எழுதியவர்: பிரபுல்ல ராய்
தை மாதம் முடியப் போகிறது. அப்படியும் குளிர் போகும் வழியாயில்லை. தவிர இன்று காலையிலிருந்தே வானத்தில்இங்குமங்கும் பாறைக்குவியல்கள் போல் கருமேகங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இடையிடையே கொஞ்சம் வெயில்வருகிறது, மேகங்கவிந்த வானத்தில் திடீரென்று வெளிச்சம் பளிச்சிடுகிறது. மறு நிமிடமே அந்த வெளிச்சம் அணைந்து போய் விடுகிறது.
விஷ்டுபதா வடக்குப்புறக் காட்டுக்கு வந்து சேர்ந்தபோது பொழுது சாயத் தொடங்கிவிட்டது, மரங்களின் நிழல்கள் நீளஆரம்பித்து விட்டன.
விஷ்டுபதாவுக்கு வயது சுமார் நாற்பது இருக்கும். மேடு போன்ற தடித்த மூக்குக்கு மேல் குழம்பிய கண்கள். புருவங்கள்இல்லையென்றே சொல்லவேண்டும். தடிப்பான கருத்த உதடு கீழ்ப்பக்கம் தொங்குகிறது. உடைந்த குரல். அளவுக்கு மீறியஉயரம். வறண்டுபோன கருப்புத்தோல். ஒட்மொத்தமாகப் பார்த்தால் இடி விழுந்து எரிந்துபோன பனைமரம் மாதிரிஇருப்பான். அவனுடைய உடம்பில் எஞ்சியிருப்பது அகலமான, தடித்த எலும்புதான். இந்த எலும்பில் போதிய தசை சேர்ந்திருந்ததால் விஷ்டுபதா ஒரு மலைபோல் பருத்த பயில்வானாக இருந்திருப்பான்.
ஒரு சிக்குப் பிடித்த அழுக்குக் கோவணமும் ஆயிரம் ஒட்டுப் போட்ட விசித்திரமான சட்டையுந்தான் அவனுடையஉடம்பை மறைத்திருந்தன. தலையில் ஒரு துண்டை முண்டாசு கட்டியிருந்தான். அவனுடைய தோளில் ஒரு சிறு கோடரி;இடுப்பில் ஒரு கூர்மையான கத்தியைச் செருகிக் கொண்டிருந்தான்.
மூன்று நாட்களாக அவனுக்கு வேலையில்லை, வேலையில்லாததால் வரும்படியும் இல்லை. அவனிடம் நிலமில்லை.அவன் அன்றாடக் கூலி வேலை செய்வான். ஆகையால் உட்கார்ந்து சாப்பிட அவன் வீட்டில் தங்கமும் நெல்லும் கொட்டிக்கிடக்கவில்லை. மிஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச அரிசியில் நேற்றுவரை கடத்தியாகிவிட்டது. இன்று அவன் ஏதாவதுசம்பாதித்தால்தான் அவனுடைய பெண்டாட்டியும் குழந்தைகளும் சாப்பிடமுடியும். இல்லாவிட்டால் பட்டினிதான்.
காலையில் தூங்கியெழுந்ததுமே வேலை தேடிக்கொண்டு புறப்பட்டான் விஷ்டுபதா. ஆனால் வேலை எங்கே கிடைக்கிறது?அவன் அலைந்து களைத்துப்போய் நம்பிக்கையிழந்தபோது அவனுக்கு இந்த வடக்குப்புறக் காட்டின் நினைவு வந்தது.
எத்தனையோ தடவை விஷ்டுபதாவைக் காப்பாற்றியிருக்கிறது இந்தக் காடு. அவன் எத்தனையோ நாட்கள் இந்தக் காட்டிலிருந்து பழங்கள், காய்கள், கீரை, பறவைகள், ஆமை, முயல் போன்றவற்றை எடுத்துக்கொண்டு போய்த் தன் குடும்பத்தின்உயிரைக் காப்பாற்றியிருக்கிறான். இன்றும் அதே ஆசையில்தான் வந்திருக்கிறான் அவன்.
விஷ்டுபதா காட்டில் நுழைந்து சற்றுநேரம் நின்றான். மனித நடமாட்டமில்லாத இடம். இடப்புறமும் வலப்புறமும் கண்ணுக்கெட்டிய தூரம் புல்வெளி, செடி கொடிகள். இது குளிர் காலமாதலால் புல்லில் பசுமையின் பளபளப்பு இல்லை, பழுப்புநிறந்தான். நடுநடுவே புதர்கள், மரங்கள் செடிகள். அங்கு ஒரு கால்வாயும் உண்டு.
நாற்புறமும் பார்த்துக்கொண்டே நடக்கத் தொடங்கினான் விஷ்டுபதா. இந்த அந்தி வேளையில் அவன் தலைக்கு மேல்பறவைகள் கூட்டங்கூட்டமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. அவன் கவண் எடுத்து வந்திருந்தால் ஓரிரண்டு பறவைகளைஅடித்துக் கொன்றிருக்கலாம். கவண் எடுத்து வராதது பெரிய பிசகு!
அவன் போய்க் கொண்டிருக்கும்போதே வழியில் தென் பட்ட புதர்களையும் மரங்களையும் கூர்ந்து பார்த்துக்கொண்டுபோனான். ஊஹும், ஒன்றும் கிடைக்கவில்லை. புல்தரையிலும் அவனுக்குத் தேவைப்பட்ட எதுவும் கண்ணில் படவில்லை.
வெகுநேரம் நடந்து காட்டுக்கு நடுவிலிருந்த கால்வாய் கரைக்கு வந்ததும் திடுக்கிட்டு நின்றான் விஷ்டுபதா.
கால்வாய்க் கரையில் ஒரு பெண்பிள்ளை நின்றுகொண்டு அவனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.விஷ்டுபதாவுக்குப் பத்தடி தூரத்தில் அவள், இவ்வளவு அருகில் இருந்ததால் அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவளுடையகண்களில் பயம், சந்தேகம்..
இந்த ஜன நடமாட்டமற்ற காட்டில் குளிர் நடுக்கும் காலத்தில் இந்தப் பெண்பிள்ளை எப்படி வந்து சேர்ந்தாள் என்று புரியவில்லை அவனுக்கு. அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே நின்றான். அவள் மாநிறம்; கட்டை குட்டையாகஇருந்தாள். சப்பை மூக்கு, கொழுத்த மார்பு, அவள் அணிந்திந்த அகலக் கட்டைச் சேலையால் அவளுடைய இளமையின்மதர்ப்பை மறைக்க முடியவில்லை. அவளுடைய கையில் ஒரு பெரிய கோடரி.
வெகுநேரங் கழித்து விஷ்டுபதா கேட்டான், “ஏ பொம்பளை, நீ யாரு?”
சூடாகப் பதில் வந்தது அவளிடமிருந்து “நான் யாராயிருந்தா ஒனக்கென்ன? நீ இங்கேயிருந்து போயிடு!”
“போயிடுன்னு சொல்லிட்டாப் போயிட முடியுமா? எனக்கு இங்கே வேலை இருக்.”
“என்ன வேலை?”
“இருக்கு” என்று சொல்லிச் சற்று நிறுத்தினான் விஷ்டுபதா. பிறகு தொடர்ந்து சொன்னான், “ஜனமேயில்லாத இந்தக்காட்டுக்கு நீ ஏன் வந்தே?”
“எனக்கும் வேலையிருக்கு.”
விஷ்டுபதா தானறியாமலேயே முன்புறம் காலடி எடுத்து வைக்க முற்பட்டான். உடனே அந்தப் பெண் உரக்கக் கத்தினாள்,”கபர்தார்! ஒரு அடிகூட முன்னாலே வராதே! வந்தால் கோடாலி யாலே வெட்டிடுவேன்!”
விஷ்டுபதா திடுக்கிட்டான். இப்போது அந்தப் பெண்ணிடம் கொஞ்சங்கூடப் பய உணர்வு இல்லை என்பதை அவன்கவனித்தான். அவளுடைய கண்களில் கோபம் தீயாக எரிந்தது.
அவன் பயந்துகொண்டே சொன்னான், “ஒனக்குப் பிடிக்க லேன்னா நான் முன்னாலே வரலே. ஆனா நீ எந்த ஊரு, ஏன்இங்கே வந்தேங்கறதைச் சொன்னா என்ன குத்தம்?”
ஏதோ நினைத்துச் சற்றுச் சமாதானமானாள் அவள். “நான் இருக்கறது தால்டாங்காவிலே.. அதோவடக்கிலே..”
“அது ரொம்ப தூரம் இல்லே! நாலு மைல் இருக்குமே!”
“ஆமா..”
“அவ்வளவு தூரத்திலிருநதோ வந்தே?”
“அவசியமானா வரத்தானே வேணும்?”
“அப்டி என்ன அவசியம்னு சொல்லேன்!”
“தெரிஞ்சுக்கணும்னா சொல்றேன் .. நான் கீரை, காய், பழம் பொறுக்கிக்கிட்டுப் போக வந்தேன்.”
விஷ்டுபதாவுக்கு ஒரே ஆச்சரியம். “அப்படியா? நானும் அதுக்காகத்தான் வந்திருக்கேன்!”
பெண்ணின் கண்களில் மறுபடியும் கோபம் பளிச்சிட்டது. “இல்லே, நீ பொய் சொல்றே!”
“சாமி சத்தியமாச் சொல்றேன், பொய் இல்லே!” விஷ்டுபதா சொன்னான். “காலையிலேருந்து பிள்ளை குட்டிக பட்டினி.எனக்கு மூணு நாளா வேலை கிடைக்கல்லே. இங்கேயிருந்து ஏதாவது எடுத்துக்கிட்டுப் போகலேன்னா குழந்தைங்க செத்துப்போயிடும்.”
அவனுடைய குரலிலிருந்த வேதனை அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கையூட்டியது. “கெட்ட எண்ணம் எதுவுமில்லையே ஒனக்கு?”என்று அவள் கேட்டாள்.
நான்தான் சாமி சத்தியம் பண்ணினேனே..! நீ கிட்டேவா, நான் ஒன்னைத் தொட்டு சத்தியம் பண்றேன்.”
“என்னைத் தொட வேண்டாம்.. நீ எந்த ஊரு?”
“தெற்கே பயார்பூர்..” தென்பக்கம் சுட்டிக் காட்டினான் விஷ்டுபதா.
“ஒன் வீடும் ரொம்ப தூரந்தான்! அவ்வளவு தூரத்திலேருந்தா..?”
தன் தாறுமாறான மஞ்சள் பற்களைக் காட்டிக்கொண்டு சிரித்தான் விஷ்டுபதா. “நீதான் சொன்னியே… தேவைப்பட்டாதூரத்திலேருந்தும் வரத்தான் வேணுமின்னு…”
“நெசந்தான்”
“இவ்வளவு பேசினோம். ஆனா பேருகூடத் தெரிஞ்சுக்கல்லே.. என் பேரு விஷ்டுபதா. ஒன் பேரு?”
“நிசி.. நிசிபாலா.”
இருவரும் சிறிதுநேரம் மௌனம். பிறகு விஷ்டுபதா சொன்னான், ” நான் ஒண்ணு சொல்லட்டுமா?”
“என்ன?”
“நீயும் நானும் ஒரே காரியத்துக்குத்தான் வந்திருக்கோம், நாம ரெண்டுபேரும் சேர்ந்து கீரை, காய் எல்லாம் தேடினாஎன்ன? குளிர்காலம் .. சீக்கிரமே இருட்டிப் போயிடும்.. நீ வயசுப் பொண்ணு, தனியாக் காட்டிலே சுத்தறது சரியில்லே..”
நிசி சற்றுத் தயங்கிவிட்டு ஒப்புக்கொண்டாள். தானாகவே அவனருகில் வந்தாள்.
அங்கே அலைந்து திரியும்போது அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு என்ன கிடைத்தாலும்அதைச் சரிபாதியாக பிரித்துக் கொள்வது என்று.
அவர்களிருவரும் ஒரு புதரையும் ஒரு பள்ளத்தையும் விட்டு வைக்காமல் எல்லா இடங்களிலும் தேடினார்கள். ஆனால்நாலைந்து சிறு ஆமைகளைத் தவிர ஒன்றும் கிடைக்கவில்லை அவர்களுக்கு, ஆமைகளின் ஓடுகளை எடுத்தபிறகு என்ன மிஞ்சப்போகிறது?
உணவு வேட்டையாடும்போது அவர்கள் மௌனமாயிருக்கவில்லை. ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்துக் கொண்டார்கள். இதற்குள் நிசியின் பயமும் அவநம்பிக்கையும் மறைந்து விட்டன. விஷ்டுபதாவிடம் நம்பிக்கை ஏற்பட்டு விட்டதுஅவளுக்கு. “ஒன் வீட்டிலே யார் யார் இருக்காங்க?” அவள் கேட்டாள்.
“பொண்டாட்டியும் கொளந்தைகளும்.”
“எத்தனை கொளந்தைங்க?”
“மூணு.. ரெண்டு புள்ளே, ஒரு பொண்ணு..”
“அப்போ ஒன் குடும்பத்திலே அஞ்சு பேரு!”
“ஆமா..”
“என்ன வேலை செய்யறே?”
“நான் கூலி”
“அதிலே காலங்கடத்த முடியுதா?”
“எங்கே முடியுது? சில நாள் அரைப்பட்டினி, சில நாள் முழுப்பட்டினி..”
“நெலம் ஏதாவது இருக்கா?”
“நெலத்துக்கு எங்கே போவேன்?”
“அப்போ ஔப்பை நம்பித்தான் பொளைப்பு..”
“ஆமா”
“ரொம்பக் கஸ்டம் இல்ல?”
“என்ன செய்யறது…? இந்த மாதிரி எவ்வளவு நாள் பிளைச்சிருக்க முடியுமோ இருக்க வெண்டியதுதான்.. அதுசரி,நீ என் கதையையே கேட்டுக்கிட்டிருக்கியே.. ஒன் கதையைச் சொல்லு.
“என் கதையும் இதேதான்.. நானும் ஒளைச்சுத்தான் பொளைக்கணும்..”
“அது எனக்குப் புரிஞ்சுடுச்சு.. நான் அதைக் கேக்கலே..”
“பின்னே என்ன .. எதைக் கேக்கறே?”
விஷ்டுபதா திரும்பி அவளை ஒரு நிமிடம் பார்த்து விட்டுச் சொன்னான், “சங்கு வளை, குங்குமம் ஒண்ணையும் காணமே..இன்னும் கலியாணம் ஆகலியா ஒனக்கு?்
ஏதோ நினைவில் ஆழ்ந்தவள்போல் பதில் சொன்னாள் நிசி, “கல்யாணம் ஆயிட்டது.”
“அப்படீன்னா ?”
விஷ்டுபதா என்ன கேட்க விரும்புகிறானென்று அவளுக்குப் புரிந்தது. கலியாணமானவள் ஏன் சங்கு வளையல் போட்டுக்கொள்ளவில்லை, குங்குமம் இட்டுக் கொள்ளவில்லை என்று கேட்கிறான் அவன்.
அவள் வருத்தமாகச் சொன்னாள், “என் புருசன் இல்லே” விஷ்டுபதா அனுதாபமாக, “த்சொ, த்சொ.. இந்த வயசிலேயாபுருசன் போயிட்டான்?” என்றான்.
நிசி பதில் சொல்லவில்லை.
“என்ன ஆச்சு அவனுக்கு? சீக்கு வந்து செத்துப் போயிட்டானா?”
“இல்லை.. மிராசுதாரோடே சண்டை போட்டு உயிரை விட்டான். மிராசுதாரோட ஆளுங்க ஈட்டியாலே அவன்வயித்துல குத்திட்டாங்க, சதை நரம்பு எல்லாம் வெளியிலே வந்துடுச்சு. கண்ணாலே பார்க்க முடியலே அந்தக் காட்சியை..”என்று சொல்லிக்கொண்டே வந்தவள் திடீரென்று அந்தக் காடே எதிரொலிக்கும்படி உரக்க ஓலமிடத் தொடங்கினாள்,”ஐயோ, என் புருசனை -காளை மாதிரி இருந்தவனை கொன்னு போட்டுட்டாங்களே.”
விஷ்டுபதா சற்றுத் தயங்கிவிட்டுப்பிறகு அவளுடைய தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தவாறு அவளுக்கு ஆறுதல்சொன்னான், “அழாதேம்மா, அழாதே! நடந்தது நடந்துடுச்சு..”
அவள் சற்று அமைதியானதும் “ஒனக்கு எவ்வளவு கொளந்தைக?” என்று விஷ்டுபதா நவளைக் கேட்டான்.
“ஒண்ணுமில்லே.”
“அது ஒரு விதத்தில் நல்லதுதான்;.”
நிசி பேசாமலிருந்தாள்.
“குடும்பத்திலே வேறு யாரு இருக்காங்க?”
“கிழட்டு மாமியார் இருக்கா. ராவும் பகலும் ‘ஆ,ஆ’ன்னு வாயைத் திறந்துக்கிட்டு இருக்கா. பெருந்தீனிக்காரி. மலை மாதிரிபெரிய புள்ளெய முழுங்கியும் பசி தீரலே அவளுக்கு. அவளுக்குத் தீனி போட்டே நான் நாசமாயிடுவேன்.”
“நெலம் கிலம் இருக்கா?”
“அது இருந்தா இந்த மாதிரி காட்டிலேயும் மேட்டிலேயும் அலைஞ்சு திரிவேனா?”
இரண்டு பேரும் தங்கள் தேடலைத் தொடர்ந்தார்கள். ஆனால் தாய் போன்ற இந்தக் காடு இன்று ஏனோ கருமிபோல,ஈவிரக்கமில்லாமல் இருந்தது. நாலைந்து ஆமைகளுக்குப்பிறகு நாலைந்து வில்வப் பழங்கள் கிடைத்தன, அவ்வளவுதான்.ஆளுக்குப் பாதி எடுத்துக் கொண்டால் எவ்வளவு இருக்கும்? பொழுது சாய்ந்துவிட்டது. வெயில் இல்லை. சூரியன் மேற்குப்பக்கத்து மரஞ்செடிகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டதை இருவரும் கவனிக்கவில்லை. நாலுபுறமும் விரைவில் இருண்டுகொண்டு வந்தது.
காலையிலிருந்தே வானத்தில் இங்குமங்கும் மேகங்கள் பாறைக்குவியல்கள்போல் தொங்கிக் கொண்டிருந்தன. இப்போதுஅவை இன்னுங் கீழே இறங்கிவந்துவிட்டன. தூறலும் ஆரம்பித்து விட்டது. அதோடு குளிர்ந்த புல் தரையிலிருந்து பனி வெளிக்கிளம்பிக் கொண்டிருந்தது.
“இன்னிக்கு ரொம்பக் குளிர், இல்லே?” நிசி சொன்னாள்.
“ஆமா” என்றான் ஏதோ நினைவில் ஆழ்ந்திருந்த விஷ்டுபதா.
“மழையும் தொடங்கிடுச்சு”
“ஆமா..”
நிசியின் பேச்சுக்கு இயந்திரம் போல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் விஷ்டுபதா வேறு ஏதோ சிந்தித்துக்கொண்டிருந்தான். ரெண்டு ஆமையும் ரெண்டரை வில்வப் பழமும் எடுத்துக் கொண்டுபோய் வீட்டில் யாருக்குக்கொடுப்பான்? அவன் சொன்னான், ” இன்னும் ஏதாவது எடுத்துக் கிட்டுப் போகலேன்னா கட்டாது எனக்கு. என் குடும்பத்திலேஅஞ்சு பேரு!”
“நெசந்தான்.. ஆனா இருட்டிப் போயிட்டிருக்கு. மழையும் தொடங்கிடுச்சு. இப்போ என்ன கிடைக்கும்?”
அவள் குரலில் அவநம்பிக்கை.
“பார்க்கலாம்..” திடீரென்று விஷ்டுபதாவின் பார்வை தீவிரமாயிற்று. அவன் பரபரப்பாக முன்பக்கம் சுட்டிக்காட்டி,”அதென்ன?” என்று கேட்டான்.
நிசி அந்தப் பக்கம் பார்த்துவிட்டு “பன்னி போலயிருக்கு” என்றாள்.
“ஆமா, ஆமா”
“அது அங்கே என்ன செய்யுது?”
விஷ்டுபதா கூர்ந்து கவனித்தான். மண்ணைத் தோண்டுது.
“பன்னி மண்ணைத் தோண்டினா, மண்ணுக்கடியிலே என்னவோ இருக்குன்னு அர்த்தம். காரணமில்லாமே பன்னிமண்ணைத் தோண்டாது.”
“வா, முன்னால போய்ப் பார்ப்போம்..” என்று சொன்னான் விஷ்டுபதா. மின்னல் போல் திடீரென்று ஒரு யோசனைதோன்றிவிட்டது அவனுக்கு.. வேறெதுவும் கிடைக்காத போது இந்தப் பன்றியையாவது அடித்துக் கொல்லலாமே! அதன் எடைஒரு மணுவுக்குக் குறையாது. நிசிக்குப் பாதிப்பங்ஙு கொடுத்தபின்பு அவனுக்குக் கிடைக்கும் பாதிப்பன்றியை வைத்துக் கொண்டுஅவனுடைய குடும்பத்தில் ஐந்துபேரும் நாலைந்து நாட்கள் தாராளமாகச் சாப்பிடலாம், நாலைந்து நாட்கள் பிழைத்திருந்துவிட்டால் அதற்கப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
அவன் தன் யோசனையை நிசியிடம் சொன்னான். அவள் பயந்து கொண்டு சொன்னாள், “நல்ல யோசனை தான்.. ஆனா..”
“என்ன?”
“இவ்வளவு பெரிய பன்னியை அடிச்சுக் கொல்ல ஒன்னால முடியாதுப்பா. தவிர அது கோரப் பல்லுள்ள பண்ணியாயிருந்தாநீ தப்ப முடியாது.”
“என் கிட்டே கோடாலி இருக்கு, கத்தி இருக்கு..”
“கோடாலியாலே அதைக் காயப்படுத்த முடியாது!”
விஷ்டுபதாவின் உறுதி குறையவில்லை, அவன் சொன்னான், “முடியுமோ, முடியாதோ முயற்சி செஞ்சு பாக்கறேனே! பட்டினிகெடந்தது சாகறதைவிடப் பன்னியோட சண்டைபோட்டு..”
நிசி அவனைத் தடுக்க இடங்கொடுக்காமல் அவன் முன்னேறினான்.
நிசி வேறு என்ன செய்வாள்? அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவர்கள் அருகே சென்று பார்த்ததில் அது கோரைப் பல்லுள்ள மிருகமல்ல, ஆனால் காட்டுப்பன்றி என்று தெரிந்தது.இதற்குள் அது பெரிய பள்ளம் தோண்டியிருந்தது. அதற்குள் எட்டிப் பார்த்த விஷ்டுபதாவின் கண்கள் பளபளத்தன. பெரியமரவள்ளிக் கிழங்கு ஒன்று மண்ணுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த. அதன் ஒரு பகுதி மண்ணுக்குள் புதைந்திருந்தது.
கிழங்கின் எடை பத்து சேருக்குக் குறையாது. அவனால் பன்றியைக் கொல்ல முடியாவிட்டாலும் கிழங்கு கிடைத்தால்போதும். பன்றியோடு சண்டைபோட வேண்டாம்.
பின்னாலிருந்து எட்டிப் பார்த்த நிசி ஆவலுடன் “அடே, எவ்வளவு பெரிய மரவள்ளிக் கிழங்கு?” என்று சொன்னாள்.
“ஆமா” என்றான் விஷ்டுபதா.
மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்த பன்றி மனிதக் குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தது. அதன் சின்னஞ்சிறுகண்கள் சிவப்பாகக் குழம்பிக் கிடந்தன. அதன் உடலிலும் முகத்திலும் மண்.
விஷ்டுபதா அதை விரட்டுவதற்காகத் தன் வாயால் ஒலியெழுப்பினான், “உர்ர்ர்..ஹட் ஹட்..”
பன்றி நகராமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றது. அதன் கண்களில் சந்தேகம் வலுத்தது. விஷ்டுபதா மறுபடியும்ஒலியெழுப்பினான். நிசியும் அவனுடன் சேர்ந்து ஒலி யெழுப்பினாள். ஆனால் பன்றி அசையவில்லை.
“சரியான முண்டம்.. நகராது போலேயிருக்கு” விஷ்டுபதா சொன்னான்.
“நாம கௌங்கை எடுத்துக்கப் பார்க்கறோம்னு அதுக்குப் புரிஞ்சு போச்சு..” விஷ்டுபதா அதைத் தாக்குவதற்கு முன்னாலேயே அதுதிடீரென்று அவன்மேல் பாய்ந்தது, கண்ணிமைக்கும் நேரத்தில் இது நிகழ்ந்துவிட்டது. விஷ்டுபதாவுக்குத் தன்னைக் காத்துக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை, காலையிலிருந்து அவனுடைய வயிற்றில் ஒரு பருக்கைகூட விழவில்லை. அவன் உடம்புஏற்கெனவே வலுவிழந்திருந்தது, ஒரு மணு எடையுள்ள பன்றி அவன்மேல் பாய்ந்ததும் அவன் நிலை தவறிக் கீழே விழுந்தான்.கூடவே தன் தொடையைப் பன்றியின் பல் துளைப்பதை உணர்ந்தான்.
“ஐயோ, கொன்னுட்டுதே, கொன்னுட்டுதே! என்னைக் காப்பாத்து..!” என்று கத்திக்கொண்டே அவன் தன் இடுப்பில்கையை வைத்தான். இடுப்பிலிருந்த கூர்மையான கத்தியை எடுத்து முழு பலத்துடன் பன்றியின் மூக்குக்குப் பக்கத்தில்குத்தினான். குத்திய இடத்திலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது.
இதற்குள் நிசி பின்னாலிருந்து அதைக் கோடாரியால் தாக்கத் தொடங்கி விட்டாள். அடிபட்ட பன்றி விஷ்டுபதாவைவிட்டுவிட்டுப் பின்பக்கம் திரும்பி நிசியின் மேல் பாய்ந்தது. அவளும் சமாளித்துக்கொள்ள முடியாமல் எகிறி விழுந்தாள்,அவளுடைய சேலையும் உடம்பும் பன்றியின் பற்களால் கிழி பட்டன. அப்படியும் அவள் விடாமல் குருட்டுத்தனமாகப்பன்றியைக் கோடரியால் குத்திக் கொண்டேயிருந்தாள்.
விஷ்டுபதாவின் தொடையில் சரியான காயம். அதிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இருந்தாலும் சும்மா இருக்கவில்லை அவன். வெறி பிடித்தவன்போல் ஓடிவந்து பன்றியை மீண்டும் மீண்டும் கோடரியால் தாக்கினான். இப்போது பன்றிநிசியை விட்டுவிட்டு அவன் பக்கம் திரும்பியது. இப்போது நிசி எழுந்து வந்து அதைப் பின்னாலிருந்து குத்தினாள்.
பன்றி ஒரு முறை விஷ்டுபதாவையும் ஒருமுறை நிசியையும் மாறிமாறித் தாக்கியது. குளிர்காலத்து இருட்டு வேளையில் அந்தஜனநடமாட்டமற்ற இடம் உலகத்தின் தொடக்க காலத்துப் போர்க்களமாக மாறிவிட்டது. அதில் இரண்டு மனிதர்கள்உணவுக்காக ஒரு பயங்கர மிருகத்துடன் கடுமையாகப் போராடினார்கள்.
வெகுநேரத்துக்குப்பின் பன்றிக்கு முகத்தில் பலத்த காயம் பட்டது.. அது பயங்கரமாகக் கூச்சலிட்டது. தாங்க முடியாதவலியில் அது சற்றுநேரம் மண்ணில் புரண்டது. பிறகு மேற்குப் பக்கத்துக் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
பன்றி ஓடி மறைந்ததும் விஷ்டுபதாவும் நிசியும் வெகு நேரம் ஜீவனில்லாமல் தரையில் கிடந்தார்கள். பிறகு மூச்சிறைக்க எழுந்து கிழங்கின் புதைந்திருந்த பகுதியையும் தோண்டி எடுத்தார்கள்.
கிழங்கு, ஆமை, வில்வப்பழம் இவற்றையெல்லாம் ஓரிடத்தில் குவிந்து வைத்துக் கொண்டு அவர்கள் பங்கு பிரித்துக் கொள்ளமுற்பட்டபோது மழை பலமாகப் பிடித்துக் கொண்டது. சண்டை நடந்து கொண்டிருந்த வரையில் அவர்கள் அதைக்கவனிக்கவில்லை. அப்போது பரபரப்பும் மிகப்பழமையான கொடூரமும் தவிர வேறெந்த உணர்வும் அவர்களுடைய மனதில்இடம் பெற்றிருக்கவில்லை. இப்போது விஷ்டுபதா கடுமையாகக் குளிர்வதை உணர்ந்தான். குளிர் உடம்பைத் துளைத்துக்கொண்டுபோய் எலும்பை நடுக்குகிறது. பற்கள் கிடுகிடுக்கின்றன.
“சீ சனியன் பிடிச்ச மழை!” என்றான் விஷ்டுபதா.
நிசி குளிரில் நடுங்கிக்கொண்டே சொன்னாள், “இங்கயே நின்னுக்கிட்டிருந்தா சாக வேண்டியதுதான்.. ஏதாவது ஏற்பாடுபண்ணு!”
“எங்கே போகலாம் சொல்லு?”
நிசி சற்று யோசித்துவிட்டுச் சொன்னாள், “மேற்கே ஒரு சுடுகாடு இருக்கில்லே, அங்கே ஒரு சின்ன வீடு இருக்கு. அங்கேபோயிடலாம் வா!”
“சரி”
இருவரும் அந்தக் குடிசைக்கு ஓடினார்கள். மயானத்துக்கு வருபவர்களின் உபயோகத்துக்காக எப்போதோ கட்டப்பட்டகுடிசை அது.
தன் உடம்பில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை துடைத்துவிட்டுச் சற்று நேரம் மூச்சிறைக்க உட்கார்ந்திருந்தான்விஷ்டுபதா. பிறகு “ரொம்பப் பசிக்குதேம்மா” என்றான்.
“எனக்குந்தான்.”
“சாப்பாட்டுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணலாம்!”
நிசி கிழங்கின் ஒரு பகுதியை வெட்டி எடுத்தாள். விஷ்டுபதா ஆமையின் ஓட்டிலிருந்து இறைச்சியைப் பிய்த்து எடுத்தான்.சிறிது நேரத்துக்கு முன் யாரோ அங்கே ஒரு சவத்தை எரித்து விட்டுப் போயிருந்தார்கள். அங்கிருந்து நெருப்பு எடுத்து வந்துஇருவரும் கிழங்கையும் இறைச்சியையும் சுட்டுச் சாப்பிட்டு ஏப்பம் விட்டார்கள்.
“இன்னிக்கு இப்பத்தான் வயித்துக்கு ஏதோ கிடைச்சிருக்கு” விஷ்டுபதா சொன்னான்.
“எனக்குந்தான்”
“சாப்பாடு ஆயிடுச்சு. இப்போ ஒரு பீடி கிடைச்சா..!”
“எனக்கு வெத்தலை போட ரொம்பப் பிடிக்கும். இப்போ வெத்தலை கிடைச்சா..!”
மழை இன்னும் வலுத்துவிட்டது. அடிக்கடி வானத்தைக் கிழிக்கிறது மின்னல்.
“இந்த மழை இன்னிக்கு விடாது போலேருக்கு!” நிசி சொன்னாள்.
“அப்படித்தான் தோணுது.”
“அப்படீன்னா ராவை இங்கேதான் களிக்கணும்..”
“ஆமா..”
சற்றுநேரத்துக்குப்பின் விஷ்டுபதா சொன்னான், “இன்னும் ஒக்காந்துகிட்டு என்ன லாபம்? நான் படுத்துக்கப் போறேன்..”
“நானும் படுக்கறேன்.”
இருவரும் இரண்டு பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு இடையில் சிறிது இடைவெளி.
வெகுநேரங் கழித்து நிசி திடீரென்று, “இந்தாப்பா” என்றாள்.
“என்ன சொல்றே?” விஷ்டுபதா கேட்டான்.
“என்கிட்டே வா.”
“ஏன்?”
“ரொம்பக் குளிருது.. என்னைக் கொஞ்சம் கட்டிக்க..”
அந்த குளிர்காலத்து மழையிரவில் உடம்புச் சூட்டுக்காக நிசியும் விஷ்டுபதாவும் ஒருவரையொருவர் இறுகக் கட்டிக்கொண்டு படுத்திருந்தார்கள்..
மறுநாள் காலையில் ஆமைகளையும் வில்வப் பழங்களையும் சண்டைபோட்டுக் கைப்பற்றிய கிழங்கையும் பங்குபோட்டுக்கொண்டு நிசி வடக்கு நோக்கிப் போனாள், விஷ்டுபதா தெற்குப் பக்கம் நடந்தான்..
பிரபுல்ல ராய் (1934 -)
பிறந்தது டாக்காவில். வட்டார வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவல் எழுதி இலக்கியப் பணியைத் தொடங்கினார். தேஷ்-இல் வெளியான நாவல் பூர்வ பார்வத்ய மூலம் அறிமுகம் பெற்றார். இவரது பெரும் படைப்பான கேயா பாத்கிரார் நௌகா (இரண்டு பாகங்கள்) தற்கால வங்காளி வாழ்க்கையில்ன் வரலாறாகும். தற்போது ஒரு கல்கத்தாப் பத்திரிகையின் ஒரு பகுதிக்கு ஆசிரியர். இவர்து சில கதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன. மனப்பூர்வமான ஈடுபாட்டோடு கவர்ச்சியான முறையில் கதைகள் எழுதுகிறார். கதையின் அமைப்பு, பாத்திரப் படைப்பு இரண்டிலும் திறமை பெற்றவர்.
– சாரதீய ‘அம்ருத’, 1970.
– அனைத்திந்திய நூல் வரிசை, வங்கச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1997, தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய், வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.