பிறழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 17,384 
 
 

அதிகாரத்துவம் கல்வித் தரத்தை ஒரே மட்டத்தில் அமைத்தபோது. அதன் ‘தரப்புள்ளி’களில் ‘குல்லா’ மாட்டி. ‘இனப்பாகுபாடு’ வைத்த, தமிழ் மாணவர் சிரங்களையே கொய்கின்ற ‘தரப்படுத்தல்’ வாளை வீசியபோது, அது தன் இனத்துக்கு விட்ட சவாலெனக் கருதி, இவன்போல் சக மாணவ உலகமே கெம்பியது.

மேசை கொள்ளாமல் சிதறுண்டு கிடக்கிற புத்தகங்கள் – கொப்பிகள் – நோட்ஸ் தாள்களை ஒழுங்கு பண்ணி அழகாக வரிசைப் படுத்தவும் அவன் மனசு ஏவுகிறதில்லை – நேரமில்லை.

ஒரே கரிசனையோடு வாசிப்பு.

புத்தகம் விரித்தால், ‘போல்ட்பென்’ எடுத்தால் அததிலேயே ஆழ்ந்துவிடுகிற போக்கு.

‘எலாம்’ வைத்த மணிக்கூடு ‘கிணிங்’கிட்டால் புரைகிற தேகம் எப்பன் சிலும்பும். நிலை குலைந்து தலை நிமிர்த்தும்போது மணிக்கூட்டை நுணாவின கண்கள் சாடையாக அறையை மேயும்.

சுருட்டி மூலைப்பாடத்தே கிடக்கிற பாய் கும்பகர்ணனை நினைவு படுத்தி வெருட்டும் – அசையான்.

அத்தோடு நேர சூசிப்படி அடுத்த கொப்பி – புத்தகம் எடுபடும் -விரிபடும்.

எரிகிற விளக்கு அணைகிற சாயல் மண்டி வருகிற இருளாக உணர்த்துகிறபோதுதான், அம்மா, லாம்புக்கு எண்ணெய் விட்டுக் கொளுத்தித் தாங்கோ என்ற குரல் கீறலாகக் கமறி வரும்.

படிக்கவென்று குந்தினால் ஒரே இருக்கை – கதிரை புண்டுவிட்டது. அதன் கவனிப்பும் இல்லை. பிரப்ப நார் பிய்ந்து சிலும்பாகிக் குழிபாவிய நிலையிலும் குறாவி இருந்து ஒரே வாசிப்பு – வைராக்கியத்தோடு.

முழு விஸ்வாசத்தோடு தன்னை மாய்த்து என்னைப் படிப்பிக்கிற அம்மாவுக்கு – பெண் பிறவிகளுக்கு நான்தான் ஒரு ஆறுதல்’.

எப்பவும் அவன் மனசில் ஒரு குடைவு.

மைந்தன் படிப்பில் மூழ்குகிற கோலத்தை, அவள் – தாயானவள், கதவை நீக்கிவிட்டு வயிறு குதற – நெஞ்சு புரைய, ஒரு தவிப்போடு கண்ணூனிப் பார்ப்பான்.

அவளை மீறி எழும் பெரும்மூச்சு இதயத்துள் கழித்து அடங்கும். சிலவேளை கொட்டாவியோடு கண்ணீர் சிதறும்.

அவள் இடையறாது சொல்லிக்கொள்வாள்.

மூண்டு பெண் குஞ்சுக்க இது ஒரு ஆண் தவ்வல். அஞ்செழுத்தும் தேப்பன்தான். மேலைக்கு நல்லாப் படிச்சு ஒரு ‘ஆளா வந்திட்டுதெண்டா – இதை ஒரு ‘ஆளாக்கி’ப்போட்டனெண்டா, நிம்மதியாக கண்மூடியிடுவன்.

ஆதங்கம் அந்தரிப்பாக அவள் நெஞ்சு குதிக்கும்.

எந்த நேரமும் – நெடுக, நெடுக இப்படித்தான்.

‘இந்த முறை கட்டாயம் ‘கம்பசு’க்கு எடுபடுவன்’ என்ற திட மனம் அவன் நெஞ்சில் வஜ்ஜிரம் பாய்ச்சியிருக்கிறது.

யாழ்நகர எல்லை தாண்டிய பற்றைக் கிராமவாசியாகியதால்ää கல்லூரி வேளை போக, மீதிக் காலம் பாடத்துக்கு ஒரு ‘ரியுஷன் மாஸ்டர்’ என்று, இரு வீடுகள் இவன் தஞ்சம்.

புருஷன் உலகச் சுமை ஏற்க, இவள் குடும்பப் பாரம் ஏற்று, பெற்ற செல்வங்கள் மூலம் அதை இறக்கும் கற்பனையில் முகிழ்த்ததாகவும் இல்லை. தானே மகவுகளின் எதிர்கால உயர்வுக்குப் ‘பசளை’யாகிற இலட்சிய தாகம்.

புத்திரன் ஓ.எல். வகுப்புக்கு ஆளானபோது அவள் யாழ்நகரை அண்டிய புருஷன் உறவினர் வீடுபோய் – புருஷன் தியாகத்தால் உயர்வான வீடு உதவும் என்ற திடத்தோடு – மைந்தனை ‘சயன்ஸ்’ வகுப்பில் சேர்க்க வேண்டி நின்றபோது…

ஏற்றிய ஏணி உதைபட்டது.

பையன் படிக்கமாட்டான் வீணாக மினைக்;கெடாதே

உபதேசம் – கைவிரிப்பு.

அந்த வீட்டுப் புதல்வர்களை இவள் தன் மகவுகளாகப் போஷித்து, ஆசித்து அவர்களை உய்வித்த பல சம்பவங்கள், இவள் மைந்தனை உதறியபோது அவள் நெஞ்சுள் அக்கினியாக எரிந்தன.

செய் நன்றி மறந்த பாதகர் – இரக்கம் இறந்த அரக்கர் – சுயநலப் பேய்கள் – சுரண்டற் தட்டுவாணிகள். அவே பிள்ளையை என் பிள்ளைபோல் கருத, என் பிள்ளையைப் பிற பிள்ளையாக உதறிய சண்டாளர்’

உக்கிர மன அவச எரிவு ஏமாறிய இவள் இதயத்துள் குமுறää மதுரையை எரித்த கண்ணகி சபிப்போடு திரும்பி வீடுறைந்தவள்.

மாதா மனப் புண் மைந்தன் இதயத்தில்.

அவள் மனசுள் உறைந்த வெப்பிசாரம் புரட்சிகர உணர்வுகளாக வெளியேறி அவளை வைராக்கியப் படுத்திற்று.

யாழ்ப்பாணப் பட்டினத்தை ஆக்கிரமித்துள்ள சினிமாப் ‘போஸ்டர்களை’ எள்ளி நகையாடுகிற மாதிரிப் படை எடுத்துக் கிடக்கிற ‘அறிவுப் பாசறை’களான ரியூட்டரிகளில் மாணவ கணங்கள் நாட்பூராகவும் தங்களை ஒப்புவித்து, கொக்குத் தவமியற்றும் ஆசிரிய மணிகளின் பணப்பசியைத் தீர்க்கும் ‘அரிய சேவை’க்குள் இவனும் ஆளாகியபோது, இவன் படும் அவஸ்தை, இவனைவிட இவனைப் பெற்றவளுக்கே பெருஞ் சுமையாயிற்று.

கல்லூரி விட்டு வந்த களை ஆற நேரம் பத்தாது. விடிய மாட்டிய களிசான் கழற்ற மனம் வராது. இரண்டு பொத்தான்களைக் கழற்றிக் களிசானை இழக்கி, அதுக்கு மட்டாகக் கால்களை மடக்கி இருந்து, நாலுவாய் கவனம் ‘ஆவாவா’வென்று அந்தரமாகக் கவ்விவிட்டு, வாய், கை அலம்பிய பின் சயிக்கிளை எடுப்பான் – குருவி ஓட்டம்.

‘ஆமி நிப்பான்… போறது, வாறது கவனமடி’யென மைந்தனை எச்சரிக்கும் பாவம், தாய் விரசுதாபமாகத் தெரியும்.

அம்மா எச்சரிக்கையை மனசுள் தேக்கி, திறந்த வெளி, வீதிகள் தவிர்ந்த, வசதியான குச்சொழுங்கைகளுக்குள்ளால் சயிக்கிளை விட்டு, சங்கிலி மன்னன் சிலை தாண்டுகிறபோது, தறுதலைப் பேடிகள், சங்கிலியன் சிலை வாள் ஒடித்த விறுத்தம் இவன் நெஞ்சைத் துருத்தும்.

மூர்க்க ஏகாதிபத்திய போர்த்துக்கீசரை விரட்டி ஓடவைத்த மாவீரத் தமிழன் – சங்கிலியன், தன் உருக்கு வாளை உறையிலிருந்து உருவி எடுத்து எகிறி நிற்கிற விறல்மிகு கம்பீரியம், மனசுள் உருவகமாகி அவனை உணர்ச்சிப் பிழம்பனாக்கும். சங்கிலியன் தோப்புக் கழிந்து, ‘ஆமிக்காறன் நிப்பானோ?’ என்ற கிலியோடு நல்லூர் ஊடாக வந்துää யாழ் நகர ‘ரியூட்டரி’களில் கல்வித் தவம் செய்துவிட்டு இவன் வீடு திரும்ப மைம்மலாகிவிடும்.

அடிக்கொரு தரம் ஏங்கி, படலைக்கும் தெருவுக்குமாக அலைந்து, வயிறு பதற அந்தரிக்கிற மனக்கொதி, மைந்தனைக் கண்டபின் ஆறும்.

அவள் தன்னுள் வயிறு குதறப் பிரலாபித்துக் கொள்வாள்: ‘நாளொண்டுக்கு இருவத்தஞ்சு கட்டை சயிக்கிலடிச்சா அதின்ர பிஞ்சுத் தேகம் என்னத்துக்கு ஆகும்?’

புத்திரனைப் போகவிட்டுப்பின் நின்று அவள் கோலம் பார்ப்பாள் – சோகப் பெருமிதமாக.

நாள்தோறும் இப்படித்தான்.

தன்னால் தன் மாதா படுகிற பாடு அவன் இதயத்தில் முள் ஏற்றும்.

தான் மட்டுமல்லää தமிழ் மாணவ உலகே உத்தரிப்பிஸ்தலத்தில் மூழ்கிற அபாயம் அவன் கண்ணில் வலை விரிக்கும்.

அதிகாரத்துவம் கல்வித்தரத்தை ஒரே மட்டத்தில் அமைத்தபோது, அதன் ‘தரப்புள்ளி’களில் ‘குல்லா’ மாட்டி, ‘இனப் பாகுபாடு’ வைத்து, தமிழ் மாணவர் சிரங்களையே கொய்கின்ற ‘தரப்படுத்தல்’ வாளை வீசியபோது, அது தன் இனத்துக்கு விட்ட சவாலெனக் கருதி, இவன்போல் சக மாணவ உலகமே கெம்பியது.

‘கல்வியில் இனபேதம் காட்டிக் ‘கள்ளத் தராசு’ பிடிக்கிற ‘ஆதிபத்திய நீதிமான்’களின் ‘மேதை’த்தனத்துக்கு நம்மினம் பலியாவதா?’
மாணவர்களுக்கு – இளங்காளைகளுக்கு ஒரே முழிசாட்டம்.

இன மதங் கடந்த இடது கன்னையர் கூற்றையும் காதில் போடாத ஸ்ரீமதியின் ‘தரப்படுத்தல்’ என்ற கருக்குத் தடத்தில் சிக்கிய மாணவ உலகத்துக்கு செகிட்டு அலியன் மாட்டிய ‘மட்டுப்படுத்தல்’ தூக்குக் கயிறாக விழுந்தபோது ‘இந்த அதிகாரத்வ சவாலையும் எதிர்கொள்வதுதான்’ என்று இவன் மனங்கிளர்ந்தது.

‘ஓடினறிலெவலில் ஒரு தடைவ குண்டடித்த பயப்பிராந்தி ‘அட்வான்ஸ்லெவல்’ என்ற கொப்புக்குத் தாவிய பின்னும் இவன் நெஞ்சை உலுக்குகிறது.

இவன் போக்கை அறிந்த சில சகபாடிகள் தம் அனுபவ முத்தரையை இவனிற் பதிக்க ‘டே மச்சான், தெண்டிச்சுப்பார், இல்லாட்டிக் குதிரை ஓடிப்;பார்’ என்று கூசாமல் பரீட்சித்ததையும் அல்லத் தட்டி, ‘இது அறிவு வளர்ச்சிக்கு அடாத செயல், குண்டடித்தாலும் குதிரை ஒடமாட்டேன்’ என்று இவன் அரிச்சந்திர மயான காண்டம் வாசிப்பான்.

‘நீ அறிவுப் பசி கொண்ட ஆராய்ச்சி மேதையடா’ என்ற ‘கிண்டலையும்’ அவன் பொருட்படுத்துவதில்லை.

அடுக்கடுக்காக வருகிற அதிகார வில்லங்கங்கள் அவன் வைராக்கித்தைக் குலைக்கிற வேளையில், ‘படிப்பமா, விடுவமா?’ என்று ஒரு கிளர்வு அவனைக் குடையும்.

‘படிப்பை நிப்பாட்டிப்போட்டு, ஏதென் ஒரு வேலை வெட்டி – தோட்டந் துரவு செய்தால் என்ன?’ என்ற விரகதாபம், ‘எப்பிடியும் கம்பசுக்கு எடுபடுவன்’ என்ற அவன் திடக சித்தத்தைப் பரீட்சிக்கும். ஆனால், அப்பா ஓயாமல் அறிவுறுத்துகிற கடிதங்கள் அவனை உசார் படுத்தும்.

அவர் எழுதுவார்: ‘என் மகனே, பிதாவுக்குப் பிழை செய்தாலும் மாதாவுக்கும் – சகோதரிகளுக்கும் வஞ்சகம் செய்யக்கூடாது. நல்லாப் படிச்சு அவேக்கு ஆறுதலாக இரு’

சகல நினைவுகளையும் தேக்கி படிப்பில் மூழ்குவான். அறுந்து சிலிம்பின பின்னற் கதிரையில் ‘பொறுக்கக்’ குந்தி, தேகம் குறாவி நாரி கூன இருந்து படிக்கிற புத்திரைனைப் பார்க்கிற நேரம், மாதா வயிறும் பயோதரங்களும் தகிக்கும்.

‘ஆன வாகில தீன் ஊண் இல்லாம ரா நடுச்சாமமும் கண்ணுறங்காமப் படிச்சா, உந்தத் தேகம் என்னத்துக்குக் கூடும்?’ என்ற தவிப்போடு, முட்டை, பால் கோப்பி போட்டு ஆற்றி, மகன் பக்கம் வைக்கிறதில் இவள் தானுண்கிற திருப்தி காண்பாள். ‘கோப்பி ஆறுது. குடிச்சுப்போட்டு இருந்து படியன் தம்பி’ என்று கனிவாக அரட்டுவதில் வாஞ்சை. அம்மாவை மகிழ்விப்பதிலும் அவனுக்குக் குஷி.

நாரி நெருட எழுந்து கோப்பி ‘ஜொக்கை’ எடுத்து, அம்மா பார்க்கää முற்றத்தில் சாட்டுக்கு உலாவிக்கொண்டு அரை ‘ஜொக்’ குடித்தபின், எனக்குப் போதும்’மா நீங்க குடியுங்கோ என்று கொடுப்பான்.

முழுக்கக் குடிச்சாத்தானே தேகத்தில் சுவறும் என்று கடும் பாசத்தோடு சினப்பாள்.

எனக்குப் போதுமணை என்கிறவன் அறைக்குள் கதிரையில் குந்திவிடுவான்.

ஒவ்வொரு தினமும் – பொழுது விடிந்து உறையுமட்டும் இப்படியாக ஒரே அக்கப்பாடு.

‘இந்தக் கோசு ‘பாஸ்’ பண்ணி இது கம்பசுக்கு எடுபட்டுதெண்டாää ஒம்பது கிழமை வெள்ளி விரதம் அனுட்டிச்சு சந்நிதியானுக்கு ‘மயில்காவடி’ எடுப்பிக்கிறது’

ஒரு நேர்த்தியை தன்னுள் பிரகடனப்படுத்திய பின் அவன் மனசில் சாந்தி நிலவிற்று.

மாதாவின் தியாகம் – அப்பாவின் அறிவுரை – மைந்தன் வைராக்கியம் வீண் போகவில்லை.

அவன் உயர்தரப் பரீட்சை திறமைச் சித்தியாகியது.

‘அட்வான்ஸ் லெவல் றிசல்ட்;’ போதுமான ‘மார்க்கஸ்’ சகிதம் வெளியான பின்தான் தேக வலி, நாரி நோ, இடுப்புக்கொதி, நெஞ்சுளைவு, மண்டைக்குத்து இவனுக்குத் தெரிந்தன.

‘றிசல்ட்’ தெரிந்த அடுத்த கணம் ‘ஆத்துப்பறந்து’ வந்து, சயிக்கிளை அப்படியே கிடத்திவிட்டு, அடுக்களைக்குள் பூந்து, அம்மா, நான் ‘பாஸ்’ பண்ணிட்டேன்’ம்மா என்ற மகனைக் கட்டிப்பிடித்து முத்திக்க எடுத்த மாதா கை அவனில் தாவமுன், அவன் சாஷ்டகமாக விந்து அம்மாவின் பாதங்களை வருடிக் கொஞ்சி வெம்பிய முகம், அவள் அக்களிப்புக் கண்ணீரில் சிலிர்த்தது.

உரிய காலத்தில் ‘கம்பஸ்’ படிவம் வந்து விட்டது.

முதற் படிவமே ‘யூனிவர்சிட்டி’ப் பட்டம் பெற்று விட்டதாக ஒரு பெருமித உணர்வு, அவன் மனக் கண்ணில் பூ விரித்தது.

ஆனால்…?

‘மோட்சலோகம்’ என நினைத்து, அதுக்காகத் தவங்கிடந்த அவனுக்கு அந்த மோட்சக் கதவு – பல்கலைக்கழகக் கபாடம் திறக்கப்படவில்லை.

அவனுக்கு அந்தப் பொசிப்பு இல்லை.

தன்னைவிட – தன்னின மாணவரைவிட, இன்னோர் இன மாணவர் எத்தனையோ ‘மார்க்ஸ்’ குறைவாகப் பெற்றும் கம்பசுக்கு எடுபடுகிற அநியாயத்தை இனியும் அனுமதிக்க முடியாது – இந்த அறுவுச் சூன்யத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது – என்று இவனும் இவனொத்த மாணவர்களும் சங்கமித்துக் கூட்டங் கூடிக் கொள்கிறபோது,

தரப்படுத்தலை மட்டுப்படுத்தி, மட்டுப்படுத்தலை விகிதப்படுத்தி, விகிதப்படுத்தலையும் பேரிடியாக்கிய அதிகார அமர்க்களம் சிங்க கர்ச்சனையாக, யானைப் பிளிறல்களாக, மஞ்சள் பூதங்களாக. ‘தமிழ் மாணவர்கள் முக்கடலைத் தாண்டியும் முக்தி பெறவில்லை’ என்கிற வெஞ்சினம் இவன்போல் இவன் தோழர்களையும் பிரளயப்படுத்திற்று.

கல்லூரிகள் – கலாசாலைகள் ‘மந்தகதி’க்குப் புத்துணர்வூட்ட வெளிக்கிட்ட ‘தொண்டர்’களான பணப் பூஜாரிகளின் தயவு, ஓய்வு நேரப் பண்டித வித்தகர்களைக் ‘கற்பவை கற்றபின் விற்கும்’ வணிகர்களாக்கியதால், யாழ்நகர் ஏகலும் ‘ரியூட்டரி’கள் நவீன மோஸ்தரில் வியாபித்துக் கொள்வதை அதிர்ஸ்டமாக்கிய பாக்கியசாலிகளாவதை இவனையொத்த மாணவத் தோழர்கள் வெறுத்தனர்.

தங்கள் எதிர்காலம் முதலாளிய ஏமாற்றுபவர்களால் நம்பிக்கையூட்டப்பட்ட சோக முடிவாகுவதை உணர்ந்தபோது – மரத்துப்போன இவன் உணர்ச்சி கெந்தகித்துச் சீறியது.

நீர் குமிழ்த்துச் சிவந்து ‘பளபள’க்கிற அவன் கண்களில் அம்மா தோற்றமே தரிசனமாகிறது.

‘அம்மா, கலங்காதே. இந்தச் சுரண்டற் பேரினவாதச் சகுனியை எதிர்கொண்டு வெற்றி கொள்வேன்’

விறல் கொண்ட மனசுள் ஒரு சபதம்.

சாரை சாரையாக முற்றம் சூழ்ந்த சக மாணவர் படை கண்ட இவன் தாய், மக்காள், இதென்ன உங்கட கோலம்? என விசனித்துத் தவிக்கிறதை மைந்தன் சகித்துக்கொண்டு கேருங் குரலில் கூறுகின்றான்:

இனியும் நாங்கள் உரிமையிழந்து நடைப்பிணமாகச் சீரழியக் கூடாது. நீதிக்காக அதிகார எதிரியுடன் சமரிட, சகல சனங்களும் இணைகிறபடியால்நீதி – சமத்துவம் கிடைக்கும்.

தருமர்போல், ஒரு தவஞானியாகவிருந்த மகன் வாக்கில் சீறும் வேங்கைத்தனம்.

வயிறு துழாவ, மனம் தவிக்க, இதயம் பதற, சதிரம் திகைக்க அங்கலாய்க்கிற மாதாவுக்கு அவன் தேறுதல் கூற வக்கின்றி, விக்கிரமாக நிற்கிற கோலம், சக மாணவர் குழாத்தை நெகிழ்த்துவதாகவும் இல்லை.

அம்மா, எங்கட தாய்மாரும் உங்களைப் போலத்தான் தவிக்கினம். நாங்க இந்த அநியாயங்களை எதிர்த்து நீதிக்காகப் போராடப் போறம்.

‘பொடியங்கள் சும்மா சினிமா வசனம் பேசுறாங்கள்’ என்றுதான், ‘நாய் வாவெண்டாலென்ன, பூனை சிங்காசனத்தில் இருந்தாலென்ன’ என்பவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் …?

மறுநாள் அவனையொத்த காளைகளை ஊரில் காணவில்லை!

‘ஐயோ என்ர புள்ள!’

அவன் முகங் குப்புறப் படுத்திருக்கிறான்.

இப்பதான் அவள் தொண்டைக்குள் பச்சைத் தண்ணி இறங்கியது – யோசனை இறங்கவில்லை.

ஒரு நாள் நடு இரவு…

கனரக ‘ஜீப்’ – கவசவாகன ‘ட்ரக்’ வண்டிகளின் உறுமல், தெருப்படலையடியில் அதிர்ந்து கேட்டது.

நாய்கள் அம்மாறு போட்டன.

அங்கலாய்த்து விழித்த அவள் கண்களில்…

வீட்டுப் படலையை முண்டியடித்துக்கொண்டு ‘கடகட’வென்று சரமாரியாக இறங்குகிற பச்சைக் காக்கிப் ‘பூட்ஸ்’ சரடுகள்.

சதிரம் கொடுக அவள் திகைத்துப்போய் விட்டாள்.

கோடை இடியேறு விழுந்தசாடை நெஞ்சு ‘திடுக்’கிட எழுந்து, ‘அவுக்கெடி’யெனக் கதவைத் திறந்தவள், பதகளித்தபடி ‘குசுகுசு’ப்பாகக் குரலடக்கிச் சொல்கிறாள்:

தம்பி டேய்… சத்தம் போடாமல் கெதியா எழும்பு… ஆமியோ, பொலிசோ வருமாப்போல கிடக்கு. பின்னால பனை வடலிக்க ஓடிப்போய் மறைஞ்சு நில்.

அங்கலாய்த்த அவள் பார்வையிலோ, தேடுதலிலோ, தடவலிலோ மைந்தன் அசுமாற்றம் காணவில்லை.

சுருட்டி வைத்த பாய்தான் மூலைப்பாடத்தே தடக்குப்படுகிறது.

மனசிற் குமைந்த கிலேசம் சாடையாக விடுபட – பதகளிப்பு ஆற – நெஞ்சு நீவி ஒரு பெருமூச்சு.

‘என்ர பிள்ளையைச் சந்நிதியான் காப்பாத்திட்டான் – அம்மட்டும் போதும்’

மனசு தேறி, கொஞ்சம் தெம்பு வந்துகொண்டிருக்க…

எதிர்ப்பக்கமாக எங்கிருந்தோ ‘திடீர்’ அதிர் வேட்டுக்கள்.

மண்டை கிலுங்கி விறைக்க … கண்கள் கதிரிட்டு மின்னின.

‘ஐயோ! நான் என் செய்ய … என்ர ஆண் குஞ்சு’

வான மண்டலங்கள் அதிர்கிற மறு வேட்டுக்கள்.

‘ஆ… ஐயோ…. நான் பெத்த செல்வமெடியோ….!’

நட்சத்திரங்கள் வெடித; சிதறி, பூமி தாவும்போது…

தொண்டை புடைக்கக் கதறிய அவள் குரல் அவளுள் அடங்கி…சடலமாக…

விடிகாலை காகங்கள் கரைகின்றபோது…

பசுமாடும் கன்றுகளும் ரத்தச் சேற்றுள் விறைத்துப்போய்க் கிடக்கின்ற கோலம்…

வானத்தில் கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன – தொடர்ச்சியாக நட்சத்திரங்கள் மின்னி வெடித்துச் சிதறி விழுகின்றன – சுதந்திரமாக….

அனுப்பியவர்: நவஜோதி ஜோகரட்னம்

– 1986 அமிர்தகங்கை

– அகஸ்தியர் கதைகள், முதற் பதிப்பு: 1987, ஜனிக்ராஜ் வெளியீடு, ஆனைக்கோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *