பேய்க் கதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 6,421 
 

பேயைப் பற்றி படிப்பதும், அவைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் நமக்கு அலுக்காத விஷயங்கள்.

முதலில் ஒன்றைத் தெளிவு படுத்திவிடுகிறேன். பேய் என்றால் பெண்கள். பிசாசு என்றால் ஆண்கள். அதனால் எனக்கும் இளம் வயதுப் பேய்களைப் பார்க்க வேண்டும்; அவைகளிடம் நைச்சியமாகப் பேசி அவைகளை காதலிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை. ஏனென்றால் பேய்களைக் காதலித்தால் அவைகளிடம் ரகசியமாக அடிக்கடி தாச்சிக்கலாம். தவிர, எனக்கு வேண்டிய இன்னபிற காரியங்களையும் சாதித்துக் கொள்ளலாம்.

ம்ஹும்… அந்த ஆசைகள் இதுவரை நிறைவேறவில்லை.

அதனால் இப்போதைக்கு பேய்க் கதைகள் இரண்டைப் பார்க்கலாம்…

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். அவன் தன் நிலத்தில் எள் பயிரிட நினைத்தான். ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெரிய புளிய மரத்தைத் தேர்ந்தெடுத்தான். அதை வெட்டித்தள்ள முடிவு செய்து, மரத்தை வெட்டப் போனான்.

கோடரியால் ஓங்கி வெட்டினான். உடனே பல வருடங்களாக அந்த மரத்தில் குடியிருந்த பேய்கள், “ஐயா, நாங்கள் இங்கு நீண்ட காலமாக வசித்து வருகிறோம். எதற்காக தாங்கள் இதை வெட்டுகிறீர்கள்?” என்றது.

“நான் என் நிலத்தில் எள் பயிரடப் போகிறேன். அதற்கு நிலத்தைப் பண்படுத்தி உழுவதற்கு ஒரு நல்ல கலப்பை எனக்கு தேவைப்படுகிறது. அதற்காக இந்தப் புளிய மரத்தை வெட்டப் போகிறேன்…”

“ஓ அப்படியா? தயவுசெய்து இந்த மரத்தை வெட்டாதீர்கள். நாங்களே உங்களுக்கு ஆண்டுக்கு இரண்டாயிரம் கிலோ தரமான எள் கொண்டுவந்து தருகிறோம்.”

“நான் உங்களை எப்படி நம்புவது?”

“சரி, நீங்கள் வீடு போய்ப் பாருங்கள். அங்கு ஏற்கனவே ஆயிரம் கிலோ இருக்கும்.”

விவசாயி வீட்டிற்கு சென்று அங்கு ஆயிரம் கிலோ சுத்தமான எள் இருப்பதை உறுதி செய்துகொண்டு திரும்பி வந்தான்.

“சரி இந்த மரத்தை வெட்டமாட்டேன்” என்று பேயிடம் சொல்லிச் சென்றான். பல ஆண்டுகளுக்கு பேயுடன் இந்த ஒப்பந்தம் நீடித்தது.

அப்போது புளியமரப் பேய்களைச் சந்திக்க ஒரு அசலூர் பேய் வந்தது.

“எல்லோரும் சவுக்கியம்தானே? ஏன் இப்படிப் பேய் அடித்தமாதிரி முகம் எல்லாம் உங்களுக்கு வெளிறிக் கிடக்கிறது?” என்று அக்கறையுடன் கேட்டது.

“அதை ஏன் கேட்கிறாய் போ! நாங்கள் அனைவரும் இந்த ஊர் விவசாயி ஒருத்தனுக்கு கடன் பட்டுவிட்டோம். இரண்டாயிரம் கிலோ எள் தருவதாக அவனுக்கு வாக்கு கொடுத்துவிட்டோம். ஆனால் எங்களுக்கு அதைக் கொடுப்பதற்குள் முழி பிதுங்குகிறது..” என்று புளியமரப் பேய்கள் புலம்பித் தீர்த்தன.

அயலூர்ப் பேய் ஒரு அதிகப் பிரசங்கி.

“அடச் சீ! போயும் போயும் மனிதனைக் கண்டு பேய்கள் பயப்படுவதா? நான் போய் அவனைத் தீர்த்துக்கட்டி விட்டு வருகிறேன்” என்று மார் தட்டிப் புறப்பட்டது.

விவசாயி வீட்டு மாட்டுக் கொட்டிலை அடைந்து அங்கு மறைந்து நின்றது.

அந்த விவசாயி அன்று காலைதான் ஒரு காளை மாடு வாங்கி இருந்தான். அது கட்டுக்கடங்காது ஓடி ஆடித் திரிந்ததால், அதற்கு ‘புதுப்பேய்’ என்று பெயர் வைத்திருந்தான்.

அந்தக் காலத்தில் காளை மாடுகளுக்கு விவசாயிகள் சூடு போடுவது வழக்கம். ஆகையால் மனைவியை நோக்கி சத்தமாக, “அடியே சரோஜா, அந்தப் புதுப்பேயை என்னிடம் இழுத்து வா!! அதற்கு ஒரு சூடு போட்டாத்தான் சரியாக வரும்..” என்றான்.

பேய்களுக்கு நெருப்பு, தீ, கங்கு என்றால் ரொம்பப் பயம்.

இதைக் கேட்டவுடன், புதுப்பேய் தன்னைத்தான் விவசாயி பார்த்துவிட்டான் என்று எண்ணி பயந்துகொண்டு, வெளியேவந்து அவன் காலடியில் விழுந்து ஒரு பெரிய கும்பிடு போட்டது.

“யார் நீ?” அதட்டினான் விவசாயி.

“நான்தான் புதுப்பேய். எனக்கு சூடு போட்டுவிடாதே… உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன்.”

“அதுசரி, நீ எங்கிருந்து வருகிறாய்? ஏன் என் வீட்டிற்கு வந்தாய்?”

உடனே புதுப்பேய் சாமர்த்தியமாக, “உங்களுக்கு வருடம் இரண்டாயிரம் கிலோ சப்ளை செய்யும் புளிய மரப் பேய்கள்தான் என்னை இங்கே அனுப்பி உங்களுக்கு எள் வேண்டுமா அல்லது எண்ணையாகவே சப்ளை செய்யலாமா என்று கேட்டு வருவதற்கு உங்களிடம் அனுப்பின…” என்று சமாளித்தது.

உடனே இதை நம்பிய விவசாயி, “ஓ அப்படியா? ரொம்ப சந்தோஷம். எனக்கு எண்ணையாகவே இனிமேல் சப்ளை செய்யச் சொல்லு” என்று அதிகாரத்துடன் கட்டளை இட்டான்.

புதுப்பேய் தப்பித்தோம், பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடியது.

அங்கு காத்திருந்த புளிய மரத்துப் பேய்கள் ஆவலுடன், “போன காரியம் என்ன ஆயிற்று? அந்த விவசாயி செத்தானா?” என்றன.

அசலூர்ப் பேய் முகத்தில் அசடு வழிய ‘புதிய ஒப்பந்தம்’ பற்றி விளக்கியது. எல்லாப் பேய்களும் தலையில் அடித்துக்கொண்டன.

இனி ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்கிற பழமொழியை ‘பேயும் தன் வாயால் கெடும்’ என்று மாற்றுவதற்கு ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றின. ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற வள்ளுவன் வாக்கை எல்லாப் பேய்களுக்கும் ஆரம்பப் பாடசாலையில் கற்பிக்கவும் முடிவு செய்தன.

‘முட்டாள்கள் நண்பனாக இருந்தால், வேறு எதிரியே தேவை இல்லை’ என்று எழுதி போர்டு வைத்தன. அசலூர் பேய் குதிங்கால் பிடரியில் பட அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

ஒரு காட்டில் ஒரு நரி வசித்தது. ஒருநாள் அதற்கு ரொம்பப் பசித்தது. ஆனால் அதன் துரதிருஷ்டம் ஒரு இரை கூடச் சிக்கவில்லை.

ஒரு மரத்தடியில் யாரோ விறகு வெட்டி விட்டுச் சென்றிருந்த இரண்டு பழைய தோல் செருப்புகள் கிடந்தன. அவை சில ஆண்டுகள் பெய்த மழையில் தோய்ந்து நைந்து பார்ப்பதற்கு மாமிசம் போல காணப்பட்டன.

அதைப் பார்த்த நரிக்கு நாக்கில் உமிழ் நீர் சுரந்தது. அதைச் சாப்பிட ஆசை இருப்பினும் ஒருவேளை அதன் சொந்தக்காரன் அருகில் எங்காவது இருப்பானோ என்று எண்ணி உரத்த குரலில், “யாரங்கே? இந்தச் செருப்பில் நான் ஒன்றை எனக்கு உணவாக எடுத்துக் கொள்கிறேன். அதற்கு விலையாக ஒரு வணிகன் என்னிடம் கொடுத்த தங்கக்காசு ஒன்றைத் தருகிறேன்…” என்றது.

அந்த மரத்தின் மீது வசித்த பேய் இதைக்கேட்டு, “சரி எடுத்துக் கொள். சாப்பிட்டு முடிந்தவுடன் தங்கக் காசை என்னிடம் கொடு” என்றது. அதற்கு ஒப்புக்கொண்ட நரி நைந்த செருப்பை சுவைத்து சுவைத்து உண்டது. தின்று முடித்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்தது.

‘ஆஹா ஒரு ஆளும் இங்கு இல்லை. ஒரே ஓட்டமாக ஓடி விடுவோம்’ என்று ஓடியது. நீண்ட தூரம் போனவுடன், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஒரு புதருக்கு அடியில் ஒளிந்து கொண்டது.

திடீரென்று, “ஏ நரியாரே, எங்கே தங்கக் காசு?” என்று ஒரு குரல் கேட்டது.

அசரீரியைக் கேட்ட நரி மறுபடியும் வேகமாக ஓடியது. ஓடியதில் பாறை; மரக்கிளை; முட்புதர் என்று அடிபட்டு ரத்தக் காயங்களுடன் ஒரு மரப் பொந்தில் ஒளிந்து கொண்டது.

“ஏய் நரி எங்கே என்னுடைய தங்கக் காசு?”

இனி ஓட முடியாது என்பதைப் புரிந்துகொண்ட நரி, வழக்கமான தனது தந்திரக் குணத்தை பயன் படுத்தி, “ஏய் யார் நீ? என்னது தங்கக் காசா?” என்றது.

“அடி செருப்பால… பழைய செருப்பை சாப்பிடுவதற்கு முன்னால் நீதானே தங்கக் காசு தருவதாகச் சொன்னாய்?”

‘சீ, அது நானல்ல. காட்டில் எவ்வளவோ நரிகள் இருக்கின்றன. நீ பார்த்த நரிக்கு கால்களில், முகத்தில் அடி பட்டிருந்ததா? முகத்தில் ரத்தம் கொட்டியதா?” என்று நரி திருப்பி அதட்டியது.

“இல்லை. நான் பார்த்த அந்த நரிக்கு ஒரு அடியும் இல்லை. ரத்தத்தையும் பார்க்கவில்லை.” என்று பேய் சொன்னது.

“அப்படியானால் அந்த நரியைத் தேடி கண்டுபிடித்து அதனிடம் கேள். நான் அதைப் பார்த்தாலும் உன்னிடம் அனுப்பி வைக்கிறேன்.”

இதைக்கேட்டு ஏமாந்த பேய் தன் மரத்தை நோக்கிச் சென்றது. நரியின் தந்திரம் பேயையும் ஏமாற்றிவிடும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *