அலாரம் அடித்தவுடன் அவசர அவசரமாகக் குளிச்சிட்டு, இரு சக்கர வாகனத்தில் புது பஸ்டான்ட் நிலையத்தை அடைந்தபொழுது காலை 6மணி, பைக் ஸ்டான்டட்ல வண்டிய நிறுத்திட்டு.. சார் சைட்லாக் பண்ணாதீங்கன்னு அங்க இருந்த ஆள் சவுண்ட் குடுக்க” அதன்படி வண்டிய போட்டுட்டு.
6:20க்கு கும்பகோணம் போகும் point to point அரசு பஸ்ல ஏறினேன். உள்ளே ஏறி நோட்டம் விட்டதில் ஒரு மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவிலே ஒரு இருக்கை காலியாக இருந்ததைக் கண்ட நான் அவசரமாக அதை நோக்கி நகர்ந்தேன், ஓரத்தில் அமர்ந்திருந்தவர் நடுவிற்கு நகர்ந்து எனக்கு ஓரத்தைத் தந்தார். பஸ் நிரம்பி வழிந்தது. பெண்கள் பட்டுப் புடவைகளிலும் ஆண்கள் ஜரிகை வேட்டிகளிலும் காட்சி தருவதிலிருந்து அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதும் வெல்லன முகூர்த்தம் என்பதும் தெளிவானது.
நானும் 11மணிக்கு தஞ்சாவூரில் டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் என்பதால்தான் அவ்வளவு சீக்கிரம் பஸ்ஸைப் பிடிக்க ஓடி வந்தேன்.
எப்பொழுதும் போனை நோண்டும் நான் இந்தமுறை அதை செய்யாமல் சற்று நோட்டம்விட்டேன் தெரிந்த முகம் ஏதாவதுள்ளதா என்று, ஆனால் தெரிந்தவர்கள் யாரும் இல்லை!
நான் சுற்றுமுற்றும் பார்க்க என் இடது பக்கத்திலிருந்த இரண்டு பேர் அமரும் இருக்கையில் வாட்டசாட்டமாக ஒருவர் வெள்ளைக் கதர் சட்டை வேட்டியில் அமர்ந்திருந்தார். மோண்ட பனை மரம் போலிருந்தவரது வெள்ளை ஆடைகள் அவரின் நிறத்தைச் சற்றுத் தூக்கலாகக் காட்டியது. நல்ல வெளிச்சத்தில்தான் அவர் வைத்திருக்கும் பெரிய மீசை யாரையும் பயமுறுத்தும். விரைப்பாக முழு இருக்கையையும் அடைத்துக் கொள்வது போல் உட்கார்ந்திருந்தார். அருகே ஒரு வயதானவர் பல்லி போல் ஜன்னலோடு ஒட்டிக் கொண்டிருந்தார்.
இப்போழுதெல்லாம் பஸ்ஸில் பயணம் பண்ணுவது மிகவும் கடினம். ஓரே சத்தந்தான். அங்கங்கு கைபேசிகளில் பலர் சத்தமாக பேசி சிரித்து அழுது சண்டைப் போட்டு ஆரவாரிப்பார்கள். பொது இடம் என்ற நினைவே இல்லாமல் வீட்டையே தெருவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். போதாதற்கு பஸ்காரர்கள் பாட்டுக்களை வேறு சத்தமாக வைத்துவிடுவார்கள். நாற்பது வயது தாண்டும் பொழுது எவருக்கும் சரியாகக் காது கேட்காத நிலைக்கு தள்ளி விடுவார்கள் என்பது நிச்சயம்.
விசில் ஊதிக் கொண்டே பின்வாசல் வழியாக கண்டெக்டர் ஏற முன் வாசல் வழியாக பட்டுப் புடவையில் ஒரு நடுத்தரவயதுப் பெண் ஏறி டிரைவர் அருகே ஏதாவது இருக்கை இருக்கா என்று கண்களைச் சுழட்ட கண்டெக்டர் பின்னால் ஒரு இருக்கையில் இரு பெண்கள் மட்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணிடம்
”பின்னால் வாருங்கள் அம்மா! இடமிருக்கிறது” என்றார்.
“எனக்குப் பின்னாடி வேண்டாம்” என்றது அந்த அம்மா..
“அப்படியா! ஒன்று செய்யுங்கள். முன்னால் டிரைவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்றதும்..
எல்லோரும் கொல்லென்று சிரிக்க அந்தப் பெண் வெட்கி கோபத்தோடு பஸ்ஸை விட்டு இறங்கப் பஸ் புறப்பட்டது.
மிந்தின நாள் இரவு நல்ல மழை பெய்திருந்ததால் நல்ல குளிர். பஸ்ஸில் முக்கால்வாசி ஜன்னல்கள் கண்ணாடிகள் இழுத்துவிடப் பட்டு மூடப் பட்டிருந்தன.
என் இடப்பக்கமிருந்த வயதானவரும் ஜன்னலைச் சாத்த முயற்சிக்க அந்தக் கதர் சட்டைக்காரர் காத்து வேணும் சாத்தக்கூடாது என்று தடுத்தார். வயதானவர் வாடைக் காற்று வீசுகிறது, குளிரும் அதிகமாக இருக்கிறது என்று சொல்ல, வேண்டுமானால் நான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொள்கிறேன் என்றார் கதர் சட்டை. வயதானவருக்கு தயக்கம். நான் பெரியவரிடம் ” இந்தப் பக்கம் வந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் சிரமமாக இருக்கும் என்றேன்” வேறு வழியில்லாமல் இருக்கையில் உட்பக்கம் நகர்ந்து கிடைத்த கொஞ்ச இடத்தில் ஒட்டிக் கொண்டு வந்தார்.
பஸ் மாயுரம் பஸ்டேன்ட் வந்ததும் பலர் இறங்க முற்பட்டனர் எனது சீட்டில் உள்ளவர்களும் எழுந்து நகர்ந்தனர், அப்பொழுது நான் ஜன்னல் ஓரம் நகர்ந்தேன் திடீரென ஒரு கேரிபேக் வெளியில் இருந்து என் மேல் விழுந்தது, யாரோ இடம் பிடிப்பதற்காக அதை வீசி இருக்கலாம் என்றே உணர்ந்தேன். ஏம்பா இடம்பிடித்தது நான் அதில் நீ உக்காந்திருக்கிற என்று பையை போட்டவர் உரிமையுடன் கேட்க, இல்லை நான் இங்க ஏறவில்லை இதே பஸ்ஸிலதான் வர்ரேன் என்றேன், சாரி தம்பி மற்ற ஜன்னல் சாத்தி இருந்தது அதுக்குத்தான் இதில்போட்டேன் என்றபடி என் அருகே அமர்ந்தார்.
காலேஜ், ஸ்கூல் பசங்கன்னு பஸ் பலபலவென்று நிரம்பி வழிந்தது, இடையில் இறங்குபவர்கள் ஏறாதீர்கள் என்று கன்டெக்டர் பலரை தடுத்தாலும், இடையில் இறங்கும் மாணவர்களை அவர் ஏனோ தடுக்கவில்லை! அது அவர்மேல் ஓர் மரியாதையை கொண்டுசென்றது.
கந்தலான கசங்கிய சீருடைகளில் 4 பள்ளி சிறுவர்கள், ஏனோ முனுமுனுத்து சிரித்து களாய்த்து அடுத்தநோடி என்னவாகும் என்ற எந்த கவலையுமின்றி அளாய்கடித்தனர். அவர்களின் சேட்டைகள் பஸ்ஸில் இருப்பவர்களை கவர்ந்தது!
ஆடுதுறையில் பாதிகூட்டம் இறங்க மீதி கூட்டம் ஏற.. அப்டியே நகர்ந்தது!
பயணங்களில் ஏற்படும் தூக்கம் ஏனோ அனைவருக்கும் அதிகமாக வாய்பதில்லை, கண் அசந்த சற்று நிமிடங்களில் கும்பகோணம் பேருந்துநிலத்தை எட்டியது பஸ்.
பல வண்ண-வர்ணங்களில் (தஞ்சாவூர்) புறப்பட தயாராக இருந்த தனியார் பேருந்தை நோக்கி நடந்தேன், சார் எங்கபோகனும் தஞ்சாவூரா என்ற நடத்துனரிடம் ஆமாம்! என்று தலை அசப்பிற்க்கு முன்பே வண்டியில் ஏறி இருக்கையை காண்பித்தார்.
பல இடங்கள் காலியாக இருந்தும் நமக்கான இடங்களை தேடிப்பிடித்து உட்காருவது சற்று குழப்பமாகவே அமையும், இருந்தும் சட்டென்று அமர்ந்து மீதம் உள்ள தூக்கத்தை தொடங்கவேண்டும் என்ற ஆசை, அதற்க்கு சற்றும் எதிர்பாராமல் இளையராஜா சாரும் வண்டியில் ஏறினார்!
சில பாடல்கள் ஒருசிலருக்கு பலவித நியாபங்களை நினைவுபடுத்தும் அவ்வாறான பயணங்களுக்கு சிறந்த தோழன் இளையராஜா சார் பாடல் என்றால் அது மிகையாகாது.
மருத்துவமனையை அடைந்தேன் வியப்பூட்டும் பல அதிசய காட்சிகள், வந்த நோயாளிகளில் பாதிபேர் என் வயதுடைய நபர்கள்தான்.
ஆரோக்கியமாக வாழத்தான் உழைக்கிறோம் என்ற எண்ணத்தை மறந்து சரியான நேரத்தில் சாப்பிடாமல் வேலைசெய்பவர்கள்தான் அங்கு அதிகம்! நானும் அல்சர் பிரச்சினைக்காகதான் சென்றிருந்தேன்.
செல்வத்தை சேமிப்பதற்காக ஆரோக்கியத்தை இழக்கிறோம், பிறகு ஆரோக்கியத்தை மீட்க செல்வத்தை அழிக்கிறோம்.
“பர்ஸ், வயிறு, வண்டி பெட்ரோல், மொபைல் பேலன்ஸ் இவை எல்லாம் காலியானபின் நம்மிடம் எஞ்சி இருப்பது எதுவோ! அதுவே நிரந்தரம்! அதுதான் நாம் செய்த தர்மமும், நமது ஆரோக்கியமும்! என்று என் அத்தா அடிக்கடி சொல்வார்”
ஆம்! நாம் எதிர்காலத்தை மனதில் வைத்து நிகழ்காலத்தை வீணாக்குகிறோம், பிறகு எதிர்காலத்தில் நமது கடந்த காலத்தை நினைத்து வருந்துகிறோம்!
மரணிக்கவே போவதில்லை என்பதுபோல் வாழுகிறோம், பிறகு வாழவே இல்லை என்பது போல் மரணித்து விடுகிறோம்!
நமது வாழ்க்கை பயணம் மிக அழகானது அதை ரசித்து வாழ பழகுவோம்!