புரியாத விஷயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 2, 2023
பார்வையிட்டோர்: 2,357 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஏய் ஏய்!” என்று பதறிப்போய் அலறினார் சிவானந்தம். ‘பிடிடா….. பிடிடா… அடே அடே!’ என்று தொடர்ந்து கத்தினார்.

அவர் வீட்டினுள் புகுந்து யாரோ எதையோ கொள்ளை யடிப்பதைக் கண்டுவிட்டுப் பதறியவர்போல் சிவானந்தம் கத்திய கதறல் வீட்டில் இருந்தவர்களையும், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முத்துசாமியையும் சுண்டி இழுத்தது. கையிலிருந்த வேலைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு, சத்தம் எழுந்த இடம்நோக்கி ‘அரக்கப் பறக்க ஓடி வந்தார்கள் அவர்கள்.

சிவானந்தம் அவரது அறைக்குள், தோட்டத்தைப் பார்த்து அமைந்திருந்த சன்னல் அருகில் நின்றுதான் அப்படிக் கத்திக்கொண்டிருந்தார். வேறு என்ன செய்வது என்று விளங்காதவராய் அவர் கூச்சல் கிளப்பி நிற்பதாகத் தோன்றியது.

விரைந்து வந்தவர்கள் தோட்டத்து சன்னல் பக்கம் தான் வந்தார்கள். ‘என்ன என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். அங்கே மாடோ, மனிதரோ நின்று நாசவேலை செய்ததாகவும் அவர்களுக்குப் படவில்லை.

‘அதோ பாரு… அந்தக் குரங்கு செடிகளை பாழாக்குது. இலைகளை பிச்சுப் பிச்சுப் போடுதே. ஏய் ஏய், விடாதே! பிடிடா’ என்று பெரியவர் உணர்ச்சி மிகுதியோடு மீண்டும் அலறினார்.

மெய்யாகவே குரங்குதான் போலும் என்று கண்களை ஏவினர் பலரும்.

சிவானந்தம் சுட்டிய இடத்தில் ஒரு சிறு பெண்தான் நின்றது; தோட்டவேலை செய்யும் முத்துசாமியின் மகள் செல்லம்.

அந்த ஆறு வயசுக் ‘குரங்கு’ தான் சும்மா ஒரு செடியின் இலைகளை கிள்ளிப் போட்டிருந்தது. அதுக்கு ஒரு விளையாட்டு; செடியில் பூக்கள் இல்லை. பூக்களை வெளிச்சமிடாத, சில சில வர்ண விஸ்தார இலைகளைக்கொண்ட, அழகுச் செடிகளே அந்தப் பகுதியில் நின்றன. பூக்கள் வசீகரமாகச் சிரித்துக் குலுங்கினால், அச்சிறுமி அவற்றை கொய்திருக்கும்!

அப்போதும் அதன் விரல்கள் ஒரு செடியைப் பிடித்து இழுத்தபடிதான் இருந்தன. பெரியவர் சத்தம் போட்டதும், திமு திமு என்று ஆட்கள் வந்ததும், தனது விளையாட்டால் வந்த வினைகளே என்பதை உணராமலே அது நின்றது. வீட்டுப் பெரியவர் கூப்பாடு போடுவதும், மற்றவர்கள் பரபரப்பாக வந்து நிற்பதும் அக்குழந்தைக்கு ஒரு வேடிக்கை யாகத்தான் தோன்றியது. ஆகவே அது சிரித்தது.

‘பாருடா ; எவ்வளவு திமிரு! செடிகளைப் பாழ்படுத்துறதும் இல்லாமே, பல்லை வேறே காட்டுதே. கொழுப்புப் புடிச்ச கழுதை!” என்று சிவானந்தம் உறுமினார்.

அவருக்குத் தெரியும் அச் செடிகளின் உயர்வும் அருமை யும்! தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு செடியும் அவருக்குக் குழந்தை மாதிரி. வீட்டுத் தோட்டத்தைக் கலை உணர் . வோடும் ரசனை ஈடுபாட்டுடனும் கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாக்கும் பண்பாளர் அவர். செடி கொடி களின் மதிப்பை அறியாத ‘சின்னச் சவம்’ குரங்குத் தனம் பண்ணுவது என்றால்?

அவர் உடல் பதறியது. உணர்வுகள் கொதிப்புற்றன. மீண்டும் கத்தினார். ‘என்னடா பாத்துக்கிட்டே நிக்கிறே?.

முத்துசாமி முன் வந்தான். ‘ஏ செல்லா, உனக்கு தோட்டத்திலே என்னட்டீ வேலை? செடிகிட்டே ஏன் சேட்டை பண்ணுதே? ஏன் இலைகளை இப்படிப் பிச்சுப் போட்டிருக்கே?’ என்று கூச்சலிட்டான். சிறுமியின் முதுகிலும் தலையிலும் அறைகள் கொடுத்தான்.

சிங்காரச் செடிகள் அருகே சிரிக்கும் பூச்செண்டுபோல் காட்சி அளித்த சிறு பெண், தந்தையின் தாக்குதலால் நிலை குலைந்து முகம் விகாரமாக, கோரக் குரலெடுத்து அழுது கொண்டே ஓடியது.

பெரியவருக்கு அப்போதுதான் ஓரளவு மன அமைதி ஏற்பட்டது. ‘அந்தக் கழுதைக்குத் தோட்டத்திலே என்ன வேலை? அதை இனிமே இங்கே வரவிடாதே’ என்று எச்சரித்து விட்டு, உள்ளமும் உணர்வுகளும் சமன் உறுவதற்காக ஈஸி சேரில் சாய்ந்தார். அதற்கு முன்னதாக, கத்திய தொண்டை இதமடைய, ஒருபாட்டிலில் தயாராக இருந்த ஆப்பிள் ஜூஸ்’ ஐ கண்ணாடித் தம்ளரில் ஊற்றி மெது மெதுவாக உறிஞ்சிக் குடித்தார்.

மற்றவர்கள் அவரவர் அலுவல்களைக் கவனிக்கப் போய் விட்டார்கள்.

பங்களாவாசி சிவானந்தம் அவர்களது வீட்டுத் தோட்டம் அந்தப் பெரிய நகரத்தில் பெருமைக்குரிய ஒரு சில தோட்டங்களில் ஒன்று. சுத்தமாகவும் நவீன முறையிலும் பேணப்பட்டு வந்தது அது. வந்தது அது. பலரகமான பூச்செடிகளும், பூக்காத வெறும் இலை விசேஷச் செடிகளும், கொடிகளும், இதர தோட்டங்களில் இல்லாத அற்புத இனங்களும் அங்கு செல்லப் பிள்ளைகள்போல் வளர்க்கப்பட்டு வந்தன. பெரியவர் செடிகள்மீது மிகுந்த பாசமும் பற்றுதலும் கொண்டிருந்தார் என்றே சொல்லவேண்டும்.

ஆறு வயசுப் பிள்ளை செல்லத்துக்கு அது எங்கே புரியும். பாவம்! அவளுடைய அப்பா முத்துசாமி தோட்டத்தில் சதா பாடுபட்டுக்கொண்டிருந்ததுதான் தெரியும். செடிகளுக் கெல்லாம் தண்ணீர் பாய்ச்சுவது, மண்ணைக் கொத்துவது, புதிது புதிதாகச் செடிகளை நட்டு வளர்ப்பது – எல்லா வேலை களையும் அவன் தான் கவனித்து வந்தான்.

பொழுது போகாத வேளைகளில், விளையாட்டுத் துணை இல்லாமல் சும்மா தானே ஆடிக் களித்து அலுத்த சமயங் களில், செல்லம் தோட்டத்தினுள் வந்து சுற்றித் திரிவாள். செடிகளை பார்ப்பாள். ஒன்றிரண்டு பூக்களைப் பறிக்கவும் செய்வாள்.

முத்துசாமி பார்த்தால் சத்தம் போடுவான். வீட்டுப் பெரியவர் அன்றுவரை அந்தச் சிறுபிள்ளையின் குரங்குத் தனத்தைக் கண்டதில்லை. முதல் தடவையாகப் பார்த்த போது ஆத்திரம்கொண்டுவிட்டார், பாவம்!

அதன் பிறகு சில நாட்கள்வரை செல்லம் தோட்டத்தின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அப்புறம் ஒருநாள், உலகத் தையே விலைக்கு வாங்கிவிட்ட ராணி மாதிரி சுதந்திரமாக உல்லாசமாகக் குதித்துக்கொண்டு வந்துசேர்ந்தாள்.

தண்டனை, கண்டிப்பு எல்லாம் சர்வ சகஜமானவை அவளது வாழ்க்கையில் வீட்டில் படாத அடியா? ‘தோலுக்கு மேலே தொண்ணூறு அடி; துடைத்துவிட்டால் ஒண்ணு மில்லே!” என்ற உணர்வு அவளுள் படிந்துகிடந்தது. மேலும், விளையாட்டுப் புத்தி அதிகம். தோட்டம் இனிமையான தோழி மாதிரி, ‘வா வா’ என்று ஆசைகாட்டிக் கூப்பிட்டு நிற்கிற போது அவள் எப்படி ஒதுங்கி இருந்துவிட முடியும்?

வந்தாள். அவள் அப்பா செய்துகொண்டிருந்த காரி யத்தைப் பார்த்ததும், பதறிப்போனாள். ‘ஐயோ’ எனக் கூறி, சிறு கையால் தன் வாய் புதைத்து நின்றாள் செல்லம்.

‘என்னட்டீ?” என்று சிடுப்புடன் திரும்பி மகளைப் பார்த் தான் கருமமே கண்ணாயிருந்த முத்துசாமி. செடிகளின் தலைகளை வெட்டி ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தான் அவன். முதிர்ந்துவிட்ட ‘கன்னாவாழைச் செடிகளைப் பிடுங்கிப் போட்டிருந்தான்.

‘என்ன இப்படிப் பண்ணுதே? பெரிய ஐயா கோபிக்கப் போறாரு!” என்றாள் மகள். ‘செடியை எல்லாம் ஏன் இப்படி நாசமாக்குறே? பூவும் இலையுமா இதுகளை இப்படியா புடுங்கிப் போடுவது? அன்னைக்கு அஞ்சாறு இலைகளை கிள்ளிப் போட்

டேன்னு என்னமாச் சத்தம் போட்டாரு! இன்னிக்கு உன்னை போலீஸ்காரன்கிட்டேதான் புடிச்சுக் கொடுப்பாரு. ஆமா என்று நீட்டி நீட்டிப் பேசினாள் அவள்.

முத்துசாமி சிரித்தான். ‘உனக்கு ஒண்ணும் தெரியாது. போ. செடிகளும் தோட்டமும் அழகாயிருப்பதுக்கு இப்படி எல்லாம் செய்யவேண்டியது அவசியம். ஐயாதான் இதை எல்லாம் செய்யச் சொல்லியிருக்காரு.

‘இப்படி மொட்டை மொட்டையா வெட்டிவிடவா? பூச்செடிகளைப் புடுங்கிப் போடவுமா சொன்னாரு என்று வியப் புடன் மகள் விசாரித்தாள்.

‘ஆமா ஆமா. நீ இங்கே நிற்காதே. ஓடிப்போ. இப்ப ஐயா வருவாரு’ என்று அவளை துரத்தினான் அவன்.

‘இது என்ன இது!” என்று அதிசயித்தாள் செல்லம். ‘நான் இம்புட்டுப்போலே இலைகளை பிச்சுப் போட்டதுக்கு அவரு பெரிசா கத்தினாரே. இன்னிக்கு நிறைய நிறைய, கொப்பு கொப்பா, வெட்டிப் போடுறதினாலே, புடுங்கிப் போடுறதுனாலே, செடி எல்லாம் நாசமாகலியாக்கும்? நான் அஞ்சாறு இலைகளை கிள்ளினதனாலே செடி பாழாயிட்டு துன்னாரே!…’

அந்தப் பிஞ்சு மனசால் இந்தப் பெரிய விஷயத்தைப் புரிந்துகொள்ள இயலவேயில்லை. திரும்பத் திரும்ப, அதன் நோக்கிலே, நியாயமற்ற இந்தப் போக்கை எண்ணிக் குமையத்தான் முடிந்தது. விளையாட்டில் மனம் செல்லாமல், சோர்வுற்று வெளியேறினாள் செல்லம்.

ஒரு மாதம் சென்றிருக்கும். அந்தப் பெரிய வீட்டின் தோட்டம் விசேஷ கவனிப்புக்கு உரியதாக விளங்கியது. பெரிய மனிதர்கள் பலர் தோட்டத்தைச் சுற்றி வந்தார்கள். அனைத்தையும் கண்டுகளித்தார்கள். வியந்து ரசித்தார்கள். பாராட்டிப் புகழ்ந்தார்கள்.

அந் நகரத்தில் அழகாகவும் சிறப்பாகவும் போற்றி வளர்க்கப்படும் வீட்டுத் தோட்டங்களில், உயர் திருவாளர் சிவானந்தம் அவர்களின் தோட்டமே ஆகச் சிறந்தது; அழகானது; புதுமைப் பொலிவுடன் திகழ்வது; வளமாய் சீருடன் பேணப்படுவது என்று சான்றுரையும், முதல் பரிசான வெள்ளிக் கேடயமும் வழங்கினார்கள், அதற்கென அமைந்திருந்த குழுவினர்.

சிவானந்தம் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் அவற்றை ஏற்றுக்கொண்டார். தோட்டக்கார முத்துசாமி அடக்க ஒடுக்கமாய் கையை கட்டிக்கொண்டு, ஒரு ஓரத்தில் நின்றான்.

தற்செயலாக தோட்டத்தினுள் வந்திருந்த செல்லம் இதை எல்லாம் பார்த்தபடி நின்றாள்; பெரியவர்கள் பார்வையில் படாதவாறுதான்.

அப்புறம் அவள் தந்தையிடம், ‘அதெல்லாம் என்ன? அவங்க ஐயாகிட்டே என்னமோ கொடுத்தாங்களே. அது என்ன’ என்று ஆவலோடு விசாரித்தாள்.

‘இந்தப் பட்டணத்திலேயே இந்தத் தோட்டம்தான் உசந்தது; ரொம்ப நல்லா இருக்கு; கவனிச்சு பாதுகாக்கப் படுதுயின்னு சொல்லி பாராட்டினாங்க. அதுக்காக ஐயாவுக்கு பரிசு கொடுத்தாங்க கேடயமும் சர்டிபிட்டும் (சர்டி பிகேட்) என்று சொல்லி மகிழ்ந்து போனான் முத்துசாமி.

‘இது என்னப்பா இது!’ என்று ஆச்சர்யப்பட்டாள் செல்லம்.

சுற்றும் முற்றும் பார்த்தபடி, ‘எதுடீ? என்ன விஷயம்?’ என்று திகைப்புடன் கேட்டான் தந்தை.

‘இல்லே… வந்து. தோட்டத்திலே ஓயாமப் பாடு பட்டது நீதானே? தண்ணி பாய்ச்சி, செடிகளை வாடாமல் காப்பாத்தி, அழகா நட்டுவச்சு நீதானே கவனிச்சு வளர்த்தே? தோட்டம் நல்லாயிருக்கும்படி செய்யறது நீதானே? உனக்குத்தானே பரிசு தரணும்? ஐயா என்ன செஞ்சாரு? என்ன செய்றாரு? ஒரு இலையைக்கூட கிள்ளிப் போடுறதில்லே; மண்ணை கொத்துறது இல்லே. அப்படி இருக்கையிலே. தோட்டத்தை நல்லா வச்சிருக்காருங்கிற பரிசை அவருக்கு எப்படிக் கொடுக்கலாம்?”

தனக்கு விளங்காத ஒரு விவகாரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற இயல்பான குறுகுறுப்போடுதான் அந்தச் சிறுமி கேட்டாள்.

‘சீ வாயாடிக் கழுதை! என்ன திமிரு உனக்கு?’ என்று ஆத்திரத்தோடு கத்தினான் முத்துசாமி. ‘ஐயா காதிலே இது விழுந்தா என்ன நினைக்கமாட்டாரு?’ என்றும் முணுமுணுத்தான்.

அவன் அடித்தாலும் அடிப்பானோ என அஞ்சி அவனது கைக்கு எட்டாத தூரத்துக்கு விலகி ஓடிய செல்லத்துக்குப் பெரியவர்களின் போக்கே பெரும் புதிர் ஆகத்தான் தோன்றியது.

– ‘சிகரம்’, ஆகஸ்டு 1975

– அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *