புலிக்கடி கருத்தமுத்துவின் சாபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 5,684 
 
 

கல்யாணமாகி ஒரு குழந்தைக்கும் அப்பாவான எனக்கு அந்த ஆசை வந்திருக்கக் கூடாதுதான். அப்படி என்ன காமம்? அதுவும் ஒரு நாடோடி இனப் பெண் மீது? இது என் காமன் சென்ஸ் சொன்னது.

உந்திச் சுழியின் முளைத்து எழுந்த உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்டு அந்திக் கமலம் கொண்ட வள்ளியை இனம் பார்த்து ஒதுக்கலாமா என்று எனக்குள் இருந்த காமன் சொன்னான். நடந்த சண்டையில் சென்ஸ் தோற்று காமன் வென்றான்.

ஆனால் இது என்னை இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு நிறுத்தும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

எல்லாம் போன ஜனவரியில் ஆரம்பித்தது. நான் மத்திய சர்காரில் ஹைவே டிப்பார்ட்மெண்டில் பொறியாளாராக இருக்கிறேன். போன ஜனவரி மாதம் ஆந்திர மாநிலத்தில் ஒரு கிராம எல்லை வழியாகச் செல்லும் ஒரு நீண்ட நேஷனல் ஹைவே பணிக்காக என்னை தற்காலிகமாக போஸ்ட் செய்திருந்தார்கள். ஒரு பதினைந்து நாள் வேலைதான். தங்குவதற்கு சர்காரின் கெஸ்ட் ஹவுஸ். சமைத்துபோடுவதற்கு ஒரு குக். ஹைவே பணியைக் கவனிக்க ஒரு ஜீப் மற்றும் ஒரு டிரைவர். நிம்மதியாகத் தான் இருந்தது அந்த புலிக்கடி கருத்தமுத்துவைப் பார்க்கும் வரை.

ஒரு நாள் நல்ல மழை. டிரைவரை ஒரு வேலையாக பக்கத்து டவுன் வரை அனுப்பியிருந்தேன். அதற்குள் கொட்டித்தீர்த்த மழையில் தெப்பலாக நனைந்தேன். என் உடம்பு பூஞ்சை உடம்பு என்று என் மனைவி அடிக்கடி சொல்வாள். அதற்கு ஏற்றார்போல ஒரு பத்து நிமிடத்துக்குள் ஜலதோஷம் பிடித்தது. அப்படியும் வேறு வழியில்லாமல் மழையிலே நனைந்தபடி நின்றிருந்தேன். ஒரு அரை மணி நேரம் கழித்து டிரைவர் வந்தான். அப்புறம் அவனுடன் ஜீப்பில் கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தேன்.

அதற்குள் ஜலதோஷம் முற்றி இடைவிடாத தும்மல். மூக்கு சிவந்து விட்டது. சமையல்காரர் மணி சூப் வைத்துக் கொடுத்தார். மிளகு ரசம் வைத்தார். ஒன்றுக்கும் கேட்கவில்லை.

கைவசம் வைத்திருந்த எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. அப்போதுதான் விதி டிரைவர் உருவத்தில் என்னை நெருங்கியது.

“சார்! நம்ம கெஸ்ட் ஹவுஸ் பின்னாடி நாடோடிங்க குடிசப் போட்டிருக்காங்க. அவங்க கிட்ட நல்ல நாட்டு மருந்தா கிடைக்கும். நீங்க சரின்னு சொன்னா நான் போய் கேட்டு வாங்கி வர்றேன்” என்றான்.

சரியென்று சொன்னேன்.

போனவன் புலிக்கடி கருத்தமுத்துவுடன் வந்தான். அவன் தான் அந்த நாடோடி காலனியின் தலைவனாம்.

“கும்புடறேன் சாமி”

“அய்யா மழைல நனைஞ்சு ரொம்ப அவதிப்படறார். எதுனாச்சியும் மருந்து கொடு” என்று அவனிடம் சொன்னான் டிரைவர்.

“சாமி, இது மூலிக அரச்சு செஞ்சது. இதத் தண்ணீல கலந்து குடிச்சிருங்க. மூணு நாளு குடிக்கணும். ஆனா என்கிட்டே ஒரு வேளை மருந்து தான் இருக்குது. நாளைக்கு இன்னும் ரெண்டு வேளை மருந்தக் கொடுத்தனுப்பறேன்” என்றான் புலிக்கடி கருத்தமுத்து.

சரியென்று வாங்கிக்கொண்டு பணம் கொடுக்க எத்தனித்தபோது “ஒடம்பு சொஸ்தமானதுக்குப் பிற்பாடு வாங்கிக்கறேன் சாமி” என்று போய் விட்டான்.

கசப்பான அந்த மருந்து குடலைப் புரட்டியது. குடித்த சிறிது நேரத்தில் உடலில் ஒரு வித சூடு பரவியது. கொஞ்ச நேரத்தில் தும்மல் கட்டுப்பட்டது. தூக்கம் கண்ணைச் சுழற்றியது. சாப்பிட்டுவிட்டு தூங்கிப்போனேன்.

திடீரென்று தூக்கம் கலைந்து விழித்தபோது மணி இரண்டு. உடம்பு தகித்தது. ஆனால் குளிர் ஜுரத்தால் இல்லை. காம ஜுரத்தால். இந்த அளவுக்கு காம உணர்வு தலைதூக்கியது என் திருமணம் ஆன புதிதில் தான்.

எனக்கு அந்த ராத்திரியிலேயே மனைவி வேண்டும் போல் இருந்தது. என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தண்ணீர் கூட குடித்துப் பார்த்தேன். இப்படி உணர்ச்சிபூர்வமாக அந்த ராத்திரி கழிந்தது. பொழுதும் விடிந்தது.

காலை டிபனைச் சாப்பிட்டு விட்டு அலுவலக பைல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது :அய்யா” என்றொரு பெண் குரல் கேட்டது. பெண் குரல்! “யாரு?” என்று கேட்டபடி வேகமாக வெளியே வந்தேன்.

வெளியில் வள்ளி (பெயர் அப்புறம் தெரிந்து கொண்டேன்) நின்று கொண்டிருந்தாள். சுமார் இருபத்தியிரண்டு வயதிருக்கும். நம்ம இளைஞர் பாஷையில் செம பிகர். நாடோடி இன ஆடை அவளுக்கென்றே செய்யப்பட்டது போலும். ஆனால் அவர்கள் வழக்கம் போல இல்லாமல் நல்ல சுத்தமான ஆடை அணிந்து இருந்தாள்.

“அப்பாரு இந்த மருந்தத் தரச் சொன்னாரு” என்று ஒரு பொட்டலத்தை நீட்டினாள். அவள் முகத்தைப் பார்த்தபடியே அந்தப் பொட்டலத்தை கையைத் தொட்டு வாங்கினேன். அவள் சிரித்தாள்.

“அப்புறம் ஒரு அஞ்சு நிமிசத்துல ஆட்டுப் பால் கொண்டார்றேன். இங்கியே இருங்க “ என்றாள்.

“ஆட்டுப் பால் எதுக்காம்?”

“இந்த மருந்தச் சாப்புட்டா ஒடம்புல சூடு ஏறுமாம். அத்தத் தணிக்கத் தான். நீங்க வேற தனியா இருக்கீங்களாம். அப்பா சொன்னாரு” என்று அர்த்தபுஷ்டியுடன் சொல்லி செக்சியாகச் சிரித்தாள்.

ஆனால் அவள் அஞ்சு நிமிஷத்தில் வரவில்லை. இரண்டு மணி நேரம் கழித்து வந்தாள். நான் அன்று வேலைக்குப் போகாததால் டிரைவரும் சமையல் மணியும் ஜீப்பில் டவுன் சென்று விட்டார்கள். சமையல் புரவிஷன் வாங்க.

வள்ளியின் இளமையை நினைத்துக் கொண்டு படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ( மருந்து மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தது) எனக்கு வாசலில் யாரோ குரல் கொடுத்தது போல இருந்தது.

என் பதிலுக்குக் காத்திராமல் உள்ளே வந்தது வள்ளி.

குளித்திருந்தாள். வேறு ஆடை அணிந்திருந்தாள். இன்னும் செக்சியாகத் தெரிந்தாள்.

“இந்தாங்க பாலு. வெதுவெதுன்னு இருக்குது. அப்படியே குடிச்சிருங்க”

படுக்கையில் இருந்து எழுந்து உட்கார நினைத்த நான், தள்ளாமையால் மீண்டும் படுக்கப் போனேன். அதைப் பார்த்த வள்ளி, கொஞ்சம் கூட யோசிக்காமல் கட்டிலில் உட்கார்ந்தாள். என்னைத் தாங்கிப் பிடித்தாள்.

அந்த அந்திக்கமலங்கள் மீது தலை சாய்த்து மருந்து குடித்த நான் என்னை இழந்தேன். பசித்திருந்த விரகமா, புசிக்கச் சொன்ன இளமையா, தெரியவில்லை. வள்ளி என் வசமானாள்.

ஒரு முக்கால் மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அவளை விடுவித்தேன். வெட்கத்தோடு ஓடிப் போன அவள் புலிக்கடி கருத்தமுத்துவுடன் திரும்ப வருவாள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

அவனைப் பார்க்க வெட்கி தலை குனிந்தேன்.

“இப்படித் தலயக் குனிஞ்சா போதுமா சாமி? என் பொண்ணுக்கு ஆரு பதில் சொல்றது? இப்படி அநியாயம் செஞ்சுப்புட்டீங்களே சாமி! நீங்கல்லாம் பெரிய சாதி! படிச்சவங்க. நீங்க இப்படி செய்யலாமுங்களா? பதில் சொல்லுங்க!”

எனக்குள்ளே என்ன புகுந்துக் கொண்டு என்னை அப்படிப் பேச வைத்தது என்று எனக்குத் தெரியவில்லை.

“இப்ப என்ன நடந்திச்சுன்னு இப்படி கத்துற? நா மட்டுமா தப்பு செஞ்சேன்? இவளும் தானே ஓடந்த? என்ன மட்டும் கேட்டா எப்புடி? பெரிய எடங்கள்ள அப்படி இப்படி நடக்கறது தான். ஏதோ மேம்போக்கா சொல்லிட்டு தகுந்தத வாங்கிகிட்டுப் போவியா இப்படிக் கூச்சல் போடுவியா? இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ரொம்ப மீறினா, இங்க திருடினதா சொல்லி, போலீசுல கேசு போட்டு உள்ள தள்ளிடுவேன். ஜாக்கிரதை!” என்று நான் கத்தினேன்.

புலிக்கடி கருத்தமுத்துவின் முகம் கறுத்தது. “வேணாம் சாமி! எங்க கோவத்துக்கு ஆளாவாதீங்க. அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க” என்றான்.

“என்னடா செய்வ நீ?”

“சொல்ல மாட்டன். செஞ்சி காட்டுறேன்” என்றவன் தன் தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து ஒரு சின்ன பாட்டிலை எடுத்தான். அதன் கார்க் மூடியைத் திறந்து அதில் இருந்த திரவத்தை என் மீது தெளித்தான். பிறகு ஏதோ மந்திரம் முணுமுணுத்தான்.

“நாங்க படிக்காவதங்க தான். ஆனா எங்களுக்குத் தெரிஞ்ச மூலிக மருத்துவம் உங்க சாதிக்குக் கூடத் தெரியாது. இப்ப நான் தெளிச்ச இந்த மருந்து உங்களுக்கு ஒரு அர மணி நேரத்துல வேல செய்ய ஆரம்பிச்சுரும். அப்புறம் நீங்களாகவே என் கால்ல வந்து விளுவீங்க பாருங்க” என்று சொல்லிவிட்டு வள்ளியைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்று விட்டான்.

இதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாத நான் திரும்பவும் தூங்கிப் போனேன்.

அப்புறம் எப்போது எழுந்தேன் என்று தெரியாது. ஆனால் எழுந்ததுக்கான காரணம் தெரியும். சுளீர் சுளீர் என்று வயிற்றுக்குள் யாரோ ஊசியால் குத்துவது போன்ற வலி தான் காரணம்.

என்னை அறியாமல் ‘அம்மா’ என்று கத்தி விட்டேன். என் குரல் கேட்டு டவுனிலிருந்து திரும்பி வந்திருந்த சமையல் மணி உள்ளே ஓடி வந்தான்.

“என்னாச்சு சார்?”

“தெரியல மணி! திடீர்னு ரொம்ப வயித்து வலி!” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போது அதைக் கவனிக்காமல் அவன் கண்கள் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்தேன்.

அங்கே பார்த்தால் வள்ளியின் மேலாக்கு!

பகீரென்றது எனக்கு. குட்டு வெளிப்பட்டு விட்ட வெட்கம். பயம்.

“சார்! வள்ளி வந்தாளா?”

“ஆமா”

“என்ன செஞ்சீங்க அவள? எதுனாச்சியும் செஞ்சிருந்தீங்கன்னா நல்லதுக்கில்ல சார்.”

“என்ன மணி சொல்ற?”

“ என்ன சொல்றது சார்? இவனுங்களுக்கு தெரியாத மூலிக இல்ல. மந்திரம் இல்ல. உண்மையச் சொல்லுங்க சார்”

வேறு வழியில்லாமல் நான் நடந்ததைச் சொன்னேன்.

சிலையானான் மணி. “ நாங்க டவுனு போயி வர்ற நேரத்துக்குள்ளாரவா?’ என்று ஆச்சரியமும் பட்டான். ஆனால் இதை எல்லாம் ரசிக்கும் மூடில் நான் இல்லை. வலி உயிர் போய்கொண்டிருந்தது.

“சரி சார், நான் போயி எதுனா செய்ய முடியுமா பார்க்கறேன்” என்று சொல்லி அங்கிருந்து போனான்.

அடுத்த அரை மணி நேரம், வயிற்று வலியோடு சஸ்பென்சும் சேர்ந்து கொன்றது.

மணி புலிக்கடி கருத்தமுத்துவுடன் திரும்பி வந்தான். கருத்தமுத்து என்னிடம் பேசவில்லை. என்னைப் பார்க்கக் கூட இல்லை.

“சார்! அம்பதினாயிரம் ரூவா தந்தீங்கன்னா மாத்து மருந்து தர்றதா சொல்றான்” என்றான் மணி.

“என்னது, அம்பதினாயிரமா? ரொம்ப ஜாஸ்திப்பா” என்று சொன்ன நான் பல்லைக் கடித்துக் கொண்டேன்.

அப்புறம் மணிக்கும் அவனுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இருவத்தஞ்சாயிரம் ரூபாய்க்கு பேரம் படிந்தது. கையில் கேஷ் இல்லாததால் கழுத்தில் போட்டிருந்த ஒரு பவுன் செயினைக் கழற்றிக் கொடுத்தேன். கருத்தமுத்து அதைச் சந்தேகத்துடன் வாங்கிக்கொண்டான். அப்புறம் தன் தோள்பிலிருந்து வேறு ஒரு பாட்டில் எடுத்து, மூடி திறந்து, என் மீது தெளித்தான். திரும்பவும் ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தான்.

ஒரு ஐந்து நிமிடத்தில் வயிற்று வலி குறைந்து மறைந்தே விட்டது.
நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

அப்புறம் இரண்டு நாட்களில் திரும்பவும் சென்னை வந்து விட்டேன். வந்த அன்று லஞ்ச் டைமில் என் க்ளோஸ் பிரெண்ட் ராமுவிடம் நடந்ததைச் சொன்னேன்.

எல்லாவற்றையும் கேட்ட அவன் “ டேய், ரீல் சுத்தினாலும் அளவாச் சுத்தணும்டா! எவனாவது நம்புவானா இதெல்லாம்?” என்று சொல்லி சிரித்தான்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பும் போது ராமு சொன்னான் “ இருவத்தஞ்சாயிரம் ஜாஸ்திதான்”.

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *