(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவள் பெயர் கீர்த்தனா மதிவதனி, அவளை மதிவதனி எனக்கூப்பிட்டால் அவளுக்குப்பிடிக்காது, தலைவரின் மனைவி எங்கே, நான் எங்கே, கீர்த்தனா என்றே கூப்பிடுங்கள் என்று முதன்முறை அவளை நான் சந்திக்கும்பொழுது திருத்தமாகச் சொன்னாள். கீர்த்தனா ஈழத்தைச் சேர்ந்தவள், அவளுக்கு ஐந்து வயதாக இருக்கும்பொழுது, குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்கும், பின்னர் இத்தாலியின் மிலான் நகருக்கும் புலம் பெயர்ந்தவள். நான் படிக்கும் ரோம் ப்ல்கலை கழகத்தில்தான் மொழியியலில் ஆராய்ச்சிப்படிப்புப் படிக்கிறாள். அவளின் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்படக் காரணம், தமிழும் ஈழமும் காரணமல்ல. அவளின் சக்கர நாற்காலி சார்ந்த வாழ்வும், திராவிட களையான முகமும், எப்பொழுதும் மகிழ்ச்சியான முகமும், ஒவ்வொரு புதன்கிழமை அவளின் துறைக்கு, இத்தாலிய மொழி கற்றுக்கொள்ள போகும்பொழுதெல்லாம் என் கவனத்தைத் திருப்பியது.
“நீங்கள் தமிழா!! ” என உடைந்த இத்தாலியத்தில்கேட்டதற்கு,
“நான் மட்டுமல்ல, என் சக்கர நாற்காலியும் கூட தமிழ்தான்”
துறுதுறுவென கிரிக்கெட், தமிழ், அரசியல் என சகலத்தையும் மும்மொழிகளிலும் பேசினாள்.
அவளின் சக்கரநாற்காலியைத் தள்ளி, அவளுக்கு உதவவேண்டுமா என அனுதாபமாக யாராவதுக் கேட்டால் கூட, உடனே சரி எனச் சொல்லுவாள்.
“அனுதாபம் கூட அன்பின் மற்றோர் வடிவம்தான், அதை ஏன் நிராகரிப்பானேன்”,
கீர்த்தனாவைச் சுற்றி எப்பொழுதும் ஒரு பன்னாட்டு நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள், பாலஸ்தீனியத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவர்கள் தாம் இவளின் நெருங்கிய நண்பர்கள். “பாலஸ்தீனியர்களும், ஆப்பிரிக்கர்களும், நானும் நிறம், கலாச்சாரம் வேறாகி இருந்தாலும், ஒடுக்கப்பட்டதில் நாங்கள் எல்லாம் ஒன்றுதான்”
“எப்படி உனக்கு மட்டும் இவ்வளவு நண்பர்கள்?”
“எல்லோரும் ஒவ்வொருவரை சார்ந்துதான் இருக்கின்றோம், ஒவ்வொருத்தருக்கும் ஒரு தேவை, சிலருக்கு படிப்பில் உதவி தேவை, சிலருக்கு அவர்களின் மனத்தாங்கல்களை யாராவது கேட்டாகவேண்டும், சிலருக்கு வெறும் கடலை போட வேண்டும், தொடர்ந்து வந்த வாரங்களில் கீர்த்தனாவுடன் நெருங்கிய நண்பன் ஆகிப்போனேன்.
“நானும் தமிழன் தான், உனக்கு மட்டும் ஏன் தமிழின் மேல் இவ்வளவு ஆர்வம்?”
“உங்கட தமிழ்நாட்டவர்களுக்கு தமிழ் வெறும் மொழி, எங்களுக்கு தமிழ் ஓர் அடையாளம், தமிழ் என்றாலே அரசியல், தமிழ் என்றால் போராட்டம், ஐந்து வயதில் அப்பாவின் முதுகில் தொத்தியபடி, மூன்று கிலோமீட்டர்கள் ராமேசுவரம் கடலில் நடந்த குடும்பங்களில் நாங்களும் ஒன்று, நீ பேசும் மொழியால் நீ, நிராகரிக்கப்படும்பொழுது நான் சொல்லுவதன் அர்த்தம் புரியும்”
மறுநாள் கீர்த்தனாவுடன் அவளின் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு மளிகைக்கடைக்கு சென்ற பொழுது, வழியில் எங்களது நிறத்த்துடன், சில அடிகள் தள்ளி ஒரு குடும்பம் வந்து கொண்டிருந்தது. கீர்த்தனா என்ன நினைத்தாளோ, சக்கரநாற்காலியை என்னிடம் இருந்து விடுவித்து வேகமாக கடைக்குள் சென்றுவிட்டாள். எதிரே வந்த குடும்பம்
“நீங்கள் பங்களாதேஷியா” என இத்தாலிய மொழியில் கேட்டது. ரோம் நகரத்தில் ஏகப்பட்ட வங்காளதேசத்தினர் இருக்கின்றனர். யாரவது என்னை வங்காளதேசத்தவனா எனக்கேட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும்.
‘இல்லை” என்றேன் எரிச்சலுடன்
“ஸ்ரீலங்கா??”
“இல்லை, இந்தியா, தமிழ்நாடு”
“ஓ, நாங்கள் சிங்களவர்கள், நானும் என் மனைவியும் இலங்கைத் தூதரகத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றோம்”
தூரத்தில் கீர்த்தனா என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். எனக்கு அறிமுகமான அந்தக் குடும்பம், “பிழைக்க வந்த வங்காளதேசத்தவர்களினால், எப்படி நம்மைப்போன்ற மேற்தட்டு இந்திய இலங்கை மக்களின் மேலான பார்வை எப்படி பாதிக்கப்படுகின்றது” என்று சொல்லிக்கொண்டிருந்தது.
“இத்தாலியர்களுக்கு, இலங்கை, இந்தியா, வங்காளதேசம் என்ற வித்தியாசம் தெரியாது” என மேலும் தொடர்ந்தது.
அவர்களைக் கூட்டிக்கொண்டு, கீர்த்தனாவிடம் அறிமுகம் செய்துவைத்தேன்.
தனது பெயர் மதிவதனி என அறிமுகம் செய்து கொண்ட, கீர்த்தனாவின் கண்கள் ஆத்திரத்திலும் கோபத்திலும் கலங்கியிருந்தன.
“கார்த்தி, நான் எனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்கின்றேன்” எனச் சொல்லிவிட்டு, அவளுக்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்க பகுதி வாரியாக
செல்லத்தொடங்கினாள். ஐந்தாம் அடுக்கில் இருந்த ஒரு பொருளை அவள் எடுக்க முயற்சி செய்கையில், அருகில் இருந்த அந்த சிங்கள குடும்பத்தின் தலைவர் உதவி செய்ய வர,
கடுமையான முகத்துடன் மறுத்த கீர்த்தனா, தானே எம்பி அதனை எடுத்து கூடைக்குள் போட்டுக்கொண்டாள். அடுத்தப் பகுதியில் வேறு ஏதோ எடுக்க முயல, எட்டாமல் போக ஒட்டு மொத்த சிங்களக்குடும்பமும் அவளுக்கு உதவ முன்வர,
“நான் உங்களை உதவிக்கு கேட்டேனா, எதற்கு என்னை அனாவசியமாகத் தொந்தரவு செய்கிறீர்கள்” என ஒரு கத்து கத்தினாள்.
பின்பு அவளே, அங்கு வேலை செய்யும் ஒரு வங்காளதேசத்தவனை அழைத்து, தனக்கு தேவையானதை மேலடுக்கில் இருந்து எடுத்துக் கொண்டாள். எனக்கு முதன்முறையாக அவளின் மேல் கோபம் வந்தது.
“அவங்க சிங்களிஸ்னாலதானே, அவங்களை இன்சல்ட் பண்ணே”
“ஆமாம், ஆனால் அது இன்சல்ட் இல்லை, என்னோட 25 வருஷத்து வலி வேதனைக்கு ஒரு சின்ன வடிகால், தேவ தூதர்களாகவே இருந்தாலும் எங்களை வெறுத்தவர்களிடம் இருந்து நான் எதுவும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை”
அவளுடைய நியாயம் எனக்குப்புரியவில்லை, பிடிக்கவும் இல்லை. அதன்பிறகு ஒருவாரம் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை.
பின்னொருநாள், இந்தியத் தூதரகத்தில், ஒரு சான்றிதழுக்கு அரசாங்க முத்திரை பெறுவதற்காகப் போய் இருந்த பொழுது, இந்தியில் பேசிய அதிகாரியிடம், ஆங்கிலத்தில் பதில் சொல்ல,
“மதறாசி, ஹிந்தி நஹின் மாலும்… சாலா “ என அதிகாரி எரிந்து விழுந்துவிட்டு,
அகர்வால்களும், படேல்களும் ஒரு மணிநேரத்தில் வாங்கிய சான்றிதழ் முத்திரையை பெற, “பார்ட்டி டேஸ், யூ வெயிட், நௌ கோ” என நான் விரட்டப்பட்டேன்.
என்னமோத் தெரியவில்லை, கீர்த்தனாவிடம் பேச வேண்டும் போலத் தோன்றியது, அவளின் கைபேசி எண்ணிற்கு அழைத்தேன்.
– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.