பிரிவு..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2024
பார்வையிட்டோர்: 558 
 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது அற்புதமாக இருந்தது. நிச்சயமாக எனக்குத் தெரியும், 8.30க்கு ‘மூர்’ றோட்டில் தண்டவாளத்தின் ஓரமாக என்னைக் கடந்துபோகும் அந்தச் சிங்களப் பெட்டையை வைத்தே, அச் சிறுகதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

கையில் குடையோடும், சிந்தனை தேங்கிய முகமாயும் மெல்ல நடந்துபோகும் அவள், சோகம் நிறைந்தவளாக மனோரம்மியமான நடையில் பாத்திரமாகி இருந்தாள்.

யாரோ‘மூர்’ றோட்டிற்கும் ஸ்ரேஷனிற்குமிடையில் இருந்து 8.35 ட்றெயினுக்குப் போகும் ஒருவரே, அதை எழுதியிருக்கவேண்டும். எழுதியவரை அறிய நான் ஆவலாயிருந்தேன். அது‘வீரகேசரி’யில் வந்து, இரண்டு மூன்று கிழமைகளும் கழிந்துவிட்டன. 

2

அது எதிர்பாராமல் நிகழ்ந்தது. ‘சரஸ்வதி மண்டபத்’தில் ஒரு புத்தக வெளியீட்டு விழா முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஞானலிங்கம் அவரை அறிமுகப்படுத்தினான்.

“இவர்தான் சுப்பிரமணியன். நீர் முந்திச்சொன்ன ‘உறவுகள் பிரியும்’ கதையை எழுதினவர்.”

சந்தியில் ஞானலிங்கம் விடைபெற்றுக் கொள்ளுப்பிட்டிக்குச் சென்றான். நாங்கள்வெள்ளவத்தைக்குக் கதைத்தபடி நடந்தே வந்தோம்.

அந்த வீரகேசரிக் கதையை நான் பாராட்டியபோது, அவர் நன்றி தெரிவித்தார். “கடற்கரையால போகிற, அந்தச் சிங்களப் பெட்டையைத் தானே அதில் எழுதியிருக்கிறீர்” என நான் கேட்டபோது சிறிது தாமதித்துவிட்டு, தன் நண்பரைப் பார்த்து,

“நீரும் அந்தப் பெட்டையைக் கண்டிருக்கிறீர்தானே? உமக்கு அதைத்தான் எழுதியிருக்கிறனெனத் தெரிய இல்ல! நீர் ஒண்டும் அதப்பற்றிச் சொல்ல இல்ல” என்றபடி என்னைப் பார்த்து,

“நீர்தான் ஐசே சரியாய்ப் பிடிச்சிருக்கிறீர்!” என்று, மெல்லிய வெட்கச்சிரிப்புடன் சொன்னார். தொடர்ந்தும் கதைத்தபடி இருந்தார். அவரோடு கதைப்பதிலும் ஆவலாக இருந்தது.

இடுப்பளவில் உயர்த்தப்பட்ட இடது கையும் சிறிது சாய்ந்த தலையுமாக, கிறுகிறெனச் சிறிய கவடுகள் பதித்து நடந்தபடி அவர் கதைப்பது, விசித்திரமாய்த்தான் இருக்கும்.

பேச்சிடையே, தன்னைப்பபற்றிய விஷயங்களிற்கூட “இருக்கும், சில வேளை எழுதியிருப்பன், எழுதாமலும் இருந்திருப்பன்…. எனக்குத் தெரியாது….” எனத் தன்னைப்பற்றித் தனக்கே நினைவில்லாததைப்போல அவர் கதைத்தபோது, எனக்கு விசித்திரமாக இருந்தபோதும், அதனாலேயே தொடர்ந்தும் அவரோடு தொடர்புகொள்ள ஆவல்ஏற்பட்டது.

3

அதன் பின்னால் ஸ்ரேஷனில் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். அந்த 8.35 ஸ்லோ ட்றெயின் கோட்டையை அடையும் வரை, அந்தப் பதினைந்து நிமிடங்களில் நாங்கள் கலை இலக்கிய விடயங்களைப் பற்றிக் கதைத்துக் கொள்வோம். சில வேளை மௌனமாக அது கழியும். அவர் ரயிற் பெட்டியின் வெளிக்கம்பியைப் பிடித்தபடி, கடலையே இலயிப்பாகப் பார்த்தபடி நின்றுகொண்டிருப்பார். அந்த மௌனமும் அற்புதமாக இருக்கும்.

கோட்டையில் ‘பூந்தோட்ட வீதி’யில் அவர் என்னைப் பிரிந்து தன்னுடைய ‘ஒவ்வீசு’க்குப் போவார்.

அந்நாட்களில் ‘ஈழம்’ தினசரியின் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளிவந்திருந்தன. சுப்பிரமணியனின் ‘விசரர்கள்’ அதில் பாராட்டைப் பெற்றிருந்தது.

உள்ளடக்கம் எனக்குப் பிடிக்கவில்லைத்தான். மனக்கோளாறு கொண்ட பாத்திரங்களின் இயக்கங்கள்… ஆனால், அதில் கையாளப்பட்டிருந்த நடை….! அது அற்புதமானது.

அவரது எழுத்து நடையில் எனக்கு ஒரே இலயிப்பு.

நான் சொன்னேன், “உள்ளடக்கத்தில கவனஞ்செலுத்தினால் உம்மட அருமையான நடைக்கு பிரமிக்கத்தக்க சிறுகதைகளை நீர் எழுதலாம்.” ஆனால் அவர்,

“நான் என்ன செய்யிறது ஐசே, இந்த உலகமே அழகான காட்சிகளால, இனிய சோகங்களால நிறைஞ்சிருக்கிறதைப்போல… என்ர மனசுக்குள்ள கிடந்து பினையிற உணர்ச்சிகளையெல்லாம் அப்பிடியே சொல்ல வேணும் போலக் கிடக்கு. அதத்தான் எழுதிறன். எழுதினா ஒரு திருப்தி.”

‘மௌனி’யும் ‘லா.ச.ரா.’வுமென்றால் அவருக்கு ஒரே இலயிப்பு.  “எவ்வளவு அழகு! நுணுக்கம் நுணுக்கமான உணர்ச்சிகளையெல்லாம் என்னமாதிரி எழுதுகினம்! எல்லாராலயும் இப்பிடி எழுத ஏலாது ஐசே. இவையின்ர தாக்கத்தாலதான், எனக்கும் எழுத விருப்பம்.”

இடையிடையில், தான் எழுதிய சிறுகதைகளையும் காட்டுவார். அவருக்கு அவற்றை எழுதியதே திருப்தி. பத்திரிகைகளுக்கு அனுப்புவதிலும் அக்கறையில்லை.

‘மோனக்குரல்’ , ‘குளிர்ந்துபோன நிராசைகள்’, ‘ஆத்மாவின் வறுமை’, ‘ஓ! இந்த அழகுகள்!’ என்பவையெல்லாம் அவர் காட்டிய சிறுகதைகளே.

மழைதூறற் பொழுதில் தனிமையாய்க் கிடக்கும் பஸ் தரிப்பிடங்கள், பனிப்புகாரில் தோய்ந்த மலைத்தொடர்கள், நிறைவேறாத ஆசைகள், விசரர்களைப்போல் இயங்குகின்ற பாத்திரங்கள், ரயிலின் கூ…. என நீண்ட சோகக்குரல்…

எல்லாம், சுற்றிச் சுற்றி அவற்றில் தலைகாட்டும்.

அவரது அழகியல் நோக்கின் வெளிப்பாடுகளை, மனோரம்யமான அந்த நடையை நான் வியந்துபாராட்டுவேன். ஆனால் அந்த விசர்ப் போக்கான பாத்திரங்களை, திரும்பத் திரும்ப எழுதும் மனமுறிவுகளைப் பற்றிக் கதைக்கும் போது நாம் கருத்து வேறுபடுவோம். அவ்வேளைகளில் விட்டுக் கொடுக்காதபடி அவர் எதை எதையோவெல்லாம் கதைப்பார்.

சமீபத்தில் ‘ஓர் தனி உலகம்’ என்ற அவரது சிறுகதை வெளிவந்திருந்தது. அதில் வருகின்ற இளைஞன் வேலை செய்யவே பஞ்சிப்படுகிறான். வேலை ஒன்றுமில்லாமல் இந்த உலகத்தின் அழகை இரசிக்கவே ஆசைப்படுகிறான்.

அதைப்பற்றிக் கதைத்தபோது, அவரிடம் சொன்னேன், “சுப்பிரமணியம், இப்பிடிச் சும்மா உலகத்தில இருக்க ஏலாது…. அழக இரசிக்கத்தான் வேணும்…. ஆனா வேலையுஞ் செய்யத்தான் வேணும்… புற உலகத்திலயிருந்தும் வாழ்க்கையில இருந்தும், நாங்கள் ஓட ஏலாது.”

ஆனால் , “எங்களுக்குப் புற உலகத்தப் பற்றிக் கவலையில்ல. எங்கட உலகம் எங்களுக்குள்ளேயே இருக்கு. அதிலேயே எங்களுக்குத் திருப்தி. அதிலயே எங்களுடைய வாழ்க்கை முடிஞ்சு போகும்” என்று திருப்பிச் சொன்னார்.

“இதெல்லாம், வசதியான ஒரு கும்பலின்ர சிந்தனைப் போக்குகள். பெரும்பாலான மக்கள் இப்பிடி வாழ ஏலாது. ஏன், உம்மட குடும்ப நிலைக்கும் இது ஏலாது. உமக்குத் தங்கச்சிகள் இருக்கு. அப்பருக்கும் வயது போயிற்றுது. அப்ப இதெல்லாம் நீர்தானே பாக்க வேணும். இந்த உப்புப் புளிப் பிரச்சினைகள் எனக்கு முக்கியமில்லை எண்டு, நீர்சொல்ல ஏலாது.” – நான் சொன்னேன்.

“அவையவையின்ர பாட்டை அவையவையள் பாத்தாலென்ன? நாங்க ஏன், அவையின்ர பொறுப்பைத் தலையில சுமக்க வேணும்? எங்களுக்கு, எங்கட மனத்திருப்திதான் முக்கியம். இல்லையெண்டு அவையள் ஆரும் வற்புறுத்தினால்…, நான் செத்துப் போவன்.”

நான் அதிர்ச்சியில் மௌனமாகிப் போனேன்.

4

அடுத்த மாதம் முழுவதும் நான் அவரைச் சந்திக்கவில்லை. காலையிலும் மத்தியானத்திலும் இரவிலுமாக என்னுடைய வேலை நேரம் மாறிமாறி அமைந்தது. ‘போஸ்ற் ஒவ்வீஸ்’ என்றால் அப்படித்தானே! இடையிடையில் ‘ஓவர்ரைமு’ம் செய்ய வேண்டியிருந்தது. இயைபற்ற வேலை நேரத்திலும் இயந்திர உழைப்பிலும் மனம் வெறுப்படைந்திருந்த போதிலும், வாழ்வின் சுமை காரணமாக அதில் கலந்து போனேன். சுப்பிரமணியனும் என்னைச் சந்திக்கவில்லை.

அந்த மாதம் வறட்சியாகவே ஓடிமறைந்தது.

5

இந்த மாதம் முழுவதும் 9 மணி நேர வேலை. முதலாம் திகதி 8.30க்கு ஸ்ரேஷனுக்கு வந்தபோது ட்றெயினில் சுப்பிரமணினைச் சந்தித்தேன். ஆனால், இரண்டொரு பேச்சுக்களோடு அவர் மௌனங் கொண்டார். வெளிக்கம்பியைப் பிடித்தபடி, அடிவானத்தில் எதையோ தேடுகிறவரைப்போல கடற்பக்கத்தையே வெறித்து நோக்கியபடி நின்றார். ‘பூந்தோட்ட வீதி’யில் பிரிந்து செல்லும்வரை அவர் ஒன்றுமே கதைக்க வில்லை.

அதன் பின்னால் ஒரு கிழமைவரை நான் அவரைச் சந்திக்கவில்லை. அந்தப் பிரிவு, எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

அடுத்த ‘போயா’விற்கு மற்ற நாள் ஸ்ரேஷனில் நின்று கொண்டிருந்த  போது, சிறிது தள்ளி யாருடனோ கதைத்துக் கொண்டிருந்த ‘பேரம்பலம்’ என்னைக் கண்டுவிட்டுக் கெதியாக வந்து, ஓர்அதிர்ச்சியான செய்தியைச் சொன்னான்.

“இஞ்சேற்றாப்பா, சுப்பிரமணியன் தற்கொலை செய்திற்றானாம். தெல்லிப்பளையில தங்கட வீட்டுக்கருகில ட்றெயினுக்கு முன்னால பாஞ்சானாம். ரெண்டு நாளுக்கு முந்தித்தான் இது நடந்திது. காலம ஊரால வந்த ஒரு பெடியன் தான் சொன்னான்.”

என் நெஞ்சம் அதிர்ந்தது.

அந்த அதிர்ச்சியில், நான் மௌனத்தில் புதைந்து போனேன். நம்ப முடியாதது நடந்து முடிந்தும் விட்டதையறிய, மனது துயர் கொண்டது.

 ‘ஓ! சுப்பிரமணியனை இனிச் சந்திக்க ஏலாது. குறுக்குக் கம்பியைப் பிடித்தபடி – ரயிலில் கதைக்கும் அந்த அருமையான நேரங்களும், இனிமேல் வரப்போவதில்லை….’

‘எல்லாம் முடிந்து போனது.’

கணங்கள், ஊர்ந்து கொண்டிருந்தன. கல்கிசைக்குப் போகும் ‘கரிக் கோச்சி’ கூ…. என நீளமாய்க் கூக்குரலிட்டபடி ஓடியது.

‘துயரத்தில் புதைந்துபோன ஒரு பெண்ணின் சோகக் குரலைப் போல…’ என அக் கூவலை ஒரு கதையில் சுப்பிரமணியன் எழுதியிருந்தது, உடனே நினைவுக்கு வந்தது.

அது பெண்ணின் குரலோ என்னவோ… எனக்கும் சோகக் குரலாகவே, அது இருக்கிறது!

– தை 1970

– தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1974, ஆசிரியரால் வெளியிடப்படுவது.

Print Friendly, PDF & Email
அ. யேசுராசா (1946, டிசம்பர் 30, குருநகர், யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் ஆவார். 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் இவர் ஓர் ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரி. இவர் கலை, இலக்கியம், ஏனைய பொது அறிவுத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர். கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமைய வேண்டுமென்பதிலும், கலை இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *