பேசும் மலர்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 6,005 
 

பாழடைந்த கட்டிடமொன்றின் சுவர்களோரம் வளர்ந்து நிற்கிற செடிகளினூடே பேசும் மலரொன்றைச் சந்தித்தேன். மற்ற செடிகளைவிட உயர்ந்து வளர்ந்திருந்த செடி ஒன்றின் காம்பின் நுனியில் சிறு குழந்தையின் மூடின கையளவில், மென் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது அந்த மலர். முதலில் அதன் பொலிவால் கவரப்பட்டுத்தான் அதனருகில் சென்றேன். திடீரென்று அது பேச ஆரம்பித்ததும் அதிர்ச்சியில் பின்வாங்கி விட்டேன். மலரோ என் அதிர்ச்சியைக் கவனியாததைப் போல தன் உள்ளத்தில் இருந்ததையெல்லாம் இதழ்கள் குவித்துப் பேசிக்கொண்டேயிருந்தது. ஆரம்பத்தில் திட்டம் செய்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு கணிப்பொறியைப் போலத்தான் அது தனக்குள் பதிவு செய்யப்பட்டிருந்தவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. அந்த மலர் என்னை விளித்துத்தான் பேசிக் கொண்டிருந்ததென்றும், அது முதலில் ஆரம்பித்து ஆற்றிய அர்த்தமற்ற சொற்பொழிவு என்னை வரவேற்கத்தான் என்பதும் எனக்குப் பின்னர்தான் தெரியவந்தது.
அது முதலில் பேசிய பேச்சின் தொனியும், ஒலியும் எனக்குப் புரியாததால் அதன் பேச்சைப் பொருள் கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல அதன் பேச்சு பாணி எனக்குப் புரிய ஆரம்பித்து விட்டது. அதன் தலைமுறைகளில் அது சந்திக்கிற முதல் பேசும் மிருகம் நான்தான் என்று தன் முன்னோர்கள் சொன்னதை வைத்துப் புரிந்து கொண்டதாக அது சொன்னது. தான் அன்று காலையில்தான் மலர்ந்ததாகவும், அந்தக் கட்டிடத்தின் சுவர்களோரம் வளர்ந்து நிற்கிற செடிகளில் ஏதாவது ஒன்றில் ஒரு நாளைக்கு ஒரே பூதான் பூக்குமென்றும், பூக்கிற ஒற்றைப் பூவுக்கும் ஒருநாள்தான் ஆயுள் என்றும் சொன்னது. அந்த ஒருநாள் வாழ்வில் பேசும் மிருகமான மனிதர்களைச் சந்தித்துவிட வேண்டும் என்பதே அதன் தலைமுறைகளின் லட்சியமாக இருந்தது. அதன் காரணம் என்ன என்று கேட்டேன். ஏதோ ஒரு மனிதனைத் தன் வாழ்நாளில் ஒருமுறை சந்தித்து, அவனுக்குத் தங்கள் உலகத்தைக் காட்டித் தரவேண்டுமென்பதே தங்களுக்கு இடப்பட்டிருக்கிற பணி என்று சொன்னது அந்த மலர். எதற்கு மனிதன் அவர்கள் உலகத்தைக் காண வேண்டும் என்ற கேள்வியைவிட, எனக்கு அவர்கள் உலகத்துக்குள் நுழைந்து பார்த்து விட வேண்டுமென்ற ஆவல் அதிகமாகி விட்டது. என்னை உடனே கூட்டிச் செல், நான் உன்னோடு வருகிறேன். உன்னை பறித்து என் கைகளில் வைத்துக் கொள்ளட்டுமா? நீ எனக்கு வழிகாட்ட ஏதுவாக இருக்கும் என்றேன். மலர் சொன்னது: என்னைப் பறித்தால், பேசும் சக்தியை இழந்து விடுவேன். செடியோடு பிணைந்திருக்கையில்தான் எனக்குப் பேசும் சக்தி உண்டு. அப்படியெனில் உன்னை வேரோடு பறித்து ஒரு தொட்டிக்குள் பதித்து, எடுத்துக் கொள்கிறேன் என்றேன். சீக்கிரம் செய், மாலைக்குள் நான் வாடி விடுவேன். அதற்குள் உனக்கு எங்கள் உலகைக் காட்ட வேண்டும் என்றது மலர். நீ வாடி விட்டால் நான் எவ்வாறு என்னுலகுக்குத் திரும்புவது என்றேன் நான். அது பற்றி நீ கவலை கொள்ளத் தேவையில்லை. இங்கு நான் ஒருத்திதான் பேசும் சக்தி கொண்டவள். என்னுலகில் என் சகோதரிகள் அனைவரும் பேசும் சக்தியும், சிந்திக்கும் திறனும் பெற்றவர்கள். அவர்களில் ஒருவர் இந்த உலகுக்கு நீ வந்து சேர வழி காட்டுவார்கள் என்றது மலர்.

அவசரமாக ஒரு தொட்டியைக் கண்டு பிடித்து, அந்த மலர்ச்செடியைப் பறித்து அதற்குள் பதித்தேன். அந்தக் கதவைத் திற என்றது. கதவைத் தொட்டதும் திறந்து கொண்டது. அட இவ்வளவு சுலபத்தில் திறந்து கொண்டதே என்று வியந்தேன். மலரோ திறந்தது உன் தொடுகையல்ல. என் இருப்பே. எங்கள் அனுமதியின்றி எங்கள் உலகத்தில் யாரும் பிரவேசித்து விட முடியாது என்றது. கதவுக்கு அப்பால் மிக நீண்ட ஒற்றையடிப்பாதை தெரிந்தது. அதன் வழியே என்னை நடக்க உத்தரவிட்டது மலர். மலர்ச்செடியைக் கையில் பற்றியபடி ஒற்றையடிப் பாதைவழி நடந்தேன். வெகுதொலைவு நடந்தபின்னும் வினோதமாக எதுவும் தட்டுப்படவில்லை. கால்கள் வலிக்க ஆரம்பித்தன. இன்னும் சிறிது தூரம்தான் என்றது மலர். இன்னொரு பதினைந்து நிமிட நடைக்குப் பின்னர், ஒரு சிறிய ஓடையை வந்தடைந்தோம். பிறந்த குழந்தைகள் பலநூறு மெல்லிய குரலில் சிரிப்பதைப் போல சப்தம் விடாது கேட்டுக் கொண்டிருந்தது. என் முகத்தில் தொங்கிய கேள்விக்குறியைப் பார்த்து விட்டு மலர், அந்த ஒலி ஓடையிலிருந்துதான் வருகிறது. பளிங்குக்கற்களில் நடைபயிலும் ஓடை கிச்சுகிச்சு மூட்டப்படுவதால் அவ்வாறு சிரித்துக் கொண்டே நகர்கிறது என்று விளக்கியது.

சற்று நேரத்தில் நீண்ட கோரைப்புற்களால் பின்னப்பட்ட ஒரு தெப்பம் மிதந்தபடி வந்தது. அதில் ஏறிக்கொள், நம் உலகத்துக்கு இந்தத் தெப்பம் இட்டுச் செல்லும். துடுப்புப் போடத் தேவையில்லை. அதுவே நாம் சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டு சேர்த்து விடும் என்றது மலர். இருவரும் அதில் ஏறினோம். தெப்பம் ஓடையின் நீரோட்டத்தோடே மென்மையாக நகர்ந்தது. பயணம் எவ்வளவு நேரம் தொடர்ந்தது என்று எனக்குப் பிடிபடவில்லை. ஆனால் ஓடையில் இருகரைகளிலும் எங்கும் நான் மனித முகம் பார்க்கவில்லை. புல்வெளியும் மலர்ச்செடிகளுமே நிறைந்திருந்தன. வேறெந்த விலங்குகளையும் கூட என்னால் பார்க்க இயலவில்லை. பயணத்தின் போது மலர் என்னிடம் பேசவேயில்லை. அதன் பொலிவு மங்கிக்கொண்டே வந்திருந்தது.

தெப்பம் நின்ற போது மரங்கள் அடர்ந்த ஒரு கரையில் இருந்தோம். தெப்பத்தினின்றும் இறங்கி நடந்தோம். மரங்கள் வழக்கத்துக்கும் மாறான உயரத்தில் இருந்தன. மேலிருந்து சலசலப்பொலி கேட்டுக் கொண்டிருந்தது. நமது வருகையைப் பற்றித்தான் அவை பேசிக் கொண்டிருக்கக் கூடும் என்றது மலர். அதன் குரல் மிகவும் பலவீனமடைந்திருந்தது. இதழ்கள் அவற்றின் நிறத்தை இழக்க ஆரம்பித்திருந்தன. மரங்களினூடே நுழைந்து வெளி வந்தபோது, ஒரு பிரம்மாண்டமான புல்வெளி தென்பட்டது. ஒரு லட்சம் வயலின்கள் காதுக்கு இதமாக மென்மையாக மீட்டிக் கொண்டிருந்ததை போன்ற இசை கேட்டுக் கொண்டிருந்தது. இந்தக் கிறங்கடிக்கும் இசை எங்கிருந்து வருகின்றது என்று கேட்டேன். அது புல்வெளியிலிருந்துதான். அத்தனைப் புற்களும் சேர்ந்து தங்கள் இருப்பை இசையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தங்கள் உலகுக்கு வந்திருக்கிற விருந்தினரின் வரவேற்பு சங்கீதமாகவும் இதைக் கொள்ளலாம் என்றது மலர். நான் அந்த இசையில் லயித்துக் கிடந்த கணத்தில் காலம் நின்று விட்டது.

‘சரி புல்வெளி தாண்டிப் போகலாம். அங்கு என்னைப் போன்ற பல பேசும் மலர்கள் இருக்கின்றன. அவற்றிடமெல்லாம் நீ நெடுநேரம் பேசலாம். நான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் இறந்து விடுவேன். உனக்குப் பயன்பட மாட்டேன்’, என்றது. ‘நீ செத்துப்போவது பற்றி உனக்கு வருத்தமாயில்லையா? என்னால் சோகம் தாங்க முடியவில்லை’, என்றேன். ‘வருத்தமும், சோகமும் மனிதர்களுக்குத்தான். எங்கள் வாழ்வின் நியதி எங்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. மீற முடியாத ஒன்றை வெல்ல எதற்காக முயலவேண்டும். மேலும் இந்த ஒரு நாள் வாழ்வின் நோக்கமே எனக்கு என்னவென்று தெரியவில்லை. இந்த உலகிற்குள் எப்படி வந்தேன் என்று தெரியவில்லை. எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டமுமில்லை. வெறும் ஒரு மலராக இருப்பதே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. இதற்கு எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லாததால், மரணம் பற்றிய கவலையுமில்லை’, என்றது.

‘மரணம் தீராத வலியில்லையா?’, என்றேன்.

‘அப்படியா? இதற்கு முன்னால் இறந்திருக்கிறாயா?’, என்றது மலர். ‘என் ஞாபகத்தில் அந்த அனுபவம் இல்லை. பலவேளைகளில் வாழ்வு தரும் அனுபவம்தான் வலி மிகுந்ததாக இருந்திருக்கிறது’, என்றது.
‘வலியிலிருந்து விடபட வேண்டும் என்ற எண்ணம் உனக்கு ஏற்பட்டதேயில்லையா?’, என்றேன்.

‘வலியும் ஒரு அனுபவம்தானே’, என்றது மலர். ‘அதை சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வலி விலகி விடுகிறது. அடுத்த அனுபவம் வந்து சேர்கிறது. நாம் அதற்கு சாட்சியாகிறோம். அடுக்குகளாய் நகர்ந்து கொண்டிருக்கும் அனுபவக் காட்சிகளை அமைதியாய் நின்றபடி கூர்ந்து நோக்கும் இடையறாத இருப்பே எங்கள் வாழ்வென்று நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.’

‘இந்த அனுபவங்கள் தொடர வேண்டும். நமக்குரியதாக வேண்டும், அல்லது இந்த அனுபவங்கள் விலக வேண்டும். நாம் அதை விட்டு விடுதலையாக வேண்டும் என்ற ஆவல் உனக்குள் எழுவதில்லையா?’, என்றேன். பூவின் உலகம் பார்க்க வேண்டும் என்ற என் ஆவல் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சில நிமிடங்களே என்னோடு இருக்கப் போகும் மலருடன் பேசித் தீர்த்து விட வேண்டும் என்ற உந்துதலே மேலெழுந்திருந்தது.

‘அனுபவங்கள் என் தேர்வல்ல. அவை என் முன்னிலையில் நிகழ்கின்றன. என் தேர்வு அல்லாத ஒன்றை எப்படி நான் எனக்குரியதாக ஆக்கிக் கொள்ளவோ, என்னிலிருந்து விலக்கிவிடவோ இயலும்? என் இருப்பு பற்றிய பிரக்ஞையை நான் எதனோடும் பிணைத்துக் கொள்வதில்லை. இருத்தல் என் விருப்பம் அல்ல. நான் இருக்கிறேன்; அதனாலேயே நான் இருக்கிறேன்.’ என்றது மலர். அதற்குள் புதைந்திருந்த மீதமிருந்த ஒளியும் இப்போது வெளிப்பட்டிருந்தது. ஏறிட்டுப் பார்த்த போது அதற்கான காரணம் புரிந்தது. புல்வெளி தாண்டி மிகப் பெரும் பூந்தோட்டம் ஒன்று மலர்ந்திருந்தது கண்ணுக்குப் பட்டது. எண்ணற்ற மலர்ச்செடிகள்; ஒவ்வொரு செடியிலும் ஒற்றை மலர். ஒவ்வொரு மலரும் பேசும் என்று யூகித்தபோது என்னுள் கிளர்ச்சி ஏற்பட்டது.

‘நண்பனே! நான் உனக்கு நன்றி கூற வேண்டும். என் சகோதரர்கள் மத்தியில் நான் மடியும் வண்ணம் என்னை இங்கு கொண்டு சேர்த்தது நீதான். வா, அங்கு போகலாம்’, என்றது.

எனக்குப் புற்களின் மீது நடக்க விருப்பமின்றி இருந்தது. மலரோ, ‘ கவலையுறாதே. மென்மையாக நடந்தாயென்றால் அவற்றுக்கு உன்னைத் தாங்கும் சக்தி உண்டு. ஆயிரக்கணக்கான புற்கள் சேர்ந்துதான் உன் ஒரு பாதத்தைத் தாங்கிப் பிடிக்கும். அவற்றுக்கு உன்னைத் தாங்குவதில் மகிழ்ச்சியே’, என்றது.

புல்வெளி மீது நடந்து, மலர்களினருகில் சென்றோம். மலர்களனைத்தும் கூடி இனிய குரலில் பாடி எங்களை வரவேற்றன. அவற்றின் இசை காதுகளுக்குப் பூக்களால் ஒத்தடம் தருவதைப் போலிருந்தது. பிறகு என்னோடு வந்த மலருடன் உற்சாகமாக உரையாட ஆரம்பித்து விட்டன. என்னைப் பற்றி நிறைய விசாரித்தன. பிறகு என் பக்கம் திரும்பி மென்மையாய் இசைத்தன. அவை என்னை நோக்கிப் புன்னகைப்பதாய்ப் புரிந்து கொண்டேன். பிறகு அவைகளை நோக்கி, அவர்கள் உலகிற்குள் என்னை அனுமதித்ததற்கு என் நன்றியையும், அவர்கள் உலகில் நுழைந்ததற்கு என் மகிழ்ச்சியையும் தெரிவித்தேன். யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதால் நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிட்டேன். இந்த நாள் என் வாழ்நாளில் ஓர் மறக்க முடியாத நாளென்றும், என்னோடு நட்பான மலரைப் பிரிவதில் உள்ள என் துக்கம் ஈடு செய்யமுடியாததென்றும் கூறினேன்.

அங்கிருந்த மலர்களிலேயே பெரியதும், ஒளி மிகுந்ததுமான ஒரு மலர் என்னைப் பார்த்துக் கூறிற்று: ‘நீ எங்கள் உலகில் இப்போதுதான் நுழைந்திருப்பதாக எண்ணுகிறாயா? எப்போதுமே நீ எங்கள் உலகில்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாய். மலர்களாகிய நாங்கள் மட்டுமல்ல. உன்னைச் சுற்றியுள்ள அனைத்துமே உன்னுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டபடிதான் இருக்கின்றன. தேவை அதற்குத் தயாரான காதுகளும், மனமுமே. இன்று அவை உனக்கு வாய்த்திருக்கின்றன. அதனால் எங்கள் உலகில் பிரவேசிக்க முடிந்தது’ என்றது.

எனக்கு ஏற்பட்டிருந்த அதிச்சியை அந்த மலர்கள் கவனியாமல், பாட ஆரம்பித்து விட்டன. நான் என் கையிலிருந்த மலரைக் கவனித்தேன். அது தன் கடைசி கணத்தில் இருந்தது. ஒரு மலரின் மரணத்தை அருகிருந்து கவனிப்பது எனக்கு இதுவே முதல் முறை. பிற மலர்கள் பாடிய பாடல், என் நட்பு மலரை வழியனுப்புவதற்காகவே என்று எனக்குப் புரிந்தது. மலர் இறுதியாக காம்பிலிருந்து கவிழ்ந்த போது என் நெஞ்சில் நிரந்தரமாகப் பூத்து விட்டதைப் போலிருந்தது.

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

1 thought on “பேசும் மலர்

  1. கற்பனை அபாரம். வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *