பேஸ் புக்! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 22,134 
 
 

ரமேஷூவுக்கு பேஸ் புக், என்றால் உயிர். பேஸ் புக்கில் அவனுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட நண்பர்கள்! பேஸ் புக்கை ஓபன் செய்து விட்டால், பக்கத்தில் இடி விழுந்தால் கூட அவனுக்குத் தெரியாது!

‘பிளஸ் டூ’ பரிட்சையை போன மாதம் தான் ரமேஷ் எழுதி முடித்தான். கடந்த மூணு மாசமாக அவனுடைய அப்பா பேஸ் புக் பார்ப்பதற்கு தடை போட்டு விட்டார். இன்டர் நெட் வசதியுள்ள செல் போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டு, பேசப் பயன்படும் ‘ஆகா வழி’ செல்போன் ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டார்.

ரமேஷ் தன் அப்பாவுக்காக அதையெல்லாம் பொறுத்துக் கொண்டான். ரமேஷூக்கு அம்மா இல்லை. வசதி குறைவான குடும்பம். அப்பா மனைவி இறந்த பின், மறுமணம் செய்து கொள்ளாமல், தன் ஒரே மகன் ரமேஷூக்காக உயிரைக் கொடுத்து உழைத்து, அவன் ஆசைப் பட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பார்.

அந்த ஒரே காரணத்தால் தான், பல்லைக் கடித்துக் கொண்டு, பேஸ் புக் பார்க்காமல் ரமேஷ் கடந்த மூன்று மாசங்களைக் கடத்தி விட்டான்.

தேர்வு முடிந்த மறுநாளே, இன்டர் நெட் வசதியுள்ள தன் செல்போனை அப்பாவிடமிருந்து வாங்கி, கம்யூட்டரில் இணைத்து, பேஸ் புக்கில் ரமேஷ் மூழ்கி விட்டான்.

அன்று பேஸ் புக்கில் மூழ்கியிருந்த பொழுது, தொடர்ந்து செல்போன் அடித்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும், எரிச்சலோடு அதைக் ‘கட்’ பண்ணிக் கொண்டே இருந்தான் ரமேஷ்! அதுவும் விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது.

கிட்டத்தட்ட முப்பது முறை! முன் பின் தெரியாத ஒரு புதிய எண். போன் செய்தவன் மட்டும் ரமேஷ் கையில் சிக்கினால் அதோடு அவன் ஆயுசு முடிந்து விடும்! கொலை வெறியோடு செல்போனை எடுத்தான் ரமேஷ்!

“யார் ரமேஷா பேசறது?….என்ன சார் உங்க செல்போன் லைனே கெடைக்கலே! லைன் கிடைச்சா உடனே ‘கட்’ஆயிடறது! …..உங்களுக்கு ஒரு வருத்தமான செய்தி! ராஜா வீதியிலே மார்கெட்டுக்கு முன்னாலே உங்க அப்பா மேலே ஒரு லாரி ஏறி விட்டது.அவர் உயிர் போகும் கடைசி நிமிஷத்தில் கூட உங்களைப் பார்க்கத் துடித்தார்! அவர் சொன்ன இந்த நெம்பரை வைத்து தான் நாங்களும் ஒரு மணி நேரமா விடாம முயற்சி செய்தோம்!…இப்ப பாடியை ஜி.எச்.க்குகொண்டு போயிட்டாங்க!….நீங்க உடனே ஜி.எச்.க்குப் போங்க!…”

இப்பொழுது அந்த செல்போன் தான் ‘கட்’ செய்யப் பட்டு விட்டது!

Print Friendly, PDF & Email
கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *