புலி நண்பர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 109 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஸ்டாக்ஹோல்ம் செல்வதற்கான விமானம் 86 வது நுழைவாயிலில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், மெதுவாக நானும் என் மனைவி அம்முவும் கைக்கோர்த்துக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று. என ஒவ்வொன்றாக, கடந்தபடி 70 வது நுழைவாயில் வரை வந்தாகிவிட்டது. கண்ணாடி சுவர்களின் வழியாக குழந்தைகளும், இளைஞர்களும், நடுத்தர வயது மக்களும், விமானம் வந்து நிற்பதை அது புறப்படுதை வியப்பாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விமானங்களில் எத்தனை முறை பறந்தாலும், விமானங்கள் தரையில் ஓடும்பொழுதும் தலைக்கு மேலேப் பறக்கும் பொழுதும் தலைசாய்த்து பார்ப்பதும் ஒரு சுவாரசியந்தான். அவர்களுடன் அம்முவும் சேர்ந்து கொண்டது மனநிலையை மேலும் ரம்மியமாக்கியது.

குட்டிநகரமே இந்த ஜூரிச் விமானநிலையத்தில் இருப்பதைப் போன்ற ஒரு பிரம்மாண்டம். ஈரோ – ரூபாய் மதிப்பு மாற்றம் நினைவிற்கு வந்ததால் ஆடைகள் விற்கும் பகுதியைத் தவிர்த்து அம்மு சுவிட்சர்லாந்து கேட்ட சாக்லேட்டுகளையும் சில வாழ்த்து அட்டைகளையும் வாங்கிக் கொண்டு, மேலும் சில நுழைவாயில்கள் கடந்து, ஒரு காப்பிக்கடைக்கு எதிரே விலைப்பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது,

‘என்ன சாப்பிடுறீங்க” என்பதை ஈழத்துத் தமிழ் உச்சரிப்பில் ஒருவர் கடையினுள் இருந்து கேட்டார். வலிகள் வேதனைகளுடன் தமிழையும் போகும் இடமெல்லாம் கொண்டு சென்றவர்கள் ஈழத்தவர்கள். என்னைப்பொறுத்தவரை சுந்தரத் தமிழ், ஈழத்துத் தமிழ்தான்.

நாங்கள் கேட்ட காப்பிச்சினோவை அவர் கொடுக்கும்பொழுது கையில் புலிப் படத்தைப் பச்சைக் குத்தி இருந்ததைப் பார்த்த அம்மு என்னை இடுப்பில் குத்தினாள். ஆண் குழந்தை பிறந்தால் திலீபன் எனவும் பெண் குழந்தை பிறந்தால் இசைப்பிரியா எனவும் பெயர் வைக்க இப்பொழுதே நான் முடிவு செய்து வைத்துள்ள அளவுக்கு புலிகளைப் பிடிக்கும் என்பது அம்முவிற்குத் தெரியும். இருந்தாலும் அம்முவிற்கு இதில் இருக்கும் நுட்பமான உணர்வுகள் புரியாது, அவளைப் பொறுத்தமட்டில் ஐரோப்பிய பாஸ்போர்ட் கிடைக்கும் வரை, இந்திய இறையாண்மைக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது.

நாங்கள். எவ்வளவு வற்புறுத்தியும் அந்த புலி நண்பர் காசு வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார். “தினமும் ஒரு தமிழனையாவது சந்தித்துவிடுவேன்… ஒரு சின்ன திருப்தி அவர்களுக்கு காப்பியோ அல்லது அவர்கள் விரும்பும் ஏதோ ஒன்றைத் தந்து தமிழில் கதைப்பது”

“நடிகர்களைப் பார்த்து இருக்கிறீர்களா” இது அம்மு, அவளின் அடுத்த கேள்வி சூரியாவைப் பார்த்து இருக்கிறீர்களா என்பதுதான்..

”நிறைய நடிகர் நடிகைகள் வருவாங்க, அவர்களை எல்லாம் கண்டுக்க மாட்டேன்… நான் பேச விரும்புவது சாமானிய மனிதர்களிடந்தான்”

“தலைவர் உயிரோட இருக்காரா?” எந்த ஈழத்தமிழரை ஐரோப்பாவில் சந்தித்தாலும் நான் மறக்காமல் கேட்கும் கேள்வி இதுதான்.

“தெரியாது, ஆனால் உங்கட இந்தியா, தலைவரை அந்தமான் தீவுகளில் எங்கேயாவது பாதுகாப்பாக வைத்திருக்குமோ என உள்மனது அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கு”

ஏற்கனவே எனக்குத் தெரிந்து இருந்த விசயங்கள் என்றாலும் புலிகளின் ஈழத்து அரசாங்கத்தின் ஒழுக்கம், நேர்மை, நிர்வாகம் என அவர் தொடர்ந்து பேசியதைக் கேட்க சுவாரசியமாகத்தான் இருந்தது.

“எத்தனை வருஷமா இந்தக் கடை இங்கு வச்சிருக்கீங்க”

“இது என் கடை இல்லை தம்பி, நான் இங்க வேலைப் பார்க்கிறேன், 20 வருஷமா இங்கடதான் வேலை செய்யுறேன்!!”

ஸ்டாக்ஹோல்ம் விமானத்திற்கு அழைப்பு வர, மின்னஞ்சல் முகவரிகளைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்றோம்.

விமானஇருக்கையில் சன்னலின் வெளியே வேடிக்கைப் பார்த்தபடி

“என்னதான் டைகர்ஸோட டிசிப்ளினோ, ஹானஸ்டியோ … எதிக்ஸோ … முதலாளியை ஏமாத்திவிட்டு வர்றவன் போறவனுக்கு எல்லாம் காப்பி கொடுக்கிற எத்திக்ஸ்.. ஒரு நாளைக்கு 10 பிராங்க்னு வச்சிக்கிட்டா ஒரு மாசத்துக்கு 250 பிராங்க், 20 வருஷத்துக்கு எத்தனை பிராங்க் முதலாளியை அந்த ஆளு ஏமாத்திருக்காரு, கடைத் தேங்கா வழிப்பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருது, .. இதுல எதுக்குமே யூஸ் இல்லாத தமிழ் ஃபீலிங்ஸ் வேற !!” அம்மு பொரிந்து தள்ளினாள்.

நான் பதில் பேசவில்லை. அவர் எனக்கு மின்னஞ்சல் எழுதிக் கொடுத்து இருந்த தாளைத் திருப்பிப் பார்த்தேன். அது நாங்கள் குடித்த காப்பிக்கான பில். காப்பி தயாராகும் இடைவெளியில், அம்முவின் கவனம் கண்ணாடி சுவருக்கு அப்பால் இருந்த விமானங்களின் மேல் அலைபாய்ந்து கொண்டிருந்த பொழுது புலி நண்பர் எங்களுக்கான காசை அவரின் பாக்கெட்டில் இருந்து எடுத்து கல்லாவில் போட்டதையும், அதற்கான பில்லை அச்சிட்டதையும் ஏற்கனவே நான் கவனித்து இருந்தேன். அம்மு சொன்ன அதே கணக்குதான் ஆனால் புலி நண்பர் தன்னிடம் இருந்து கொடுத்து கொண்டே இருக்கிறார், வெறும் தமிழ் உணர்வுக்காக!!!

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *