(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நண்பர் பாரதி மோகனின் நூல் வெளியீட்டு விழாத் தலைவர் அவர்களே! எனக்கு முன்னால் பேசியமர்ந்திருக்கும் பேச்சாளப் பெருமக்களே! சற்று நேரத்தில் நூலை வெளியிட இருக்கும், ஜாலான் பெசார் தொகுதி நகரமேயர் திரு. லம்சூன் அவர்களே! வருகை தந்திருக்கும் தமிழ் உறவினர்ளே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்களையும் வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்வதிலே மகிழ்ச்சி அடைகிறேன்.
எனக்கு முன் பேசிய தமிழ்ப் படைப்பாளர் மன்றத்தின் தலைவர் அவர்கள் என்னைச் சிங்கப்பூரின் தலைசிறந்த பேச்சாளர் என்றும், மாணவப் பருவத்திலிரருந்தே ‘பேச்சுக்கொரு பேரின்பநாதன்’ எனப் பாராட்டப்பட்டவன் என்றும், தற்போது, உங்களை யெல்லாம் உணர்ச்சிக் கடலில் மிதக்கவிடப் போகிறேன் என்றும் வானளாவப் புகழ்ந்தார். என்னை எப்படியெல்லாம் புகழ்வது என்கிற எல்லையே இல்லாது பொழிந்து தள்ளினார்.
உண்மையைச் சொல்லப்போனால், பேச்சாளன் எதைப்பற்றிப் பேசுவான்? எதையாவது சம்பந்தம் இல்லாமல் பேசினால் ஜீரணித்துக்கொண்டிருப்பீர்களா?
தகவல்களை ஒழுங்காகச் சேகரித்துக் கொண்டு வந்து பேசினால்தான் உங்களிடமிருந்து தப்பிக்க முடியும்; பெயர்பெற முடியும்.
நான் ஒரே மகன். நான் சிறு வயதாக இருந்த போதே என் தந்தை இறந்துவிட்டதால், குறைந்த வருமானம் உடைய குடும்பமாக இருந்ததால், என் தாய் சிண்டா, தமிழர் பேரவை போன்ற கல்வி அற நிறுவனங்களிலிருந்து நிதி உதவி பெற்றும், செல்வி மில்லில், பொட்டலங்கள் நிறுத்தும்,ஒட்டியும் வேலை செய்து அதன் வருவாயைக் கொண்டு, என்னை நல்ல முறையில் படிக்க வைத்தார்கள்.
அப்படி எனக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட என் அன்னை என்னிடம் என்ன சொன்னாலும் தட்டுவதில்லை என்ற முடிவுக்கு அதன்படியும் நடந்து வருகிறேன் என்று இந்த நூல் விழாவிலே தெரிவித்துக் கொள்வதிலே பெருமிதம் அடைகிறேன்.
இவன் என்ன சுயபுராணம் பாடிக் கொண் டிருக்கிறான் என நீங்கள் நினைக்கக்கூடும். நான் ஏற்கெனவே சொன்னேன். தொடர்பு இல்லாமல் எதையும் பேசமாட்டேன் என்று. இன்று அன்னையர் தினம் அத்துடன் இன்று வெளியீடுபெற இருக்கும் நூலின் பெயர் ‘அன்னையே ஆலயம்’
.
நான் சிறந்த பேச்சாளர் என்றும் என் பேச்சுக்கு மயங்கி என்னைத் துரத்தும் பெண்கள் பட்டாளத்தைக் கண்டு பொறாமைப்பட்டதாகவும் இங்கே எனக்கு முன்னால் என்னைப் பற்றிப் பேசினார் நண்பர் ஒருவர்.
பேச்சாளன் என்பவன், அழகாகவும் சுவைபடவும், உங்களுக்கு எடுத்துச் சொல்லும் பாணியிலே ஒரு கலையைக் கையாண்டு பேசுவான் என்றாலும், அவன் எதைப்பற்றிப் பேசுவான்; பேசுவதற்கான செய்திகளை எங்கிருந்து அவன் பெறுகிறான்?
பாரதிமோகன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளைப் படித்து அவற்றிலிருந்து எடுத்த கருத்துகளைத்தான் உங்களிடம் அழகுபடச் சொல்லி, கைதட்டல்களைப் பெற்று விடுகிறோம். இதுதான் உண்மை.
அன்னையர்களைப் பெருமைப்படுத்த விரும்பி, நூலாசிரியர் எடுத்துகாட்டிய இரண்டு உதாரணங் களே இந்த நூலில் நான் கண்டெடுத்த மிகப்பெரிய புதையல்கள். ஏற்கெனவே இந்த இரு சம்பவங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கலாம். இருந்தாலும் இவர் எடுத்துச் சொல்லியிருக்கும் விதம் ஒப்பிட்டுக் காட்டியிருக்கும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.
தாய்மார்கள், தங்கள் உயிரையும் பணயம் வைத்துத் தாம் பெற்ற பிள்ளைகளைக் காப்பவர் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டைக் காட்டியுள்ளார்.
மாரிக் காலத்து மழை. ஊரே மூழ்கிக் கொண் டிருக்கிறது. வீட்டுக் கூரையில், மணல் மேட்டில், மரக்கிளைகளில் ஏறி நிற்கும் மனிதர்கள். ஒவ்வொன்றாக, வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லும் கொடிய காட்சி. ஒருதாய் தன்பிள்ளையை இடுப்பில் வைத்திருக்கிறாள். எங்கு ஓடினாலும் இதே கதிதான். இடுப்புவரை நிரம்பிவிட்ட தண்ணீரிலிருந்து பிள்ளையைக் காப்பாற்ற அதனைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டாள். நீர்ப்பெருக்கு மார்பளவு பெருகுகிறது. பிள்ளையைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாள். வெள்ளம் பெருகிக்கொண்டே வந்து, கழுத்தளவு வந்தது… மூக்களவு வந்தது. ஒரு ஹெலிகாப்டர் வரும் சத்தத்தை உணரக்கூடிய காதுவரை வந்த தண்ணீரின் உயரம், உயர்ந்து கொண்டே செல்கிறது.
இனித் தம்மால் பிழைக்க முடியாது; குழந்தையை மட்டுமாவது காப்பாற்றலாம் என்று எண்ணியவள், குழந்தையை அவளுடைய தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொள்கிறாள். நீர்மட்டம், நெற்றியளவு, தலைவயளவு என்று உயர்ந்துகொண்டே செல்கிறது. அவள் வெள்ளத்திற்குள்; குழந்தை நீருக்கு மேலே. ஹெலிகாப்டரின் வந்தவர்கள் பார்த்து விட்டார்கள். பருந்து ஒன்று, தாழப் பறந்து, தவளையைச் சருட்டென்று ஓர் உராய்வில் தூக்கிக்கொண்டு போகுமே, அதே போல் ஹெலிகாப்டரில் குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள். ஆனால், அந்தத் தாய்… தம்மை அர்ப்பணித்துக் கொண்ட காட்சியைத் தத்ரூபமாக எழுதியுள்ளார் கதாசிரியர்.
இன்னோர் இடத்தில், பிள்ளைப் பற்றைவிட நாட்டுப்பற்று மேலோங்கி நிற்கிறது, என்பதை ஒரு ரஷ்யக்கதை மூலம் எடுத்துச்சொல்லி இருக்கிறார்.
எதிரிப் படை இந்த நாட்டிற்குள் நுழைந்து நாட்டையே சூறையாடிக் கொண்டு வருகிறது. முக்கியமான இடத்தில் ஒளிந்திருக்கும் மன்னனைப் பற்றிய ரகசியத்தை வைத்திருக்கும் ஒரு தாயைத் தேடிப்படை வருகிறது. வீட்டின் முன்பக்க வழியே எதிரிப்படை வீரர்கள் நுழைந்ததைப் பார்த்து, உடனிருந்த கைக்குழந்தையுடன் பின்புறமாக அந்த இருட்டில் ஓடுகிறாள். மணலை எத்திக்கொண்டு ஓடி ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறாள்.
ஓசை கேட்டுப் பட்டாளம் அங்கும் வந்து தேடுகிறது, புழுதிக் காற்றுப்பட்டுக் குழந்தைக்கு அந்த நேரம் பார்த்துத் தும்மல் வருகிறது. அதைக் கவனித்த அந்தத் தாய், ஒரு கணம் யோசிக்கிறாள். அருகில் வீரர்கள். தும்மல் சத்தம் கேட்டுவிட்டால் பிடிபட்டுவிடுவோம். தன்னிடம் இருக்கும் ரகசியம் வெளியாகிவிட்டால், நாட்டைக் காட்டிக்கொடுக்கக் கூடிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடுமே… என்று எண்ணி மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு, வந்து குழந்தையின் வாயை இறுக அழுத்திப் பொத்திக்கொண்டு தும்மல் வராமல் பார்த்துக் கொண்டாள்.
அங்குமிங்கும் தேடிய வீரர்கள், நகர்ந்து வேறு இடம் சென்ற பின்பு, கையை எடுத்தாள் குழந்தையைப் பார்த்தாள். அது இறந்து இரண்டு நிமிஷங்கள் ஆகிவிட்டன. அடித்துமோதிக் கதறுகிறாள்.
இதைப் படிக்கும்போது என் கண்களில் நீர் சொரிய உட்கார்ந்திருந்தேன். நண்பர்களே நீங்கள் நம்பமாட்டீர்கள். என் தாய் என்னருகில் வந்து ‘ஏன் அழுகிறாய்’ என்று கேட்டார்கள். அவ்வளவு அழகாக அவ்விரு சம்பவங்களையும், நமக்குப் படம்பிடித்துக் காண்பிக்கிறார். நண்பர் பாரதிமோகன்.
பெண்களைப் பற்றி மதிப்பீடு செய்ய உயர்த்திப் பேச, இரண்டு மேலை நாட்டுக் கதைகளைத் தேடிக் கண்டு பிடித்துள்ளார் நூலாசிரியர் ஆனால், நம் சிங்கப்பூரிலேயே நடந்ததைச் சொல்கிறேன். இது நண்பர் பாரதி மோகனுக்குத் தெரியாமல் போய் விட்டது. தெரிந்திருந்தால் கையாண்டிருப்பார்.
கல்லூரிகளுக்கிடையேயான அழகிப் போட்டி. அந்த ஆரணங்கு, தேவலோகத்திலிருந்து இறங்கி வந்தவள்போல், அழகுக்கு இலக்கணம் வகுத்தவள் போல் இருந்தவள் நடந்து வந்து காட்சி தந்தாள். அவள் வீசிய புன்னகையில் மயங்கிக் கிடந்த மாணவர்கள் ஏராளம். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவள் சொன்ன பதில் நீதிபதிகளையே அசர வைத்தது.
விளையாட்டு வீரன் ஒருவனை எப்படி உற்சாகப்படுத்துவீர்கள்? என்று ஒரு கேள்வி. அவள் பதில் சொல்கிறாள். அந்த வீரனிடம் வெற்றி பெறுவதற்கான திறமை இருக்கிறது என்று நான் தெரிந்து கொண்டால் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமே கொடுத்து விளையாட அனுப்புவேன். இந்த இடத்தில் பண்பாடு, கலாசாரம் என்று எழுகிற கூக்குரல்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பிறந்த நாட்டுக்கு வெற்றி தேடித்தர ஒத்துழைப்பேன் என்று சொன்ன அவளுக்கே முதல் பரிசு.
அந்த ஆண்டுப் போட்டிக்கு வந்துள்ள நீதிபதிகளுள் ஒருவர், சிங்கப்பூர் காற்பந்து கேப்டன் சந்திரமணி;
பரிசளிப்பு நிகழ்ச்சியின் இறுதியில் பேசும்போது குறிப்பிடுகிறார்.
இவரைப்போன்ற சிறந்த அழகியை என் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. ரசித்ததே இல்லை.
அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற ஆசியக் காற்பந்து விளையாட்டுப் போட்டியின்போது என்னருகில் இவர் இருந்தால், சிங்கைக்கு வெற்றிக் கோப்பையைத் தட்டிக்கொண்டு வருவேன், என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான். நிறைந்திருந்த வர்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
வீட்டிற்குத் திரும்பிய அந்த ஆரணங்கிற்குத் தூக்கமே வரவில்லை. ஒரு வாரச் சிந்தனைக்குப் பிறகு, ஒரு பெண்ணால் பிறந்த நாட்டிற்கு, ஒரு பெருமையைக் கொண்டுவர முடியுமென்றால், அதுவே, மிகப்பெரிய தொண்டு. என்று நினைத்தாள் மேடையில் பேசிய பேச்சையும், நடைமுறையில் கடைப்பிடித்தால் சொல் ஒன்று செயல் ஒன்று என்று இல்லாமல் வாழ்ந்தோம் என்ற பெருமையையும் பெறலாம் என்று முடிவெடுத்தாள்.
மறுநாளிலிருந்து சந்திரமணி, பயிற்சிபெறும் ஆட்டங்களத்தின் முன், வரிசையில் உட்காருவாள். அவன்கோல் போடும்போது மெய்ம்மறந்து கைத் தட்டுவாள். வெளியில் நின்றுகொண்டே, அவனைப் பார்த்துக் கைகளை அசைத்து உற்சாகப்படுத்துவாள். வெற்றி பெற்று வெளியே வரும்போது அவன் கரங்களைப் பிடித்து முத்தம் கொடுப்பாள்.
மறுநாள் எந்த இடத்தில் ஆட்டம் எனக் கேட்பாள். சந்திரமணிக்குக் தலைகால் புரியவில்லை. ஆட்ட மைதானத்தில் அந்த ஆரணங்கைப் பார்த்து விட்டால், சந்திரமணியின் கால்கள் தரையில் ஓடாது. பறந்து பறந்து பந்தை உதைப்பான். சிங்கப்பூர் குழுக்கள் அனைத்திலும் கோல்… கோல்… வெற்றி…வெற்றி…
எதிர்வரும் ஆசியக் காற்பந்துப் போட்டிக்கு ஒத்திகையே முடிந்தது. கோலாலம்பூரில் நடக்க இருக்கும் போட்டி பற்றிய செய்திகள் தொலைக்
காட்சி, வானொலி, செய்தித்தாள்கள். பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டன. போட்டியின் முன்னுரைப்புகள், நேரில் சென்று பார்க்கத் திட்ட மிட்டவர்களின் பேட்டிகள் வெளிவந்தன. தொலைக் காட்சி மூலம் பார்ப்பதற்கு ஏற்ப, தம் பணிகளைச் சிலர் ஒதுக்கி வைத்துக்கொண்டு தயாராயினர்.
ஓர் ஆங்கிலத் தினசரியில் கேப்டன் சந்திரமணியின் படத்தைப் போட்டு ஒரு கையில் பந்து, இன்னொரு கையில் அந்தப் பேரழகி முத்தமிடும் படம் போட்டுப் பக்கத்தில் வெற்றிக் கோப்பையை வரைந்து, அதன் கீழே “கோல்டன் ஆப்பிளால் ஓட்டத்தை இழந்தது அன்று. ஒரு கை முத்தத்தால், சிங்கை வெற்றியைப் பெறப்போவது இன்று” என்று வெளியான செய்தி மக்களிடையே ஒரு பரபரப்பை எற்படுத்தியது. காற்பந்தாட் ரசிகர்களைக் கவர்ந் திழுத்தது. அந்த ஈர்ப்புச் சக்தி மிகுந்த விளம்பரத்தை எடுத்து மற்ற மொழித் தினசரிகள் அனைத்தும் பிரசுரித்து மகிழ்ந்தன.
ஆரணங்கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கோலாலம்பூர் எப்போது வரப்போகிறீர்கள் எனச் சந்திரமணி விசாரித்தான்.
“நீங்கள் தங்க இருக்கும் ஹில்டன் நானும் ஒர் அறையை உறுதி செய்துவிட்டேன். நீங்கள் கால் இறுதிப் போட்டியில் விளையாடும் நாளன்று அங்கிருப்பேன். அதுவரையில் தினம் காலையில் தொலைபேசியில் உங்களைப் படுகையிலிருந்து எழுப்பிவிடுவேன். என் குரல் கேட்டு விடியும் நாள் உங்களுக்கு நல்ல நாளாகவே அமையட்டும் என்று பதில் சொன்னதில் அவனுக்கு, உடன் அவள் வரவில்லையே என்ற ஒரு சிறுகுறை இருந்தாலும், தொலைபேசியில் பேசி, தினம் எழுப்பிவிடப்போவது; கால் இறுதிப் போட்டியன்று அவள் வர இருப்பது; அது வரையில் எல்லாப் போட்டிகளிலும் விளையாடி வெற்றிபெற வேண்டும் என்கிற மன அரிப்பு நிழலாடின.
‘என்மீது இவளுக்கு எவ்வளவு பாசம்! என் வெற்றியில் இவளுக்கு எவ்வளவு அக்கறை! எந்த அளவுக்கு என்னை அவள் விரும்புகிறாள்’ என்றெல் லாம் சந்திரமணி கனவு காண ஆரம்பித்துவிட்டான்.
போட்டியின் ஒவ்வோர் ஆட்டத்திலும், ‘அவள் கைமுத்தம் நினைவுக்கு வந்து’ ஓடியாடி விளையாடி, சக வீரர்களையும் உற்சாகமூட்டி வெற்றிபெற்றுக் கொண்டே வந்தான் சந்திரமணி. மூன்று ஆட்டங் களிலும் தொடர்ந்து முன்னேறி வெற்றிபெற்றுக் கால் இறுதி ஆட்த்திற்கும் தகுதி பெற்றுவிட்டது சிங்கப்பூர்.
எதிர்பார்த்தபடி ஆரணங்கும் காலிறுதிப் போட்டித் தினத்தன்று கோலாலம்பூர் வந்துவிட்டாள். சந்திரமணிக்குத் தூக்கமா வந்திருக்கும்? மறுநாள் எழுந்து வரவேற்பு அறைக்குச் சென்று அவள் எண்ணைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டு மென்று படுத்தான். அவன் எழும் முன்பே, அறைக்கதவு தட்டப்பட்டது. திறந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. அவளேதான்.
உள்ளே நுழைந்தவள் அவன் படுகையில் உட்கார்ந்து கொண்டு, அவனைத் தொட்டுத் தொட்டுப் பேசியது; குளியலறைக்குத் துண்டு, பிரஷ் பேஸ்ட்டுடன் அனுப்பியது; குளித்து வந்தவுடன், பழச்சாறுடன் வந்து நின்றது எல்லாம் சந்திரமணியை நிலைகுலையச் செய்தன. இருப்பினும், அவள் நன்மதிப்பைப் பெறக்கூடும் உழைப்பை நல்கி வெற்றி பெற்றேயாக வேண்டுமென்கிற துடிப்பு மேலோங்கியது.
மாலையில் விளையாட்டரங்கம். எதிர்த்து விளையாடுவது தாய்லாந்து வீரர்கள். சந்திரமணி தலைமையில் சிங்கை வீரர்கள் உள்ளே ஓடத் தயாராய் நின்றனர். அந்த ஆரணங்கு ஓடி வந்தாள். அவனைக் கட்டிப்பிடித்து, இரண்டு விரல்களை விரித்துக் காட்டி ‘வெற்றி’ என்று சொல்லி உள்ளே அனுப்பி வைத்தாள்.
முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டாள். அடிக்கடி எழுந்து நின்று பெயர் சொல்லி உற்சாகப்படுத்தினாள். அவள் எதிர்பார்த்தது போலவே 2-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வெற்றிபெற்றது. அரங்கத்திற்குள்ளேயே, காவல்துறை கட்டுப்பாட்டையும் மீறி ஓடிச் சென்று கட்டிப்பிடித்து முதன்முதலாகக் கன்னத்தில் முத்தமிட்டுப் பாராட்டினாள். அவனும் தான் அடைந்த வெற்றிக்குக் காரணமான அவளை வெகுவாகப் பாராட்டினான்.
இரண்டு நாள் கழித்து அரையிறுதி ஆட்டம் நடக்க இருக்கிறது. இந்த முறை சீனாவுடன் சிங்கப்பூர் மோத இருக்கிறது. சந்திரமணி உறங்கும் நேரமும்; திடலில் பயிற்சி பெறும் நேரமும் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் கூடவே ஆரணங்கு இருப்பாள்.
தின்பண்டங்கள் வாங்கினால் அவன் வாயில் ஊட்டிவிடுவாள். அந்த வகையில் தன் நெருக்கத் தையும், விளையாட்டு வெற்றியின் மகிழ்ச்சியையும் காட்டிக்கொண்டாள்.
அரையிறுதி ஆட்டத்திலும் 1-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் சீனாவை வென்றது. சந்திரமணியே இம்முறை அவள் நின்றிருந்த இடம்தேடி ஓடிவந்தான். அவன் கையில் இருந்த காற்பந்தை ஓங்கி அவள் தலையில் அடித்துவிட்டு அவளைக் கட்டிப்பிடித்துத் தூக்கினான். அவள் நழுவிக்கொண்டு அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு உள்ளரங்கின் ஓரத்தில், ரசிகர்களுக்குக் கையசைத்துக் கொண்டு ஓடினாள்.
சிங்கப்பூர் நாளிதழ்கள் அனைத்தும் அவர்கள் ஓடுவதைப் படம் எடுத்துப் போட்டன. அவனுடைய வருங்கால மனைவிபோல் வர்ணனை செய்து அவரவர் கற்பனைக்குச் செய்திகளை வெளியிட்டன.
அவள் நெருக்கத்தை எண்ணிக் கற்பனை செய்ய ஆரம்பித்தான், கையில் முத்தம், கட்டிப் பிடித்தல், கன்னத்தில் முத்தம், இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால், என்ன பரிசு கொடுப்பாள். அடுத்த பரிசு எங்கே? எப்படி? கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து அவளிடமே கேட்கும்விட்டான்.
‘இன்று இறுதி ஆட்டம். இதிலும் வெற்றி பெற்றுவிட்டால் எனக்கு என்ன பரிசு தரப்போகிறாய்’ என்ற கேட்டான்.
“நான்! சொல்லமாட்டேன்… செய்வேன்” என்றாள். இவன் எதையோ நினைக்க ஆரம்பித்துவிட்டான்.
“இறுதி வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று சொல்வாள். மற்ற வீரர்களுக்கும் கைகுலுக்கி உள்ளே வழியனுப்புவாள். உள்ளே சென்று பூவா தலையா போட்டியில் வென்றவுடன் அவனை நோக்கி ‘பிளையிங் கிஸ்’ (Flying Kiss) இங்கிருந்தபடியே அனுப்புவாள். வெற்றி பெற்றுவிட்டால் முழுமையாகத் தன்னை எடுத்துக்கொள்வாளோ; என்ன பேரின்ப அதிர்ச்சியைத் தரப்போகிறாளோ; என்று எண்ண ஆரம்பித்தே பந்தை உதைக்க ஆரம்பித்தான். அவளை நினைத்துக்கொண்டே பந்தை விட்டுவிடக் கூடா தெனவும் முன் ஜாக்கிரதையாக விளையாடினான். இறுதி ஆட்டத்தில் எதிர்த்து விளையாடுவது தென்கொரியா. ஏற்கெனவே, உலகக் கோப்பை ஆட்டத்தில் இறுதி ஆட்டத்தில் களமிறங்கிய வலுவான வீரர்களை உடையது. அதனால் புதிய யுக்திகளையெல்லாம் பயன்படுத்தி விளையாட வியூகம் வகுத்துத் தன் சக விளையாட்டாளர்களுக்குச் சொல்லிக் கொடுத்து சந்திரமணி உற்சாகப் படுத்தினான்.
அவள் கண்களில் நீர்மல்க, வின்… வின்…வின்…என்று சொல்லி வழியனுப்பிவைத்ததுதான் அவன் நினைவிலிருந்தது.
ஆட்டம் முழுவதும், அவன் கண்களுக்குப் படும்படியாக அரங்கின் விளிம்பிலேயே நின்று கொண்டு கையசைத்துக் கொண்டே நின்றாள். தன்னை அவன் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்பதற்காகவே முழுச் சிவப்பு நிற சுடிதார் அணிந்துகொண்டு நின்றாள்.
ஆட்டம் டிராவில் முடிவதாக இருந்தது. நேரம் முடிந்துவிட்டது. ‘எக்ஸ்டிரா’ என்கிற நீட்டிப்பு நேரம் கொடுக்கப்பட்டது. அந்த அரை மணி நேரத்தில் முதல் கோலை முதலில் போட்டுவிட வேண்டுமென்று துடித்தான் சந்திரமணி.
நண்பர்களே நீங்கள் எதிர்பார்த்தபடி முதல் கோலைச் சந்திரமணி அடிக்க ஆட்டம் முடிந்தது. ரசிகர்கள் கூட்டம் மைதானத்திற்குள் குபீரென்று நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டது. அவனுக்கோ ஆரணங்கின் நினைவு. ரசிகர்களோ. எந்தப் பக்கமும் அவனைத் திரும்பவிடாமல், பாராட்டுகளும், வாழ்த்து களும் விண்ணைப் பிளக்கும் அளவிற்குத் தெரிவித் தனர். காவல்துறையின் கட்டுப்பாடு பயனளிக் கவில்லை.
ஒருவாறாகச் சமாளித்து வெற்றி மேடைக்கு அவனைக் காவல் துறையினர் அழைத்துச் சென்று விட்டனர். அவன் வெற்றிக் கோப்பையை எதிர்பார்க்கவில்லை. ‘அவள் ஓடி வரமாட்டாளா கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்யமாட்டாளா’ ஏங்கியது அவன் மனம்.
வெற்றிக் கோப்பையை அளிக்க மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் வந்து கொடுத்தது எதுவுமே அவன் நினைவில் இல்லை. அவள் எங்கே? எங்கே? இதுதான் அவன் கேள்வி.
கோப்பை கையில்… அவளைத் தேடி ஓடினான். தேடிப் பார்த்தான். எங்குமே இல்ல. கூட்ட நெரிசலில் சிக்குண்டு எங்கேனும் மாட்டிக் கொண் டாளா? அல்லது நெரிசலிருந்து தப்பிக்க விடுதிக்கே போய்விட்டாளோ?
அவன் அடைந்த வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. அறைக்குப் போனவுடன் என்ன பரிசு தருவாளோ? ஆவல் நிமிடத்திற்கு நிமிடம் பல மடங்காகப் பெருகிக் கொண்டே போனது.
அடக்க முடியாத ஆவலுடன் அறைக்குச் சென்றாள். அவள் அறை பூட்டப்பட்டிருந்தது. வரவேற்புஅறைக்கு ஓடினான். வினவினான்.
அவள் இப்போதுதான், அறையைக் காலி செய்து விட்டுப் போகிறாள் என்று சொல்லப்பட்டது.
தலையில் இடி விழுந்தாற்போன்று அவன் உள்ளத்தாலும் உடலாலும் பாதிக்கப்பட்டுவிட்டான். பின்னாலேயே விமான நிலையத்திற்கு ஓட எண்ணினான். ஆனால், பந்தாட்டக் குழுவின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டியிருந்ததால் போக முடியவில்லை.
என்ன காரணம்…? ஏன் என்னைப் பார்க்காமல் போய்விட்டாள்.
பித்துப் பிடித்தவனாய்க் காணப்பட்டான். சிங்கப்பூர் சென்றான். அவளை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசையில், அவளுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டான்.
‘என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்! என் தாய்நநாடு வெற்றிபெற வேண்டுமென்று ஆசைப் பட்டேன்… நிறைவேறிவிட்டது என்று சொல்லித் தொலைபேசியைத் துண்டித்துவிட்டாள்.
அமெரிக்காவின் இடிக்கப்பட்ட இரட்டைக் கோபுரமாய் அவன் தலை ஆகிவிட்டதாக உணர்ந்தான்.
நண்பர்களே! இப்பொழுது சொல்லுங்கள்! தன்னுடைய தனிப்பட்ட நன்மையையோ, ஆசாபாசங் களையோ கணக்கிடாமல் தனக்கு நேர்ந்த நேர இருந்த அவப்பெயரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் கற்பையும் காப்பாற்றித் தன் தாய்நாடு, உலக அரங்கில் மதிக்கப்பட வேண்டும்; புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அது ஒரு வகைத் தியாகம்தானே!
அந்த ஆரணங்கைப் பற்றி நண்பர் பாரதிமோகன் எழுதியிருக்கலாம். ஒருகால்அவர்நினைவுக்கு இருந்திருக்கலாம்.
இப்படிப்பட்ட பெண்கள் நமது நாட்டில் இருப்பதுதான் நம் நாட்டிற்கே சிறப்பு. அந்த ஆரணங்கைப் பண்பாடு என்னும் குறுகிய பார்வையில் பார்த்திட விரும்பாமல் நாட்டிற்காகத் தன் பங்களிப்பைத் தந்தாள் என்கிற விரிந்த பார்வையை நாம் செலுத்துவோம் என்று சொல்லி என் உரையை முடித்துக்கொள்ளும் முன்பு, நூலாசிரியர் இன்னும் பல நூல்களை யாத்துத் தந்து மேன்மேலும் புகழ்பெற வேண்டுமென வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி…! வணக்கம்…!
இரண்டு நாள் கழித்து, பேச்சுக்கொரு பேரின்பநாதனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
“முந்தாநாள் நீங்கள் நூல் வெளியீட்டு விழாவில் பேசினீர்களே அந்த ஆரணங்குதான் பேசுகிறேன். கல்லூரி நாள்களிலிருந்து உங்கள் பேச்சாற்றலுக்கு நான் அடிமை. அதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமே எழாமல் போய்விட்டது. இன்று வெளிப்படையாகச் சொல்கிறேன். காரணம், உங்கள் மேடைப் பேச்சில் என்னை வெகுவாகப் பாராட்டிவிட்டீர்கள். அதனால் என்னைத் தாங்கள் விரும்புவீர்கள் என்கிற நம்பிக்கையில் சொல்கிறேன். என்னை நன்றாகப் புரிந்து வைத்திருந்து என் நோக்கத்தைப் பற்றி எவ்வளவு அழகாகப் பேசினீர்கள்! கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நானும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரிய வந்துவிட்டால், அந்தக் கூட்டத்திற்கு வராமலிக்கமாட்டேன். ஆனால் என்னை முன் னிறுத்திக் காட்டிக்கொள்ளமாட்டேன்.
வெட்கத்தைவிட்டுக் கேட்கிறேன். நான்உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். என்ன சொல்கிறீர்கள்? என்று சொல்லிப் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
“நீங்கள் சொல்லியதைப் புரிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி. நாம் ஏன்சந்தித்துப் “எப்போது? எங்கே?” மகிழ்ச்சி பொங்க சிறிதும் தாமதம் இல்லாமல் கேட்டாள்.
“நாளை மாலை மெக்பர்ஸன் சமூகக் கூடத்தில் இந்திய நற்பணி மன்றத்தின் சார்பில் தேசியநாள் திருவிழாவில் ‘நாட்டுக்கு என்ன செய்தாய்’ என்கிற தலைப்பில் நடைபெற இருக்கும் கருத்தரங்கத்தில் நான் பேசி முடித்த பின்பு வலதுபுறம் உள்ள அறைக்கு வாருங்கள் பேசலாம்” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டான்.
மறுநாள்
பேரழகி பட்டாடை உடுத்தி, பூ வைத்துப் பொட்டு வைத்துத் தன் அழகைப் பலமுறை கண்ணாடியில் பார்த்துச் சரிசெய்து கொண்டு மெக்பர்ஸனுக்குப் புறப்பட்டாள்.
‘பேச்சுக்கொரு’ பேரின்பநாதன் பேச ஆரம்பித்தான். அவன் எவ்வளவு விரைவில் பேசி முடிப்பான். அந்த அறைக்கு வருவான் என்று ஆவலுடன் காத்துக்கொண்டு, கூட்டத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.
‘நண்பர்ளே! எனக்கு முன்னால் பேசியவர் இளைஞர்கள் எதிர்காலத்தில் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்றார். நான் இல்லை என்று சொல்லவில்லை. ஒத்துக்கொள்கிறேன். இளைஞர் களுடன் பெண்களும் முன்வரவேண்டும். பெண்கள் தாம் அப்படிப்பட்ட குழந்தைகளை, மாணவர்களை, இளைஞர்களை நல்ல முறையில் வழிநடத்தி வளர்ந்து ஆளாக்குபவர்கள்.
‘எடுத்துக்காட்டாக, சமீபத்தில் நடந்த ஆசியக் காற்பந்து ஆட்டத்தில் சிங்கப்பூர் எப்படி வெற்றி பெற்றது என்று எல்லாச் செய்தித்தாள்களும் படங் களுடன் வெளியிட்டிருந்தன. கேப்டன் சந்திரமணி எவ்வளவு உயர்ந்த புகழைப் பெற்றார். உலக அரங்கில் பேசப்படும் விளையாட்டு வீரராகிவிட்டார், எப்படி லாவகமாகப் பந்தை ஒதுக்கிக் கோல்போட்டுக் கொண்டு வந்தார் வெற்றியை. அதற்குப் பின்னணியாய் ஒரு பேரழகி இல்லாவிட்டால் அவர் வெற்றி பெற்றிருப்பாரா? அப்பேரழகில் தன்னை இழந்து, அவளை மிகவும் நேசித்தான்.
ஆனால், அப்பேரழகி, பேச்சாற்றல் ஒன்றைமட்டும் நம்பி பிழைக்கும். என்னைப் போன்ற ஒரு சாதாரண மாணவனை விரும்பினாள் என்பதுதான் வியக்கத்தக்க ஓர் உண்மை. அப்பேச்சாளன் ஒரு நல்லவன். இப்படிப்பட்ட பேரழகி கிடைக்கிறாளே என்று ஒத்துக்கொள்ளாமல் அவள் நலன் கருதி, நாட்டு நலன் கருதி, அந்த கேப்டன் சந்திரமணி நலன் புத்திமதிகள் சொல்லி, நீ தடம் மாறுவது தவறு என்று எடுத்துரைத்தான்.
ஒரு வெறும் பேச்சாளனால் இந்த நாட்டிற்கு என்ன பெருமையைத் தேடிக் கொடுத்துவிட முடியும்? ஆனால், அந்தக் காற்பந்தாட்ட வீரன் சந்திரமணி’ பிரேசிலின் ரொனால்டு’ போலப் புகழின் உச்சிக்குச் செல்லமுடியும். அவனை நீ மணந்து கொண்டால், அவன் அந்த மகிழ்ச்சியிலேயே; அந்த உற்சாகத் திலேயே விளையாடிப் பல சாதனைகளைச் செய்து இந்த நாட்டிற்குப் பெருமை சேர்த்திட முடியும்!
இன்னொன்றையும் அப்பேச்சாளன் குறிப்பிட் டான். ‘நீ விரும்புபவனைத் திருமணம் செய்வதைவிட, உன்னை விரும்புபவனைத் திருமணம் செய்தால், அது சிறப்புடையதாயிருக்கும் எனச் சான்றோர்கள் சொல்வார்கள். அத்துடன் விரும்பியது கிடைக்கா விடில், கிடைத்ததை விரும்பிக் கொள்ள வேண்டும் என்கிற புதுமொழி வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியது, என்றெல்லாம் சொன்னதைக் கேட்டு, எந்தக் கால்பந்து வீரனை வேண்டாம் என்றாளோ, அவனைத் தேடிப் புறப்பட்டாள். கரம்பிடித்தாள்.
அப்பேரழகிமீது வெறிபிடித்து, பைத்தியமாகி மரணத்தின் விளிம்பிற்கே சென்றவனைக் காப் பாற்றினாள். எதற்காக? தன் சுயநலத்திற்காகவா? இல்லை! இந்த நாட்டிற்காக! அப்பேரழகி போல் நமது நாட்டிலுள்ள எல்லாப் பெண்களும், நாட்டின் முன்னேற்றத்திற்காக, நாட்டி புகழுக்காகப் பாடுபட்டால், பூசணிக் காயளவு உள்ள இப்பூவுலகில் ஒரு புள்ளியளவே உள்ள சிங்கப்பூர், உலக அரங்கில் பெருமை அடையும். சிறந்து விளங்கும் என்பதிலே எள்ளளவும் ஐயமே இல்லை எனச் சொல்லி அமைக்கிறேன்” – என்று சொல்லித் தன் சொற் பொழிவை நிறைவு செய்தான்.
பேரழகி, இருக்கையை விட்டு எழுந்து, அரங்கத்தை விட்டு வெளியேறிச் சந்திரமணியின் இல்லம் நோக்கிப் புறப்பட்டாள்.
படித்தவர் பார்வையில்
உத்தம சோழன் (தமிழகப் புகழ்பெற்ற எழுத்தாளர்)
மடப்புரம், தீபாம்பாள்புரம்
திருத்துறைப்பூண்டி வட்டம், தமிழகம்
தனி மனிதனைவிட, அவனது ஆசாபாசங்களை விட அவன் வாழும் நாடே மேலானது, அதன் மேன்மைக்காக அவன் எதையும் இழக்கலாம். இதுதான் கதைக் கரு ஏறத்தாழ தொண்ணூறு விழுக்காடு மக்களின் சிந்தனை ‘தான்.. தன் குடும்பம்..தங்கள் சுகம்… என்ற சின்னஞ்சிறு வட்டத்திற்குள் கூடுகளுக்குள் முடங்கிப் போகும் நத்தைத்தனம்தான். விதிவிலக்கான பத்து சதவிகித ‘மெழுகுவர்த்தி’ மனிதர்களால்தான் இந்த உலகம் வாழ்கிறது.
இந்தக் கதைக் கருவைக் கதையாக்கியிருப்பதால் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். நடை மிகச் சரளமாக வந்திருக்கிறது. இருந்தாலும் ஒரு சின்ன நெருடல்.
‘கதையின் நாயகி’. பேச்சுக்கொரு பேரின்ப நாதனின் ஒரு சில நிமிட உருக்கமான பேச்சைக் கேட்டதும், அதுநாள்வரை தன் மனத்தில் சுமந்து திரிந்தவனைச் சடாரென்று தூக்கி எறிந்துவிட்டு ‘சந்திரமணி’ யைக் தேடிக்கொண்டு என்பதுதான் அந்த நெருடல்.
ஒரு பேச்சாளன் ‘பேச்சோடு பேச்சாக’க் கதை சொல்லும் உத்தி இதுவரை நான் படித்திராதது. என்னை அசத்திவிட்டது. மிகமிகப் புதியது. கதை என்ற உணர்வே இல்லாமல் இயல்பாக வந்திருக்கிறது.
பேச்சாற்றல் என்பதும் கால்பந்தாட்டத்தைப் போலவே அற்புதமான கலை. அது எல்லோருக்கும் வாய்ப்தில்லை. ஒரு பேச்சாளன் தான் பேச நினைப்பதை ஏற்ற இறக்கங்களோடு பேசி மக்களிடையே கைத்தட்டல் பெறுவதென்பதும் உலகக் கோப்பையை வெல்வது போலத்தான். ‘வெறும் பேச்சாளன்’ என்பதை என்னால் ஏற்க இயலாது.
என்றாலும் பேச்சோடு பேச்சாக’ என்ற கதை ஒரு நேர்த்தியான கதைதான் என்ற வார்த்தையோடு வார்த்தையாக மட்டுமல்ல மனசோடு மனசாகவும் சொல்லிக் கொள்கிறேன்.
– விடியல் விளக்குகள், முதற்பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.