(“மலைகளின் மக்கள்” சிறுகதை தொகுப்பில் இருந்து)
இன்றைய இரவு விடிந்தால்… நாளை சுப்பையா கொழும்புக்குப் பயணம்…!
இரவு முழுக்க பார்வதியம்மாள் தூங்கவேயில்லை. “நான் வளத்த செல்லக்கண்ணுக்கு உத்தியோகம் கெடச்சிருக்கு கொழும்பு தொறை முகத்துல கிளாக்கர் வேல… இந்தத் தோட்டத்துக் கணக்கப்புள்ள ஐயாவை… நானும் பாத்துக்கிறேன் என் மவன் படிக்கிறதப் பாத்து கேலி பண்ணினாரே..? அவருக்கிட்டேயே போயி எம்மவனை பயணஞ் சொல்ல வைக்கிறேன்.” இப்படி அந்த தாய் உள்ளம் மகனுக்கு உத்தியோகம் கிடைத்து விட்ட பெருமையில் “வீம்பு” பேசிக் கொண்டிருந்தது உண்மைதான்.
சாதாரண ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் படித்து¸ நன்றாக உடுத்திச் செல்வதைப் பார்ப்பதில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ரொம்பவும் சங்கடப்படுவார்கள்.
“லயத்துப் பொடியனை பாரு?” என்று ஏளனமாக கதைப்பார்கள்.
சுப்பையா நகரப் பாடசாலையில் படிக்கும்போது அவனை ஏற இறங்கப் பார்த்துப் பற்களை அரைத்தவர்கள் பல பேர்கள் அந்தத் தோட்டத்தில் இருந்தார்கள் .
“கூலிக்காரன் மகன் படிச்சி தொரையாகப் போறானாம்… பாப்பமே…”
இப்படி இகழ்ச்சிகள் இருந்தும் சிவனாண்டியும் பார்வதியம்மாளும் சளைத்தார்களில்லை. சுப்பையா… நல்லா படிச்சி… நம்ம தோட்ட தொரை மாதிரி… சப்பாத்துப் போட்டு தொப்பி வைச்சி… நீட்ட கால் சட்டை போடணும் அவனை “சாமி” “தொரை”ன்னு எல்லோரும் சொல்லணும்!” இப்படி உள்ளூர மகிழ்ந்து கொண்டார்கள். அந்த மகிழ்ச்சியில் எத்துணை இலட்சியம்-வஞ்சம்-வைராக்கியம்…! பிறந்தது முதல் சாகும் வரை தொப்பி சப்பாத்துப்போட்டவர்களையெல்லாம் தொரையென்றும் “சாமி” யென்றும் கௌரவித்து¸ கூனி¸ குறுகி சலாம்¸ போட்டு வந்த பரம்பரையில் உதித்த சிவனாண்டிக்கும் பார்வதியம்மாளுக்கும் “ஏன் தங்களுக்கென ஒரு சொந்தமான ஒரு “தொரை” இருக்கக் கூடாது? என்று எண்ணி வைராக்கியம் பூண்ட அவர்களது எண்ணம் ஈடேறாமலா போனது? இதோ சுப்பையா! தொப்பி¸ சப்பாத்து கால்சட்டை அணிந்த தொரை!
தங்களை காலமெல்லாம் அடக்கி ஆண்டு வந்த துரைத்தனத்தார்களுக்கும்-அந்த துரை வர்க்கங்களுக்கும் சவால் கொடுக்கு முகமாகத் தங்களது சுப்பையாவின் உத்தியோகத்தைக் காட்டினார்கள். அவன் ஒருகுமாஸ்தா! துறைமுக குமாஸ்தா… நாளை கொழும்பு நகரத்தில் சுப்பையாவும் பலருக்கு தொரை! அந்த தொழிலாளத் தம்பதிகள் தங்கள் சாதனைக் குளத்தில் தமுக்காளம் அடித்து மிதந்தார்கள்.
விடிவு காலம்…!
ஆமாம் விடிந்துவிட்டது. இன்று சுப்பையா கொழும்புக்கு பயணமாகவேண்டும். பார்வதியம்மாள் விபூதி தட்டில் சூடம் கொளுத்தி உத்தியோகம் பார்க்கப்போகும் மகனுக்கு ஆரத்தி எடுத்தாள். மூன்றுமுறை வலம் வந்து விபூதி தட்டை கீழே வைத்தாள்¸ கண்களில் பொலபொலவென கொட்டிய கண்ணீரை சேலை முந்தானையால் துடைத்து மகிழ்கிறாள். மீண்டும் விபூதி தட்டில் சூடத்தைக்கொளுத்தி ஏந்துகிறாள். சிவனாண்டி தலைப்பாகையைக் கழற்றி கக்கத்தில் வைத்துக் கொண்டு வணங்குகிறான். இருவருமாக சுப்பையாவுக்கு மாறி மாறி விபூதி பூசினார்கள். தோட்ட சீவியத்தில் கால முழுவதும் இரத்தக் கண்ணிர் வடித்த அவர்கள் இன்றுதான் ஆனந்தக் கண்ணிர் வடித்தார்கள். பார்வதியம்மாள் தன் செல்வமகனை வாரி முத்தமிட்டாள்.
“சுப்பு! கொழும்புக்கு போனதும் போஸ்ட்காடு போடு… பெத்ததிலிருந்து இன்னக்கித்தான் ஒன்னை பிரியிறேன்.” அத்தாயின் குரல் கரகரக்கிறது. “ஆமா அண்ணா…! கொழும்புக்குப் போனதும் கடுதாசி போட்டப் பிறகுதான் வேறவேல பாக்கணும்” -இது சுப்பையாவின் அன்புத் தங்கையின் கட்டளை பருவத்தோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கும் அந்தக் குமரியின் வாழ்வெல்லாம் சுப்பையாவின் உத்தியோகத்தில்தான் தங்கியிருக்கிறது.
சுப்பையாவுக்கு பக்கத்து வீட்டு மங்களம்¸ அடுத்த லயன்களிலிருக்கும் சில வேண்டியவர்களெல்லாம் வந்து விபூதி வைத்து நல்வாக்குகள் கொடுத்தார்கள். சிலர் வெற்றிலையில் இரண்டு¸ மூன்று “ரூபாய் வைத்துக் கொடுத்தனர். அந்த தோட்டத்தில் ஒழுங்காகப் படித்து¸ ஒரே தடவையில் “பத்தாம் வகுப்பு பாஸ்” பண்ணியவன் சுப்பையா மாத்திரமேயாகும். அவன் தொழிலாளியின் மகன் என்பதால் தோட்டங்களில் உத்தியோகம் வழங்க மறுத்தார்கள். வெள்ளைக்காரன் காலத்திலிருந்து தோட்டங்களில் “குடும்பப் பின்னணி” பார்க்கும் ஓர் வழமை இருந்தது. இந்த வழமையை உருவாக்கியவர்கள் அன்று தோட்டங்களில் உத்தியோகம் பார்த்த தமிழர்களேயாகும்.
தொழிலாளியின் மகன் தோட்ட நிர்வாகத்தில் வேலைக்கு வந்து விட்டால் அவன் தொழிலாளிக்கு சப்போர்ட் பண்ணுவான் என்ற உண்மையை அன்றைய வெள்ளைக்கார நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு வருசங்கள் தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் உத்தியோகம் பெற முடியாத சுப்பையாவுக்கு இன்று கொழும்பு தலைநகரத்தில்-அதுவும் துறைமுகத்தில் வேலை கிடைத்திருக்கிறது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள். ஒரு தொழிலாளியின் மகனுக்கு உத்தியோகம் கிடைத்ததில் மற்ற எல்லாத் தொழிலாளர்களும் பெருமைப்பட்டார்கள். எல்லோருமாக சுப்பையாவை வாழ்த்தியனுப்பினார்கள்.
சுப்பையா பெட்டி¸ படுக்கையோடு புறப்பட்டான். அவனது அன்புத் தெய்வம் பார்வதியம்மாள் காட்டு ரோட்டு காளி கோயில் வரை வந்து வழியனுப்பி வைத்தாள்.
அவளது நெஞ்செல்லாம் அந்த தேயிலைக் கொழுந்து போல் பூத்துத் தளிர்ந்தது! “எம்மவனை கொழும்புக்கு அனுப்பி வச்சுட்டேன்; நான் இப்போ… ஒரு கௌhக்கரின் தாய்!” அவள் பூரித்துப்போனாள். வழியில் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் அவளையும் சுப்பையாவையும் மாறி¸ மாறி பார்த்த காட்சி! சிவனாண்டி பெட்டியைத் தூக்கிக் கொண்டு வீறு நடை போட்ட அழகு!
பார்வதியம்மாளை எல்லாரும் வழி மறித்து-வழி மறித்து விசாரித்தார்கள். “ஆமாங்க…தம்பி…கொழும்பில கௌhக்கர் வேலைக்குப் போவுது.” நெஞ்சு நிறைய பதில் சொன்னாள். அதில் கர்வமும் தொனித்திருந்தது.
அவள் முச்சந்தியில் எவருக்கும் தெரியாமல் ஒரு பிடி மண் அள்ளிக் கொண்டு போனாள். பல பேர்களின் காலடி. மண் மகனை நினைத்து திட்டி சுத்தி போடுவதற்கு.!
சிவனாண்டி தோடம்பழம் முதல் புளிச்சோறு வரை தோல் பெட்டியில் அடைத்துப் பெருஞ்சுமையாய் சுமந்து கொண்டு¸ சுப்பையாவுக்கு முன்னால் தொங்கு தொங்கு வென ஒடுகிறான். அவனுக்கு பழைய நினைவும் வருகிறது. இந்த மாதிரி பெட்டி நிறையப்பாரத்தைச் சுமந்து கொண்டு எத்தனை துரைமார்களுக்கு. இப்படி தொங்கு நடை நடந்திருப்பான்…! இன்று தூக்கிச் செல்லும் சுமையில் புது தெம்பு-தெளிவு-பெரு மகிழ்ச்சி எல்லாமே நிறைந்திருக்கிறது!
சுமையோடு ஒடி நடக்கும் சிவனாண்டி இடைக் கிடையில் “தம்பி கவனம்! சம்பாத்து வழுக்கும்!” என்று தேவையற்ற நிதானங்களையெல்லாம் பிதற்றிக் கொண்டு போகிறான். வாழ்க்கையில் எதை அடைய நினைத்தானோ அதை அடைந்து விட்ட எக்களிப்பு. “நான் பெத்த மகன். தொரை!… அவனுக்கு நான் பெட்டி சுமக்கிறேன். மாரி ஆத்தா! ஒனக்கு முன்னூறு தேங்கா ஓடைக்கிறேன்…” அவனது வாய் பேசாததை நெஞ்சம் பேசி மகிழ்ந்தது.
ஒட்டமும் நடையுமாகிக் கொண்டிருக்கும் சிவனாண்டியின் மூளையை இன்னொரு விசயம் குடைந்து கொண்டிருந்தது…
“தம்பி சுப்பு…! வேல கெடைச்சது பெரிய விசயமில்ல. நம்ம பிரஜாவுரிம… பத்திரத்தப் பாத்து… எவனாவது பெரிய அதிகாரி மேட்டுக்கும்… பள்ளத்துக்கும் இழுத்துப்புட்டான்னா… போச்சு…! நீ தைரியமா பதில் சொல்லணும்…”
“அத பத்தியெல்லாம் மண்டையப் போட்டுக் கொழப்பாதீங்க… நான் சமாளிச்சுக்குவேன்…” சுப்பையா பதில் சொன்னான்.
இருவரும் அட்டன் புகையிரத நிலையத்தை வந்தடைந்தார்கள். சுப்பையாவை ஏற்றிச் செல்வதற்கு உடரட்டமெனிக்கே கோச்சு சிங்கமலை சுரங்கத்திலிருந்து கதறிக் கொண்டு ஓடி வருகிறது. சிவனாண்டி “சேப்பு” நிறைய விருந்த சில்லறைகளையெல்லாம் கொடுத்து கொழும்பு கோட்டைக்கு ஒரு டிக்கட்டும்¸ தனக்கு ரயிலடிக்குப் போகும் “பிளட்போம்” டிக்கட்டும் வாங்கிக் கொண்டான்.
-வண்டி வந்து நின்றது.
மகனைப் பிரியப் போகும் நிலையில். சிவனாண்டி தேம்பினான். பிள்ளையைப் பெற்றதிலிருந்து இன்றுவரை பிரிந்தது இல்லை… இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.
“சாமி! கவனமாப் போயிட்டு வா கண்ணு! காசு பத்தரம்… உடுப்பு பெட்டி கவனம்… கோச்சியில சாப்பாட்டுக்கட இருக்கு… சாப்பிட்டுக்கிட்டே போவணும்… போயி… ஒடனே தந்தி அடிக்கணும். இல்லாட்டி ஓங்கம்மா… ஒப்பாரி வச்சிக்கிட்டே இருப்பா…”
இரண்டு கரங்களையுந் தூக்கி மகனை வணங்குகிறான். நெஞ்சை உருக்கும் காட்சியால் வண்டி நகர்கின்றது.
சிவனாண்டி வீட்டை நோக்குகிறான். பிள்ளையைப் பிரிந்த வேதனையிருந்தாலும் பெருமை குறையாமல் அந்த தந்தையுள்ளம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.
சுப்பையாவை சுமந்து கொண்டு அவனுக்கு புதுவாழ்வு அளிக்க அந்த எக்ஸ்பிரஸ் கர்ணகடூரமாகச் சத்தமிட்டுக் கொண்டு பறந்தது.
உருண்டோடும் வண்டிச் சக்கரத்தைப் போல அவனது உள்ளக்கிடங்கில் கொப்பளித்த எண்ணக் குமிழிகள் நதியாகப் பெருக்கெடுத்தன.
நான் பிறந்து வளர்ந்து பெரியவனாகி பள்ளி வாழ்க்கையில் என் பாதி வாழ்க்கையைக் கழிக்கும் வரை¸ என் க~;ட ந~;டங்களைச் சுமந்த என் பெற்றோர்கள் இன்னுமா எனக்கு சுமைதாங்கிகளாக இருக்க வேண்டும்? வேண்டாம்!
அந்தப் பாவத்துக்குரியவனாக நான் இனிமேலும் இருக்க விரும்பவில்லை. காலமெல்லாம் மழை-புயல் பாராது… கண்டவர்களது வசை மொழிகளுக்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் செவிமடுத்து¸ உழைத்து என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்ட அவர்களுக்கு நான் தொடர்ந்து சுமையாகவிருந்தால் என்னைப் போல ஒரு கேவலமானவன் எங்குமே இருக்கமாட்டான்.
-அந்தக் குறையைத்தான் இன்றோடு தீர்த்து விட்டேனே…
கொட்டும் மழையில்- கொடுமையான குளிரில்பனியில் என்னைப் பெற்றவள்¸ முதுகு வளைய கூனிக்குறுகி காடு மேடெல்லாம் சுமந்து செல்லும் ஒரு கூடை கொழுந்தைவிட நான் பெரும்பாரமாக இருந்திருக்கிறேன்.
என் வாழ்க்கையை வளப்படுத்த அவள் பட்டபாடுகளையும்¸ கங்காணி¸ கணக்கப்பிள்ளை¸ துரை ஆகியவர் களிடமிருந்து வாங்கிய வசை மொழிகளையும் சொல்லியழுதாலுமே என் சுமையெல்லாம் குறைந்து விடாதா..?
என் தந்தை என் படிப்பு செலவுக்காக எத்தனை எத்தனை பேர்களிடம் கையை நீட்டியிருப்பார்…? என் தாயின் கழுத்தில் கிடந்த அந்த தாலி மணிகள் இரண்டையும் எத்தனை முறை கழற்றி அடகு வைத்து எனக்கு ரயில் சீசன் டிக்கட் வாங்கிக் கொடுத்திருக்கிறார்…?
என்னைப் படிக்க வைத்து அழகு பார்க்க அவர் என்னென்ன செயல்களெல்லாம் புரிந்திருக்கிறார்! இவர்கள் வாழ்க்கையில் ஒர் விடிவுகாலத்தை உண்டாக்கத்தானே இன்று வேலைக்குப் போகிறேன். என் குடும்ப சுமையெல்லாம் இந்தக் குமாஸ்தா வேலையில்தான் இறங்கப் போகிறது… என் தொழிலில் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டுதான் அவர்கள் இனிமேல் குடும்பம் நடத்த் வேண்டும்.
என் அன்புத் தங்கையின் திருமணம் எனது கரங்களில்தான் இருக்கிறது… என்னைப் படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக அவளும் கூலிக்காக கொழுந்துக் கூடையை மாட்டினாள். வயது வந்த அவளுக்கு ஒரு வரன் தேடி ஜாம்… ஜாம்… என்று கல்யாணத்தை முடித்து வைக்கப் போகும் இந்த அண்ணனைப் போல பாக்கியசாலி யார் இருக்க முடியும்?
என் தம்பிகளும்¸ சின்னத்தங்கைகளும் படித்து வளர்ந்து¸ ஆசிரியராக… கணக்காளராக… உயர்ந்த பதவி களை வகிக்கும் காலம் வரத்தான் போகிறது. நான் கொழும்பு நகரத்திலே வசதி உள்ளவனாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டு¸ என் குடும்பத்தை¸ தோட்டத்தை விட்டே வெளியில் எடுத்து விடவேண்டும்! இந்த தோட்டத்து கூலி வாழ்க்கை முறை இனி வேண்டாம்… !
ஒரு சாதாரண தோட்டக் கூலியின் மகனை இந்த நாட்டில் பரந்து வாழ்வதற்கு வழி வகுத்துக் கொடுத்த என் பெற்றோர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு இதுவாகத்தான் இருக்க முடியும்.
-இப்படி அவனது எண்ணச் சக்கரம் அந்த எக்ஸ்பிரஸ் வண்டியைவிட வேகமாக ஓடியது.
சுப்பையா சோம்பல் முறித்து நீண்ட பெருமூச்சு விட்டான்.
காலை பதினொரு மணிக்கு அவனைச் சுமந்த வண்டி மாலை நான்கு மணியளவில் கொழும்பு கோட்டையில் இறக்கி விட்டது.
சுப்பையா தான் புதிதாக வாழப் போகும் சொர்க்க பூமியில் காலடி வைத்ததும் தன்னை மறந்தான். தன் குடும்பத்தை மறந்தான். அவனது கவலைகளெல்லாம். எங்கோ ஒடி ஒளிந்து கொண்டன. என்ன… நகர வாழ்க்கை காலமெல்லாம் பட்டினி கிடந்தே வாழ்க்கையை ஒட்டலாம் போலிருக்கு…! “கெட்டும் பட்டணஞ் சேர” என்று சும்மாவா சொன்னார்கள். அவன் உள்@ர மகிழ்ந்து போனான். நானும் இனிமேல் ஒரு பட்டினவாசி…! கொழும்பு துறைமுகத்தில் ஒரு குமாஸ்தா…! ஒரு தொரை…! அவன் ஆண்மை நிமிர்ந்தது.
துறைமுகத்தில் சுப்பையாவைக் கண்ட லாரிகளும் சரக்கு வண்டிகளும் மூலைக்கொரு பக்கமாக ஒடிக் கொண்டிருந்தன. பெரிய பெரிய “கிரேன்” களெல்லாம் புதிதாகவந்த சுப்பையா தொரைக்கு வணக்கம் தெரிவிப்பது போல் தாழ்ந்து பணிந்தன…! எங்கிருந்தெல்லாமோ வந்த கப்பல்கள் தங்கள் சுமைகளை இறக்கிக் கொண்டிருந்தன. சுமைகள் குறையும் போது அவைகள் கூட அந்த ஆழ்கடலில் எவ்வளவு அழகாக குதியாட்டம் போடுகின்றன.!
ஆமாம்! சுப்பையாவும் சிறு நொடியில் அவ்வாறு துள்ளிக் குதிக்கப் போகிறான்.
சுங்க இலாகா தலைமை காரியாலயம். அதன் நுழைவாயிலிருந்து முப்பது யார்வரை வேலைக்கு தெரிவு செய்யப்பட்ட கூட்டம் “மார்ச்” பண்ணி நின்று கொண்டிருக்கிறது. முன்னுக்கு நின்றவர்கள் மகிழ்ச்சித் தவழ¸ சுறுசுறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். புதிய வேலைகளை “பாரம்” எடுத்தவர்கள் “பியூன்” பின்னால் தங்கள் காரியாலயங்களை நோக்கிச் சென்று கொண்டிருக் கிறார்கள். இன்னும் ஐந்து ஆட்களுக்குப் பிறகு சுப்பையா தன் வேலை பொறுப்பை “பாரம்”; ஏற்கும் நேரம் நெருங்கி விட்டது.
அவன் தான் கொண்டு வந்துள்ள பிரஜாவுரிமை பத்திரத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். அந்தப் பத்திரத்தை உள்ளே அமர்ந்திருக்கும் உயர் அதிகாரி ஏற்றுக் கொண்டு விட்டால். உலகமே அவனது காலடியில்… அதை வீட்டிலே தேடிப்பிடித்த சம்பவத்தை மீட்டிப் பார்த்தான்…
அம்மா ஒரு பக்கமும் அப்பா ஒரு பக்கமும் தேடி களைத்து விட்டார்கள். “எந்தப் பொருளையும் அளவுக்கு அதிகமாகப் பத்திரப்படுத்தவும் கூடாது. கடைசியில் தேடி மாயாது.” என்று முணுமுணுத்த சிவனாண்டி கடைசி முயற்சியாக பரணில் வைத்திருந்த தகரப் பெட்டியை எடுத்துத் திறந்து பார்த்தான். உள்ளே பழைய கடதாசி கட்டுகள். ஒரு மூலையில் கடதாசிகளை எலிகள் கடித்து¸ குதறி கூடு கட்டியிருந்தன.
தகரப் பெட்டியைக் குப்புற கொட்டினான்சிவனாண்டி. அன்று பிரசவித்த எலிக்குஞ்சுகள் நான்கு அப்படியே கிடந்தன. சிவனாண்டி கூடு கட்டிக்கிடந்த கடதாசி துண்டுகளைச் சேர்த்துப் பார்த்தான். அதுதான் சிட்டிசன் சிப்பு: ‘முருகா!” என்று தலையில் கையை வைத்தான்.
சுப்பையா துண்டுகளைச் சேர்த்துப் பார்த்தான். அந்தப் பத்திரத்தில் பார்வதியம்மாள்¸ சிவனாண்டி¸ சுப்பையா¸ ஆகிய மூவருடைய பெயர்கள் இருக்கவேண்டும். மற்ற பிள்ளைகள் இந்தப் பத்திரம் கிடைத்த பிறகு பிறந்தவர்கள். சுப்பையா பெயர்கள் இருக்கும் கடதாசி துகிலைத் தேடினான். அந்தப் பகுதியைத்தான் எலிகள் சாப்பிட் டிருக்க வேண்டும். சாட்சி சொல்வதற்காக¸ அதிர~;ட வசமாக ஒரு பகுதி மாத்திரம் குற்றுயிராகக் கிடந்தது!
“இன்டியன் பாகிஸ்தானி ரெசிடன்ட் சிட்டிசன் சிப்” இன்னுமொரு கடதாசி துகிலில் கமி~னரின் கையொப்பம் இருந்தது. மற்ற கடதாசி துண்டுகளையெல்லாம் சேகரித்துக் கொண்டான். அவன் கண்களுக்கு கடவுள் தெரிந்தது போல் “சீரங்கன் மகன் சிவனாண்டி” என்ற பெயர் காணப்பட்ட பகுதியும் கிடைத்தது. இந்த கடதாசி துண்டுகளையெல்லாம் ஒரு “பொலித்தீன” உறையில் பத்திரமாக வைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டான். “பிரஜாவுரிமை பத்திரம” தொலைந்து போனால் அல்லது அழிந்து போனால் புதிதாக நகல் எடுக்க முடியாத சட்டத்தையும் அவன் அறிந்திருந்தான்.
அந்த கடதாசி துகில்களோடுதான் இங்கு. இன்று வந்து நிற்கின்றான்.
“மிஸ்டர் சுப்பையா…!” பியூன் சத்தமிட்டான். சுப்பையா உயர் அதிகாரியின் அறைக்குள் மிகவும் பணிவாக நுழைந்தான்.
“சிட்டவுன் மிஸ்டர் சுப்பையா…”
“தேங் யூ சேர்…”
சுப்பையாவின் கல்வி சான்றிதழ்களையும் விளையாட்டுச் சான்றிதழ்களையும் பார்வையிட்ட அதிகாரி அதிசயப் பட்டார். “நீங்கள் எல்லா பாடங்களிலும் விசே சித்தி பெற்றிருக்கிறீர்கள் டைப்பிங் தெரியுமா?”
“தெரியும்…”
“வெரிகுட்! உங்கள் வேலைத் திறமைகள் திருப்தியாகக் காணப்பட்டால் “செக்ரட்டரில் போஸ்ட்” கிடைக்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது” என்றார்.
சுப்பையா புஸ்ப விமானத்தில் பறந்தான்.
அதிகாரி தொடர்ந்தார்…
“உங்கள் தேசிய அந்தஸ்து..?”
“இலங்கை பிரஜை… தமிழர்.”
“நீங்கள் மலைநாட்டுத் தமிழராச்சே. நீங்கள் பதிவு பிரஜை தானே…?”
“ஆமாம் பதிவு பிரஜை…”
“அப்படியென்றால் பத்திரத்தைக் காட்டுங்கள்…”
சுப்பையா தயங்கி… தயங்கி “பொலித்தீன் உறையை நீட்டி நடந்த விபரங்கள் யாவற்றையும் கூறினான். அவன் உடல் வியர்வையில் குளித்தது. அதிகாரி மின்விசிறியை மிடுக்கினார். சுப்பையாவின் கையிலிருந்த பேப்பர் துகில்கள் யாவும் காற்றில் பறந்தன.
உயர் அதிகாரி சிலையாக சமைந்திருந்தார். ஒரு நாட்டின் குடிமகனின் தேசிய அந்தஸ்தை இப்படி ஒரு விதத்திலும் அடையாளங் காட்ட வேண்டியிருக்கிறது!. அவரது மனிதாபிமானம் மனதுக்குள்ளேயே எரிந்து சாம்பராகியது.
“வெரி சொரி… மிஸ்டர்… இது அரசாங்க உத்தி யோகம் இந்த நாட்டுப் பிரஜைகளுக்குத்தான் இந்த வேலைகளை வழங்க முடியும். உங்களை இந்த நாட்டுன் பிரஜை என்று நிரூபிக்க தகுந்த சான்றுகள் போதாது.. போய் வாருங்கள்..”
பியூன் இன்னொருவரை உள்ளே வரும்படி சத்தமிடுகின்றான்.
…அரைப் பைத்தியமாகி வெளியே வந்து கொண்டிருந்த சுப்பையாவின் உதடுகள் என்னவெல்லாமோ… உளறிக் கொட்டின.
ஏன் நான் மாத்திரம் இந் நாட்டின் ஏனைய பிரஜை களைப் போல இல்லை…? எனக்கு மாத்திரம் ஏன் பத்திரத்தை வழங்கி பிரஜையாக்கியுள்ளார்கள்? எனக்கு மாத்திரம் ஏன் பேப்பரை கொடுத்துள்ளார்கள்? நான் ஒரு பேப்பர் பிரஜை…! “பதிவு பிரஜை…! இந்த பிரபஞ்சத்திலேயே “கடதாசி பிரஜைகள்” “பதிவு பிரஜைகள்” என்று மகுடம் சூடப்பட்டு அவமானப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான் என் பரம்பரை…! என்பத்திரத்தை எலி கடித்துவிட்டது. நான் ஒரு எலி கடித்த பிரஜை! என் பிரஜாவுரிமை பத்திரம் நனைந்து விட்டால்… நான் இந்த நாட்டின் நனைந்த பிரஜை… என் பத்திரம் கிழிந்து விட்டால்… நான் ஒரு கிழிந்த பிரஜை… என் பத்திரம் எரிந்து விட்டால்… நான் ஒரு எரிந்த பிரஜை… அவன் பிதற்றல் ஒயவில்லை.
கொழும்பு வெய்யில் அவனை கொடுமையுடன் சுட்டெரித்தது. கப்பல்கள் ஓலமிடுகின்றன¸ அவைகள் மேல் உயரமான “கிரேன்”களிலிருந்து சுமைகள் ஏற்றப்படுகின்றன.
(வீரகேசரி 10-02-1963 “சுமை தாங்கி?” என்ற பெயரில்)