(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவள் நடந்த தினுசு , அவன் மனது ஒரு துள்ளு துள்ளிற்று. எங்கோ கொண்டு போயிற்று. எத்தனையோ மைல்களுக்கு அப்பால், அவன் ‘தேஸமுக்கு.’ தாயும், தகப்பனும், மனைவியும் அவன் திரும்பி வருகைக்குக் காத்திருக்கும் ‘இன்டிக்கி.’ இதே மிடுக்குத்தான், அவள் நடையிலும். இதே நிமிர்ந்த முதுகு , முன் துள்ளும் மார்பு, இதே உயரம், இதே தேகவாகு.
பரபரப்புடன், காலை வீசிப் போட்டு அவளைப் பின் தொடர்ந்தான். வளையல்களின் குலுங்கல் கேட்டு அவள் முகம் திரும்பினாள். குரல் வளையை ஏதோ அமுக்கிற்று. அரே தேவுடா! ஈமாதிரிகா கூட ஸ்ருஷ்டிலோ உன்னதா? ஒரே அச்சு , அந்த மேட்டு நெற்றி, எடுப்பு மூக்கு, கோயில் பதுமை போல் கீழுதட்டின் மேல், மேலுதட்டின் உறக்கம், நடுப்பிளந்த மோவாயும் கட்டான உடலும்! தாங்க முடியாத இன்பமும் வேதனையும் நெஞ்சை வதைத்தன.
“என்னா , வளையல் போடிறியா?”
தலையைப் பலமாய் ஆட்டி, இளித்து, சாலையோரம் நிழலைச் சுட்டிக்காட்டினான். “அக்கட கூஸ்ஸுகோனி பெட்டுக்கோ” என்றான்.
ஈ தமிலு ஏமோ ஒக்க மாதிரிகா அர்த்தமாவுதுந்தி, பேச ராலேது.
முண்டாசு, முறுக்கிய மீசை , மூலக்கச்சம் உள்பட அவன் அசல் கோதாவரித் தெலுங்கன்.
வளையல் கொத்தையும் பெட்டியையும் இறக்குகையில் கண்கள் அவள் மேல் திருட்டு வெள்ளோட்டம் விட்டன. அவுனு அவளேதான். உறையிலிட்ட கத்திபோல் புடவையுள் உடலின் விறுவிறுப்பும் மார்மேல் படர்ந்த மெல்லிய மேலாக்கடியில் தெரிந்த ரவிக்கை முடிச்சும்…
“ஈமோஸ்தரு மீகு இஷ்டமா?”
ஒரு ஜோடி பொறுக்கி அவள் முகத்துக்கெதிரே ஆட்டினான். கை பதறிற்று.
ஆசை மிகுதியில் அவள் கண்கள் விரிந்து வளையல் மேல் கவ்வின.
“நல்லாத்தான் இருக்குது. துட்டு இல்லியே!”
ஆகாய நீலவர்ண வங்கி. நீலத்தின் நடுவில் ஒரு இழை பொன் ஊடுருவி, மேலே இலைகளின் சந்து வழி வெய்யிலின் ரேகைகளை வாங்கிக்கொண்டு விட்டுவிட்டு மின்னிற்று. புரிந்தும் புரியாது, ஜாடையும் பேச்சாய் பேரம் முடிந்து, அடுக்க ஆரம்பித்தான். விரல்கள் அடுக்கிக் கொண்டே, கண்கள் இமையாது அவளைப் பருகின.
அவன் விரல்கள் ஜாலம் நிறைந்த விரல்கள். விரலுக்கு விரல் தனித்தனி உயிர்கொண்டு, வாய் வார்த்தையிலும் அர்த்தம் நிறைந்த விரல்கள். மிருதுவாய், நீண்டு, நுனி சிறுத்து, நயமும் நுட்பமும் நலுங்கும் விரல்கள் அவள் கைமேல் வளைந்து, சுருண்டு, பதுங்கி, கொஞ்சி, நெகிழ்த்தி வளையலை வெகு லாகவமாய் செலுத்தின. குவிந்த விரல்களின் சாய்ந்த மேடு ஏறி விரல் குமிழ்களைத் தாண்டுகையில் பொட்டென்று வளையல் உடைந்தது. தானாவோ , அவனாவோ அவனுக்குத்தான் தெரியும். இரு கண்ணாடித் துண்டுகள் தெறித்துத் தரையில் விழுந்தன.
“த்ஸோத்ஸோ” அந்த முகச்சுளிப்பில் கூட ஒரு அலரிக் குறுகுறுப்பு. மின் நேரத்தில் உதடுகள் முறுக்கி, நீண்டு, தளர்ந்து, மறுபடி தம் செதுக்கிய அமைதியில் சமைந்தன.
அவன் புன்னகை புரிந்தான். எப்பவோ அவன் கை இன்னொரு வளையலைப் பொறுக்கி அடுக்க ஆரம்பித் தாயிற்று.
“எக்கட, எந்த தூரம்?”
அடுக்கும் நேரத்துக்கு ஏதோ ஒரு பேச்சு . அவள் பேச்சு புரியாது. ஆனால் பேசிக் கேட்கணும், அதில் ஒரு சபலம்; அவள் கையைப் பற்றி உட்காந்திருக்கும் நேரத்தை நீட்ட ஒரு சாக்கு.
“ம்ம …?” வளையலில் பதிந்த அவள் நாட்டம் நிமிர்ந்தது. “ஆமா, இன்னும் நொம்ப தூரம் போவணும். மூணு கல் தாண்டணும். போயி, சோறு ஆக்கணும். வரவேளைக்கு கொயம்பு காச்சி வெக்காட்டி பலி போட்டுடுவான். தண்ணிக்கு நேரமா, வேளையா, மண்ணா?”
சட்டென்று, அச்சத்துடன் அவனை உறுத்து நோக்கினாள். ஆனால் அந்த முகத்தில் ஒரு அசட்டு இளிப்புத் தவிர, சொன்னது புரிந்து கொண்ட சோடை இல்லை. அவளுக்கு சிரிப்பு பீறிட்டது. இது நொம்ப வேடிக்கையில்ல? நொம்ப நொம்ப டமாஸு ‘திடீரென்று ஒரு வெறிக் களிப்பு கண்டு, கிசுகிசுவென அவனுடன் வேகமாய்ப் பேசத் தலைப்பட்டாள்.
“ஆமா , ஒன்கிட்ட சொல்றேன். யாருகிட்டாவது சொல்லியாவணுமில்ல? எத்தினி நாளிக்குப் பொத்தி வெக்க ஆவும்? வூட்டுக்குத்தான் ரகசியம் தெருவுக்கு சிரிப்பு. ரகசியம்னா அதானே! ஒன் கிட்ட சொன்னா என்ன? அட, யார்கிட்ட சொன்னாத்தான் என்ன? என் புருசன் குடிப்பான். நல்லா குடிப்பான். மொடா மொடாவா உள்ளே தள்ளுவான். தென்னங்கள்ளு, ஈச்சங்கள்ளு ஏதாச்சாயினும் சரி. ஈ, எறும்பு, தேளு, கறுப்பான் மொதக்கறதெல்லாம் உள்ளே பூடும் – ஐயே, தூ!” அந்த நாற்றம் அவளுக்கு இங்கே இப்போ அடித்தது. மெய்சிலிர்த்துப் பல்லிளித்தாள். மூக்குத்தண்டு சுருங்கிற்று.
அவளுக்குச் சரியாய் அவனும் இளித்துக்கொண்டிருந்தான். அவள் முகத்தில் மாறி மாறியாடும் ஒளியும் நிழல்களும் உள்ளத்தைச் சூறையாடின. ஆனால் விரல்கள் பாட்டுக்குத் தம் வேலையைச் செய்து கொண்டிருந்தன. ஓசையிலாது அவை பயிலும் வசியத்தில் சிக்கி, அவள் உரக்கச் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
“கட்டிக்கறப்போ இம்மா மோசமில்லே. ஆளு நல்லாக் கூட இருப்பான், தாட்டியா, கட்டா சிரிச்சா தேங்காயுடைச்சா மாதிரி பல்லு வெள்ளையா பளிச்சுன்னு வெளிலே வரும் பொட்டிமவன் இப்போ பன்னியாட்டம் ஊதிட்டான். மழக்கத்துலே வந்தான்னா அடி என் யெம்மாடி! எப்பாடா! மொத்து மொத்துன்னு சாத்துவான் பாரு! நீ மட்டும் என்னாட்டம் பொம்புளையா யிருந்திச்சே, அவன் என்னை ஆடியிருக்கிற அக்ரும்பூ பூரா தொறந்து காமிப்பேன். ஹோ! ஹோ!! ஹோ!!!”
சட்டென சிரிப்பு அடங்கி அவனை உற்று நோக்கினாள். “ஒனக்கு நான் சொல்றது புரியல்லே யில்லே? ஒண்ணுஉடபுரியல்லே இல்ல? புரியாகாட்டி சேமம் என்னாங்கறே?”
அவனிடமிருந்து பதில் எதும் வரவில்லை . அவன் இங்கேயே இல்லை. மைல்களுக்கப்பால், கோதாவரிக் கரையில், தன் வீட்டுத் தாழ்வாரத்தில் இருந்தான். முதுகின் பின் கைகட்டிக் காத்திருந்தான். இரவு, வானில் கோடி நக்ஷத்திரங்கள் எரிந்தன. எங்கும் வானும் வையமும் தம்மில் தாம் நிரம்பிய அமைதி. ஆனால் அவனை, நெஞ்சு விரிசல் கண்டாற்போல், காரணம் சொல்ல இயலாது சகிக்கொணாத் துக்கம் வாட்டிற்று.
திடீரென்று உள்ளிருந்து ஓடிவரும் நடையின் திடுதிடுப்பில், மெட்டியின் இன்னொலி கேட்டுத் திரும்பினான் , குப்பென்று கேவிய மூச்சு அவன் முகத்தை எரித்து, ஆசை மீறிய தோள்கள் கழுத்தில் விழுந்து இறுகின. இளமையும் குளுமையும் வெறிவீசும் உடல் அவன் மேல் அலைமோதி அலைகீழ் மூழ்கினான். அவள் கையில் பச்சை குத்திய தேளும், பருத்தி வெடித்தாற் போன்று சதைப் பிடிப்பில் விட்டுக் கொண்டிருந்த ரவிக்கை யிலிருந்து பிதுங்கிய தோள் தழும்பும் கன்னத்து மச்சமும் மண்டையுள் புருவ நடுவில் பளீரிட்டன. உடல் மணம் காற்று வாக்கில் சிறு வெடிப்பாய் குபீர் – ‘மளுக்’ – வளையல் முறிந்தது.
அவள் விரல்களில் ஆவேசங் கண்டுவிட்டது! அவள் புறங்கை மேட்டில் அவைகளின் பதுங்கல் பாய்ச்சலாகி, அவை அவள் கையை முரட்டுத்தனமாய்ப் பிடித்து அமுக்கிப் பிசைந்தன. அவை இப்போது பேசிய பாஷையே வேறு.
மூளை கொதித்தது. எச்சில் நாக்கில் வரண்டு , தொண்டையில் சிலந்திக் கூடு பின்னி, அதில் வார்த்தைகள் மாட்டிக் கொண்டு வெளிவர இயலாது தவித்தன.
“நேனு – நேனு – நீவு – நீவு -“
அவள் முகத்தில் ரத்தம் வடிந்து, மறுபடியும் விர்ரென்று பாய்ந்து குழம்பியது. கையைத் திமிறிக் கொண்டு, அவன் கன்னத்தில் பளார் என்று ஒன்று விட்டாள். அவனுக்குக் காது ‘ஜோ’ என இரைந்தது. கண்கள் வெளியே சிதறி விடும்போல் தெறித்தன. அவன் மேல் திடீரென திரண்டு கொண்டே கவியும் இருளில் அவள் வேகமாய் இடுப்பை ஆட்டி ஆட்டி ஒடித்து மிடுக்காய் நடந்து சென்று தூரத்தில் பூமியின் இறக்கத்தில் தலைமறைவது கண்டான்.
பார்வையிழந்து அவன் இன்னும் அங்கேயே நின்றான். வெய்யிலில் பூமி வெந்தது. இதயச்சதையை ஏதோ கொக்கி மாட்டி இழுத்துப் பிடுங்கி பட்டை உரித்தது. கோரமானதோர் சத்தம் தொண்டையிலிருந்து பீறிட்டது. அந்த அதிர்ச்சியில் தேகம் கிடுகிடென ஆடிற்று. விழியோரங்களை எரித்துக் கொண்டே இரு அனல் துளிகள் கிளம்பி, கன்னங்களில் வழிந்து, மோவாயினின்று உதிர்ந்து, பூமி இஞ்சி, மண்ணில் மறைந்தன.
காலடியில் பயனற்ற நான்கு கண்ணாடித் துண்டுகள் பளபளவென மின்னிக்கொண்டு கிடந்தன.
– பச்சைக்கனவு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.