பெரியவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 13,567 
 
 

நடராஜ் அவரை பார்க்க சென்ற போது அவர் கொல்லைபுறத்தில் இருப்பதாக தெரிந்தது. அங்கு சென்ற போது அவர் இடுப்பில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு துடைபத்தால் குப்பையை கூட்டிகொண்டிருந்தார். இவனை பார்த்ததும்,

ஆச்சிரியமயிருக்கே எப்பிடியோ வந்துட்டியே. வா வா வா, என்று மிகவும் அன்புடன் அழைத்தார்.

அவருக்கு 76 வயதிருக்கும், சதையில்லாத ஒத்தை நாடி உடம்பு. தோளில் சுருக்கம் இருந்தது. அந்த காலத்து மக்களுக்கு இதுபோன்ற உடல் வாகு சாதாரணம். வயது ஆகா ஆகா சதை குறைந்துவிடும். அவர்கள் உணவு பழக்கம் அப்படி. எத்தனை வயதானாலும் வேலை செய்துகொண்டிருப்பார்கள். அதனால் கொழுப்பு சேராது.

வெயில் ஆரம்பிச்சிடுச்சு, போன வருஷம் வரசொன்னா வரல. இந்த வாட்டி வராம இருந்துறாதே இன்னும் ஒன்ற மாசத்தில எப்படியும் இந்த மரத்திலே மாங்கா வரும். கண்டிப்பா எடுத்துண்டு போனும். சரியா?, என்றும் உரிமையுடன் அதட்டினார்.

சரி சார்.. இவ்ளோ பெரிய வீட்டே நீங்களே இவ்ளோ சுத்தமா வெச்சிக்கறது, என்று சொல்லிகொண்டிருக்கும்போதே

இடை மறித்தவர்

அட என்னப்பா, உங்கமாவ விட நீ உசத்தின்னு சொல்லுவியா? என்று கேட்டுவிட்டு இவன் முகத்தையே பார்த்தார்.

இல்ல சார், என்றான் நடராஜ்.

அது தான். நான் என்ன பெருசா? இந்த வீட்ட அம்மா எப்படி வச்சுப்பாங்க தெரியுமா? தரையை காட்டி, இதை எல்லாம் அப்படியே பிரஷ் போட்டு தேய்ப்பாங்க. எங்கப்பா திட்டுவார். ஆனா கேட்க மாட்டாங்க. நா உதவி பண்ண போனா போய் படிடான்னு வேரட்டிடுவாங்க. எங்க அம்மா இருந்தா இந்த வீடு இருக்குற தினுசே வேற.

இப்படி கூறிக்கொண்டே பெறுக்குவதை முடித்திருந்தார். உள்ள போலாம் வா. என்று அழைத்து சென்றார்.

உட்கார். ஒடனே குளிச்சுட்டு வந்துடறேன். அவசர வேல எதனா இருக்கா என்றார்.

இல்ல சார்.

அப்ப இரு, இதோ வந்துடறேன். என்று கூறி டிவி போட்டு விட்டு சென்றார்.

அந்த டிவியில் பொதிகை இல்லையேல் தூர்தர்ஷன் தான் வரும்.

நடராஜ் அந்த விட்டை பார்த்தான். பழைய வீடு அது. எப்படியும் ஐம்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். சுவர்கள் எல்லாம் ஒரு அடிக்கு மேல் தடிமன் கொண்டது. இன்னும் ஐம்பது வருடங்கள் கூட தாங்கும். கதவு, சன்னல் அனைத்தும் தேக்கு. ஒரு பக்க சுவரில் மரச்சட்டம் அடித்து புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. எல்லாம் கருப்பு வெள்ளை படங்கள். அவருடைய அப்பா அம்மா, இவர் மற்றும் பலரின் படங்கள்.

அவருடன் இப்போது ஒரு சகோதரன் மட்டுமே இருக்கிறார். மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவரும் சகோதரரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நடராஜும், பெரியவரும் இசை கச்சேரியில் ஒருமுறை சந்தித்து பின் நட்பாகி நடராஜ் அவ்வப்போது அவர் வீட்டிற்கு வருவதுண்டு. இவன் அவர் வீட்டுக்கு போனால் அவர் இவனுடன் வெளியில் வருவார். நல்ல சைவ ஹோட்டலில் சாப்பிட வைப்பார். இவனை பணம் தர விடமாட்டார். வெளியில் செல்லும் போது நாட்டு நடப்புகளை பற்றி அலசுவார்.

அவர் பாரிமுனையில் இருக்கும் ஒரு பெரிய தொழிற்குழுமத்தின் அலுவலகத்தில் கணக்கராக வேலை செய்தவர். அப்போதைய கம்யூனிசவாதி. அவருடைய அப்போதைய அனுபவங்களை கூறுவார். நடராஜனுக்கு வரலாற்றில் ஆர்வம். அதனால் அவர் பேசுவதை கேட்பதில் சந்தோசம்.

அவர் நேருவையே வம்புக்கிழுப்பார். ஆனால் காந்தியை பிடிக்கும். சுதந்திரம் கெடச்சவுடனே காங்கிரச அவர் கலைக்க சொன்னார்ப்பா. இவங்க செய்யலியே. அவவனுக்கு ஆச, பதவி ஆச. அதனால தான் நாடு உருப்படாம போச்சு. நேரு நெனைச்சிருந்தா நாடு பிரிஞ்சிருக்காது தெரியுமா, என்பார்.

அவ்வப்போது நான் பிரதமாராகி இருந்தா இதை இப்படி செய்திருப்பேன் என்பார். அவர் சொல்வதையெல்லாம் சில நேரம் இவனுக்கு நகைச்சுவையாக இருக்கும்.

அப்படிதான் ஒருமுறை நடராஜ்,

என்ன சார் சரியான சட்டை வேட்டி கூட இல்லாம இருக்கீங்க, என கேட்க

நான் இப்படி இருந்தா என்ன நம்மால பல பேர் வாழ்ந்துட்டு இருக்காங்களே அது போதும். திடிர்னு ஒரு நாள் பாக்டரிய மூடிட்டு LOCK OUT-னு சொல்லிட்டான். எங்களையும் வீட்டுக்கு போங்கன்னு சொல்லிட்டான். என்ன செய்றதுன்னே தெரியல. அப்போ இளம் வயசில்லையா? துணிஞ்சு இறங்கிட்டோம். போராட்டம் தான். அரசாங்கம் அவங்க பக்கம். என்ன பண்றது. நீதிமன்றமே கதி.

பதினஞ்சி வருஷம் கேஸ் நடந்தது. எல்லாரும் ஒதுங்கிட்டாங்க. நா மட்டும் நின்னேன். ஜெயிச்சேன். ஆமா எங்க பக்கம் தான் தீர்ப்பாச்சு. ஆனா என்ன நா கேஸுக்குனு இந்த வீட்ட தவிர எல்லாத்தையும் விட்டேன். கல்யாணம் பண்ணியிருந்தா இதெல்லாம் முடியுமா? பரவாயில்ல. ஆயிரத்து ஐநுறு பேர் பொழச்சான் இல்ல. அதுதான் நம்ம பெரும, என்பார்.

இவனால் நாம்பமுடியவில்லை. வயதானால் இப்படித்தான் சிலர் தற்பெருமை கொள்வார்கள், என்று நினைத்துகொண்டே போலியாக சிரித்து தலையசைப்பான்.

என்னப்பா, போலாமா என்ற குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தவன், மாம்பலம் தானே சார், என்றான்.

ஆமா, வேற எங்க, கழுத கெட்டா குட்டிச்செவரு.

வெளியே வந்து இவனுடைய வண்டியில் கிளம்பினார்கள்.

கோடம்பாக்கம் பாலத்த சரி பண்ணிட்டான், அதுமேலே போய் இறங்கன ஒடன லெப்ட் எடுத்து ராகவேந்திரா கல்யாண மண்டபம் வழியா போய், உனக்குத்தான் தெரியுமே, என்றார்.

மாம்பலம் மார்க்கெட்டை அடைவதற்கு முன் வெங்கடேஸ்வரா பலகார கடையில் நிறுத்த சொன்னார்.

இருவரும் உள்ளே சென்றவுடன், என்ன சாப்பிடற போளி ஓகேவா, என்றார். சரி என்றான்.

போளி வந்தது. உண்டு முடிந்ததும், பின், பஜ்ஜி பின், போண்டா வேண்டாம் என்றாலும் விடவில்லை. நீ சாப்டா நானும் ஒன்னு சாப்பிடுவேன் என்று சிறு குழந்தையை போல் கூறி சாப்பிட வைததார். வழக்கம் போல பணம் தர விடவில்லை. சகோதரனுக்கு பார்சல் வாங்கிக்கொண்டு இருவரும் மாம்பலம் மார்கெட் சென்றனர்.

அங்கே போகும் போதே நாட்டை பற்றி பேச்சு வந்தது. எவன நம்பி ஓட்டு போட்டாலும் பதவிக்கு வந்தவுடனே ஜனங்களுக்கு துரோகம் பண்றானுங்க. நமக்கு எதுக்குப்பா இவ்வளோ கார் கம்பெனி, ஒவ்வொருத்தனும் மூணு நாலு கார் வச்சி இருக்குறான். அங்கங்க அம்பது அறுபது பேர் ரோட்ல துங்குறான். அவனக்கு ஒருவேல சாப்பாடு கூட இல்ல.

பேசிக்கொண்டே ஒரு வடகம் விற்கும் கடையை அடைந்தனர்.

கடை முதலாளியிடம், போன வாட்டி வாங்கிட்டு போன வடகம் டேஸ்ட்டு பழைய மாதிரி இல்லையே. எப்பவுமே வாங்கறதுதானே, மாத்திகுடுத்துட்டியா? என்றார்.

காபி தூள் அரைத்துக்கொண்டிருந்த கடை முதலாளி இவரை அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை.

அவர் வேலை முடிந்தவுடன் சாவகாசமாக, எடுத்துட்டு வாங்க மாத்திடலாம், என்றார்

நமக்கு எப்பவுமே குடுப்பே இல்ல அதையே குடு.

போனவாட்டி கொடுத்தது தான் இப்பவும் இருக்கு சார். ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சி வாங்க தர்றேன்.

அதோ ஒரு பாக்கெட் இருக்கே, என இவர் கைநீட்ட,

கடைகாரர் அசட்டு சிரிப்புடன், நான் பாக்கல இந்தாங்க, என்று எடுத்து கொடுத்தான்.

பெரியவர் நடராஜை பார்த்து உனக்கு எதனா வேணுமா என்றார். நாட்ராஜ் வேண்டாம் என பிடிவாதமாக மறுக்க வேண்டியதாயிற்று.

காரு இல்லனா இருக்க முடியும், சோறு இல்லன்ன இருக்க முடியுமா? அரிசி கோதுமைனு எல்லாத்தையும் ஏறக்குமதி பண்ற. அத இங்கயே பயிர் பண்ணா எவ்ளோ பேருக்கு வேல கெடைக்கும். கார் கம்பெனியும் கம்ப்யூட்டர் கம்பனியும் வச்சு எத்தன பேருக்கு வேல குடுத்த, அவங்களுக்கும் முப்பத்தஞ்சு வயசானா வீட்டுக்கு அனுபிட்ற. எங்க போவான். என்று இவர் பேசிகொண்டிருக்கும்போது,

வணகண்ணா, என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தனர். பெரியவர் வயதை ஒத்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரே கேட்டார் என்ன தெரியறதா? நான்தான் கண்ணன், Despatch செக்சன் கிளர்க்.

ஓ, ஆமா, ஆமா, எப்படி இருக்கே, நன்னா இருக்கியா?

எனக்கென்ன உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன்.

கடவுள் புண்ணியம்னு சொல்லு, என்றார் இவர்.

கடவுள் எதையும் நேரடியா செய்றது இல்ல. சில மனுஷா மூலமாதான் செய்றான் சொல்லுவா. அப்படி பாத்தா உங்க முலமா எங்களுக்கு நல்லது பண்ணியிருக்கான். நீங்க மட்டும் அன்னைக்கு இல்லன்னா என்ன மாதிரி ஆளுங்க தற்கொலை பண்ணிட்டிருப்போம்.

பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாத, சரி நீ நல்லா இருக்கில்ல அது போதும்.. என்று கூறி மேலும் அதை பற்றி பேச விரும்பாதவர் போல் அங்கிருந்து உடனே கிளம்பினார்.

வந்தவர் டீ சாப்பிட்டு போங்கோ என்று எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் பெரியவர் மறுத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

நடராஜன் இப்போது அவரை உண்மையாகவே பின்தொடர்ந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *