பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 13,383 
 
 

இவன் கட்சிக்கு வந்த இந்த ஏழெட்டு ஆண்டுகளில் இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் போகாமலிருந்ததில்லை. ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம், மாநாடு, ஆர்ப்பாட்டம், தர்ணா என, எல்லாவற்றுக்கும் – பல நிகழ்ச்சிகள் இவனுக்கு நேரடியாக சம்பந்தமற்றவை என்றாலும்கூட – எல்லாத் தோழர்களையும் சந்திக்க, அளவளாவ ஒரு வாய்ப்பு என்று தோளில் பையை மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுவான்.

மாநாட்டில் பேராளராகக் கலந்து கொள்வது என்பது பெரும் வாய்ப்புதான் என்றாலும் இந்த மாநாட்டில் இவனால் கலந்து கொள்ளமுடியவில்லை. அலுவலகத்தில் தணிக்கை நடந்து கொண்டிருந்தது. முக்கியப் பொறுப்பில் இருக்கும் இவனுக்கு விடுப்பு பெற முடியாத நிலை. தவிர, துணைவியாருக்கும் இது பேறு காலமயிருந்தது. இளம் மனைவி. முதல் பிரசவம். இப்பவோ அப்பவோ என்று இருக்க உதவிக்கும் வேறு யாரும் இல்லாத சூழல். தனியே விட்டு விட்டுப் போக முடியாத சங்கடம்.

வேறுவழியின்றி தன் கருத்துகளை எழுத்துவடிவில் சகபேராளர் ஒருவர் மூலம் தந்தனுப்பிவிட்டு, மாநாட்டு முடிவை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்தான்.

மாநாடு என்பது கட்சி வரலாற்றில் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றுதான் என்றாலும், இது அமைப்பு மாநாடு என்பதாலும், இதில் பல முக்கிய முடிவுகளை மேற்கொண்டு கட்சியின் செயல்பாடுகளில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநாடு என்பதாலும் இதற்கு முக்கியத்துவம் தந்திருந்தான்.

சமீப சில ஆண்டுகளாகவே கட்சிக்குள் ஒரு மத மதத்த தன்மை ஊடுருவி, தோழர்கள் பலரும் உற்சாகமின்றி இருந்து வருவதை இவனால் உணரமுடிந்தது. ஏறக்குறைய இவனுக்கும் அதேபோல்தான் இருந்தது. கட்சி செயல்பாடு என்பது ஆண்டுக்கு ஏதாவது சில நிகழ்ச்சிகள், உள்ளூர்ப் பிரச்சனைக்கு இரண்டு, உலகப் பிரச்சனைக்கு இரண்டு ஏதாவது போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று நடத்தி கட்சியின் இருப்பைக் காட்டுவது அல்லது தக்க வைத்துக் கொள்வது என இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது ஒரு புறம் இருக்க தேர்தல் வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு கூட்டணியில் அணிகளையும் அதற்கேற்ப வளைக்க தோழர்கள் பெரிதும் களைப்படைந்திருந்தார்கள்.

“என்னா தோழர் கட்சின்னா, ஒரு ‘க்ரியேடிவ் பாலிடிக்ஸ்’ இருக்க வேண்டாம்?. சும்மா தேர்தலே அரசியல்னு அதுக்காகவே கட்சி நடத்தற மாதிரி இருக்குது. அப்பப்ப மாத்தி மாத்தி ஏதாவதொரு கட்சியோட கூட்டு வச்சிக்னு”

“அதவுட்டாதான் வேற என்னா இருக்கறது சொல்லுங்க. தேர்தல்தான அரசியலே…”

“இப்படியே இருந்தா இருக்கறதும் தேஞ்சிடும். புதுசா வர்ர தோழர்கள ஈர்க்க மாதிரி, அவங்களோட தெறமைகள ஆற்றல்களப் பயன்படுத்திக்கிற மாதிரி கட்சில என்னா வேலைத்திட்டம் இருக்குது சொல்லுங்க. பூர்ஷ்வா கட்சிங்க மாதிரி தேர்தலுக்குத் தேர்தல் ஒலிபெருக்கியக் கட்டிக்னு ஒட்டுக் கேக்கறதுதான் வேலைத்திட்டம்னா யாருக்குத்தான் உற்சாகம் இருக்கும்”

இப்படி அதிருப்திகள பரிமாறிக் கொள்ளப்படும் போதெல்லாம் “நமக்கு மட்டும் இப்பிடி இல்ல தோழர் பல பேருக்கு இப்பிடி இருக்குது. எல்லாம் இந்த மாநாட்டுல விவாதத்துக்கு வரும். பேசி நல்லவிதமா ஒரு முடிவு எடுப்பாங்க. அப்புறம் கட்சியினுடைய தன்மையே வேற மாதிரி ஆயிடும் பாருங்க” என்று சில தோழர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.

இது எல்லாவற்றையும் வைத்துத்தான் இவனும் இந்த மாநாட்டை மிகுந்த ஆவலோடு எதிர் நோக்கியிருந்தான். பேராளராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே மாநாட்டில் என்னென்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதையெல்லாம் திட்டமிட்டிருந்தான். ஆனால் இப்படி போகமுடியாமல் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை வீட்டில்தான் இருந்தானேயொழிய மனசெல்லாம் மாநாட்டில்தான் இருந்தது. யார் யார் வந்திருப்பார்கள் என்னென்ன பேசியிருப்பார்கள், என்னென்ன புதிய முடிவுகள் மேற்கொண்டிருப்பார்கள், திருப்பு முனையாக கட்சி என்னென்ன நிலைபாடுகள் எடுத்திருக்கும் என்று இதே சிந்தனையாக இருந்தான்.

மூணுநாள் மாநாட்டில் நிறைவு நாளான இன்று ஒரு நாள் மட்டுமாவது போய் வந்துடலாமா என்ற நினைத்தான். மாநாடு நடைபெறும் இடத்துக்கு போகவே அரைநாள் ஆகிவிடும். அதற்குள் அங்கு பேராள்கள் அரங்கம் முடிந்து விடும். பிறகு ஊர்வலம் பொதுக்கூட்டம் பார்த்து இரவே திரும்புவதானாலும் கூட காலையில்தான் வந்தசேர முடியும். மனைவி இருக்கிற நிலையில் தனியாக விட்டுவிட்டு எங்கே கிளம்புவது என்று நினைத்துக் கொண்டான்.

சொல்லி வைத்தமாதிரி சோதனையாக மாலை 5 மணிவாக்கில் மனைவிக்கு பிரசவ வலியெடுக்க மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தான். இரவு ஏழு மணிவாக்கில் சுகப்பிரவசம், பெண் குழந்தை. நல்ல வேளை பக்கத்திலிருந்தது நல்லதாய்ப் போயிற்று என்று சொல்லிக் கொண்டான்.

இரவு முழுக்க மாநாடுபற்றியே ஏதோதோ கனவுகளாக வர, விடிய எழுந்து மருத்துவமனை போய் மனைவிக்கு காபி, ரொட்டி தேவையானவற்றை வாங்கிக் கொடுத்துவிட்டு, அடுத்த தெருவில் நண்பனைப் பார்க்கப் புறப்பட்டான்.

நண்பன் மனைவி வராந்தாவிலேயே எதிர்ப்பட்டாள்.

“வந்துட்டாரா…”

“இப்பத்தாங்க வந்து படுத்தாரு. ஒரு அரைமணி நேரம் இருக்கும். ராத்திரியெல்லாம் தூக்கமில்ல ஒரு ஒம்பது மணிக்கா எழுப்பி உடுபோதும்ன்னார்! எழுப்பவா” என்றாள்.

இவன் சற்றுத் தயங்கி, “வேணாம், ஆபிஸ்ல பாத்துக்கறேன்” என்று சொல்லி விட்டுத் திரும்பினான். சற்று முன்னதாகவே அலுவலகம் வந்து காத்திருந்தான். பத்தரை மணிவாக்கில் நண்பன் வந்தான். தூக்கத்தைத் தவறவிட்டு நேரங்கெட்டு தூங்கியெழுந்தால் இரப்பைகள் கனத்துத் தெரியும். அதுபோல தூக்கம் முற்றாகத் தெளியாத முகத் தோற்றத்துடனேயே தெரிந்தான்.

இருக்கையில் அமரப்போனவனை “என்னப்பா மாநாடெல்லாம் எப்படி” என்று கேட்டபடியே எதிர் இருக்கையில் அமர்ந்தான்.

“ரொம்ப சிறப்பா இருந்தது. மூணுநாளும் என்.வி. தான், மொத நாள் மீன் கொழம்பு, ரெண்டாம் நாள் சிக்கன், மூணாவது நாள் மட்டன். கூடவே வட பாயாசம் வேற”

இவன் சிரித்தான் “ஏம்ப்பா. நான் அதையா கேட்டேன் மாநாடு எப்பிடி இருந்ததுன்னா…”

“எல்லா வழக்கம் போலதான்”

“என்னா…”

“கொடியேற்றல். அறிக்கை, பிரதிநிதிகள் விவாதம், தொகுப்புரை, புதிய நிர்வாகிகள் தேர்வு, ஊர்வலம். பொதுக்கூட்டம் எல்லாம் தான்..”

“புதிய நிர்வாகிகள் யாரு?

“எல்லாம் பழசுதான். எதுவும் மாற்றமில்ல. மாநிலக் குழுவுக்கு ரெண்டுபேரு; மத்தியக் குழுவுக்கு ஒருத்தரு மட்டும் புதுசா சேர்ந்திருக்கறாங்க. மற்றபடி எல்லாம் அதேதான்”.

“புதுசா சேத்தது யார் யார..”

நண்பன் விபரம் சொன்னான்.

“அப்பிடியா… எல்லா ஜால்ராவா தான் பாத்து சேத்துக்கறங்க” என்றான். “சரி அப்பறம் என்ன முக்கிய முடிவுகள்”

“முக்கிய முடிவுகள் என்ன, தேர்தல்தான். வரக்கூடிய தேர்தல்ல நமக்கு யாரோட கூட்டு, எப்பிடி நடந்துக்கணும், தேர்தல் வேலைகளை எப்பிடி செய்யனும். நிதி எப்படி வசூல் பண்ணனும்ன்னுதான்…”

“வேற போராட்டம் ஏதாவது…”

“ம்….”

“என்னா…?”

“மத்திய மாநில அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து மார்ச் 18 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா…”

“போன வருடமும் இதான் நடத்தனம்”

“வருஷா வருஷம் நடத்திக்னே இருக்க வேண்டியதுதான்”

“இதியே நடத்திக்கின்னு இருந்தா வித்தியாசமா ஏதாவது…”

“வித்தியாசமா. அது 20 ஆம் தேதின்னா இது பதினெட்டாம் தேதி. அதான் வித்தியாசம். போதாதா”

“புதுசா வேற ஏதாவது..”

“வேற ஒண்ணும் இல்ல. இதுதான்”

“எதிர்காலத் திட்டங்கள், நடவடிக்கைகள்”

“எதிர்காலத் திட்டம் என்ன? எதிர்காலம் இருள் மயமானது, தொழிலாளி வர்க்கம் விழிப்போடிருந்து ஒன்றுபட்டுப் போராடி அத முறியடிக்கனும். அவ்வளோதான்”.

“ஆமா. எதிர்காலம் எப்பதான் ஒளிமயமா இருந்தது? எதிர்காலம் எப்பவுமே அமாவாசதான். போன மாநாட்டிலேயும் இதியேதான் சொல்லி அனுப்பனாங்க. இந்த மாநாட்டிலேயும் இதேயே தான் சொல்லி அனுப்பியிருக்கறாங்க…” இவன் சலித்துக் கொண்டான்.

“இருக்கறத்தானப்பா சொல்ல முடியும். இல்லாததையா சொல்ல முடியும். பிரச்சனைகளை யதார்த்தமா பாக்க வேணா?” நண்பன் சிரித்தான்.

இவன் கொஞ்சம் யோசித்து “புதுசா புஸ்தம் ஏதாவது வந்திருந்துதா. எதுனா வாங்கனியா” என்றான்.

“புதுசா ஒண்ணும் இல்ல. எல்லாம் பழசுதான். என்ன விசேஷம்னா இந்த வருஷம் டீக்கடை, பெட்டிக்கடை, புக்ஸ்டாலு, தள்ளுவண்டிகள் எல்லாத்தியும் டெண்டருக்கு உட்டுட்டிருக்கறாங்க, மாநாட்டு செலவுகள் ஈடுகட்டறதுக்கு, கட்சிக்கு நிதி சேக்கறதுக்குன்னு, அதுல ஒரு போண்டா ஸ்டாலு. அங்க தான் நல்ல கூட்டம். ஒய்வு ஒழிச்சல் இல்லாம சுடசுட போட்டுத் தள்ளிக்கினே இருந்தான். ரெண்டு போண்டா அஞ்சு ரூபா. அதுக்கே பெரிய க்யூ. டோக்கன் வாங்கிக்கினு போய்த்தான் வாங்கணும்.”

இவன் யோசனையோடு நண்பன் முகத்தைப் பார்த்தான். மாநாட்டுக்குப் போகாமலிருந்ததே நல்லதுதானோ என்று தோன்றியது. இவனுக்கு வெளியூர் நண்பன் ஒருவன். விரிந்த படிப்பாளி. யாரோ ஒர் அறிஞன் சொன்னதாக அடிக்கடி அவன் சொல்வான் “எந்த இடத்தில் நீ கற்றுக் கொள்ள ஒன்றுமில்லையோ அந்த இடத்தைவிட்டு உடனடியாக வெளியேறிவிடு” என்று. “இப்ப கட்சில நாம்ப கத்துக்கறதுக்கு ஒன்ணுமில்லைப்பா. கத்துக்குடுக்கறதுக்கும் ஒண்ணும் இல்ல. எதுக்கு தெண்டத்துக்கு அதுல நாளத் தள்ளிக்னு. பேசாம வெளியே வந்து உருப்படியா வேற வேல எதுனா இருந்தா பார்க்கலாம்” என்பான்.

அந்த வார்த்தையின் ஞாபகம் நெஞ்சை உழற்ற “அப்பறம் வேற என்னதான் மாநாட்டுல சிறப்பு அம்சம்?” என்றான்.

“சிறப்பு என்ன? ஏற்பாடுகள் தான் சிறப்பு. முந்தைய மாநாடுகள் மாதிரியெல்லாம் இல்ல, இந்தத் தரம், வந்திருந்த தோழர்களுக்கு எந்தக் கொறையும் இல்லாம எல்லா ஏற்பாடுகளும் சிறப்பா செய்து வச்சிருந்தாங்க. தண்ணி கஷ்டமே தெரியாத அளவுக்கு லாரி வச்சி அடிச்சாந்து குடுததுட்டாங்க. ஸ்பெஷலா எஸ்.டி.பூத், க்ளினிக் எல்லாம் ஏற்பாடு பண்ணிவச்சிட்டாங்க. வந்திருந்த தோழர்களுக்கு யாருக்கும் ஒண்ணும் எந்தப் பிரச்சனையும் இல்ல. எதுக்கும் வெளிய போவனும்னு அவசியமும் இல்ல..”

நண்பன் தொடர்ந்து மாநாட்டின் பிற ஏற்பாடுகள், நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மசால்வடை, சுண்டல், வேர்க்கடலை ஸ்டால்களின் விற்பனைகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். கேட்பதான பாவனையில் தலையாட்டிக் கொண்டிருந்தானே தவிர மனம் அதில் லயிக்கவில்லை.

இந்த வெள்ளிக் கிழமை கோயிலுக்குப் போய்த் திரும்பிய மனைவி கையில் மடித்திருந்த காகிதப் பொட்டலத்தைப் பிரித்து இவன் முன் நீட்டி “கொஞ்சோண்டு நெத்தில இட்டுக்கோங்க” என்றாள்.

இவன் அவளை முறைத்து “இதெல்லாம் உன்னோடவே இருக்கட்டும்னு சொல்லியிருக்கறன் இல்ல” என்றான்.

“என்னைக்காவது ஒரு நாளைக்கு இட்டுக்கக் கூடாதா”

“ஒரு நாளைக்கு இட்டா என்ன? தெனம் இட்டா என்னா எல்லாம் ஒண்ணுதான்.”

“பிரசவம் நல்லபடியா ஆவனும்னு உங்களுக்கு அக்கறையில்லையா…”

“அதுக்கு இதுக்கும் என்னா?

“இது அதுக்காக வேண்டிக்கினு வந்தது இன்னைக்கு மட்டும் கொஞ்சம் இட்டுக்கோங்க”.

அவள் முகத்தைப் பார்க்க இவனுக்குச் சங்கடமாக இருந்தது. இருந்தாலும் மறுத்து “இதெல்லாம் என்ன, சென்டிமென்ட். எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலப்படாத…” என்று அவளைத் தட்டிக்கொடுத்துத் தேற்றிவிட்டு அப்பால் நகர்ந்தான்.

சம்பந்தமேயில்லாமல் ஏனோ தற்போது அது ஞாபகத்திற்கு வந்தது மனதை சங்கடப்படுத்துவது போல் தோன்றியது. பேறு நல்லபடியாக முடிந்து விட்டதில் பிரச்சனையில்லை. இல்லாவிட்டால் அதுவேறு பெரும் மன உளைச்சலாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

மாநாட்டின் இதர நிகழ்ச்சிகளை வருணித்துக் கொண்டிருந்த நண்பனை, கடைநிலை ஊழியர் வந்து மேலாளர் அழைப்பதாகக் கூற நண்பன் “அப்பறம் பேசுவம்” என்று எழுந்தான்.

இவனும் எழுந்து தன் இருக்கைக்கு வர, நண்பன் திரும்ப வந்தான். “ஒரு முக்கியமான விஷயம். உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். மாநாட்டுல எல்லாருக்கும் பஞ்சாமிர்தம் கொடுத்தாங்க. நம்ப தோழர் ஒருத்தர் பஞ்சாமிர்த வியாபாரம் பண்றாராம். வெளி மார்க்கட்ல வெல அம்பது ரூவா. நம்ப தோழர்களுக்கு 10 ரூ சலுகை வெலையல நாப்பது ரூபான்னு குடுத்தாங்க. நெறையப் பேர் வாங்கனாங்க. நானும் வாங்கனேன். உனக்கும் ஒண்ணும் வாங்கியாந்திருக்கேன். வரும்போது எடுத்து வருவம்னு நெனைச்சேன் மறந்துட்டேன். சாயங்காலம் போவும்போது எடுத்துக்கலாம்” என்றான். இவன் நண்பனைப் பார்த்து சிரித்தான். நண்பன் தொடர்ந்தான்.

“அப்பிடியே வாசன விபூதி பாக்கெட் கூட நாலு வாங்கிக்னு வந்தேன். நம்ப இட்டுக்கலண்ணா கூட ஊட்டுல இருக்கறவங்க இட்டுக்கறாங்க இல்ல. உனக்கு வேணும்னாலும் ஒண்ணு எடுத்துக்க. அந்த விபூதி ரொம்ப ஃபேமசாம் வாசனையா இருக்கும்ன்றதோட மட்டுமில்ல பவரும் ஜாஸ்தியாம்” என்றான்.

இவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. யோசனையோடு நிற்க வணக்கம் காம்ரேட் என்றபடியே புன்முறுவலோடு தோழர் வந்தார்.

மாநாட்டுத் தீர்மான நகலைத் தந்து அப்பிடியே மாதாந்திர லெவியையும் வாங்கிக் கொண்டு போக வந்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *