பெயர் தெரியாப் பறவையின் கூடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 1,677 
 
 

சமீபகாலங்களில் காலையில் எழுந்ததும் கூடத்தின் ஜன்னலுக்கு வந்து அந்த மரத்தையும் அதில் உள்ள பறவையின் கூட்டையும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது தினேஷ் குமாருக்கு. மனைவியின் கேலியையும் மீறி அதை ரசிப்பது அவனுக்கு பிடித்திருந்தது. மஞ்சள் நிறம் கொண்ட‌ சின்ன அலகால் வாய்திறந்து தன் தாயின் அலகிலிருந்து வரும் உணவிற்காக மூடிய கண்களோடு நம்பிக்கையோடு அந்த‌ மூன்று குஞ்சுகள் காத்திருக்கின்றன. மரகுச்சிபோன்ற கால்களுடைய‌ தாய் அருகே வந்ததும் மூன்று குஞ்சுகளும் மேலும் அகலதிறந்த அலகுகளுடன் நாக்குகள் துடிக்க பல விசித்திர ஒலிக‌ளை எழுப்ப ஆரம்பிக்கும். உணவு வாய்க்கும் வரும்வரை கத்தி கூப்பாடு போட்டுவிட்டு பின் அமைதியாக உறங்கிவிடும்.

  இரண்டாவது தளத்தில் இருந்த கருப்பு கண்ணாடி ஜன்னல்கள் மறைத்த‌ அவன் வீட்டிலிருந்து அந்த கூட்டை அவைகளுக்கு தெரியாமல் அவன் காணமுடிந்தது நாளுக்கு நாள் குஞ்சுகள் வளர்வதை காண்பது பெரும் பாக்கியமாக நினைத்தான். சில நேரங்களில் ஒருவயது மகனுடன் அமர்ந்துவிடுவான். குஞ்சுகளைக் கண்டு ஊ.. என்று கூவும் அவனின் ஆச்சரியங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியளிப்பவைகள். நீண்ட கூரிய அலகுள்ள தாய்ப் பறவையை கிட்டத்தில் பார்க்கும்போது அதன் கால்களும் இறகுகளும் மரத்தால் செய்யப்பட்ட‌ பொம்மைபோல் இருக்கும். யாரும் அவைகளை தொல்லை செய்யக்கூடாது என கட்டளை இட்டிருந்தான். ‘பாவம் குஞ்சிங்க…’ என்று சொல்லிக்கொண்டான். அவனின் விசித்திர செயலால் அம்மாவும் அவன் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

  அன்று காலை தாமதமாக எழுந்தான் நேற்று நடந்த களேபரத்தில் தூக்கம் சரியாக வரவில்லை என்று தோன்றியது. இரவெல்லாம் அந்த சம்பவங்களின் தொடர்ச்சியை கனவில் கண்டுவந்ததாகவும் தோன்றியது. தூக்கமற்ற‌ நினைவுகளும் கனவுகளும் சேர்ந்து குழப்பியடித்தன. ஒரு சின்ன சண்டை இத்தனை கலவரமாக ஆகுமா என்று இருந்தது. தலையை உலுக்கிக்கொண்டு குளிக்க சென்றான். குளிக்கும்போதும் அதே யோசனையாக இருந்தது.

  அவன் இருக்கும் ஃப்ளாட்டின் குடியிருப்பின் பக்கத்தில் ஒரு காலிமனை உண்டு. அதன் பின்னால் மற்றொரு காலி மனையும் உண்டு. அது இரண்டு தெருக்களை நடுவில் இணைக்கும் பாலம்போல் இருந்தது. நான்கு நாட்களுக்குமுன்பு ஆட்டு இடையர்கள் ஒரு பெரிய ஆட்டு கூட்டத்தோடு அந்த இரு மனைகளையும் ஆக்கிரமிதிருந்தார்கள். இரண்டுமூன்று நாள் அந்த கூட்டதின் சத்தங்களே அந்த பகுதியில் பெரியதாக கேட்டது. ஆனால் யாருக்கும் எந்த தொந்தரவும் அவர்களால் இல்லை என்றாலும் அந்த மக்களின் வருகை தெருவாசிகளுக்கு பீதியை உருவாக்கியிருப்பதாக‌ தோன்றியது..

  இவ்வளவு பெரிய ஆட்டுகூட்டத்தை எப்படி கண்காணிக்கிறார்கள் எப்படி நினைவில் வைத்து ஒவ்வொரு ஆட்டையும் பிரிந்து சென்றுவிடாமல் கவனிக்கிறார்கள் என ஆச்சரியமாக இருந்தது தினேஷுக்கு. ஆடுகளுக்கு தேவையான தழைகளை முன்பே ஒடித்து வைத்திருந்தார்கள். அதுபோக தேவையான போது அவ்வப்போது சென்று தழைகளை ஒடித்து வந்தார்கள். பட்டிபோட்டு பக்கத்தில் அவர்களின் டெண்டும் அமைத்திருந்தார்கள். அவர்களிடம் குதிரைகள் மூன்று இருந்தன, நாய்கள் நான்கு இருந்தன‌, ஒரு சின்ன சைக்கிளும் இருந்தது. ஐந்து ஆண்கள் ஏழு பெண்கள் அத்தோடு சில குழந்தைகள் அந்த குழுவில் இருந்தார்கள்.

  எதிர்சாரியில் கொஞ்சம் தள்ளியிருந்த‌ ராஜேந்திரா பாட்டிலின் இடம் அது வேறுஒருவரிடமிருந்து புதியதாக‌ வாங்கியிருக்கிறார். ஆகவே அவர்கள் இங்கு இருப்பதை அவரும் அவர் குடும்பத்தாரும் விரும்பவில்லை என தெரிந்தது. அவ்வப்போது அங்கு வந்து என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிட்டு போனார்கள். முந்தாநாள் வந்து அந்த வீட்டுப் பெண்மணி அந்த கூட்டத்தைப் பார்த்து பொதுவாக கத்திவிட்டுச் சென்றார். நிரந்தரமாக அவர்கள் தங்கிவிடும் அபாயம் இருக்கும் என்பதால் பொதுவாக சொல்லி வைக்கிறார் என்று தோன்றியது தினேஷுக்கு.

  புனே நகரின் வெளிப் பகுதி அது, வளர்ந்துவரும் சின்ன ஏரியா சாங்வி. நிலங்கள் அவசரமாக பங்கிடப்படுவது போன்று தோற்றம் தரும் மேட்டு நிலங்களை கொண்ட புதிய நகர். இங்குவரும் மக்கள் ஒன்று ஓய்வுபெற்றவர்களாக இருப்பார்கள் அல்லது வியாபார நிலைகளை நிறுவ வந்திருக்கும் புதிய வியாபாரிகள். இவர்களின் பணத் தேவைக்கு தகுந்தாற்போல நகரம் வேகமாக வளர்ந்து வந்தது. பக்கத்தில் இருந்த ஐடி நிறுவனங்களுக்கு செல்ல மிக வசதியான இருந்ததால் நகர் வேகமாக வளர்ந்துவந்தது.

  சட்டென வளர்ந்துவிட்ட இந்த நகரை சும்மா வாங்கிவிட்ட யாருக்கும் விட்டுவிட இப்போது மனமில்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெறும் காடாக மேய்ச்சல் நிலமாக இருந்து இப்போது வேகமாக நகரம் வளரவளர காடும் மேய்ச்சல் நிலமும் வேகமாக அழிய தொடங்கிவிட்டன.

  அந்த குழுவில் இருந்த ஒரு சிறுவன் பான் போன்ற ஏதோ ஒன்று எப்போதும் மென்றதால் உதடுகளும் நாக்கும் சிவப்பாகவே இருந்தது. எண்ணெய் இல்லா தலைமுடி ஒரு மாதிரி பொன்நிற‌மாக மாறிவிட்டதில் சூரிய ஒளியில் மின்னியது. கருப்பான வண்ணம் பூசப்பட்டதோ அல்லது துருவால் வந்த நிற‌மோ அப்படியான அந்த சைக்கிளில் எப்போது சுற்றிக் கொண்டிருந்தான். மர்காட், செயின் கவர், பெடல் கட்டை போன்ற எந்த கூடுதல்களும் அந்த சைக்கிளில் இல்லை. அவன் துறுதுறுப்பாக இருந்தான். அவனின் செய்கைகள் அவனின் அந்தரங்க ஆசையை நிறைவு செய்வதாக இருப்பது போலிருந்தது. நேற்று சுற்றி வந்துக் கொண்டிருந்த அவன் சைக்கிளை அதன் நிறத்தையும் அதன் விசித்திர அழகையும் பார்த்து விளையாடிக்கொண்டிருந்த ராஜேந்திரா பாட்டிலின் மகன் அதர்வா ஆச்சரியத்தில் நின்றுவிட்டான்.

  வரியா ஒரு ரவுண்ட் போலாம் ஏரிக்கோ வா என்று அழைத்திருக்கிறான். தயங்கியவனை கூச்சப்படாத வா என்று முன்பாரில் வைத்து வீதியை ஒரு முறை சுற்றியிருக்கிறார். என்றுமில்லாது சிறுவனைக் காணாமல் அவன் பெரியம்மா வெளியே வந்தவள் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறாள்.

  சட்டென வண்டியை நிறுத்தி பிள்ளையை கடத்த வந்திருக்கிறான் என்று கூச்சல் போட ஆரம்பித்துவிட்டாள். அட மெளசி, கடத்தல்லாம் இல்லை, சும்மா சுற்றி வந்தோம் என்று சொன்னவனை அவளும் உறவினர்களும் சேர்ந்து நையப்புடைத்தார்கள். வேலை முடிந்து திரும்பி வந்த கொண்டிருந்த தினேஷூக்கு அந்த அடிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து விட்டான். மிகப்பெரிய கலவரம்போல் ஆளாளுக்கு அடித்தும் அவன் மீது ஏறி நின்றும் மிதித்தார்கள்.

  அந்த ஆட்டு இடைய பையனின் குடும்பத்தார்கள் கைகுழந்தையுடன் வந்து கதற ஆரம்பித்தார்கள். அடிகாதீர்கள் அவன் அப்படி செய்பவன் அல்ல என்று பலவாறு கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை. அதர்வாவின் அப்பா வந்து பார்த்து ஆட்டு இடையனை கட்டிவைக்க உத்தரவிட்டார். அந்த ஆட்டிடை குழுவினரை தான் எந்த நேரமும் எதுவும் செய்யமுடியும் என்று எச்சரித்தார்.

  தெருவாசிகள் இரண்டாக பிரிந்து நின்றார்கள். அவனை அடிப்பதா அல்லது மன்னிப்பதா என்று விவாதம் தொடர்ந்து நடந்தது. இதுபுதுவகை திருட்டு, இதற்கு முன்பு எப்படி நடந்தது என்று புதுப்புது செய்திகள் பகிரப்பட்டன. இரவு வரை அவனை அடித்து முடித்தபின் கடைசியாக காவல் நிலையத்தில் ஒப்படைப்பது என்று முடிவானது. வெற்றிகரமாக ஒப்படைத்து திரும்பவந்த பாட்டில் குடும்பத்தாரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவனை விட்டுவிட கோரினார்கள் ஆட்டு இடையர்கள்.

  இரவு ஃப்ளாட் புல்தரை சிமெண்ட் பெஞ்சில் தன் வலைந்த வாக்கிங் ஸ்டிக்குடன் அமர்ந்திருந்த தயானந்த் பாட்டில், தினேஷை அருகே வருமாறு அழைத்தார். தினேஷ் இருக்கும் ப்ளாட்டின் ஐந்தாவது மாடியில் இருப்பவர். புனே பல்கலை கழகத்தில் வேலை செய்து ஓய்வுப் பெற்றவர். அவன் மேல் சின்ன அக்கறைக் கொண்டவர்.

  ‘என்ன பயந்துவிட்டாயா? இன்று மாலை உன் கண்களைப் பார்த்ததும் நான் புரிந்துக் கொண்டுவிட்டேன். உன் தமிழ்நாட்டிலிருந்து வந்த‌ உனக்கு இது புதிதாக இருக்கிறது என்று நினைக்கிறேன், இல்லையா?’ என்றார் இந்தியில்.

  சற்று ஆசுவாசமாக இருந்தது தினேஷுக்கு. ‘ஆமாம் இது மாதிரி நடந்து நான் பார்த்ததில்லை. அவர்கள், அந்த ஆட்டு இடையர்கள், நல்லவர்கள் போல்தான் தெரிகிறார்கள்’ என்றான்.

  ‘இருக்கலாம், அத்தோடு அவர்கள் இங்கு தொடர்ந்து வருபவர்கள் தாம். முன்பு இந்த பகுதியெல்லாம் மேய்ச்சல் நிலமாக இருந்தபோது அவர்களுக்கு பிடித்த எல்லா இடங்களிலும் டெண்ட் அடித்து ஒரு வாரம் பத்து நாட்க‌ள் இருப்பார்கள். நாங்கள் இந்த பகுதிகளை ஆக்ரமித்து, சமீபகாலமாக நகர் வளர்ந்துவிட்டதால் இங்கு வருவதில்லை. அவர்கள் இருக்கும் பகுதியில் மழை பெய்திருக்கும் என நினைக்கிறேன் அதனால்தான் அவசரமாக இங்கு வந்திருக்கிறார்கள்.’

  ‘அவன் அப்படி செய்திருப்பான் எனவும் தோன்றவில்லை, கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம்’ என்றான்.

  ‘நீ சொல்கிறாய் ஆனால் இந்த‌ ராஜேந்திரா கேட்பவன் இல்லை, முரடன் அப்புறம் முன்கோபி யாரிடமும் பகைத்துக் கொள்வான். எதற்கு வம்பு என்று அவனையும் அவன் குடும்பத்தாரை விட்டு மற்றவர்கள் எல்லோரும் விலகியே இருக்கிறார்கள். ‘

  ‘அவர் உங்களுடையா ஆள் தானே, நீங்கள் சொல்லியுமா கேட்கமாட்டார்.’

  ‘நானா? ஓ.. நீ பாட்டில் சர்நேமை வைத்து சொல்கிறாயா? அவன் மராட்டியன் இல்லை, அவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள்’ என்றார்.

  ‘அப்படியா? ஆனால் பாட்டில் பேர்களோடு இருக்கிறார்களே?’

  ‘ஆமாம், அவர்கள் மத்திய பிரதேசத்தில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் பாட்டில் வகுப்பை பெயராக கொண்டவர்கள், இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். இங்கு இருக்கும் பாட்டிலுக்கும் சம்பந்தம் இல்லை.’

  ‘காவல் நிலையத்தில் நாம் சொல்லிப் பார்க்கலாமா?’

  ‘நீ ஒன்று கவலை கொள்ளாதே அந்த பையனை நாளைக் காலை விடுவித்து விடுவார்கள். சும்மா ராஜேந்திரா சொன்னதற்காக ஒரு நாள் வைத்திருப்பார்கள்.’ என்றார்.

  வீட்டிற்கு வந்து படுத்தபோது பதினொன்று ஆகிவிட்டது. காலையில் எப்போதும்போல அவசரமாக உணவருந்திவிட்டு கிழே வந்து வண்டி எடுத்தபோதுதான் கவனித்தான் பக்கத்து ப்ளாட் டெண்ட்கள் இல்லாமல் காலியாக கிடந்தது. இரவோடு இரவாக அவர்கள் போயிருக்கவேண்டும். பல பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. முகம்பார்க்கும் சிறிய கண்ணாடி, சில பானைகள், உடைந்த வளையல்கள் என்று பலவகையிலும் பொருட்கள் ஆட்டுப் புளுக்கையுடனும் குதிரை சாணத்துடன் கிடந்தன. சில செருப்புகள், குழந்தைகளின் ஜட்டிகள் கிடந்த மணல்பரப்பில் சொருகி வைக்கப்பட்டது போல் கிட‌ந்தன. தாறுமாறாக கால்தடங்கள் மண்பரப்பின் எங்கும் பார்க்க முடிந்தது. நிலத்தின் ஓரத்தில் இருந்த சின்ன பெரிய மரங்கள் அவரகோலத்தில் வெட்டி சாய்க்கப்பட்டது போலிருந்தது. ஒரு வேளை அடித்து விரட்டப்பட்டிருக்கலாம்.

  வெட்டப்பட்ட‌ மரத்தைப் பார்த்ததும் அவசரமாக ஓடி அதிர்ச்சியுடன் தேடிப்பார்த்தான். மணலில் ஓரமாக‌ அந்த குஞ்சுகள் கிடந்தன. பெருத்த தலையும் பெரிய கண்களும் சிறிய உடலுமாக அந்த குஞ்சுகள் கால்கள் மேல் நோக்கியும் உடல் பக்க வாட்டிலுமாக கிடந்தன. சட்டென ஒரு பய உணர்ச்சி அவன் அடிமனதில் எழுந்தது. அந்த காட்சி அவனை மேலும் எரிச்சலையும் கோபத்தையும் உண்டுபண்ணியது. மேல் நோக்கி தாய் பறவை எங்கும் இருக்கிறதா என்று தேடினான், இல்லை. வெய்யிலில் அதன் உடல்கள் இரத்தங்களை இழந்து கருவாடாக மாறிக்கொண்டிருந்தன. சின்ன குழிப்பறித்து அந்த குஞ்சுகளை அதில் இட்டு மூடினான்.

  பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்த அவன் மனைவி ‘என்ன இன்னும் ஆபிஸ் போகலையா’ என்றாள். பக்க‌த்தில் அம்மா பதறியவள் போல் காணப்பட்டாள். ‘ஏன் அதெல்லாம் பாத்துகிட்டு இருக்கே கிள‌ம்பு’ என்றாள் அம்மா. தூங்கும் குழந்தையின் அருகில் இருக்காமல் இங்கு ஏன் நிற்கிறார்கள் என்று கோபமாக இருந்தது.

  ஒரு நிமித்தில் மனம் மாறியவனாக‌ ‘இல்ல, வண்டி ரிப்பேர், அதான் வேறு ஒன்னுமில்லை, நான் நடந்து போகிறேன், நீங்க போங்க‌’, என்று பதிலுக்கு காத்திராமல் நடக்க ஆரம்பித்தான்.

  – சொல்வனம், இதழ்-147, மார்ச் 22, 2016

  Print Friendly, PDF & Email

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *