புதிய கதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 1,910 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாரிடமும் அச்சமில்லை. போர் அனுபவம் அதிகமில்லை. எனினும் விடுதலை முனைப்பு அதிகமாக இருந்தால் இதைப்பற்றி அவர்கள் கவலை கொள்ளவிலை. கோப்பாய் கிறேசரடியில் அவர்கள் எதிரிக்கான வலையை விரித்தார்கள்.

(இதைத் தொடர்ந்து தாயகமெங்கும் இழுத்து விரிக்கப்பட்ட வலைகளில் சிக்கி அசோகச் சக்கரம் சீராக உருள முடியாமல் திணறியது தனிக் கதை)

(Operation Bavan) பவான் நடவடிக்கையைத் தொடங்கிய இந்திய அமைதி காக்கும்(?) படையினர் யாழ்ப்பாண நகரப்பகுதியிலிருந்து நகரத்தொடங்கியிருந்தனர். இதைச் சற்றும் எதிர்பாராத மக்கள் நம்ப முடியாத அதிர்ச்சியுடன் வாசல்களைப் பூட்டிக்கொண்டு வீடுகளுக்குள் அடைந்துகொண்டனர். விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் ஒரு அணி 2ம் லெப் மாலதி, கஸ்தூரி, தயா, விஜி இன்னும் சிலர் கோப்பாய் வெளியில் எதிர் நடவடிக்கைக்கு தயாராகிக்கொண்டிருந்தனர்,

ஐப்பசி மாதம், மழைக்காலம். எனினும் இன்று வானத்து நட்சத்திரங்கள் இருட்டடிப்புச் செய்யப்படவில்லை. நிலவு தலைக்கு மேலே மிதந்து கொண்டிருந்தது. கண்களைச் கூசச் செய்யும் ஒளியுடன் ஊர்திகள் கோப்பாய் கைதடி வீதியில் திரும்பின. காவல் கடமையில் நின்றவர் யாருடைய ஊர்தியென்று அறிவதற்காக எழுந்து நின்றார். வந்த ஊர்திகள் சடுதியில் நின்றன. அதில் வந்த இந்திய இராணுவத்தினர் குதித்தனர். நூறு நரிகள் சேர்ந்து ஊளையிடுவது போன்றதொரு ஒலியை எழுப்பியவாறு இவர்களை நோக்கி ஓடிவந்த படையினரை இவர்களின் துப்பாக்கிகள் வரவேற்றன.

இரவின் அமைதியைக் குலைத்தவாறு அந்த வெளியில் சண்டை நடந்தது. இந்திய இராணுவம் தன் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண்கள் படையணியோடு மோதியது. பெண்கள் பற்றி அவர்களிடமிருந்த கற்பனைத் தத்துவங்கள் உடைந்து விழுகின்ற அளவுக்கு அந்த சண்டை நடந்தது.

தனது தொடையில் ஏற்பட்ட காயத்தின் நிலையைப் புரிந்த கொண்ட மாலதி தன் கையிலிருந்த சுடுகலனை வீரவேங்கை விஜியிடம் கொடுத்தார்.

“இதைக் கொண்டுபோய் அண்ணையிட்டைக் குடு. நான் குப்பி கடிக்கப்போறன்”

மாலதியை விட்டுப்போக விஜி தயாராக இல்லை. “நான் உன்னை விடமாட்டன் மாலதி” விஜி மாலதியை இழுத்துப்போக முயற்சித்தார். ஆனால் மாலதியின் உறுதியே வென்றது.

“இதைக் கொண்டுபோய் அண்ணையிட்டைக் குடு”

அந்த நேரம் மிகவும் அரிதாகவும், எல்லோரது நேசிப்புக்கும் உரியதாக இருந்த M16ஐ தங்களெல்லோருக்கும் தருவதற்காக தலைவர் எடுத்த முயற்சிகளைப் புரிந்து கொண்டதனால், அன்றைய சூழலில் உலகின் நான்காவது வல்லரசுடனான போரில் அந்த ஆயுதம் ஆற்றவேண்டிய பங்களிப்பை புரிந்து கொண்டதனால் வந்த வார்த்தைகள்.

திண்ணை மாநாட்டில் ஒன்றுகூடியவர்களுக்கு இதை நம்பச் சற்றுச் (சற்று என்ன சற்று? முற்றுமுழுதாகவே) சிரமமாகவே இருந்தது.

“உந்தப் பெரிய இந்தியன்காரன் நடுச்சாமத்தில் முன்னால் வந்து நிக்கேக்கை, உந்தப் பொடிச்சியள் அவங்களைச் சுட்டிருக்குங்களோ?”

ஏற்கனவே லெப். கேணல் விக்ரர் அவர்கள் வீரச்சாவடைந்த மன்னார் அடம்பன் சண்டையில் மகளிர் படையணி பங்கேற்றிருந்ததான கதைகளை அரை குறையாக கேள்விப்பட்டிருந்தபோதும், அவர்களது ஐயங்கள் தெளியவில்லை. கேள்விகளோடு மாநாடு தொடர்ந்தது.

அரங்கம்: பருத்தித்துறை துறைமுகத்தடி காலம்: 1993 நடுப்பகுதி பார்வையாளர்கள் : துறைமுகத்தடியில் நின்ற திண்ணை மாநாட்டாளர்கள்

நடிகர்கள்: கடலில் கைகளை வீசிக் கால்களை அடித்தவாறிருந்த சில தலைகள்.

காட்சி புள்ளிகளோ, கோடுகளோ விழாமல் மிகத் தெளிவாகத் தெரிகிறது. கடலில் கொஞ்ச மனிதர்கள் நீந்துகின்றார்கள். அது தெரிகிறது. யார் அவர்கள் அரை காற்சட்டைகள் அணிந்திருக்கிறார்கள்.

“ஆம்பிளையா?” தலையில் முடி கொண்டையிட்டிருப்பதுபோலவும் தெரிகிறது. *பொம்பிளையளோ?” “என்ன பொம்பிளையளோ?” “அதுவும் காற்சட்டையளோடையோ?” “கடல் பொங்கி ஊரை அழிக்கிறதுக்குத்தான் உந்த கூத்தெல்லாம் நடக்குது”

“அப்பிடியெண்டா வெள்ளைக்காரனின்ர கடலுமெல்லே பொங்க வேணும். அங்க எல்லாரும்தானே குளிக்கினம்” இது ஒருவர்.

“அது ரோசமில்லாத கடல். பேசாமல் கிடக்கும். எங்கட கடல் அப்பிடியே” இது மற்றவர்.

திண்ணை மாநாட்டாளர்களின் அனல் பறந்த கருத்துப் பரிமாறல்களுக்கிடையில் கடற் புலிகள் மகளிர் படையணி ஐந்து மைல் நீச்சலை நிறைவு செய்து, தனது கடல் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டிருந்தது. மாநாடு முடிவுறவில்லை .

கிளாலிக் கடல் நீரேரியில் பயணம் செய்த மக்களை தாம் விரும்பிய நேரங்களிலெல்லாம் கொன்று குவித்துக்கொண்டிருந்த சிறீலங்கா கடற்படைக்குச் சவால் விட்டவாறு கடற்புலிகளின் படகுகள் விரைந்துகொண்டிருந்தன.

மக்களுக்கான பாதுகாப்புப் பணியில் லெப். கேணல் பாமா தலைமையிலான படகுத் தொகுதி ஒன்றும் ஈடுபட்டவாறிருந்தது. அவர்களின் படகுகள் காற்றைக் கிழித்தவாறு, நீர் மட்டத்தை மேலெழும்பியவாறு எதிரிப் படகுகளை மிரட்டிக்கொண்டிருந்தன. மக்களை நெருங்க முடியாத சிறீலங்காப் படகுகள் தள்ளியே நின்றுகொண்டன.

இருளில் கரும் புள்ளிகளாக விரைந்து சாகசம் காட்டுகின்ற இவர்களின் படகுகளில் போகின்றவர்களை உற்று உற்றுப் பார்த்தவாறு, சாவு அச்சமற்று நிம்மதியுடன் திண்ணை மாநாட்டாளர்கள் ஒரு தொடுகையில் (இயந்திரப் படகொன்றுடன் கயிற்றால் பிணைக்கப்பட்டு கட்டி இழுக்கப்படும் ஏனைய பயணிகள் படகுகள்) பயணம் செய்வதைக் கண்டு கொண்ட கிளாலிக் கடல் நீரேரிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. தனது அலைக் கரங்களை அடித்தவாறு உருண்டு உருண்டு சிரித்தது. நடந்த புதினத்தை கேள்வியுற்ற மீனினங்களும் திண்ணை மாநாட்டாளர்களின் முகங்களைப் பார்ப்பதற்காக நீர் மட்டத்துக்கு மேலே துள்ளித் துள்ளிக் குதித்தன.

தென்மராட்சியின் முக்கிய நகர்களில் ஒன்றான சாவகச்சேரி எங்களிடம். இழந்த நகரை மீளப் பிடிப்பதற்கான கடும் முயற்சியில் சிறீலங்காப் படையினர். மட்டுப்படுத்தப்பட்டளவில் நின்ற எம்மவருக்கும், மலையான பலத்துடன் நின்ற படையினருக்குமிடையே அன்று கடும் மோதல் தொடங்கியது. கட்டிடக் காட்டிடையே பக்கம் பக்கமாக இரு தரப்பும் நின்று மோதிக்கொண்டன. ஒவ்வொரு காப்பரணும் தமது நிலையைச் சொல்லிச் சொல்லி சண்டை பிடித்தது.

“எங்களில் ஒரு ஆள் காயம்”

“ரெண்டு பேர் வீரச்சாவு”

“நானும் காயம்”

பெரும்பாலான எமது காப்பரண்கள் விழுந்து விட்டன. விழுகின்ற கடைசி நிமிடத்திலும் எதிரிகளை விழுத்தின. அந்த ஒரு காப்பரண் மட்டும் விழவேயில்லை. அங்கிருந்து படையினரைநோக்கி எதிரித் தாக்குதல் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. அதற்குள் நின்றது மேஜர் கயல்விழி.

கயல் விழி இன்னும் முழுமையாகப் படையினரால் சுற்றி வளைக்கப்படவில்லை. எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அவர்கள் வருவதற்கு ஒரு பாதை இன்னமும் பாதுகாப்பாகவே இருந்தது. அந்த ஒரு பாதையால் வெளியேறி வருமாறும், உதவி அணிகளை அழைத்து, அணிகளை மீளமைத்துக்கொண்டு போய் அடித்து இடங்களைப் பிடிக்கலாம் என்றும் வழங்கப்பட்ட கட்டளைகளை கயல்விழி ஏற்றுக்கொள்ளவில்லை.

“கடைசிவரைக்கும் சாவகச்சேரியை விடவேண்டாம்” என்ற தனது அணியினரின் கடைசி வேண்டுகோளையே அவர் ஏற்றுக்கொண்டார்.

“நான் பின்னுக்கு வரமாட்டன். அந்தப் பாதையால் ரீமை உள்ளுக்கு அனுப்புங்கோ. நான் நிக்கிற இடத்திலையிருந்து அடிச்சுக் கொண்டு போய்ப் பிடிப்பம். விட்டா திரும்பிப் பிடிக்கிறது கஸ்ரம்” இது கயல்விழி.

உதவியணிகள் அரியாலையிலிருந்தும், வாதரவத்தையிலிருந்தும், கொழும்புத்துறையிலிருந்தும் வந்து சேரத் தாமதமாகும் என்பது கயல்விழிக்கு தெரியாததல்ல. எவ்வளவு நேரமானாலும் அவர்கள் வந்து சேரும்வரை தமது நிலையைத் தக்க வைப்பதென கயல்விழியும் கயல்விழியோடு நின்றவர்களும் முடிவெடுத்தனர். இப்போது இவர்களைச் சூழவும் படையினர். “ரவுண்ட் அப்புக்குள் நிக்கிறம். நாங்கள் சமாளிப்பம். நீங்கள் ஆக்களைத் தாங்கோ” இவர்கள் நின்ற வீட்டின் மதிலோடு படையினரின், தலைகள் தெரிந்தன.

“மதிலோடு வந்து நிக்கிறவங்களைச் சுட்டுக்கொண்டிருக்கிறம்.ஆக்களை அனுப்புங்கோ”

மதிலைக் கடந்து உள்ளே குதித்த படையினர் மதிலுக்கும் அவர்கள் நின்ற காப்பரணுக்கும் இடையே வெட்டப்பட்டிருந்து நகர்வகழிக்குள் இறங்தினார்கள்.

“பக்கத்தில வந்திட்டாங்கள். நாங்கள் சுட்டுக்கொண்டிருக்கிறம்”

படையினரின் PKLMG அடி இவர்களின் காப்பரண் சுவரை அதிர வைப்பது கயல்விழியின் தொலைத்தொடர்புக் கருவியூடே எல்லோருக்கும் கேட்டது. மிக நெருங்கிய படைவீரன் ஒருவன் இவர்கள் வீசியகுண்டு வெடித்து சிங்களத்தில் அலறியதும் கேட்டது. அவர்களின் நிலமை எல்லாருக்குமே விளங்கியது. சாவகச்சேரி நகரை இழக்கக்கூடாது என்ற முடிவில் உறுதியோடு கடைசிவரை முயன்ற கயல்விழியின் குரல் கடைசியாக ஒலித்தது.

*எங்களுக்கு கிட்ட அவன் வந்திட்டான். இனி எங்கட தொடர்பு உங்களுக்கு இருக்காது” காற்று தனது வீரவணக்கத்தைச் செலுத்தியது.

அந்த தந்தையால் நம்ப முடியவில்லை . “எனது மகள் வீரச்சாவா? அதற்குள்ளாகவா? இப்போதுதானே போனாள்? அதற்குள் எப்படி அவள் ஒரு மேஜராக..?” அவர் தனது கேள்விகளைக் கேட்டு, அழுது ஆறுவதற்கு அவரது மகளின் வித்துடல் அங்கே வரவில்லை . அவரின் மகளை அறிந்தவர்கள் வந்தார்கள் அந்தச் சண்டையில் அவரது மகள் வெளிக்காட்டிய ஆற்றலைச் சொன்னார்கள்.

“என் மகளா? என் மகளா?” கேள்வி அவரிடம் மட்டுமல்ல. அவரருகிலிருந்த திண்ணை மாநாட்டாளர்களிடமும்தான். அவர்களுக்கு எல்லாமே புரிந்தது போலவும் இருந்தது. ஒன்றுமே புரியாதது போலவும் இருந்தது. கொஞ்சக் காலமாகவே நாட்டில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் கேள்விகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் அப்பாற்பட்டதாகவே இருப்பதை அவர்களும் உணர்ந்துதான் இருந்தார்கள். எப்போது இந்த அனைத்துக்கும் அப்பாற்ப்பட்டவைகள் நிகழத்தொடங்கின? அங்கயற்கண்ணி காலத்திலிருந்தா? கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் அம்மா அழுது ஓய்ந்த பின் மகளை நினைத்து ஆச்சரியப்படத்தொடங்கினார்.

“நாப்பத்தைஞ்சு அடி ஆழக் கடலிலை தனியப் போனவளோ? அவ்வளவு ஆழத்தில் நிலம் இருட்டா இருக்குமே? என்னெண்டு போனவள்? என்னோடை இருக்குமட்டும் இரவில வீட்டுக்கு வெளியாலை போறதுக்கு நான் வேணும் அவளுக்கு. அவள்… என்னெண்டு…?”

அப்போது அங்கிருந்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்த திண்ணை மாநாட்டாளர்கள், இப்போது எல்லாம் கடந்த நிலைக்கு, இயல்பு நிலைக்கு வந்துவிட்டிருந்தனர். திண்ணையில் கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களின் கவனம் வீட்டுக்குள் கேட்ட சத்தங்களால் கலைந்தது. நிலத்தில் தடியால் அடிக்கும் ஒலி.

அவர் திடுக்கிட்டு எழும்பினார். ஏதேனும் பூச்சி, பொட்டோ ? இவன் சின்னவன் கண்டுவிட்டு அடிக்கிறானோ? பெரிய பிள்ளை மூலை மேசையிலிருந்து படிக்கிறாள். பயந்துவிடப் போகிறாள். பாய்ந்தடித்து வீட்டுக்குள் ஓடியவர் திடுக்கிட்டு அலறினார். குறை உயிரில் கிடந்த பாம்பைத் தடியில் தூக்கியபடி மகள் வந்துகொண்டிருந்தாள்.

“மண்ணெண்ணையை எடுத்து வாங்கோ, கொழுத்துவம்” என்றாள்.

– வெளிச்சம், ஆடி- ஆவணி 2002, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *