பூமி திருத்தி உண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 25, 2024
பார்வையிட்டோர்: 585 
 
 

இண்டர்காம் ஒலித்தது.

பிராஞ்ச் ஹெட்.

மதுஉடனே என் கேபினுக்கு வா.

நாராயணனின் தொப்பை மேஜையில் அமர்ந்திருந்தது.

இவனைப் பார்த்ததும் கண்ணாடியை வழித்து மூக்கில் பொருத்திக் கொண்டு கடுப்பாக கேட்டார்

வாட் இஸ் திஸ் மேன்?

என்ன சார்

ஏன் ராஜூ அண்ட் சிந்தியா லோனை அப்ரூவ் பண்ணலை?

அவங்க ரெண்டு பேரும் நம்ப ஊர்ல பெரிய பிசினெஸ்மென். அவங்களுக்கு போலி பட்டா நம்பர் கொடுத்து அக்ரிகல்சர் லோன் கொடுக்கறது சரியில்ல.

பிராஞ்ச் ஹெட் நான் சொல்றேன். அப்ரூவ் பண்ணு.

திரும்பவும் சொல்றேன். உண்மையா விவசாயம் பண்றவங்க டிராக்டர் வாங்க, பம்ப் செட் போட லோனுக்காக அப்ளை பண்ணிட்டு காத்திட்டிருக்காங்க. நீங்க பண்றது சரியில்ல.

என்ன மது ஆபிஸர் மாதிரியா பிஹேவ் பண்ற.

நியாயத்தை யார் வேணுமானும் சொல்லலாம். அவங்களுக்கு லோன் கொடுக்கணும்னு என்னை ஓவர்லுக் பண்ணி சாங்ஷன் பண்ணமுடியாது.

ஏன்?

ஹெடாபிஸுக்கு கம்ப்ளெய்ண்ட் கொடுப்பேன்.

டிராயரைத் திறந்து பேப்பரை நீட்டினார்.நம்ப ஊர் மந்திரி லெட்டர்.

டிஃபால்ட் ஆனா அவர் கட்டுவாரா?

தேவையில்லாம அவர்கிட்ட நான் பகைச்சுக்க விரும்பலை.

அப்ப ஹெச்சோவில ரிஜெக்ட் பண்ணிட்டாங்கன்னு சொல்லுங்க.

ஹெச் ஓவிலேர்ந்து இப்ப தான் பேசினாங்க. உடனே க்ளியர் பண்ணச் சொல்றாங்க.

யார் பேசினது?

ஏன் கிராஸ் செக் பண்ணனுமா?

ஆமாம்.

நம்பர் ஒத்தி ரிசீவரைக் கொடுத்தார்.

நோ மேம். ஸாரி. நோ.. நோ.

எதிர் முனை பேச்சுக்கு மெளனமாயிருந்தான்.

ஓகே மேம். உடனே மெய்ல் அனுப்பறேன்.ரிசீவரை ஓங்கி அறைந்தான்.

செல்லப்பா கேட்டார்.இதுக்காகவா பேங்க் வேலையை ரிசைன் பண்ணினீங்க? பேங்க்ல அக்ரி ஆபிஸர்னா எவ்ளோ செல்வாக்கு?

போலி விவசாயிங்களுக்கு லோன் கொடுக்கறது பேரு செல்வாக்கா?

பாப்பாக்கு புடிச்சு போனது மட்டுமில்லே நான் உங்க கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதுக்கு உங்க வேலைதான் முக்கிய காரணம். இப்டி திடும்னு வேலையை விட்டா எப்டி சரி சொல்ல முடியும். எத நம்பி என் பொண்ண கொடுக்க முடியும்?

எங்க நிலத்தை நம்பி.

நிலத்துல பயிர் பண்ணி அதை வச்சு பொழக்கிறதுங்கறது இப்ப ரிஸ்க் தானே? இப்ப விவசாயமும் ஒரு சூதாட்டம் மாதிரி ஆய்டுச்சுல்ல.

மது முகம் மாறினான். இது சூதாட்டமில்ல . அம்மா குழந்தைக்கு கொடுப்பது பேரு சூதாட்டமா?

தம்பிக்கு கோபம் வந்துடுச்சு போலருக்கு. நான் உலக உண்மையைத்தானே சொல்றேன்.

உண்மையா உழச்சா நிலம் கை விடாது.

அப்றம் ஏன் எல்லா விலைநிலங்களும் பிளாட்டா மாறுச்சு.

அது அடுத்த தலைமுறை பண்ற தவறு.

தலைமுறை தவறில்லே. மழை பொய்த்து அழிக்கிறது அல்லது பெய்து அழிக்கிறது. விளைவிக்கிறவங்களுக்கும், உபயோக்கிறவங்களும் நடுப்பற இருக்கற மிடில்மேன் பண்ற அட்டகாசம் தாங்காமத்தான் எல்லாரும் ஓடிட்டாங்க. அரசாங்கமும் இவங்களுக்கு உதவறதில்லே.

பரவால்ல. நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க அங்கிள்.

என்னோட குளோஸ் ஃபிரண்ட் சொல்லிக் கேட்டுருக்கேன். அதனால தான் பயமாருக்கு.

பயப்படாதீங்க. வந்து பாருங்க.

அதுக்குத்தானே நாங்க மூணு பேரும் வந்துருக்கோம். அதையும் பாத்துடலாம். நாங்க இங்க வந்ததால உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன்னு நிச்சயமில்லை. ஃபால்ஸ் ஹோப் வச்சுக்காதீங்க.

மது சிரித்தான்.

இந்த இன்னோவா புதுசா இருக்கே?

ஆமா எடுத்து ஒரு மாசம் ஆச்சு?

எவ்ளோ ஆச்சு?

ஆன் ரோட் 26 லட்சம்.

எப்போதும் இந்த வண்டிதானா?

தனியா போறப்ப கியா எடுப்பேன்.

ஓ.ரெண்டு வண்டி இருக்கா?

வண்டியின் வேகத்தைக் குறைத்து வலது பக்கம் காண்பித்தான்.இங்கிருந்து நம்ப இடம்.

தலையை எட்டி பார்த்தார். சவுக்கு போட்டுருக்கீங்க..

இருவது நிமிட பயணத்திற்குப் பின் சொன்னான்.

இங்க முடியுது நம்ப இடம்.

முடிந்த இடத்தில் மிகப் பெரிய கட்டிடம் இருந்தது.வாசலில் ரெண்டு டிராக்டர், மூணு லாரி ஒரு ஜீப் நின்று கொண்டிருந்தன.

இது தான் நம்ப ஃபார்ம் ஹவுஸ்.

இறங்கினார்கள். செல்லப்பா சுற்றுமுற்றும் பார்த்தார்.பச்சை இருளென மரங்கள்.

நடந்து போனா எவ்ளோ நேரம் ஆகும்? அம்மா திடும்மென கேட்டாள்.

வேகமா நடந்தா ஒன்றரை மணி நேரம் ஆகும்

வீட்டு வாசலில் ஒரு பலா மரம் அகன்று படர்ந்து நிழல்கொடுத்திருந்தது.

அதன் அடியில் மரத்தை நீளமாகப் பிளந்து இழைத்து ஆசனமாக்கியிருந்தார்கள்.

உள்ற போய் உக்கார்லாம்.

இல்ல.. இங்க நல்லாருக்கு. அமர்ந்தார்கள்.

வெட்டிய இளநீர்கள்வந்தன.

டம்ளர்ல ஊத்தி குடுப்பா.

எனக்கு டம்ளர் வேண்டாம். அப்டியேகுடிப்பேன். அனுசுயா சொன்னாள்.

குடித்து முடிந்ததும் வீட்டுக்குள் போனார்கள்.

வீடென்பது பொய்.உண்மையில் அது ஒரு காட்டு அரண்மனை.

செல்லப்பா ஆச்சர்யத்துடன் சொன்னார். காரைக்குடி பக்கத்து வீடு போல இருக்கு. அம்மா, அப்பா எங்கே?

அவங்க புதுக்கோட்டைல இருப்பாங்க. அப்பாவும், நானும் அப்பப்ப இங்க வந்துட்டு போவோம்.

அப்ப இந்த வீடு, காடு இத மெய்ண்டெய்ன் பண்றது?

எல்லாத்துக்கும் ஆள் வச்சிருக்கோம்.

பாத்துக்குவாங்களா? எத்தனை பேர்.

நாற்பது பேர்.

நாப்பது? இத்தன பேருக்கு வேலை இருக்குமா?

பத்தாது அறுவடை நேரத்துல இன்னும் நாப்பது பேர் கூப்பிட்டுக்குவோம்.

அப்றம் எதுக்கு பேங்க்ல வேலப்பாத்தீங்க. அப்பத்தான் அனுசுயாவக் கொடுப்பேன்னா?

நிலத்தை சுத்திப் பாக்கலாமா?

அம்மா கேட்டாள். பாம்பு இருக்குமா?

ஒண்ணும்பண்ணாது.

அய்யோ.

அம்மா வாம்மா. மது இருக்கறப்ப ஒண்ணும் பண்ணாது.

நடந்தார்கள்.

இது மாந்தோப்பு.

அல்போன்ஸா,பங்கனப்பள்ளி,இமாம் பசந்த்,கிளிமூக்கு பழம்,மல்கோவா,நீலம், செந்தூரம் எல்லாம் இங்க இருக்கு.

அல்போன்ஸா, இமாம் பசந்த் கூட இந்த மண்ணுல வருமா?

மண்ணுக்குத் தேவையானதக் கொடுத்தா கிடைக்கும்உள்ற போனா ரொம்ப நேரம் ஆய்டும். அடுத்தது போகலாம்.

மாபெரும் சதுரக்காடு போல் தோற்றமளித்தது.

கற்பூர வள்ளியும் ரஸ்தாளியும் இங்க சிறப்பு.அதுக்குப் பின் மாதுளை, கொஞ்சம் தள்ளி கொய்யா கடசில எலுமிச்சை, நாரத்தை.

மது சற்று எம்பிக் குதித்து ஒரு கொய்யா பறித்தான். குனிந்து காலுக்கடியில் ஓடிய வாய்க்காலில் கழுவி அவரிடம் கொடுத்தான். சாப்பிட்டுப் பாருங்க.

ஒரு வாழைபழத்தை பறித்து அதன் தோலை உறித்து அம்மாவிடம் நீட்டினான்.

தேன். அம்மா சொன்னாள்.

ஆமாம். எங்க பக்கம் இதை தேன்வாழைன்னு சொல்வோம்.

வயல் நீண்டு விரிந்திருந்தது.

செல்லப்பா அதன் பிரம்மாண்டத்தை பார்த்து விழிகள் விரிய கேட்டார்.

அம்மாடி.. எவ்ளோ பயிர். இதெல்லாம் எப்ப போடுவீங்க?

ஜனவரில கத்திரி கரும்பு. ஃபிப்ரவரில கீரை உளுந்து. மார்ச்ல வெண்டை பாகல்,ஏப்ரல்ல எள்ளு அவரை, மேயில கொத்தரை தக்காளி, ஜூன்ல பூசணி நாட்டுச்சோளம் , ஜூலைல தட்டைப்பயிறு, ஆகஸ்ட்ல மொச்சை பாசிபயிறு, செப்டம்பர்ல முள்ளங்கி சுரை அக்டோபர்ல புடல பருத்தி, நவம்பர்ல வெங்காயம், முருங்கை, டிசம்பர்ல சூரிய காந்தி மரவள்ளி.

தம்பி.. தம்பி கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க.இதுக்கெல்லாம் தண்ணி.

எங்க நிலம் ஆத்துப் படுகைல இருக்கு. ஃபோர்வெல் போட்டுருக்கோம்.கடைசில சவுக்கு போட்டுக்கோம். ரோடு ஓரமா இருக்கும். வியாபாரிங்க வந்து வெட்டி எடுத்துட்டுப் போக சவுகரியமா இருக்கும்ல.இது தென்னந்தோப்பு.

நிறைய மரம் இன்னும் காய்க்க ஆரம்பில்ல போலிருக்கே?

மெளனமாயிருந்தான். என்ன ஆச்சு மது? அனுசுயா கேட்டாள்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்த கஜா புயல்ல நிறைய மரம் விழுந்துடுச்சு. கிட்டத்தட்ட ஆறாயிரம் மரம்.

ஓ.. ஆறாயிரம். எவ்ளோ காய்.

ஒரு வெட்டுக்கு ஒரு லட்சம் காய் வெட்டுவோம். வருஷத்துக்கு ரெண்டு வெட்டு. எல்லாம் அம்பது வருஷ மரம். அப்பாவும், தாத்தாவும் போட்டது.

செல்லப்பா கர்சீஃப் எடுத்து முகம் துடைத்துக் கொண்டார்.

அப்ப இது காய்க்க இன்னும் எத்தன வருஷம் ஆகும்?

அது ஆகும் ரொம்ப வருஷம்.

இப்பல்லாம் ஹைப்ரிட் வந்துருக்கே. சீக்கிரம் காய்க்க ஆரம்பிச்சுடும்ல.

அதெல்லாம் அவசியமில்ல. தாத்தா வச்சதை அப்பா அனுபவிச்சார். அப்பா வச்சதை நான் அனுபவிக்குறேன். நான் வைக்கிறதை எம் புள்ள அனுபவிக்கும் .

சற்று வெட்கத்துடன் அனுசுயா குறுக்கிட்டாள்.

நம்ப புள்ள.

செல்லப்பா அவள் முகம் பார்த்தார். அவள் கண்கள் ஈரத்தில் பளபளத்தன.

பின் செல்லப்பா பெருங்குரலெடுத்து சொன்னார்.

எங்க பேரப் புள்ளைங்க.

அம்மா குழப்பமாக அவரை பார்த்தார்.

சட்டென புரிபட அனுசுயா தாவிப் போய் அப்பாவைக் கட்டிக் கொண்டாள்.

மது யாருக்கோ ஃபோன் பண்ணிச் சொன்னான்.

உடனே நாலு புதிய தென்னங்கன்னு எடுத்துட்டு தென்னந்தோப்புக்கு வா செந்தில். நாங்க நாலு பேரும் வைக்கணும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *