புளியங் கொம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,238 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணியடிக்கிறது. எங்கும் செருப்பொலிகள்.

“என்ன பிள்ளை” ஆசிரியை கமலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறாள். “குழந்தைக்கு வருத்தம் கடுமையென்றார்களே. தேவையென்றால் இரண்டு நாள் லீவு எடுமன்”

தலைவியின் குரலில் ஒரு தவிப்பு. தனக்குப் பயந்து தான் ஆசிரியை கமலா வரமுடியாத சந்தர்ப்பத்திலும் கல்லூரிக்கு வருகி றாளோ, உலகம் தன்னை அரக்கி என்றல்லவா கூறப்போகிறது

என்ற மன உளைச்சல்.

“பரவாயில்லை ; தகப்பன் வந்து நின்றார். காலையில் 101° யில் காச்சல் இறங்கியிருக்கிறது. என்றாலும் அடிக்கடி ஏறிக்காய்கிறது” குரலில் சோகம் இழையோடினாலும் முகத்தில் பணிவோடு வலிந்திழுத்த சிரிப்புக் காணப்படுகின்றது.

“வகுப்புக்கு வேலையைக் கொடுத்துவிட்டு போம். நான் கவனிக்கிறேன்” தலைவியின் குரல் எவ்வளவுக்கு கனிய முடி யுமோ அவ்வளவுக்கு கனிகிறது.

“தாங்ஸ். காய்ச்சல் கூடினால் டெலிபோன் பண்ணுவார்கள். அப்போ பார்ப்போம்” நன்றி கண்களில் மின்னுகின்றது.

இன்னமும் ஒரு படி கீழே இறங்கித் தோழமை கொண்டாட வேண்டுமென்று உள்ளம் விழைந்தாலும், அதிகார பீடம் தன் நிலையை உணர்த்தி சுண்டியிழுக்கிறது, வேறு அலுவல்களிற் கவனம் செலுத்துவது போல் தலையைத் திருப்பிக்கொண்டே எதிர்புறத்தில் நடக்கிறார் அதிபர்.

ஒரு கணம் தயங்கிய கால்களை இழுத்துக் கொண்டே வகுப்பறையை நோக்கி நடக்கிறாள் கமலா.

“ஹலோ, மிஸஸ் நாதன்! குழந்தைக்கு சீரியஸ் என்று மிஸஸ் சின்னா சொன்னதே! பொய்யா? நாங்கள் மத்தியானம் வந்து பார்க்கலாமென்றல்லவா இருந்தோம்” இரு ஆசிரியைகள் ஆவலோடு வழிமறிக்கிறார்கள். மிஸஸ் சின்னாவும் வருகிறாள்.

”காலையில் கொஞ்சம் குறைவு இனிப்படியும் போலத் தெரிகிறது. அது தான் வந்திட்டேன்” அவள் கால்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதிசயப் பார்வைகள் அவளைத் தொடர்கின்றன. மீண்டும் பார்வைகள் சந்தித்த போது மின்னல் வேகத்தில் ஒரு வம்புத்தனம் தோன்றுகின்றது.

“அப்பாடி! குழந்தை மூடின கண்திறக்காமல் கிடக்குது என் கண்ணாலேயே கண்டேன் கொஞ்சம் குறைவாம் குறைவு”

“ஒரு வேலை அதிபரிடம் லீவு கேட்க பயப்படுகிறதோ” “நல்ல பயம்? அவவே போகச் சொன்னாவே இப்போ ”

“அதுக்கென்ன நின்று பாக்கிறதுக்கு ஒரு சோலி சுறட் டில்லாத சிறியதாய் தாங்கிப்பிடிக்க மிஸ்டர் நாதன். கவலையும் பொறுப்புமில்லைத்தானே! ”

“ஆஸ்பத்திரியிலும் பார்க்க பள்ளிக்கூடத்தில் நிம்மதி கூடத் தானே?”

“என்றாலும் பாசம் கூட வா இல்லை!”

அவர்களும் சாதாரணப் பெண்கள்தானே; பேசிக் கொண்டே வகுப்புக்களில் நுழைந்தனர்.

இரண்டாம் மணியடிக்கின்றது. கல்லூரிக் கீதம் ஒலிபரப்பப்படுகின்றது.

கமலாவின் வகுப்பறையில் முப்பத்தைந்து மாணவிகள் அவர்களுள் இருபத்தெட்டு மாணவிகள் ஜீ.ஸீ.இ பரீட்சைக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டார்கள் பள்ளிவாழ்க்கையின் எல்லை அவர்களின் எதிர்கால வாழ்க்கையையே நிர்ணயிக்க போகும் காலம். நல்ல உத்தியோகம் படிப்பு அல்லது நல்ல உத்தியோகம் உள்ள கணவன் இரண்டையும் ஓரளவு தீர்மானிக்கக் கூடிய பரபரப்பான சூழ்நிலை. பத்துப் பதினொரு வருடப் பள்ளி வாழ்க்கையின் பலாபலன்களைக் காணத் துடிக்கும் உள்ளங்கள்.

“டீச்சர் நீ வராதது பெரிய ‘டல்’லாக இருந்தது.”

“குழந்தைக்கு வருத்தமென்று சொன்னார்களே”?

“நீங்கள் காட்டிவிட்ட வேலையெல்லாம் முடித்து விட்டோம் டீச்சர்”

“டீச்சர்; யோகாவும் ஜெயாவும் ‘பொட்ணிப் பாடம் முழு வதும் ‘ஹோம்வேக்’ செய்யாமல் எழும்பி நின்றவை உங்கடை செல்லத்தாலைதான் நாங்கள் தங்களை மதிக்கிறதில்லையென்று. ‘பொட்ணி டீச்சர் ஏசினவ’ இரு மாணவிகளும் எழுந்து மிக வருத்தத்தோடு தலை குனிந்து நின்றனர்.

கமலாவின் முகத்தில் வேதனை பரவுகின்றது. “லட்சுமி எழும்பும், டீச்சர் அப்படிச் சொன்னாலும் நீர் அதை எனக்குச் சொல்லலாமா”

“எழும்புகிறாள் லட்சுமி, தலைகுனிகிறது. “வெரி சொறி, டீச்சர்” ஆனால் முகத்தில் வருந்துகின்ற உணர்ச்சியை விட நடிப்புத்தான் பிரதிபலிக்கிறது.

‘சரி தனிமையாகப் பிறகு சந்தித்துக்கொள்ளலாம் என எணணுகிறாள் கமலா.

“கண்ணனுக்கு இப்போ எப்படி டீச்சர்? நேற்றுக் கடுமை என்று சொன்னார்களே. நீங்கள் வரமாட்டீர்களாக்கும் என நினைத் தோம்”

கமலா கனிவோடு அவர்களைப் பார்க்கிறாள்.

“இப்போ பரவாயில்லை நீங்களும் என் பிள்ளைகள் தானே என்று ஓடி வந்துட்டன்.”

பெருமிதம் கலந்த புன்னகை வகுப்பில் பரிமாறப்படுகிறது. தொடர்ந்து ஒரு நினைவும் ஓடுகிறது. காட்சி விரிகிறது. கல்லூரியின் ஆபிஸ் அறை. அதிபரின் முன் இரண்டொரு ஆசிரியர்கள் மாண வர்களின் தேர்ச்சி இதழுக்கு கையொப்பம் வாங்கிக் கொண்டிருக் கிறார்கள்.

“என்ன வகுப்பில பிள்ளைகளோடு வீட்டுக்கதை கதைக் கிறீர்களாம்?”

மௌனம் நிலவுகிறது

“பச்சை மிளகாய் இல்லை; உப்பில்லை என்றா?” என்று. நினைக்கிறது. கமலாவின் உள்ளம்.

”பாடங்கள் நடாத்தும் போது, உதாரணக் கதைகள் சொல்லும் போது, சாதாரண வீட்டுச் சூழ்நிலைச் சம்பவங்களைச் சொல்லித்தானே மாணவருக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று மெலிந்த குரலில் முணுமுணுக்கிறார் ஓர் ஆசிரியை.

அதிபர் மனம் விட்டுச் சிரிக்கிறார்.

ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே ஒரு தகர்க்க முடியாத வேலி இருக்க வேண்டும்; கடவுளுக்கு அடுத்தபடியாகத் தாம் வைத்து எண்ணப்பட்ட வேண்டும் என்று விரும்பும் ஒரு சார் ஆசிரியர்கள் மாணவிகள் தம்மைக் கண்டதும் சிங்கம், புலியைக் கண்டது போல் ஓடி ஒளிவதைக் கண்டு திருப்தியுறுவார்கள் அப்படிப்பட்டவர்கள், மாணவருடன் கலந்துரையாடி அவர்கள் கஷ்ட நஷ்டத்தையறிந்து தாயாக – சகோதரியாக – வேண்டிய விடத்துத் தோழியாக குறிப்பாகப் பாரதியாரின் நண்பனாய், மந்திரியாய் நல்லாசிரியனாய் – என்பது போல வாழ வேண்டு மென விரும்பும் மற்றொருசார் ஆசிரியர் மீது மாணவிகள் காட்டும் விசேட அன்பைக் கண்டு பொறாமையுற்றுத் தம் பாரம்பரியத் துக்குப் பங்கம் வந்ததேயென்று அதிபரிடம் வைத்த திரி அது.

ஆனால் ஆசிரியரின் வேலை திருப்திகரமாக இருக்குமட்டும் அதிபரிடம் அந்தத் திரி லேசில் புகையாது. அந்த மட்டில் நன்றி.

ஒவ்வொரு மாணவியின் வீட்டு நிலவரத்தை, சூழலை அறிந்து, அவர்களின் கல்வி பாதிக்கப்படும் தன்மையையோ அல்லது வசதிக் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலையையோ தெரியவேண்டிய ஆசிரியர், வீட்டுக் கதைகள் கதைக்காமல் இருக்கலாமா? அது மாத்திரமல்ல மாணவிகளிடமிருந்து நம்பிக்கை யும் அன்பையும் வளர்ப்பதற்காக உங்கள் குழந்தைக்கு என்ன பெயர்? இப்போ நடப்பாளா? உங்களை தியேட்டரில் கண்டேனே டீச்சர்” போன்ற சிறு அன்புக் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்கக் கூடாதா? அது வீட்டுக் கதையாக இருந்தாலும் கூட அதிலும் குமரப் பருவத்து மாணவிகள் – தம் மனந்திறந்து நம்பிக்கையுடன் தங்கள் பிரச்சனைகளை – சிக்கல்களை ஆசிரியருடன் கலந்துரை யாடுவதற்குச் சந்தர்ப்பமளிப்பதற்காக அவர்கள் உரிமையுடன் கேட்கும் கேள்விகளுக்கு – அது அதிகப் பிரசங்கித்தனமாக இருந் தாலும் கூட. ஏதோ சொல்லிச் சமாளிக்கத்தானே வேண்டும்? கேட்ட கேள்விக்குப் பதில் கிடைக்காமல் அந்த அன்புள்ளங்கள் சாம்புவதைச் சகிக்கமுடியுமா?

பாடம் தொடங்குவதற்கு மூன்றாம் மணியடிக்கிறது சிந் தனையறுகிறது.

“இன்று கைகேயி சூழ்வினை படலத்தில், ‘தசரதன் துயரம்’ பொழிப்புரை கேட்கிறது டீச்சர்”

மாணவியரிடையே சிறு குசுகுசுப்பு.

“இன்றைக்கு அது வேண்டாம் டீச்சர்! முதுவேனிற் பருவ வர்ணனை படிப்போம்” பல தலைகள் சேர்ந்தாடுகின்றன.

“அது நாளைய பாடமல்லவா? என்றாலும் ‘முதுவேனிற் பருவம்’, படிக்க விரும்புவோர் கரங்களை உயர்த்துங்கள்?”

கண்கள் பேசுகின்றன. ஒன்றும் பாக்கியில்லாமல் எல்லாக் கரங்களும் உயர்கின்றன. முகபாவங்கள் உள்ளதை அறிவிக் கின்றன.

கமலாவின் உள்ளம் நெகிழ்ந்து கசிகிறது.

ஆசிரியர் தான் வகுப்பு நடத்தும் போது மனோதத்துவத்தை அனுட்டித்து நடத்த வேண்டுமென்றால் மாணவிகள் அவர்களை யும் விஞ்சிவிட்டார்கள்!

இத்தனை அன்புள்ளங்களும், தசரதன் துயரத்தில் ஒன்றிக் குழந்தையின் நினைவால் ஆசிரியையின் முகத்தில் ஒரு துயரக் கோடும் பரவக்கூடாது என்று முனைந்து நிற்கின்றனவே உணர்ச் சியை உள்ளடக்கிக் கொண்டே

“சரி, இது சனநாயக உலகமல்லவா, பாமா முதலில் முது வேனிற் பருவ வர்ணனையை இயற்றிய முகாந்தரம் சதாசிவ ஐயரைப் பற்றி சொல்லும் பார்ப்போம்”

பாடமும் ஆசிரியரும் மாணவரும் ஒன்றிவிடுகின்றார்கள். வகுப்பு முடிய மணியடிக்கிறது. கமலா எழுந்து நிற்கிறாள். “தாங்க்யூ ரீச்சர்”

“நல்ல வேலை ரீச்சர்! நாங்கள் பயந்துவிட்டோம். இந்தத் தவணைதானே இரண்டு வருடப் படிப்பையும் திருப்பிப் படிக்க வேண்டும். நீங்கள் வராவிட்டால் நாங்கள் குண்டுதான். பிறகு பள்ளிப் படிப்பும் போ. எல்லா போ. வீட்டிலிருந்து கொண்டு….”

“நாளெண்ண வேண்டியது தான் ” என்கிறாள் ஒரு துடுக்குக் காரி. சிரிப்பலை எழுகிறது.

உள்ளூர ரசித்தாலும் அந்த பகிடி தனக்குப் பிடிக்கவில்லை என்பதைக் காட்ட ஒரு கோபப் பார்வையை சிந்தி விட்டு, ‘என்றா லும் மன்னிக்கப்படுகிறது’ என்ற அர்த்தம் தொனிக்க முறுவலிக்கிறாள் கமலா.

“ரீச்சர் பிள்ளைக்கு சுகம் வரவேண்டுமென்று காலைமை கும்பிட்டனான், பின்னேரம் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பன்”

“டீச்சர் நானும் மன்றாடினனான். பிறகு ஒரு செபமாலை சொல்லுவன்”

எத்தனை நம்பிக்கை அந்த முகங்களில்!

ஆசிரியையின் மன அமைதிக்காக ஆஸ்பத்திரியில் படுக் கையில் இருக்கும் குழந்தை மீது நம்பிக்கை. குழந்தையின் சுக நலனுக்குத் தங்கள் வேண்டுதல் மீது நம்பிக்கை. வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுமென்று ஆண்டவன் மீது நம்பிக்கை. எல்லா வற்றிற்கும் மேலாக தம் பரீட்சையின் பெறுபேற்றிற்கு ஆசிரியை மீது நம்பிக்கை. பரீட்சையின் எட்டுப் பாடங்களுள் நான்கு பாடங்களுக்குக் கமலாவே ஆசிரியர். அவர்களின் பெறுபேற்றின் நயநட்டதில் பெரும்பங்கு பெறவேண்டியவள் அவளே. அந்த இளம் உள்ளங்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்ற ஓர் எண்ணமே அவளை கல்லூரிக்குத் துரத்தியடித்தது என்பதை மற்றவர்கள் அறியாதவரை அது புரியாத புதிராகத்தான் இருக்கும். இத்தனை உள்ளங்களின் மொத்த நம்பிக்கையே ஒரு பலமான சக்தியாக அமைந்து சிதையில் கிடக்கும் பிணத்தை கூட உயிர் பெற வைத்திடுமே!

அந்த நம்பிக்கையை உறுதிகோலாகக் கொண்டு கரும் பலகையில் ஓடுகிறது கமலாவின் கை.

a x b = ab அவள் சிந்திக்கிறாள். aயையும் bயையும் கூட்டினால் = a+b aயிருந்து 6யைக் கழித்தால் = a-b aயையும் bயையும் பெருக்கினால் =ax b ஆக இருக்கக் கூடாது? ஏன் ab ஆக வேண்டும் அதுவும் ஒருவர் மீது வைத்த நம்பிக்கையே என ஓடுகிறது சிந்தனை.

டெலிபோன் மணியடிக்கும் போதெல்லாம் பரபரப்புடன் ரிசீவரைத் தூக்குகிறது அதிபரின் கை.

ஆனால் கமலாவுக்கு டெலிபோன் அழைப்பு வரவேயில்லை.

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *