புள்ளியும் செல்லமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 2,371 
 

(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யுத்த நிறுத்தம் நீடித்துக் கொண்டிருந்தது, இக்கால கட்டத்தில் பதிய பாராளுமன்றம் கூட ஆட்சிக்கு வந்துவிட்டது.

“இந்தக் காலத்திலாவது இடைக்கால அரசு கிடைக்க வேணும் இறைவா, எமது குழந்தைகள் இனிமேலாவது சந்தோசமாக வாழவேண்டும்” என ஒரு தாய் தனது அடிவயிற்றில் நான்கு முறை தட்டி ஆகாயத்தை நோக்கி தனது இரு கைகளையும் நீட்டியவாறு தனது குடிலுக்குள் இடுப்பு உடைந்து கிடக்கும் கணவனைக் கடந்து சென்று குடிலின் ஓலை இடுக்கில் மேற்குப் புறமாக மூடிக்கட்டிய செத்தையில் ஈர்க்குகளின் உதவியோடு தொங்கிக் கொண்டிருந்த வெளுத்துப்போன தனது நான்கு ஆண் மக்களதும் போட்டோக்களையும் தொட்டுக் கும்பிட்டாள். –

அந்த அழகிய நான்கு ஆத்மாக்களும் போன பின்பு எஞ்சிய கணவனைக் கூட இரக்கம் பார்க்காத விபத்து இடுப்பை உடைக்க வேண்டுமா என்ன? உயிர் இருக்கும் வரைக்கும் அவரைக் காப்பாற்றுவதிலாவது அந்த நான்கு ஜீவன்களுக்கும் நன்றி சொல்வது போல் ஒரு ஆறுதல் கிடைக்கும் என அத்தாய் நம்பினாள்.

கதிர் பொறுக்கி, உப்பட்டி சுத்தி, மாவிடித்து, கூனிவடித்து, பொன்னாங்காணி விற்று, விறகு வெட்டி இரு வயிறுகளையும் கழுவிவந்தாள் அன்னம்.

அன்னத்தின் பக்கத்து வீடு மாளிகை மாதிரி இருந்தது. அங்கும் இருவர் இருந்தனர். நொத்தாசியார் இரண்டு மக்களையும் வெளிநாடு அனுப்பிவிட்டார். பிடிக்க வேண்டிய இடங்களில் செல்வாக்கு செலுத்துவதில் வல்லர். அவரின் மனைவி யாருடனும் கதைப்பதில்லை . வேலைக்காரப்பிள்ளை நொத்தாசியாரின் கட்டுப்பாட்டில் இயங்கினாள். வெளிநாடு சென்று விட்ட தன் இரு ஆண் மக்களினதும் நினைவுகளில் நொத்தாசியாரின் மனைவி வாழ்ந்து கொண்டிருந்தாள்.

நொத்தாசியார் 82 வயதிலும் சூடு மாறமுன் பச்சைப் பாலைத் தன் கையால் கறந்து குடிக்கிறார். காலைக் கஞ்சிக்காக அன்னம் வெளியில் சென்ற வேளையில் நொத்தாசியார் பச்சைப்பால் குடித்துவிட்டு நரைத்த கட்டை மீசையை தட்டிவிட்டு பெருத்த ஏவறை விட்டு வயிற்றைத் தடவியபடி எழுந்தபோது அன்னத்தின் தலையைக் கண்டவர் ” என்ன அன்னம் இன்னும் யோசிக்கவில்லையே” எனக் கேட்டார். அன்னம் அவரின் வளவைக் கடந்து சென்றுவிட்டாள்.

“என்ன நொத்தாசியார், என்ன கறக்குது இந்தப் புள்ளி” என்றபடி உள்ளே வந்தார். அவருடைய நெடுநாள் கூட்டாளி ”என்னத்தக் காணும் ஒரு பத்துப் பன்னிரண்டு கறக்குது சரியான கள்ளி ஒளிச்சுப் போடுதோ தெரியவில்ல” என்றார். நொத்தாசியார். “மருமோன்ட சிவல பதினாறு பதினெட்டு மட்டுல கறக்குதென்டவன். உதக்குடுத்துட்டு இந்தியன்ட யேசில ஒண்டப் பாக்கட்டே நொத்தாசியார்” என்றார் கூட்டாளியும் புறோக்கரும்.

“சேச்சே புள்ளையைப் போல இந்தப் புள்ளி, தடவிக் தடவி வளர்த்துப் போட்டன் பாருங்கோ, உது கிடக்கட்டும்” என்று மறுத்துவிட்டார் நொத்தாசியார்.

அன்னத்தின் கடைசிப் பொடியன் கண்ணை மூடி ஒரு மாதம் ஆகி இருக்காது. அதனால் தான் அவள் எந்தத் தொழிலுக்கும் போகல்ல போல. பாவம் அவனும் அரச்சு அரச்சுக் கிடக்கான். பொண்ணாகப் புறந்தா இப்படித்தான்” என்று அன்னத்துக்கு பச்சரிசி கொடுத்த பவளம் அன்னத்தின் நிலையைப் பற்றித் தனது கணவனிடம் கூறிக்கொண்டாள்.

அரிசியை மடியில் கட்டிக்கொண்டு அன்னம் திரும்பி வருவதைக் கண்ட நொத்தாசியார் “உவண்ட பாடு இப்ப எப்படி, புக்க கட்டிப் போட்டியா? பத்துப்போட காசு தரட்டே?” என்றார். அன்னம் பதிலேதும் இல்லாமல் குடிலுக்குள் புகுந்துகொண்டாள்.

“அந்தநாலு ஜீவன்களும் இருந்தா இந்தக் கிழடன் இப்படிக் கேட்டதற்கு இடுப்ப உடைச்சிரிப்பானுகள்” என நினைத்தபடி சாயம் வெளுத்த அந்தப் புகைப் படங்களைத்தான் அவளால் பார்க்கமுடிந்தது.

ஊரில் உள்ள நிலத்தில் எப்படியும் முக்கால்வாசி நொத்தாசியாரின் சொந்தங்களின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்னம் குந்தி இருக்கின்ற நிலத்தையும் பிடிச்சுப் போடத்தான் அவர் அடிக்கடி அன்னத்திடம் தூண்டில் போட்டுப் பார்ப்பார்.

அன்னத்தின் பையன்கள் இருந்த போது வாலைச் சுருட்டி வைத்த நொத்தாசியார் இப்பொழுது வாலை அடிக்கடி ஆட்டிப் பார்க்கின்றார்.

அன்னத்தின் கடக்குட்டி போகும்போது தனது செல்லம் என்னும் நாலுகால் ஜீவனை தூக்கிக் கொண்டு அன்னத்திடம் “அம்மா நான் அடிபட்டா இவன் அந்த செய்தியைக் கட்டாயம் கொண்டுவருவான்” என்று சொல்லிச் சென்றான். அவனுடைய வாயில் சக்கரை போடவேண்டும். அவன் அடிப்பட்ட போது அவனுடைய செல்லத்தின் இரண்டு பின் கால்களும் உடைந்து விட்டது.

அன்னத்தின் கடைக்குட்டி கண்ணை மூடு முன்பு தன்னுடைய செல்லத்தைத் தூக்கி நெஞ்சில் வச்சுக்கொஞ்சி ‘அம்மாட்டப்போடா” என்று சொல்லித்தான் உயிரைத் துறந்தான்.

பின் கால்கள் இரண்டும் உடைந்த நிலையிலும் ஒரு மாதமாக முன்காலை மட்டும் உபயோகித்து நழுவி – நழுவி தனது எல்லைக் கோட்டை அடைந்தது. அந்த நன்றியுள்ள வாயில்லா ஜீவன். –

வெட்டி வந்த நறுவிலிப் பட்டையும் மருந்துத் துவயலையும் வைச்சுக் கட்டி தலையைத் தடவி விட்ட போது அந்த ஜீவனின் வால் சிறிது அசைவைக் காட்டியது.

அன்னத்தின் கடக்குட்டியின் செல்லப்பிராணியும் இப்பொழுது வாழப் பழகிவிட்டது. சற்று தொலைவில் உள்ள மெயின் வீதிக்கு போக அதற்கு ஆசை ஆனாலும் அன்னத்தைச் சுற்றிய படியே இருக்கும் அது.

நொத்தாசியார் தன்னுடைய புள்ளிப்பசுவில் பதினைந்து பதினாறு போத்தல் கறக்கும் முயற்சியில் தினமும் ஈடுபடுவார். சொல்லிப்போட்டன் புள்ளி கண்டுக்கென்று கூடக்குறைய ஒளிச்சியோ, கறைவை என்றும் பார்க்காமல் அறுவைக்குத்தான் கொடுப்பன், சொல்லிப் போட்டன்” என்று சொல்லி இருகைகளாலும் மடிக்காம்பை இறுக்கி இழுத்தார்.

”இடிச்சி விடட்டே கிழட்குக்கு” என்று நினைத்து அந்தப் பசு *மரைக்கால்கணக்கில கறந்தாலும் மறக்கிறதான் இந்த கிழடுட வழக்கம்” என நினைத்த பசு தலையை மேலும் கீழும் அழகாக ஆட்டியது. கழுத்தில் கிடந்த சலங்கையின் ஓசை பக்கத்து வீட்டில் அன்னத்தின் காலடியில் இருந்த செல்லத்தின் காதுகளில் ஏதோ செய்தியைச் சொல்லியது புள்ளியைப் போய்ப் பார்க்க செல்லத்திற்கு ஆசை, ஆனால் கிழவன் இரட்டக்கண் துவக்குப் போல ஆள், கொட்டான் எடுத்துகுட்டிப் போட்டான் என்றால்’ என்று நினைத்து சும்மா இருந்தது.

புள்ளி மார்கட்டில் எஞ்சிய கோவா இலைகளை இதமாகச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. பக்கத்து சந்தியில் சைக்கிளில் வந்தவர் தடால் என விழுந்துவிட்டார். அந்தப்பசு சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தது, பாவம் அந்த மனிதனை அனேகமானோர் குடிகாரன் குடிகாரன் என்று திட்டித் திட்டி தட்டிக் கழித்துக் கொண்டு போனார்கள். ஏனோ தெரியவில்லை. என்ன சொந்தமோ, பந்தமோ, அந்தப்பசு இரங்கியது. மடியில் இருந்த பால் சற்று மிதமாகச் சுரந்து வழிந்து கொண்டிருந்தது. அதனுடைய கண்கள் கலங்கி கண்களினூடே நீண்ட நீர்க்கோடுகள் உருவாகின.

யாராவது இந்த மனிதனுக்கு உதவமாட்டார்களா? என அதன் தாயுள்ளம் ஏங்கியது. வழியால் வந்த வயதுபோன ஒரு மீன் வியாபாரி மிகக்கவனமாக விழுந்து கிடந்த அந்த மனிதரைக் புரட்டி எடுத்து மண்ணைத்தட்டி நிமிர்த்திய போது, அவருடைய சாரன் மடிப்பிலே இருந்து மருந்து வில்லைகள் மஞ்சள், நீலம், வெள்ளை எனும் நிறங்களில் சிறிதும் பெரிதுமாக சொரிந்த வண்ணம் இருந்தது. வீழ்ந்த மனிதர் அப்போது தான் வைத்திய சாலையில் இருந்து டிக்கட் வெட்டிக்கொண்டு வந்திருந்தார். அந்த மீன் வியாபாரி தனது சொந்தப் பணத்தில் அந்த மனிதனை முக்சக்கரவண்டியில் ஏற்றி வைத்தியசாலையில் சேர்த்து விட்டு தனது வியாபாரத்தைத் தொடர்ந்தார். நொத்தாசியாரின் இரண்டாவது மகன் லண்டனில் பி.எச்.டி முடித்துவிட்டார். செய்தி கேட்டு நான் இங்க மாட்டையும் மண்ணையும் கட்டியாளுறன், இவனுகள் புத்தகங்களைக் கட்டிப் பிடிச்சு கொண்டிருக்கிறானுகள், இவனும் ஒரு இளவு. வேலைக்காரப் பெட்டையும் ஸ்றைக்பண்றாள். அதுக்குள்ள புள்ளியும் பால் மறுக்குது. “இனி பால் கறக்க மெசிந்தான் ஓடர் பண்ணும்” என்று கூறியபடி புள்ளியின் மடியைக் கழுவிக் கழுவிக் கறக்கிற நொத்தாசியாரின் சுயநலத்தையும் நேற்றைய மீன் வியாபாரியின் பொது நலத்தையும் பக்கத்து வீட்டு அன்னத்தையும் அவளோட இருக்கும் செல்லத்தையும் தன்னையும் பற்றி அசை போட்டது புள்ளி. எத்தனை புள்ளிகள் எடுத்தாரோ என்னமோ நொத்தாசியாரின் இரண்டாம் மகன் சமூகவியல், மானுடவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்தாரோ தெரியாது, படிப்புக்கூடியதால் பகல் முழுவதும் அமைதியாகத் திரிந்து கொண்டிருக்கிறார். என்று லண்டன் பல்கழைக்கழகம் அவரை விடுமுறைக்கு இலங்கைக்கு அனுப்பிவிட்டது.

கிடக்கிற இளவோட உவனும் உருப்படிக்கு மட்டும் வாறானாக்கும், ஈட்டுக்குப் பிடித்த மெயின் வீதி வீட்டில் தங்க வைக்க வேண்டியதுதான் என நினைத்தவாறு நொத்தாசியார் புள்ளியில் கூடுதலாகக் கறக்கப் பார்த்தார். தருணம் பார்த்து சாணம் போட்டது புள்ளி. அதனுடைய பார்வையில் நொத்தாசியாருக்குரிய அந்த மாடின் சேவை முடிந்துவிட்டது. அது நொத்தாசியாருக்கான கணக்கை பூச்சியமாக்கியது. மடியைப் பிடித்த கையை எடுத்துவிட்டு சாணத்தைத் துடைத்துக்கொண்டு நிலத்தில் இருந்த சாணத்தையும் அள்ள முயற்சித்தார் அவர்.

சாணத்தை அள்ளக்குனிந்த நொத்தாசியார் பசுவின் பின் கால் உதறலில் பல அடிகளுக்கு அப்பால் பறந்து விழுந்தார். எஞ்சியிருந்த பற்களும் உடைந்து. வாய் பூட்டுக்கழண்டு விட்டது. வாய் ஆவண்ட படி இருந்தது.

புள்ளி அன்னத்தின் வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்து சலங்கையை ஒலித்தது அன்னத்தின் கடைக்குட்டியின் செல்லமும், அன்னமும் வெளியில் வந்தனர். புள்ளியின் செய்தியை அன்னம் புரிந்துகொண்டு புள்ளியின் கழுத்தில் அன்னம் செல்லத்தை ஏற்றி விட்டது.

எஸ்.எல்.எம்.எம், யூ.என், யூனிசெப் ஆகிய அமைப்புக்களில் கமறாக்கள் புள்ளியையும் செல்லத்தையும் கிளிக்செய்துகொண்டன.

புள்ளி செல்லத்தை மார்கட்டில் மெதுவாக இறக்கிவிட்டது. இரண்டு கால்களில் அதுவும் இரு முன்னங்கால்களில் நம்பிக்கையோடு அசையும் அந்தப் பிராணியைப் பார்த்து சந்தைக்கு வந்தவர்கள் வாயில் கை வைத்தனர்.

நொத்தாசியாரின் பி.எச்.டி.மகன் மெயில் வீதியில் இறங்கி வீட்டுக்கு போக வழிதெரியாமல் நின்றபோது ஒரு புதினத்தைப் பார்த்தார். இருவாலிபர்கள் விரைவாக மோட்டார் சைக்கிள்களில் பறந்து போனார்கள். இரண்டுகால் செல்லம் மயிரிழையில் தப்பியது. தூரத்தில் இன்னொரு வாகனம் அந்த இரு இளைஞர்களையும் துரத்திக்கொண்டு வந்தது, செல்லம் அருந்தப்பு தப்பியது. இதை புள்ளி அறிந்து கொண்டு விரைந்து வீதிக்கு வந்தது. அதனுடைய பாரிய உருவம் இளைஞர்களை துரத்தி வந்த பஜறோவை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. அந்த வாகனம் திடீரென அடித்த பிறேக் சந்தியில் இருந்த அனைவரின் கவனத்தையும் புள்ளியை நோக்கிச் செலுத்தச் செய்தது. வாகனத்தில் இருந்தவர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர். புள்ளி மெதுவாக தனது மூக்கினால் செல்லத்தை மெதுவாக மெதுவாக தட்டித் தட்டி அடுத்த பக்கத்தில் நின்ற நொத்தாசியாரின் பி.எச்.டி. மகனின் காலுக்கு அண்மையில் வைத்துவிட்டு, வாகனப் பக்கம் திரும்பி தனது சலங்கை ஒலியை ஒலித்தது. அங்கிருந்த அனைத்து பார்வையாளர்களினதும் மனங்களில் நல்லதொரு செய்தியை புள்ளி பதித்துவிட்டது. பஜறோவில் வந்தவர்கள் தங்களுடைய துவக்குகளில் இருந்த மகசீன்களைக் களட்டிய பின் அவற்றினை வாகனத்தின் கீழ்ப்போட்டு மீண்டும் மீண்டும் பல முறை டயர்களை அவற்றின் மேல் ஏற்றி துவக்குகள் துளாகிய பின் புள்ளியின் முதுகில் செல்லத்தை ஏற்றி வைத்து விட்டு திரும்பிச் செல்ல முயற்சித்தபோது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் சென்ற அந்த இரு இளைஞர்களும் அங்கு துவக்குகளை ஏந்திய படி திடீரென வந்தனர். புள்ளியின் பருத்த உடல் குறுக்கே நிற்கிறது செல்லம் ஸ்பிரிங் போல் இயங்கியது. இருவருடைய துவக்குகளும் இயங்கினாலும் குறி தப்பிவிட்டது. இரண்டு துவக்குகளும் புள்ளியின் இரு கால்களின் அழுத்தத்தில் செயல் இழந்தன. மக்கள் வளைந்து நின்று புதினம் பார்க்கின்றனர். மோட்டார் சைக்கிள் இளைஞர்கள் செல்லத்தைத் தூக்கி புள்ளியில் வைத்தனர். மக்கள் அதையும் பார்த்துக் கொண்டு நின்றனர். இளைஞர்களும், மக்களும், பி.எச்.டி.யும் மலைத்து நிற்க புள்ளியும், செல்லமும் நிதானமாக அசைகின்றன.

– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *