கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது. எரிச்சலும், கோபமும் இருவேறு உணர்ச்சிகளா அல்லது ஒருமித்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் அவையிரண்டும் முகத்தில் பரவத்தொடங்கியிருந்ததை நான் அறிந்தேன். என் எதிர்ப்படுவோருக்கு நான் கோபமுற்றிருக்கின்றேன் என்பது தெரியலாம். ஆனால் எனக்குள் விரவிக் கிடக்கும் வெட்கத்தை அவர்கள் அறிவார்களா ? அறியக் கூடாதென்பதை நான் விரும்பினேன். வெட்கம், கோபம், எரிச்சல் என வெவ்வேறு உணர்வுத் திரள்களை புகையாக்கித் திரட்டி, மூச்சுக் குழல்கள் ஊடாக வலிந்து திணித்தது போன்றதொரு நெஞ்செரிவை, ஆற்ற முடியாமல், பீரிட்டுக் கிளம்பும் அரோகரா ஒலிகளும், சிறு கோபுரங்களாய் விழி வீச்சின் எல்லைவரை குவிக்கப்பட்டு, கார்ப்பெட் தாரிட்ட வீதியில் பட்டுச் சிதறிப்போவதற்குரிய வீச்சில் எறிபடும் தேங்காய்களும் இடைஞ்சல் செய்தன.
வெட்கத்தின் தொடக்கப்புள்ளி, சிதறடிக்கப்பட்ட தேங்காய்ச் சில்லுகள், தனித்தொன்றாய்ப் போய்விட்ட என் உறவுகளை நினைவுறுத்திய அடுத்த கணத்தில் ஆரம்பித்தது. “இதெல்லாத்தையும் பார்க்கிற வெள்ளைக்காரன் எங்களைப் பற்றி என்ன நினைப்பான் ´´ ஆனால் இற்றை வரை விரவிக் கிடக்கும் வெட்கம் இக்கேள்வியின் மேற்பட்டதேயன்றி இக்கேள்வியல்ல. வெள்ளைக்காரத் துரை குறித்த உயர்ச்சி மதிப்பீடு என் மனதடியில் ஒளிந்து கொண்டிருந்தமை மீதான வெட்கம் அது. இன்னும் சில வெ – துரை குறித்த ஆண்டகை உருவகங்கள் எனக்குள் பதுங்கியிருக்குமோ என்ற அச்சம் வெட்கத்தை மேலும் அதிகமாக்கியது. வெள்ளைக் காரனின் மன நிலைச் சமன்பாட்டுத் தளத்தில் பொருத்தி அளவிடுவதற்கு அவனுக்கு கொம்பெதுவும் முளைத்துளதா? தேசங்களைக் களவாடச் சென்ற திருடர்கள் என்றும் தீவாந்திரத் தனிமைச் சிறைகளில் கைதிகளின் ஒவ்வொரு உயிர் அணுவையும் வலிப்படுத்திய காட்டுமிராண்டிகள் அவர்கள் என்றும் அறிந்தவற்றை நினைவிருத்திக் கொண்டேன். இருந்தும் மனதின் ஆழ் மடிப்புக்களில் மறைபட்டுக் கிடந்து எப்போதேனும் வெளி நீட்டி, வெட்கத்தை நுரைக்கச் செய்து என் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை அரிக்கத் தொடங்குகின்றன இதுபோல மேலும் சில நிகழ்வுகள்.
நான் அமைதியுற விரும்பினேன். எதனையும் வெளிச்சொல்லவில்லையென்பதே குறைந்த பட்ச ஆறுதலைத் தந்தது. வயதான வெள்ளைத் தம்பதியர் வீடியோவில் சுற்றிச் சுற்றி படமாக்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் இந்நிகழ்வை அனுபவிக்கிறார்கள் போல்ப்பட்டது. காவடியாட்டத்தை எடுக்கச் சொல்லி கணவனிடம் அந்தப் பெண் கை காட்டினாள். காவடியாட்டங்களை ஆவல் ததும்ப அருகில் சென்று பார்த்த பழைய காலங்கள் எனக்கும் உண்டு. இப்போதெல்லாம் என்னை நீங்கித் தூரம் சென்று விட்ட கடவுளர் அப்போது என் அருகிலிருந்தனர். காலையில் பூப்பறித்துச் சாத்தும் போதே “மாதகலில் இருந்து ஆமி மூவ் பண்ணினால் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில நிற்கலாம் பிள்ளையாரே ´´ என்ற முணுமுணுப்புக்களின் பின்னால் உப நோக்கம் ஒன்றிருந்தது. அது சுழிபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து என் வீட்டுக்கு வரும் அவள். அது குறித்து பிள்ளையாருக்கு ஒரு போதும் அறியத்தந்ததில்லை. அவர் என்னைக் கவனமாக கிரகித்துக்கொள்வார் போலும். அதற்கடுத்த நாட்களில் “மேலாலும் கீழாழும்´´ என் வேண்டுகை பலிக்கத்தொடங்கிய பொழுதுகளிலும் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி பிள்ளையாரே´´ என அவரிடத்தில்த்தான் தஞ்சம் புகுவேன். வல்லூறுகளை ஞாபகப்படுத்தும் இயந்திரங்களின் எச்சங்களை தலைக்கு மேல் கண்டவுடன் முணுமுணுப்புக்களைக் கதறல்களாக்கியிருக்கிறேன். காற்றில் சடசடக்கும் விசிறிகளோடு வீட்டைச் சுற்றிச் சன்னங்களைத் தூவும் வானூர்திகள் என்னைத் தென்னை மரங்களுக்குப் பின்னேயிருந்தும், சுவர் மறைப்புக்களில் பதுங்கியிருந்தும் பிள்ளையாரை அழைக்கச் செய்திருக்கின்றன.பின்னேரங்களில் பொடியளின் வாகனங்கள் உறுமிச்சென்ற பிறகு பிள்ளையார் எனது ஓலங்களை ஏற்றுக்கொள்வதாக நம்பினேன். அப்போது அவர் என் அருகிலிருந்தார். பின் வந்த ஒரு போர் நாளில் சற்றேனும் எதிர்பார்க்காநிலையில் அவர் என்னை ஏமாற்றினார். சுழிபுரத்தில் இருந்து இடம் பெயர்ந்தவளோடு நானும் கூடப்பெயர்ந்த கணத்தில் பிள்ளையார் என்னை விட்டு கொஞ்சத் தூரம் போனதை நான் உணர்ந்தேன். என் பிரியத்துக்குரியவர்கள் சிதைந்த போதும் அவர்களின் தசைத் துணுக்குகளை கூட்டி அள்ளிச் சுடுவதற்கு கொடுத்த போதும் அவர் இன்னுமின்னும் தூரம் போனார். நாளை விழித்தெழும் உறுதி கிடைத்த ஓரிடத்திற்குப் பெயர்ந்த பிறகும் பள்ளிக்கூடம் செல்ல ஆசைப்பட்ட காலங்களிலும் அவர் ஒரு சிறு புள்ளியாய் எங்கோ தெரியும் ஒருவராய் ஆனார். நான் நன்றி மறந்தவனானேன்.
காவடிக்காரர் களைத்தோய்ந்திருந்தார். நான் வேறேதும் சுவாரசியங்களைத் தேடத் தொடங்கினேன். இங்கு வந்திருந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாமோ? அவளை மட்டும் அனுப்பியிருக்கலாமோ என்ற யோசனை முதற்தடவையாக எழுந்தது. இந்த இரண்டு வருடங்களில் அவளுக்கு இவையெதுவும் அலுத்து விடவில்லை. இடது கை நீட்டி பவ்வியமற்று திருநீறு பெறும் பொழுதுகளில் முறைக்கும் ஐயர்களின் பார்வைகள் அவளது ஆர்வக் கோளாறைச் சிதைத்துவிடவில்லை. அவளளவில் இது ஒரு இனிய பொழுது. அதை அனுபவிப்பது குறித்து மகிழ்வுறுகிறாள். மறுவளத்தில் அவளோடு சேர்ச் செல்லும் சமயங்களில் நான் மகிழ்வுறுகின்றேனா என்பதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அனைவரும் அப்பம் வாங்கும் போது நான் தனித்துவிடப்பட்டவனாய் உணர்ந்திருக்கிறேன். என்னைப்போலன்றி இன்னமும் யேசு அவளுக்கு இரக்கமாய் இருப்பதனால் இணைவுற்ற பின் மதங்களைக் கடத்தல் என்பது சாத்தியப்பட்டிருக்கவில்லை. ஒரு புரட்சியொன்றிற்கான வாய்ப்பினை நான் இழந்து விட்டேனா ?
ஆரம்பங்களில் சிலர் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். “சாதி சமயங்கள் எல்லாத்தையும் மீறிக் கலந்து கல்யாணம் செய்திருக்கிறீர். பெரிய புரட்சிக்காரன்தான் நீர் ´´ அவர்களுக்கு என் சிரிப்புக்களை பதிலாக்கியிருந்தேன். சிரிப்புக்களை ஆமோதிப்பிற்கும் மறுதலிப்பிற்கும் பயன்படுத்த என்னால் இயலும். ஆனால் போகிற போக்கில் பிடித்திருந்தவளோடு இணைந்து பயணிப்பதன் பின்னால் புரட்சியொன்று ஒளிந்திருக்கும் என நான் நம்பவில்லை. தவிரவும் எனதும் அவளதும் வீட்டாரின் ஒருசில விருப்புக்களும் நிகழ்ந்தேறின என்பது புரட்சியின் மிச்சசொச்ச எச்சங்களையும் புரட்டிப் புதைத்து விட்டதாய் உணர்ந்தேன். ஆனால் புரட்சிகளின் போது வீட்டாரின் தலையீடுகள் இருப்பதென்பது புரட்சிகளில் சகஜம் எனவும் அதனால் புரட்சிகளுக்கு பங்கமேதும் வந்துவிடாதென்றும் இணைய அரட்டையில் சொன்ன நண்பன் கூடவே ஒற்றைக் கண் மூடிச் சிரிக்கும் ஸ்மைலி ஒன்றினையும் அனுப்பியிருந்தான்.
ஆரம்பித்த இடத்திற்கு போய்விடலாம் என நினைத்தேன். கடவுளர் வீதியுலா வருவதற்கான நேரம் நெருங்கியிருந்தது. அதற்குள் சிக்காமல் சென்றுவிட வேண்டுமென்ற விருப்பை அவளுக்குச் சொல்லி விடலாம். என்னைக் கடந்த நடுத்தர வயது தாண்டிய பெண்ணொருத்தி அழுது கொண்டிருந்ததைக் கண்டேன். அவள் தன்னை வருத்தும் ஏதோ ஒன்றிற்காக கடவுளிடம் வேண்டியிருக்க வேண்டும். பொருளாதார விசயத்திலோ குடும்ப உறவுகள் தொடர்பாயோ அல்லது பெற்ற பிள்ளைகள் குறித்தோ அவளுக்குத் தீராத வலியிருக்கக் கூடும் என்பதாய் ஊகித்துக்கொள்ளல் எனக்குத் தேவையற்று இருந்தது. “இங்கே வெளிநாடுகளில் பெண் பிள்ளைகள் வளர்ந்து வெளிச்சென்று வரும் ஒவ்வொரு நிமிசமும் அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது “ என்றவரை அண்மையில் சந்தித்தேன். குடும்பத்தின் கெளரவத்தோடு கட்டிப்பிணைக்கப்பட்டிருந்த கலாச்சாரம் குறித்த தகிப்புக்களை அவர் மட்டுமன்றி பலரும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். “வெளியே இயல்பாக இயைபாக்கமடையும் ஒரு கலாசாரமும் வீட்டில் உன் கலாசாரம் என திணிக்கப்படும் கலாசாரமும் பிள்ளையை இரட்டைத் தன்மையில் வாழ்வதற்கான ஊக்குவிப்பையும் அழுத்தத்தையும் கொடுக்கும் என நம்பினேன். ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்வதாகவில்லை. ´´உனக்கும் பெண்பிள்ளை பிறந்தால்தான் தெரியும் . ´´ என்றவரிடம் சொல்வதற்கு பதில்களேதும் என்னிடத்தில் இருக்கவில்லை. ஆனால் அவரிடம் கேட்காமல் விட்ட கேள்வி ஒன்று துருத்திக்கொண்டு நிற்கிறது. எப்போதாவது காண்கையில் பேருந்துகளிலும் பிற இடங்களிலும் தன் வெள்ளைத் தோழியருக்கு முத்தங்களைப் பரிசளித்துக்கொண்டிருக்கும் அவரது இளைய மகன், வெளிச்செல்லும் வேளைகளிலும் அவர் அடிமடியில் நெருப்பை கட்டிக்கொண்டு உள்ளாரா ?
தேங்காய்கள் சிதறும் தீவிரம் அதிகரித்தது. பக்தர்கள் போட்டிக்கு உடைப்பதாய்ப் புரிந்து கொண்டேன். பட பட வெனச் சிதறி விழுந்த தேங்காய்ச் சொட்டுகள் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடந்தன. ஊர் பெயர்ந்து ஓடிய நாட்களில் அரியாலையில், எழுதுமட்டுவாளில் அரிசி மாவிற்குள் இளநீர் விட்டு தேங்காய்த் திருவலைத் தூவி பசியாறியிருக்கிறேன். இன்னமும் அங்கே பசியாற தேங்காய்கள் தேவைப்படுகின்றன. “என்னை வடிவா வீடியோ எடடா ´´ என்றவர் வியர்வையிலும் இளநீர்ச் சிதறலிலும் தோய்ந்திருந்தார். ஒவ்வொரு தேங்காயாய் அவர் உடைக்கும் வேகம் நீண்ட அனுபவம் உள்ளவர் எனச் சொல்லிற்று. “சுத்திச் சுத்தி எடடா ´´ எனச் சொல்லிச் சொல்லி அவர் இயங்கும் விதம் விநோதமாக இருந்தது. கமராவைத் தாங்கியிருந்த பதின்மகங்களை அடைந்தவன் அவரது மகனாயிருக்க வேண்டும். கட்டளைகளுக்கு ஏற்ப இயங்கி கொண்டிருந்தான். “ கடையையும் சேர்த்து எடு. எங்கடை கடைக்கு முன்னாலை நான் உடைக்கிறது கிளியரா வரோணும். பிறகு நீ வந்து உடை. நான் வீடியோ எடுக்கிறன் ´´ நான் நகரத் தொடங்கினேன். இந்த வீடியோவை இவர் பின் என்ன செய்வார் ? தன் கடை சார்பாக இத்தனை தேங்காய் உடைத்தேன் என வருகிறவர்களிடம் பெருமை பேசுவாரா? ஊருக்கு அனுப்புவாரா . தமது ஊரைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று சமயம் வளர்க்கிறார் என அங்கு புளகாங்கிதம் அடைவார்கள்.
நான் சினமுறத் தொடங்கினேன். குப்பை வண்டிகளில் சேர்த்துச் சேர்த்துக்கொண்டிருந்த போதும் மீள மீள நிறையும் தேங்காய்ச் சிதறல்கள் என் சினத்திற்குக் காரணமாயிருக்க வேண்டும். “யாராவது இதற்கெதிராய்ப் போராட முன்வரவேண்டும். போராடாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்ச விழிப்புணர்வையாவது கொண்டு வர ஏதாவது செய்ய வேண்டும். நடைமுறைத் தர்க்கங்களுடன் சொன்னால் பலராலும் புரிந்துகொள்ளப்படும் என நம்பினேன்.
கையில் இரண்டு மூன்று நோட்டிசுகளுடன் அவள் வந்தாள். இன்னொரு வீதியின் வளைவில் வைத்து இரண்டோ மூன்று பேர் கொடுத்ததாய்ச் சொன்னவற்றை வாங்கிப்படித்தபோது நிம்மதிப் பெருஉணர்வொன்று ஆட்கொண்டதை அறிந்தேன். இந்த மக்களுக்கு நிறையச் செய்திகளை நோட்டிஸ் சொல்லியது. இது ஒரு பொறி. அவர்களிடத்தில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். விழிப்புணர்வூட்டும் அவாகளது தன்முனைப்பான செயலுக்குப் பாராட்டுக்களைப் பகிர்ந்தேன். அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு நோட்டீசை எனக்குத் தருவது போல படமெடுக்க விரும்பினார்கள். போஸ் கொடுக்கும் மற்றைய வேளைகளில் படரும் புன்னகை வர மறுத்தது. ஆனாலும் நோட்டீசைப் பிடித்தபடி நின்றேன். எடுத்த படத்தைப் பார்த்தவர்களில் இருவரின் முகத்தில் திருப்தியின்மை தெரிந்தது. அவர்கள் மீளவும் முன்னரைப் போன்றதொரு படத்தை எடுக்க விரும்புவதாய்ச்சொன்னார்கள். புரட்சியின் பரவிற்கும் செய்திக்கும் இவை அவசியம் என மேலும் சொன்னார்கள். நான் நேரமில்லை எனச் சொல்லித் திரும்பி நடந்தேன். அது குறித்து அவர்கள் கவலையுற்றதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக திருப்தியுறும் வகையில் ஒரு படத்தை அவர்கள் எடுப்பார்கள் சுத்தி சுத்தி எடடா என்ற தேங்காய் உடைப்பவனைப் போலவே –
– April 2008