புத்தரும் சுந்தரனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 4,439 
 

நோர்வேயின் கோடைக் காலத்தில் அத்தி பூத்தால் போல் வானம் முகில்களை விரட்டி, நிர்வாணமாகச் சூரியனை அமைதியோடு ஆட்சி செய்யவிட்ட அழகான நாள். காலை பதினொரு மணி இருக்கும். உடம்பு என்னும் இயந்திரம் சீராக இயங்க வேண்டும் என்றால் அதற்குக் கொடுக்க வேண்டிய அசைவுகளை ஏதோ ஒரு பயிற்சியாக அல்லது வேலையாகக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். இல்லாது விட்டால் தனக்கு இனி இந்த உலகில் அலுவல் இல்லை என்பதாகத் தன்னைத் தானே சீரழித்துக் கொள்வதில் அது வேகம் காட்டும் என்கின்றது மேற்கத்தேய மருத்துவ அறிவியல். அந்த அறிவியலை மனதில் இருத்தித்தான் சுந்தரன் இன்று வெளியே உலாத்திற்காய் சென்றான். உலாத்து என்று வந்துவிட்டால் அவனும் பலரையும் போன்று ஒஸ்லோவில் இருக்கும் மலையும் மலை சாந்த கட்டுப் பகுதியையும் தான் தேர்ந்து எடுப்பான். இன்று அப்படி அவன் கட்டுப் பகுதிக்குள் போகும் போதுதான் அந்த அதிசயம் திடீரென நடந்தது. அவன் கண்களை நன்கு கசக்கி விட்டு மீண்டும் அவரைப் பார்த்தான். காட்சி மாறவில்லை. தன்னைக் கிள்ளி உறுதிப்படுத்திக் கொண்டு பார்த்தான். அப்போதும் அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர்தான் கம்பீரமாக, அழகாக முன்னே சென்றார்.

பாதத்தில் மரத்தால் ஆன மதியடி. காவி உடை. கையில் இங்கும், எங்கும் என்பதாய் எந்த மாற்றமும் இன்றிய அவரது எளிமையான திருவோடு. திரும்பிச் சுந்தரனைப் பார்த்த போது என்னிடம் வா என்கின்ற என்றும் மாறாத அந்த ஞான ஒளியின் பரவல் அவர் கண்களில். சுந்தரன் மீண்டும் மீண்டும் தன்னைக் கிள்ளிப் பார்த்து உறுதி செய்தான். இது கனவு இல்லை என்பது விளங்கியது. கிள்ளுவதால் எதுவும் மாறவில்லை என்பதும் புரிந்தது. அவர் அவன் முன்னே கம்பீரமாக ஞானம் பரப்புதலும், வாழ்தலுக்குப் பிச்சை எடுப்பதும் என்கின்ற அதே கரும யோகத்தோடு இங்கும் அமைதியாக நடந்தார். இது எந்த மனிதனுக்கும் இந்த உலகில் இப்போது கிட்டாத அரும் பாக்கியம் என்பது சுந்தரனுக்கு விளங்கியது. தன்னோடு பிறந்தவன் பற்றி தனது தாய் அரைகுறையாகச் சொன்னதிற்கான விளக்கத்தை மட்டுமாவது புத்தரிடம் கேட்க வேண்டும் என்கின்ற ஆவல் அவனிடம் பொங்கியது. அவனால் அதற்கு மேல் நடக்க முடியவில்லை. அவன் ஓடினான். என்றும் ஓடாத வேகத்தில் இன்று வெறி பிடித்த குதிரை ஓடியது போன்று அவரை நோக்கி ஓடினான்.

சுந்தரன் ஓடி வருவதைப் பார்த்த புத்தர் ஒரு மரத்தின் கீழ் அவனுக்கா ஒதுங்கிக் காத்து நின்றார். சுந்தரன் வேகமாக ஓடி அவரின் முன்பு வந்து நின்று மூச்சு வாங்க முடியாது வாங்கினான். புத்தருக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. தனது பிச்சை ஓட்டில் இருந்து எதையோ அள்ளி அவன் மீது தெளித்தார். அவன் மூச்சு வாங்கல் நின்றது. அவனுள் என்றும் இல்லாத அமைதியும், சாந்தமும் குடி ஏறியது.

அதன் பின்பு புத்தர் அவனைப் பார்த்து, ‘உன்னோடு நான் இருப்பதை விளங்கிக் கொள்ளாது வாழ்ந்து வந்த நீ இன்று மட்டும் எதற்காக இப்படி என்னை நோக்கி ஓடிவந்தாய்? உனக்கு என்ன வேண்டும்? ‘ என்று கேட்டார்.

‘என்னோடு நீங்கள் இருந்தீர்களா? எனக்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பது சற்றும் விளங்கவில்லை. நான் அம்மா சொல்லியதையே விளங்கிக் கொள்ள முடியாத மூடன். நீங்கள் சொல்வதை எப்படி விளங்கிக் கொள்ளப் போகிறேன்? எனக்கு நீங்கள் என்னோடு இருப்பதாய் ஒரு போதும் தோன்றியதே இல்லை. என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? தயவு செய்து விளக்கமாகக் கூறுங்கள்.’

‘நான் தண்டிக்கவோ, மன்னிக்கவோ விரும்பாத மனிதன் ஆகியவன். ஆசை துறந்து, காவி தரித்து, அன்னம் பிச்சை கேட்பவன். நான் மனிதன் என்றேன். கடவுள் இல்லை என்றேன். என்னைப் போன்ற நிலையை நீங்களும் அடையலாம் என்றேன். அதை எல்லாம் புறக்கணித்து விட்டு மனிதர்கள் அதற்கு எதிராக இப்போது வெறியோடு செயற்படுகிறார்கள். என்னைப் பூசிப்பதாய் மிகவும் மோசமாய் இம்சிக்கிறார்கள். என்றாலும் எனக்கு இதில் எதுவும் இல்லை. அதையும் தாண்டியே நான். நீ புத்தன் ஆவதும் வெறியன் ஆவதும் என்னால் அல்ல… எவராலும் அல்ல… உன்னால் மட்டுமே. சரி உன்னிடம் வருகிறேன். நீ எதற்காக என்னை நோக்கி ஓடி வந்தாய்? நாங்கள் நடந்து கொண்டே கதைக்கலாம். இல்லாவிட்டால் என்னைச் சிலை என்று இங்கும் தொந்தரவு செய்யத் தொடங்கி விடுவார்கள் .’ என்றார் புத்தர். பின்பு சுந்தரனை ஒரு முறை பார்த்துவிட்டு அவர் நடக்கத் தொடங்கினார். அவரோடு சுந்தரனும் நடந்தான். அப்படி நடந்து போகும் போது அவர் மீண்டும்,

‘நீ ஏதோ என்னிடம் கேட்க வந்தாய் அல்லவா?’ என்றார்.

‘உண்மையே குருவே. உங்களை எனக்குக் குருவே என்று அழைக்கத் தோன்றுகிறது. நான் உங்களை அப்படி அழைக்கலாமா? உங்களை இந்த நாட்டில் பார்த்ததே அதிசயம். அதைவிட நீங்கள் இந்தக் காட்டில் வருவது இன்னும் அதிசயம். எதற்காக குருவே உங்கள் இந்த யாத்திரை இங்கே நடக்கிறது? எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். கேட்கலாமா? அதற்கு உங்களின் அனுமதி உண்டா? ‘

‘என்னைத் தேடும் ஒருவன் இங்கே இருப்பதாக எனக்குத் தோன்றியது. கால்கள் அதற்காகப் பயணித்தன. உன்னை உனக்குக் காட்டுவது என்னுடைய பணி. நீ உன் வினாவைக் கேள்.’ என்றார் புத்தர்.

‘நான் கடவுள் பற்றி எல்லாம் கதைக்க விரும்பவில்லை. நீங்கள் அதற்குப் பதில் சொல்ல மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். அதைவிட என்னிடம் என் அம்மா சொன்ன விடையம் ஒன்று இருக்கிறது. என்னைக் குடைகிறது. அது எனக்கு இன்றுவரை முழுமையாக விளங்கவில்லை. அதற்கு நீங்கள் தயவு செய்து விளக்கம் தரவேண்டும்.’ என்றான் சுந்தரன்.

‘உன் அம்மா உன்னிடம் என்ன சொன்னாள்?’

‘என் அம்மா என்னிடம் நீ கர்வம் கொள்ளாதே, கோவம் கொள்ளாதே, நீ எதையும் உனக்காச் சேர்க்காதே, நீ யாரையும் துன்பப்படுத்தாதே, உயிர்கள் மேல் கருணை உள்ள மனிதனாக வாழப் பழகிக் கொள். இந்த ஐம்பூதங்களால் ஆன உடம்பு நாளும் கரைந்து அந்த ஐம்பூதங்களிடம் சென்றுவிடும். அந்த நாளில் நீயும் நானும் ஒன்றாவோம் என்றாள். உன்னோடு வாழும் அவன் உன்னை நீ என்று நம்பும் உன்னிடம் இருந்து விடுவித்து, என்னிடம் அழைத்து வருவான் என்றாள். எனக்கு முற்பகுதி விளங்கியது போல இருக்கிறது குருவே. ஆனால் பிற்பகுதி அதுவும் இல்லை. அதற்கான விளக்கத்தைத் தயவு கூர்ந்து நீங்கள் எனக்குத் தருவீர்களா? ‘

‘அஞ்சாதே சுந்தரா. அது ஐந்து அல்ல நான்கு. நிச்சயம் நான் உன் கேள்விக்கான விளக்கத்தை உனக்குத் தருகிறேன். அதற்கு முன்பு நீ சிலவற்றை அறிந்து கொள்ள வேண்டும். பூமியில் மனிதன் பிறப்பது எதற்கு என்று விளங்கியதா சுந்தரா? உண்டு, புணர்ந்து, உறங்கிக் கோடான கோடி ஜந்துக்கள் போல மாண்டு போவதற்கு என்று எண்ணுகிறாயா சுந்தரா? அதில் இருந்து விடுபட வேண்டும் என்று உனக்குத் தோன்றியதா? இந்த மனிதர்கள் எல்லாம் எதற்கு அதிகம் பயம் கொள்கிறார் என்பது தெரியுமா? உன்னை நீ உன்னுள் எப்போதாவது தேடியது உண்டா? ‘

‘ஐயோ குருவே… நான் ஒரு முழு மூடன். நான் எதற்குப் பிறந்தேன் என்பதே விளங்காது இந்த உலகில் அதற்குப் பாரமாக, மிருகம் போல், வினைப் பயனால் வாழ்கிறேன் என்பதுதான் அரிதாரம் பூசாத எனது உண்மை நிலை. அன்னை சொன்னதுகூட எனக்கு விளங்கவில்லை. நான் மூடனாய் பிறந்தது கரும வினைப் பயனாக இருக்கலாம். என்னைப் போன்று ஞானத்தின் ஒரு கீற்றுக்கூடப் படமுடியாத மூடர்களே இந்த உலகத்தில் கோடான கோடி பேர். அதைவிடப் புத்திசாலிகள் என்று தங்களை நினைத்துக் கொள்ளும் மூடர்கள் பல கோடி. மூடனாய் இருப்பது எனக்கு அழிக்கப்பட்ட சாபம். சாபம் நீங்குமா? அல்லது சாபமே ஒரு வரமா? நான் மூடன் என்றாலும் சிலவற்றை ஆவது அறிந்து கொள்ள விரும்புகிறேன். அது என் தாய் சொன்னதில் இருந்து தொடங்க வேண்டும் என்பது என் விருப்பு.’

‘விருப்பு, வெறுப்பு என்பதுகூட நீ அறிய முயல்வதற்குத் தடையாக இருக்கலாம் சுந்தரா. அந்த நிலையை விட்டு நீ மேலே வா. அப்போது இந்த உலகத்தின் நிலையாமையும், உயிரினங்களின் அன்றாட ஜீவகூத்தும் உனக்கு விளங்கும். அது விளங்கும் போது உன் அன்னை சொன்னதும் என்ன என்பதும் விளங்கும்.’

‘ஆசையை விட்டு, பற்றை அறுத்து நானும் மனிதனாக வேண்டும் என்றுதான் முயற்சிக்கிறேன். இருந்தும் என்னால் அது முடியவில்லை குருவே. நான் மனதிடம் மாட்டிக் கொண்ட மனித மிருகம் குருவே. எனக்கும் உய்வு உண்டா? அதனோடு அன்னை தந்துவிட்டுப் போன கேள்விகள் என்றும் என் மனதில் உயிரோடு தொடர்ந்து வதைக்கிறது. இறப்பிற்கு முன்பாவது எனக்கு அதற்கு விடை கிடைக்குமா குருவே? கிடைக்க வேண்டும். அதுவே எனது ஞான தரிசனத்தின் திறவுகோல் இல்லையா? இனிப் பிறப்பு இல்லை என்கின்ற மறுபிறப்பின் மறுதலிப்பு இல்லையா? ‘

புத்தர் சுந்தரனைப் பார்த்து கனிவாகப் புன்னகைத்தார். பின்பு அவனைப் நோக்கி,

‘நீ இறக்க வில்லையா? நீ ஜீவிக்க வில்லையா?’ என்று கேட்டார்.

‘விளங்கவில்லை குருவே. இறந்தால் ஏது ஜீவிதம்? ஜீவித்தால் ஏது இறப்பு?’

‘நன்றாக யோசித்துப் பார். ஒவ்வொரு கணமும் என்ன நடக்கிறது? நித்தமும் அது புரியாத வேகத்தில் உன் மீதும், ஒவ்வொரு உயிர்கள் மீதும்… இதை நீ விளங்கிக் கொள்ளும் போது உன் அன்னை சொன்னது உனக்கு விளங்கும். அது விளங்கும் போது நீ அன்னையிடம் போவதில் இருந்து விலகி, உனக்கான நிரந்தரப் பாதையை மூடி மறைத்து மண்டிக் கிடக்கும் புதர்களை வெட்டிச் சாய்த்து, அதில் உறுதியோடு பிரபஞ்சமே பாதையாகப் பயணிப்பாய். உன்னை நீ உன்னுள் தேடுவாய். அதிலே உன்னை நீ கண்டு கொள்வாய்.’ என்றார் புத்தர்.

பின்பு புத்தர் நடப்பதை நிறுத்தி ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டார். மேற்கொண்டு பேசாதே போ என்று சுந்தரனுக்கு கையால் சைகை காட்டினார். சுந்தரன் தயக்கத்தோடு மேற்கொண்டு நடந்தான். அவனுக்கு அன்னை சொன்னது விளங்கத் தொடங்கியது.

– செப்ரெம்பர் 7, 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *