(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘டிரைவர்… இங்கேதான் இறங்கணும்… காரை நிறுத்து’ என்று ஓவர்ஸியர் கிருஷ்ணன் சொன்னதும் டாக்ஸி நின்றது.
இரு பக்கங்களிலும் பச்சைப் பசேலென்றிருந்த நெல் வயல்களிலிருந்து குபீரென்று குளிர்ந்த காற்று காருக்குள் புகுந்தது.
‘ஓய்… கிருஷ்ணன்… இங்கேதான் இறங்கணுமுண்ணு உமக்கு நிச்சயம்தானா?’ என்று சந்திரன் சிரித்தவாறு கேட்டான்.
கிருஷ்ணன் சிறிது ரோஷத்துடன் செக்ஷன் ஆபீஸர் சிவராமனை உற்று நோக்கி விட்டு, ‘நான் இங்கே இதுக்கு முன்னாடி வந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக வர்றேன்… ஆனா… எஸ்.கே.யிடம் வழி கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன்… இங்கே இறங்கி வயல் வரப்பு வழியாகக் கொஞ்சம் நடக்கணும்…’ என்றான் சந்திரனிடம் உறுதியாக.
‘சரி… சரி… எங்களுக்கு யாருக்கும் வழி தெரியாது… உம்ம பின்னாலேயே வாறோம்… எங்களை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கப் போறீரோ, அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்…’ என்றவாறு கதவைத் திறந்துகொண்டு முன் ஸீட்டிலிருந்து சந்திரன் வெளியில் இறங்கியதும், அவன் பக்கத்திலிருந்த ராகவனும் காரிலிருந்து இறங்கினான்.
பின் ஸீட்டில் இடது ஓரத்தில் இருந்த சிவராமன் கதவைத் திறந்து கொண்டு இறங்கியதும், வலது பக்கக் கதவைத் திறந்துகொண்டு கிருஷ்ணனும் மானுவலும் இறங்கினார்கள். அழகாக பேக் செய்யப்பட்டிருந்த டேபிள் ஃபேனை, அதுதான் எஸ்.கே.யின் புது வீடு புகுதலுக்கு அவர்கள் அளித்த அன்பளிப்பு, ராகவன் கையில் எடுத்துக்கொண்டான்.
‘சார்… இப்படித்தான் போகணும்…’ என்று வலப் பக்கத்து வயலின் நடு வழி நெடு நீளத்தில் சென்றுகொண்டிருந்த வரப்பைச் சுட்டிக் காட்டியவாறு சொன்னான், கிருஷ்ணன் ஆபீஸர் என்ற மரியாதையோடு.
‘சார்… எதுக்கும் இப்போதைக்கு கிருஷ்ணனைப் பின்பற்றாமல் வழியில்லை… அவர் மட்டும்தான் இப்போ வழி தெரிஞ்சவர்’ என்று சொல்லி விட்டு சிவராமனின் ஆபீஸ் கீழ்ச் சிப்பந்திகள், சந்திரன், ராகவன், மானுவல் எல்லோரும் ரோட்டின் வலது ஓரத்துக்குச் சென்றார்கள்.
ஒரு ஆளுக்கு மட்டும் மிகவும் சிரமப்பட்டு நடக்கும் அளவுக்குள்ள அகலமே இருந்த அந்த வயல் வரப்பில் முதலில் கிருஷ்ணன் மெல்ல இறங்கி நடக்கத் தொடங்கினான். அவன் பின்னால் சந்திரன், அடுத்து சிவராமன்… அவன் பின்னால் மானுவல்… கடைசியில் ராகவன். இந்த வரிசையில் அவர்கள் வரப்பின்மீது நடக்கத் தொடங்கினார்கள்.
இரு பக்கங்களிலும் கீழே ஆழத்தில் வயல் கிடந்தது. வரப்பில் கால் வைக்கும்போது சேற்றில் கால் புதைந்தது. எனவே, எல்லோரும் பாதையைப் பார்த்தவாறு மிகவும் கவனமாக ஒவ்வொரு அடியும் வைத்து நடந்துகொண்டிருந்தார்கள். ஆனால், சிறிது நேரத்துக்கு யாரும் ஒன்றும் பேசவில்லை.
பதினோரு மணி வெயில் பளீரென்று வீசியும் குளிர்ந்த காற்று காரணமாக சூடு உறைக்கவில்லை.
சிறிது நேரம் நடந்து பழகிய பிறகு சந்திரன் திரும்பிப் பார்க்காமல் பேசினான். ‘கிருஷ்ணா… இந்தச் சுற்று வட்டாரத்தில் ஓரிடத்திலும் பெயருக்குக்கூட ஒரு குடிசை தென்படவில்லை. பிறகு எங்கேதான் நம்ம எஸ்.கே. புது வீடு கட்டியிருக்கிறான்…?’
‘எப்படியோ கட்டி முடிச்சு விட்டான். காலம்பர பால் காய்ச்சும் நடந்து விட்டிருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் நாமும்தான் புதிய வீட்டைப் பார்க்கப் போகிறோமே…’ என்றான் கிருஷ்ணன்.
‘எதுக்கும் எஸ்.கே.யை சம்மதிக்கணும்… புதிய வீட்டைக் கட்டி முடிச்சுட்டானே பாவி… நாமும்தான் என்னவெல்லாமோ பிளான் போடுறோம்… இதுவரை முடியல்லையே…’ என்றான் மானுவல். பின்னாலிருந்து கேட்ட அந்தக் குரலில் இருந்த ஏக்கத்தை இனம் கண்டுகொள்ளமுடிகிறது. எஸ்.கே. பிள்ளை வெறும் ஒரு லைன் மேன், லோன் எடுத்து அவன் புதுவீடு கட்டி முடிச்சு விட்டதைப்போல் ஒரு பஸ்ட் கிரேடு ஓவர்ஸீயர் தன்னால் முடியவில்லையே என்ற மானுவலின் ஏக்கம் நியாயமானதே என்று சிவராமனுக்குத் தோன்றியது.
‘பாவம் ரிட்டயராக எஸ்.கே.க்கு இன்னும் ஆறு மாசம்தான் இருக்கு… அதுக்கிடையில் இப்பவாவது அவனால் வீடு கட்டி முடிக்க முடிஞ்சுதேன்னு சந்தோஷப்படுவோம்’ என்றான் சந்திரன்.
‘வாஸ்தவம்…’ என்று ஆமோதித்தான் சிவராமன். ‘ஆமாம் சார்…’ என்று மானுவலும் சொல்வது கேட்டது.
கிருஷ்ணன் நின்றான். அவனைப் பின் தொடர்ந்த ஏனையோர்களும் நின்றார்கள்.
இப்போது இடது பக்கத்தில் சிறிது தொலைவில் ஒரு தோப்பு உயரத்தில் தென்படுகிறது.
‘சரி, இனி இப்படித் திரும்பி நடக்கணும்’ என்று கூறி, இடப் பக்கத்தில் கீழே ஐந்தடி ஆழத்தில் குறுக்கலாகச் சென்று கொண்டிருந்த வரப்பில் மெல்ல இறங்கினான் கிருஷ்ணன். அவனைத் தொடர்ந்து சந்திரன், சிவராமன், மானுவல் மூவரும் இறங்கினார்கள். பிறகு ராகவன் தன் கையிலிருந்த பரிசுப் பொட்டலத்தைக் கீழே நிற்கும் மானுவலின் கையில் கொடுத்துவிட்டு, மெல்ல இறங்கினான். அவன்
இறங்கியதுதான் தாமதம், அவன் கையில் பொட்டலத்தைக் கொடுத்து விட்டான் மானுவல். இலாகா சர்வீஸில் ராகவன் மானுவலைவிட ஆறு மாசத்துக்கு ஜூனியர்.
பழையபடி நடை தொடர்ந்தது.
‘ஆனாலும் இந்த இடத்தில் வந்து எப்படி எஸ்.கே. வீட்டைக் கட்டி விட்டான். வண்டி, கிண்டி ஒண்ணும் வர முடியாது. செங்கல்லு, மண்ணு, சிமெண்டு எல்லாமே தலை சுமையாகத்தானே இங்கே கொண்டு வந்திருக்கணும்…’ என்று மானுவல் சொன்னபோது மற்றவர்களுக்கும் அது உண்மையாகவே பட்டது. இருந்தும் யாரும் ஒன்றும் பேசவில்லை. எல்லோருக்கும் உஸ் புஸ் என்று மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கவே நேரம் போதவில்லை.
சற்று கூட நடந்ததும், ‘என்ன கிருஷ்ணா இன்னும் ரொம்ப தூரம் நடக்கணுமா?’ என்று கேட்டான் மானுவல். அவனுக்குக் கொஞ்சம் தடிமனான தேகம். எனவே, ஏனைய யாவரையும்விட வியர்வையில் குளித்துக் களைத்துப்போய்க் காணப்பட்டான் அவன்.
‘இல்லை… பக்கத்தில் வந்து விட்டோமே… அதோ தெரியுதே…’ என்று கிருஷ்ணன் சுட்டிக்காட்டிய திசையில் இப்போது மரங்களின் இடையில், மேலே சிவந்த வர்ணம் பூசிய, ஒரு சிறிய புதிய கொல்லம் ஓடு வேய்ந்த வீடு தென்படுகிறது. அதைக் கண்டதும் எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்.
சற்று கூட நடந்தபோது அங்கே ஆட்கள் நடமாடுவது தென்பட்டது.
‘சார்… எஸ்.கே…. அதோ நம்மை வரவேற்க ரெடியா நிற்கிறான் தெரியவில்லையா…’ என்று கேட்டான் கிருஷ்ணன் உற்சாகமாக.
வரப்பிலிருந்து கண்ணை மேலெழுப்பிப் பார்த்தபோது வெள்ளைச் சட்டை, வேட்டி உடுத்தி எஸ்.கே. நிற்பது தெரிகிறது.
‘எஸ்.கே.யின் வழுக்கைத் தலையில் வெயில் பட்டு க்ளையர் அடிக்குது…’ என்று சந்திரன் சொல்ல, ‘ஆமா கண் கூசுது…’ என்று கிருஷ்ணன் ஆமோதிக்க எல்லோரும் சிரித்தார்கள்.
வரப்பு எஸ்.கே.யின் வீடு இருந்த குன்றின் அடிவாரத்தில் போய் முடிந்தது. மேலே படிகள் செதுக்கி விடப்பட்டிருந்தன. சிமெண்ட் போடவில்லை. சாப்பாட்டு பந்தி முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக ஓரத்தில் எச்சில் இலைகள் தென்பட்டன.
அவர்கள் மேலே ஏறிச் சென்றதும், வாய் முழுவதும் பல்லாக எஸ்.கே. கை கூப்பித் தொழுது எல்லோரையும் வரவேற்றான். அவன் நெற்றியில் சந்தனப் பொட்டு பளிச்சென்று மின்னியது. அங்கே நின்றுகொண்டு கீழே பார்த்தபோது அவர்கள் நடந்து வந்த வரப்பும் வயலும் எல்லாம் அழகாகத் தெரிந்தன.
‘வாருங்கோ சார்… இங்கே உட்காரலாம்’ என்று அவர்களை வீட்டின் முன் வராந்தாவுக்கு அழைத்துச் சென்றான் எஸ்.கே.
எல்லோரும் அங்கேபோய், ‘அப்பாடா…’ என்று நாற்காலியில் உட்கார்ந்தார்கள். உடம்புக்குப் பெரிய ஆசுவாசமாக இருந்தது.
ராகவன் மூலையில் கொண்டு வைத்திருந்த பொட்டலத்தில் எஸ்.கே.யின் கண்கள் செல்வதைச் சிவராமன் கவனித்தான். ‘என்ன எஸ்.கே. பால் காய்ச்சு எல்லாம் முடிஞ்சுட்டுது இல்லை…’ என்று கேட்டான் சந்திரன்.
‘ஆமாம் சார்… எட்டரை மணிக்கே முடிஞ்சுட்டுது. ஒரு வழியா இப்பத்தான் சொந்தக்காரங்க எல்லாம் சாப்பாட்டை முடிச்சு விட்டுப் போனாங்க…’ என்றான் எஸ்.கே.
‘சார்… வீட்டைப் பார்க்க வேண்டாமா?’ என்று எஸ்.கே. அழைத்தபோது, ‘எல்லாம் பார்த்துக்குறோம். முதலில் நாங்க எல்லோரும் கொஞ்சம் மூச்சு விடட்டும்’ என்றான் சந்திரன். எல்லோரும் சிரித்தார்கள்.
வீட்டினுள்ளே போய்விட்டு சற்றுக் கழித்து வந்த எஸ்.கே.யின் கூட அவர்கள் எல்லோரும் எழுந்து வீட்டைப் பார்க்கச் சென்றார்கள். வராந்தாவைத் தொட்டு ஒரு சிறிய அறை. அங்கே ஒரு மேஜை கிடந்தது… அதன்மீது சில பாடப் புத்தகங்கள்.
‘இது என் மகனுக்காகப் படிப்பு அறை. அவன் ஃப்ரி டிகிரி வகுப்பில் வாசிக்கிறான்…’ என்று சொல்லும்போது எஸ்.கே.யின் முகத்தில் ஒரு பூரிப்பும் குரலில் பெருமையும் இருந்தன.
பிறகு வராந்தாவுக்குத் திரும்பி வந்து, வீட்டின் நடு அறைக்குச் சென்றார்கள். அங்கே நின்ற ஒரு பதினெட்டு வயது ஆகும் பையனைக் காட்டி, ‘இவன்தான் என் மகன்’ என்று அறிமுகப்படுத்தினான். எஸ்.கே. பையன் பெரிய சங்கோஜப் பிராணி போல் தோன்றியது. மெல்ல அந்த அறையை விட்டு நழுவி விட்டான். அந்த அறையின் வலப் பக்கத்தில் ஒரு சின்ன அறை. பிறகு சமையலறை, அதைத் தொட்டு ஸ்டோர் ரூம். எஸ்.கே.யைக் கண்டதும், சமையலறையில் நின்ற நடுத்தரப் பிராயம் வரும் ஒரு பெண்ணில் கையிலிருந்த மூன்று வயசு வரும் பெண் குழந்தை ஓடி வந்தது. அதை அவன் கையில் தூக்கும்போது, ‘இதுதான் கடைசி குழந்தையா?’ என்று சந்திரன் கேட்டான். ‘ஆமாம்’ என்று மிகவும் சந்தோஷமாகப் பதிலளித்தான் எஸ்.கே.
‘அப்போது ஒரு மகனும் மகளும்தானா?’
‘ஆமாம் சார்… மூத்தவன் பிறந்து ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு பிறந்தவ இவ…’
‘பாக்கியசாலி… ஒரு திட்டமும் போட உன்னை விடாமெ கடவுளே அறிஞ்சு தந்திருக்கிறார்…’ என்று கிருஷ்ணன் சொன்னதும் எல்லோரும் சிரித்தார்கள்.
அவர்கள் நடுத் திண்ணைக்குத் திரும்ப வந்தபோது டிபன் தயாராக இருந்தது. பெஞ்சில், இலை போட்டு இட்லி, வடை, பழம் எல்லாம் விளம்பப்பட்டிருந்தன. எல்லோருக்கும் அகோரப் பசி. எனவே, அதிகம் பிகு பண்ணாமல் எதிரில் கிடந்த பெஞ்சியில் உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
காப்பியை முடித்துவிட்டு அவர்கள் வெளி வராந்தாவுக்கு வந்தபோது எஸ்.கே. சிகரெட் கொண்டு வந்து தந்தான்.
‘எதுக்கும் எஸ்.கே.யை சம்மதிக்கணும். சிறிசானாலும் வீடு அழகா இருக்குது’ என்றான் சந்திரன்.
‘இந்த சின்ன வீட்டுக்கும் நினைச்சதைவிட ரூபா ரொம்பக் கூடுதலாக ஆயிட்டது சார்…’ என்றான் எஸ்.கே.
‘வெளிச் சுவருக்கு இவ்வளவு கடும் சிவப்பு வேண்டாமாக இருந்தது…’ என்று மானுவல் சொன்னபோது ‘அதுக்கென்ன… இதுதானே நம்ம நிறம்…’ என்றான் சந்திரன்.
எஸ்.கே. வழுக்கைத் தலையைத் தடவியவாறு சிரித்துவிட்டு ‘இல்லை சார்… இந்த நிற ஸ்னோஸம் கொஞ்சம் சீப்பான விலைக்குக் கிடைச்சுது… அதுதான்…’ என்றான்.
‘ஆமாம்… இந்த வீட்டுக்கு ரோட்டிலிருந்து வர நாங்க இப்போ நடந்து வந்த வழி தவிர வேறு வழி ஒண்ணும் இல்லையா?’ என்று கேட்டான் சந்திரன்.
‘இல்லை சார்… இப்படி வயல் வரப்பு வழி மட்டும்தான் இங்கே வர முடியும்…’
‘இந்தப் பாதை வழிதான் எந்த ராத்திரியானாலும், பகலானாலும் நீ வருவது?’ என்று கேட்டான் மானுவல்.
‘ஆமாம்…! அதுக்கென்ன…! அத்தனைக்குப் பெரிய தூரமா?’
‘சேச்சே… இதெல்லாம் ஒரு தூரமா!’ என்று சந்திரன் சொன்னபோது, மற்றவர்களுக்குச் சிரிக்காமலிருக்க முடியவில்லை.
‘அது சரி… யாருக்காவது சுகமில்லாட்டி ஆசுபத்திரிக்கு எங்காவது போகணுமுன்னால், இந்த வரப்பு வழி எப்படிப் போவதாம்?’ என்று மானுவல் கேட்டபோது, ‘இங்கே பக்கத்தில் வேறு வீடுகள் இருக்குது… அவுங்களுக்கு சுகக்கேடு வரும்போது போகத்தானே செய்யுறாங்க’ என்று எஸ்.கே. சொல்லி முடிப்பதற்குள், ‘எதுக்கு அபசகுனமா இப்பவே சுகக்கேட்டைப் பற்றிப் பேசணும்!’ என்று இடைமறித்துச் சொன்னான் சந்திரன்.
‘அதுக்கில்லை… சும்மாயிருப்பவங்களுக்குத் திடீரென்று ஹார்ட்டிலெ வயிற்றிலே எல்லாம் சுகக்கேடு வந்து விடுகிற காலம்… நோயாளியின் உடம்புக்கு அசைவு கொடுக்காமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் டாக்டர் கிட்டை கொண்டுபோகவேண்டியிருக்கும்… இங்கே இருந்து இந்த வரப்பு வழியாகப் பாதி தூரம் நடப்பதுக்குள்ளையே…’ என்று மானுவல் சவிஸ்தாரமாகத் தன் கட்சியை நிலை நாட்டிப் பேச முற்படுகையில், சந்திரன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு அவசரப்பட்டுக்கொண்டு எழுந்தான்.
‘சார்… மணி பனிரண்டு ஆயாச்சு… ஆபீஸில் யாரும் இல்லை… செக் ஏதாவது வந்தால் பாங்க் டைமுக்குள்ளே கொடுத்தனுப்ப வேண்டாமா…! சார் கையாலையே நம்ம பிரஸன்டேஷனை எஸ்.கே.யிடம் கொடுத்து விடுங்கள்…’ என்று சொன்னவாறு பொட்டலத்தை எடுத்துச் சிவராமன் கையில் தந்தான் சந்திரன் அவசரம் அவசரமாக.
அதை வாங்கி எஸ்.கே.யின் கையில் கொடுத்தான் சிவராமன். இரு கைகளால் சிவராமனையும், மற்றவர்களையும் மரியாதையோடு தொழுதுவிட்டு, அதைப் பெற்றுக்கொண்டான் எஸ்.கே. பிறகு பக்கத்தில் நின்ற தன் மகனிடம் கொடுத்து உள்ளே கொண்டுபோய் வைக்கும்படிச் சொல்லி அனுப்பினான்.
எல்லோரும் விடைபெற்றுக்கொண்டு இறங்கினார்கள். எல்லோருக்கும் முன்னால் சந்திரன் நடந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் சிவராமன், பிறகு மானுவல், கிருஷ்ணன், ராகவன் இந்த வரிசையில் ஒருவர் பின் ஒருவராகப் படியிறங்கிக் கீழிருந்த வரப்பு வழி நடந்து கொண்டிருந்தார்கள்.
அந்த வரப்பு முடிந்து மேலே இருக்கும் வரப்பு வந்தபோது, அதில் காலை உயர்த்தி வைத்து முதலில் சந்திரன் ஏறினான். பிறகு அவன், ‘சார்… இப்படி என் கையைப் பிடித்துக்கொண்டு ஏறுங்கள்…’ என்று தன் வலக் கையை நீட்ட, அதைப் பற்றிக் கொண்டு சிவராமன் மேலே ஏறினான். மானுவலும் சந்திரன் கையைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினான். கிருஷ்ணனும் ராகவனும் தானாகவே ஏறிக் கொண்டார்கள்.
இப்போது எல்லோருக்கும் முன்னால் சிவராமன் நடந்து கொண்டிருந்தான். சற்று நடந்ததும் அவன் தன் இடது நெஞ்சை அழுத்தியவாறு ‘அப்பா…’ என்று சொல்லி சடக்கென நின்றபோது, மற்றவர்கள் ‘என்ன சார்… என்ன சார்…’ என்று கேட்டவாறு அவன் அருகில் ஓடி வந்தார்கள்.
கையை நெஞ்சில் வைத்து வேதனை விம்ம சிவராமன் அழுத்துவதைப் பார்த்து ‘என்ன சார்… நெஞ்சு வலியா?’ என்று கேட்டு விட்டு அவர்கள் பீதியுடன் பரஸ்பரம் பார்த்துக் கொண்டார்கள். அவன் உடல் முழுவதும் தொப்பு தொப்பென்று வியர்வை வெள்ளம்…
‘இன்னும் பாதி தூரம்கூட ஆகவில்லையே…’ என்ற மானுவலை மற்ற மூவரும் முறைத்துப் பார்த்தார்கள்.
சிறிது நேரம்கூட அப்படியே கண்களை மூடியவாறு நெஞ்சை அழுத்திவிட்டு, ‘இப்போ பரவாயில்லை… மெல்ல நடக்கலாம்…’ என்று மெல்ல நடக்கத் தொடங்கினானேயானாலும், அவன் முகத்திலிருந்து அப்படியொன்றும் வலி குறைந்திருப்பதாக அவர்களுக்குப் படவில்லை.
எப்படியோ காரில் வந்து சேர்ந்து எல்லோரும் ஏறிக் கொண்டதும், ‘சார்… நேராக ஆசுபத்திரிக்கே போய் விடுவோமே…’ என்று சொன்னபோது, ‘வேண்டாம் ஆபீஸுக்கே போவோம்…’ என்றான் சிவராமன்.
இப்போது டாக்ஸி ஆபீஸை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. யாரும் ஒன்றும் பேசவில்லை. ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்க்கக்கூடக் கூசியபடி பின்னால் சென்று கொண்டிருந்த ரோட்டைப் பார்த்தவாறு மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
– 05.12.1971
– தீபம் 2.1972