கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,452 
 
 

“யக்கா, ஒரு தரத்துக்கு வெத்தல பாக்கு இருக்கா” என்று கையை நீட்டினாள் வள்ளி.

“ஆமா. நீ வேற, நானே இருக்குற ரெண்டு வெத்தலையை இணுக்கு இணுக்கா ஆஞ்சி பேருக்கு போட்டுக்குறேன்” என்றாள் சகுந்தலை.

“குடுக்கா, ராத்திலேர்ந்து ரவ வெத்தலை போடல வாயில, நாக்கு நமநமன்னுது; பல்ல கடுக்குது; பயித்தியமே புடிச்சுபுடும் போலருக்கு”

“இதென்னாடி வம்பாருக்கு, உட்டா அழுதுடுவ போலருக்கு” என்று தன் பொட்டலத்தைப் பிரித்து, வாடி இருந்த ஒரு வெற்றிலையை எடுத்து பாதி கிழித்து அவளிடம் நீட்டினாள்.

“முழுசா குடுத்தா என்னாக்கா” என்றாள் வள்ளி அதை வாங்கி தன் கையில் வைத்து நீவிக் கொண்டே.

“போவ வேண்டியதுதான் முழு வெத்தலைக்கு”

“சரி கொஞ்சம் பாக்கும், போயலயும் குடு”

பிரி கூலி

“அடி இவளே” என்று இழுத்துக் கொண்டே, கொஞ்சம் புகையிலையும் சிறிது பாக்கும், கொஞ்சம் சுண்ணாம்பும் கொடுத்தாள். வள்ளி இவள் கையிலிருந்து பாக்கு வெட்டியை வாங்கி, அவசரமாய் நறுக்கி, உள்ளங்கையில் வெற்றிலை, புகையிலையுடன் சேர்த்து கசக்கி வாயில் போட்டு, சுண்ணாம்பை வழித்து நாக்கில் தடவ இரண்டு கடை வாயிலும் வைத்து மென்று சாறு ஊறிய பிறகுதான் அவளுக்கு வாய்க்கடுப்பு அடங்கியது.

“ஏன்டி, எப்ப பொழுது விடியும்னு மேல தெருவுலேர்ந்து ஓடியாந்தியாக்கும். ஓசி வெத்தலை பாக்கு வாங்கிப் போட்டுக்க” என்றாள் சகுந்தலை.

“என்னா பண்ணச் சொல்ற? வெத்தல பாக்கு பித்து பிடிச்சு ஆட்டுது அப்புடி. ஒருநாள் முழுக்க சாப்புடாத இருந்துடலாம் போலருக்கு. ஒரு வேளை வெத்தலை பாக்கு போடாட்டி கை, கால்லெல்லாம் ஆட ஆரம்பிச்சுடுது. இதே ஒனக்கு இல்லன்னா நா குடுக்கமாட்டனா? ஒருத்தருக்கு ஒருத்தர் குடுத்துக்கிறதுதான், வாங்கிக்கிறதுதான்” என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அப்போது பக்கத்து வீட்டு பொடிசு வந்தது ஒரு டம்ளரைத் தூக்கிக் கொண்டு.””பெரியம்மா…. அம்மா கொஞ்சம் கொளம்பு இருந்தா வாங்கியாறச் சொன்னுது ”

“ஏன்டி உங்கூட்ல கொழம்பு வக்கில?”

“இல்ல பெரியம்மா, ராத்திரி வெறுஞ்சோறுதான். தண்ணி ஊத்தி பட்ட மொளகா சுட்டு தொட்டுக்கிட்டோம்.”

சகுந்தலை அவள் டம்ளரை வாங்கி வீட்டினுள் சென்று, முதல் நாள் இரவு வைத்த கருவாட்டுக் குழம்பை ஊற்றி அதனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு, வள்ளியுடன் வந்த உட்காரவில்லை. அதற்குள் மணிமேகலை வந்தாள்.

“அத்தாச்சி ஒரு இருவது ரூவா இருந்தா குடுங்க கை மாத்தா” என்றாள் சகுந்தலையைப் பார்த்து.

“நீ வேற, அடிச்சு போட்டா கூட எங்கிட்ட அஞ்சு ரூபா இல்ல. நா எங்க போறது இருவது ரூபாய்க்கு?”

“பாத்து குடுங்க அத்தாச்சி, ராத்திரி பூரா புள்ளக்கி ஒரே சளியும், சொரமும், கொரட்டு கொரட்டுன்னு இழுக்குது. செந்திலிட்ட போயி ஒரு ஊசி போட்டு மாத்திரை வாங்கிக் குடுத்தாத்தான் நிக்கும், கொஞ்சம் பாருங்க”

“நா எங்கடி போறது பணத்துக்கு?”

“கொஞ்சம் பாருங்க… புள்ள தெணறுற தெணறல், பார்க்க சகிக்கலை”

“இதென்னடி வம்பா இருக்கு. எந்த ஆம்புள சம்பாரிச்சுக் கொண்டாந்து கொட்றான் எங்கிட்ட? இங்க மட்டும் பணம் என்னா கொல்லை மரத்துலயா காச்சி தொங்குது? ”

“அப்படி சொல்லாதீங்க அத்தாச்சி. எனக்கு வேற வழி இல்ல?”

என்று கண்ணைத் துடைத்தாள் மணிமேகலை.

“இந்தா சீட்டுக் கட்ட வச்சிருக்குற பணம். எப்ப குடுப்ப?” என்று தன் இடுப்பில் செருகி இருந்த தலைப்பிலிருந்து முடிந்திருந்த பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.

“நாளைக்கே வேல வந்திச்சின்னா மொதோ ஒங்க கடனை குடுத்துர்றேன்” என்றாள் மணிமேகலை.

“ஆமா, நாளைக்கே நடவு, நாத்துன்னு தண்ணி வந்து பாஞ்சி கெடக்குல்ல. ஆத்துல எப்ப தண்ணி வந்து, எப்ப நம்ம ஊருக்குள்ள வரப்போவுது? அதெல்லாம் இப்பதிக்கு நடக்காது. இன்னும் ரெண்டு நாள் டயம் ஒனக்கு. என்னா செய்வியோ தெரியாது. வர்ற வெள்ளிக்கிழமை சீட்டுக்காரனுக்கு கட்டணும். நா பதில் சொல்ல முடியாது. ஆமாம்”

“சரி…. சரி…” என்று பணத்தை வாங்கிக் கொண்டு ஓடினாள் மணிமேகலை.

சகுந்தலைக்கு ஒரு பக்கம் எரிச்சலாவது எரிச்சல். மறுபக்கம் மக்கள் படும் பாட்டைப் பார்த்தால் பரிதாபமாய்தான் இருந்தது. நூறு நாள் வேலை வந்ததோ, பாதி ஜனங்கள் பசி பட்டினியால் சாகாமல் இருந்தார்களோ, இல்லையென்றால், பாதி ஊர் எப்போதோ காலியாகி இருந்திருக்கும். நூறு நாள் வேலையும் முடிந்து ஒரு மாதமாயிற்று. ஊரில் போத்து கழித்தல், வேலி கட்டுதல் போன்ற மராமத்து வேலைகளும் ஒன்றும் இல்லை. வயல் வேலைதான் ஒரே வழி. ஆற்றில் தண்ணீர் வந்து, வாய்க்கால் வழி ஊருக்குள் பாய்வதற்கு இன்னும் எத்தனை வாரமாகுமோ? அதுவரை ஜனங்கள் பாடுதான் திண்டாட்டம். அவர்கள் படும் அவஸ்த்தை ஒன்றும் சொல்லிக் கொள்வது போலில்லை.

“ரெண்டு நாளா வெறுஞ்சோறுதான் சகுந்தலை, என்னமோ அங்காடி அரிசி இருக்கோ, இந்தப் புள்ளவளுக்கு ரவைக்கு ஒரு வேளையாச்சும் வடிச்சுப் போடுறனனோ; பகலுக்கு பள்ளீடத்துல சாப்டுதுவோ… “என்னாத்தா, வெறுஞ் சோறு வக்கிறன்னு? நமநமன்னு புடுங்கி எடுக்குதுவோ. ஒரு புளிய, கறிய ஆக்குவம்னா காசு வேணாம். இன்னைக்கும் வெறுஞ் சோற வைக்க முடியாது. நாலு கொத்து முறுங்கைக் கீரை ஒடிச்சுக்கட்டுமா ஒம் மரத்துல? ஒரு புளிய கரைச்சு, இந்தக் கீரைய உருவி போட்டு கொதிக்க வச்சம்னா பேருக்கு ஊத்தி சாப்புடுங்க., கொஞ்சம் ஒடிச்சுக்கட்டுமா?” என்று காமாட்சி இவளிடம் சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் ஒடிக்க ஆரம்பித்தாள். பாவம் அவள் நிலை எல்லாவற்றிலும் மோசம். அவள் மகன் சதா ஊரில் வம்பு வளர்த்துவிட்டு பாதி நாள் ஜெயிலில்தான் கழிக்கிறான். மருமகள் இவன் பிடுங்கல் தாங்காமல் கோவித்துக் கொண்டு போய்விட்டாள். மகன் பெத்த பிள்ளைகளை இவள்தான் காபந்து பண்ண வேண்டி இருக்கிறது.

அவள் ஒரு கட்டு கீரை ஒடித்துக் கொண்டு சென்ற பின், சாம்பல் போட்டு பல்லை விலக்கிவிட்டு, பழைய சோறு போட்டு, சோறும் நீருமாய்க் கரைத்துக் குடித்தாள். மக்கள் படும்பாட்டைப் பார்க்கும்போது பயமாய் இருந்தது. இன்னும் இரண்டு நாட்களுக்கு குழம்பு எதுவும் வைக்கக் கூடாது. இருக்கும் கருவாட்டுக் குழம்பைச் சுட வைத்து, பத்திரப்படுத்தி கொஞ்சம், கொஞ்சம் தொட்டுக் கொண்டு, இரண்டு, மூன்று நாட்களை ஒப்பேத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டே, ஒழித்து மூடிவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை விளக்கி, கழுவி கவிழ்த்துவிட்டு வெளி வாசலுக்கு வந்தாள்.

அப்போது வாசுகி மாட்டை ஓட்டிக் கொண்டு நீள தாம்பு கயிற்றுடன் வந்தாள்.

“எங்க பொறப்டாச்சு மாடும் கயிறுமா?”

“மூணு நாளாச்சு அத்தை, ரவ புண்ணாக்கு, தவுடு வச்சி. பாவம், வாயில்லா சீவன். நாம கெடக்கலாம் பசியும், பட்டினியுமா பல்லக் கடிச்சிக்கிட்டு. பசு மாடு பாவம்ல? அதான் கொண்டு புல்லு காணுற எடத்துல மொளையடிச்சி கட்டிட்டு வந்தம்னா, ஏதோ அது வயித்துக்கு முடிஞ்சதை மேயட்டுமே” என்று சொல்லிவிட்டு, கயித்தைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடக்க, மாடு தளர்நடை போட்டு பின்னால் நடந்தது. கொழு கொழுவென எப்படி இருந்த மாடு? வயிறு ஒட்டிப் போய், எலும்பு எடுபட்டு பார்க்கவே கண்றாவியாய் இருந்தது. ஊரில் முன்னைப் போல யாரும் மாடு வைத்துக் கொள்வதில்லை. பாதிப் பேர் விற்றுவிட்டனர். மீதி கூத்தாநல்லூர் கசாப்புக்கு அடி மாடுகளாய்ச் சென்றுவிட்டன. ஏதோ ஓரிருவர் பாவ புண்ணயத்துக்குக் கட்டுப்பட்டு, மாடு வைத்துள்ளனர். மேய்ச்சல் நிலங்களும் அற்றுப் போய்விட்டன. புண்ணாக்கு தீவனம் விற்கும் விலைக்கும், பால் விலை போகும் பணத்துக்கும் சம்பந்தமே இல்லை. என்னென்னவோ புதிது புதிதான பெயர்களில் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துவிட்டன கடைகளில். எல்லா வீடுகளிலும் அந்தப் பாக்கெட் பால்தான்.

வெயில் உக்கிரமாய் எரித்துக் கொட்ட ஆரம்பித்தது. ஓர் இலை தழை கூட அசையவில்லை. பாரேன் என்னமோ பங்குனி, சித்திரை மாசமாட்டம் என்னா வெயிலு? ஒரு மழை பேஞ்சுதுனா கூட போதும். அவங்கவுங்க உழுதுட்டு, வெதையையாவது தெளிப்பாங்க. சனங்களுக்கு ஒரு வேல வித்தாச்சும் கெடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, நாலைந்து பெண்கள் தோளில் துண்டுடன் ஓடினர்.

“என்னா காளியம்மா… பொண்டுவ ஒரு நாளுவோ வயக்கரை பக்கமா? என்னா விசியம்?”

“அதாக்கா, எனக்கும் புரியலை. இரு பாத்துட்டு வாறேன்” என்று சொல்லிச் சென்ற, காளியம்மாள், சற்று நேரத்தில் ஓடி வந்தாள்.

“முக்கா வட்டத்துல, ராவுத்தர் பங்குல நடவாம்க்கா” என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டுக்கு ஓடி, ஒரு பழந்துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

“இது என்னாடி அதிசயம்” என்று அவசரமாய் எழுந்து தட்டியை இழுத்து மூடிவிட்டு, வாசல் படலைச் சாத்திவிட்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தாள் சகுந்தலை. அதற்குள் தீப்பிடித்தது போல் ஒரு பரபரப்பு பற்றிக் கொண்டது. பள்ளிக்குப் போன பிள்ளைகள் தவிர, வீட்டில் இருந்த நண்டு, சிண்டு சகலமும் ராவுத்தர் பங்கை நோக்கி ஓடியது.

“ஏதுடீ நாத்து? எங்க வெத உட்டாங்க?”

“நம்மூர்ல உடலக்கா… அவரு மச்சான் ஊரு வலங்கைமான்லேர்ந்து ரெண்டு டிராக்டர்ல ஏத்தி வந்திருக்காம். பத்து பங்கும் நடவாம். போர்லேர்ந்து தண்ணி எறச்சி தரிசுகளை எடுத்து, ஒடன் நடவாம்”

“என்னா திடுதிப்புன்னு?”

“அவுங்க மச்சான் ஊட்ல உட்ட நாத்துல மூணுகோட்ட நாத்து மீந்து போச்சாம். பறிச்ச நாத்து, அத வீணாக்காம அப்புடியே டிராக்டர்ல கொண்டாந்துட்டாங்களாம். நாத்தங்காலை சீர் பண்ணி, வெறவுட்டு, ஒரத்த தெளிச்சி, பிரி கூலி குடுத்து, ஒட்டிக்கு ரெட்டியா செலவில்லாம நாத்தாவே வந்திடுச்சி. நடவு செலவு மட்டும்தானா? அதான் ஒடனேயே நடவாம். நேத்திக்குப் பரிச்ச நாத்த, நாளைக்கு வரைக்கும் இருந்தா மூட்டழுவி வீணாயிடாதா?” என்று பேசிக் கொண்டே ஓட்டமும், நடையுமாய் வயலை அடைந்தபோது, இவர்களுக்கு முன்பே பாதி ஜனம் அங்கே நின்றது.

“அடி ஓ வூட்ல… ஊத… ஏ மாரங்குடி… வந்த நீ ஒரு வார்த்த என்னையும் கூப்புட்டுருக்கலாம்ல?”

“நீ வேறக்கா, அததும் ஆள் பொழைக்கறதே ஆவத்துல இருக்காம்? இதுல எங்குன ஒன்னைய கூப்புடச் சொல்ற”

10 மா பங்கும் அடைத்த கட்டளையாக ஒரே இடத்தில் இருந்தது.

“மாவுக்கு 6 வீதம் அறுபது நடவாள் மட்டும் எறங்கு” என்றார் ராவுத்தர்.

நான், நீ என்று அததும் சேற்றில் குதித்தது.

“கரெக்டா அறுபது மட்டும் நில்லுங்க. மீதியெல்லாம் கரையேறு”

“ராவுத்தரையா…. நூறு குழிக்கு ஏழு நடவாள்தான். போன வருஷத்துலேர்ந்து நடக்குது. அப்புடி பார்த்தா பத்துமாவுக்கும் எழுவது நடவாள் நடணும்”

“என்ன அக்குறும்பா இருக்கு. சரி… தொலையட்டும். எழுபது நடவாள் மட்டும் நில்லுங்க. மீதி சனம் கௌம்புங்க” என்றார் ராவுத்தர்.

“இருங்க ராவுத்தரையா… தரிசு களை எடுக்காம நடமுடியுமா? பங்குகள்ல கண்ணி இல்லாத சுத்தமா இருந்தாதான, நடவு மொறயா இருக்கும்? எடுக்காம நட்டா பத்தே நாள்ல பங்கு முழுக்க பயிர அம்மி களைல எவ்விடும். இப்ப எடுத்தா நூத்துக்கு ரெண்டு நடவாளு. அப்புறம்னா கண்டிப்பா பத்தத் தாண்டும். என்னா சொல்றீங்க?”

ராவுத்தர் யோசித்தார். இதுதான் சரி என்று பட்டது.

“ஒரு முடிவோடதான் வந்திருக்கீய போல. செய்யுங்க. மொத்தமா கணக்கு எவ்ளோ ஆவுது. எழுவதும் இருவதும் தொன்னூறு நடவாளா? சரி… குடுத்துர்றேன்”

“ஐயா… ஐயா… டீ செலவு மறந்துட்டிங்களே”

“அதான பாத்தேன். அடி மடீல கை வைக்காம விடுவீகளா? அது எத்தினி ரூவா? அட அல்லாவே… நா தலைல துண்ட தூக்கிப் போட்டுகிட வேண்டியதானா?”

“நெறைஞ்ச வயல்ல நின்னு அப்புடி சொல்லாதீங்க.. அமோகமா வெளஞ்சி சோரா டிராக்டர் நெறைய அள்ளிக்கிட்டு போப் போறீங்க லட்சுமிய”

“சரிம்மா, நட விடுங்க அதுவள. தொன்னூறு சனம் நின்னுகிட்டு கௌம்புங்க. நடவு ஆவ வேண்டாமா?”

“ராவுத்தரையா… நாங்க மொத்தம் எரநூத்தி நாப்பது சனம் இருக்கோம். எல்லாருக்கும் வவரு இருக்கு. பசி இருக்கு. எல்லாரும் அன்னன்னிக்கி ஒழைச்சாத்தான் ஒரு வாய் சோறு திங்க முடியும். அதுனால தொன்னூறு சனம் மட்டும் வேல பார்த்தா மீதி எங்க போவும்? அதுனால எல்லாரும் எறங்கி நடறோம். நீங்க தொன்னூறு சனத்துக்கு உண்டான சம்பளத்தையும், அதுக்குண்டான டீ செலவையும் பணமா குடுத்துடுங்க. நாங்க மொத்தமா போட்டு பிரிச்சி ஆளுக்கு எவ்ளோதோ அதை எடுத்துக்கிறோம். ஏதோ நெரந்தர வேல வர்ற வரைக்கும், ஒரு ரெண்டு நாளைக்கு எல்லார் வூட்லயேம் அடுப்புப் பொகையும். என்னா சொல்றீங்க?”

ராவுத்தர் அசந்து போய்விட்டார். தனக்கு நடவும், களையும் அரை நேரத்துக்குள் முடிந்துவிடும் என்பதால், சந்தோஷத்தோடு ஒத்துக் கொண்டார். பாதி பேர் தரிசு களையைப் அரிக்க. பத்துபேர் வாங்கிக் கொட்டினர். பட்ட கயறுடன் இருபது பேர், நடவை பிரித்துப் போட, நாற்று முடிகளை வீசிக் கொண்டே மீதிப் பேர் நட ஆரம்பித்தனர். போர் மூலம் இறைக்கப்பட்ட நீர், சீராய்ப் பாய்ந்து கொண்டிருந்தது. நான்கு ஆட்கள் அடி உரத்தை வீசிக் கொண்டு வந்தனர். எழுதப் படிக்கத் தெரிந்த நான்கு பெண்கள் நடும் பெண்கள் பெயரை வரிசையாய் எழுதிக் கொண்டு வந்தனர்.

239 நபர்தான் வந்தனர். யார் நட வரவில்லை? என்று சிண்டை பிய்த்துக் கொண்ட பொழுது, மேல தெரு மயிலாம்பு வரவில்லை என்று தெரிந்தது. நடவு, வயல் வேலை என்றால் முதல் ஆளாய் வந்து நிற்கும் மயிலாம்பு ஏன் வரவில்லை என்று யோசித்தனர். எல்லாருக்கும் காரணம் புரிந்தது. அவளுடைய ஒரே மகள் புனிதா கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறது. பலத்த தீக்காயம். மகள் அருகிலேயே மயிலாம்பு இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒரு வாரமாயிற்று. பாவம் அந்தப் பெண் எப்படி இருக்கிறாளோ? ம்ம்… இல்லாவிட்டால் மயிலாம்பு இல்லாமல் நடவு நிறக்குமா? பேச்சும், சிரிப்பும், கிண்டலும், நையாண்டியும், அடடா… மயிலாம்பு நிற்கும் இடம் களஞ்சியம்தான்.

வயலில் அவரவரும் உற்சாகமாய், சுறுசுறுப்பாய் நட்டுக் கொண்டு வந்தனர்.

“அப்பாடி நிம்மதியா டீ குடிக்கணும் இன்னைக்கு, ஒண்ணுக்கு ரெண்டா?”

“நல்லா வெத்தலை பாக்கு வாங்கி வச்சுக்கிட்டு பஞ்சமில்லாத போட்டு மெல்லணும் ரவைக்கி பூரா ”

“நல்ல கொழம்பு வச்சு… வயிறு குளிரச் சாப்புடணும்”

ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாய்க் கனவு கண்டு கொண்டே நடவை நட்டனர். நடவு ஆகும் ஜோரைப் பார்த்த ராவுத்தர், தன் செலவில் வெல்லம், டீத்தூள் வாங்கி வரச் சொல்ல, பங்கு தலை மாட்டிலேயே மூன்று கல்லைக் குவித்து, தேநீர் தயாரிக்கச் செய்து எல்லா சனங்களுக்கும் கொதிக்கக் கொதிக்க கொடுக்கச் செய்தார். மாலை ஆறு மணிக்கு முடிய வேண்டிய வேலை மதியம் 1 மணிக்குள் முடிந்தது. பத்து மா பங்கையும் மூட்டி, மீதி மீந்த இருபது முப்பது முடி நாற்றையும் கலக்க இருந்த இடங்களில் சேர்த்து நட்டு, பங்கை மூட்டி வேப்பிலை கொத்தை வயலுக்கு வயல் சொறுகி, எல்லாரும்போய் கால், கை கழுவி நிமிர்ந்த பொழுது அங்கே அலாதியான நிறைவு வழிந்தது, எல்லார் மனதிலும். அதற்குள் ராவுத்தர் பேசியபடியே ஒன்பதாயிரத்து சொச்சம் பணத்தை அய்ம்பது ரூபாய்த் தாளாகவும், பத்து ரூபாய் தாளாகவும் சில்லரையாகவும் எல்லாரும் பிரித்துக் கொள்ள ஏதுவாகக் கொடுத்தார். கையெடுத்துக் கும்பிட்டு அவரிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டாள் சகுந்தலை. அங்கிருந்த புளிய மர நிழலில் அமர்ந்து பணத்தைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று எழுந்தபோதுதான், குறுக்கு ரோட்டில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஒரு பெண் அழுதுபுரண்டு வந்து கொண்டிருந்தாள். கிட்டே நெருங்கி வரவும்தான் அது மயிலாம்பு என்று புரிந்தது.

“ஐயோ… எம்மக்கா… எம் பொண்ணு என்ன மோசம் பண்ணிட்டுப் போயிட்டாளே… நா பட்ட பாடெல்லாம் வீணாயிடுச்சே… எம் பொண்ணு போயிட்டாளே…” என்று தன் மக்களைக் கண்டவுடன் ஆத்திரம் தாங்காமல் விழுந்து புரண்டு அழுதாள். எல்லாம் அப்படியே உட்கார்ந்து அவளைக் கட்டிக் கொண்டு சேர்ந்து அழுதனர்.

“பஸ்சுக்குக் கூட பத்து காசு எங்கிட்ட இல்லியே… ஓசீல சொல்லிட்டு ஓடியாந்தேன். எம் பொண்ணு பிரேதத்தைக் கூட ஒடச்சு அறுத்துப் பார்த்துட்டுத்தான் குடுப்பாங்களாம். எம் பொண்ணு உடம்பை வாங்கக் கூட எங்கிட்ட வக்கில்லையே…. நா என்னா பண்ணப் போறேன். எங்க போயி பிச்சை எடுப்பேன். நாளைக்கு அடக்கம் பண்ணக் கூட காசு இல்லையே” என்று அவள் இறந்து போன மகளுக்காக அழுவதா, அடுத்துப் பார்க்க வேண்டிய காரியங்களுக்குப் பணம் இல்லாததை நினைத்து அழுவதா என்று ஒண்ணும் புரியாமல் பெரிதாய் அழ, எல்லா சனங்களும் விக்கித்துப் போய் நின்றனர்.

சகுந்தலை சம்பளப் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு எல்லாரையும் ஒருமுறை பார்த்தாள். புரிந்து கொண்ட தினுசில் எல்லாரும் முழு மனதுடன் பார்வையாலேயே சம்மதம் கொடுக்க, நடவுப் பணம் அனைத்தையும் மயிலாம்பு கையில் கொடுத்தாள்.

“ஏந்திரி மயிலாம்பு, நாங்க இருக்கோம். ஒனக்கு வந்த கஷ்டம் எங்களுக்கு இல்லியா? இந்த நேரத்துல தோள் குடுக்காட்டி அப்புறம் என்னாடி மனுசங்க நாங்க, நீ கவலப் படாத, நீ யார் கிட்டவும் போய் கையேந்த வேண்டாம். நெருப்பு குளிச்சி செத்த ஒம் பொண்ணோட காரியத்தைக் கொறை வைக்காத செஞ்சுடலாம். ஏந்திரி… ஏந்திரி…. போய் ஆக வேண்டியத பார்ப்போம்” என்று மயிலாம்பை அணைத்துக் கொண்டு சகுந்தலை நடக்க, நடவு பெண்கள் அத்தனை பேரும் பின் தொடர்ந்து சென்றனர்.

– ஜூலை 2013, தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

1 thought on “பிரி கூலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *