புதிய கீதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2024
பார்வையிட்டோர்: 434 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருந்தது. மந்திர கோஷம் காதில் வந்து இனிமையாக ஒலித்தது. உள்ளே நுழைந்தவுடன் மேஜையில் சந்தனம் பன்னீர் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. யாருக்கு வேணுமோ எடுத்துக்கலாம் என்கிற பாவனையில். 

எதிரே இருந்த மணமேடையில் திருமணப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஹோமகுண்டத்தின் புகை நடுவே தேவர்கள் போல் அமர்ந்திருந்தனர், அவ்வப்போது கைக்குட்டையால் கண்களைத் துடைத்தபடி. 

தெரிந்த முகங்கள் இருக்கையிலேயே இருந்து கொண்டு ஒரு சின்னப் புன்னகையை மட்டும் அளித்துவிட்டு மீண்டும் மணமேடையைப் பார்க்கத் தொடங்கினர். நாற்காலியில் உட்கார்ந்து கவனிக்கத் தொடங்கினேன். பெண்கள் 1500 ரூபாய்கள் கொடுத்து நன்றாக அழகாக இருந்த தலைமுடியை நேராக, குட்டையாக ஆக்கிக் கொண்டு விட்டலாச்சாரியார் திரைப்படத்தில் வரும் மோகினிப் பிசாசுபோலக் காட்சி அளித்தனர். 

சில பெண்கள் புடவையிலும், பலபெண்மணிகள் பேண்ட் சொக்காயுடனும் வலம் வந்து கொண்டிருந்தனர்.அவர்களைப் பார்க்கும்போது மனம் பொறுக்கவில்லை. மனதுக்குள் பொறுமிக்கொண்டிருந்தேன். 

கெட்டி மேளம் கெட்டிமேளம் என்று குரல் கேட்டது. திருமாங்கல்ய தாரணம் ஆயிற்று. கையிலிருந்த அக்ஷதையையும் பூக்களையும் அருகே சென்று போட வழியில்லாமல், கூட்டம் அலை மோதியது. ‘திருப்பதிக்கு செல்கிறோம்’ என்று கூறுபவர்களை நம்பி காசு போடுவது போல, நாம் திருப்பதிக்கு காசு போட்டாயிற்று என்கிற மன நிறைவுடன் மனதை சமனப்படுத்திக் கொண்டு தூரத்திலிருந்தே தம்பதிகள் தலையில் போடுவதாக நினைத்துக் கொண்டு முடிந்த அளவு எட்டி வீசினோம். அந்த பூக்களும் அக்ஷதையும் முன்னால் நின்றிருந்த பல பேரின் தலையில் விழுந்தது. ஆனால் தம்பதிகளை ஆசீர்வதித்தார்ப் போன்று மனதுக்குள் ஒரு திருப்தி . 

இப்போதைய நடைமுறையில் யாரும் வந்து. உணவு உண்ணுங்களேன் என்று உபசரிக்க மாட்டார்கள் என்று புரிந்து கொண்ட பல பேர் வரிசையில் நின்று பரிசுகளை அளித்து விட்டு தாமாகவே உணவுக் கூடத்துக்குள் நுழைந்து உண்டுவிட்டுக் கிளம்பினர். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் மனைவி ஏன் உங்கள் முகம் இவ்ளோ கடுகடுப்பாக இருக்கு கொஞ்சம் சிரிச்சா மாதிரி வெச்சுக்கோங்களேன் என்றாள். 

இங்க பாக்கற காட்சிகள் எனக்குப் பிடிக்கலை. நம்மோட பாரம்பரியமான பழைய திருமணங்களில் பெண்கள் நன்றாக தலை பின்னிக் கொண்டு பூ வைத்துக் கொண்டு மங்களகரமாக காட்சி அளிப்பார்களே, அன்பாக உண்மையான பாசத்துடன் வரவேற்பார்களே, மரியாதையாக அழைத்துப் போய், உண்ணச் சொல்லி கூடவே இருந்து கவனித்து பாசமழை பொழிவாங்களேஅதெல்லாம் நெனைச்சுப் பாத்தேன் . இப்போ நடக்கறதெல்லாம் பார்க்கப் பார்க்க கோவம் வருது, அது சரி நீ எப்படி சற்றும் பாதிப்பில்லாமல் சிரித்த முகமாக இருக்க என்றேன் மனைவியிடம். 

நான் இங்கே நடக்கறதை பாக்கலை அதோ மணமேடையிலே ராதையும்கிருஷ்ணனும்,சந்தோஷமா உக்கார்ந்திருக்காங்க . கோபிகா ஸ்த்ரீகள் சுற்றிலும் இருந்து நடனமாடிக்கிட்டு இருக்காங்க. என்றாள். தேவர்கள் எல்லாம் பூமாரி பொழிஞ்சிகிட்டு இருக்காங்க. இது கலிகாலங்க, இவங்க இப்பிடித்தான் இருப்பாங்க. இவங்களை நாமதான் மனசுக்குள்ளேயே மாத்திப் பாக்கணும் அப்போதான் மனசு சந்தோஷமா இருக்கும் என்றாள் எதிரே இருந்த மனைவி கிருஷ்ண பரமாத்மா போலவும் நான் அர்ஜுனன் போலவும், அவள் கூறிய சொற்கள் கீதை போலவும் ஒலித்தது எனக்கு. ஆமாம் நம் மனநிலையைக் காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும் என்னும் கீதை எனக்கு புரிந்தது.

– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.

Print Friendly, PDF & Email
முன்னுரை - வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), தமிழ்க் கமலம் பதிப்பகம். வாசகப் பெருமக்களே நான் ஒரு நடிகன், கவிஞன், எழுத்தாளன், ஆம் உங்கள் இல்லத்துக்கு உங்கள் அனுமதியோடு உலா வருகின்ற நக்க்ஷத்திரம், உங்கள் தொலைக் காட்சியில், உங்கள் கணிணியில், உங்கள் அனுமதியோடு உங்கள் இல்லத்துக்கு வரும் உங்கள் சகோதரன், தமிழ்த்தேனீ (Thamizh Thenee) அதுவும் உங்கள் மேல் அன்பும்,அக்கறையும்,பாசமும், நேசமும், கொண்ட உங்கள் சகோதரன் தமிழ்த்தேனீ. நான் ஒரு திரைப்பட நடிகன்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *