதியற்றவன். கசப்பு தின்று வளர்ந்தவன் நான். துரோகம் சம்பாதிப்பதன் வலி புதிதில்லை. எதை நான் தருகிறேனோ அதையே பெறுகிறேன். உலக நியதியை மாற்ற நான் யார். எதுவுமே ஞாபகமற்று அறுந்துவிழும் நாடகத்திரை விலக்கி உன் கத்தியினை நெஞ்சில் வாங்குகிறேன்.

குட்பை

நரம்பறுந்து ரத்தம் பெருக்கி கடைசித்துளி உயிரை கண்களில் சேமித்த வினாடியில் குமார் நண்பர்களால் காப்பாற்றப்பட்டான். அவன் தனிமைச் சுவரில் எழுதப்பட்ட கடிதத்தை இப்போது எல்லோரும் வாசித்துவிட்டனர்.

*
அன்பின் அடர்த்தியை அறிந்திருக்க வேண்டும். அடைந்திருக்கக் கூடாது. ஆதரவு மடி தேடி விரையும் இறகென இருத்தல் சாலச் சிறந்தது. காற்று கடத்தும் இறகு புத்தனின் மடியில் வீழ்வது வரமன்று. மறுபடியும் பறவையாகும் விபரீதம் நிகழலாம். இறகின் வலி அறிந்தவர்கள் இவ்வுலகில் இல்லையெனில் சருகாகிவிடுதல் சுகம். எல்லா பைத்தியக்கார விடுதிகளின் நிலவறைக்குள்ளும் ஏகப்பட்ட இறகுகளின் சடலங்கள்.

தன் கதையில் ஒரு பத்தியாய் இதனை எழுதிவிட்டு ஜீவானந்தம் தற்கொலைக்கு முயன்று பின் காப்பாற்றப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டுப் பிணமானான்.

*

ஒரு பிரிவு நிகழும். அசாதாரணமாய் இறங்கும் ஒரு சிலுவை. தனியறையில் தள்ளப்படுவீர்கள். அடர் மரத்தின் கீழ் நிர்மாணிக்கும் தவத்தின் பரிசென, கிடைக்கும் ஓர் இலையில் எழுதி முடிக்கும் வாழ்வு. யாரோ வீசியெறிந்த கூழாங்கற்களால் நிரம்பி நிரம்பி பாடல் வழிந்த நதியில் மிதக்கும் இரு பிணங்கள். உங்களின் இறுதி விக்கல் முடிந்த இடத்தில் ஊர்ந்த நாகத்தின் தொண்டைக்குழியில் காதல் என்று எழுதுவீர்கள். நிலம், மழை, நதி பாடல், வண்ணத்துப்பூச்சி, கனவு, கடல் கடந்து கண்ணீரில் விழும் முத்தம். நீள இரவினை வேண்டி கையேந்துவீர்கள். பரிசீலனையில் இருப்பதாய்ச் சொல்லி பின் பகிரப்படும் உள்ளங்கையில் எழுதப்படும் சில நனவிலிச் சொற்கள். ஒட்டுமொத்த அபகரிப்புக்குப் பின்னாலும் கண்களின் மஞ்சளில் தேங்கும் இறந்த கால முத்தத்தினை சுமந்து அலைவீர்கள் உலகமெங்கும்.

அத்தனை கடிதங்களையும் புகைப்படங்களையும் எரித்து அதன் சாம்பல் கரைத்துக் குடித்தபின் ஜாகிர் உசேன் அமைதியாகி, அதன்பின் தன்னைப் பைத்தியமென அறிவித்துவிட்டு தனியனானான்.

*

சுயக்கொலைகள் நாம் நிகழ்த்துவதன்று. நம் சுயத்தினைக் கொலை செய்யும் இச்சமூகம். தற்கொலை முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். முயற்சி என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். தோல்வியில் முடியும் பெரும்பாலான தற்கொலைகள் உன்மத்த உலகில் சஞ்சரிக்கவைக்கும். எண்ணிப்போட்டால் சாகமுடியாது. அள்ளிப்போட வேண்டும். உள்ளங்கைக்குள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மாத்திரைகள் பார்க்கையிலே இதயத்தின் ஓர் ஓரம் மளுக்கென்று உடைய வேண்டும். கண்ணீர் பெருகும். வாயில் நீர் நிரப்பி சட்டென்று மாத்திரைகள் கொட்டி விழுங்கும் கணமே நீங்கள் வெற்றியைத் தொடுகிறீர்கள் என்று அர்த்தம். உடம்பு முழுவதும் இருதயம் வளரும். இந்த உலகின் கடைசிவரை ஓடிவிட்டவனின் மூச்சு உங்களைச் சுற்றிப்பரவும். நீங்கள் இரைக்கத் தொடங்குவீர்கள். ஐந்து நிமிடத்துக்குள் முகுளம் மரத்துப்போகும். இமை மூடிவிட்டால் தொலைந்தீர்கள். நீங்கள் இறந்துவிடுவீர்கள். மெல்ல வீதியில் இறங்குங்கள். நிமிர்ந்து வெயில் நோக்க ஒத்துழைக்காத கண்கள் நிலம் தாழ்த்துங்கள். பார்வையில் பகல் போய் இரவு வரும். இரவு மறைந்து கண் கூசும். செவிக்குள் யாரோ சிரிப்பார்கள். பின் நிசப்தம்.

ரயில்வே பிளாட்பாரத்து சிமெண்ட் பெஞ்சில் படுத்திருந்த ஒருவனைக் கடந்து நீங்கள் ரயிலேறினீர்கள். உங்களைச் சுமந்த ரயில் அவனைக் கடந்திருந்தபொழுது அவன் நினைவுகளை இந்த உலகம் கடந்திருந்தது.

*

அது ஒரு சனிக்கிழமையாயிருக்கலாம். வேலை முடிந்து சிக்கீரம் வீட்டுக்கு வந்துவிட்ட நீ சந்திக்கும் அதிர்ச்சியை முற்றிலும் உணராதவனாயிருக்கலாம். கதவு தாழ்ப்பாள் இடாமல் அந்த துரோகம் நிகழும். உன் உடமையை, உனது என்று நீ நினைத்துக்கொண்டிருக்கும் உன்னை, நீ அறியாவண்ணம் பிரித்துக்கொண்டிருப்பான் இன்னொருவன். நீ எங்கே சறுக்கினாய் என்பதை உணர முடியாமல் உறைவாய். எல்லாம் சரியாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது என்று நீ நினைத்தது அத்தனை பெரிய தவறு. இனி உன் கையில் எதுவுமில்லை. உன் இருப்பை ஒன்றுமில்லாதவனாக்கிக்கொண்டிருக்கும் அவனோ இந்த ஊரின் பெரிய மைனர். அவன் கண்ணுக்கும் சொல்லுக்கும் முன்னால் உன் எந்த நியாயமும் எடுபடாது. அவனுக்கு அடங்கி தன்னை இசைந்து கொடுத்துக்கொண்டிருக்கும் உன் இயலாமையிடம் நீ என்ன கேட்கப் போகிறாய்? என்ன பதில் எதிர்பார்ப்பாய்? எல்லா துரோகத்தையும், வெறுப்பையும் ஏமாற்றத்தையும் மறக்கும் ஓர் இடமாக நீ தேர்ந்தெடுத்தது உன் ஊரின் கடைக்கோடி சாராயக்கடைதானே. அதன்பின்னான உன் வாழ்வும் இருப்பும் அங்கேயேதான் கழிந்தது. என்ன செய்தாலும் மறக்கமுடியாத துரோகம் ஊரில் உலவும். நீ கொஞ்சம் கொஞ்சமாய் சிதைவாய். ஒரு நாள் அழுக்கு ஆடையில் உன்மத்த பார்வையில் இந்த கிறுக்கு உலகத்தில் உன்னை இணைத்துக்கொள்வாய். மாதவம்.

சிறிதும் ஓய்வின்றி ஒரு துரோகத்தினை உலகுக்கு அறிவித்துக்கொண்டிருக்கும் உதடுகளை சந்திக்கும் போதெல்லாம் எவரின் செவியும் கேட்காமல் போகிறது.

*

காமம் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா? காமத்தின் உச்சம் எதுவென்று தெரியுமா? இதை முழுமையாய் அறியாதவன் உலகம் எத்தனை பரிதாபமானது தெரியுமா? உனக்கு அப்போது மீசையின் ஆரம்பமாயிருக்கலாம். முதன்முறை உன்னை அழைத்த காமம் நிறைய வேர்த்திருக்கலாம். உன் உடம்பெங்கும் பூ பூக்க நீ இயங்கத் தொடங்கியிருக்கலாம். இமை செருகி ஒவ்வொரு பாகமாய் நீ தொலைக்கத் தொடங்கியிருப்பாய். அப்போதுதான் அந்தக் கதவு திறந்தது. அவர்கள் நின்றிருந்தார்கள். தொடங்கியது நிர்வாணமாய் ஓர் ஓட்டம். அது ஒரு காடு. காட்டினைக் கடந்தால் போதும். ஓடு…ஓடு…ஓடு. உன்னால் அந்தக் காட்டைக் கடக்க முடியவில்லை. இன்றுவரை ஓடிக்கொண்டேயிருக்கிறாய். உலகத்து தர்மங்கள் ஒன்றுகூடி கல் எறிந்தன. பூவாய் ஜனித்த உன் மனம் அப்போதுதான் பாறைச் சுவராய் மாறியது. அடி…அடி…அடி. இந்த உலகம் வன்மம் மிகுந்தது தெரியுமா? எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கும் கற்பனைக்கும் மீறிய ஆயுதங்களை அவர்கள் யாரிடம் எப்போது ப்ரயோகிப்பார்கள்? இதோ…இப்படித்தான். எந்தக் கணத்தில் உன் மூளை முறிந்தது என்று உனக்குத் தெரிந்திருக்கும். அதன்பின் வலி மரத்துப்போகும். உடல்விட்டுப் பிரிந்திருப்பாய். உன் குரல் உனக்குக் கேட்காது. ஒருவனைப் பைத்தியப்படுத்திவிட்டு இந்த உலகம் தன் அடுத்த தேடலைத் தொடங்கியிருக்கும். ஓசையற்று, வண்ணம் மறைந்துபோன, நாசித் துவாரங்களில் சதா பாம்பு நகரும் இடுகாட்டில் நீ அழத் தொடங்கியிருப்பாய். நிச்சலனம்.

பெளர்ணமி இரவைப் பார்த்துக்கொண்டு சுயஇன்பம் செய்து தன் உடம்பெங்கும் சுக்கிலம் பரவவிடும் ஒருவனின் பகலுக்கு இந்த உலகம் பயந்தபடி தேனீர் தரும்.

*
கொடுக்காப்புளி கொறித்துவிட்டு ஓடும் ஓர் அணிலை துடிக்கவைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதனைக் கொல்வதற்கு முன் சிறு பிரார்த்தனை நல்லது. நீங்கள் கைகளில் பிடித்திருக்கும் அந்த மரக்குச்சியெங்கும் முட்கள் பொருத்திக்கொள்ளுங்கள். மிகவும் கூர்மையான முட்கள். ஒரு விளாசலில் அந்த அணிலின் தோல் கிழிய வேண்டும். சாம்பல் நிற அணில் கோட்டில் நகரும் சிகப்பு ரத்தம் உங்கள் மனத்தில் மிகப்பெரிய கலாரசனையை உண்டாக்கும். அடுத்த விளாசல் அணிலின் முகத்தின் மீது. அணிலின் நெற்றி அத்தனை மென்மையானது. அதன் உருட்டும் விழிகளில் சிதறும் உலகத்தின் அத்தனை குழந்தைமையையும் கிழிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அணிலின் சடலத்தை பெரிய வெயிலில் வீசிவிட்டு திரும்பி நடக்கும்போது உங்கள் முதுகில் காக்கை கொத்தும். முதுகிலிருந்து தொங்கும் குடலினைச் சலனிக்காது விரையும் கண்களில் நீர் சுரத்தல் மிக மிக நல்லது. பேரமைதி.

அதன்பின் அத்தனை பேரும் உன்மத்த உலகில் புகுந்துகொள்ளலாம். அங்கே நீங்கள் மட்டும்தான். வேறு யாரும் கிடையாது. எப்போதாவது பசிக்கும். உறங்காத மூளை வரமாகும். உச்சந்தலையிலிருந்து ஒரு நெருப்பு சதா பூமிக்கும் வானுக்கும் இடையில் அலைந்தபடியிருக்கும். நீங்கள் மழையில் நனையும்போதெல்லாம் மழை தன் சாபம் நீங்கும். நீங்கள் கடவுளாவீர்கள், எந்தக் கடவுளும் தொட முடியாத ராஜ்ஜியத்தில் இருந்துகொண்டு.

*

தீ விழுந்தது. கடவுள் தனக்குத்தானே வைத்துக்கொண்ட தீ. பிறழ்ந்த நீர் கொப்பளித்துக்கொண்டு விரைந்தது. தொட்டால் உதிர்ந்துவிடும் சாம்பல் அணிந்த பழுத்த இரும்புச் சங்கிலியின் ப்ரபஞ்ச உறவினை சங்கிலியில் கட்டப்பட்டிருந்தவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் கதறலில் நிலை குலைந்தான் கடவுள். அதன்பின் அவன் செவிகளுக்கு எந்த ஒலியும் சென்றடையவில்லை. தலைவிரித்து தீ நாக்கு எழுந்து நின்று காற்றை கருக்கியது. உன்மத்தம் சுமந்த நெருப்பு சுற்றித் திரிந்தது பேய்க்கால்களுடன். அவசரமாய் தூரம் கடக்க முற்பட்ட காகம் ஒன்று சிறகு எரிந்து பட்டென்று வீழ்ந்தது. பற்றிக்கொண்ட பாம்புச் சட்டையில் தீ வண்ணம் காட்டி எரிந்து நெளிந்தது. ரோமம் பொசுக்கிய தீ தோல் உருக்கி கபாலம் பரவ பிறழ்ந்த மூளை ஒன்று தெளிந்தது. பளிச்சென்று கண்கள் திறந்து உடைந்தது உயிர்.’ அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓ…’ மூளையில் கட்டப்பட்டிருந்த சங்கிலி அறுந்தும் இந்த உலகம் சுற்றிச் சுற்றிக் கட்டிய சங்கிலியிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடியது. கால்கள் உதைத்தது. இமை மூடாமல் தீயினை உற்றுநோக்கி அலறியது. தீயோ பைத்திய மேனியுடன் மோதி மோதி களியாடியது. துடிதுடித்து அடங்குமுன் தொண்டையில் நெருப்பணிந்த உயிர் ஒன்று கண்கள் மூடி மெளனமாய் தீ தின்னத் துவங்கியது. ப்ரதேசமெங்கும் பைத்தியக் கருப்பு சுருள் சுருளாய் வானேகி நிறைந்து மூடியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *