கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,873 
 
 

தொலைவில் தெரிந்தது புதைமேடு. அதன் நாற்புறங்களிலும் வயற்காட்டில், பச்சைப் பசேலென்று நெற்பயிர் வளர்ந்திருந்தது. தங்களுக்கு நடுவே ஒரு கோரமான நிகழ்வு நெடுங்காலமாக நடந்து கொண்டிருப்பது தெரியாதது போல், நீரில் நின்று, காற்றில் தலை ஆட்டிக் கொண்டிருந்தன கதிர்கள்.
காற்று வீசும் திசையில் அவை, உடம்பை வளைத்து, தலையை சாய்த்துக் கொள்வதும், காற்று நின்றதும், மறுபடியும் நின்ற இடத்திலேயே ஆடாமல், அசையாமல், வளையாமலும் நின்று கொண்டுமிருந்தன.
புதை மேடு!இடுப்பில் மூங்கில் கூடையுடன், புதைமேட்டை நோக்கி, வயல் வரப்பின் மீது நடந்து கொண்டிருந்தாள் மூக்காயி. அவள் இடுப்பில் வைத்திருந்த மூங்கில் கூடையில், ஒரு மண்வெட்டி இருந்தது. அது, தான் செய்யப் போகும் காரியம் தனக்கே பிடிக்காதது போல, கூடையினுள் குப்புறக் கிடந்தது.
முன்புறம் சரிந்து கொண்டிருந்த அடிவயிற்றை ஒரு கையாலும், வலது கால் முட்டியை இன்னொரு கையாலும் பிடித்தபடி, மூக்காயிக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தாள் ராமாத்தா.
“”வெரசா வா ராமாத்தா… இங்ஙனயே புள்ள பொறந்துடப் போகுது!” என்றாள் மூக்காயி.
“”புதைமேடு வரைக்கும் என்னால இப்படி வரமுடியுமான்னு தோணலை மூக்காயி. வயித்துப் பிள்ளை வாசலுக்கு வந்துடுச்சு போலிருக்கு. வலி உயிர் போறது… பனிக்குடம் வேற ஒடைய ஆரம்பிச்சிடிச்சு,” என்றாள் ராமாத்தா அழுதபடி.
“”கொஞ்சம் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு நட… 10 அடி தூரம் தான் இருக்கு. புதைமேட்டுக்கு போயிடலாம்!” என்ற மூக்காயி, திரும்பி வந்து, ராமாத்தாவை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டாள்.
“”வலி தாங்கலியே மூக்காயி,” என்று அழுதபடி, காலை தூக்கி தூக்கி வைத்து, மெதுவாக நடத்தாள் ராமாத்தா.
மூக்காயின் மீது, ராமாத்தா இடுப்பில் கட்டியிருந்த ஏதோ ஒன்று, அவ்வப்போது இடித்தது.
“”ராமாத்தா… இடுப்பிலே என்னடி கட்டியிருக்கே?” என்று கேட்டாள் மூக்காயி.
“”சீசா!” என்றாள் ராமாத்தா.
“”சீசாவா?”
“”ஆமாம் மூக்காயி!”
“”அதை ஏன் இடுப்புல கட்டியிருக்கே?”
“”குடிக்க!”
“”பிரசவிக்கப் போற நேரத்துலே என்ன குடிக்கப் போறே?” என்று கேட்ட மூக்காயி, சீசாவினுள் என்ன இருக்கிறதென்று பார்த்தாள்.
பச்சை இலைகளை அரைத்து எடுத்த சாறு போலிருந்தது; பச்சை நிறம். சீசா அப்படி, இப்படி ஆடும்போது, அதிலுள்ள பச்சை திரவம், மேலும் கீழுமாக போய் வந்தது. சீசாவிலுள்ள அது வெளியே கொட்டி விடாமலிருக்க, மளிகை கடையில், சாமான்களை பொதிந்து கொடுக்கும் ஒரு காகிதத்தை சுருட்டி, சீசாவின் வாய் அடைக்கப்பட்டிருந்தது.
“”இதென்னடி ராமாத்தா… புதுசா இருக்கு! இதுவரை நானும், பல தடவை இந்த புதை மேட்டுக்கு வந்திருக்கேன். எவளும், சீசால எதுவும் கொண்டாந்தது இல்லையேடி. நீ கொணர்ந்தது புதுசா இருக்கே… குடிக்கன்னு சொன்னீயே… பிரசவவலி அதிகமா இருந்தா குடிக்கவா? அப்போ வலி தெரியாம இருக்கிறதுக்கா?” என்று கேட்டாள் மூக்காயி.
“”ஆமாம் மூக்காயி…” என்றாள் ராமாத்தா. தாங்க முடியாத வலியால் முகத்தை சுழித்து.
“”இப்ப உயிர் போற மாதிரி வலிக்குதுல்ல உனக்கு… அதை, குடிக்க வேண்டியது தானே?”
“”பிரசவத்துக்கு இன்னும் கொஞ்சம் நேரமாகும் மூக்காயி. பிள்ளை வெளியில வர்றப்போ, தாள முடியாத வலி உண்டாகும்ல, அப்போ குடிக்கறேன்,” என்ற ராமாத்தா, புதைமேடு இன்னும் எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்று கண்களை சுருக்கி பார்த்தாள்.
சில அடி தூரம் தான் இருந்தது.
“”யாருடி ராமாத்தா, இந்த பச்சை இலையை அரைச்சு கொடுத்தது?” என்று கேட்டாள் மூக்காயி.
“”நானே தான்,” என்றாள் ராமாத்தா.
“”இதுக்கு முந்தி, மூணு பிரசவத்துக்கு இந்த புதை மேட்டுக்கு உன் கூட வந்திருக்கேன். ஒரு வாட்டி கூட, நீ, இது மாதிரி சீசாவுல கொண்டாந்ததில்லையே ராமாத்தா?”
“”இப்பத்தான் கொம்பங்குளத்தா சொன்னா… ஐயோ… வலி தாங்கலியே…” என்றபடி கீழே விழப் போன ராமாத்தாவை, ஒரு கையால் பலமாக பிடித்தபடி, “”வந்தாச்சுடி புதைமேடு… மூச்சை லேசா விட்டு நட…” என்றாள் மூக்காயி.
புதைமேடு வந்து விட்டது.
புதைமேடு வயல்களுக்கு நடுவே, நாலாபுறமும் கருவேல முட்கள் நிறைந்த மரங்களே இருந்தன. மரங்களின் அடர்த்தியில், சூரிய கிரணங்கள் கூட தரையில், “பளீ’ரென விழ முடியாது; சிறு சிறு புள்ளிகளாக விழுந்திருந்தன. எதுவுமே விளையாத அந்த புதைமேடு, செம்மண் நிறத்திலிருந்தது. வயலை விட, மூன்று அடி உயரத்திலிருந்தது. அதன் மீது ஏறிச் செல்ல, ஒரு இடம் சற்று சரிவாக இருந்தது. அதில் கால் வைத்து, சறுக்கி விழுந்து விடாதிருக்க, ஒரு அடிக்கு ஒரு வேல் கம்பு பலமாக ஊன்றப்பட்டிருந்தது.
முதலில் அதில் ஏறத் துவங்கிய மூக்காயி, பின்னால் வரும் ராமாத்தாவின் கையை பலமாக பற்றி, “”ஏறு ராமாத்தா… புதை மேட்டுக்கு வந்துட்டோம். மேலே ஏறிட்டா, நடு இடத்துக்கு போயிடலாம்!” என்றாள்.
அவள் கையை ஒரு கையில் பிடித்து, மறு கையால் வேல் கம்பை பிடித்து, வயிற்று சுமையோடு, மெதுவாக புதை மேட்டில் ஏறினாள் ராமாத்தா. ஏறியதும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, புதைமேட்டை ஒரு நோட்டம் விட்டாள்.
புதைமேடு நீளம் அதிகமாகவும், அகலம் குறைவாகவும் இருந்தது. ஆங்காங்கே, மனிதர்களால் மட்டுமே தூக்கி வைக்கக்கூடிய கனமுள்ள கற்கள் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தாள் ராமாத்தா.
அவ்வளவு தான். “ஓ…’வென அழ ஆரம்பித்து விட்டாள்; அந்த ஒவ்வொரு கல்லின் அடியிலும், ஒரு சடலம் புதைக்கப்பட்டு இருக்கிறது.
ஆம்… பெண் குழந்தையின் சடலம்; ஒன்றல்ல, இரண்டல்ல… நிறைய! அதில், மூன்று பெண் குழந்தையின் சடலம், ராமாத்தாவுடையது. அவள் பெற்று, கொன்று, புதைத்தது.
நாயோ, நரியோ வந்து, அந்த இடத்தை கால்களால் பரபரவென தோண்டி, புதைக்கப்பட்ட சடலத்தை தின்று விடக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு சவக்குழியின் மீதும், பெற்றவளே, பலமற்ற உடம்பில், பலத்தை திரட்டி, தூக்கி வந்து வைத்த கற்கள்.
“”அழாதே ராசாத்தி… இந்த வாட்டி, நீ பெத்த குழந்தையை, நீயே குழிக்குள்ள போட்டு, அது மேல மண்ணை அள்ளிப் போட்டு, அதை உயிரோட சாகடிக்கிற நிலைமை உனக்கு ஏற்படாது. ஆம்பிளப் பிள்ளை தான் பொறக்கப் போவுது. ஆம்பிளப் பிள்ளையை கையில் எடுத்துக்கிட்டு நீ வாரதை, நம்ம கிராமத்து சனங்க எல்லாம், மேளங்கொட்டி, தாரை, தம்பட்டம் அடிச்சு வரவேற்க போறாங்க. உன் புருஷன் முனியன், கண்மண் தெரியாம, எப்படி ஆனந்தக் கூத்தாடப் போறான் பாரு!” என்று சொல்லியபடி, ராமாத்தாவை தரையில் உட்கார வைத்தாள் மூக்காயி. பிறகு, தலையையும், முதுகையும் தாங்கி, அவளை மல்லாக்கப் படுக்க வைத்தாள். இடுப்புச் சீலையை சுருட்டி, வயிற்றின் மீது போட்டாள். சீசாவை ஓரமாக வைத்தாள்.
பிறகு, அருகிலேயே எதற்கும் இருக்கட்டும் என்பது போல, கூடையிலிருந்த மண்வெட்டியை எடுத்து, பிறந்த குழந்தையை புதைக்கும் அளவுக்கு, குழி தோண்ட ஆரம்பித்தாள்; அப்போது அவள் மனமோ, கண்களோ கலங்கவில்லை. ஊரின் கட்டுப்பாட்டிற்கு அவள் இணங்கியிருந்தாள்.
ஊரில் எந்தப் பெண்ணாவது கர்ப்பமுற்றால், பிரசவ காலத்தில், இடுப்பில் கூடையும், மண்வெட்டியுமாக அந்த பெண்ணை இந்த புதைமேட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் மூக்காயி; வேறு எவரும் அங்கே செல்லக் கூடாது.
அந்தக் பெண்ணை புதைமேட்டிற்கு அழைத்துச் சென்று, பிரசவம் நடக்கும் விதத்தில் அந்தப் பெண்ணை இருத்திவிட்டு, பிறப்பது பெண் குழந்தையாக இருந்தால், அதை உடனே சவக்குழியில் போட்டு, மண்ணை நிரப்பி, மூச்சு முட்ட முட்ட அதை சாகடிக்க, இயந்திர கதியில் சவக்குழி தோண்ட ஆரம்பித்து விடுவாள் மூக்காயி.
பிறந்த பெண் குழந்தையை, கள்ளிப்பால் கொடுத்தோ, வாயில் நெல்மணியைப் போட்டோ, பாலை விட்டோ கொல்வதில்லை; அந்த ஊரில் பிறந்ததும், அது, கண் திறந்து உலகத்தை பார்ப்பதற்கு முன்பே, உயிருடனேயே குழியில் புதைத்து கொன்று விட வேண்டும். ஊரில், எழுதப்படாத சட்டம் இது.
இந்த கொடுமைக்கு உடன்படாமல், “எனக்கு கல்யாணமே வேண்டாம்…’ என்று, அழுது, கதறி சொல்லிப் பார்த்தாள் ராமாத்தா.
“உனக்கு பொட்டைக் குழந்தை தான் பொறக்கும்ன்னு என்ன நிச்சயம் ராமாத்தா… ஆம்பிளப் பிள்ளை கூட பொறக்கலாமில்ல!’ என்று, அவள் அப்பா ஆதிசிவம், முனியனுக்கு கட்டி வைத்தான்; கட்டி வைத்த மறு மாதமே, கர்ப்பிணியானாள் ராமாத்தா.
தனக்கு பெண் குழந்தை பிறந்து விடக் கூடாது என்று, உலகி<<<லுள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டினாள். பெண் குழந்தை பிறந்து விட்டால், அதை கொல்லக் கூடாதென்று கணவனிடமும், அவன் குடும்பத்தாரிடமும் போராடினாள்.
“பொட்டைப் பிள்ளை பொறந்தா, அதை கட்டிக் கொடுக்க, பணம் காசில்ல, சீர் செனத்தி செய்ய வக்கில்லை. அதனால, பெண் குழந்தை பிறந்ததும், அது பிறந்த புதைமேட்டுலேயே சவக்குழி தோண்டி, உயிரோடு புதைச்சுடணும்!’ என்று, ஆவேசம் வந்தவனைப் போல கூறினான் முனியன்.
உடனே, வீட்டில் உள்ளவர்களும், ஊரி<ல் உள்ளவர்களும், அவனுக்கு, “ஆமாம் சாமி’ போட்டனர்.
“சரி… உன் அம்மா பொம்பளை இல்லையா, உன் பொண்டாட்டி பொம்பளை இல்லையா? இவங்கெல்லாம் பொம்பளையா இல்லாம இருந்தா, <உனக்கு சுகம் கொடுக்க பொண்டாட்டி கிடைச்சிருப்பாளா…’ என்றெல்லாம், கேள்வி மேல் கேள்வி கேட்டுப் போராடினாள் ராமாத்தா; பலனில்லை.
பெண் குழந்தை பிறந்தால், பிறந்த இடத்திலேயே சவக்குழியில் போட்டு புதைத்து, கொன்று விட வேண்டும் பெற்றவள் என்பதில், ஊரே ஒரு அணியில் நின்றது. இதில் பெண்களும், வாய் திறந்து பேச சக்தியில்லாமல், ஊர் வளமை, கட்டுப்பாடு என்றிருந்தது கொடுமை.
மூன்று முறை கர்ப்பமானாள் ராமாத்தா. மூன்று முறையும் பெண் குழந்தையே பிறந்தது. ஒவ்வொரு பிரசவத்துக்கும், இதே மூக்காயி தான், ராமாத்தாவை புதை மேட்டுக்கு அழைத்துச் சென்றாள். மூன்றையும் புதைமேட்டில் புதைத்து, மண்ணைப் போட்டு மூடியவளும் மூக்காயி தான்.
“வீல், வீல்…’ என்று குழந்தை அழும் குரல் கேட்டது.
உடம்பில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டபடி, ராமாத்தாவிடம் வந்தாள் மூக்காயி.
அப்போது மலரத் துவங்க ஆரம்பித்திருக்கும் ரோஜாவைப் போல், செக்கச் செவேலென்று ஒரு குழந்தை பிறந்திருந்தது ராமாத்தாவுக்கு.
என்ன குழந்தை என்று பார்த்தாள் மூக்காயி; ஆண் குழந்தை!
“”ராமாத்தா… உன் சனி தீர்ந்ததடி… பெண் குழந்தை பிறந்திருந்தா, அதை, நீ கொன்றிருக்கலாம்… இப்போ ஆம்பிளப் பிள்ளை பிறந்திருக்குடி. உன்ன ஊரே கொண்டாடப் போகுது!” என்று, குதூகலத்துடன் சொன்னாள் மூக்காயி.
பிறந்த ஆண் குழந்தையையும், புதைமேட்டில் பெண் குழந்தைகளையும் புதைத்திருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கற்களையும், மாறி மாறிப் பார்த்தாள் ராமாத்தா.
இந்த ஆண் குழந்தை பெரிதானதும், அவனுக்கு கல்யாணம் நடக்கும்; மனைவி வருவாள். அவளும், பெண் குழந்தைகளை பெற்றெடுப்பாள். அந்த பெண் குழந்தைகளை, புதைமேட்டிலேயே கொன்று, புதைத்து விடுமாறு கட்டளை இடுவான் இவன்; வீடும், ஊரும் இதை ஆமோதிக்கும். அதற்கு பிறகு, இந்த ஆண் குழந்தையால், பல பெண் குழந்தைகள் பிறக்கலாம். அவை ஒவ்வொன்றும், பிறந்த உடனேயே புதைமேட்டில் புதைந்து போகும்.
ஊர் முழுவதும், இந்த அநியாயத்தை, அக்கிரமத்தை நடக்க முடியாதபடி தன்னால் செய்துவிட முடியாது. சிறிதளவாவது இந்த கொடுமையை, ஒரு ஆண் குழந்தையின் மூலம் தான் நிறுத்திவிட முடியும்; நிறுத்தியாக வேண்டும்.
எழுந்து, கையில் குழந்தையை எடுத்தாள் ராமாத்தா. அதன் பிஞ்சு முகத்தை பார்த்ததும், துக்கம் பீறிட்டு எழுந்தது அவளிடம். கண்கள் கண்ணீரை பெருக்கின.
“”சந்தோஷமாடி ராமாத்தா!” என்று கேட்டாள் மூக்காயி.
“”ஆமாம் மூக்காயி!” என்று சொல்லி, பிஞ்சு குழந்தையை மார்போடு அணைத்து முத்தமிட்டாள்.
இடது கையால் சீசாவை எடுத்து, அதை மூடியிருந்த காகிதச் சுருளை எடுத்து தூர எறிந்து, சீசாவை தலைகுப்புற கவிழ்த்தி, அதிலுள்ள பச்சை திரவத்தை, “மடக், மடக்…’கென்று குடித்தாள் ராமாத்தா.
கண் இமைக்கும் நேரத்தில், பச்சைக் குழந்தையை புதைக் குழியில் போட்டு, மண்வெட்டியால் மண்ணை அள்ளி, அது நிரம்பும் போது, சுருண்டு கீழே விழுந்தாள்.
நடப்பது என்னவென்பதை புரிந்து கொள்ளக் கூட முடியாமல், சீசாவை எடுத்து முகர்ந்து பார்த்தாள் மூக்காயி.
அரளிக்காயை அரைத்து எடுத்து வந்திருக்கிறாள் ராமாத்தா. ஆண் குழந்தை பிறந்தால், இப்படி செய்ய வேண்டும் என்ற முடிவோடு.
“ஐயோ, ஐயோ… ராமாத்தா மோசம் செஞ்சுட்டாளே…’ என்று வாயிலும், வயிற்றிலும் அடித்து, ஊரை நோக்கி ஓடினாள் மூக்காயி.
இதுவரை, பிறந்த பெண் குழந்தைகளை தன்னுள் அடக்கம் செய்து கொண்டிருந்த புதைமேடு, ஒரு ஆண் குழந்தையையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, ஒரு தாயையும் உள்வாங்கக் காத்திருந்தது.

– மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *