புது யுகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 3,933 
 
 

(1979 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுபஹ் நேரம் முடிய கொஞ்ச நேரமே இருந்தது. திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களை ஓதி முடித்த நான் யோக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். உடம்பு, பயிற்சியில் ஈடுபட்ட போதிலும் உள்ளம் நேற்றைய சம்வம் ஒன்றைச் சுற்றிச் சுழன்று கொண்டே இருந்தது.

சே…என்ன உலகம்…? என்ன சமூகம்…? என்ன வாழ்வு…? என் நினைவலைகள் பின் நோக்கி தள்ளப்படுகின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை….. விடுமுறை நாள்…. வீட்டுத் தேவைகளை நிறைவு செய்ய உணவுச் சாமான்கள் வாங்க வேண்டிய நாள்…பக்கத்து வீட்டு நண்பர் பக்கீர் நானாவுடன் சந்தைக்குக் கிளம்பினேன்.

என்னதான் மனிதன் ஓடி ஓடித் தேடினாலும் ஒரு சாண் வயிற்றை நிரப்பும் வழிதான் முக்கியம் என்பதை சந்தையில் கூடும் ஜன நெரிசல் சொல்லாமலே சொல்கிறது. அந்த ஜனக்கூட்டத்தில் நானும் ஒருவனாக நண்பருடன் செல்கிறேன்.

“அல ருபியலய், கோவா பனஹய்… லாபய்…. எண்ட … எண்ட…வாங்கோ…வாங்கோ…அலுத் படு..புதிய சாமான்” என்ற பல வித சப்தங்கள்…

இடையில் வார்த்தைகளை எழுத்தில் வடிக்க முடியாது ஒரு குரல். திரும்பிப் பார்க்கின்றேன். இறைச்சிக் கடை முதலாளி ஒரு பையனின் தலையில் ஓங்கிக் குட்டுவதைக் கண்டேன். பாவம்…கொஞ்சம் நெருங்கிப் பார்த்தேன்.

அட ஆண்டவனே…எனக்கு தூக்கிவாரிப் போடுகிறது. அது…எங்கள் பாடசாலையில் நான்காம் வகுப்பில் படிக்கும் மாணவன் மன்சூர். முதலாளி குட்டிய இடத்தில் தடவிக் கொண்டிருந்தான். கண்கள் கலங்கியிருந்தன.

நான் முதலாளியை நெருங்கி என்ன செய்தி என மெதுவாகக் கேட்டேன். “பாருங்க மாஸ்டர்…கஷ்டமென்று உதவி செஞ்சா எங்களுக்கு நஷ்டத்தைத்தான் தாராங்க…. இந்தப் பொடியன்ட வாப்பா மௌத்தாகி ஒரு வருஷம் இல்ல; உம்மாகாரி பொடியன வெச்சி சோறுபோட ஏலா; வேலையப் பழக்கி கடையில வெச்சிக் கொள்ளுங்கோ எண்டதால….. பாவம் என்று கடையில வெச்சிக் கொண்ட; ஒரு மாதத்துக்கு மேலாக கடையில் நிற்கிறான். இன்னும் வெட்டிக் கொடுக்கிற இறைச்சியை இலையில் சுத்த ஏலா…சே…அதுக்கென வேலை முடிச்ச ஒடனே சம்பளத்த ஊட்டுக்கு எடுத்துக் கொண்டு ஓட ஏலும் சனியன்…” இன்னொரு அடியை மண்டையிலே போட்டார்.

எனது உள்ளத்தில் பல முட்கள் ஒன்று சேர்ந்து குத்துவது போல இருந்தன…திரும்பிப் பார்க்கின்றேன். மீன் கடை, மரக்கறிக் கடை, சில்லறைக் கடை… எல்லாக் கடைகளிலும் பாடசாலையில் படிக்க வேண்டிய சின்னஞ் சிறார்கள் முதல், பெரிய மாணவர்கள் வரை பல பேர்கள் வியாபாரஞ் செய்து கொண்டிருந்தனர்.

“கருமம்…படிக்க வேண்டிய காலத்தில் வியாபாரம். தாய் தந்தையருக்கு உணர்ச்சியில்லை, இவர்களின் எதிர்காலம் இங்கிருந்து எங்கு கொண்டுபோய் முடியுமோ. யா அல்லாஹ்!” இதயக் குமுறலை உள்ளே அடக்கிக் கொண்டே அங்கலாயத்தேன்…

“உண்மைதான்… மாஸ்டர்…. என்றாலும் இவர்களின் பிரச்சினை உங்களுக்குப் புரியவில்லை; இவர்களின் உழைப்பு அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றியது. நீங்கள் சொல்வது போல இவர்கள் பாடசாலை சென்றால் அவர்கள் குடும்பம் எப்படி வாழ்வது….? அது சரி…. பாடசாலை செல்வதென்றால் பொருள் இல்லாத இவர்கள் எப்படி படிப்பார்கள்… வறுமை வறுமை…. இதை ஒழிக்க முடியாதா! வழியில்லாத போதனைகள் எதற்காக…? நண்பரின் கேள்வி என் சிந்தனையில் இன்றும் சுற்றிச் சுழன்று கொண்டேயிருக்கிறது.

பாடசாலை செல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. காலை ஆகாரத்தை முடித்துக் கொண்ட நான் பாடசாலை போக ஆயத்தமாகிறேன்…

‘எமது ஊரில் பெரிய பெரிய பணக்காரர்கள் பலர் இருக்கிறார்களே…நோன்பு காலங்களில் ஸக்காத் ஸதகா – என சில்லறையாகக் கொடுக்கிறார்கள்…… குறைந்தது ஐம்பது ஏழைக் குமர்களின் திருமணத்தை வரிசையாக்கக் கூடிய பணத்தில் தன் ஒரு பிள்ளையின் கலியாணத்தை அலங்காரமாக எடுத்து பணத்தை விரயம் செய்கின்றார்கள். ஏன்? குடும்ப சகிதம் பலமுறை மக்கா யாத்திரை செல்கின்றனர்…… இவர்கள் இப்படி அளவுக்கு அதிகம் வீணாக செலவு செய்யும் தொகையில் சிறிது….. தருமத்தின் பெயரில், அழியும் எம் சமூகத்தின் அங்கமான இப்பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி செலவு செய்தால் குறைந்தா போகும்? என சிந்தனைக் குதிரையை தட்டிய வண்ணம் பாடசாலை செல்கிறேன்.

“சேர்…”

சிந்தனை ஓட்டம் தடைப்படுகிறது. திரும்பிப் பார்க்கிறேன். என் மாணவன் மஹ்ரூப்…ஆளை அடையாளம் காண சிறிது நேரம் சென்றது. சென்ற வருடம் எட்டாம் வகுப்புப் படித்தவன்… வகுப்பிலே திறமையான மாணவன்… இன்று பெரிய ஆளாக என் முன்னே நிற்கிறான்…

ரெங்ளர் சேட், கிரிளின் பெல், அடி உயர்ந்த செருப்பு, புத்தம் புதிய கண்களை கவரும் சோப்பர் சைக்கிளில் நிற்கும் அவனை ஒரு முறை பார்த்த நான் என் உடைகளையும் பார்த்துக் கொள்கிறேன்.

“என்னடா அப்பா… ஆளே மாறிவிட்டாய். எப்படி உன் சுகசெய்தி?” என குசலம் விசாரித்தேன். படிப்பின் அவசியத்தையும், மாணவப் பருவத்தில் படிப்பதால் எதிர்கால நன்மைகளையும், படிப்பில் அவனுக்கு இருந்த கெட்டித்தனத்தையும் நினைவுபடுத்தி, பயிர் செய்ய வேண்டிய காலத்தில் பயிர் செய்யாது பாழ்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் பல புத்திகளைக் கூறி அங்கலாய்த்துக் கொள்கிறேன்….. என் பிரசங்கத்தை இன்முகத்துடன் செவி சாய்த்த அவன் போய் வருகிறேன் சேர்” என பைசிகிளில் ஏறியவன்; “சேர்” என்றான்.

திரும்பிப் பார்க்கிறேன்..

“சேர்…. நீங்க ஒரு மாதத்திற்கு எத்தனை ரூபா சம்பளம் வாங்குகிறீர்கள்…தயங்கி தயங்கி கேட்ட அவன் “ஒரு ஐநூறு; அறுநூறு ருபா வாங்குவீர்கள் தானே…சேர் நான் இப்பொழுது செய்யும் மாணிக்கக்கல் தொழிலால், ஒரு சில மணி நேரங்களில் இதைவிட பல மடங்கு கூடுதலாக பணம் சம்பாதிக்கிறேன்” என சடுதியாகக் கூறிய அவன் சிட்டாகப் பைசிகிளில் பறக்கிறான்…

அவன் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் என் நீண்ட நேர சிந்தனையைக் கலைக்கின்றன. தடுமாறுகின்றேன்.. என் சிந்தனை ஓட்டம் திசை திரும்புகிறது…புது யுகமொன்றினைக் காண அது விரைகிறது.

– மாணவமுரசு – 1979. ஜனவரி, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *