பூனை வாத்தியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,352 
 

ஊர் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் அப்பாவுக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தேன். நாளை காலை ரயில் நிலையத்திற்கு வருவதாக சொன்னார். வேறு விஷயங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு தொடர்பை துண்டிக்கும் தருவாயில் அந்த செய்தியை சொன்னார். பத்து நாட்களுக்கு முன் பூனை வாத்தியார் மரணித்துவிட்டாரென்று. அதைக் கேட்டவுடன் துக்கத்தைவிட ஆச்சரியமே அதிகரித்தது என்னுள்.இதெப்படி சாத்தியம்? அவருக்கு இப்போது ஐம்பது அல்லது ஐம்பத்தி ஐந்து வயதுதானே இருக்கும்? பாறை போன்று இறுகிய தசைகளை கொண்ட கட்டுக்கோப்பான உடல் அவருடையதாயிற்றே? எப்படி இவ்வளவு விரைவானதொரு மரணம்? முயலை சூழ்ந்துகொண்ட வேட்டைநாய்களாய் கேள்விகள் என்னை சூழ்ந்துகொண்டு தின்ன ஆரம்பித்தபோது ரயில் வேகமெடுக்க ஆரம்பித்தது. பத்து வருடங்களுக்கு முன் அவரை சந்தித்த நிமிடங்களை அசைபோட்டபடியே பயணித்தேன் நான்.

——o0o——-

வேதக்கோவிலுக்கு பின்புறம் செல்கின்ற ஒத்தையடிப்பாதையில் மூன்று நிமிடம் நடந்தால் அவரது வீட்டை அடைந்துவிடலாம்.வீட்டைச் சுற்றிலும் அடர்ந்திருக்கும் விதவிதமான குரோட்டன்ஸ் செடிகள்.மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீடுதான் பூனை வாத்தியாரின்வசிப்பிடம்.அவரது வீட்டிற்கு பின்னால் சலனமற்று கிடக்கிறது பாசிகள் படர்ந்த குளம். அவ்வப்போது நாரைகளின் சிறகடிப்புச் சத்தம் தவிர்த்து வேறெதுவும் கேட்பதில்லை. வாத்தியாரின் வீட்டில் எப்போது அவரை சுற்றிக்கொண்டிருப்பது அவர் வளர்க்கும் பூனைகள். பதினேழு பூனைகள் சிறியதும் பெரியதுமாய் வளர்த்து வந்தார்.வெள்ளை,பழுப்பு,கருமை என விதவிதமான நிறங்களில் அவை அவரைச் சுற்றி வந்தன. அவரது வீட்டுக் கதவை திறந்து உள்நுழைந்தோம் நானும் அப்பாவும். பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் கணக்கில் முப்பது மார்க் நான் வாங்கியதையும் அதனால் டியூசனுக்கு சேர்த்துக்கொள்ளுமாறும் வாத்தியாரிடம் கேட்டுக்கொண்டார் அப்பா.வீட்டைச் சுற்றி அலைந்துகொண்டிருக்கும் பூனைகளை பார்த்துக்கொண்டிருந்தேன் நான். குளத்தில் எறிந்த கல்லாய் ஒரு பூனை மட்டும் என்னுள் அலையடிக்க வைத்தது.உடலெங்கும் கருமையும் நெற்றியில் மட்டும் வெண்மையும் கொண்டிருந்த அந்தப் பூனை தீர்க்கப்பார்வையுடன் என்னருகில் வந்துகொண்டிருந்தது. பற்றியிருந்த அப்பாவின் கைகளை இறுக்கிக்கொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்பியபோது அங்கும் அதே பூனை நிற்க கண்டு நடுங்கத் தொடங்கியது என்னுடல். அப்பா என்னை விட்டுச்சென்றவுடன் திண்ணையில் உட்கார சொல்லிவிட்டு வீட்டிற்குள் போனார் வாத்தியார். கணக்குப்புத்தகத்தை திறந்துவிட்டு மெல்ல தலையுயர்த்தி அந்த கறுப்பு பூனையை தேடினேன். அதைக்காணவில்லை.

——o0o——-

ஊரில் எங்காவது பூனைக்குட்டிகள் தெருவோரம் கிடந்தால் வாத்தியாருக்கு செய்தி பறந்துவிடும். உடனே ஓடிவந்து குட்டிகளை கையிலெடுத்து வாஞ்சையுடன் தடவிக்கொடுப்பார். பின், மார்போடு அணைத்தபடி குட்டிகளை தன் வீட்டிற்கு எடுத்து வந்து உணவூட்டுவார். குட்டிகளுக்கென்றே எப்போதும் ஒரு வேஷ்டித் தொட்டில் உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். நான்கைந்து வருடங்களுக்கு முன்புதான் எங்கள் ஊர் பள்ளிக்கு மாற்றலாகி வந்திருந்தார் அவர். யாரிடமும் பேசுவதேயில்லை. அதிகாலையில் சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கும்போதுகூட யாராவது எதிர்பட்டால் ஒரு புன்னகையுடன் கடந்துவிடுவார். கேட்கின்ற கேள்விக்கு கூட ஒரிரு வார்த்தைகள் மட்டுமே பதிலாக வரும். பேசிப் பேசியே வாழ பழகியிருந்த ஊர்மக்களுக்கு பூனைவாத்தியார் வித்தியாசமானவராக தெரிந்தார். பூனைகள் மீது அவர் கொண்டிருந்த ப்ரியத்தால் அவரை ‘பூனை வாத்தியார்’ என்றே அழைத்தனர்.அவரது சொந்தப்பெயரைக்கூட மறந்துவிட்டிருந்தனர். ஊருக்கு சற்று தள்ளியிருந்த குளக்கரையில் இருந்த வீட்டில் இவர் குடிபோனபோது ஊருக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.பல வருடங்களாய் யாரும் வசிக்காமல் எப்போதும் பூட்டியே கிடந்த வீட்டை இவர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது பெரும் கேள்விக்குறியாகி கிராமத்து மனிதர்களின் மாலைவேளைகளை ஆக்கிரமித்துக்கொண்டது.——o0o——-பூனை வாத்தியார் அதிகாலையில் எழுந்து பள்ளி மைதானத்தை பத்து முறை சுற்றி வருவார். யோகாசனம் செய்வார். பிறகு வீட்டிற்கு முன்னாலிருக்கும் வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்து வெகுநேரம் தியானத்திலிருப்பார். சில நேரங்களில் அவரை பார்ப்பதற்கு துறவி போலவே தோன்றும். பள்ளியில் மற்ற வாத்தியார்கள் பிரம்பால் மாணவர்களின் பின்புறத்தில் ருத்ர தாண்டவமாடும் போது இவர் மட்டும் எந்தவொரு மாணவனையும் அடிக்கவே மாட்டார். குறைந்த மதிப்பெண் எடுத்தாலோ அல்லது கீழ்படியாமல் திரிந்தாலோ அருகில் அழைத்து சன்னமான குரலில் அறிவுரை சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார். பூனை வாத்தியார் ஒரு புதிராகவே தோன்றினார்.——o0o——-அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். அங்குமிங்கும் சுற்றித்திரிந்த பூனைகளை பார்ப்பதற்கு அழகாய் தோன்றியபோதும் ஒருவித பயம் மனதை அரித்துக்கொண்டிருந்தது. தாய்ப்பூனையொன்று தன்குட்டியை கவ்விக்கொண்டு மெதுவாய் நடந்து சென்றது. வெகுநேரமாகியும் வீட்டிற்குள் சென்ற வாத்தியார் திரும்பவில்லை. எழுந்து கதவை தட்டினேன். பதிலில்லை. ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன. செய்வதறியாது நின்றவன் கதவின் சாவிதுவாரம் வழியே உள்ளே பார்த்தேன். உடலெங்கும் மின்சாரம் பரவ அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடினேன். ஓடிச்சென்று வேதக்கோவிலுக்குள் நுழைந்து வெளியேறி எங்கள் தெருவுக்குள் நுழைந்தபோது அப்பா சைக்கிளில் எதிரே வந்துகொண்டிருந்தார். என்னைக்கண்டவுடன் பதற்றத்துடன் “என்னடா ஆச்சு? ஏன் இப்படி ஓடி…” அதற்கு மேல் அவர் பேசியது காதில் விழுவதற்குள் மயங்கி விழுந்தேன்.

——o0o——-

கண்கள் திறந்தபோது அம்மாவும் பாட்டியும் அருகில் அமர்ந்திருந்தார்கள். நார்க்கட்டிலில் என்னை கிடத்தி இருந்தார்கள். அம்மா என் தலையை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு கேட்டாள் “என்னய்யா நடந்துச்சு எதையும் பார்த்து பயந்துட்டியா?” சிறிதுநேரம் கண்கள் மருள ஏதேதோ உளறினேன். வாத்தியாரின் வீட்டிலிருந்து ஓடிவந்தது மட்டும் நினைவில் இருந்தது. எதற்காக ஓடிவந்தேன் என்பதும் அங்கு என்ன பார்த்தேன் என்பதும் கொஞ்சமும் நினைவில் இல்லை. இனி அவர் வீட்டிற்கு டியூசனுக்கு போகவேண்டாம் என்றார் அப்பா. அம்மாவின் மடியில் முகம் புதைத்து மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்துபோனேன்.

——o0o——-

நினைவுகளிலிருந்து மீண்டபோது ரயில் எங்கள் ஊரை வந்தடைந்திருந்தது. வீட்டிற்கு போனவுடன் குளித்து உணவருந்தி வேதக்கோவிலுக்கு சென்றேன். பால்ய நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும்போது கருநிற பூனையொன்று கடந்து சென்றதை பார்த்தேன். சட்டென்று பூனை வாத்தியாரின் ஞாபகம் வந்தது. அவர் இல்லாத வீட்டில் யார் அந்த பூனைக்குட்டிகளுக்கு உணவிடுவார்கள்? அவரற்ற தனிமையை அவை எப்படி எதிர்கொள்ளும்? அவர் வீட்டிற்கு போகவேண்டும் போலிருந்தது. நண்பர்களிடம் விடைபெற்று அந்த ஒற்றையடி பாதைவழியே நடக்க ஆரம்பித்தேன். முன்பைவிட நிறைய முட்புதர்களும்,காட்டுச்செடிகளும் பாதையின் இருபக்கமும் தென்பட்டன. சற்று தொலைவில் அவரது வீடு மயான அமைதியுடன் காட்சியளித்தது.

வீட்டை நெருங்க நெருங்க உள்நெஞ்சில் ஒருவித வெறுமை தோன்றுவதாக பட்டது. கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழைந்தேன். வேப்பஞ்சருகுகளால் நிறைந்திருந்தது முற்றம். ஒன்றிரண்டு பூவரச மரக்கிளைகள் காற்றில் ஒடிந்து விழுந்திருந்தன. ஒரு பூனையைக்கூட காணவில்லை. வீட்டின் கதவில் பெரியதொரு பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. பூனைகள் வேறு எங்காவது இடம்பெயர்ந்திருக்கும் என்றெண்ணியபடி திரும்பி நடக்க எத்தனித்தபோது வீட்டிற்குள்ளிருந்து பேச்சரவம் கேட்டது. வேறெந்த சப்தமும் இல்லாத அத்தருணத்தில் வீட்டிற்குள்ளிருந்து கேட்கும் ஒலி வினோதமானதாக தோன்றியது. மனதை பயம் சூழ தொடங்கினாலும் இருபத்தி ஏழு வயதுக்காரன் என்கிற இளமைத் திமிர் அந்த பயத்தை வளரவிடாமல் தடுத்தது. உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்த்துவிட கதவை நோக்கி வேகமாக நடந்தேன். சாவி துவாரம் வழியே உள்ளே எட்டிப்பார்த்தேன். மனித உடலும் கறுப்பு நிற பூனையின் தலையும் கொண்ட ஓர் உருவம் சிறியதொரு மேடை மேல் நின்று பேசிக்கொண்டிருந்தது. அதன் பேச்சை சுற்றிலும் அமைதியாக அமர்ந்த பெரும் பூனைக்கூட்டம் கேட்டுக்கொண்டிருந்தது. பூனைத் தலைகொண்ட அவ்வுருவத்தின் கைகளில் மினுமினுத்தபடி இருந்தது கூர்வாள். “வாத்தியாரின் மரணத்திற்கு பிறகு யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லை. பசியால் நம்மில் இருவர் மரணித்துவிட்டார்கள். அதற்கு ஊர்மக்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.வாருங்கள் நம் போரை ஆரம்பிப்போம்.வெற்றி நமதே” கூர்வாளை வான் நோக்கி உயர்த்தியபடி கர்ஜித்தான் அந்த பூனை மனிதன். இப்போது அவனது பூனை தலை மறைந்து புலியொன்றின் தலையாக உருமாறியது. உடல் நடுநடுங்க அங்கிருந்து ஓட திரும்பியபோது ஒரு முரட்டுக் கரம் என் தோள் பற்றி பின்னால் இழுக்க அதிர்ச்சியுடன் திரும்பினேன் அங்கே…

– Thursday, February 11, 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *