பைத்தியக்காரத்தனமான காரியங்களை, பைத்தியங்கள் செய்வதில்லை….

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 12,113 
 
 

தேரிக்காடு… செம்மண் குவியல் குவியலாய் பரந்து கிடந்தது.. அங்குமிங்கும் குட்டையாய் வளர்ந்து கிடக்கும் கொல்லாம் மரங்களும், நெட்டையாய் வளர்ந்திருக்கும் பனை மரங்களும்.. இது தவிர்த்து, கருவேலமும், ஒடைகளும்.. ஒடைநெற்றைத் தட்டி, ஆட்டுக்கு மேய்ப்புக் காட்டிக் கொண்டிருக்கும் கோவணம் பாய்த்த சிறுவர்கள்.. அந்தச் சிறுவர்களில் ஒருவன்தான் இந்தச் சிலுவை.

“இப்ப நாம்ப நிக்றோம்லே, இதுதான் உச்சித்தேரி…” என்றார் நயினாத் தாத்தா. “இதுதான் தேரியிலேயே உசரமான எடம்.. இங்கின நின்னுப் பாத்தா, நம்ப செந்தூர் கோபுரம் தெரியும்.. நாசரேத் சோடாபாட்டில் சர்ச்சும் தெரியும். அதோ நிக்கான்ல, இந்தச் சிலவையும், நானும்தான், காலையில் மொத வேலையா, உச்சித்தேரிக்கு வருவோம். நான் செந்திலாண்டவரைப் பார்த்து ஒரு கும்புடு போட, இவன் நாசரேத் சர்ச்சை பார்த்து, ஒரு தோத்திரம் சொல்வான்.. பிறகுதான் ரெண்டு பேரும், வேலையை ஆரம்பிப்போம்…” என்றார் தாத்தா. சிலுவை வெட்கத்துடன் சிரித்தான்.

நான் பக்கத்தில் இருந்த ஒரு கொல்லாம் மரத்தில் இருந்து, பழத்தைக் கொய்தேன். பழத்தை எறிந்து விட்டு, கொட்டையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டேன். சிலுவைதான் எச்சரித்தான்: “ஐயா… கொல்லாங் கொட்டையைப் பறிப்பது தெரிஞ்சா, மரம் குத்தைக்கு எடுத்தவங்க சண்டைக்கு வந்துடுவாங்க…”

எனக்கு எரிச்சலாய் வந்தது. அமெரிக்கா போய் படிச்ச நான். தாத்தாவைப் பார்ககலாம்னு இங்கே வந்தால், நானும் ஊரைக் காட்டுறேன் என்று, தாத்தா இங்கே உச்சித்தேரிக்குக் கூட்டிட்டு வந்து நிறுத்தி, ஒரு ஆட்டுக்காரனை வச்சு, அறிவுரை வழங்கினா, எரிச்சல் வராம, என்னச் செய்யும்?

“இந்தக் கொல்லாங்கொட்டை ருசியிலே மயங்கின திருவாங்கூர் மகாராஜா தன் ராஜாங்கத்தையே கூட, இதுக்காக எழுதி வைக்கத் தயாராய் இருந்தாராம்..” தாத்தா எப்பவுமே இப்படிதான். எல்லாத்தையும், கொஞ்சம் கூட்டி குறைச்சுதான் சொல்வார்.

உச்சித்தேரியில் இருந்து, இறங்கி வந்தப்ப, ஒரு பனையேறி வந்தார். “இது சிலவையின் அப்பா”னு, தாத்தா அறிமுகம் செய்து வைத்தார். “தேரிப்பயினி ருசிக்கு எதுவுமே ஈடாகாது.. இங்கிலிஷ்காரன் இந்தப் பயினியில் இருந்து சர்க்கரை எடுக்க இங்கே ஒரு தொழிற்சாலைப் போட்டான் என்றால், இதன் இனிப்பு எப்படி இருக்கும்னு, பார்த்துக்கேயேன்..”

பனையேறி பனைஓலையில் பட்டைப் பிடித்து, அதில் பதனீர் ஊற்றித் தந்தார். எனக்கு அதில் சுண்ணாம்பு வாசனைத் தூக்கலாய் இருந்தது.

“தேரி பயினிதான் கருப்பட்டி காய்க்க ஏதுவாய் இருக்கும். நம்மூர் பனைமரம் வாய்க்கால் ஓரத்துலே இருக்குதா, அதலே தண்ணீதான் எதேஷ்டத்துக்கு இருக்கும். நம்மூர் பயினியிலே கருப்பட்டி காய்ச்சா, விறகுதான் நஷ்டம். எரிச்ச விறகுக்குக் கூட, கருப்பட்டி மீறாது..”

இன்னும் கீழிறங்கி வந்தப்ப, ஒரு சிமெண்ட் கட்டிடம். உள்ளே போனோம். நூலாம்படை எங்கும் பூத்திருந்தது. “இதுதான் நான் சொன்ன சர்க்கரைத் தொழிற்சாலை. போதுமான பயினி சப்ளை இல்லைனு, மூடிட்டாங்க..”

அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் சுனை இருந்தது. “இந்தப் பாலைத் தேரிக்காட்டுக்குள், இந்தச் சுனைதான் தாய்பால் மாதிரி, தண்ணீர் ஊற்று. வருசம் பூராவும் தண்ணீ இதுலே இருக்கும். தேரித்தண்ணீனா, ருசி தேனாமிர்தமாய் இருக்கும்..” அருஞ்சுனைக்குள் நுழைந்ததும், சதுப்புக்காட்டுக்குள் வந்தது போலிருந்தது.

அந்தக் கணம்தான் அந்தத் திட்டம் எனது மனதில் உருவானது.

சுனையைச் சுற்றி, தாழம்பூபுதர் படர்ந்து கிடந்தது. “மிந்ததியெல்லாம், சுனையில் மாலை நேரங்களில் கடமான்களும் புள்ளிமான்களும் வந்து நீர் அருந்திட்டுப் போகும்.” தாத்தா நினைவு கூர்ந்தார்.

தாழம்பூ வாசனை, மூளைக்குள் சுருதி பாடி, போதை ஏற்றியது. ‘ஆமாம். என்ன ஆனாலும் சரி, திட்டத்தை நிறைவேற்றிட வேண்டியதுதான்.’ நான் நினைத்துக் கொண்டேன்.

புதர்களில் இருந்து செம்பூத்தின் முரசொலி போன்ற குரல். படித்துறை தண்ணீரைக் காலால் கோதி விட்டேன். தண்ணீரின் குளுமை இதமாய் இருந்தது. சுனையின் மறுகரையில் நீர்க்கோழியும், செங்குருகும் இருப்பது புரிந்தது. சுனை ஊற்று வருசம் முழுசும் ஊறும் என்றாலும், ஆடிமாசம் பொங்கி வழியும். “சாய்ந்தரம் ஆனால் மாட்டு மந்தைகள் சாரைச் சாரையாக தேரிக்காட்டுக்குள் இருந்து வந்து, இங்கின தாகச்சாந்தி செய்யும். பிறகுதான் ஆட்டுக்காரப்பசங்க, மந்தைகளைக் கிராமத்துக்கு ஓட்டிட்டுப் போவாங்க. நம்ப சிலுவையோட மந்தைதான், இங்கின இருக்கிறதுலேயே, பெரிசு.”

தண்ணீருக்குள் கெண்டை கெளுத்தி எல்லாம் கிடந்தது. “மயில் கெண்டைனு ஒரு அபூர்வமான மீன்தான் இந்தச் சுனையில் பிரசித்தம்,” தாத்தா சொன்னார். நீரின் விளிம்பில் தண்ணீர் பாம்புகள் கூட கிடந்தன. மீன்கொத்தி, நீர்பரப்பின் மேலே இறக்கைகளை வேகமாக அடித்தப்படி, நிலையாக ஒரே இடத்தில் குத்திட்டுப் பார்த்த படி, நீருக்குள்ளிருக்கும் ஒரு உளுவை மீனைக் குறிப்பார்த்துக் கொண்டிருந்தது. “நான் நீச்சல் கற்றுக் கொண்டதே, இந்தச் சுனையில்தான். உள்ளே ரெண்டு ஆள் ஆழம் இருக்கும்,” தாத்தா பெருமையாய் சொன்னார்.

அப்பதான் நான் என் ஆசையைச் சொன்னேன். “தாத்தா.. இந்தச் சர்க்கரைப் பேக்டரி உள்ள இடத்துக்கு, இங்கின இருந்து, தண்ணீரைப் பம்ப் செய்து கொண்டு போய், அங்கே ஒரு மினரல் வாட்டர் பேக்டரி போட்டா நல்லா ஓடுமே.. கூடவே இந்தப் பகுதியிலே உள்ளவங்களுக்கு வேலையும் கொடுக்கலாம்..”

தாத்தா என்னைச் சந்தேகத்துடன் பார்த்தார்: “சர்க்கரைப் பேக்டரி போட்டு, இங்கிலிஷ் காரனாலேயே இங்கே ஓட்ட முடியலை. மறுபடியும் எதுக்கு விஷப்பரிட்சை?”

“பதனீர் வருசத்துலே மூணு மாசந்தான் கிடைக்கும். அதனால் சர்க்கரைப் பேக்டரியை, ஒன்பது மாசம் மூடிப் போட வேண்டி இருந்திருக்கும். ஆனால் மினரல் வாட்டர் பேக்டரி, அப்படி இல்லையே?” என்றேன் நான்.

###

இப்பல்லாம் இந்தியர்களை விடவும், என்னை மாதிரி இரட்டைக்குடியுரிமைப் பெற்ற என்.ஆர்.ஐ.களுக்கு ஏதாவது தொழிற்சாலை ஆரம்பிக்கணும்னா, உடனடி அனுமதி கிடைக்கிறது. பலபேருக்கு, நாங்களும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறோம் இல்லையா?

நயினாவும், சிலுவையும் தங்கள் கண்முன்னாலேயே, ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கப் படுவதை, ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “முன்னாடியெல்லாம் அருஞ்சுனை அய்யனாருக்கு, வருசத்துக்கு ஒரு தடவை முளைப்பாரிக் கட்டி, அதை மண்தட்டுகளில் ஏந்திக்கொண்டு, பெண்கள் சாரைச்சாரையாக இங்கே சுனைக்குக் கொண்டு வந்து, தண்ணீயிலே விடுவாங்க. அந்த நேரம் மட்டுந்தான், இங்கின கூட்த்தைத் பார்க்க முடியும். இப்ப அன்னாடு தபதபனு, இங்கே கூட்டந்தான். எல்லாம் இந்த பேக்டரியில் வேலைச் செய்ற ஆளுங்க…”

இருபத்துநாலு மணி நேரமும் சுனைத் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு, புட்டிகளில் அடைக்கப்பட்டு லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டன. தாத்தா சுருங்கின முகத்துடன் உட்கார்ந்திருந்தார். “ஏய்யா, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் பம்ப் பண்ணினா போதாதா? சுனையிலே தண்ணீ வற்றிப் போச்சு. மடுவறுத்து பால் குடிப்பது தப்பில்லையா? மீனெல்லாம், சுனையின் வற்றின தரையிலே கருவாடா காஞ்சிக் கிடக்குது. அதைத் தின்ன கழுகுதான் வட்டமடிக்குது. சுனை மிந்தி எப்படிக் குளிர்ச்சியா இருக்கும், தெரியுமா? இப்ப வெக்கையா அடிக்குது.”

“அப்படியா?” என தாத்தா சொன்னதை அசட்டையாகக் கேட்டுக் கொண்ட நான், அதற்கு பதிலும் அளித்தேன்: “நாம்ப எத்தனைப் பேருக்கு வேலைக் கொடுத்து இருக்கோம்னு பாருங்க. வேற எதையும் பார்க்காதீங்க..”

தாத்தா எனது அசிரத்தையான பதிலால் பொசுங்கிப் போனார்: “நீ எத்தனைப் பேருக்கு வேலைக் கொடுத்திருக்கே? அறுபது பேர்.. மிஞ்சிப் போனா, எழுபது பேருக்கு கொடுத்திருப்பீயா? ஆனா உன்னாலே எத்தனைக் குடும்பம் வேலை இல்லாம பட்டினிக் கிடக்குது தெரியுமா? நீ இந்தத் தண்ணீரைப் பம்ப பண்ண ஆரம்பிச்ச பிறகு, ஆட்டு மந்தைகளுக்கு இங்கே குடிக்கத் தண்ணியில்லை. இதை நம்பி பொழைப்பு நடத்திய நூற்றுக்கணக்கான குடும்பம் நடுத்தெருவிலே நிக்குது. அது போதாதுனு, இப்பத் தேரிப்பனையில் பயினி கட்டுறதில்லை. எல்ல குறும்பலும் காய்ஞ்சி விழுறதுதான் மிச்சம்..”

“சரி, இப்ப இதனாலே என்ன சொல்ல வரீங்க? இன்டியன்ஸ் ஆர் சென்டிமென்டல் பூல்ஸ்…”

“வேண்டாம்டா! இத்தனைப் பேர் வயித்தெரிச்சலைக் கொட்டி நாம்ப சம்பாதிக்கிற எதுவும் ஒட்டாதுடா.. வேண்டாம்டா.. இந்தப் பேக்டரியை வேற எடத்துக்கு மாத்திட்டு, ஓடிடுவோம்டா…”

“தாத்தா, என்னப் பேசறீங்க.. வேற எடத்துக்கு மாத்தினா, எப்படி இந்தத் தண்ணீயை விக்கறது? தேரித்தண்ணீ, தேவாமிர்தம் என நம்புறதுனால்தானே, நாம்ப அதிக விலைச் சொன்னாலும், ஜனங்க வாங்கிக் குடிக்கிறாங்க? பேக்டரியை வேற எடத்தக்கு மாத்துனா, எல்லாம் குட்டிச்சுவரா போயிடும்..”

தாத்தா மேற்கொண்டு, ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். அருஞ்சுனை அய்யனார் கோயிலின் படித்துறையில் உட்கார்ந்து கொண்டு, கசடாய் சகதியாய் கிடக்கும் சுனைத் தெப்பத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார். ரெண்டு ஆள் உயரத்துக்கு ஆழம் இருக்கும் தண்ணீ, எப்படி வற்றிப் போனது? ‘சுனையின் ஊற்று வாயில், போர் போட்டு எடுத்தால், தண்ணீ வத்தாம என்னச் செய்யும்?’ தாத்தா கண்ணீர் வடித்தார்.

தண்ணீர் வற்றியதால், அந்த சீசினில் தேரிக் கொல்லாம் மரத்தில் பூப்பிடிக்கலை.

ஆடு மேய்க்கும் சிலுவை, சுனைச் சகதியில், ஒரு நீண்ட கோலை வைத்துக் குத்திக் கொண்டே போனான். ‘டக்’கென்று ஒலி.. ஆமையின் ஓட்டில் குச்சி இடித்திருக்கிறது. மண்ணைத் தோண்டி ஆமையைப் பிடித்து விட்டான். “சுனைத்தண்ணீ வத்தினப் பெறகு, ஆட்டு மந்தை மேய்க்க முடியாத படி, பச்சை எங்கும் மறைந்தது. ஒட மரத்துக் காய்ப்புக் கூட நின்னுப் போச்சு. மந்தை பட்டினியில் மறைஞ்சுப் போச்சு. இப்ப ஆமைப் பிடித்து சாப்புடற அளவுக்கு நிலைமை மோசம். இன்னும் எத்தனை நாளைக்கு, ஆமையும் கிடைக்கும்னு பாப்போம்…” என்றான் சிலுவை. அவன் குரல் தளுதளுத்தது.

###

சுனையின் கரையில் இருந்த மருதமரங்கள் கூட, காய்ந்து போயிருந்தன. முன்னர் எல்லாம், பெரும் பழங்கள் போல எப்போதும், அதில் வெளவால்கள் தொங்கிக் கொண்டிருக்கும். சாயந்தரமானால், அவைகள் ஒன்றன் பின் ஒன்றாய் அவை இரைத் தேட கிளம்பும். இப்ப வெளவால்கள் எங்கே போயின? சிலுவை தனது கோவணத்தை இழுத்துக் கொண்டு, நயினா அருகாமையில் குத்த வைத்து அமர்ந்திருந்தான்.

“சிலுவை… இப்ப ஆமையும் கிடைக்கலைனு சொல்றாங்களே? சோத்துக்கு என்னடா பண்றே?” நயினா கேட்டார்.

“எலி பிடிக்கிறேன், மொதலாளி.. இன்னும் கொஞ்சம் காலம் போனா எலிக்கூட கெடைக்காது. அப்பதான் நான் என்னச் செய்யப் போறேனு தெரியலை..”

நயினாவுக்குச் சிலவையைப் பார்க்கச் சோகமாய் இருந்தது. “பொன் முட்டையிடும் வாத்துக் கதை தெரியுமா உனக்கு? வாத்து, பொன் முட்டையிட்டதாம். தினமும் ஒரு பொன் முட்டையை எடுத்துக் கொண்டு, திருப்தியடைய வாத்துக்காரனுக்கு மனசு வரலை. பேராசை.. வாத்தையே அறுத்து அதன் வயித்துக்குள்ளே எத்தனை முட்டையிருக்குனு பாத்தானாம். மொத்தத்தில் வாத்துச் செத்துப் போனதுதான் மிச்சம். நம்ப கதையும், அதே மாதிரி ஆகிப்போச்சுதுடா..”

“மொதலாளி அய்யா… வருத்தப்படாதீங்கோ.. நம்பச் சுனை மறுபடியும் பொங்கி பிரவாளமெடுத்து வடியதான் போகுது. அதை நீங்களே ஒங்க கண்ணாலே காணதான் போறீங்க.. இந்தப் பேக்டரியை நிறுத்திட்டா, மறுபடியும், சுனையில் தண்ணீ பொங்கதானே செய்யும்?” என சிலுவைக் கேட்டான். அவனது கண்களில் தேங்கி நின்ற ஆர்வத்துக்கு, ஆயிரக்கணக்கான அர்த்தங்கள் இருந்தன.

நயினாவுக்கு எல்லாம் நிராசையாக தோன்றியது. அவர் உட்கார்ந்து கொண்டு வானத்தை வெறித்துப் பார்த்தார். ஒற்றை காகம் நாவல் மரத்தில் இருந்து கரைந்து கொண்டிருந்தது.

சிலுவை மெள்ள சுனையின் ஊற்றுக்கண்ணுக்கு அருகில் போய், 2 அடி விட்டத்துக்கு வட்டமாய் போட்டிருந்த போர் குழியை உற்று நோக்கிக் கொண்டிருப்பது, நயினாவின் பார்வையில் பட்டது. அவர் தோள் துண்டை எடுத்து நெற்றியைத் துடைத்து, மறுபடியும் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, சிலுவை நோக்கிய போது, அவனைக் காணோம்.

எங்கே போய் ஒழிந்தான் இந்தச் சிலுவை?

###

சுனை ஊற்றில், தண்ணீர் பொங்கி வந்தது. அய்யனார் படித்துறை வரை தண்ணீ அலை மோதியது. தேரிக்காட்டுக் கோவணச் சிறுவர்கள் ஆடு மேய்த்து, சாயந்தரம் மந்தைக்குத் தண்ணீர் காட்ட சுனைக்கு வருகிறார்கள். பனையில் குரும்பைகள் பிடிக்க துவங்கி விட்டன. கொல்லாம் மரங்கள் திண்ணமாய் பூப்பிடித்திருந்தன. ஓடை நெற்று வஞ்சகம் இல்லாது, காய்த்து குலுங்கியது. ஆனால் நயினா கண்ணில் காணாமல் போன சிலுவை, ‘அருஞ்சுனைக் காத்தச் சிலுவை’யாக அங்கு எங்கும் நிறைந்து கிடந்தான்.

அவன் மறைந்த புதன்கிழமைதோறும், மக்கள் முளைப்பாரி எடுத்து வந்து சிலுவைச் சாமிக்குச் சாத்துகிறார்கள்.

“என் தொழிற்சாலையை மூட வைக்கணும்னு, வைக்ராயமாய் போர் விட்டத்துக்குள் பாஞ்சி, உயிரை மாய்ச்சி கிட்டியேடா, பாவீ? என்ன நெஞ்சழுத்தம் உனக்கு?” மனம் சகியாமல் நான் புலம்பிக் கொண்டிருந்தேன்.

பாதுகாப்பாய் தொழிற்சாலையை ஒட்டலை என என்னைக் கைது செய்து பாளையங்கோட்டை மத்தியச்சிறையில் வைத்திருந்தார்கள். சிலுவையை அடக்கம் செய்த கையோட, நயினாதான் என்னை ஜாமீனில் எடுத்தார்.

பொணம் விழுந்த சுனைத் தண்ணீயைக் குடித்தண்ணீர் என தொடர்ந்து மார்கெட்டில் விற்க முடியலை. தொழிற்சாலையை இழுத்து மூடிட்டோம். “இந்தப் பேக்டரி மேலே கெட்ட ஆவியின் கண் இருக்குது. அதுதான் இங்கே எது போட்டாலும், விளங்க மாட்டேங்குது” என ஊருக்குள் பெரிசுகள் கதை பேசித் திரிந்தன.

என்னை ஒரு மனநலமையத்தில் சேர்த்திருந்தார்கள். நயினாதான் ஒத்தாசையா இருந்தார். “உனக்கு மனஅழுத்தம் வருவதற்கு முன்பே, உன்னை இங்கே கொண்டு வந்து சேத்துருந்தா, சிலுவை அநியாயமா செத்துருந்திருக்க மாட்டான்.. இப்ப நீ பைத்தியம். உன்னால் சமூகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஏனா எந்தப் பைத்தியக்காரத் தனமான காரியங்களையும், பைத்தியங்கள் மட்டும் செய்வதே இல்லை…” என்று அவர் அங்கலாயித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *