பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 6,575 
 

ஓரிடத்தில் ஒரு முதியவள் இருந்தாள். அவளுக்கு ஆக மொத்தத்தில் ஒரே ஒரு பேரிக்காய் மரம் மட்டும்தான் சொத்தாக இருந்தது. குடிசையை ஒட்டி, நிறைய காய்களுடன் அது நின்றிருந்தது. ஆனால் ஒருபோதும் கிழவிக்கு ஒரு பழம் கூட கிடைக்கவில்லை. காய்கள் பழுக்கத் தொடங்கினால் பக்கத்து வீடுகளிலிருந்து பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் அவளை ஏமாற்றிவிட்டு பழங்களைக் கொண்டுபோய் விடுவார்கள். கோபத்தில் கிழவிக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கும்.

அப்படியிருக்கும்போது ஒரு பயணி முதியவளின் குடிசைக்கு வந்தான். அங்கே இரவு தங்குவதற்கு அவன் அனுமதி கேட்டான். “உள்ளே வாருங்கள்” என்றாள் முதியவள். அவன் உள்ளே வந்து படுத்துறங்கினான். மறுநாள் போவதற்கான நேரம் வந்தபோது அவன் கிழவியிடம், “ஏதாவது ஒரு விஷயத்தைக் கேளுங்கள். உங்களுக்கு அது உடனே கிடைக்கும்” என்றான்.

கிழவி சொன்னாள்: “எனக்கு ஒரே ஒரு ஆசைதான் இருக்கிறது. என் பேரிக்காய் மரத்தில் ஏறுபவர்கள் யாராக இருந்தாலும் சரி, நான் இறங்க அனுமதிக்கும் வரை மரத்தில்தான் இருக்க வேண்டும்”.

“உங்களுடைய ஆசைப்படியே நடக்கட்டும்” என்று சொல்லிவிட்டு பயணி புறப்பட்டுச் சென்றான்.

மறுநாள் பேரிக்காய்கள் பழுத்தன. வழக்கம்போல பிள்ளைகள் பழம் திருட வந்தார்கள். அவர்களெல்லாம் இறக்க முடியாமல் மரத்திலேயே சிக்கிக் கொண்டார்கள். கீழே இறங்க அனுமதிக்க வேண்டுமென்று அவர்கள் கிழவியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். கிழவி அதைக் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. கடைசியில் இனிமேல் எப்போதுமே மரத்தில் ஏறக்கூடாதென்ற நிபந்தனையுடன் அவர்களை இறங்க அனுமதித்தாள்.

நாட்கள் கடந்தன. ஒரு மாலை நேரத்தில் மற்றொரு பயணி முதியவளிடம் வந்தான். நடந்துவந்த களைப்பில் அவன் திணறிக்கொண்டிருந்தான். “நீங்கள் எதற்கு வந்திருக்கிறீர்கள்” என்று முதியவள் விசாரித்தாள்.

“நான்தான் மரணம்”. பயணி சொன்னான்: “நான் உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்”.

“சரி, ஆனால் போவதற்கு முன்பு நீ எனக்குக் கொஞ்சம் பேரிக்காய்கள் பறித்துத் தர வேண்டும்” என்றாள் கிழவி.

மரணம் உடனே மரத்தில் ஏறியது. அதனால் கீழே இறங்க முடியவில்லை. கிழவியின் அனுமதியில்லாமல் யாராலும் மரத்திலிருந்து இறங்க முடியாது அல்லவா?

வருடங்கள் கடந்து போயின. உலகத்தில் யாருமே சாகவில்லை. வைத்தியர்கள், மருந்து வியாபாரிகள், புரோகிதர்கள், சவக்குழி வெட்டுபவர்கள் ஆகியோர் அனைவரும் குறை கூறிப் புலம்பத் தொடங்கினார்கள். அவர்கள் அத்தனை பேரும் வேலையற்றுப் போய்விட்டார்கள். அதைவிடவும், எப்படியாவது செத்துவிட்டால் போதும் என்று ஆசைப்படுகிற மிக மிக வயதானவர்களால் இந்த உலகம் நிரம்பி வழிந்தது.

இவையெல்லாம் நம் முதியவளுக்குத் தெரியும். கடைசியில் அவள் மரணம் தரையிறங்குவதற்கு அனுமதித்தாள். அதற்கு முன்பு ‘இனி ஒருபோதும் அவளை அழைத்துச் செல்ல வரமாட்டேன்’ என்று மரணம் சத்தியம் செய்து கொடுக்க வேண்டி வந்தது, அவ்வளவுதான். அந்த முதியவள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்றுதான் சொல்கிறார்கள்.

– ஆகஸ்ட் 2009 (லத்தீன் அமெரிக்க நாடோடிச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு இது).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *