கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 6,713 
 
 

நல்ல வேலை. பஸ்ல இடம் கிடைத்து விட்டது. அதுவும் ஜன்னலோர இருக்கை. குழந்தைகள் பெரியவர்கள் எல்லோருக்கும் ஜன்னலோரம் என்றால் ஒரு தனி சந்தோஷம்தான்.

10-15 நிமிடங்களுக்கு பிறகு கூட்டம் நிரம்பியவுடன் கண்டக்டர் டிரைவர் வந்து சேர ஒரு வழியாக பஸ் புறப்பட்டு வெளியே வந்தது. ஜன நெரிசல் மிகுந்த கடை வீதியை தாண்டி பிரதான சாலையில் வந்து சேரும் நேரம் சிவப்பு சிக்னல் விழுந்து விட்டது. அடடா…

ஜன்னலோர இருக்கை சுகமே
மழையின் சாரல் தீண்டும் வரை…
கடலோர அலைகள் சுகமே
கால்களை நண்டு தீண்டும் வரை…

ஏதோ சிந்தனையில் ஜன்னலின் வழியே கண்களை ஓட்டினால் சாலை ஓரம் இருந்த ஒரு பெரிய உணவகத்தின் வலது பக்க வாசல் கண்களில் பட்டது. பிரதான வாசல் முன்பக்கம் இருக்க இது அவர்களது service ஏரியா போலும். ஒரு பக்கம் ஒருவர் காய் கறிகளை பிரித்துக் கொண்டும், ஒரு பக்கம் சிலர் அமர்ந்து நறுக்கி கொண்டும் இருந்தனர். ஒரு மேடையில் பெரிய பாத்திரம் ஒன்றை வைத்து ஒருவர் பால் பாக்கெட்டுகளை அதில் பிரித்து ஊற்றி கொண்டு இருந்தார். பஸ்ல இருந்து எதேச்சையாக பார்வையை செலுத்தியவள் திடுக்கிட்டு போனாள். காரணம் – அந்த நபர் பால் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து,கடித்து பாலை பாத்திரத்தில் ஊற்றிக்கொண்டு இருந்தார்.

அவர் முகத்தை பார்த்தாலே இது எப்போதும் சர்வ சாதாரணமாக செய்யும் செயல் என்பது தெரிந்து போனது. என்ன இது அக்கிரமம் கொஞ்சம் கூட சுகாதாரம் இல்லை. சே…நொந்து கொண்டது இவள் மனது.

சட்டென்று பஸ்சை விட்டு இறங்க முற்பட்டாள். அடடா..என்னம்மா நீங்க சிக்னலில் இறங்காதீங்க.

ஸாரி கண்டக்டர். மன்னித்து கொள்ளுங்கள். ஒரு அவசர வேலை.

இறங்கி விடு விடு வென்று ஹோட்டலை நோக்கி நடந்தாள்.

அய்யா கொஞ்சம் வாங்க என்று அந்த நபரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டாள்.

உள்ளே நுழைந்து மானேஜரை நோக்கி சென்றாள்.

எஸ், மேடம். சொல்லுங்க.

சார்.. உங்க ஹோட்டலில் தினம் எத்தனை பாக்கெட் பால் வாங்குறீங்க.? எவ்ளோ காபி பவுடர், டீ தூள் வாங்குறீங்க? காபி, டீ விலை என்ன? எத்தனை பேர் காபி டீ சாப்பிடுவாங்க?

என்னம்மா சர்வே எடுக்க வந்த மாதிரி கேள்வி கேட்கிறீங்க. என்ன விஷயம்? யார் நீங்க?

இல்ல…இவ்ளோ பொருள் வாங்கிறீங்க…இவ்ளோ பெரிய ஹோட்டல் நடத்துறீங்க…ரெண்டு கத்தரிக்கோல் வாங்க முடியவில்லையா என்று ஒரு சந்தேகம். இவர் பல்லாலேயே பால் பாக்கெட்டை கடித்து துப்புகிறார். சுத்தம் சுகாதாரம் ஒண்ணுமே பார்க்க மாட்டிங்களா. இப்படி எல்லாம் நடந்தால் நாட்டிலே ஏன் வியாதி பெருகாது. கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்.

பொதுவா சொல்லுவாங்க…ஹோட்டலில் சமைக்கும் இடத்தை பார்த்தால் சாப்பிட பிடிக்காது என்று, அதை நான் இன்று புரிந்து கொண்டேன் என்றாள்.

இனிமேல் complaint வராமல் பார்த்து கொள்கிறேன். நீங்க கிளம்புங்க என்றார் மேனேஜர்.

போகிறேன் சார். பின்னே இங்கே உட்கார்ந்து காபியா குடிக்க போகிறேன் என்றாள் கிண்டலாக.

பிறகு வேறு பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். அப்போதும் அவள் ஆதங்கமும் ஆத்திரமும் அடங்கவில்லை.

அடுத்த வாரம் பஸ்ல வரும்போது அதே இடம், பார்வை தன்னிச்சையாக அங்கே சென்றது. service ஏரியா வெளியே தெரியாத அளவிற்கு ஒரு பெரிய திரை தொங்க விடப்பட்டு இருந்தது. என்ன செய்து இருப்பார்கள்..ஆவலை அடக்கிக்கொண்டு, போய் பாக்கலாமா என்ற எண்ணத்தை மாற்றி கொண்டு வீடு வந்து விட்டாள்.

மானேஜர் அந்த ஆளை கண்டிக்கிறேன் என்றோ, இனிமேல் இப்படி நடக்காது என்றோ, செக் பண்ணுகிறேன் என்றோ சொல்லவில்லையே.

‘இனிமேல் complaint வராமல் பார்த்து கொள்கிறேன்’ என்றுதானே சொன்னார். சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். சொன்னதை செய்து விட்டார்.

ஹா .. ஹா .. என்று சிரித்தார் அவளது கணவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *