அன்று இரவு என்றுமில்லாமல் கடுங்குளிர். ஓடித்திரியும் தெருநாய்கள் குழிக்குள் உறங்கிக்கொண்டு இருந்தன. ஊரோ இருளில் மூழ்கி தூக்கத்தோடு கனவு யுத்தம் நடத்திக்கொண்டு இருந்தது.
“சின்னப்பா… முதலாளி வெங்கடாஜலத்தின் குரலோசை இருளில் இடிமுழக்கம் செய்தது.”
ராப்பகலா வேலைபார்த்து அசந்து தூங்கிக்கொண்டிருந்த சின்னப்பன் செவிகள் எதையும் கேட்பதாக இல்லை.
“வேலக்காரப்பய எங்கே தொலஞ்சான்”. முனுமுனுத்துக் கொண்டே வீட்டின் முற்றத்துக்கு வந்தார்.
காய்ந்து கொண்டிருந்த முதலாளியின் துப்பட்டியைப் போத்திக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சின்னப்பன்.
வெங்கடாஜலத்தைக் கண்டதும் வளர்ப்பு நாய் குளிரில் நடுங்கியவாறு வாலை ஆட்டிக்கொண்டு குரைத்தது.
“வேலக்காரப்பயலுக்கு முதலாளியோட துப்பட்டி கேக்குதோ” தனக்குள் பேசியவாறு நாயை அவிழ்த்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார்.
வேலக்காரன் போத்திக்கிட்டத நாம போத்திக்கக் கூடாது முடிவோடு மீண்டும் உறங்க ஆரம்பித்தார்.
பொழுதும் விடிந்தது. இரவு நடந்ததை மனைவி கீதாம்பாளிடம் சொல்லிக் கொண்டு இருந்தார் வெங்கடாஜலம்.
“அந்த துப்பட்டிய என்னங்க பண்ணுனீங்க” ஆவலோடு கேட்டாள். “இனி இந்த மாதிரி நடந்துக்காதேனு சொல்லி அவனுக்கிட்டேயே கொடுத்துட்டேன்” வெங்கடாஜலம் சொல்லி முடித்தார்.
துப்பட்டியைக் கண்டதும் சின்னப்பன் மனைவி “என்னங்க உங்க முதலாளி கொடுத்தாங்களா. அவருக்கு ரொம்ப பெரிய மனசுங்க” சொல்லி முடித்தாள்.
“ஆமாம் புள்ள! எங்க முதலாளிக்கு பெரிய மனசு தான்” புன்முறுவல் செய்தவாறு திண்ணையில் அமர்ந்தான் சின்னப்பன்.
– 2005 மார்ச் மாத தாழம்பூ இதழில் வெளியானது.
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.