(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘ரபாய்’
அவனை அறியாதவர்களே இருக்கமாட்டார்கள்,
மடையன் என்றால் அப்படியொரு மடையன்,
பேயன் என்றால் அப்படியொரு பேயன்.
அவனை யாரும் கணக்கிலெடுப்பதில்லை. அதே நேரம் பேயன் என்பதால் கணக்கெடுக்காமல் இருப்பதுமில்லை. ஆச்சரியம் என்னவென்றால் அவனைச் சூழ எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவன் ஒரு பதினைந்து வருடக் கதை. பதினேழு வயதிலிருந்து முப்பத்திரண்டு வயது வரையானது. அவனைப் பற்றி யாரிடமாவது ஒரு மதிப்பீடு கேட்டால் கிடைக்கும் ஒரே பதில்.
“ஈய்யீ அவனா? அவன் பேயன், அவனுக்கு ஆரத்தான் தெரியா! சும்மா ஊருக்க திரியிற தறுதல” என்பதுதான்.
ஆமாம் அவன் பேயன்தான், அவன் பார்க்கும் வேலைகள் அப்படி, அவன் ஊருக்குள் பழகாத மனிதர்களே இல்லை. படித்தவர், பாமரர், இராணுவம், பொலிஸ், விடுதலைப் புலி, கஞ்சாக் குடியன், சூது விளையாடுபவன், பெண் புடியன், குடிகாரன், ஆயுதம் விற்பவன், கடத்தல்காரன், கொள்ளைக்காரன், கள்வன் என்று தொடங்கி ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், வைத்தியர்கள், அரச உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், அதிபர்கள் வரை எல்லாத் தரப்பினரு டைய தொடர்பும் அவனுக்கிருந்தது. எல்லோரைப் பற்றியும் அவனுக்குத் தெரியும். அவன் அவர்களிடம் எதைப்பற்றிக் கேள்வி கேட்டாலும், தகவல் கேட்டாலும் அதற்கு அவர்கள் பதில் சொல்லுவார்கள். இத்தனைக்கும் சிறுவர்களைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை. அவர்கள்தாம் அவனின் நல்ல சிநேகிதர்கள். அவனைச் சூழ எப்போதும் ஒரு சிறுவர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
அது போல அவன் திரியாத வீதிகளுமில்லை. அலையாத தெருக்களுமில்லை, அவன் திரிச்சலுக்கு நேரமும் இல்லை, அதி காலையிலும் வீதியில் இருப்பான், உச்சி வெயிலிலும் இருப்பான், நடு நிசியிலும் இருப்பான். அவனைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. சந்திக்கு வருவான். சந்தைக்குப் போவான். ஆற்றங்கரைக்குப் போவான், அங்கு நீண்ட நேரமிருப்பான், ஆற்றில் தோணியில் திரிவான். மோட்டார் சைக்கிளில் வீதியில் திரிவான். சில வேளைகளில் செருப்பில்லாது அழுக்கடைந்த ஆடையுடன் திரிவான். இத்தனைக்கும் கடைத் தெருவில் எதுவும் வாங்க மாட்டான். சந்தையிலும் எதுவும் வாங்க மாட்டான். அவ்வளவு மீன் வகைகள் கொட்டிக் கிடக்கும். அவன் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். சும்மா கொடுத்தாலும் பல சமயங்களில் எதையும் வாங்க மாட்டான் அப்படியொரு பேயன். ஆனால் அவனுக்கென்று நெருங்கிய தொடர்புள்ள சில கடைகள் இருந்தன அவதானிப்புப் பெறாதபடி. அங்கு மட்டும்தான் எல்லாமும் கொள்வனவு செய்வான்.
அவன் பேச்சில் இருக்கும் இனிமை எப்போதும் மாறியது கிடையாது. மரண வீட்டில் சந்தித்தாலும் அதே இனிமை, திருமண வீட்டில் சந்தித்தாலும் அதே இனிமை. அவன் பேயன் என்பதால் அவனைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. எல்லோரும் அவனிடமிருந்து ஒதுங்கிச் செல்வதையே விரும்புவார்கள். ஆனால் அவன் விட்டால்தானே. வலிந்து சென்று கதைப்பான். அவன் கதையில் பத்தும் பலதும் இருக்கும். அறிவியல் மேதை போலவும் வடிகட்டின முட்டாள் போலவும் அவன் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் அவனோடு நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருக்கலாம். சில போதுகளில் ஓரிரு மாதங்களுக்கு அவனைக் காண முடியாது. அப்படி எங்காவது சென்று வந்து விட்டால் கொஞ்சம் வேகமாக ஓடித்திரிவான். அவனை யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளாததனால் அவன் இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்று தான்.
ஊருக்குள் எங்கேனும் ஒரு களவு நடந்து விட்டால் அவனும் சேர்த்துப் பேசப்படுவான், அது போலவே கொள்ளை நடந்தாலும் அவனது பெயரும் சேர்ந்து ஒலிக்கும், அதற்கான அடிப்படைக் காரணம் அப்படிப்பட்ட அனைவருடனும் இவன் மிக நெருக்கமாகப் பழகுவதுதான், ஆனால் மற்றத் திருடர்களும் கொள்ளையர்களும் மாட்டிக் கொள்வார்கள். இவன் மட்டும் தப்பி விடுவான், அந்த ஆச்சரியம் என்னவென்று ஒருவருக்குமே விளங்குவதில்லை. எந்தவொரு பிரச்சினைக்காகவும் அவனைப் பொலிஸ் கைது செய்ததும் கிடையாது, யாரும் அதைப்பற்றிச் சிந்திப்பதுமில்லை.
விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் நடந்து கொண்டிருந்த நேரடி யுத்தம் ஒரு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கொஞ்சம் ஓய்ந்திருந்த வேளை, ரபாய் என்னைத் தேடி எனது வீட்டுக்கே வந்தான். ஒரு பாடல் சீடி அல்பம் வெளியிட்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுத்துக் கொண்டிருந்த போதுதான் அவனுடனான மிக ஆழமான சந்திப்பு நிகழ்ந்தது. எல்லோரையும் கையால்வது போல அவன் என்னையும் கையாண்டான். எனது படைப்பைப் பற்றியும் புகழ்ந்தான். எனது கைகளைப் பற்றிக் கொண்டு,
“இனி நீங்கதான் என் குரு” என்றான்
அப்போதுதான் நான் சுதாகரித்துக் கொண்டேன். அவன் அடுத்துக் கேட்கப் போகும் கேள்விகள் இன்னதாக இருக்கும் என்று மனதில் எடைபோட்டபடி, அவன் பேச்சுக்கு ஒரு சின்ன ‘ப்ரேக்’ கொடுத்தேன்.
எதிர்பார்த்தபடியே அவன் கேட்டான்.
“உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா?”
நான் எந்த மாற்றத்தையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.
“எதற்காக?” என்றேன்
“எல்லாவற்றுக்கும்தான்”
“அப்படியென்றால்?”
“உங்களின் எல்லாச் செயற்பாடுகளுக்கும் நான் துணை நிற்பேன்”.
“அப்..ப்டி… ஒரு திட்டமும் என்னிடமில்லையே”
“இல்லை உங்களால் அப்படி இருக்க இயங்காமல் இருக்க ஒரு போதும் முடியாது”
“ஏன் அப்படிச்சொல்கிறாய்”
“எனக்குத் தெரியும்… உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது”
“அப்படியொரு பிரச்சினையும் எனக்கில்லை”
“அப்படிச் சொல்ல வேண்டாம், உங்கள் உயிர் பெறுமதியானது. அதைப் பறிக்க யாருக்கும் இலகுவில் சந்தர்ப்பம் கொடுத்துவிட வேண்டாம்”
நான் போலியாகச் சிரித்துக் கொண்டே,
“அப்படியாருக்கப்பா என் உயிர் தேவைப்படப் போகிறது?”
அவன் என்னிடம் எதிர்பார்த்த எந்தத் தகவலும் எனது முகபாவனையில் கூடக் கிடைக்காததால் தனது பேச்சின் தொனியைச் சற்று மாற்றினான். ஐந்நூறு ரூபாயொன்றை நீட்டி நூற்றைம்பது ரூபாய் பெறுமதியான சீடியை வாங்கினான்.
“மிகுதியும் எனது அன்பளிப்பு” என்றான்.
கொஞ்சம் இடைவெளிவிட்டுத் தொடர்ந்தான்.
“இதை நான் ஐந்து முறை பார்த்து விட்டேன். எனக்கும் ஒரு பிரதி வேண்டுமென்பதால் வாங்குகின்றேன்”
“சந்தோஷம் எல்லோருமே உன்னைப் போல இருந்துவிட்டால் எனக்கு நஷ்டம் வராது. அடுத்த முயற்சிக்கு நான் யாரிடமும் கையேந்த வேண்டியிருக்காது”
“சரி நான் வருகிறேன், எதற்கும் வெளியில் பெரிதாகத் திரிய வேண்டாம், கொஞ்சம் அவதானமாகத் திரியுங்கள், இரவில் வெளியேறவே வேண்டாம்”
“அப்படி என்ன பிரச்சினை இருக்கிறது? தெளிவாகச் சொன்னால் தானே புரிந்து கொள்ள முடியும்”
கலவரப் படாமல் கதைத்தேன்.
“இது எனது தொலைபேசி இலக்கம். ஏதும் சிக்கல் என்றால் உடனே கூப்பிடுங்கள்”
வாங்கிக்கொண்டபடி சொன்னேன்.
“நீ யார்..? இனியும் மறைக்கலாம் என்று நினைக்கிறாயா?” அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தேன்,
துவரையும் நீ எதிர்பார்த்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லையே! என்னுடன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததிலும் அர்த்த மில்லையே! இப்படியே போய்விட்டால் என்னவென்று ரிப்போர்ட் அனுப்பப் போகிறாய்?”
என்றதும் அவன் கொஞ்சம் அதிர்ந்து போனான்.
ஆனால் கஷ்டப்பட்டு அதன் உணர்வு வெளிப்பாட்டை மறைத்தான். அழுத்தமாக எச்சில் விழுங்கினான்.
முதன் முறையாக ஓங்கியறையப்பட்டவன் போலப் போலியாகச் சிரிக்க முனைந்தான். அவனிடம் பேசுவதற்கு உடனடிப் பதில் எதுவும் இருக்கவில்லை போலும்.
யோசித்தான் எதைச் சொல்வது? எதை விடுவது? என்பதில் அவனுக்குள் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்.
அல்லது எனக்கு எது தெரியும்? எது தெரியாது? சிலவேளை எல்லாம் தெரியுமோ! என்று அந்தப் பேயன் கலங்கி நின்றான்.
ஆனால் உண்மையில் அந்தப் பேயனைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை எனக்கு. ஒர் அனுமானத்தில் அப்படியொரு போடு போட்டேன். எனது கேள்விக்கான பதிலை என்னிடமே எதிர்பார்த்தால் ஏதோ இருக்கிறது, மேற்கொண்டு சமாளிக்கப் பிடி யெடுக்க நினைக்கிறான் என்பதை விளங்கிக் கொண்டபடி அவனது பதில் அல்லது கேள்விக்காக அவகாசம் விட்டுக் காத்திருந்தேன்.
“அப்படியென்றால்? என்ன சொல்ல வருகின்றீர்கள்? எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை”
“அவ்வளவு எளிதில் என்னை யாரும் கொன்றுவிட முடியாது. இந்த தொலைபேசி இலக்கம் எனக்குத் தேவைப்படாது. நீங்கள் போகலாம், மீண்டும் சந்திக்காமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். இறைவன் எப்போது நாடியிருக்கிறானோ அப்போது எனது மரணம் வரும், அதை யாரும் தடுக்க முடியாது. அப்படித்தான் அவர்களால் தான் எனது மரணம் என்றால், அதுதான் விதியென்றால் அதை எதிர்கொள்ள நான் எப்போதும் தயார். எனது மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்”
மூச்சுவிடாமல் நான் சொல்லி முடிக்கவும்,
“ஆ! அந்தா.. பாத்தீங்களா? உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்று தெரிந்திருக்கிறது. ‘அவர்களால்தான் மரணம்’ என்றால் யார் அந்த அவர்கள்? இனியாவது பேசலாமா?”
நான் தலையில் அடித்துக் கொண்டேன். உணர்ச்சிவசப்பட்டுப் பேசி முக்கியமானதொரு விசயத்தை விட்டுவிட்டேன். சட்டென்று அவனும் அதைப் பிடித்துக் கொண்டு தன் கேள்விகளுக்குப் பதில் தேட முனைந்தான்.
அவனது புத்திசாலித்தனத்திற்கும் அவதானிப்புத் திறனுக்கும் அது நல்ல சான்றிதழ்.
“சரி பேசலாம் ஆனால் இருவரும் பரஸ்பரம் ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும் உங்களைப் பற்றிச் சொல்லி முடியுங்கள். என்னிடம் இருக்கும் தகவல்களுக்கு அது பொருந்தினால் மேற்கொண்டு பேசலாம்” என்றவன் மீண்டும்,
“சரி என்னைப் பற்றிய உண்மைகள் இப்போதைக்குத் தெரிய வேண்டாம். நேரம் வரும்போது அது உங்களுக்கே தெரியும். உங்களைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேன். மேற்கொண்டு பேச முன்னர் இறைவன் மீது ஆணையிட்டு சத்தியம் செய்யுங்கள். நானும் சத்தியம் செய்கிறேன்”
பரஸ்பரம் சத்தியம் செய்து கொண்டோம்.
இறைவன் மீது உறுதியாகப் பற்று வைத்துக் காரியம் நகர்த்தும் ஒருவனையும், சத்தியவாக்கு மொழிதலுக்குப் பின் சந்தேகமற்றுக் காரியமாற்றும் ஒருவனையும் ஆன்மீகத் தளத்தில் எடைபோட எனக்குக் கஸ்டமாக இருக்கவில்லை.
எப்போதும் மற்றவர்கள் அவனை வெள்ளிக் கிழமை களில்தான் பள்ளியில் கண்டிருப்பார்கள், எந்தப் பள்ளிவாயலில் விரைவாக தொழுகை முடிகிறதோ அங்கு அதை முடித்து விட்டுத் தொழுகை களையத் தாமதிக்கும் பள்ளிக்கு முன் சம்பந்தமில்லாது அலங்கோலமாக நிற்கும் அவனை இந்த மக்கள் புரிந்து கொள்ளத் தசம அளவிலும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. அவர்கள் பார்வையில் அவன், பள்ளி வாசலுக்கு முன்னால் தொழாமல் நிற்கும் ஒரு பேயன் அவன் அப்படித்தான் காரியங்களைத் துல்லியமாக நகர்த்தினான். அவனை யாரும் சரியாக மட்டிட அவகாசம் அளிக்க அவன் தயாராக இருக்கவில்லை.
அவன் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ‘மைனஸ்’ புள்ளியும்தான் அவனது பலத்தை அதிகரிக்கச் செய்தது.
ஊரிலுள்ள எத்தனை புத்திசாலிகளைப் பார்த்து அவன் மனதால் எள்ளி நகையாடி இருப்பானோ!
“உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது. இந்தத் தரவுகளைப் படித்துப் பாருங்கள். அது உங்களுக்கே விளங்கும்”
என்றவன் மேலும் சில விஷயங்களைப் பேசினான்.
“உங்கள் சீடி ஏற்படுத்தியிருக்கும் அதிர்வு மிகக் கனதியானது. அது பேசும் விலை உங்கள் உயிர். எப்படியும் அடிப்பார்கள். புலிகள் சோர்ந்து விட்டதாய் தப்புக் கணக்குப் போட வேண்டாம். உங்க ளைக் கொல்லத் தமிழ்ப் புலி வரத் தேவையில்லை. முஸ்லிம் புலிக் கைகூலியே வரக்கூடும். பிரயாணத்தில் 25 மீட்டர்கள் தூரம் இடைவெளி வைத்துக் கொள்ளுங்கள். யாரும் தாக்கினால் எம்பிப்பாய வேண்டாம். குணிந்து தப்ப முயற்சி செய்யுங்கள். வீட்டில் யாரும் அழைத்தால் உடனே நீங்கள் பதில் சொல்லவோ, கதவைத் திறக்கவோ வேண்டாம். சாப்பாட்டு விஷயத்திலும் தண்ணீர் அருந்துவதிலும் கவனமாக இருங்கள், யாரையும் எளிதில் நம்ப வேண்டாம், மாலை நேரத்திற்குப் பின்னர் வெளியே செல்ல வேண்டாம், போக்குவரத்துக்கு ஒரே பாதையைப் பயன்படுத்த வேண்டாம், உங்கள் வருகையின் நேரத்தைச் சரியாக யாருக்கும் கணிக்க இடம் கொடுக்க வேண்டாம். உடையின் அமைப்பை மாற்றிக் கொள்ளுங்கள்”
அவனுக்கு என் உயிர் மீது அத்தனை கவனம் இருந்தது. அதை எந்தெந்த வழியிலெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ, முடியுமோ அவை அனைத்தையும் அவன் எனக்குத் தெளிவு படுத்தினான். அப்போதுதான் எனக்கு புரிந்தது இத்தனை விஷயங்கள் இதில் இருக்கின்றதா என்று. அவன் சொன்ன விடயங்கள் அனைத்தும் எனக்குப் புதுமையானவைகள்தான் இவனுக்கு இந்த ஊர் வைத்திருக் கும் பெயர் பேயன். லூசன், மடையன், களவானி.
“ஒரு முறை ஒருவரைக் கண்டு, மீண்டும் அதே நபரை அதே பாதை ஒழுங்கில் காண நேர்ந்தால் விளிப்படையுங்கள். நீங்கள் கடந்து போகும் ஒவ்வொருவரையும், உங்களைக் கடந்து போகும் ஒவ்வொரு வரையும் அவதானமாகப் பாருங்கள். கொஞ்சமேனும் சந்தேகம் வந்தால் பாதையை மாற்றுங்கள் அல்லது ஆபத்தை எதிர்பாருங்கள்”
அவன் இப்படி விரிவுரை நிகழ்த்திக் கொண்டே போனான். அவை அனைத்துமே எனக்குப் புதிய விடயங்கள்தான் என்பதை மனம்விட்டுச் சொல்லத் தோன்றியது. என்னைப் பாதுகாப்பதில் அவனுக்குள்ள அக்கறையை அது வெளிப்படுத்தியது. அவற்றைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. ஏனெனில் எனக்குப் பிரச்சினை இருந்தது, அதனால் அவதானமாக உள்வாங்கிக் கொண்டேன். அவன் ஒவ்வொரு சாதாரண விடயத்திலும் மிக நுட்பமான பல அம்சங்களைச் சொன்னான். அவனை எனக்குப் பிடித்திருந்தது, அவனது அறிவும் ஆற்றலும் மேலும் அவனைப் பற்றித் தேட வேண்டும் என்று சொன்னது. சத்தியவாக்கிற்குப் பின்னரான முழுமையான நம்பிக்கைதான். ஆயினும் மனது அமைதியடைய சில விஷயங்களைத் தேடித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அவனைப் பற்றிய உண்மைகள் எதுவுமே எனக்குத் தெரியாது.
கொஞ்சம் சுதாகரித்துப் போட்டு வாங்கித் திருப்பி அடித்ததில், அவன் பற்றிய உண்மை இப்போதைக்குத் தெரிய வேண்டாம் என்று சொல்லிவிட்டானே, அவன் கடும் புத்திசாலிதான். விடைபெற்றுக் கொண்டவன் மீண்டும் வந்து,
“உங்கள் ‘மொபைலுக்கு’ எந்த ‘ரிங்கிங் டோனும்’ போட வேண்டாம். ‘வைப்ரேஷனில்’ போட்டு ‘சைலன்ஸ் மூடில்’ வைத்துக் கொள்ளுங்கள். எப்போது அழைப்பு வந்தாலும் உடனே பதில் அளிக்க வேண்டாம். வீதியிலும் பொது இடங்களிலும் அழைப்பு, வந்தால் ‘போனைக்’ கையில் எடுக்கவே வேண்டாம். அது சிலவேளை உங்களை அடையாளம் காண்பதற்கான அழைப்பாகவும் இருக்கலாம். இரவு வேளைகளில் வீட்டில் இருக்கும் போது அழைப்பு வந்தால், தெரியாத அழைப்பாக அது இருந்தால் பதிலளிக்க வேண்டாம். முடிந்தவரைக் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் ‘போன்’ பாவிக்கவே வேண்டாம்”
எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஒரு ‘போன் கோலில்’ இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா? நம்மில் நமக்கு எவ்வளவு அவதானம் தேவை என்பதை அவன் அழுத்தம் திருத்தமாகக் கற்பித்து விட்டான். இறுதியாகச் சொன்னான்.
“முடிந்தால் நாட்டை விட்டு சிறிது காலம் எங்காவது சென்று விடுங்கள்”
விடைபெற்றுக் கொண்டான்.
அதன்பின்னர் நீண்ட நாட்கள் அவனைக் காணவில்லை, எங்கே சென்றானோ தெரியவில்லை.
அவன் சொன்னபடி அவதானமாகவே இருந்தேன். ஆயினும் அவ்வளவுக்கு புத்திசாலியாக நான் இல்லாததால் என்னைச் சுட்டுக் கொல்லும் அளவுக்கு எதிரியாகக் கருதியவனுக்கு இரவு வேளை யொன்றில் சந்தர்ப்பம் அளித்து விட்டேன், கடவுள் புண்ணியத்தில் உயிர் தப்பினேன் என்பதில் மட்டும் திருப்தி இருந்தது.
அவன் எச்சரித்து இரண்டு மாதங்களில் எல்லாம் நடந்திருந்தன.
மறுநாள் அவனுக்குச் செய்தி எதையும் சொல்லவில்லை. ஆபத்து எல்லை கடந்து விட்டது என்று மட்டும் சொன்னேன். அதன் பின்னர் அவன் சொன்னான்.
“கலவரப்படாமல் எதையும் காட்டிக் கொள்ளாமல் வீதியிலேயே திரியுங்கள். மக்கள் நடமாட்டமுள்ள பொது இடத்தில் அதிக நேரத்தைக் கழியுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” அதன்படி நான் செய்தேன். என்னைச் சூழ எப்போதும் பலர் இருந்தார்கள். எனக்கு முன்னாலும் பின்னாலும் தூரத் தூர எப்போதும் அனைத்தையும் அவதானித்தபடி இருக்க ஆட்கள் போட்டிருந்தான். எனது வீட்டைச் சூழவும் அப்படியே ஆட்கள் போட்டிருந்தான். வேறு யாரும் எதையும் அவதானிக்காதபடி அதைச் செய்திருந்தான்.
ஒரு நாள்
எனது வீட்டுப்பக்கம் அப்படி இரவில் பாதுகாப்புக்கு நின்ற இருவ ரைப் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கண்டுவிட்டார். விடிந்ததும் தகவல் வந்தது.
“பக்கத்து வீட்டில் கோழியைக் காணவில்லையென்று”
ஒரு அசைவில் தகவல் எப்படி மாறுகிறது என்பதை அப்போதுதான் கண்டேன். ஒரு முக்கியமான நடமாட்டத்தைக் கோழித் திருட்டு மாற்றியது.
“யாரோ இரவு வந்து போனார்கள். இரண்டு பேர் இங்கே நின்றார்கள்” என்று கண்டவர் கதை சொல்ல, அந்த உண்மையை அப்படியே ‘கோழித்திருட்டு’
அடியோடு மறைத்து அச்சத்தைக் களைந்துவிட்டது. அது எனக்கு நிறையச் செய்திகளைச் சொன்னது. குறிப்பாக அவன் தன்னுடன் இருப்பவர்களை எப்படிக் கவனமாக வழிநடத்துகிறான் என்பதைப் புரிந்து கொண்டேன். என்னைச் சலனப்படாமல் பதுங்காமல் பொது டத்தில் திரியச் சொன்னதன் மூலம் என்னையறியாமல் என்னை எதிரியாகக் கருதியவர்களுக்கு நான் மறைமுகமாகச் சொன்ன செய்தி ‘என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது’ என்பதுதான். அவன்தான் அனைத்தையும் கட்டமைத்தான்.
நான் வெளிநாடு சென்று மீண்ட பின்னரும் கூட அவன் என்னை வழிப்படுத்தினான்.
அதன் பின் என்னிடம் கற்றுக்கொள்ள அவனுக்கு நிறைய விடயங்கள் இருந்தன. அது போல நிறைய விடயங்களை அவனும் எனக்குக் கற்பித்தான். அவனைப் பற்றி எனக்குள் இருந்த கேள்விகளுக்கு நிறையப் பதில்கள் கிடைத்தன.
என்னுடன் நெருங்கிய நண்பர்கள் என்னை எச்சரித்தார்கள். அவனுடன் பழக வேண்டாம் என்றார்கள். அவனைப் பற்றி எவ்வளவு மோசமாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு மோசமாகச் சொன்னார் கள். நான் உள்ளத்தால் சிரிப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும். அவனுடைய செயற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் வீரியம் பெற்றன. விடுதலைப் புலிகளின் பிளவின் பின்னர் கருணா அணியை ஒன்றிணைப்பதிலும் வலுப்படுத்துவதிலும் புலனாய்வு அதிகாரிகளுடன் பகிரங்கமாக நடமாடும் அங்கீகாரம் பெற்றான். அப்போது அவனுக்கும் அவனோடு இருந்தவர்களுக்கும் ஊர் சூட்டிய பெயர் ‘கருணாப் படை’ அவன் மீதான எந்தக் குற்றச்சாட்டு பற்றியும் அவன் அலட்டிக் கொள்ளவில்லை, ஊர் மக்களில் விசயம் தெரியாத வர்களின் வெறுப்பு பல மடங்காகியது. அவனை நிறைய விடயங் களில் நான் வழி நடத்தினேன். எனது சிந்தனைகளை நடைமுறைப் படுத்துவதில் அவன் அதிக நாட்டம் காட்டினான். சில பொழுதுகளில் எல்லை தாண்டிச்செயற்பட்டான்.
முஸ்லிம்களைக் கொண்ட ஒரு புதிய படையணியை அரசாங்கம் உருவாக்கியது. முஸ்லிம்கள் தேசத்திற்குச் செய்யும் உயரிய சேவையாக அது போற்றப்பட்டது. அவர்களைப் புலனாய்வு இராணுவ வீரர்களாய் வேறு முகாமில் செயற்படுத்தினார்கள். அது “முஸ்லிம் படை” என்று ஊரில் பெயர் பெற்றது, அவனும் முஸ்லிம் படையணி வீரனானான். அந்தப் படையணியில் இருந்து அவன் போட்ட ஆட்டம் சொல்லிமாளாது, அவனது செயற்பாடுகள்தான் படையணி பற்றிய அதீத வெறுப்பை மக்களிடம் உண்டுபன்னின, அதை அவன் நேர்த்தியாகத் திட்டமிட்டிருந்தான், அப்போதும் அவன் பேயன்தான். ஒரு பேயன் படிப்படியாகத் தனது பேத்தனத்தில் முதிர்ச்சி அடைகின்றான். திருடனாக, கொள்ளைக்காரனாக, கடத்தல்காரனாக, இருந்து கருணாப் படையாகி இறுதியில் முஸ்லிம் படையான அவனின் உண்மையான தோற்றம் எது என்பதை யாரும் விளங்கிக்கொள்ள அவன் இடம் வைக்கவில்லை. அதுதான் அவனது பலம், எனக்கே பெரிதாக அவனது உண்மை முகம் எதுவென்று தெரியவில்லை,
எனதுயிரைப் பாதுகாக்க ஆயிரம் வழி சொல்லித் தந்த அவனுக்கு நான் ஒருநாள் சொன்னேன்,
“உனது போக்கு எல்லை மீறிச் செல்கிறது. உனது உயிரைப் பாதுகாப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்து”
“எனக்குப் புரிகிறது இனியும் ஆமை வேகம் சரிவராது. நான் இறந்துவிட்டால் கவலையில்லை. எனது இடத்தை நிரப்பப் பலர் இருக்கிறார்கள். உங்கள் இடத்தை நிரப்பத் தாமதமாகும். எனவே நீங்கள் கவனம்”
“அது சரி என்ன இருந்தாலும் உனது கெட்ட பெயர் இன்னும் அதிகரிக்கிறது. அது ஆரோக்கியமானது அல்லவே”
“அதைப்பற்றிப் பிரச்சினையில்லை எனது மரணம் அதை மாற்றும். நீங்கள் இருக்க எனக்கென்ன கவலை… ஏழைகள் வருவார்கள் எனது ஜனாசாவை தூக்கிச் செல்ல”
“அந்தளவுக்கு மக்களைச் சம்பாதித்து வைத்திருக்கின்றீர் போலும்” சிரித்தேன் அவனும் மனம்விட்டு உண்மையாகச் சிரித்தான்.
“இந்தப் படையணி நமக்குத் தேவையில்லை என்று தோன்று கின்றது” என்றேன்.
“கொஞ்சப் பேரையாவது அடையாளப்படுத்திக்கொள்ள அது தேவை”
“சமூக நிலை மாறிச் செல்கிறது… நல்ல பெயர் எடுக்க வேண்டாமா?” “நல்ல பெயர் இருந்தால் படையணி நிலைத்து நின்றுவிடும் அல்லவா..!”
“அதற்காக இந்தளவுக்கு மக்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது” “எதிர்காலத்தில் இப்படி ஒரு ஆயுதப் படைக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக மாறவேண்டும் என்றால் இப்போது படுகின்ற கஷ்டம் போதவே போதாது”
முஸ்லிம் படையணியின் மூலஸ்தனாக இருந்து இயங்கிக் கொண்டிருந்த அவன் சொல்லவரும் செய்தி எனக்குப் புரிந்தது. ஆனாலும் அவன் யார் என்பதுதான் புரியவில்லை. எனக்கே புரியாத போது அவனை மற்றவர்கள் எங்கே…?
“கவலைப்படாதீர்கள் அவன்தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றான்”
விரலை உயர்த்தி வானத்தின் பக்கம் சுட்டி இறைவனை முன்னிறுத்தி பொறுப்பனைத்தையும் அவன் மீது காட்டுபவனிடம் இனி என்ன கதைப்பது.
நான் எச்சரித்தபடியும், எதிர்பார்த்தபடியும் ஒரு பட்டப்பகலில் அவனைச் சுட்டுவிட்டார்கள். இரத்தம் வீதியெங்கும் சிந்திக் கிடக்க, எனக்குத் தகவல் கிடைத்து. உடனேயே தளத்திற்கு விரைந்தேன்.
எனக்கு நெஞ்சு அடைத்திருந்தது. அவனது உயிருக்கு எந்த ஆபத்தும் இருக்கக் கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டே தளத்தை அடைந்தேன். இராணுவ முகாமைச் சற்றுத் தள்ளி பலத்த பாதுகாப்பானதோர் பிரதேசத்தில் அவனைச் சுட்டிருக்கிறார்கள் என்றால் எதிரி மிக தைரியமானவன். அப்படியும் சுட்டுவிட்டு அவன் தப்பிச் சென்றிருக்கிறான் என்றால் மகா கெட்டிக்காரன். சுடுவதற்குப் பயன்படுத்தியது ரீ-56 ரக துப்பாக்கி எனின் தூரத்தில் இருந்தே இலக்கு வைத்திருக் கிறார்கள். எப்படியும் தப்பிவிடக் கூடாது என்பது எதிரியின் முக்கிய எதிர்பார்ப்பு. நான் அவனைத்தான் தேடினேன். மோட்டார் சைக்கிளில் அவனோடு கூடச் சென்றவன் ஸ்தலத்திலேயே இறந்திருந்தான். அவனைத் தேடி விழிகள் அலைபாய்ந்தன,
அதோ அவன் உயிரோடுதான் இருக்கிறான் முகம் முழுவதும் இரத்தம், உடல் முழுவதும் இரத்தம், கைகள் முழுவதும் இரத்தம், எனக்குத் திக்கென்றாகிப் போனது, அப்போதும் அவன் கண்ணசைத்தான். நண்பர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு விரைந்தார்கள் அவனைத் தூக்கிக் கொண்டு, அப்போது மீண்டும் அவன் கண்ணசைத்தான், அவன் என்னைப் போகச் சொல்லிச் சொல்கிறானா? அல்லது அவனிடம் வருமாறு சொல்கிறானா புரியவில்லை, ஆயினும் நானும் வைத்தியசாலைக்கு விரைந்தேன்.
அவனால் கதைக்க முடியவில்லை. ஊர் முழுக்கச் செய்தி பரவியிருந்தது. கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. அப்போது எனக்கு ஞாபகம் வந்தது
“எனது ஜனாசாவைத் தூக்க ஏழைகள் வருவார்கள்”
என்று அவன் என்னிடம் ஒரு முறை சொன்னது,
கூட்டத்தை ஒரு முறை நோட்டம் விட்டேன், கூடியிருந்த கூட்டத் தில் கொள்கை பேசிய புத்திஜீவிகளும் விமர்சகர்களும் சமூகத்தின் காவலர்களும் இருக்கவில்லை. எங்கிலும் ஏழைகள் இருந்தார்கள். அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
“இதன் பின்னரான எந்த நிகழ்விலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம். ஒதுங்கியிருங்கள் வேடிக்கை பாருங்கள். அமைதி காருங்கள்”
அவன் எனக்குச் சொன்னது,
அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் எனக்கு விளங்கின.
மெல்லிய குரலில் கம்பீரமாகச் சொன்னான்
“உங்கள் கணிப்பு சரியானது. நான்தான் பிழை செய்து விட்டேன்” என்றவனைப் பார்த்துக் கொண்டு அதற்கு மேலும் என்னால் அங்கு நிற்கமுடியவில்லை. எனது கண்கள் கலங்கின.
வாழ்க்கையில் எதற்குமே அழக் கூடாது என்ற கர்வத்துடன் இருப்பவன் நான்.
இந்நிகழ்வுக்கு முன்னர் எனது வீட்டுக்கு வந்தான்.
“ஒருவேலையாகப் போகப் போகிறேன்… இன்ன இடத்திற்கு…”
“தனியாகவா?”
“இல்லை இன்னொரு தோழர் வருகிறார்”
“எதில் போகின்றீர்கள்?”
“மோட்டார் பைக்கில்தான் போகிறோம்”
“நீ போகாமல் வேறு யாரையாவது அனுப்புவது நல்லதென்று படுகிறது”
“விதி வரைந்த பாதையில் வாழ்வென்றால் வாழ்வோம். சாவென்றால் சாவோம்”
“அது விடுதலைப் புலிகளுக்குரிய சுலோகம். நீ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் அதை எப்படிப் பயன்படுத்த முடியும்?”
“சுலோகம் நல்லா இருக்கு அதனால் சொன்னேன், ஒரு முஸ்லிம் எப்படிச் சொன்னால் சரியாக இருக்கும்?”
“இறை வகுத்த பாதையிலே வாழ்வென்றால் வாழ்வோம். சாவென்றால் சாவோம்”
“இதுவும் நல்லாத்தான் இருக்கு, சரி போய் வருகின்றேன்”
“கவனம்! நீயே பைக்கை ஓட்டிச் செல்வது நல்லம்… நீ போகாமல் வேறு யாரையாவது அனுப்பலாம் என்று படுது”
“அதுக்கு என்ன செய்யலாம் நான்தான் போயாகனும், எனக்கு இப்போ பத்தாயிரம் ரூபாய்க் காசு வேணும்”
“பத்தாயிரம் இப்போ இல்ல. ஐயாயிரம் இருக்கு தரட்டுமா?”
“சரி தாங்க”
“போகும் போது பள்ளியில் இரண்டு ரக்அத் தொழுதுட்டுப் போ” பார்த்துக் கொண்டே இருந்தேன். அவனது மோட்டார் சைக்கிள் பள்ளிப் பக்கம் திரும்பும் வரை.
“அவன் உயிரோடு இருந்தான்”
அதுவரைத் திருப்தி, ஊரில் குழப்பம் பெரிதானது. இன முரண்பாடுகளைத் தோற்றுவித்து விடக் கூடாது என்று இறைவனைப் பிரார்த்தித்தேன். மூன்று நாட்கள் கர்த்தால் அனுஷ்டித்தார்கள். அவனைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக செய்திகள் கசியத் துவங்கின,
நல்லதாயும் பொல்லாததாயும்,
அவன் பொலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்தான். அவனுக்கும் பொலிசுக்கும் ஏதோ தொழில் ரீதியில் சம்பந்தமிருக்கிறது என்றும், தேசிய புலனாய்வுப் பிரிவில் அங்கத்துவம் வகிக்கின்றான் என்றும் வெகு சொற்பமானோரிடையே கருத்துப் பரவியது. அப்போதும்கூட மக்கள் அவன் யார் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளவே இல்லை. ஏன் எனக்கும் கூடத்தான் நிறைய விடயங்கள் புரியவில்லை, ஆனாலும் நான் ஒவ்வொன்றாக ஊகிக்கத் தொடங்கினேன்.
மிக நீண்ட காலம் மருத்துவமனையில் இருந்து மீண்டான். அவனால் சரளமாகப் பேச முடியாது. ஒரு பக்கத் தாடையும், ஒரு கையும் பாதிக்கப்பட்டிருந்தன. அவன் உயிர் பிழைத்தது அற்புதம். அவனது தர்மங்களும் இறை பக்தியும் அவனைக் காப்பாற்றி இருந்தன. அவனை விட்டும் நிறையப் பேர் ஒதுங்கி விட்டார்கள். அவன் ஒரு முரண்பாட்டின் அடையாளமாக விளங்கினான். களநிலைவரங்கள் வேகமாக மாறிக் கொண்டிருந்தன. கிழக்கு மாகாணம் விரைவாக இராணுவக் கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருந்தது. அவன் பற்றிய பேச்சு எங்கேனும் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. எப்போதும் அவன் வீட்டில் கூட்டமிருந்தது, அதனால் நான் அங்கு செல்வதைத் தவிர்த்துக் கொண்டேன், அவனது மணவாழ்வு மிகவும் வித்தியாசமானது. அவனை விட வயதில் பல வருடங்கள் மூத்த ஒருத்தியைத்தான் அவன் மணம் முடித்திருந்தான். இரண்டு பிள்ளைகள். அவனே மனமுவந்து எடுத்த முடிவென்று ஏற்னவே ஒரு முறை என்னிடம் சொல்லியிருக்கிறான், அவன் வித்தியாசமான ஒரு பிறவிதான்.
அவன் வீட்டிற்கு அடிக்கடி போவதைத் தவிர்த்து, சென்றால் நீண்ட நேரம் கதைப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அவனுடன் நிறையக் கதைத்தேன்.
அப்போது தான் அவன் பல பேருண்மைகளைச் சொன்னான். அதிர்ச்சிகளை அள்ளிக் கொட்டினான்.
என்னைத் திணரடித்தான்.
நிறைய ஆவனங்களைத் தந்தான்.
ஒரு பெயர்ப் பட்டியலையும் தந்தான்.
அமைதியாகப் படித்தேன்.
நான் ஆடிப் போனேன், எனக்கு பேச்சு வரவில்லை.
பெயர்ப் பட்டியலைப் படித்த பின்னர் இதயத் துடிப்பு அதிகரித்தது, எத்தனை நல்ல முகமூடி அணிந்த கலிசரைகள். முஸ்லிம் என்ற பெயரில் சமூகத்தில்…! இருப்பினும் கொல்லுவதற்கு நாம் யார்?
இது தேசப் பாதுகாப்பிற்கான அனுமதி, அப்படியானால் சட்டபூர்வக் கொலை, என்கௌண்டர்போல.
சட்டபூர்வமற்று அமுல்படுத்தப்படும், அவ்வளவுதான். எனக்கு எல்லாம் விளங்கியது.
அவன் யார் என்றும் புரிந்தது.
அவன் தந்த பெயர்ப்பட்டியல் பெரியது. மொத்தம் முந்நூறு பேர், ஒவ்வொருவர் பற்றியும் மிகத் துல்லியமான தகவல்களைச் சேகரித்திருந்தான், அவ்வளவும் இவன் பேயன் என்ற பெயரில் இருந்ததால் சாத்தியமானது, அவனை யாருமே கணக்கிலெடுக் காததால் அது அவனுக்கு இலகுவாகி இருந்தது,
அவன் சிரித்தான்.
நீண்ட அமைதியின் பின்னர் கேட்டேன்
“அடுத்து என்ன செய்யப் போகிறாய்”
“என்கௌன்டர் தான்”
“எத்தனைப் பேரை..? எவ்வளவு காலத்திற்கு?
“அனுமதி கிடைத்து விட்டது. ஆயுதங்கள் இன்னும் கிடைக்க வில்லை, பகிரங்கமாகச் செய்யக் கூடாது என்றும் உத்தரவு”
“எப்போது ஆரம்பிக்கப் போகிறாய்”
“இன்னும் ஒரு மாதத்தில்”
“எத்தனை பேரைக் கொல்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது”
“முதல் இருபது பேரை.. அது கிளியர் ஆகினால் அடுத்த என்பது பேரும் பலமிழந்து போவர். நிறையச் சமூக விரோதச் செயல்களும் நின்று போகும்”
“இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் ஆவணமாக்க உதவியாக இருக்கும்”
“இவ்வளவு கேவலமான சமூகத்திலா உறுப்பினர்களாக நாம் இருக்கிறோம்”
“இது எவ்வளவோ பரவாயில்லை இன்னொரு லிஸ்ட் இருக்கிறது. தரட்டுமா அதில் நிறைய பேர் பெண்கள்”
“வேண்டாம் இந்த சமூகத்தைச் சீர்ப்படுத்த உமர் தான் வர வேண்டும்”
“உமர் இனி வரப் போவதில்லை, இங்கு இருக்கும் ஒருவர்தான் உமராக மாற வேண்டும். சாட்டையைத் தூக்க வேண்டும். அப்போது தான் மாற்றம் வரும், கேவலம் மாறும்”
நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் கேட்டான்
“என்ன யோசனை”
“இல்ல இந்த ஊரை விட்டு எங்காவது போய்டலாமா என்று தோன்றுது”
“நூறு இருநூறாகி நானூறாகி ஆயிரமாகி பல்லாயிரமாகும். அதை யார் தடுப்பது…? குர்பானி ஒன்றே வழி. அதுவும் சட்டபூர்வமான குர்பானி…”
என்றவன்
“இந்த லிஸ்டையும் வைத்துக்கொள்ளுங்கள் ஒரு தரவுக்காக”
அதையும் வாங்கிக் கொண்டேன். விடைபெற முன்னர் அவன் கேட்டான்.
“நான்யார் என்று உங்களுக்குத் தெரியுமா?”
“உண்ைைமயில் தெரியாது ஆனால் இதுவாக இருக்கலாம் என்று அனுமானித்து வைத்திருக்கிறேன்”
“அப்படியானால் நான் தான் தப்பாகக் கணக்குப் போட்டு விட்டேன்” “எல்லோருக்கும் பேயனாகத் தெரிந்த நீ இதில் உண்மையாளனானால் என்ன குறைந்துவிடப் போகிறது…”
“ஆனால் உங்களால் அப்படி என்னைப் போல பேயனாக மாற முடியாது.காரணம் உங்கள் பெயர் வேறு தளத்தில் பதிந்து விட்டது. அந்தத் தளத்தில் இருந்துதான் நீங்கள் செயற்பட வேண்டும். என் அளவுக்கு இறங்கிச் செல்ல முடியாது. ஆனால் இதைவிடக் கேவலமாகவும் என்னால் மாற முடியும். இனி அது சாத்தியப்படாது. நானும் வேறு தளத்தில் தான் செயற்பட வேண்டி இருக்கிறது… நான் யார் என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதைப் பாருங்கள்…”
அவன் தந்தவைகளை பார்த்தேன்.
அதிர்ந்தேன்.
அவன் மீது மதிப்பும் மரியாதையும் வந்தது.
உண்மையான வீரன் அவன்,
வரலாறு நிச்சயம் அவனைப் பேசும்.
அவன் ஒரு சகாப்தம்.
எனது மன உணர்வுகள் வீரியம் பெற்று ஓடிக் கொண்டிருந்தன. அவனிடமிருந்து விடைபெற்றேன், நானும் அவனும் கொஞ்ச மாதங்களுக்கு இனிச் சந்திப்பதில்லை என்றும் பேசிக் கொள்வ தில்லை என்றும் முடிவெடுத்துக் கொண்டோம்.
கொஞ்ச நாட்களில் ஊரில் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வந்தது.
லிஸ்டைப் பார்த்தேன். முதல் இருபதுக்குள் அவர் பெயர் இருந்தது, ஒபரேஷன் குர்பானி ஸ்டார்ட் என்று மனதில் எண்ணியபடி ஊடகங்களுக்கு செய்தி வழங்கத் தொடங்கினேன்.
இன்னொரு நாள் ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் கொல்லப் பட்டதாகச் செய்தி வந்தது.
தகவல் பிழைத்து இலக்குத் தப்பி அப்பாவிகள் பலியாகியிருந்தனர். அவர்களுக்காகப் பிரார்த்தித்தேன்.
அவன் களத்திற்குத் தகுதியான உடல் நிலை கொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரிந்தது.
என்ன செய்வது எல்லோரும் போல நானும் ஒரு பார்வையாளன். என்னால் எதையும் தடுக்க முடியாது.
எனக்குள் நிறைய சிந்தனைகள் ஊடுறுவின, அவை பரந்த தளத்தில் உலாவத் தொடங்கின.
இன்னும் எத்தனை எத்தனை உளவுப் பிரிவுகள் எனதூரில் செயற்படுமோ!
தகவல் கொடுப்பவன் கட்டமைக்கும் விதத்தில்தான் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன.
ரபாய் ஒரு நள்ளிரவில் கடத்தப்பட்டான். அவனுடன் ஐந்து பேர் வஞ்சகமாகக் கடத்தப்பட்டனர். வெள்ளை வேன் விளையாட்டு அது, யாராலும் அவ்வளவு எளிதில், அந்த வெள்ளைவேன் எங்கிருந்து வருகிறது? எங்கு செல்கிறது? என்றெல்லாம் கண்டு பிடிக்க முடியாது. எதுவும் யாருக்கும் தெரியாது. ஆனாலும் அது சுதந்திரமாக தேசமெங்கும் பயணித்தது.
ஏதோவோர் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கியவனின் கையில் இருந்தது, ரபாயைப் பற்றிய இறுதி நிலைப்பாடு எத்தகையது என்பது,
அத்தனை சித்திரவதைகளையும் எதிர் கொண்டு, அவன் யார் என்ற உண்மையை இறுதிவரைச் சொல்லவில்லை என்பது, அவன் இன்னும் உயிரோடு திரும்பவில்லை என்பதால் தெரிந்தது.
அவன் ஒரு நாள் சொன்னான்.
“நான் மரணித்தால் எனது ஜனாசாவை நீங்கள்தான் தொழுவிக்க வேண்டும்”
நான் இன்னும் காத்திருக்கிறேன் அவனது ஜனாசாவைத் தொழுவிக்க. எத்தனையோ ஆயிரம் ஏழைகளும் காத்திருக்கிறார்கள் அவனது ஜனாசாவில் கலந்துகொள்ள.
புலனாய்வில் தங்கப் பதக்கம் பெற்ற தேசியப் புலனாய்வுக்காரன் அவன். உயர்ந்த சம்பளம் அவனுக்கானது. அதில் அவன் ஆயிரம் என்ன? ஒரு லட்சம் ஏழைகளைச் சம்பாதிக்கலாம்.
அவன் பேயனாக வீதிகளில் அழைந்தான்.
பேயனாகவே எல்லாத் தகவல்களையும் திரட்டினான்.
பேயனாக இருந்தே எல்லாவற்றையும் சாதித்தான்.
அந்தப் பேயன் நுழையாத துறை கிடையாது.
அந்தப் பேயனின் உறுதிக்கு முன்னால் எல்லாமே தூசு.
கடைசி வரை அவன் யார் என்பதை யாருக்குமே சொல்லாமல் மாயமாகிப் போயினான்.
அந்தப் பேயன் திரட்டிய தகவல்களும் அவன் போட்ட பட்டியலும் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறன.
அவன் “போனில் ரிங்கிங் டோனாக” இருந்த எனது பாடல் எங்கோவோர் மூலையில் ஒலிக்கிறது.
“தேசம்… எங்கள் தேசம்… அன்பின் தேசம்… வீரம் தீரம் சொல்லும் எங்கள் தேசம்… எங்கள் தேசம்…
ஆயிரமாயிரம் உயிர்களை இழப்போம் ஆனாலும் நாம் இனி அழிந்திட மாட்டோம்.
குண்டுகள் கவசங்கள் கோடி வந்தாலும் தோல்விகள் கண்டு துவண்டிட மாட்டோம்”
அந்தப் பேயன் வாழ்வான் ஒர் ஒப்பற்ற வீரனாக…
– ஹராங்குட்டி சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, செய்ஹ் இஸ்மாயில் ஞாபகாரத்த பதிப்பகம், இலங்கை.